கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 18, 2025
பார்வையிட்டோர்: 121 
 
 

(1943ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3

2. கருணாவின் கடிதம்

நான் எதனால் விழித்துக்கொண்டேன் என்பது எனக்கே சரியாகத் தெரியவில்லை. தொட்டில் ஓசைப்பட்டிருக்கும் என்று முதலில் நினைத்தேன். 

தொட்டிலின் அருகில் போய்ப் பார்த்தேன். அஜய மகாராஜா சொஸ்தமாகத் தூங்கிக்கொண்டிருந்தார். மின்விளக்கின் தண்மையான நீல ஒளியில் தொட்டில் ஒரு கொடிவீடு போலத் தோற்றியது. வனதேவதைகள் இரவில் விளையாடிக் களைத்துப்போய் லதா குஞ்சங்களில் இளைப்பாறுவார்கள் என்று சொல்லுவது உண்டு. அஜயனைப் பார்க்கும்போது, ‘வனதேவதைகளுக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம்? குதிப்பது, கொம்மாளம் போடுவது, விளையாடுவது, மலர்களோடு அந்தரங்கமாகப் பேசிக் குலாவுவது – இவையே அவர்கள் வேலைகள். வாழ்க்கை விளையாட்டாகவே தோன்றுகிறது போலும்! இருவருக்கும் வாழ்க்கையில் விளையாட்டைவிடக் கஷ்டங்களே அதிகமாக இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரிவதேது!’ என்று நினைக்கலானேன். 

என்னைக் கண்டு எனக்கே சிரிப்பு வந்தது. வாழ்க்கையில் விளையாட்டுகளைவிடக் கஷ்டங்களே அதிகமாக இருக்கின்றன என்னும் விஷயம் உண்மையாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்; ஆனால் இதை ஒரு முடிவாகச் சொல்ல எனக்கு. உரிமை ஏது? தகப்பனார் சம்பாதித்து வைத்த பணத்தைக் கொண்டு நான் வக்கீலானேன். முத்தண்ணாவைப் போன்றவர் கைகொடுத்ததனால் வக்கீல் தொழிலில் முன்னேறினேன். மனைவியின் அன்பு மிகுதியினால் இந்த ஐந்து ஆண்டுகள் எப்படிக் கழிந்தன என்பதே எனக்குத் தெரியவில்லை; மேலும் அஜயன் பிறந்ததிலிருந்து எனக்குப் பால்யப் பருவமே திரும்பி வந்துவிட்டதுபோல உணர்கிறேன். ஆண்களின் வயது, அவர்கள் காதலிக்கும் பெண்ணின் வயதளவே இருக்கும் என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள்; ஆனால் எனக்கோ, எந்த மனிதனின் வயதும் அவனுக்குப் பிரியமான சிறு குழந்தையின் வயதளவே இருக்கும் என்று தோன்றுகிறது. 

தொட்டிலில் இருந்த அஜயனை நான் வியப்போடு பார்த் தேன். அவனுடைய மழலைப் பேச்சுக்கள், பொய்க் கோபம், சின்னஞ் சிறு கம்பீர உருவம் – யாவும் என் கண்முன்பு நின்றன. 

ஆனால் உடனே நான் சிந்தனையில் ஆழ்ந்தேன்; அஜயன் இப்போது எவ்வளவு அமைதியாகத் தூங்குகிறான்! என் தூக்கம் ஒரு தரம் கலைந்தது, இனி— 

அது ஏன் கலைந்தது? 

ஏதாவது கனவு கண்டிருப்பேனோ? 

இப்போதுதான் எனக்கு மங்கிய ஞாபகம் வருகிறது: 

நான் மான்போல ஓடிக்கொண் டிருந்தேன். கண்ணுக்குப் புலப்படாத ஆயிரக்கணக்கான நிலைக் கண்ணாடிகளின் வழியே நிழலிடும் பல பேரொளிகளை ஒன்று திரட்டினாற் போன்ற ஒரு காட்சி என்முன்னே தெரிந்தது. வேறொன்றும் இல்லை,, தண்ணீர்! வாள்முனையில் கதிரவனின் கதிர்கள் பட்டால் அது எப்படி மின்னலொளி வீசுமோ அப்படித்தான் தண்ணீரும். பளபளவென்று மின்னியது. 

நான் ஓயாமல் ஓடிக்கொண் டிருந்தேன். ஆனால், அற்புதமான அந்தக் காட்சிக்கும் எனக்கும் இடையே இருந்து தூரம் எவ்விதத்திலும் குறைவதாக இல்லை. 

திடீரென்று என்முன்னால் இருந்த காட்சி மாறியது. நீரலைகள் கூந்தற் சுருள்களாயின. பாற்கடலிலிருந்து மகா லட்சுமி வெளிவந்ததுபோல, என்முன்னால் கருணா வந்து நின்றாள். என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “தேவ தத்தரே, நீங்கள் பைத்தியக்காரர்! கருணா என்பவள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கண்ட ஒரு கனவே!” என்றாள். 

நான் அவள்மீது பாயப்போனேன்; அவள் மறைந்து விட்டாள். ஏதோ ஒரு பொருள் மோதியதனால் நான் கீழே விழுந்து மூர்ச்சையடைந்தேன். 

இதற்குமேல் எனக்கு ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை! 


நான் அஜயனைப் பார்த்தேன். அந்தப் போக்கிரிப் பயல் தூக்கத்தில் சிரித்துக்கொண்டு இருந்தான். ‘இவனுக்கு எத்தகைய கனவுகள் தோன்றுமோ?’ என்று சிந்திக்கலானேன். 

அம்மா நாலாம் பிறைச் சந்திரனைப் படகாக்கி அவன் கையில் கொடுத்திருக்கிறாள். அவன் அதைத் தண்ணீர்த் தொட்டியில் விடுகிறான். நிலவைச் சதங்கைகளாக்கி அவன் கால்களில் அணிந்திருக்கிறார்கள்; அவன் கூத்தாடிக் கூத்தாடி அவற்றை ஓசைப்படுத்துகிறான். பூஞ்சோலையில் இலைமறைவில் ஒளிந்திருக்கும் மலரை அவன் தேடுகிறான்; அதற்குள் அவன் தாய், “எங்கே போனானோ அம்மா, இந்த அஜயன்? சரியான விஷமப்பயல்!” என்று சொல்லிக்கொண்டே அவனைத் தேட வருகிறாள். அவளுக்குத் தெரியாமல் எங்கே ஒளிந்துகொள்ள லாம் என்று அவன் பார்க்கிறான். 

அஜயனின் எல்லாக் கனவுகளும் இப்படித்தான் காவிய மயமாக இருக்கும். தற்கால உலகில் குழந்தைப் பருவத்தில் மட்டுமே காவியத்துக்கு இடம் உண்டு. பாம்பு தோலை உரிப்பதுபோல், காளைப்பருவத்தின் வாசலில் அடி எடுத்து வைத்தவுடனே காவியமயமான கற்பனைகளை யெல்லாம் விட்டொழிக்க வேண்டும். ஆனால், நான் அதைச் செய்ய வில்லை. கருணாவுக்கு என் உள்ளத்தில் இடம் கொடுத்தேன்; அதனால் தான் உலகத்தாரின் பார்வைக்கு நான் முற்றும் சுக புருஷனாக இருந்தும், என் உள்மனம் படபடவென்று துடித்துக். கொண்டிருக்கிறது. 

பகலில் முத்தண்ணா, “புயலில் இரண்டு படகுகள் தற்செயலாகச் சந்திப்பது போன்றதுதான் மனிதர்களின் முதற்காதலின் நிலை. புயல் தணிந்ததும் அந்தப் படகுகள் தத்தம் பாதுகாப்பிடங்களுக்குச் செல்லும். அந்த இடங்கள் ஒன்றுக்கு ஒன்று வெகு தொலைவில் இருக்கும். இதற்கு யார் என்ன செய்வது?” என்று சொல்லியிருந்தார். 

அவருடைய பேச்சு அந்தச் சமயத்தில் எனக்கு ஆறுத லளித்தது. ஆனால் இப்போது ஒரு கேள்வி அடிக்கொரு தரம் எழுந்து என் அமைதியைக் குலைத்தது. கருணா குஷாலாகக் கல்யாணம் செய்துகொள்ளட்டும்; ஆனால் ஒரு டிராயிங் உபாத்தியாயரை அவள் மணந்து கொள்வானேன்? 

என்னுடைய ஒரு மனம், ‘யாரைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது அவரவர்களுடைய பிரச்னை. காதல் மின்னல் போன்றது. அது மின்ன வேண்டிய இடம் இன்னதுதான் என்று யார் தீர்மானிப்பது?’ என்றது. மற்றொரு மனமோ, ‘வக்கீலாவதாக இருந்த என் போன்றவனுடைய கோரிக்கையை மறுத்துவிட்ட கருணா, ஒரு நல்ல ஐ. ஸி. எஸ்.. ஸையாவது பிடித்திருக்க வேண்டாமா?’ என்றது. 

இந்த இரண்டு மனங்களின் சச்சரவினிடையே, இது வரையில் என் கவனத்துக்கு எட்டாத ஒரு விஷயம் மெதுவாக. என் கண்முன்னே தோற்றியது. என் மனத்தில் உண்டான- கடுந்தவிப்புக்குக் காரணம், திருப்தியடையாத காதல் மட்டுமல்ல; துன்புறுத்தப்பட்ட என் அகம்பாவமுங்கூடத், தான்! 

வளையல்கள் ஓசைப்படவே நான் திரும்பிப் பார்த்தேன். என் மனைவி படுக்கையிலிருந்து எழுந்து வந்திருந்தாள். அவள் என்னைக் கனிவோடு பார்த்து, “கும்பகர்ணனுக்குத் தங்கை என்று சொல்லும்படி நான் பெருந் தூக்கத்தில் மூழ்கியிருந் தேன்போல் இருக்கிறது! அஜயன் அழ ஆரம்பித்தால் என்னை எழுப்புவதுதானே? நீங்களே இங்கே வந்து…” என்றாள். அவள் பேச்சில் இருந்த பரிவு என் கொதித்த மனத்தைத் தணித்தது. 

அவள் வேறு வகையாக நினைக்காமல் இருப்பதற்காக, “அஜயன் எழுந்திருக்கவே இல்லை. எனக்குத்தான் தூக்கம் வராததனால் இங்கே எழுந்து வந்தேன்” என்று பதில் சொன்னேன். 

என் கையைப் பிடித்து அவள் என்னைக் கட்டிலண்டை அழைத்துச் சென்றாள்; என் இரு தோள்மீதும் கைவைத்து அன்பு நிரம்பிய பார்வையோடு என்னைப் பார்த்துக்கொண்டே, “நான் சொல்லட்டுமா, உங்களுக்கு ஏன் தூக்கம் வரவில்லை என்பதை?” என்றாள். 

“பிறர் மனத்தில் இருப்பதை அறிவதிலே நீ மிகவும் கெட்டிக்காரிதான்போல் இருக்கிறது.” 

“உங்கள் உள்ளத்திலேயே இருக்கும் எனக்கு உங்கள் மனத்தில் நடக்கும் விஷயங்களை அறிந்துகொள்வது கஷ்டமா என்ன? இனி உங்கள் உள்ளத்தில் எனக்கு இடமே இல்லை என்றால்,…” 

நான் அவள் கன்னத்தை லேசாகத் தட்டி, “மிகவும் போக்கிரிப் பெண்ணடீ நீ!” என்றேன். 

அவள் களுக்கென்று சிரித்து, “நான் சொல்வதைக் கேட்கிறீர்களா?” என்றாள். 

“என்ன?”

“முந்தாநாள் அந்த கொலைவழக்கு ஒன்று நடத்தினீர்களே; அந்த மாதிரி வழக்குகளை இனிமேல் எடுத்துக் கொள்ளவே வேண்டாம்.” 

“ஏன்?” 

“அந்த மாதிரி வழக்குகளால் தூக்கம் கெட்டுப் போய் விடுகிறது.” 

“அந்த மாதிரி வழக்குகளை எடுத்துக்கொள்ளாவிட்டால் பங்களாவில் வாசம் செய்ய முடியாதே!” 

“முடியாவிட்டால் போகிறது. சுகம் பங்களாவில்தான் கிடைக்கும் என்பதில்லையே!” 

“அடடா! பேஷ்! நீ பெரிய தத்துவஞானி ஆகிவிட்டாயே! ‘சுகம் எதில் இருக்கிறது?’ என்பது பற்றி மகாராணியார் என்ன ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார் என்று கேட்கலாமா?” 

என் தோள்மீது தலைசாய்த்து, அவள் என்னைப் பார்த்துக் கொண்டே, “இருவர் ஒன்றாவதில்தான் சுகம் இருக்கிறது” என்றாள். 

“இங்கே எனக்கு இரண்டு பேர் தெரிகிறார்களே!” என்று வேடிக்கையாகச் சொன்னேன். 

“உங்களுக்கு அப்படித் தெரியலாம். ஆனால், எனக்கு ஒருவரே தெரிகிறார்.” 

“அப்படியானால் நீ எங்கே இருக்கிறாய்?” 

“அவருடைய உள்ளத்தில்!” 

பதில் சொல்லிக்கொண்டேயிருக்கையில் அவள் நாணத் தோடு என்னைத் தழுவினாள். கருணா என் வாழ்க்கையில் தோன்றிய ஒரு கனவு போன்றவள் என்பதை நான் அந்தக் கணத்தில் உறுதியாக உணர்ந்தேன். 


மறுநாள் காலையில் நான் எழுந்தபோது நன்றாக வெயில் காய்ந்துகொண் டிருந்தது. எனக்கு முந்திய நாளின் நினைவு வந்தது. அந்தக் கருமேகங்கள், மங்கலான அந்தச் சூழ்நிலை, பிசுபிசுவென்று தூற்றலும் கடகடவென்ற இடியும், பாதை யிலிருந்த சகதியும் சேறும்,- 

ஒரே இரவில் இயற்கை புத்துயிர் பெற்றிருந்தது. அவ்விதமே என் காதலும் புத்துயிர் பெற்றுவிட்டதாக நினைத்தேன். கல்லூரியில் இருந்தபோது கருணாவிடம் எனக்கு உண்டான தவர்ச்சியே இப்போது மனைவியிடம் காதலாக. மாறியது. 

இந்தக் கற்பனை என்னை மயக்கியது. ஆயினும் உடனே எனக்குக் கவி கட்கரியின் அற்புதமும் ரம்மியமான கவிதை ஞாபகத்துக்கு வந்தது: 

“ஒருகணமே காதலின்பம் 
அடைந்ததிது போதும்-இனி 
ஓயாத மரணமழை 
பெயினுமதற் கஞ்சேன்.” 

காதலின் இந்தக் கணம் ஒவ்வொருவருடைய வாழ்க்கை யிலும் ஒரு முறைதான் வருவதாக இருக்க வேண்டும். அப்படி யானால் என் வாழ்க்கையில் அது எப்போது வந்தது? கல்லூரியில் இருக்கையில் கருணாவிடம் எனக்குக் காதல் இருந்தது. இன்று மனைவியிடம் எனக்கு ஆசையில்லை என்பது இல்லை! ஆகவே- 

நான் திகைத்துப்போனேன். ஆனால் உடனே ஒரு புதிய கட்சிக்காரன் வந்திருக்கும் செய்தியைக் கேட்டு, நான் என் மனத்திலிருந்த எல்லாக் குழப்பத்தையும் மறந்துவிட்டேன். 

அவன் கொணர்ந்திருந்த வழக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது. கணவனை விட்டு வேறொருவனுடன் ஓடிப்போன ஒருத்திக்குத் தன் காதலன் வேப்பங்காயாகி விட்டான். இனி அவனிடமிருந்தும் அவள் விலகியிருக்க விரும்பினாள். ஆனால் அவனிடம் அவள் பயப்பட்டாள். கொண்ட மனைவியைப் போல அவளை அவன் எல்லாருக்கும் தான் மணம் செய்து தோற்றுவித்தான்! இந்த விஷயத்தில் என்ன செய்வது என்பதுபற்றி என் ஆலோசனையைக் கேட்பதற்காக அந்தக் கட்சிக்காரன் வந்திருந்தான். 

வந்திருந்தவனுக்கும் அந்தப் பெண்மணிக்கும் என்ன உறவு என்பது எனக்குத் தெளிவாகப் புலப்படவில்லை. அவனுக்கும் அதைச் சொல்ல விருப்பமில்லை. 

“உண்மையாக நடந்த எல்லாச் செய்திகளையும் நான் அந்த அம்மாளின் வாயால் முதலில் கேட்டாகவேண்டும். அவளை இங்கே அழைத்து வா” என்று அவனிடம் சொன்னேன். 

அவன் முகத்தில் துயரமும் சங்கடமும் படர்ந்தன. அவன் எச்சிலை விழுங்கிக்கொண்டே, “அவள் வக்கீலிடம் வந்து போனதாகத் தெரிந்தால், அந்த ராக்ஷஸன் அவளைக் கண்டந் துண்டமாக வெட்டிப் போட்டுவிடுவானே, ஐயா!” என்றான். 

‘இப்படிப்பட்ட ஒருவனுக்காக அவள் வீட்டை விட்டு ஓடிவந்தாளே! அவள் வீட்டைத் துறந்த அந்தக் கணத்தி லாவது அவ்விருவருக்கும் காதல் இருந்திருக்கத்தான் வேண்டும்’ என்று நான் நினைத்தேன். 

“ஒருகணமே காதலின்பம் 
அடைந்ததிது போதும்-இனி 
ஓயாத மரணமழை 
பெயினுமதற் கஞ்சேன்” 

என்ற கவிதை நினைவுக்கு வந்தது. 

‘இந்தக் கவிதையில் அற்புதமும் இல்லை, அழகும் இல்லை.. காதல் என்பது பூமாலையல்ல; நெருப்பின் ஜ்வாலை’ என்று தோன்றியது. 


அந்த மனிதன் என்னிடம் கெஞ்சி மன்றாடினான். கடைசியில் ஞாயிற்றுக்கிழமையன்று அவனுடன் அவனது கிராமத்துக்கு வருவதாக ஒப்புக்கொண்டேன். அங்கே அந்த அம்மாள் என்னோடு இரண்டு நாழிகை நேரம் தனிமையில் பேசும்படி அவன் ஏற்பாடு செய்வதாகச் சொன்னான். 

என்னிடம் விடை பெற்றுக்கொண்டபோது அவன் கண் ணில் எவ்வளவு நன்றியறிவு ததும்பியது! தூக்கு மரத் திலிருந்து அவனை நான் கீழே இறக்கிவிட்டதுபோல அவன் உணர்ந்தான் போலும்! 

அவன் போய்விட்ட பின்பு, ‘ஒவ்வொருவனுடைய வாழ்க்கைப் பாதையிலும் ஏதாவது ஒருவகைக் காதல் வர வேண்டும் என்பது இயற்கை விதியா என்ன? மேலும், காதலிலே இப்படி எத்தனை ரகங்கள் இருக்கும்?’ என்ற ஒரே ‘கேள்வி என் மனத்தில் சுழலலாயிற்று. 


தபால்காரன் கொண்டுவந்த தபால்களைக் கையில் ‘வாங்கிக்கொண்டபோது, ‘இன்றைப் பத்திரிகையில் படிப் பதற்கு என்ன இருக்கப்போகிறது? கருணாவின் கல்யாணச் செய்திதான் நேற்றே வந்துவிட்டதே’ என்ற நினைப்பு உண்டாயிற்று. 

நான் கடிதங்களைப் புரட்டினேன். இரண்டாவது கடிதத் தின் மேலிருந்த எழுத்தைப் பார்த்தவுடனே, ஒரு மின்சக்தி என் உடல் முழுவதிலும் விர்ரென்று ஊடுருவிச் சென்றது. காலத்தினால் மனிதனின் முகத்தில் மாறுதல் உண்டாகிறது; ஆனால் எழுத்தில் மாறுதல் ஏது? 

அந்தக் கடிதம் கருணா எழுதியது.

அன்புள்ள தேவதத்தருக்கு, 

கருணாவின் இந்தக் கடிதம் முழுவதையும் படிப்பீர்களா? அல்லது, ‘காலேஜில் இருந்தபோது என் கோரிக்கையை மறுத்த பெண்; வக்கீலான பின்பு நான் எழுதிய காதற் கடிதத்துக்குப் பதில்கூட எழுதாத பெண்; அவள் கடிதம் இது’ என்று படிப்பதற்கு முன்னமே இதைக் கிழித்து எறிந்துவிடுவீர்களா? 

பத்திரிகையில் வெளியான செய்தியைப் படித்தே யிருப்பீர்கள். எல். டி. யான கருணா ஒரு டிராயிங் உபாத்தி யாயருக்கு மனைவியாகி இருக்கிறாள். ‘கருணாவுக்கு இது சரி யான தண்டனை தான்’ என்று மனத்துக்குள் சிரித்துக் கொண்டே சொல்லியிருப்பீர்கள். 

தேவதத்தரே, இந்தக் கல்யாணம் தண்டனை அல்ல; கருணாவுக்குக் கிடைத்த பரிசு. உங்களுக்கு இது குழப்பமாக இருக்கிறதல்லவா? 

உங்களுக்கும் எனக்கும் பழக்கம் உண்டானதிலிருந்து எல்லாச் செய்திகளையும் சொல்கிறேன்; அப்போது உங்க களுக்குக் குழப்பம் இராது. 

கல்லூரியில் நான் உங்கள் சிநேகிதியாக இருந்தேன்;ஆனால் நீங்கள் கல்யாணப் பேச்சை எடுத்தபோது; “நான் உங்க ளிடத்தில் பெருமதிப்பு வைத்திருக்கிறேன்; ஆயினும் எனக்கு மணம் செய்து கொள்ளவே தோன்றவில்லை!” என்றேன். ‘கருணா என்னிடம் சும்மா அளக்கிறாள். கல்லூரியில் இருக்கும் போது, எந்த இளைஞனையாவது மனத்தினால் காதலிக்காமல் ஒரு பெண்ணாவது இருப்பாளா?’ என்று அந்தச் சமயத்திலே நீங்கள் நினைத்திருக்கலாம். 

எனக்குத் தோன்றுகிறது: அப்படிப் பல பெண்கள் இருக் கிறார்கள். பையன்களும் நிறைய இருப்பார்கள். கல்லூரியில் பையன்களுக்கும் பெண்களுக்குமிடையே உண்டாகும் கவர்ச் சியின் உண்மையான தோற்றம் இப்போது தான் எனக்குத் தெரிகிறது. சிறு குழந்தைக்கு எத்தனை பொம்மைகள் கொடுத்தாலும், தன்னோடு விளையாடுவதற்கு இன்னொரு கூட்டாளி கிடைக்காதவரையில் அந்தச் சிறுவனுக்கு அந்தப் பொம்மை களில் எவ்விதப் புதுமையும் தோன்றாது. காலேஜிலுள்ள ஆண் பெண்களின் நிலையும் இது போன்றதுதான். ஆனால், விளையாட்டிலே கூட்டாளிகளாக இருப்பவர்கள் வாழ்க்கையிலும் கூட்டாளிகளாகவே இருப்பார்கள் என்று சொல்ல முடியுமா? பந்தடி விளையாட்டுக் கோஷ்டியில் மகாராஜா முதல் குமாஸ்தா வரையில் பலவகையான ஆட்டக்காரர்கள் இருக் கிறார்கள். பந்தாடும்போது அவர்கள் யாவரும் மிகவும் வேடிக்கையாகவும் பழகுகிறார்கள். ஆனால் அவ்வளவினாலே அவர்கள் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் உயிர்நண்பர்கள் ஆகிவிடுவதில்லை. கல்லூரி வாழ்க்கை முறையில் நாம் எதைக் காதல் என்று சொல்லுகிறோமோ, அது பெரும்பாலும் இவ் விதமான பொருள்தான். ‘வெளியுலகத்திலே புழுக்கள் பட்டுப் பூச்சிகளாகின்றன; ஆனால் மாந்தரின் மனத்திலே பட்டுப் பூச்சிகள் புழுக்களாகின்றன!’ என்று, நீங்கள் இதைப்பற்றி விமரிசனம் சொல்லலாம். ஆயினும், ‘காலேஜில் உண்டாகும். காதல் ஒரு கனவு. அப்படி இல்லையென்றாலும், அந்த வயதிலே- சிறுவர்கள் கனவுக்கண் கொண்டுதான் உலகத்தைப் பார்த்து வருகிறார்கள். மனிதன் எதன் ஆதாரத்தினால் உயிர் வாழ்கி றானோ, சமயம் வரும்போது எதற்காக மகிழ்ச்சியோடு சாகவும் தயாராகிறானோ, அத்தகைய காதல் வெறும் கனவாக இருந் தால் நடக்காது’ என்று எனக்குத் தோன்றுகிறது. 

ஆசிரியையான பின்பு காதலின் மற்றோர் அநுபவம் எனக்கு உண்டாயிற்று. இந்த ஊரில் ஒரு பாரிஸ்டருக்கும். எனக்கும் அறிமுகம் ஆரம்பித்தது. மெல்ல மெல்ல அது வளர்ந் தது. அவர் இங்கிலாந்துக்குப் போய்வந்த ஆசாமியாகையால், அவரிடமிருந்த எனக்குப் பிடிக்காத பல விஷயங்களை நான் சகித்து வந்தேன். அதனால் எங்கள் நட்பு வளர்ந்துகொண்டே சென்றது. ஒரு கோடைக்கால விடுமுறையில் நான் அவரோடு மகாபலேசுவரத்துக்குப் போனேன். மற்றொரு கோடைக்காலத்தில் மாதேரானுக்குப் போனேன். இவ்வளவு அருகில் சென்ற பின்புதான் என்னை விளையாட வைக்க வேண்டுமென்ற அவர் தந்திரத்தை நான் அறிய முடிந்தது. என்னை மணந்து கொள்ள அவருக்கு விருப்பமில்லை. சில நாள் உல்லாசமாக இருப்பதற்காக, அவருக்குக் கருணா என்ற அழகான புதுப்பெண் வேண்டியிருந்தாள்! 

காதலைப்பற்றி அவருடைய தத்துவத்தைக் கேட்ட தும் எனக்கு மெய் சிலிர்த்தது. ‘காதல் என்பது பணத்துக்கு. வாங்கக்கூடிய பொருள்’ என்று அவர் எப்போதும் சொல் வது வழக்கம். நான் ஒரு தடவை, கேசவஸுதர் பாடிய ‘காதல் கிடைக்குமோ கடைத்தெருவிலே?’ என்ற அடியைத் தற்செயலாக முணுமுணுத்துக்கொண்டிருந்தேன். அது அவர்காதில் விழுந்து விட்டது; “கிடைக்காமல் என்ன, அம்மணி? காதலைப்போன்ற மலிவான பொருள் உலகத்திலேயே வேறு இல்லை!” என்று பதில் சொன்னார். ‘கல்யாணம் என்பது காதலுக்குக் கால்கட்டு; விலங்கு’ என்பதுதான் அவருக்கு மிகவும் கால் வாக்கியம். 

அவருடன் இருக்கையில் என் மனம் அமைதியற்றுக் கலங்கும். 

நான் என்னைச் சுற்றியிருந்தவர்களின் இல்லறத்தைப் பார்க்கலானேன். ‘காதல் என்றால் மனமும் மனமும் பொருந்து வது’ என்று நான் தீர்மானித்தேன். பல குடும்பங்களில் கண வனுக்கும் மனைவிக்கும் இந்த நினைப்பே இருப்பதில்லை. அதனால் தான், மனைவி வீட்டிலும், கணவன் வீட்டுக்கு வெளியிலும் செத்துச் சுண்ணாம்பாகும்படி வேலை செய்தாலுங்கூட, அவர் களின் குடும்பத்தில் இன்பம் இருப்பதில்லை. நிழலும் ஒளியும் கலப்பதனால் அழகிய ஓவியம் உதயமாவதுபோல, ஆண் பெண் இவர்களுடைய உணர்ச்சிகளின் கலப்பிலிருந்து குடும்ப சுகம் உதிக்க வேண்டும். ஆனால்,- 

‘கல்யாணம் ஆயிற்றோ இல்லையோ, உடனே கருணா பெரிய பாட்டிக் கிழவியாகி நமக்குத் தர்மோபதேசம் செய்ய ஆரம் பித்துவிட்டாள்!’ என்று நீங்கள் கருதலாம். ஆகவே, மேலே நடந்த விஷயத்தைச் சொல்லுகிறேன்: 

பாரிஸ்டர் என் இருப்பிடத்துக்கு அடிக்கடி வர -ஆரம்பித்தார். அந்தக் குடும்பஸ்தர் இரண்டொரு தரம் நிசிவேளையிலும் வந்தார்! தனியிடம் வைத்துக்கொண்டதில் லாபத்துக்குப் பதில் எனக்கு நஷ்டமே உண்டாகும்போலத் தோற்றியது. 

எங்கள் பள்ளிக்கூடத்து டிராயிங் உபாத்தியாயர் மனோகரர் இருந்த வீட்டில் நான் ஓர் அறையை வாடகைக்கு எடுத் துக்கொண்டேன். அவர் வீட்டில் அவர் தாயையும் அவரை யும் தவிர்த்து வேறு யாரும் இல்லை. பாலவிதவையான அவர் தங்கை ஒருத்தி இரண்டொரு வருஷங்களுக்கு முன்பு வீட்டை விட்டுப் போய்விட்டாள்; தங்கைக்கு மண மாகும் வரையில் தாமும் கல்யாணம் செய்துகொள்வதில்லை என்று அவர் தீர்மானித்திருந்தார். ஒரு நாள் அந்தப் பெண் தாயிடங்கூடச் சொல்லாமல் மறைந்துவிட்டாள். மனோகரர் அவளைத் தேடாத இடமில்லை; ஆயினும் ஒன்றும் பயன்படவில்லை. இந்த அதிர்ச்சியினால் அவர் மனம் தளர்ந்து போயிற்று. வறுமையினால் அவர் ஓவியக் கல்லூரிக்குப் போக. முடியவில்லை. ஆயினும் அவர் மிகவும் அழகிய ஓவியங்கள் வரைவார். தங்கை மறைந்துபோன தருணத்தில் அவர் தம் வாழ்க்கையிலேயே மிகவும் உயர்ந்த சித்திரத்தை வரைவதில் ஈடுபட்டிருந்தார். அந்தச் சித்திரம் அநேகமாக முடிவதற்கு இருந்தது. ஆனால் தங்கை போன இடம் தெரியாமல் மறைந்தவுடனே அவருக்கு ஏற்பட்ட சோகத்தில், அந்த அரைகுறைச் சித்திரத்தை ஒரு துணிக்குள் மறைத்துவைத்து விட்டார். அதுவே அவருடைய கடைசி ஓவியம். சித்திரம் வரைவதற்காக அவர் பின்பு கைவைக்கவே இல்லை. 

நான் அவருக்குப் பக்கத்தில் குடியிருக்கச் சென்றபோது அந்த ஓவியங்கள் யாவும் எனக்குப் பார்க்கக் கிடைத்தன. ஆனால் துணிக்குள் மறைத்திருந்த அந்தச் சித்திரத்தை மட்டும் நான் பார்க்க முடியவில்லை. அந்தப் படத்தை மூடியிருந்த துணியை எப்போதும் அகற்றக்கூடாதென்று அவர் தாய்க்குக் கடுமையாக உத்தரவிட்டிருந்தார். அந்த ஓவியம் அபசகுன மானது என்று தாய் நினைத்திருந்தது இயல்புதானே? அதைப்பற்றிப் பேச்சு வந்தால், “வேளைக்கேற்ற புத்தி என்று சொல்லுகிறார்களே, அது பொய்யல்ல. அந்தப் படத்துக்குத் தான் என்ன பயங்கரமான பெயர்! புயலும் படகும்! கருணா, நீயே சொல்லம்மா; புயலில் அகப்பட்டுக்கொண்ட படகு மூழ்காமல் வேறு என்ன செய்யும்?” என்பாள் அம்மா. 

பெண்ணின் நினைவினால் அம்மாவின் ஒளியிழந்த கண் களிலிருந்து நீர் வெள்ளமாகப் பெருகும். என் ஆவல் பின்னும் அதிகமாகும்; நான் நினைப்பேன்: ‘மனோகரர் அந்த ஓவியத்தில் என்ன என்ன வரைந்திருக்கிறாரோ? புயலும் படகும் என்பதுதானே அதன் பெயர்? அந்தச் சித்திரத்தில் எத்தனை படகுகள் இருக்குமோ? அந்தப் படகில் உள்ளவர்களின் கதி என்ன ஆயிற்றோ?’ 

மனோகரருக்கும் எனக்கும் பழக்கம் வளரலாயிற்று. அவர் அறிவாளி, அன்புடையவர், துர்ப்பழக்கங்கள் இல்லாதவர். ஆனால் பள்ளிக்கூடத்து வேலைகளைத் தவிர, இப்போதெல்லாம் வேறு எந்த வேலையும் அவரால் செய்ய முடியவில்லை. அவருடைய மனம் பெரிய கொதிப்பிலிருந்து தப்பித்துக்கொண்டு. ஏதோ ஒரு விதமாக உயிர் பிழைத்திருப்பதுபோலத் தோற்றி யது. இதைப் பார்க்க எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. 

பின்பு நான் ‘இன்ப்ளுயென்ஸா’வில் படுத்தேன். சொந்த மனிதர்கள் பயப்படப் போகிறார்களே என்று நான் அவர் களுக்குத் தந்தி கொடுக்கவில்லை; கடிதங்கூட எழுதவில்லை. அம்மாவும் மனோகரரும் மிக்க பரிவுடன் எனக்குப் பணி விடை செய்தார்கள். அந்த ஐந்தாறு நாட்களில் மனோகரர் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆனார். ஜுரம் இறங்கிய பிறகு இரண்டொரு நாள் யாரையாவது ஆதாரமாகக் கொண்டுதான் நான் நடக்க வேண்டியிருந்தது. அப்படிப் பட்ட சமயங்களில் மனோகரர் என் கையைப் பிடித்துக் கொண்டபோது அவர் கையின் நடுக்கத்தை நான் ஒரு கணம். உணர்வேன். மறுகணமே அவர் கை ஸ்திரமாகிவிடும். தப் பித் தவறி, ஒரு தடவைகூட, அவர் என் கையை அழுத்த முயலவில்லை. 

அந்தப் பாரிஸ்டரோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது மனோ கரர் மிக மிகப் பெரியவராகவே எனக்குத் தோற்றினார். இல்வளவு குணமுள்ள மனிதர் தம் ஜன்மம் முழுவதையும் டிராயிங் உபாத்தியாயராகவே கழித்து வீணாக்கவேண்டுமா? அவருடைய ஓவியக்கலை ஊமையாக இருக்க வேண்டுமா? என் வாழ்க்கையின் வளர்ச்சியே தடைப்பட்டிருப்பதுபோல எனக்குத் தோற்றியது. 

மல்லிகைக் கொடியில் இலைகள் செழித்திருக்கும்போது யாருக்குத்தான் ஆனந்தம் உண்டாவதில்லை? அவற்றில் பூக்கள் அலர்ந்து நாம் பார்க்க வேண்டுமென்றே நமக்குத் தோன்றுகிறது. 

எனக்குப் பின்பு மனோகரர் படுத்த படுக்கையாகக் கிடந் தார். இப்போது நான் பணிவிடை செய்யும் முறை வந்தது. இரவும் பகலும் நான் அவர் படுக்கையின் அருகில் உட்கார்ந் திருப்பேன். ஜுரம் அதிகமாகி அவர் பிதற்ற ஆரம்பித்தால், அவர் உடலைப் போலவே என் மனமும் கொதிக்கும். சுயப் பிரக்கினை இல்லாதபோது, “நான் பெரிய சித்திரகாரனாக வேண்டும்; அழகழகான படங்கள் எழுத வேண்டும்” என்று அவர் பிதற்றுவார். 

இம்மாதிரியான சமயங்களில் புதுப் புது ஓவியங்களைப் பற்றிய கற்பனைகள்கூட அவர் வாயினின்றும் வெளிவரும். அந்த அழகிய, புதிய கற்பனைகளைக் கேட்டதும், ‘மனோகரரின் மனம் மிகவும் சோர்வுற்றிருக்கிறது. அவர் மனத்திலுள்ள இந்தக் கற்பனைகள் நிறமும் உருவமும் பெறுவதேது? யாரா வது ஒருவர் அவரைக் களிப்பிக்க வேண்டும். அவருடைய மனம் கோடைக்காலம்போல் வறண்டிருக்கிறது. அங்கே மழைக்காலம் வரவேண்டும்; உணர்ச்சி மின்னல் வீச வேண்டும்; காதல்மழை பொழிய வேண்டும்! இதை யாரால் செய்ய முடியும்? அம்மாவோ பழுத்த கிழமாகிவிட்டாள்’ என்று எண்ணமிடுவேன். 

ஒவ்வொரு நாளும் இரவில், துகாராம் இயற்றிய அருட் பாடலை அம்மாவுக்குப் படித்துக் காண்பிப்பேன். 

மனோகரருக்கு ஜுரம் இறங்கிய அன்றிரவு, 

“எங்கேநான் சென்றாலும் நீஎன் தோழன் 
என்கரத்தைப் பிடித்துவழி காட்டிச் செல்வாய்” 

என்ற பாடலைக் கடைசியில் படித்தேன். இறைவனே துணை நின்று நம்மைக் காக்கிறான் என்ற சிரத்தையினால், அம்மா அந்தப் பாடலை முணுமுணுக்கலானாள். நான் மனோகரருக்கு ஓவல்டின் கொடுக்கப் போனபொழுது, அந்தப் பாடல் என் இதழ்களில் தவழ்ந்தது. அந்தப் பாடலுக்கு அம்மாவின் மனத்திலிருந்த அர்த்தத்துக்கும் நான் நினைத்த அர்த்தத்துக் கும், பூமிக்கும் ஆகாசத்துக்குமுள்ள வித்தியாசம் இருந்தது.

“எங்கேநான் சென்றாலும் நீஎன் தோழன்…” என்று நான் சகஜமாகப் பாடிவிட்டேன். 

மனோகரர் அதைக் கேட்டார். அவர் கண்ணில் ஒரு கணம் மின்னலொளி வீசியது. அந்த ஒளியினால்தானோ என்னவோ, என் கண்கள் கூச நான் கீழே பார்த்தேன். 

சற்றுக் குணமானதும், மனோகரர் அறைக் கதவைத் தாழிட்டுக்கொண்டு, அந்த அரைகுறைச் சித்திரத்தைப் பூர்த்தி செய்ய உட்கார்ந்தார். ஓவியம் முற்றுப் பெற்ற போது, ஒரு குழந்தைபோல அவர் என் அறைக்கு ஓடிவந்தார். என் கையைப் பிடித்து அநேகமாக இழுத்தவாறே, என்னைத் தம் அறைக்கு அழைத்துச் சென்றார். 

எதிரே இருந்தது அந்த எழிலோவியம் ! 

அந்தப் படத்தில் தீட்டியிருந்த புயல் எவ்வளவு பயங்கர மாக இருந்ததோ அவ்வளவு அழகாகவும்இருந்தது. அந்தப் புயலில் ல் இரண்டு படகுகள் சிக்கியிருந்தன. ஒரு படகில் ஓர் இளைஞன் இருந்தான். அவன் முகம் மனோகரருடைய வதனம் போலவே எனக்குத் தோற்றியது. மற்றொரு படகில் இருந்த மங்கை – கருணாதான் அவள். 

மனோகரர் சிரித்துக்கொண்டே, “இந்த மற்றொரு படகில் என் தங்கை உட்கார்ந்திருப்பதாக முன்பு நான் வரைவதாக இருந்தேன்; ஆனால்—” என்று இழுத்தார். 

படத்தில் அலைகள் ஒன்றோடொன்று மோதித் திவலைகள் சிதறின. அவை எங்கள் இருவருக்கும் அட்சதைகளாகத் தோற்றின. 

அன்றிரவு நான் என் டயரியில், “காதல் என்பது அழகிய கனவல்ல; காதல் என்பது கண நேரத்து உடலின்பமும் அல்ல. காதல் என்பது இரண்டு மனங்களின் சேர்க்கை. இரண்டு அபூர்ண மனிதர்களுக்கு, ஒருவரை ஒருவர் பூர்ணமாக்குவதற் காக ஒரு விசித்திரமான தவிப்பு உண்டாகிறதே, அதன் பெயர்தான் காதல்!” என்று எழுதினேன். 

கல்லூரியில் கருணாவுக்குத் தேவதத்தர் பிடித்திருந்தார்; தேவதத்தருக்குக் கருணா பிடித்திருந்தாள். ஆனால் அந்த இரு, வருக்கும், அவர்களின் உள்ளத்தின் அடித்தலத்திலாவது மற் றொருவரைப் பூர்ணமாக்கவேண்டும் என்ற இந்தத் தவிப்பு உதயமாகியிருந்ததா? தேவதத்தரே, உங்கள் வாழ்க்கைப் படகும் என் வாழ்க்கைப் படகும் அருகருகில் வந்திருந்தன. ஆனால் அது எப்போது? நமது வாழ்க்கை குளத்து நீர்போல அமைதியாக இருந்தபோது! 

இப்படி அருகே வருவதில் கவர்ச்சி இருக்கிறது; ஆனால் காதல்-? ஊஹும்! 

புயலிலே எந்தப் படகுகள் ஒன்றுக்கொன்று அருகில் வரு. கின்றனவோ, மிருத்தியு வாசலில் எந்தப் படகுகள் ஒன்றுக்கு ஒன்று ஆதாரமாகின்றனவோ, அந்தப் படகுகள்தாம் வாழ் நாள் முழுவதும் ஒன்றாகப் பிரயாணம் செய்யும். 

உங்கள் 
கருணா 

பிற் குறிப்பு : நான் இந்தக் கடிதத்தை ஏன் எழுதினேன் என்று சொல்லட்டுமா? மனோகரரின் தங்கை உங்கள் ஊரில் இருக்கிறாளென்று இப்போதுதான் எனக்குத் தெரியவந்தது. அவளைத் தேட நாங்கள் இருவரும் சீக்கிரமே அங்கே வரப் போகிறோம். அப்போது உங்கள் பழைய சிநேகிதி என்ற முறையில் உங்கள் வீட்டில்தான் தங்கப்போகிறேன்! தான் வரப்போகும் செய்தியைத் தெரிவிப்பதற்காக, எந்த விருந்தாளியும் இன்று வரையில் இவ்வளவு நீண்ட கடிதம் எழுதிய தில்லை அல்லவா? 

– தொடரும்…

– புயலும் படகும், கதை மூலம்: வி.ஸ.காண்டேகர், தமிழாக்கம்: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: டிசம்பர் 1943, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *