புல்லட்… புல்லட்… புல்லட்…
(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெரும்புயல் ஓய்ந்தது போல் யாழ்ப்பாண மாநகரம் அமைதியாக இருந்தது. சிங்கள ராணுவத்தினர் நடாத் திய அட்டகாசங்கள் குறைந்து மக்கள் வெளியே நடமாடத் தொடங்கியிருந்தனர்.
அட்வகேட் நடேசன், மனைவியின் விருப்பப்படி கொழும்பு போய்விடுவதா…? அல்லது இந்தியாவிற்கே போய்விடுவதா என்ற இரண்டும்கெட்டான் மனநிலை யிலிருந்து விடுபட்டு இந்தியாவிற்கே போய்விடலா மென்ற முடிவில் உடனே புறப்படுமாறு மனைவியை வற் புறுத்தினார்,
“என்னங்க… மீண்டும்…மீண்டும் இந்தியாவுக்குப் போவது பற்றியே பேசுகிறீர்கள்…? இந்தியாவிற்குப் போய் எப்படிங்க இருப்பது…!”-என்று அவர் மனைவி கமலம் சற்று எரிச்சலுடன் முணு முணுத்தாள்.
கமலத்தின் உறவினர்கள் அனைவரும் இன்னும் கொழும்பிலேயே இருந்தார்கள். அவர்களிடம் போய் விடலாமென்பதே அவள் விருப்பமாக இருந்தது.
“அம்மா… இனியும் கொழும்பிலேயே போய் இருக் கலாமென்கிறீர்களா…? ஜூலையில் காலிவீதியால் உடுத்த உடுப்புடன் மூச்சிரைக்க… மூச்சிரைக்க ஓடியனதையும்… ஓரிரவு முழுவதும் எரிந்த வீடொன்றின் இடிந்த சுவருக்குள் ஒளிந்திருந்ததையும் இவ்வளவு சீக்கிரமாக மறந்து போய்விட்டீர்களா…?” என்று சற்று ஆத்திரத்துடனேயே கேட்டான், மகன் ரவி.
“நானும்… உன் அம்மாவும் என்றால் நடப்பது… நடக்கட்டுமெனப் பிறந்தமண்ணிலேயே இருந்துவிடலாம். …உன்னையும் உன் தங்கை மீனாவையும் இங்கு வைத்திருப்பதற்குத் தான் பயமாக இருக்கிறது…நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால்… அன்றாடம் சமைத்துச் சாப்பிடவே முடியாமல் இருக்கிறது… இப்போ…சற்று அமைதியாக இருக்கும் பொழுதே ஒரு முடிவெடுத்து விடுவது நல்லது… உங்களில் எவருக்கும் இந்தியாவிற்குச் செல்வதில் இஷ்டமில்லையெனில் சொல்லுங்கள்… மீண்டும் கொழும்புக்கே போய்விடலாம்…” என்றார் நடேசன், சலிப்புடன்.
“அப்பா… இந்தியாவுக்கே போவோம்… கொழும்பு வேண்டாம்…” என்றாள் இவர்கள் பேச்சுக்கிடையே குறுக்கிட்ட பெண் மீனா.
நடேசன் இலங்கையின் தென்பகுதியில் நீண்டகால மாக இருந்தவர். பெயர் சொல்லக்கூடிய பிரபல வக்கீ லாக விளங்காவிட்டாலும் சுமாரான வருமானம் இருந் தது. கொழும்பில் சொந்த வீடு. இரண்டே குழந்தைகள்.. அதனால் பிரச்னைகள் அதிகம் இல்லாமல் இருந்தார்.
ஜூலையில் இனக்கலவரம் மூண்டதிலிருந்தேதான் அவருக்குச் சிரமதிசை ஏற்பட்டது. அவரது வீடு… இரண்டு தலைமுறையாகச் சேர்த்த சட்டப் புத்தகங்கள் அனைத்தும் சாம்பல் குவியலாகிவிட்டன. இலங்கை அரசு பயங்கரவா திகளெனக் குற்றம்சாட்டி சிறையில் தள்ளிய சில அப்பாவி இளைஞர்களுக்காகக் கோர்ட்டில் அவர் வாதாடிய காரணத்தால் அவரது உடமைகள் திட்ட மிட்டே அழிக்கப்பட்டன. அதனால் அவர் வெகுநாளைக் கப்புறம் தன் சொந்தக் கிராமத்துக்குத் திரும்பியிருந்தார். அங்கும் நிம்மதியாக இருக்கமுடியவில்லை, ராணு வத்தின் கொடுமைகளினால் இளம் வயது மகனையும்…… பெண்ணையும் வீட்டில் வைத்திருக்கப் பயமாக இருந்தது. அதனால் இந்தியாவுக்குச் சென்றுவிடலாம் என விரும்பினார். அவரது விருப்பத்தை மனைவி அங்கீகரிக்கவில்லை.
“உன்னைப்போல் “சட்’டென உன் அம்மாவால் முடிவு பண்ணமுடியாது மீனா… அவளுக்கு ஊசலாடும் மனம்…”
“இந்தியாவுக்குப் போய்த்தான் என்ன பண்ணப் போறீங்களாம்… தமிழினத் தலைவர் தமிழினத் தலைவரென நீங்கள் வாயோயாமல் சொல்லும் உங்கள் கலைஞரையே அந்த மக்கள் ‘எலெக்ஷனில்’ தோற்கடித்து விட்டார்கள்… ஈழத் தமிழர்களின் நம்பிக்கையையே சிதறடிக்கும்படி செய்துவிட்ட அம்மக்களுடன் போய் நாமென்னதான் பண்ணுவது…”
“அரசியலில் வெற்றியும் வரும்… தோல்வியும் வரும் கமலா… கலைஞர் தோற்றுவிட்டார் என்றால் அவரின் லட்சியம்… கொள்கைகள் மாறிவிட்டதென்பதோ… அவர் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் என்பதோ அர்த்தமல்ல… சேச்சே… இனமான உணர்வற்று சோற்றுக்கே அலையும் சில கூட்டங்கள்போல் நீயும் பேசாதே… கலைஞர் ஆட்சிக்கு வந்தால்… ஈழத்தமிழர் பிரச்னைக்கு விமோசனம் பிறக்குமென நாமெல்லோரும். காத்திருந்தது உண்மைதான்… எங்கிருந்தோ அடித்த புயல் எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போய்விட் டது…என்றாலும் நான் அவர் மேல் வைத்துள்ள நம்பிக்கையை இழக்கவில்லை… கலைஞர் இல்லாவிட்டால் தமிழினமே இன்று உலகத்தின் ஒரு மூலைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்…”
நடேசன் பெரியார் காலத்திலிருந்தே திராவிடர் இயக்கக் குடும்பத்தில் பற்றுள்ளவர். அதனால் அவர் “இன்றும் கலைஞர் ஒருவர்தான் ஈழத்தமிழர்கள் படும் இன்னலை தன் குடும்பத்துக்கு ஏற்பட்ட கஷ்டமாக நோக்குகிறார் அவரால்தான் தமிழர்களின் உரிமையை ஆணித்தர மாக அடித்துக்கூறமுடியும்…” நடேசன் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே… விடு விடென உள்ளே நுழைந்த அவர் மாமனார்;
“நடேசா… முல்லைத்தீவுப் பகுதியில் மீண்டும் ராணு வத்தின் கெடுபிடிகள் அத்துமீறி விட்டதாம், இன்று மட்டும் எழுநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்களையும்… இளம் பெண்களையும் ‘ட்ரக்’ கில் அள்ளிப் போட்டுக் கொண்டு போயிருக்கிறான்களாம். இந்தப் பகுதிக்குள்ளும் இயக்கப் பையன்கள் இருக்கிறார்களென சி.ஐ.டி க்கள் திரிகிறன்கள் …இனியும் நீ மீனாவையும் ரவியையும் இங்கு வைத்திருக்காதே…ஒன்றில் வெளிநாட்டுக்கு அனுப்பிவிடு …அல்லது கொழும்பிலாவது கொண்டு போய் வைத்திரு” என்றார்.
அவருக்குக் குழந்தைகள் கிடையாது. நடேசன்தான் அவருக்குப்பிள்ளை மாதிரியிருந்தார். அதனால் நடேசனின் குடும்பத்தில் தனியான பற்றும், பாசமும் கொண்டிருந்தார். அதனால் அவர் பேச்சை நடேசன் அதிகமாகத் தட்டுவதும் இல்லை.
“நானும் அதைத்தான் மாமா கூறிகிட்டிருக்கேன்… இப்போ இருக்கிற நிலைமையில் கொழும்புக்கே போய் விடு வோம்… என் தம்பி வீட்டில் இருக்கலாம்… அங்கிருந்து கொண்டு இவர்களை வெளியே அனுப்ப வழிபண்ணலாம் என்கிறேன்…” என்றாள் கமலம்.
“பேசிப் பேசியே நேரத்தைக் கடத்தாதீர்கள்…எந்த நேரம் என்ன நடக்குமோ தெரியாது…இன்று அதிகாலை யில் பிரயாணபலன் நன்றாகஇருக்குது… பஞ்சாங்கத்தில் பார்த்தேன்…விடிகாலை மூன்று மணிக்கே இங்கிருந்து புறப்படுங்கள்… அதுதான் நல்ல நேரம்…” என்றார்.
அவரது யோசனையையே பிடிவாதமாய்ப் பிடித்துக் கொண்டாள் கமலம். பகல் முழுவதும் கணவனுடன் போராடி அவரது இந்தியா செல்லும் யோசனையை ரத் துப் பண்ணி விட்டு கொழும்புக்குச் செல்ல ஆயத்தமா னார்கள்.
வெளியே இருட்டுக் கலையவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில நட்சத்திரங்கள் மட்டும் மின் னின. மற்றபடி தெரு விளக்கைத் தவிர வேறெந்தச் சந்தடியும் இல்லை.
குடும்பத்தினர் காரில் ஏறி அமர்ந்து விட்டார்களா என ஒரு தடவை பார்த்துக் கொண்ட நடேசன் இறைவனை வேண்டிக் கொண்டு காரை ‘ஸ்டார்ட்’ பண்ணினார். விடிவதற்குச் சில மணித்தியாலங்களே பாக்கி யிருந்தன. நல்ல வேகத்தில் சென்றால் விடிவதற்கு முன்னரே வவுனியாவைத் தாண்டி விடலாம்……
குண்டும், குழியுமாகக் கிடந்த தார் றோட்டில் அவ ரது எண்ணத்துக்கு ஏற்றவாறு காரை வேசமாகச் செலுத்த முடியவில்லை. நிதானமாகவே கார் சென்று கொண்டிருந்தது.
யாழ்ப்பாணம் -கண்டி பிரதான வீதியை நடேசனின் வண்டி சமீபிக்கும் சமயம்; தெருவின் குறுக்காக இரண்டு மூன்று ராணுவ ‘ஜீப்புகள் நிற்பதைக் சண்டார் நடேசன். பயத்தில் அவர் கைகள் சற்று உதறின.
“அப்பா… எதற்காக அவனுகளுக்கு இப்படி பயப் பட வேண்டும்……” என்றான் முன் சீட்டில் அவர் கூடவே உட்கார்ந்திருந்த ரவி.
அதற்குள்ளாகவே…
காரை நிறுத்தும்படி ராணுவத்தினர் சைகை செய்த னர். கார் நின்றது. ஜீப்பிலிருந்த அத்தனை பேர்களும் காரினைச் சூழ்ந்து ஆளுக்கொரு கேள்வியாக உள்ளே யிருந்தவர்களை மிரட்டிக் கொண்டிருந்தனர்.
அடுத்தது என்ன நடக்குமெனத் தெரியாது நடேசனும் பிள்ளைகளும் திகிலுடன் பதறிக் கொண்டிருக்கும். சமயம் தங்கள் ‘ஜீப்’ பிலிருந்து எடுத்த ‘பெடறோல்’ டின்னைக் காரின் மீது கவிழ்த்தார்கள்.
எண்பத்தி மூன்றில் பெற்ற அனுபவித்தினால் ராணுவத்தினரின் நோக்கம் விளங்கி விடவே, “எங்களை விட்டு விடுங்கள்… விட்டு விடுங்கள்…” எனக் கதறிக் கொண்டே. காரைத் திறந்து கொண்டு ஓட முயன்றார்கள், நடேசனின் குடும்பத்தினர். அவர்களை ஓட விடாமல் இழுத்துக் காருக்குள் போட்டு மூடி விட்டு தீக்குச்சியை தட்டி வைத்தான் ஒரு ராணுவ வீரன்.
‘ஐயோ… எங்களைக் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… ” என மீண்டும் மீண்டும் தீனக் குரலெடுத்து உள் ளிருந்தபடியே கதறினர். அவர்களை அறியா மலேயே ராணுவ வீரர்களைப் பார்த்து கும்பிட்டார்கள். நெருப்பு ஜ்வாலையினால் எல்லோரும் உள்ளே புழுவாய்த் துடித்த னர். வெளியே நெருப்பு கொழுந்து விட்டெறிய ஆரம் பித்திருந்தது. ராணுவத் தளபதி தன் சகாக்களுக்கு ஏதோ சொல்லிச் சிரித்தபடி கொழுந்து விட்டெரியும் நெருப் பில் ‘சிகரெட்’ பற்ற வைத்துக் கொடுத்தபடி நின்றான்.
“அம்… மா… அப்பா… எங்களைக் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…” எனக் கதறினாள் காரினுள் இருந்த மீனா. அவளிருந்த பக்கந்தான் முதலில் நெருப் புப் பிடிக்க ஆரம்பித்திருந்தது. உள்ளே அவர்களிருந்து துடிப்பதைப் பார்த்துப் பார்த்து வெளியே நின்ற ராணு வத்தினர் கும்மாளமிட்டுச் சிரித்தனர்.
“அம்மா… ம்மா…”
அப்பொழுது திடீரென ஒரு ராணுவ வீரன் தன் நெஞ்சைப் பொத்திக் கொண்டு நிலத்தில் சாய்வது நடேசன் கண்களில் பட்டது. தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகப் பொழிவது தெளிவாகக் காதில் விழுந்தன.
காரைச் சுற்றி நின்ற ராணுவத்தினர் அங்குமிங்குமாகச் சிதறியோடுவதற்கு முன்னர் குண்டடிபட்டு விழும் குருவிகள் போல் வீழ்ந்தனர்.
அக்குண்டு மழைகளுக்கு நடுவில் வாளியும் தண்ணியுமாக ஓடி வந்த சில இளைஞர்கள் காரின் மீது தண்ணியை ஊற்றித் தீயை அணைத்தனர்.
அச்சத்தில் உறைந்துபோய்… நெருப்பிள் ஜுவாலை பொறுக்காமல் வதங்கிச் சுருண்டு கொண்டிருந்தவர்களை வெளியே இழுத்தெடுத்த அவ்விளைஞர்களைக் கட்டியணைத்தார் நடேசன்.
“நீங்கள் இங்கு நிற்க வேண்டாம். ஓடி விடுங்கள்…” என்றான் ஓர் இளைமின்.
“அப்பா… நீங்கள் நிற்கவே வேண்டாம் ஓடிவிடுங்கள் …நான் அப்புறம் வருகிறேன்…” என்ஞன் ரவி.
“தம்பி, உங்களுக்கு நான் எப்படியப்பா நன்றி சொல்வது…”‘ எனத் தழு தழுத்த நடேசன் “இவன் என் ஒரே மகன்… நீண்ட நாட்களாக உங்கள் இயக்கத்தில் சேர்ந்துவிடத் துடித்தான்… நானோர் கோழை…. அவனைத் தடுத்துக் கொண்டேயிருந்தேன்… இனிமேல் அவனைத் தடுக்க மாட்டேன்.”
விழுந்து கிடந்த ராணுவத்தினரின் துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டிருந்த விடுதலைப் போராளிகளிடம் ஓடியோடி தன் மகனையும் அவர்களுடன் சேர்த்துக் கொள்ளச் சொன்னார் நடேசன்.
நடந்த சம்பவங்களினால் விக்கித்துப் போய் நின்ற நடேசனின் மனைவி திடீரென;
“என்னங்க… இங்க ஓடி வாங்க… நம்ம பிள்ளை போலிருக்கே…” எனக் கதறியபடி காரோரம் சுட்டிக் காட்டினாள்.
ஓடி வந்த போராளிகளில் ஒருவன் அவனைப் பார்த்ததும் செய்வதறியாது அப்படியே ஸ்தம்பித்து நின்றான்; விழுந்து கிடப்பது கப்டன் ரஞ்சன் எனத் தெரிந்ததும் ‘பட்’ டென அவனைத் தூக்கி தன் நெஞ்சில் சாய்த்தான். ரஞ்சனின் நெஞ்சிலிருந்து ரத்தம் ஆறாக ஓடிக் கொண் டிருந்தது. தன் சக போராளியின் நெஞ்சில் துவண்டு நிமிர்ந்த ரஞ்சன் தன் கையிலிருந்து நழுவிய துப்பாக்கியை மீண்டும் இறுகப் பிடித்தபடியே……
”புல்லட்…. புல்லட்… புல்லட்…. ” எனக்கத்தினான்.
அப்பொழுதுதான் ரஞ்சனின் இரு கரங்களிலு மிகுந்த துப்பாக்கிகளில் ‘புல்லெட்’ தீர்ந்து விட்டதை தெரிந்து கொண்டான் அன்ரன்.
“இதோ- ரஞ்சா… இதோ “-அன்ரன் தன் நண்பனின் இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டும் போல் துடித்தான்.
“இந்த அண்ணாவைக் காப்பாற்றுங்களேன்… அண் ணாவைக் காப்பாற்றுங்களேன்… எல்லோரும் பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே… அண்ணாவைக் காப்பாற்றுங் களேன்…” -மீனா பெருகியோடிய கண்ணீருடன் கதறினாள்.
தன் முந்தானையைக் கிழித்து ரஞ்சனின் நெஞ்சிலிருந்து பாயும் இரத்தத்தை நிறுத்த முயன்றாள் கமலம்.
‘புல்லட்… புல்லட்… புல்… லட்…’ சொல்லிக்- கொண்டே ரஞ்சனின் தலை மெதுவாக சரிந்தது.
கமலம் பதறினாள்.
”அம்மா, அவன் கதை முடிந்துவிட்டது…” என்றான் அன்ரன் சோகத்துடன்.
‘இல்லை… அவன் சாகவில்லை… தமிழினத்தின் நெஞ்ச மெல்லாம் இனித்தான் வாழப் போகிறான்…… இவ்வினம் உள்ளளவும் இந்த வீர மறவன்……. அவர்கள் நெஞ்சங்களில் நிறைந்திருப்பான் …… அவனுக்குச் சாவில்லை……” என ஆவேசத்துடன் கத்தினார் நடேசன்.
– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.
![]() |
அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக! அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்! இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க... |