பெண்ணின் பெருமை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 420 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் சந்நிதியில் இருந்து வீடு திரும்பிய மீனாட்சி நிம்மதி குலைந்தவளாய் பெரிய பரபரப்புக்குள்ளாகி எதுவுமே செய்யுந் திராணியற்று உடைகளைக் கூட களைய மனமின்றி முன்புறத் திண்ணையில் அமர்ந்து ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தபடி இருந்தாள். பகற்போது அரைகுறையாக மறைய மாலை கருகிக்கொண்டிருந்தது. ஆகாயத்தில் கவிந்திருந்த சூன்யமான இருளின் நடுவில் அங்கொன்றுமிங்கொன்றுமாக வெற்றுச் சுவருக்கு வர்ணப்பூத் தீட்டியது போல் ஒரு சிறிது கூட ஒளி குன்றாமல் பிரகாசமாகத் துலங்கிக் கொண்டிருந்தது. “ஒரு வேளை அதுதான் துருவ நட்சத்திரமாக இருக்குமோ?” அவள் தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறாள்.

தன் தாயின் உரிமை ஸ்தானத்தை, நிலை நாட்டத் தவஞ் செய்து நட்சத்திரமாகி இன்றும் உலகில் நிலையான புகழுடன் துலங்கும் துருவனைத் தன் மகன் கபிலனோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாள் அவள், ஆயினும் அன்று கோயிலுக்கே போகாமல் இருந்திருக்கலாம் என்று அல்லற்படுகிறது அவள் மனம். இப்படி ஏதாவது நடக்குமென்று முன் கூட்டியே தெரிந்திருந்தால் நிச்சயமாக அன்று அவள் கோயிலுக்குப் போயிருக்கவே மாட்டாள். இன்று நேற்றுத்தான் அவள் போக ஆரம்பித்தவளாக இருந்திருந்தால் அவள் நிச்சயம் இன்று போய்த்தான் இருக்க மாட்டாள். ஆனால் அவள்தான் கடந்த இருபது வருடங்களாகத் தனது இருபத்திரண்டாவது வயதில் இருந்து சென்றுவருகிறாளே. இத்தனை நாட்களாக இல்லாத திருநாளாக இன்று மட்டும் இந்த அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டாம். இப்படி ஒன்று நடக்குமென்று அவள் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அப்படி இருக்கும் போது இதை எப்படி அம்பாள் அனுமதித்திருக்க முடியும் என்று சிந்தித்துப் பார்த்த போது அவளுக்கு நெஞ்சு இலேசாக வலித்தது.

ஒருவேளை ! ஆமாம் ! ஒரு வேளை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இருந்திருந்தால் அவள் அந்த மனிதனை திரும்பிக் கூட பார்த்திருக்க மாட்டாள். அப்படி ஒரு வஞ்சம் ஒரு பழி உணர்ச்சி அவள் இதயத்தை ஆக்கிரமித்திருந்தது. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட சந்திப்பில் நிகழ்ந்த ஓர் உத்வேகம், துடிப்பு, பாசம், பண்பு அவளை, அவன் வேண்டுகோளுக்குப் பணியவைத்து விட்டது. அவள் மறுப்பின்றிப் பணிந்துதான் விட்டாள். ஆனால் உடன்பட்டபடி செயலாற்றுவது சுலபமா என்பதுதான் அவளது தற்போதைய பிரச்சினை. அதைப்பற்றிச் சிந்திக்கும் ஆற்றலை அவள் இழந்து விட்டாள். ஆம் ! யாரைக் காண நேர்ந்தால் அவன் பார்வையில் அவன் பேச்சில் அவன் உருவத்தில் அவள் தன்னை இழந்துவிடக் கூடும் என்று எப்போதோ அவள் உள்ளத்தில் ஏற்பட்ட பயம் இன்று உறுதியாகி முற்றுப் பெற்று விட்டது.

யாரைப் பார்க்கக் கூடாது, யாருடன் பேசக் கூடாது, யாருக்காகத் தன் உள்ளத்தில் ஒரு சொட்டுக் கருணையும் கூட காட்டக் கூடாது என்றெல்லாம் மனப்பால் குடித்தாளோ, அந்த மனிதனின் முன் அவள் ஓர் அடிமையாகி விட்டாள். அடிமைக்குப் பேசும் சுதந்திரம் இல்லையே !

சிந்தனையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்க முடியாதவளாய் மீனாட்சி எழுந்து உள்ளே செல்கிறாள். பழக்கத்திற்கு அடிமைப்பட்ட அவள், அவயவங்கள் தமது கடமைகளையாற்ற இயந்திரம் போல் இயங்கிக் கொண்டாள். சாய்வு நாற்காலியில் கண்ணயர்ந்து போன தனது வயோதிபத் தந்தையை எழுப்பி அவருக்கு உணவு கொடுத்துப் படுக்கவிட்டுத் தானும் கடமைக்காக ஒரு கவளஞ் சோற்றைத் தொண்டைக்குள் திணித்து விட்டு அறைக் கதவை இழுத்துப் பூட்டிப் பேப்பரும் பென்ஸிலும் எடுத்துக் கொண்டு தன் படுக்கையில் அமர்ந்த மீனாட்சி ஏதோ கிறுக்கத் தொடங்கினாள். ஆயிற்று ! அவள் நினைத்ததை முடித்தாய்விட்டது. அதை நாளைய அஞ்சலுக்கே சேர்த்துவிட்டால் நினைத்த காரியத்தை சுலபமாக முடித்து விடலாம். இந்த நினைவு கொடுத்த நிம்மதியில் அவள் படுக்கையிற் சாய்ந்து புரள்கிறாள். மீண்டும் அவள் கண் விழித்த போது நன்றாக விடிந்து விட்டிருந்தது.

வழமைபோல் காரியங்களெல்லாம் இயந்திர கதியில் நடைபெறுகின்றன. ஆயினும் மீனாட்சியின் மனநிலையில் மாத்திரம் மாற்றமில்லை. எப்படியாவது கபிலனுக்கு கடிதம் கிடைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் அவள் மூழ்கியிருந்த அதே வேளையில் கபிலன் கொழும்பில் தன் காரியாலயத்தில் இருந்து கடிதத்தைப் படித்துக்கொண்டிருக்கிறான். கடிதத்தில் காணப்பட்ட விடயம் அவனை கலக்குகிறது. “உன்னை பார்க்க ஆசைப்படுகிறேன். உடனடியாகப் புறப்பட்டு வா” என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தால் அவன் குழப்பமடைகிறான். ஒருவேளை அம்மாவுக்கு ஏதாவது ஆபத்து….? அந்த நினைவே அவனை அச்சுறுத்திற்று. அதனால் தன் தாயின் வேண்டுகோளைத் தட்டமுடியாதவனாக உடனடியாகப் புறப்பட்டான்.

தன் சொந்த இடமான திருகோணமலையில் கால் வைத்ததும் அவனுக்கு ஒரு தனித் தெம்பு பிடித்தது. கொழும்பில் இருந்து செயற்கைக் காட்சிகளையும் போலி நாகரீகத்தையும் பார்த்து பார்த்து அலுத்து வறண்டு போயிருந்த அவன் இதயத்திற்கு திருகோணமலையை சுற்றிப் பிண்ணிப் பிணைந்திருந்த இயற்கை அழகும் தெய்வீகத் தன்மையும் மிகவும் இதமாக இருந்தது. அவன் விரைவாக நடந்து தன்வீட்டையடைந்து தன்னைப் பெற்ற தெய்வத்தைப் பார்த்த பின்புதான் அவனுக்கு நிம்மதி பிறந்தது. தான் பயந்தபடிக்கு எதுவும் நடக்கவில்லை என்பதை அறிந்து மனம் ஆறுதற்பட்ட போதும் மீனாட்சி என்றுமில்லாதபடி எதற்காக ஒரு பொய்யான செய்தியை எழுதி அவனை அழைக்க வேண்டுமென்று சிந்தித்தான். அதனால் ஆசார உபசாரங்கள் எல்லாம் முடித்த பின்பு அவன் சமயோசிதமாகச் சந்தர்ப்பம் அறிந்து “எதற்காக என்னை வரும் படி அழைத்தீர்கள் அம்மா” என்று மெதுவாகவும் பணிவாகவும் வேண்டினான்.

“ஆமாம் கபிலா இது பற்றி நானே உன்னிடம் பேச்சை ஆரம்பிக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் நீயே கேட்டுவிட்டாய். அதுவும் நல்லதாய் போய்விட்டது. இப்போது உன்னை அழைத்த காரணத்தைக் கூறுகிறேன் கேள் என்று தன் பேச்சை ஆரம்பித்த மீனாட்சி உனக்கு கூடிய வெகுவிரைவில் ஒரு திருமணம் செய்து வைக்கலாமென்று யோசிக்கிறேன். அதற்காகத்தான் அதுபற்றி உன்னோடு கலந்தாலோசிக்கலாமென்று உன்னை வரும் படி எழுதினேன்’ என்று கூறியபோது கபிலன் திடுக்குற்றான். இருந்தும் தன் மனநிலையை வெளிக்காட்டாமல் “என்னம்மா இது ! என் மகன் ஐந்து வருடமாவது உழைத்து சந்தோஷமாக வாழ்ந்த பின்புதான் அவனுக்கு ஒரு கால்கட்டுப் போட வேண்டும் என்று அடிக்கடி கூறும் நீங்கள் நான் வேலைக்குப் போய் இன்னும் ஒரு வருடம் பூர்த்தியாவதற்குள்ளேயே திருமணத்தை முடிக்க ஆசைப்படுவது எனக்குப் பெரிதும் வியப்பாக இருக்கிறது. வேடிக்கையாகவும் இருக்கிறது” என்று கூறிவிட்டுச் சிரித்தான். அப்படித்தான் நான் கூட நினைத்திருந்தேன் கபிலா, ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வேறுவிதமாகச் சதி செய்து விட்டன. நீ இப்போது திருமணம் செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உன்னுடன் கூடப்பிறந்த ஒரு சகோதரியை வாழவைப்பதற்காக அப்படி ஒரு நிலை உருவாகிவிட்டது. என்று அவள் முடிப்பதற்குள் என்னம்மா…. இது . உடன் பிறந்த சகோதரிய… எனக்கா…? எனக்கு எல்லாமே விசித்திரமாகத்தான் இருக்கிறது. உங்கள் பேச்சும் செய்கையும் எனக்குப் புதிராகவே இருக்கிறது. என்று இடைமறித்த கபிலன் ஒரு வேளை தன் தாயாருக்கு ஏதாவது மூனைக்கோளாறு ஏற்பட்டு விட்டதோ என்று யோசித்தான்.

மீனாட்சிக்கு அவன் கேள்விகள் நியாயமாகப்பட்ட போதும் அவனுக்கு எப்படி இவற்றை விளங்கவைப்பது என்று யோசித்தாள். ஆயினும் எப்படியாவது உண்மை கசப்பாக இருந்தாலும் கூட அதை அவனுக்குக் கூறித்தான் ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தவளாய் தன் உணர்ச்சியை மிகுந்த சிரமத்தோடு கட்டுப்படுத்திக் கொண்டு “கபிலா, நீயும் நானும் இதுவரை உன் அப்பா எங்களை தவிக்க விட்டு எங்கோ சென்று விட்டார் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் ஆமாடி கபிலா ! ஆனால் இன்று அதற்கு மேலான ஓர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். என்பதை கூறும் போது என் நெஞ்சு வேதனைப்படத்தான் செய்கிறது. ஆம் கபிலா உன் தந்தை இன்று மறுமணம் செய்து மூன்று பெண்களுக்குத் தந்தையாகிவிட்டார். என்பதை உனக்கு கூறும் போது என் நாக் கூசுகிறது. நான் அதையிட்டு வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். ஆயினும் அவர் என்னைத் தொட்டு தாலி கட்டிய கணவர். உனக்கு அப்பாவாகவேண்டியவர். அவருக்கு நான் ஒரு நாளாவது அன்பு மனைவியாக இருந்ததன் சின்னமாகத்தான் நீ என் முன் நிற்கிறாய் என்பதை எண்ணும் போது அவர் எமக்கு இழைத்த துரோகத்தைவிட அவர் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழ்மை நிலையை மட்டுந்தான் சீர்துாக்கிப் பார்க்கக் கூடியவளாய் இருக்கிறேன்’ நான் தெய்வ பக்தியுள்ளவள். பத்திரகாளி அம்மன் மீது அசையாத நம்பிக்கையுள்ளவள். நாட் தவறினாலும் கோயில் செல்லத் தவறாதவள் என்ற உண்மையை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் மறவாமல்உன் அப்பா இரண்டு நாட்களுக்கு முன்னர் அம்பாள் சந்நிதியில் என்னைச் சந்திக்க வந்திருந்தார்.

கூறிவிட்டு கொட்டிய வார்த்தைகளை ஜீரணிப்பது போல் மீனாட்சி சில நிமிட நேரம் மெளனம் சாதித்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். அந்த இடைவெளியில் ஏற்பட்ட நிம்மதியில் மீண்டும் தொடந்தாள். “உன் அப்பாவின் மேல் எனக்கு வெறுப்பு ஏற்படாத போதும் அவர் எமக்கு இழைத்த துரோகத்தை நினைத்து அவர் மேல் எனக்கு ஒரு வஞ்ச மனப்பான்மை ஏற்பட்டிருந்ததை என்னால் மறுக்கவோ மறக்கவோ முடியாது, கபிலா. ஆனால் முந்தநாள் உன் அப்பாவை பல வருடங்களுக்கு பின் திடீரென கண்டதில் ஏற்பட்ட சலனம் என்னை அவருக்கு அடிமையாக்கிவிட்டது. என் உள்ளத்தில் அவரைப்பற்றி உண்டாகியிருந்த கோபம், பொறாமை, எரிச்சல் எல்லாமே இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. அவர் முன்னிலையில் என் கோபத்தை எப்போதுமே என்னால் சாதிக்க முடிந்ததில்லை. அதனால் தான் அவரது வேண்டுகோளை என்னால் மறுக்க முடியவில்லை. அவரது மூத்த பெண் உனக்குத் தங்கையாக வேண்டியவள். ஒரு வாலிபனைக் காதலித்ததாகவும் அந்தக்காதல் திருமணத்தில் முடிவதாக இருந்தால் அந்த வாலிபனது தங்கைக்கு ஒரு நல்ல வரன் பார்த்துத் திருமணஞ் செய்து கொடுக்க வேண்டும் அல்லது இருபதாயிரம் ரூபா சீதனம் தரும்படி ஒற்றைக்காலில் நிற்கிறானாம் அவன்.

அதன் பின்புதான் உன் அப்பாவுக்கு தனக்கொரு மாஜி மனைவியும் அவள் மூலம் பிறந்த ஒரு வளர்ந்த மகனும் உண்டு என்ற உண்மை புலப்பட்டிருக்கிறது. தன் மகள் திருமணத்திற்கு உன்னைச் சீதனமாகத் தரும்படி என்னிடம் மிகவும் யாசித்துக் கேட்டார். அவர் மூலம் எனக்கு கிடைத்த பொருள் அவரது உடைமை நீ என்னால் மறுக்க முடியுமா…? என் மகன் என் சொல்லைத் தட்டமாட்டான். என்ற ஒரேயொரு நம்பிக்கையில் சம்மதங் கொடுத்துவிட்டேன். கபிலா இப்போது என் வாழ்வும் தாழ்வும் உன் கையில் இருக்கின்றன. உன் அப்பா ஆயிரம் குற்றம் செய்தவராக இருந்தாலும் இன்று நான் அணிந்திருக்கும் மாங்கல்யத்திற்கும் திலகத்திற்கும் காரணமாக இருப்பவர் அவர்தான் என்பதை நினைக்கும் போது அவரைத் தண்டிக்க என் மனம் ஒப்பவில்லை.

“அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை”

என்பது வள்ளுவர் வாக்கு. என்று கூறிய மீனாட்சியின் குரல் இலேசாக நடுங்கிற்று. நட்ட கல்லைப் போல வாய்பேசாத தன் தாயார் கூறியவற்றைச் செவிமடுத்த கபிலன் சிந்தித்தான். அவ்வளவுக்கு தாயாரை எதிர்த்துப் பேசிப் பழக்கமில்லை. அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்படும்படி மீனாட்சி என்றும் நடந்து கொண்டதுமில்லை. இது காலம்வரை அவளது கோரிக்கைகள் நியாயமுடையனவாகவே இருந்துள்ளன. அதனால் இப்போது அவள் கேட்டதும் நியாயத்தின் பாற்பட்டதேயாயினும் அவனால் உடனடியாக அவள் வேண்டுகோளை ஆதரிக்க முடியவில்லை. கொழும்பில் அவன் கூட டைப்பிஸ்டாகக் கடமையாற்றும் அகல்யாவை மட்டும் அவன் காதலிக்காமல் இருந்திருந்தால் அவன் பொம்மையைக் கூடத்தான் தாயாருக்காக கட்டத் தடை சொல்லியிருக்க மாட்டான். ஆனால் அகல்யாவுக்கு அவன் ஏற்கனவே வாக்குக் கொடுத்து விட்டாான். பெற்ற தாயிடம் தான் ஒரு பெண்ணை காதலிப்பதற்காக எப்படிக் கூறமுடியும். அகல்யா ஓரளவு வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்பதை அவன் அறிந்திருந்தான். அத்துடன் தன் குடும்ப இரகசியங்களைக் கூட ஒன்றும் விடாமல் அவளிடம் அவன் ஒப்புவித்து விட்டிருந்தான். முதலில் அவளிடம் இந்தப்பிரச்சினையை கூறினால் அவள் ஏதாவது உதவி செய்ய முன் வருவாளென அவன் நம்பினான். அதனால் ஒரு வார அவகாசம் தரும்படி தன் தாயிடம் கூறிவிட்டு அவன் கொழும்புக்குத் திரும்பினான்.

அகல்யாவிடம் நடந்ததை கூறிவிட்டு அவள் என்ன பதில் தருவாளென்று பயந்திருந்தவனுக்கு, அவள் அளித்த பதில் மனதிற்கு பெரிய ஆறுதலாக இருந்தது. அவனிடம் அவள் கூறிய இரகசியங்கள் அவனை ஆச்சரியத்திற்குள்ளாக்கின. இவ்வளவு துாரம் திட்டமிட்டுச் செயலாற்றும் சக்தி படைத்தவள் அகல்யா என்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவன் அவளை தன் வாயாரப் புகழ்ந்தான். அவள் கூறிய எதனையும் தன் தாயாருக்கு அறிவிக்காமல் திருமணத்திற்கு சம்மதம் என்று மட்டும் கடிதம் எழுதி தன் தாயாருக்கு அனுப்பிவிட்டு நடக்கப் போவதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான் கபிலன்.

திருமணத்திற்கு முகூர்த்த நாளும் குறிக்கப்பட்டது. ஏற்கனவே தீர்மானித்திருந்தபடி மீனாட்சி திருமணச் சடங்குகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டாள். தனக்கு எல்லாமாக இருந்த ஒரே மகனின் திருமணத்தைக் கண்டுகளிக்க அந்தத் தாய் உள்ளம் தவித்த போதும் தன் கணவருடன்தான் வகிக்க வேண்டிய ஸ்தானத்தை வேற்றுப் பெண்னொருத்தி வகித்து நடத்தும் இடத்திற்குத்தான் செல்ல நேர்ந்தால் தன் மகனது கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுமென்றும் தன் கணவனின் பெயருக்கு இழுக்கு ஏற்படும் என்ற காரணங்கள் தான் அவளைத் தடுத்து நிறத்தின. கபிலனுக்குக் கூட தன் தாயார் தன் திருமணச் சடங்குகளில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் கூடத் திருமணத்தை கண்டுகளிக்கவாவது அவளை வற்புறுத்த வேண்டும். என உள்ளந் துடித்த போதும் தன் தாயாரின் கெளரவத்திற்கு இழுக்கு நேரிடும் என்ற பயத்தில் தன் ஆசையை நிராசையாக்கிக் கொண்டான்.

திருமண தினமும் ஒருபடியாக முன்வந்து நின்றது. முகூர்த்தத்திற்கு இன்னும் எண்ணி மூன்று மணிநேரமே இருந்தது. மீனாட்சி ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தாள். வாசலில் காலடியரவங் கேட்டு நிமிர்ந்த போது அவள் கண்கள் நிலைகுத்தி நின்றன. ஆம் ! அங்கே அவள் கணவன், நீதிபதி முன் தயங்கித் தயங்கி வரும் குற்றவாளி போல அவள் முன் தயங்கித் தயங்கி வந்தார். அவரைக் கண்டதும் அவள் தன்னை அறியாமலே எழுந்து கொண்டாள். அவளது காலும் கையும் நடுங்கின. உடலில் ஒரு பதட்டம். கண்களில் ஒரு வித துடிப்பு, இதயத்தில் ஏக்கங்கலந்த பெரு மூச்சின் எதிரொலி. ஏன் தயங்குகிறீர்கள்….? என்ன வேண்டும்…? சொல்லுங்கள்… என்றெல்லாம் கேட்க அவள் உதடுகள் துடித்த போதும் வார்த்தைகள் வெளிவரத்தயங்கின. அவள் இழைக்காமல் அவரையே பார்த்து நின்றாள். தான் செய்த குற்றத்தின் பிரதிபலிப்புக் கண்களில் நீராகப் பிரவாகமெடுக்கத்தான் கேட்பதை மீனாட்சி தயங்காமல் கொடுப்பாள் என்று தெளிவாகத் தெரிந்துங் கூட கேட்கமுடியாத நிலையில் கூனிக்குறுகி அவர் தன் ஆண்மையிழந்து நின்ற போது பெண்மை பணிந்து கொடுத்தது. ஆமாம் ! மீனாட்சியே அவரிடம் வந்த காரணத்தை வினவினாள். அதற்குப் பின்புதான் அவருடைய உதடுகள் பிரிந்தன. மீனாட்சி சம்பந்தக்குடியாருக்கு எப்படியோ எங்கள் குடும்ப இரகசியம் தெரிந்துவிட்டது. அதனால் அவர்கள் கபிலனின் திருமணம் நடக்கும் போது நான் உன்னுடன் அதாவது அவனைப் பெற்ற தாயுடன் நின்று திருமணச்சடங்குளை நிறைவேற்ற வேண்டுமாம். அதுதான் உன்னிடம் அந்த உதவியை பெற்றுக் கொள்வதற்காக ஓடோடி வந்தேன். என்று கூறிய போது அவரது குரலில் ஒரு பெண்ணின் குழைவு காணப்பட்டது.

தன்னைத் தொட்டுத் தாலிகட்டி சிலகாலம் அன்பும், அதிகாரமும் காட்டி வாழ்ந்த கணவர் இன்று தன்முன் ஒரு கோழையாகி அதட்டிக் கேட்கும் அதிகாரத்தை இழந்து ஒரு பெண்ணைப் போல் பணிந்து நிற்பதைக் கண்ட போது மீனாட்சியின் உள்ளம் வெம்பிச் சாம்பியது. ஆயினும் அவரது இந்த வேண்டுகோளை மட்டும் நிறைவேற்ற முடியாமல் குழம்பினாள் அவள். தொட்டுத் தாலிகட்டிய மனைவி மலைபோல உயிருடன் இருக்க அவளை மறந்து அவள் உணர்ச்சிகளைக் கொன்று வேற்றுப் பெண்ணொருத்தியை கைபிடித்து மூன்று குழந்தைகளுக்கும் தந்தையாகிவிட்ட ஒருவரோடு அவள் திரும்பவும் எந்த மனதோடு மனைவியென்ற ஸ்தானத்தை வகிக்கமுடியும்…….? அதுவும் மற்ற மனைவி உயிருடன் இருக்கும் போது அவள் கண்முன்னால் இத்தனை வருடங்களாக மனதைக்கட்டுப்படுத்தி ஆசாபாசங்களையெல்லாம் குழிதோண்டிப் புதைத்துவிட்டு எந்தக் காரியத்தை ஒரு பெண் தன் கடைசி மூச்சிருக்கும்வரை செய்யத் துணியமாட்டாளோ அந்தக் காரியத்தை அவள் தன் கணவனை உயிருடன் மற்றவளுக்குத் தானம் செய்ய எப்படி அற்றுப் போன உறவை மீட்டுக் கொள்ள முடியும். இத்தனை வருட ஏற்றத்தாழ்வுகளில் அவளுக்குத்தான் உணர்ச்சி மரத்துவிட்டதென்றால் இன்னுமொரு பெண்ணினது மனதை எதற்காகக் குத்திக் கிளறவேண்டும் என்ற நினைவு அவளை அந்த வேண்டு கோளுக்கு செவிசாய்க்க மறுத்தது. அப்படித் தன் ஆசைக்கு முக்கியத்துவம் கொடுத்து மட்டும் அவள் பழகியிருந்தால் பெண்ணின் பெருமையை அவள் காப்பாற்றி இருக்கவே முடியாது. அதனால் அவள் தன் கணவனது வேண்டுகோளை மறுத்துவிட்டாள். அவன் எவ்வளவோ கெஞ்சினான். ஆனால் அவள் விட்டுக் கொடுக்கவில்லை. பெண்மைக்கு மாசு தேட அவள் விரும்பவில்லை.

அந்நேரம் பார்த்து அகல்யா அங்கே வந்து கொண்டிருந்தாள். அவளைப்பின்தொடர்ந்து வந்தான் கபிலன். கபிலனது தந்தை வியப்போடு ஆனால் பயத்தோடு அகல்யாவைப் பார்த்தார். அவருக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை. “என்னம்மா இதெல்லாம் என் மகள் ஒரு கல்யாணம் செய்யப் போய் உன் பெற்றோர் என்னை வதைக்கிற வதை போதுமம்மா போதும்! இந்த இரண்டு திருமணங்களும் நடக்காது போனாற் கூட தேவலை போல இருக்கம்மா ! அவ்வளவு தூரத்துக்கு என் மனம் புண்பட்டுவிட்டது” என்று கூறியபோது அவர் குரல் கரகரத்தது. அவர் படும் அவஸ்தையைப் பார்த்து மீனாட்சி கண்ணீர் வடித்தாள்.

மீனாட்சியின் நிலைக்குப் பரிதாபப்பட்ட அகல்யா “என்னை மன்னித்துவிடுங்கள் இவையெல்லாம் நானும் என் சகோதரனும் திட்டமிட்டுச் செய்தவைதான். கபிலன் கொழும்புக்கு வரும் முன்பே என் சகோதரனுக்கும் உங்கள் பெண்ணுக்கும் காதல் உண்டாகியிருந்தது. அது எங்கள் எல்லோருக்கும் தெரியும். அதற்கு எத்தனையோ நாளைக்குப் பின்புதான் கபிலன் என் கந்தோரில் வேலைக்கு வந்தார். அவர் உங்கள் மகன் என்று அறியாமல்தான் அவரை நான் காதலிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் கபிலன் தன் குடும்ப வராலாற்றை என்னிடம் கூறித் தன் பெற்றோரின் படத்தையும் காட்டினார். அப்போது மாமாவை என் அண்ணாவினது காதலியின் தந்தை என்ற முறையில் அறிந்திருந்தேன். கபிலன் காட்டிய படத்துக்கும் அவருக்கும் உருவ ஒற்றுமைகள் நிறைய இருந்ததால் அவரது ஊர் எது என் அண்ணா மூலம் கேட்டறிந்து எங்கள் சந்தேகம் நிவர்த்தியாகி கபிலனும் என் அண்ணாவின் காதலியும் சகோதரர்கள் என்பதை அறிந்ததும் மாமா செய்த துரோகத்தை உணர்த்துவதற்காக இப்படியொரு நாடகத்தை நடத்தினோம். கபிலனுக்குக் கூட உண்மையை பின்புதான் கூறினோம். அதனால்தான் அவர் இந்தத் திருமணத்திற்கே சம்மதித்தார். எனது விவாகத்தை திருக்கோணேஸ்வரத்தில் நடக்க வேண்டும் என்று கேட்டதற்கும் காரணம் மாமி தன் மகனது திருமணச் சடங்கை காணவேண்டுமென்பதே. இருந்தாலும் மாமி பெண்மையின் பெருமையை காப்பாற்றிவிட்டார். இனி எங்கள் திருமணம் எப்படி நடந்தாலும் சரிதான். அண்ணாவுக்கு ஒரு மாமி எனக்கு ஒரு மாமியாக இருந்தாலும் மாமா ஒன்றாகப் போய்விட்டது மிகவும் நல்லதாகப் முடிந்துவிட்டது. என்று கூறிச் சிரித்தாள் அகல்யா. அந்தச் சிரிப்பில் கலந்து கொண்ட கபிலன் பெண்மையின் பெருமையை நீ கூடத்தான் காப்பாற்றிவிட்டாய் என்று கூறிச்சிரிக்க அந்த மாடிவீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் எதிரொலித்தது அந்தச் சிரிப்பு.

ந.பாலேஸ்வரி

கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர் ந. பாலேஸ்வரி. ஈழத்துச்சிறுகதைத் துறைக்குக் கணிசமான பங்களிப்பு செய்துள்ளார். பதினொரு நாவல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அந்த நினைவு, இரட்டைக் குழந்தைகள், தியாகம் என்பன சிறப்பான சிறுகதைகள்.

– 08.11.1969, ஈழநாடு.

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

ந.பாலேஸ்வரி ஆசிரியர் பற்றி - எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு… (நாவல்), முதற் பதிப்பு: 1993, காந்தளகம், மறவன் புலவு, சாவகச்சேரி. திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் ஈழத்தின் பிரபல பெண் எழுத்தாளர். இவரை ந. பாலேஸ்வரி என்றால்தான் அநேகமானோருக்குத் தெரியும்.  இவர் ஆரம்பத்தில் பா. பாலேஸ்வரி என்றே எழுதிக் கொண்டிருந்தார். இவரது தந்தையார் முகாந்திரம் த. பாலசுப்பிரமணியம் அவர்கள் ஒரு சிறந்த அரசியல் வாதியாக இருந்தாராயினும் தமிழ்ப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *