பெரிதினும் பெரிது கேள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 27, 2024
பார்வையிட்டோர்: 1,777 
 
 

மரைக்காயர் சிரித்த முகத்துடன் அழைத்தார்.

வாங்க ராம்.. வா தமிழ்.

அமர்ந்தார்கள்.

தமிழ் சிறிய சில்வர் சம்புடம் நீட்டினான்.

என்ன?

நான் செஞ்ச ஸ்வீட் மாமா.

குடு.. குடு

ஆர்வமாய் திறந்து ஒரு துளி நுனி நாக்கிலிட்டார்.

ஹை.. நல்லாருக்கு தமிழ்.. எந்த ஊர் ஸ்வீட் இது?

ராஜஸ்தான்.. பேர் தில்குஷால்..

சிரித்தார்.

பேரே குஷாலா இருக்கே. சரி என்ன விஷயமா இவ்ளோ தூரம் ராம்?

அப்பா சிறிது தயங்கினார்.

என்ன ராம்? ரொம்ப யோசிக்கற?

அப்பா சிரித்தார்.

இவன் கப்பல் வேலைய விட்டுட்டாள்.

மரைக்காயர் திடுக்கிட்டு நிமிர்ந்தார்.

நல்ல சம்பளமாச்சே.. ஏன் தமிழ்?

கப்பல்ல பத்து வருஷம் சுத்தியாச்சு.. அப்றம்..

அப்றம் என்ன?

அப்பாக்கு வேற முடியல..

மரைக்காயர் பதறினார்.

உடம்புக்கு என்ன ராம்?

வயசான வர்ற விஷயம். சுகர் கண்ட்ரோல்ல நிக்க மாட்டேங்குது.

எனக்கு பி.பி. உனக்கு சுகர்.

இளமையை அதன் கொண்டாட்டங்களோட ஏத்துக்கிட்டோம்ல.. அதே மாதிரி முதுமையை அதன் பலவீனங்களோட ஏத்துக்கத்தானே வேண்டும் சாயபு.

மரைக்காயர் உற்சாகமாகத் தலையசைத்தார்.

மேலே சொல்லுபா.

அப்பா சொன்னார்.

உங்களுக்குத்தான் தெரியுமே மரக்காயர்… நம்ப பிஸினஸ் டல்லாய்டுச்சு.. ஊர் முழுக்க இப்ப பிரியாணி , ஷவர்மா, சிக்கன் தான் ஓடுது.. நம்ப சைவ ஓட்டல் திக்கித் திணறுது.

மரைக்காயர் ஆமோதித்தார்.

அகர்வால்.. ஷர்மான்னு பாம்பே, குஜராத்திங்க நம்ப பாரம்பர்ய கஸ்டமர்ஸை அவங்க பக்கம் இழுத்துட்டாங்க.

தமிழ் குறுக்கிட்டான்.

மாமா.. நீங்க குஜராத்துன்னு சொன்னதால இத சொல்றேன்.உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? குஜராத்ல ஒரு சாப்பாடு கொடுப்பான் பாருங்க. குஜராத் தாலின்னு பேரு. டிவைன். சுத்த சைவம்.

அடடா..சைவமா?

ஆமா. நம்ப ஊர் தாம்பாளம் சைஸ்ல பிளேட் வைப்பான். கிட்டத்தட்ட இருபது ஐட்டம்.

அவ்ளோ ஐட்டம் எப்படிபா சாப்பிட முடியும்?

அந்த ருசிக்காக சாப்பிடலாம்.

சிரித்துக் கொண்டே சொன்னார்.

அப்ப காலைல சாப்பிடாம வெறும் வயித்தோட போனா ஒரு கட்டு கட்டலாம்னு சொல்லு.

நிச்சயமா.. சைவத்துலயும் வெரைட்டி கொடுக்கலாம்னு சொல்றேன். டேஸ்ட் நல்லாருந்தா மக்கள் நம்ப பக்கமும் வருவாங்க.

நிச்சயமா மக்கள் எப்பவும் நல்ல ரசனைக்காரங்கதான்.

அதே மாதிரி உங்க ஜவுளி வியாபாரமும் இப்ப டல்தான். எல்லாம் ரெடிமேட்ஸ்க்குப் போய்ட்டாங்க.. அப்றம் ஆன்லைன் ஷாப்பிங்.

நம்ம ஃபேஷன் டைலர் சுகுமாரன் எவ்ளோ பெரிய ஆள். பண்டிகைல மட்டுமில்லாம சாதாரண நாள்லயும் எவ்ளோ ஆர்டர் எடுப்பான் தைக்கறதுக்கு. இப்ப பாரு.. பத்து பதினைஞ்சு வயசானவங்களுக்கு ஜிப்பா தச்சுக்கிட்டு இருக்கான்.

இனிமேல அந்த காலம் வராதுல்ல.

தமிழ் சிரித்தான்.

ரெண்டு பெரியவங்க சேந்தா அந்த காலத்தை மட்டும் தான் பேசணும்னு இல்ல மாமா. தளரா முயற்சி இருந்தா எல்லாக் காலமும் பொற்காலம் தான்.

மரைக்காயர் சிரித்தார்.

ராம். உம்புள்ள நல்லா பேசறான் பாரேன். கப்பல்ல ஊர் ஊரா சுத்திருக்கான்ல .. அந்த அனுபவத்துல பேசறான்.

அப்பா பெருமூச்சு விட்டார்.

நம்பல்லாம் பொறந்ததிலேர்ந்து இதே ஊர்ல குதிரை ஓட்டிட்டு இருக்கோம்.

பெரியவர்கள் சிரித்தனர்.

அதான்.. ஹோட்டலை தமிழ் எடுத்து நடத்தறேன்னு சொல்லுறான்.

அப்டி போடுர்றா சக்கன்னானாம். சந்தோஷம் தம்பி. என்ன பிளான் வச்சிருக்க?

நிறைய பிளான் இருக்கு.. இப்ப காலை ,மாலை டிபன் மட்டும் தான். அத மாத்தி காலை ஆறு முதல் இரவு பத்து வரை கடை உண்டு. வாரம் ஒரு நாள் முழுவதும் வேறு ஒரு மாநில உணவு ஸ்பெஷல்.

அப்டின்னா?

ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு டேஸ்ட் இருக்கும்ல. கார்நாடகா போனா அந்த பிஸிபேளாபாத் நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் . அதே மாதிரி எல்லா மாநிலத்துக்கும் ஒரு டேஸ்ட்.

யோசித்தார்.

அதுக்கு நிறைய ஆள் வேணுமே?

கொஞ்ச நாளைக்கு என் பேட்ச்மேட் வர்றாங்க.

நல்லது தமிழ். உன்னால முடியும் செய்ப்பா.

மரைக்காயர் மெலிதாக கண் கலங்கினார்.

அப்பா அவர் கை தொட்டார்.

மேல் துண்டினால் கண் துடைத்துக் கொண்டே சொன்னார்.

உன் பேச்சு ,செயல் எல்லாமே ஹைதரை ஞாபகப்படுத்திடுச்சு.

ஹைதர் மரைக்காயரின் மூத்த பிள்ளை.

தான்ஸானியாவுக்கு ஒரு பிசினஸ் விஷயமாக போனவன் ஆணி அடிக்கப் பட்ட பெட்டியில் திரும்பி வந்தான்.

நீங்க இவனுக்கு ஒரு உதவி பண்ணனும்.

அப்பா சற்று தயக்கத்துடன் கேட்டார்.

நமக்குள்ற என்ன தயக்கம்.. நான் என்ன பண்ணனும் தமிழ்?

உங்க கடைக்கு வர்ற கஸ்டமரை நம்ப கடைக்கு அனுப்பணும்.

மரைக்காயர் நெற்றி சுருக்கினார்.

எப்டி?

உங்க கடைல பர்சேஸ் பண்ண வர்றவங்களுக்கு எங்க கடை காஃபி தர்றோம்.

துணி எடுக்க வர்றப்ப நிறையபேர் வருவாங்களே?

வரட்டும். பில் போடறப்ப எத்தனை பேர்னு பில்லில் மென்ஷன் பண்ணிடுங்க.. துணி டெலிவரி செய்யறப்ப நாங்க கொடுக்கற காஃபி டோக்கனை கொடுங்க . எல்லாருக்கும் காஃபி ஃபிரி.

இதுனால என்ன பிரயோஜனம்?

எங்க கடைக்கு கஸ்டமர் வருவாங்க..

ஒரு இலவச காஃபிக்காக அங்க வருவாங்களா?

நடுப்பற ஒரு பத்துக் கடைதானே இருக்கு. வருவாங்க.அவங்கள வெறும் காஃபியோட அனுப்ப மாட்டோம்.. அது எங்க வேலை. எங்க சுவை.

ஓ.. நிறைய கஸ்டமரை வரவைக்க முடியும்..ஆனா ஒரு பர்சேசுக்கு நாலு பேர் வருவாங்களே?

வரட்டும். நிறைய பேர் வந்தா நல்லது தான். நம்ப ஊர் ஆளுங்க எந்த இலவசத்துக்கும் பதிலுக்கு எதாவது செய்யணும்னுதான் நினைப்பாங்க?

எலெக்ஷன் நேரம் மாதிரி

சிரித்தார்.

பதிலுக்கு உங்க ஜவுளி கடை வொர்க்கர்ஸ் அனைவருக்கும் சாயங்கால காஃபி நாங்க தந்துடறோம்.

அது அவசியம் இல்ல தமிழ்.

இருக்கட்டும். ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருப்போம். நாம ரெண்டு பேரும் பரம்பரை பரம்பரையா இந்த தொழிலை செஞ்சுட்டு வர்றோம். நேத்து வந்தவங்களுக்கு பயந்துட்டு ஓடிட முடியாது. அது மட்டுமல்ல எங்க ஹோட்டல் வொர்க்கர்ஸ்க்கு யூனிஃபார்ம் உண்டு. உங்க கடை துணிதான்.

அடேங்கப்பா.

அது மட்டுமல்ல. எங்க ஹோட்டல்ல சாப்பாடு அம்பது பேர்க்கு மேல ஆர்டர் பண்றவங்களுக்கு உங்க கடைல துணி எடுக்க இலவச டோக்கன். அம்பது பேர்னா ஆயிரம் ரூபா.. நுறு பேர்னா இரண்டாயிரம் ரூபா. நம்பர் இண்டு ட்வெண்டி.

மரைக்காயர் கை நீட்டினார்.

கை நீட்டிய தமிழை இறுக்கி அணைத்துக் கொண்டார்.

சரளா டீச்சர் முகம் பூவாய் மலர்ந்தது.

வாங்க சார்.. ஏய் தமிழ் .. எப்டிப்பா இருக்கே?

நல்லா இருக்கேன் டீச்சர்?

அப்பாவும், பையன்னுமா எங்க இவ்ளோ தூரம்?

ஒரு ஹெல்ப் டீச்சர்?

செஞ்சிடுவோம்.. சொல்லு தமிழ்.

அப்பா இது தான் சரளா டீச்சர்.

டீச்சர் நான் நம்ப ஹோட்டல்ல சில மாற்றங்கள் செய்யப் போறேன்.

ஸோ… அப்பாவுக்கு ரிடையர்மெண்ட்?

நோ.. அப்பாதான் என்றும் எங்கள் ஹோட்டலின் நிரந்தர சிஇஓ.

சூப்பர்.

உங்க ஸ்கூல்ல டென்த், ட்வெல்த் பசங்களுக்கு காலைல எக்ஸ்ட்ரா கோச்சிங் கொடுக்கறதா கேள்விபட்டேன்..

ஆமாம்.. கவர்ன்மெண்ட் ஸ்கூல் பசங்களும் களத்துல நிக்கணும்னு நாங்களும் போராடறோம்.

அந்தப் பிள்ளைங்களுக்கு காலை காஃபி இலவசமா நாங்க தர்றோம்.

கிட்டதட்ட அம்பது பொம்பளை புள்ளங்க.. டெய்லின்னா உனக்கு கட்டுபடியாகுமா?

எல்லாத்துக்கும் லாபக் கணக்கு பாக்க முடியாது டீச்சர்.

சரி சொல்.

எல்ஐசிமகேஷ்வரன் தான் சொன்னார். அவங்க டெய்லி உங்க புள்ளைங்களுக்கு கால டிபன் தர்றாங்களாமில்ல.. அத பாக்கறப்ப இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை.

கிட்டதட்ட எல்லா புள்ளைங்களும் சுத்துபட்டு கிராமத்துலேர்ந்து தான் வருதுங்க. காலைல சாப்பிடாமத்தான் வரும். உங்க காஃபி அந்தப் பிள்ளைங்கள உற்சாகப் படுத்தும். மகிழ்ச்சி தமிழ்.

காரில் வரும் போது ராமச்சந்திரன் அமைதியா இருந்தார்.

என்னப்பா யோசனை?

ஒண்ணுமில்லே தமிழ்.

இல்ல.. ஏதோ இருக்கு. சொல்லுங்கப்பா. நாம இப்ப பார்ட்னர்ஸ்.

மெலிதாக சிரித்தார்.

நிறைய புது ஆள்ங்கள சேக்கறோம். இலவச காஃபி .. எல்லாத்துக்கும் செலவு எகிறிடுமே தம்பி.

நிச்சயமா எகிறத்தான் செய்யும்.

பின் எப்டி?

நம்ப ஹோட்டலுக்கு காய்கறி எங்க ரெகுலரா வாங்கறீங்க?

பெரிய மார்க்கெட்லதான்.

அங்க வெல எப்படி?

அது தாறுமாறா ஏறிட்டுதான் இருக்கு.

அதுக்கு ஒரு ஏற்பாடு இருக்குபா.. என் ஃபிரெண்ட் செழியன் இருக்கான்ல..

ஆமாம்.. திருவையாறு மிராசுதார்.

அவன் காய்கறி பயிர் பண்ணிட்டு இருக்கான். கமிஷன் ஏஜெண்டால நொம்ப நொந்து போயிருக்கான். நமக்கு நேரடியா காய்கறி சப்ளை பண்ண சம்மதிச்சுருக்கான். இருவருக்கும் லாபமான டீல். நம்ப கடை மாடில குறைந்த விலைல மருந்தடிக்காத நல்ல காய்கறியும் விலைக்கு கிடைக்கும்.

இது நல்லாருக்கே..

அவனோட மாமா ஹோல்சேல் மளிகை வியாபாரம் பண்றார். அய்யம்பேட்டைக்காரர். சுத்தமான சரக்கு. நமக்கு தருவார்.

அப்பா கண்களில் ஈரம்.

என்னப்பா?

ஒண்ணுமில்லேடா .

ராமச்சந்திரன் கல்லாவில் உட்கார்ந்திருந்தார்.

உள்ளே நுழைந்த இருவர் நேராக இவரிடம் வந்தார்கள்.

இங்க.. தமிழ்னு..

வாங்க.. உக்காருங்க.. என் பையன் தான். என்ன சாப்பிடறிங்க?

ஒண்ணும் வேண்டாம்.. அவங்களப் பாக்கணும்.

கிச்சன்ல இருக்காங்க.. வரச் சொல்றேன்.. கொஞ்சம் காஃபி சாப்பிடுங்க.

ஈரக்கையைத் துடைத்துக் கொண்டு தமிழ் வந்தான்.

நாங்க லயன்ஸ் கிளப்லேர்ந்து வர்றோம்

வாங்க சார்.. எதாவது உதவி பண்ணனுமா?

சரளா டீச்சர் அனுப்பினாங்க.. எங்க லயன்ஸ் கிளப்லேர்ந்து எக்ஸாம் முடியற வரைக்கும் ஸ்பெஷல் கிளாஸ் அட்டெண்ட் பண்ற பிள்ளைங்களுக்கு வாரா வாரம் ஞாயித்துக் கிழமை லஞ்ச் கொடுக்கலாம்னு இருக்கோம். நீங்க செஞ்சுத் தர முடியுமா?

சிறப்பா பண்ணிடலாம்.

அப்றம் உங்க கடை ரவா தோசைக்கும், தாமரைப்பூ ஆப்பத்துக்கும் எங்க மெம்பர்ஸ் எல்லாம் அடிமை.

ரொம்ப சந்தோஷம் சார்.

எங்க மீட்டிங் மாதா மாதம் நடக்கும் அதுக்கும் நீங்க தான் சாப்பாடு தர்றிங்க.

ரொம்ப சந்தோஷம்.. திடீர்னு இங்க எப்டி வந்தீங்க?

டீச்சர் சொன்னாங்க அந்தப் பிள்ளைங்களுக்கு ஃபிரியா காஃபி தரப்போறதா.. எங்க கிளப்ல செய்யறோம்னா அது வேற . இந்த சின்ன ஊர்ல ஒரு வியாபாரி நஷ்டம் பாக்காம செய்யறது பெரிய விஷயம்.

அப்பாவும் பையனும் கை கூப்பினார்கள்.

அவர்கள் கிளம்பும் போது தமிழ் சொன்னான்.

உங்க மெம்பர்ஸ் எங்க கடைக்கு சாப்பிட எப்ப வந்தாலும் பில் அமெளண்ட்ல பத்து பெர்செண்ட் டிஸ்கவுண்ட் தர்றோம்.

இருவரும் தனியாக போய் ஏதோ பேசினார்கள்.

பின் மற்றவர் கண் சிமிட்டி சொன்னார்.

எங்க மாநில மாநாடு நம்ப ஊர்ல நடத்தப்போறோம். ரெண்டு நாள்.. எல்லா ஊர்லேர்ந்தும் வர்றாங்க. உங்க சுவையால அவங்கள மயக்கிடணும். இதை இந்த நிமிஷத்துலதான் முடிவு செஞ்சோம். முடியுமா?

முடியுமா?

அப்பா தமிழைப் பார்த்தார்.

தலையசைத்தான்.

நிச்சயமா. ஜமாய்ச்சுடலாம்.

அப்பா கை கூப்பினார்.

அவர்கள் விடைபெற்றார்கள்.

அப்பா இவனையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.

என்னப்பா?

இங்க வாடா.

ராமச்சந்திரன் கை நீட்டினார்.

தமிழ் சற்று வெட்கத்துடன் அவரை நெருங்கி அணைத்துக் கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *