பேதங்கள்





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அகிலா மும்முரமாகப் பரீட்சைப் பேப்பர்களைத் திருத்திக் கொண்டிருந்தாள். ஆயிற்று, இன்னும் கொஞ்சம்தான். தன் கைக் கடியாரத்தைப் பார்த்தாள். இரவு மணி பன்னிரண்டு. இன்னும் கண் விழித்துத் திருத்தினால் அது தன் உடம்புக்கு மட்டும் பாதிப்பல்ல. குறிப்பிட்ட மாணவிக்கும் அவ்வளவு நல்லதல்ல.
அகிலா மெல்லப் பேப்பர்களை ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு நிமிர்ந்தாள். வெகு நேரத்திற்கு முன் அவள் அம்மா கொண்டு வந்து வைத்து விட்டுப் போன ‘டீ’ அப்படியே ஆறிக் கிடந்தது. ‘என்னை மன்னித்து விடம்மா.’ மானசீகமாகத் தாயிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அவள் ஜன்னல் வழியே டீயை வெளியே கொட்டினாள்.
காலை கண் விழித்தபோது அவள் தாய் அறைகளைச் சுத்தம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது.
ரொம்ப நேரம் தூங்கி விட்டோமோ என்ற பரபரப்பில் எழுந்தாள் அவள்.
“அகிலா, எழுந்திரம்மா.. பள்ளிக்கூடத்திற்கு நேரமாகவில்லை? இந்தா, காப்பி இதையும் ஜன்னல் வழியாக வெளியே கொட்டி விடாதே.”
ஒரு கணம் அகிலா செயலற்று நின்று விட்டாள்.
“பயப்படாதே அகிலா.. இப்படித்தான் சில காரியங்கள் நாம் ரொம்பக் கவனமாகச் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருப்போம். அது மற்றவர்களுக்குச் சுலபமாகத் தெரிந்துவிடும்.”
வெந்நீர் அறையிலிருந்து மெல்லியதாக அகிலா பாடுவது கேட்டது. அத்துடன் சோப்பின் நறுமணமும் கமழ்ந்து வந்தது. ‘பைத்தியக்காரி! தான் ரொம்பச் சந்தோஷமாக இருப்பதைக் காட்ட வேண்டுமென்று இப்படிப் போலி நாடகமாடுகிறாள்!’ தாயார் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
கடுகு தாளிக்கும் போது ஒரு மிளகாய் அடுப்பில் தவறி விழுந்து விட்டது போலிருக்கிறது.
ஒரே கமறல். தாய் நினைத்துக் கொண்டாள். ‘இவளுக்கு எத்தனை முறை திருஷ்டி சுற்றிப் போட்டிருக்கிறேன். அப்போது கமறவில்லை. இப்போது இந்த மிளகாய் என்ன பாடு படுத்துகிறது!’
“என்னம்மா, ஒரே புகை…காரம்”. இருமியபடி வெந்நீர் அறையிலிருந்து வெளியே வந்தாள் அகிலா.
அடுப்பைச் சட்டென்று தணித்த தாய், “ஒன்றுமில்லை, இப்போது எல்லாம் சரியாகிவிடும்,” என்றவள், “நேரமாச்சு, சாப்பிட வா” என்று கூறினாள்.
“இதோ ஒன் செகண்ட்”, என்று சொன்ன அகிலா, டிரெஸ்ஸிங் ரூமுக்கு ஓடினாள். பாத்ரூம் டவல் ஒன்றினை மட்டும் தன் உடம்பில் சுற்றிக்கொண்டு அவள் ஓடியபோது அவளின் இளமையும், கால்களின் வாளிப்பும் அந்தத் தாயின் கவனத்தைக் கவர்ந்தன.
சிறு வயதில் நாட்டியம் கற்றுக் கொண்டவள் அகிலா. அது ஒரு ‘எக்ஸர்ஸைஸ்’ ‘மாதிரி என்ற நினைவில் அவள் தாயும் அவளை அனுப்பி வைத்தாள். அதன் பின் படிப்பில் கவனம் அதிகமாகவே அதை நிறுத்தும்படி ஆகிவிட்டது. ஆனாலும் அந்த உடல் கட்டு, நடனம் ஆடி ஆடிப் பழக்கப்பட்ட கால் தசைகளின் இறுக்கம், கால்களின் அமைப்பு..அந்தத் தாயால் ஒரு பெருமூச்சுத்தான் விட முடிந்தது.
“எத்தனை தடவை சொல்வது, சாப்பிட உட்காருமுன் சுவாமியை நமஸ்காரம் பண்ணிவிட்டு வா என்று?” தாய் சற்றுக் கண்டிப்புடன் தான் சொன்னாள்.
“ஓ! பார்த்தாயா நான் ஒரு பைத்தியம் அம்மா, நீ வைத்திருக்கிற ரசத்தின் வாசனை மூக்கைத் துளைத்தவுடன் சாப்பிட உட்கார்ந்து விட்டேன்”. சிரித்தபடியே எழுந்த அகிலா, சுவாமி அறைக்குள் நுழைந்தாள். தனக்குள் சிரித்த தாய் சாதத்தை எடுத்து ஆற்ற வைத்தாள்.
“இப்படி ஒவ்வொரு காரியத்தையும் நீதான் எனக்கு ஞாபகப் படுத்த வேண்டும்.” என்றாள்.
அகிலா நெய் ஊற்றியபடியே தாய் சொன்னாள்: “அதனால்தான் சொல்கிறேன். சீக்கிரம் கல்யாணம் பண்ணிக் கொள் என்று.”
அகிலா ஒரு கணம் சடென்று சாதத்திலிருந்து தன் கைகளை எடுத்தாள்.
“என்னடி?”
“ரொம்பச் சூடு. சாதம்மா!” கைகளை உதறியபடி அகிலா சொன்னாள்.
சிவந்த அந்த விரல்களையே பார்த்தாள் அவள் தாய். தானே சாதத்தைப் பிசைந்தபடி சொன்னாள். “அகிலா, உனக்கு எந்தவிதக் குறையும் தெரியக்கூடாது என்பதற்காக உன்னை நான் என் தோளில் மட்டும் போட்டு வளர்க்கவில்லை. என் நெஞ்சிலும் போட்டு வளர்த்திருக்கிறேன். உன்னுள் தன்மான உணர்ச்சிகள் தேவைதான். உன் கால்களில் நீ நிற்கப் பழகிக் கொள்வது தேவைதான். ஆனால் இவைகள் நீ எப்போதாவது சங்கடங்களைச் சந்திக்கும் போது உன்னிடம் இருக்க வேண்டிய பொக்கிஷங்கள். ஆனால் இவைகளையே வெளியில் அடிக்கடி மற்றவர் கண் படும்படி காட்டி, ‘என்னிடம் திறமை இருக்கிறது. நான் மற்றவர்களை லட்சியம் செய்யமாட்டேன்,’ என்று நீ கூறிக்கொண்டே இருந்தால், அதுவே உன்னை மற்றவர்கள் அலட்சியப்படுத்த ஒரு காரணமாகிவிடும். உன் அப்பா உயிருடன் இருந்தபோது இப்படி ஒரு நிலைமை வருமென்று நான் எதிர் பார்க்கவில்லை. துணிச்சலுடன் இத்தனை பொறுப்புக்களையும் நிர்வகிக்க வேண்டி வரும் என்று நான் கருதவில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிலை வந்த போது நான் அழுது புலம்ப வில்லை. அலட்சியமாகத் தோள்களில் பாரங்களைச் சுமந்து கொண்டேன்!” அவள் சற்று நிறுத்தினாள்.
அகிலா சாப்பிட்டபடி கேட்டாள். “இதை யெல்லாம் நீ ஏன் இப்போது என்னிடம் சொல்கிறாய்?”
மோர் ஊற்றியபடி தாய் சொன்னாள்.
“இப்போதெல்லாம் நீ மணி வீட்டிற்கு முன் மாதிரி போவதில்லை போலிருக்கிறதே…”
சட்டென்று அகிலா தலை குனிந்தாள். மணிக்கும் அவளுக்கும் இருந்த நெருக்கமான உறவு, அவன் தாய்க்கும் இவள் தாய்க்கும் உள்ள அன்பு…
அவர்கள் எங்கோ சந்தித்தார்கள். எப்படியோ அன்பை வளர்த்துக் கொண்டார்கள். அவர்கள் அன்பு நன்கு வளர்ந்த ஒரு நிலையில்தான் ஒரு நாள் மணி சொன்னான்!
“அகிலா, நம் திருமணம் நடப்பதற்கு முன் நீ உன் வேலையை விட்டுவிட வேண்டும். தெரியுமா?”
இப்படித்தான் சாதாரணமான முறையில் அவர்கள் பேச்சு ஆரம்பமாயிற்று.
“ஏன்?” கொஞ்சம் ரோஷமாகவே கேட்டாள் அகிலா.
“என் மனைவியை என்னால் சம்பாதித்துக் காப்பாற்ற முடியும். அவள் தயவில் நான் வாழ வேண்டிய அவசியம் இல்லை.”
அகிலாவுக்கு ஏனோ கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘என் மனைவியை என்னால் காப்பாற்ற முடியும், என்ற அவன் ஆண்மையை அவள் பாராட்டினாலும், ‘உன் தயவில் நான் வாழ வேண்டிய அவசியமில்லை,’ என்று அவன் சூளுரைத்தது அவளை அலட் சியப்படுத்திய மாதிரி இருந்தது.
“மணி, நீங்களும் எல்லா ஆண்களைப்போல் சுயநலமாகத்தான் இருக்கிறீர்கள். உங்களிடம் சில பெருந் தன்மைகளை எதிர்பார்த்தது என் தவறுதான்…”
மணிக்குக் கோபம் வந்தது. “உன்னை இவ்வளவு தூரம் பேச வைத்திருப்பது உன் உத்தியோகமும், உன் அம்மா உனக்கு அளித்த செல்லமும் தான். நீ என் மனைவியாக வாழ வேண்டும் என்றால் முதலில் உன் உத்தியோகத்தை விட்டுவிட வேண்டும். இல்லை யென்றால் என்னை மறந்துவிட வேண்டும்”.
அவள் பதில் பேசவில்லை.
“மனைவியாக வாழ்வதா, இல்லை டீச்சரா என்ற போராட்டமாக்கும்?” அவன் குரல் கிண்டலாக ஒலித்தது.
“இல்லை; வியாபாரியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரை இதுவரை மனிதராக நினைத்துவிட்டேனே என்ற வேதனை…”
“அகிலா, நீதான் என்னை தேடி வருவாய். நினைவிருக்கட்டும்”.
“அப்படியே தேடி வந்தாலும் டீச்சராகவே தான் வருவேன். அதுவும் நினைவிருக்கட்டும்”. அவள் வந்துவிட்டாள்.
அன்று அவனைப் பற்றிய நினைவுகளை மறந்தவள்தான். பிறகு அவனைப் பார்க்க அவள் போகவில்லை.
இதெல்லாம்… இதெல்லாம் கூட அவள் தாய்க்குத் தெரிந்திருக்குமோ?
அவளுக்குச் சாப்பிடப் பிடிக்க வில்லை. தட்டிலேயே கை கழுவிவிட்டு எழுந்துவிட்டாள். பிற்பகல் சாப்பாட்டு டிபன் பாக்ஸைத் தந்த தாய் சொன்னாள். “எல்லாம் எனக்குத் தெரியும் அகிலா. உனக்கும் மணிக்கு இடையே நடந்த விவாதம். தன் மனைவி வேலைக்குப் போகக் கூடாது என்று நினைக்க ஒரு கணவனுக்கு உரிமை யில்லையா என்ன? ஏன் அப்படிப் பார்க்கிறாய்? நான் ஆரம்பத்திலேயே சொன்னேனே.. ரொம்பக் கவனமாக நாம் செய்யும் சில காரியங்கள் நம்மைக் காட்டிக் கொடுத்து விடும் என்று. ராத்திரி நீ டீயைக் கொட்டியது பெரிதல்ல. இப்போது உன் வாழ்வையே கொட்டிக் கவிழ்க்க திட்டம் போட்டிருக்கிறாயே, அதுதான் தப்பு.”
செருப்பை மாட்டிக்கொண்ட அகிலா சோர்வுடன் தன் தாயை பார்த்தாள். “கல்யாணம் செய்து கொண்டவர்கள் எல்லாம் வாழ்ந்து குப்பை கொட்டிவிட்டார்கள். என்னை வற்புறுத்தாதேம்மா..”. கொஞ்சம் நிறுத்திச் சொன்னாள். “நான் உனக்குப் பாரமாகத் தெரிகிறேனா அம்மா?”
அவன் தாய் ஒரு கணம் வேதனையால் கண்களை மூடிக் கொண்டாள். “ஆமாம், பாரம்தான். வயதுக்கு வந்த கன்னிப் பெண் வீட்டில் கல்யாணமின்றி அர்த்தமற்ற பிடிவாதத்திற்காகக் காத்திருப்பது பாரம் தான். கல்யாணம் ஆகி, கணவனின் அன்புச் சின்னத்தைத் தன் வயிற்றில் பாரமாகத் தாங்கிப் பிறந்த வீட்டிற்கு வர வேண்டிய பெண்ணை கன்னி கழிக்காமல் வைத்திருப்பது பாரம் மட்டுமல்ல, பாவமும்கூட. போடி பைத்தியம், இன்னும் வாழ்வில் நீ சந்திக்க வேண்டிய திருப்பு முனைகள் எத்தனையோ. அதற்குள் இதுதான் வாழ்வு என்று முடிவு கட்டிவிடாதே. அர்த்தமற்ற பிடிவாதங்கள் வாழ்வாகி விடாது. வறட்டுக் கொள்கைகள் வாழ்வாகி விடாது. வாழ்வில் ஒருவர் மற்றவருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் தெரியுமா?”
அகிலா மௌனமாகப் பள்ளிக்குக் கிளம்பினாள்.
அன்று அவளுக்குப் பள்ளியில் வேலையே ஓடவில்லை.
தலைவலி என்று கடைசி பிரீயட் ‘பர்மிஷன்’ கேட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டாள்.
வீடு பூட்டி இருந்தது.
இந்த அம்மா எங்கே போய் விட்டாள்?
எதிர்வீட்டு அம்மாள் வருவது தெரிந்தது.
“உன் அம்மா இந்த விலாசத்திற்கு உன்னை உடனே வந்து பார்க்கச் சொன்னாள்”.
அகிலா அந்த விலாசத்தைப் பார்த்தாள். அது ஓர் ஆஸ்பத்திரியின் விலாசம்.
அம்மாவுக்கு என்ன? அடிக்கடி நெஞ்சு வலி வரும். ஒரு வேளை நெஞ்சு வலி அதிகமாகி…
ஆஸ்பத்திரியில் பயந்தபடியே நுழைந்தாள் அகிலா. அதோ…. அதோ… அந்த நெடிய வராந்தாவில் அவள் அம்மா காத்துக் கொண்டிருந்தாள்.
தன் தாய்க்கு ஒன்றுமில்லை என்று தெரிந்தவுடன் மனத்திற்குத் தென்பாக இருந்தது அவளுக்கு.
தாய் பேசவில்லை. எதிர் அறை ஒன்றைச் சுட்டிக் காட்டினாள்.
ஒன்றும் புரியாத குழப்பத்தில் அகிலா அந்த அறைக்குள் நுழைந்தாள். ஒரு நர்ஸ் எச்சரித்துக் கொண்டிருந்தாள். “பேஷண்டைத் தொந்தரவு பண்ணாதீங்க. இப்பத்தான் நினைவு திரும்பி இருக்கு. ஆளுக்கு ரெண்டு நிமிஷம் பார்த்துட்டு வெளியே வந்திடுங்க…”
திகைத்தபடி அகிலா அந்த பேஷண்டைப் பார்த்தாள். வெண்மையான அந்தக் கட்டிலில் உடல் முழுவதும் கட்டுக்களுடன் படுத்திருப்பது..?
மணி. ஆமாம், மணியே தான்!
அதற்குள் அவள் வந்த விவரத்தை அவனிடம் யாரோ சொல்லி விட்டார்கள். அவள் எந்தப் பக்கம் வருகிறாள் என்பது கூடத் தெரியாமல் ஏதோ ஒரு திசையைப் பார்த்தபடியே அவன் பேசினான்.
“வா அகிலா, பாக்டரியை சூபர்வைஸ் பண்ணும்போது திடீரென்று ஏற்பட்ட ஒரு விபத்து. கையின் விரல்கள் போய்விட்டன…இதோ இந்த பாண்டேஜில் மூளியான கை தான் இருக்கிறது. கண் பார்வையும் வருமோ, இல்லை வராதோ தெரிய வில்லை. பரவாயில்லை. நிறைய நஷ்ட ஈடு தருவார்கள். ஆனால் அகிலா, என் வாழ்வின் நஷ்டத்தை யார் செப்பனிடப் போகிறார்கள்? என் மனைவியை நான் சம்பாதித்துக் காப்பாற்றுவதாகச் சொன்னேன், இப்போது என்னையே யாராவது காப்பாற்ற வேண்டும் போலிருக்கிறதே!”
அவள் திகைத்து நின்றாள்.
‘அகிலா. நீ ஜெயித்துவிட்டாய்! நீ விரும்பியது..நீ வேலைக்குப் போக வேண்டும். இனி மணி உன்னைத் தடுக்கமாட்டான். அவன் இப்போது உன் நிழலில்..நீ வழி காட்டினால்தான் அவனால் நடக்கவே முடியும்! இதுதானே நீ விரும்பிய சுதந்திரமான வாழ்வு? கிடைத்துவிட்டதல்லவா?’ அவள் உள் மனம் கேலி செய்தது.
– குமுதம், 08-06-1975.