பேயோ பிசாசோ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2025
பார்வையிட்டோர்: 39 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குண வீனம் ஒரு பெயர் பெற்ற புனிதத்தலம் பொன்னி யாற்றின் வடகரையில் மனோரம்மியமான பொழில்களின் இடையே அமைந்திருக்கும் சிறப்பைப் பெற்றது. திருக்கோயில் மிகப் பெரியது. அதன் நாற்புறத்துத் திருக் கோபுரங்களோ பல காதங்களுக் கப்பாலும் விண்ணை அளாவிக் கொண்டு நிற்கும் காட்சியைத்தருவன, மதில்கள் உண்மையிலேயே எவராலும் தாண்ட முடியாதபடி மிக உயர்ந்து நிற்கும். ஆனால் நாளளவு மீற மீற “நெட்டிருப்புப் பாறைக்கு நெக்கு விடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும்” என்ற மூதாட்டியின்சொற்களை நிரூபிக்க தழைதழைத்த பல அழகிய இலைகளை விட்ட ஆலஞ் செடிகள் அம்மதில்களை அழகு படுத்தி நின்றன. நாற்புறங்களிலும் தேரோடும் வீதிகள் மிக விசாலமாகவும் ஒரு பக்கத்தில் நெடுகப் பல வழிபடுவோர் தங்கும் விடுதிகளை வைத்துக் கொண்டு விளங்கினாலும், கோயிலுக்கு வரும் நன் மக்களின் நன்மையைக் கருதி, காய், பழம் . கர்ப்பூரக் கடைகள் அத்தெருக்களின் ஒரு பகுதியை அடைத்துக் கொண்டு விளங்குவன. அவை போலவே கோபுரவாயிலும் இறைவனுக்கு நல்ல சேவை செய்யும் பொருட்டும் பலசரக்குக் கடைகளை அமைத்துக் கொண்டு சீர் பெற்றுள்ளன. ஏனெனில் இறைவனை வழிபடும் பெருமக்களுக்கு வணக்கப் பொருள்கள் ஒரு சிறிது ஆயாசமும் இன்றிக் கிடைக்க வேண்டாமா? கோயில் அதிகாரிகள் இவ்வாறு கடைகள் ஏற்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். போலி நகைக்கடைகளுக்கு வெகு எளிதில் அனுமதி தருவார்கள். கோயிலில் கடை கட்டப்பணம் இருந்தாலும் கடைக்காரன் முன்பணம் போட்டுச் சலீசான வட்டிக்கு அவனே கட்டிக்கொண்டு நிரந்தரமாக இருக்கவும் உடன்படிக்கை எழுதிக்கொடுத்து விடுவார்கள். ஏனெனில், இறைவணக்கத்திற்கு அவர்கள் ஒரு பகுதி தருகிறார்கள் அல்லவா? அக் கடைக்காரர்கள் எச்சமயத்தினர்கள் ஆனாலும் என்ன? அவன் கோயில் வழிபாட்டை அக் கடையிலிருந்து கொண்டு இகழ்ந்தாலும் என்ன? அவனுடைய பணத்தில் ஒரு பகுதி அதிகாரிகளுக்கு ஏறினால் போதும், அல்லது அதிகாரிகளின் மனைவி மக்கள் கை; கால் களை அவன் கடைநகைகள் அலங்காரப் படுத்தினால் போதும், அனுமதி உடனே தரப்படும். ஊரார் கரடியாய்க் கத்தி ஆட்சேபித்து மனுக்கள் போட்டாலும் அதிகாரி செய்ததே சரியென்று மேல் அதிகாரி அதனை ஊர்ச்சிதப்படுத்தி விடுவான். இவ்விதக் கூற்றில் நமது குண வீனப் பெருங்கோயில் சிறந்து விளங்கியது. ஆகவே இதன் பெருமை உலகம் முழுவதும் பரவி இருக்கிறது எனலாம். வைதீகர்களும், குருக்கள்மாரும் அதிகாரிகள் முதலிய சிப்பந்திகளும் இத்திருக்கோயிலால் மிகுந்த சம்பத்துடன் காலம் கழித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டல்லவா? இந்த குணவீன கோயிலுக்கோ ஒரு ஒப்புயர்வற்ற சிறப்பு ஒன்று உண்டு. இக் கோயிலில் முதற் பிரகாரத்தில் அம்மன் சந்நிதிக்குப் பின்புறத்தில் ஒரு அற்புத மான யந்திரச் சிலைப்பலகை ஒன்று உண்டு. பண்டைக் காலத்தில் ஒரு சிறந்த முனிவர் இந்தத் தலத்தைத் தரிசித்தபோது இந்த யந்திரத்தை ஒரு சிலையில் பொறித்து இந்த இடத்தில் தாபித்துவிட்டுச் சென்றாராம். அந்த யந்திரத்தின் சக்தி அளவிட முடியாதது. பேய்ப்பிடித்த மக்கள் யார் இதன் அருகில் வந்தாலும் அப்பேய் அலறிக்கொண்டு நடுங்கி உரத்த ஒலி செய்து கொண்டு ஓடிவிடுமாம். இச் செய்தி உலகப் பிரசித்திப் பெற்றது. நமது நாட்டில் பெண் பிள்ளைக்குப் பேய் பிடிப்பது சகஜமல்லவா? ஆகவே பேய் பிடித்த பெண்கள் இந்தத் தலத்திற்கு மிகுதியாகக் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் இந்த யந்திரத்திற்கு அருகில் கொண்டு வரும்போதே அப்பெண் கதறுவதைக் கண்டால் எந்த அநாகரிக நாத்திகனும் நடுநடுங்கி ஆத்திகன் ஆகிவிடுவான் என்பது பொது மக்களுடைய நம்பிக்கை. 

நாட்டில் பேய் பிடிப்பது அதிகமாக ஆக அப்பேய்களை ஓட்டிவிடும் தொழிலும் சிறப்பு அடையும் அல்லவா? மந்திரவாதிகளும், அவர்களை அண்டிப் பிழைக்கும் பரிவாரங்களும் பெருகின. பேய் ஓட்டுவதற்கு ஒரு மந்திரவாதி, உடுக்கு அடிக்கிறவன் ஒருவன், பூசை போடுகிறவன் ஒருவன், ஒரு உதவி ஆள் இவர்கள் அவசியமாக இருக்க வேண்டும். மந்திரவாதி கையில் ஒரு மந்திரக்கோலும் இன்றியமையாத ஒரு கசையடியும் பொருள்கள். உடுக்கு அடிக்கிறவன் நல்ல கவன சக்தியுள்ளவன். ஒப்பாரிபோல அழகாக அம்மானை பாடக்கூடியவன். தெளிவான தமிழிலே நன்றாக உரத்த குரலில் உடுக்கையைத் தாளத்திற்கு இசையப்பாடுபவன். இந்த இசை சாதாரணமாக எந்தக் கல் நெஞ்சையும் கலக்கிவிடும். சொற்கள் நிரமப மனவெழுச்சி தரக்கூடியவாறு அமைந்திருக்கும். தலை முறை தலைமுறையாக வந்த பாடல்கள் மிகவும் அஞ்சாநெஞ்சமுள்ள ஆண் மக்களையே மிரட்டி அடிக்கும். அப்பாடல்கள் ஏழைப் பெண்களை நோய்வாய்ப்பட்டுக் கொடிய உறவினர்கள் நடுவில் வையப்படும் நிலையில் அவதிப்படும் காலத்தில் எத்தனை சுலபத்தில் கலங்கிச் சோர்வடையச் செய்யும் என்று கூறவும் வேண்டுமா? இந்த நிலையில் இக்குணவீனக் கோயிலில் பல மந்திரவாதிகள் தோன்றியிருந்தார்கள். யாத்திரையாக வரும் பெண்களுக்கும் வேண்டுதலைக்காக வரும் மங்கையர்களுக்கும் இவர்கள் பெரும் சேவை செய்யக் காத்துக் கொண்டிருப்பார்கள். பலகுடும்பங்கள் இத் தொழிலில் ஈடுபட்டு சமூக சேவையைச் சமயச்சார்பில் செய்துவருவதே இந்தத் தலத்தின் பெருஞ் சிறப்பு. இது தமிழ்நாடு முழுவதும் அறிந்ததே. 

கொடுவாயிலிலே ஒரு பண்டைக் குடும்பம் பரம்பரையாக மிகுந்த செல்வாக்கோடு தழைத்துக்கொண்டு வருகிறது. அதன் தலைவர் முருகப்பா நல்ல பேரும் புகழும் பெற்றவர். அவருடைய மனைவியார் தங்கம்மாளும் மிகச் சிறந்த குணவதி. பண்டை ஆசாரங்களை வெகு நன்றாக அறிந்தவர்கள். அவைகளைப் போற்றுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். அக்குடும்பத்தை ஒட்டி நூற்றுக்கணக்கான ஏழைக்குடியானவர்கள் பிழைத்து வந்தார்கள். அனைவரும் முருகப்பர் என்றால் உயிர்விடவும் தயாராக இருப்பார்கள். இத்தம்பதிகளுக்கு வெகுநாள் பிள்ளை இல்லாதிருந்து மிகுந்த பிரார்த்தனைகள் செய்ததின் பேரில் அருமையாக ஒரு பிள்ளை பிறந்தான். அவனை வெகு அன்போடு சீராட்டிப் பாராட்டி வந்தார்கள். பிள்ளையும், பெற்றோர்களைப் போலவே பண்டை ஆசாரங்களில் நம்பிக்கை வைத்திருந்தான். ஏதோ ஒரு வகையில்தான் படிப்பு ஏறிற்று பணக்காரவீட்டுச் செல்வப் பிள்ளைக்குப் படிப்பு ஏறுமா? கந்தப்பனுக்கு வயது ஆனதும் திருமணத்திற்கு ஆயத்தம் செய்தார்கள். பல செல்வர்கள் தங்கள் தங்கள் பெண்களை அழைத்து வந்தும் காட்டினார்கள். இறுதியில் சாதகம் பார்த்துப் பொருத்தம் கணித்து அடுத்த ஊர் மிராசுதார் வேலாயுதத்தின் திருமகள் புனிதவதியை மணப்பெண்ணாகத் தெரிந்தெடுத்தார்கள். புனிதவதி ஆங்கிலமும் தமிழும் நன்றாக வாசித்தவள். அவள் பெற்றோர்களும் கல்வி கற்வர்களே. மணமகனுக்குக் கல்வி குறைந்திருந்த போதிலும் குணம் சிறந்திருந்ததை முன்னிட்டு சம்பந்தம் செய்ய முன் வந்தார்கள். நல்ல நாளில் கல்யாணமும் வெகு ஆடம்பரத்துடன் நடந்தது. சிலநாளில் சாந்தி முகூர்த்தமும் நடைபெற்று மணப்பெண் கணவன் வீடு வந்து சேர்ந்தாள். மணமக்களும் அன்யோன்யமாக இல்லறத்தை நடத்தத் தொடங்கினார்கள். 

புனிதவதி இளவயதிலேயே ஆங்கிலமும் தமிழும் கற்றபடியாலும் கல்வி கற்பதிலே நாள் முழுவதும் கழித்து வந்ததினாலும் உடல் மிகவும் மெலிந்திருந்தது. பழைய காலத்துப் பெண்கள் படிப்புச் சூடு இவ்வாறு உடலைக் கரைத்து விட்டது என்பார்கள். தற்காலக் கல்லூரிப் பெண்போல அவள் உடல் செழிப்பின்றி யிருந்தது. ஆனால் கந்தப்பனுடைய உடலோ மிகுந்த வலிவோடு இருந்தது. ஆளும் வளவள வென்று வளர்ந்திருந்தான். புனிதவதியோ மிகவும் இளைத்து குழந்தைப்போலவே இருந்தாள். இந்த நிலைமையில் இல்லறம் நடத்தினால் எவ்வாறு இன்பவாழ்வு இருக்கும். 

புனிதவதிக்கோ நாளுக்கு நாள் பலவீனம் அதிகரித்தது. நோய்வாய்ப்பட்டவள் போல் காணப்பட்டாள். திருமணம் ஆகி இரண்டு மூன்று ஆண்டுகள் ஆயின. குழந்தை ஒன்றும் பிறக்கவில்லை. கந்தப்பனுக்கும் பெற்றோர்களுக்கும் கவலை பிறந்தது. மருத்துவர்களை அழைத்துக் காட்டினார்கள். உடலில் யாதொரு நோயும் இருந்ததாகத் தெரியவில்லை என்றார்கள். சோதிடர்களைக் கேட்டார்கள். அவர்களாலும் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அக்கம் பக்கத்து உறவினர்கள் வந்தார்கள் ஒரு கிழவி இது காற்றினுடைய செயல். குணவீனத்திற்குச் சென்றால் சுகமாகும். என்று சொன்னாள் அதையே வற்புறுத்திப் பல கிழவிகளும் கூறினார்கள். அந்த முறையைப் பார்க்கலாம் என்று பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். 

புனிதவதி நன்றாகப் படித்தவள். தற்காலக் கலையியல் அறிந்தவள். பேய், பிசாசு இவைகளில் அவளுக்கு ஒரு சிறிதும் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் நல்ல குணமுள்ளவள். கணவனும், மாமனாரும், மாமியாரும் கோயிலுக்குச் செல்வதாக முடிவு செய்ததை அவள் ஆட்சேபிக்கவில்லை. அவர்கள் விருப்பப்படி உடன் சென்றாள் குணவீனம் அடைந்ததும் நல்ல விடுதியில் தங்கியிருந்தார்கள். அன்று ஆற்றில் நீராடிவிட்டு கோயிலுக்குச் சென்று வழிபட்டார்கள். திருக்கோயிலில் வலம் போகும்போது அம்மன் சந்நிதிக்குப் பின்னால் இயந்திரத்தின் முன்னிலையில் பல பெண்கள் தலை விரித்துக் கொண்டு பேயாடுதலைக் கண்டார்கள். புனிதவதி அப்பேதைப் பெண்களைக் கண்டு விட்டு இப்படியும் உலகம் இருக்குமோ என்று பரிதாபப்பட்டாள். ஆனால் அவளுக்கோ எவ்வித உணர்ச்சியும் தோன்றவில்லை. அன்று வீடு திரும்பி விட்டார்கள். இரவில் உணவு அருந்திய பின்னர் இரண்டு மூன்று பேர் முருகப்பரைக் காணவந்தார்கள். வெகுநேரம் பேசிவிட்டு வீடுதிரும்பினார்கள். 

புனிதவதிக்கும் பேய் பிடித்திருக்கிறதென்றும் அதனால்தான் உடல் மெலிவடைந்திருப்பதாகவும் அப்பேயைத் துறத்தி விடும் வரையில் குழந்தை உண்டாகாது என்றும் அதற்காகப் பூசை போடவேண்டும் என்றும் போட்டவுடன் பேய் ஆடும் என்றும் யந்திரத்தின் சக்தியால் அது ஓடிப்போய் விடும் என்றும் சொல்ல உருவேற்றி விட்டார்கள். கந்தப்பனும் பெற்றோர்களும் அதனை நம்பினார்கள். உடனே பூசைக்கு வேண்டிய செலவுக்கு ஒன்றுக்குப் பத்தாகக் கறந்துகொண்டு அந்த மந்திரவாதிகள் சென்றார்கள். 

மறுநாள் பூசை போடப்பட்டது. “பூசையில் மந்திரித்த திருநீறு கொண்டுவரப்பட்டது. புத்திசாலியாகிய புனிதவதி அதை மறுப்பதில் பயனில்லை என்று சொல்லி அதனை அணிந்துகொண்டாள். அன்று மாலை எல்லாரும் ஆலயத்திற்குச் சென்றார்கள். புனிதவதி என்ன நடக்கப்போகிறது என்று வியப்புடன் பார்த்துக்கொண்டு சென்றாள். யந்திரத்தின் முன்னால் சில பெண்கள் தலைவிரித்துக்கொண்டு அலங்கோலமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். மந்திரவாதி சிலரைக் கசையால் அடித்தான். அதனைப் பார்த்த புனிதவதி நெஞ்சழிந்தாள். தன் சகோதரிகள் இவ்விதமாக நடத்தப்படுகிறார்களே என்று பரிதவித்தாள். அவ்வடிகள் அவர்களுக்குப் படுவதில்லை. பேய்களுக்குத் தான் படும் என்று அங்கு பேசிக்கொண்டார்கள். ஆனால் அதை அவள் நம்பவில்லை சில பெண்கள் நான் போகிறேன். போகிறேன்” என்று கத்தினார்கள் சிலர் கற்களைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார்கள். அருகிலே முருகப்பர் முதலியோர் உட்கார்ந்தார்கள். புனிதவதியையும் யந்திரத்தின் முன்னால் உட்காரவைத்தார்கள். அவளுக்கோ யாதொரு உணர்ச்சியும் வரவில்லை. இந்தச் சடங்கு எல்லாம் வெறும் நாடகம் என்று எண்ணி மனதிற்குள் புன்னகை செய்து கொண்டிருந்தாள். பூசாரியும் மந்திரவாதியும் என்னென்னமோ மந்திரங்களை உச்சரித்தார்கள். ஒன்றும் ஆகவில்லை. முதல் நாள் அவர்கள் அடிக்கத் துணியவில்லை. இறுதியில் இந்தப் பேய் மிகவும் பலமான பேய், அதற்கு வேறு மந்திரப்பூசை போடவேண்டும் என்று மறுநாள் வரச்சொன்னார்கள் குடும்பத்தார் விடுதிக்குத் திரும்பிவிட்டார்கள். 

அடுத்தநாள் கோயிலுக்கு அபிஷேகாதிகள் வெகுமும்முரமாகச் செய்யப்பட்டன. மந்திவாதிக்கும் இரண்டு மடங்கு சாமான்களும் பணாமம் கொடுக்கப்பட்டன அன்றும் பூசை நடந்தது. யாதொன்றும் பலிக்கவில்லை. புனிதவதிக்குப் படிப்பினைத் தரவோ வேறு எந்த காரணத்திலோ மற்ற பெண்களுக்குப் பொறுக்க முடியாத கசையடி விழுந்தது. அவர்கள் அழுகை பேய்களின் அழுகையாகச் சொல்லப்பட்டது. 

மறுநாள் மந்திரவாதியின் மனைவி புனிதவதியினிடம் வந்தாள். வெகுதூரம் போதனை செய்தாள். புனிதவதி எதற்கும் இசையவில்லை. அன்றிரவு நடந்த பூசையில் மந்திரவாதி புனிதவதியை ஒருஅடி அடித்துவிட்டான். இவள் அடி பொறுக்க முடியாமல் வீரிட்டாள். கந்தப்பனுக்கோ இதைச் சசிக்கமுடியவில்லை. பெற்றோர்கள் என்ன செய்வார்களோ என்று அஞ்சி வெளியே சென்றுவிட்டான். பேய் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி, இந்த அநீதி வேண்டாம். ஊருக்குத் திரும்பிவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தான். 

மந்திரவாதியும் பூசாரியும் பார்த்தார்கள். இவர்களிடம் தங்கள் ஜபம் சாயாது என்று எண்ணி வேறொரு தந்திரம் செய்யத் தொடங்கினார்கள். மறுநாள் அவன் மனைவி தனியாகப் புனிதவதியிடம் வந்து வெகு நேரம் உபதேசித்தாள். இனிமேல் கசையடி அதிகமாகும். அதை வராமல் காப்பதே நல்லது பேய் ஆடுகிறவள் போல் பாசாங்கு செய். மந்திரவாதி ஒரு போலிக் கல்லைக் கொடுப்பான். அதை எடுத்துக் கொண்டுபோய் கோயிலுக்கு வெளியே எறிந்து விடு. பேய் போனதாக சொல்லி விடுகிறோம். இல்லாவிட்டால் உன் மாமியார் ஒத்துக் கொள்ள மாட்டாள். நீயும் கசையடிக்குத் தப்ப முடியாது. உன் கணவன் பேசினாலும் அது செல்லாது என்றாள். 

புனிதவதி இதனை ஆலோசித்தாள். வெகு புத்திசாலியாதலால் இந்த அறிவில்லாத மூடபக்தியுள்ளவர்களிடம் தப்பி விடுவதற்கு இதுமுறை என்று சொல்லி ஒத்துக் கொண்டாள். மறுநாள் இரவில் மனைவி கூறினபடியே நடந்தது. புனிதவதியும் செய்தாள். கல் எறியப்பட்டது. பேய் போய்விட்டது என்று வெற்றிப் பறை அடிக்கப்பட்டது. குடும்பம் நம்பிற்று. பார்த்த மக்கள் நம்பினார்கள். மந்திரவாதிக்குப் பெரும் தொகை கிடைத்தது. ஆனால் உண்மை புனிதவதிக்கும் மந்திரவாதி, அவள் மனைவி இவர்களுக்கே தெரியும். 

அடுத்த நாளே குடும்பம் கொடுவாயிலுக்குச் சென்றது. மகிழ்ச்சியினாலே விருந்தும் வைக்கப்பட்டது. புனிதவதிக்கும் மகிழ்ச்சிதான். தன் கணவனிடம் சொல்லித் தன் தாயார்வீடு சென்றாள். கந்தப்பனும் அங்கே சில நாள் வசித்தான். ஒரு ஆங்கில மருத்துவனிடம் அவள் கையைக்காட்டி சில நல்ல மருந்துகள் உண்டாள். இருவரும் சில ஊர்களுக்கும் யாத்திரைசென்று மன நிம்மதியோடு சுற்றினார்கள். உடலும் தேறிற்று. சில நாளில் ஊர் திரும்பினார்கள். கரு வாய்த்தாள். நல்ல ஆண்மகவைப் பெற்றாள். குடும்பம் மகிழ்ச்சி அடைந்தது. 

முதியோர் கோயிலில் பிசாசுபோயிற்று என்று நம்பினார்கள். ஆனால் உண்மை புனிதவதிக்குத்தான் தெரியும். இவ்வித மோசடி வியாபாரமும் நடக்கிறது. மக்களும் நம்புகிறார்கள் அல்லவா என்று அவள் எண்ணிச் சில நாள் நொந்து கொள்வாள்.

– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *