புத்திர பாக்கியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2025
பார்வையிட்டோர்: 1,729 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிறக்கும்போதே தாயைப் பலிகொள்ளும் நண்டைப் போல், அந்தப் புத்திரன் – சொத்துக்கு உடையவன்—அவதரித்தான். 

பிள்ளை பிறந்த உற்சாகத்தில் காத்த பெருமாள் பிள்ளைக்கு மனைவியின் மரணம்கூட மனசில் தைக்கவில்லை 

பற்றற்றுத் திரிந்த மனம் மீண்டும் லௌகிகத் தில் பசையோடு ஒட்டத் தவிக்கிறது பணம் சேர்க் கும் ஆசை வலுக்கிறது 

ஆனால், குலத்தை விளக்க வந்த அந்தக் குலவிளக்கோ – 

தபால்கார நாயுடு நாலணாவைத் தடவிப் பார்த்துக் கொண்டே கீழிறங்கினார். அவருக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. வெற்றுக் கடிதத்துக்கு நாலணாக் காசைக் கூப்பிட்டுக் கொடுத்தானே மனுஷன் என்று ஆச்சரியம் பொங்கிற்று. ‘காசு பணங் பெருத்தவனுக்கு நல்ல காரியமிண்ணா. துட்டு சல்லிக் காசுதான். சூறை கூட எறியலாம்” என்ற எண்ணம், சத்திரத்து மனிதனை அளந்து பார்த்தது.

கடிதத்தை மூன்றாவது தடவையாகப் படித்தாயிற்று. ள்ளையார் சுழியிலிருந்து. கீழே மச்சினன்’ செண்பக ராமபிள்ளை கையெழுத்துவரை எழுத்து விடாமல் வாசித்து முடித்தார் காத்த பெருமாள் பிள்ளை. கைகளிரண்டும் சந்தோஷத்தைத் தொட்டு விட்டதுபோல் பூரித்து நடுங்கின. நெஞ்சில், ஒரு புது வெள்ளம் ஊற் றெடுத்துப் பெருகிற்று. தோளில் கிடந்த சிட்டுத் துண்டு பட்டு அங்கவஸ்திரமாக மாறிவிட்டதுபோல நழுவி நழுவி விழுந்தது. காத்தபெருமாள் பிள்ளை கடிதத்தைக் கையில் பிடித்தபடி, சத்திரத்து ஜன்னல் வழியாக, சாலைக் குமாரசாமி கோயில் வர்ணக் கோபுரத்தைப் பார்த்து மெய் மறந்து நின்றார். 

காத்த பெருமாள் பிள்ளையின், சம்சாரம் கோ மதி அம்மாளுக்கு மாராந்தையில், நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்து தாயும் பிள்ளையும் சுகமாக இருக் கிறார்கள் என்ற நல்ல செய்திதான் சற்று முன் வந்திருந் தது அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ஒருவனைக் குடை ராட்டில் ஏற்றி குலை தெறித்துப் போகும் வேகத்தில் சுழற்றினால், எப்படியிருக்கும்? அதுமாதிரி பிள்ளை வாளுக்கு தலை சுற்றிக் கிறுகிறுத்தது. உலகம், அதன் சூது நிறைந்த சலனம், வாழ்க்கை என்று சோடித்துச் சொல்லு ற செக்காட்டம் எல்லாம் ஒரு உயிருள்ள காடுபோல் அவரைச் சுற்றி நெருங்க நெருங்கி வந்தன பெண் மக்கள் இருவருக்கும் நகை நட்டுக்கு வழிதேடி சேர்க்கிற இடத்தில் சேர்த்து கண் குளிரப் பார்த்தாயிற்று ஒரு பொறுப்பு இல்லை, ஒரு கவலை கிடையாது. இருக்கிற காரை வீட்டையும், பாட்டப்பத்து களத்தடிக் காணியை யும் ‘கண்ணுக்குப் பிறகு பெண் மக்களுக்கு’ என்று எழுதி வைத்துவிட்டு கட்டையைப் போட வேண்டியதுதான்; காத்த பெருமாள் பிள்ளை பரம்பரை அங்கேயே வாழி பாடி கதையை முடித்துவிடும்” என்றுதான் நேற்றுவரை உறுதியாக நினைத்திருந்தார் பிள்ளை. 

“ஆறுமாத காலமாக படுத்த படுக்கையாகக் கிடந்த கோமதியம்மாள் இந்தப் பிரசவத்திலும் ஒரு பெண்ணைப் பெற்றுப் போட்டு விட்டு கண்ணை மூடிவிடுவாள். குழந்தையும் தாயைத் தொடர்ந்து போய்விட்டால் தொல்லையில்லை. சாலைக் குமாரசாமி சன்னிதிக்கு வந்து ‘முருகா” என்று உட்கார்ந்துவிடலாம். நமக்கு அவன் தான் ஆண் சந்தானம்.”

டாக்டர் குஞ்சிதம், ஆரூடம் அக்கினி ஜோசியர் இவர்கள் இருவரும் கொடுத்து தீர்க்க தரிசனத்தின் பிரகா ரம் மேற்படி முடிவுக்கு வந்த பிள்ளை, மனச் சஞ்சலத் தால் விரட்டப்பட்டு, பஸ் ஏறி திருநெல்வேலிக்கு வந்து ஒரு வாரம் ஆயிற்று தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது அவருக்கு என்றுமில்லாதபடி நிதரிசனமாகத் தெரிந்தது. 

ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!- 

‘இல்லை’ என்று போனது தெய்வ சங்கற்பத்தால் இத்தனை வருஷங்கள் கழித்து ‘இருக்கிறது” என்று வீட்டுக்கு வந்திருக்கிறது. பிறந்தது ஆண் என்று காதில் விழுந்தால், யமனை விரட்டியடித்துவிட்டுப் பிழைத்துக் கொள்ளுவாள் கோமதி. பாவம், அவள்தான் எப்படித் தவித்தாள்! கொள்ளி வைக்கப் பிள்ளை இல்லாமற் போனால் குலத்துக்கு வசையாச்சே’ என்று அவள் காக்காத விரதம், சுற்றாத கோவில் குளம், மாதாந்தம் உண்டா? கடைசியாக, குமாரசாமி, கரைக் கோயிலான் கண்ணைத் திறந்து பார்த்திருக்கிறான்! 

அவருடைய மனத்திலே,- 

பிரவச அறையில் கிடக்கும் மதலை வளர்ந்து சிலேட்டும் புத்தகமுமாய்ப் பள்ளிக்கூடம் போயிற்று. பத்தாவது தேறி, பட்டணத்துக்கு ரயிலேறுகிறது. படிப்புக்கு ஆயிரம் இரண்டாயிரம் வேண்டுமே! பையன் முகம் கறுக்கலாமா? உழைப்பு, உழைப்பு, ஓயாத விடி விளக்கு உழைப்பு, அப்பாட, பையனின் காலேஜ் படிப்பு முடிந்துவிட்டது. போர்டை வீட்டில் மாட்டிவிட்டு, நாலுகைச் சட்டை போட்டுக்கொண்டு கோர்ட்டுக்குப் போகிறான். பிறகு… கல்யாணம்!… கண் குளிர்ந்துவிடும். கோமதிக்குத் தலைநரைத்துவிட்டது. நான்மாத்திரம் என்ன! உழைத்து உழைத்துத் தேய்ந்த ஓடுதான். பரவாயில்லை, இனி நெஞ்சு வேகும். கொள்ளி வைக்கப் பையன் இருக்கிறான். வசை இல்லை. பேர் சொல்லப் பிள்ளை இருக்கிறான். நெஞ்சு வேகத்தான் வேகும்… எல்லாவற்றுக்கும் இப்பொழுதே உழைக்கவேண்டும், உழைக்காமல் முடியாது. அதெப்படி முடியும்?… 


“பதினைந்துக்குக் கீழே ஒரு லக்கம் சொல்லுங்கள்’ என்று கேட்டான் கணித சோதிடம் கல்பானந்த யோகி. லோகல் பண்டு சத்திரத்தில் அடுத்த அறை தான் அவனுடைய ஆசிரமம். 

‘பதிநாலு’ என்று பதில் சொன்னார் பிள்ளை. 

யோகியின் முகம் மலர்ந்தது “பூ ஒன்று சொல்லுங்கள்’ 

‘தும்பைப் பூ’ 

யோகி கண்ணை மூடிக்கொண்டு கணிக்க ஆரம்பித் தான் உட்குழிந்த அவன் கண்கள் மறைந்து மறுபடியும் தோன்றின. 

‘மூன்று நாள் ஆயிற்று, உங்களுக்கு யோககாலம் ஆரம்பித்துவிட்டது. இனி மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும் புத்திரனால் அதி பிராபல்யம். அதற்குப் பொறுப்பு இருக்கிறது. உழைத்தால் பலனுண்டு லக்னாதிபதி, வீட்டில் உச்சத்துக்கு வருகிறான் புத்திரனுக்கு விசேஷ யோகம் சம்பவிக்கும். ‘கல்பனை முற்றிற்று’ என்று கையைத் தட்டினான் கல்பானந்த யோகி. 

பேசாமல் கேட்டுக்கொண்டிருந்த காத்தபெருமாள் பிள்ளை முன்னாலிருந்த வெற்றிலையில் ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை வைத்து அழுத்தினார். 

திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டு என்ற புனித பூமியில். பிரபஞ்சத்து மானிட வர்க்கத்துக்கு ஒரு பொருட்காட்சி வைத்த மாதிரி கசா முசா வென்று கும்பல் கூடியிருந்தது. ஆலங்குளத்துக்கு அடுத்த பஸ் ராத்திரி எட்டரை மணிக்கு என்று புழுதி படிந்த போர்டு தெரிவித்தது. சிமிண்ட் பெஞ்சில் துண்டை மடித்துப் போட்டு உட்கார்ந்தார். கா.பெ.பிள்ளை 

பக்கத்து வெற்றிலை பாக்குக் கடையில் சுருட்டு வாங்கிக்கொண்டிருந்த ‘ஆனை முழுங்கி’ ஆவுடை நாயகம் ஒரு புது சகாப்தத்தின் தூதனாக பிள்ளைபின் கண்ணில் தோன்றினான். அவர் மூளை விருவிரு வென்று பேய் வேகத்தில் வேலை செய்யத் தொடங்கியது. 

‘தம்பியோவ்!-சிங்கப்பூர்த் தம்பி, என்ன கூப்பிடுதது கேக்கலியா?’ ‘சிங்கப்பூர்த் தம்பி’ திரும்பிப் பார்த்தான். “நீங்களும் ஊருக்குப் புறப்பட்டு வாரீகளா? …..என்ன போங்க? நான் சொன்னதை கொஞ்சங்கூட காதிலேயே வாங்காம போயிட்டீங்க. பொண் மக்களுக்குத்தான் நாலு காசு சேத்துவச்சா வேண்டாமிண்ணா இருக்கும் தேடி வாரலச்சுமியைத் தள்ளுத ஆசாமி ஒங்களைத்தான் பார்த்திருக்கேன்” என்று தன் மனக்குறையை வெளியிட்ட படி சுருட்டைப் பற்றவைத்தான் ஆவுடை நாயகம். 

லக்ஷம் ரூபாய்வரை ஒரே வாரத்தில் அமுக்கிவிடக் கூடிய ஒரு அணுகுண்டு’ வழியை, தான் கண்டுபிடித் திருப்பதாக ஆனை முழுங்கி’ இரண்டு நாட்களுக்கு முன் காத்தபெருமாள் பிள்ளையிடம் ரகசியமாகத் தெரி வித்தான். அப்பொழுது பிள்ளை கொஞ்சமும் ஆவல் காட்டவில்லை. பாரமுகமாக அசட்டை செய்து விட்டு ‘எனக்கென்ன புள்ளையா குட்டியா? இந்த யமகண்ட வழியிலே திரட்டி யாருக்குச் சேத்து வைக்கணும்? வேறே ஆள் பாரு தம்பீ’ என்று பேச்சை முடித்துவிட்டார். இது நடந்த சமயம், அவருடைய மனத்தில் நிறைந்திருந்த விரக்தி வைராக்யம் எல்லாம் இப்பொழுது கழன்று சத்திரத்துக் குப்பைத் தொட்டியில் விழுந்து விட்டன. இப்பொழுது ஆவுடை நாயகத்தை மறுபடியும் பிடரியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு வந்திருப்பது, சத்திரத்து யோகி தெரிவித்த யோகசக்கரம்தான் என்று எண்ணினார். பிள்ளை பிறந்த மறுநாளே, புத்திரன் தகப்பனை லக்ஷதிபதி ஆக்கப் போகிறானோ என்னவோ யார் கண்டது? பிள்ளைவாளுக்கு உச்சியிலிருந்து உள்ளங்கால் ரத்தம் சிவீரென்று துள்ளி அடங்கியது. 

“அதெல்லாம் இருக்கட்டும், தம்பீ… சரக்கு எங்கே இருக்கு, கையிலே என்ன வேணும் – இதெல்லாம் தெரிவிக் காமல் மொட்டையாச் சொன்னே அன்னைக்கு? விவரந் தெரிஞ்சாத்தானே எதிலியும் இறங்கலாம்?” 

மீன் தூண்டிலை நாடுகிறது என்று தட்டுப்பட்டதும், ஆவுடை நாயகம் சுருட்டை வீசிவிட்டு ‘சவுக்க’ உட்கார்ந்தான். 

‘சரக்குக்கு. மேற்படி பேத்துமாத்துக்கு எல்லாம் நானாச்சு. இன்னைக்கு என்ன. திங்களா? அடுத்த திங்கக் கிளமை, இவ்வளவு நேரம் கணக்கு பைசல். ஒரு ஈங்குரு விக்குத் தெரியாது…உங்க கையிலே எவ்வவு இருக்கு? எம்புட்டு பெரட்டணும்ணு மாத்திரம் சொல்லுங்க 

பிள்ளை குரலைத் தணித்துக்கொண்டு சொன்னார். 

“சரக்கைக் கண்ணாலே பார்க்காம, தொகையை எண்ணி வைக்க முடியாது. ராவோடு ராவா கீழக்குறிச்சி அய்யர் கிட்டங்கியில் கொண்டு சேர்க்கிற பொறுப்பை நம்மாலே ஏத்துக்கிட முடியாது. டிபார்ட்மெண்டுலே கண்ணிலே எண்ணெய் ஊத்திகிட்டு முழிப்பா இருக்கிறானுக. நாலும் பாத்து இறங்கணும். வசப்பிசகாக போய் மாட்டிக்கிட்டு ‘உடும்பு வேண்டாம் கையை என்கிற கணக்கில் வந்து சேரக்கூடாது”

“……கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் ஒங்ககிட்ட வருவேனா?…ஆள் தெரியாமலா இந்த பதினஞ்சு வருச காலமா, முக்குளிச்சுக்கிட்டிருக்கேன்…கையிலே, ஒரு முணு ரூவா என்ன, முப்பது ரூபா வேணுமின்னாலும் இந்த ரத வீதியிலே ஒரு வளையம் வந்தாச் சேராதா? மாராந்தைக் காவன்னா என்கிற விலாசம் லேசுப்பட்டதா என்ன?” 

“ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர்” என்று அலறினான் ஸ்டாண்டுப் பையன். 

“வண்டி வந்துவிட்டது” என்றார் பிள்ளை. 

“கீழ்ச்சந்நிதித் தெருவிலேதான் புள்ளிக்காரன் இருக்கான். எதுக்கும் இண்ணைக்கு ராத்திரி பாத்திட்டா நல்லது வேறே எவனாவது தட்டிக்கிட்டுப் போயிடக் கூடாது, பாருங்க” 

“இல்லை, தம்பி மாராந்தைக்குப் போய் தலையைக் காட்டிவிட்டு, நாளை காலை வண்டியிலே வந்திட்டாப் போச்சு. அங்கே……” 

“இந்தக் காரியத்திலே காலதாமதம் கப்பலைக் கவிழ்த்துவிடும் என்கிறது உங்களுக்குத் தெரியாத விஷயமல்ல. எதுக்கும் ஒரு வார்த்தையைப் போட்டு வச்சிட்டால்……” 

”மாராந்தைக்கு அவசியம் போயாகவேணும். அங்கே நமக்கு பையன் பொறந்திருக்கானாம். இப்பத்தான் காயிதம் வந்தது” என்று மெல்ல ரகசியத்தை வெளியிட்டார் பிள்ளை. 

“அடேடே, இவ்வளவு நேரம் ஒளிச்சு வச்சிட்டீகளே? ஆனாலும் இப்படி வெட்கப்படக்கூடாது நீங்க, பையன் யோக சாதகக் காரன்தான். அப்படிச் சொல்லுங்க, ஒரு யோசனை தோணுது?” 

“என்ன?” என்றார் பிள்ளை. 

“ரெண்டு பேரும் மாராந்தைப் போவோம். கையிலே இருக்கிறதை எங்கிட்டத் தாருங்க. அடுத்த கடைசி வண்டி பத்தரைக்கு இருக்கு- இங்கே வந்திருதேன். ராத்திரியே கண்டு பேசி வைக்கிறேன். கார்த்தாலே நீங்க வந்து கலந்து மேல்காரியம் யோசிக்கலாம். எப்படி?”

பிள்ளை கொஞ்சம் தயங்கிவிட்டு ‘சரி’ என்றார். “நாளைக்கு என்றால் செவ்வாய்க்கிளமை வேறே வருது. நீ சொல்லுறது சரி. சாலைக் குமாரசாமி கோயிலுக்கு எதிர்த்த சத்திரத்திலே, எதுக்கும் ஒரு ரூம் எடுத்துப் போடும். நாளை அங்கேதான் வந்து சேருவேன்” என்று தீர்மானமாகச் சொன்னார் மாராந்தையார். 

எட்டரைமணி ‘ஆலங்குளம்’ பஸ் ஸ்டாண் விட்டு நகர்ந்தது. மாராந்தை மாரியம்மன் கீழத்தெரு, பிள்ளை வீட்டு வாசலில், இரவு ஒன்பதரை மணிக்கு வில் வண்டி ஒன்று தாயாராக நின்றது. வண்டிக்காரன் பக்கத்துக் கடையில் அவசரம் அவசரமாக விளக்கை ஏற்றிக் கொண்டிருந்தான். 

பிள்ளையும் ஆவுடை நாயகமும் வளியே வந்தார்கள். 

”நாளைக் காலையிலே தவறாம் புறப்பட்டு வாருங்க. கைவசம் கூட ஒரு நானூறு ஐஞ்ஞூறு இருக்கட்டும். எலும்புத் துண்டு வீசவேண்டியிருக்கும், 

பிள்ளை லேசாகச் சிரித்தார். 

பையிலே கவனம். ராவேளை பாருங்க” என்று எச்சரித்தார். 

வண்டிக்காரன் மாட்டைத் தட்டிக் கொடுத்தான். ஆவுடைநாயகம் வண்டிக்குள் ஏறிக் கொண்டான். வண்டி ‘ஜல் ஜல்’ என்ற சதங்கை ஒலியோடு யூனியன் லாந்தல் வெளிச்சத்தைத் தாண்டி ஆலங்குளம் சாலைக்குப் போகிற செம்மண் தடத்து இருளில் மறைந்தது. 

சற்று நேரம் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு வீட்டுக்குள் நுழைந்தார். “வைத்தியரைக் கூப்பிடப் போனவன் வந்திட்டானா?” என்று மைத்துனரைக் கேட்டார். 

“இல்லை” என்றார் மைத்துனர். 

“சாயங்காலம் நாடி எப்படி இருந்ததாம்?” 

“தோஷம் இருக்கும் என்றுதான் சொன்னாரு. ரெண்டுநாள் கழிச்சாத்தான் அக்கா பொழைக்கிறது நெசம் இலண்ணாரு பிள்ளைக்குத் தலை சுற்றியது “பிரசல பஹீனம்; வேறு ஒன்று மில்லை” என்று தான் முதலில் நினைத்தது தவறு என்று தெரிந்தது. ”ஆறு மாசமாப்படுத்த படுக்கையாக் கிடந்த உடம்பு இம்புட்டா வது பெலம் இருந்ததே? குறையும் சாலைக் குமாரசாமி தான் காப்பாத்தணும். நாம்பளா நெனச்சா ஒண் ணொண்ணை செய்கிறோம்” என்றார். 

“ஆவுடைநாயகம் எங்கே வந்திட்டுப் போறான்?” 

“ஆவுடை நாயகமா?…… ஒரு ஐஞ்ஞூறு கைமாத்துக் கேட்டான், ‘அவசர காரியம், நாளைச் சாயங்காலம் வாங்கிக்கிடுங்க அப்படின்னான். குடுத்தனுப்பினேன்.” 

“ஒங்க கையிலே ஐஞ்ஞூறுதான் இருக்குள்னு. சொன்னீகளே” வீட்டிலே இப்பிடி இருக்கிறபோது. கையிலே இருக்கிறதைத் தூக்கிக் குடுத்துட்டா, அவசரத் துக்கு என்ன செய்கிறது? எங்கிட்டயும் காத்துட்டு இல்லை அட, ஒரு லாபத்தைப்போல் நஷ்டமின்னா…” 

பிள்ளை இருந்த இடத்திலேயே அதிர்ந்தார் மைத்துனர் வார்த்தையை, இருட்டிலே நழுவ விட்டு விட்டு மெல்ல எழுந்து கூடத்தில் விரித்த ஜமக்காளத்தில் தலையைச் சாய்த்தார். 

நினைவு என்ற புற்றிலிருந்து ஈசல்கள் கிளம்பி மொய்க்க ஆரம்பித்தன. படுக்கை கொள்ளாமல் அங்கு மிங்கும் புரண்டார். 

வீட்டுக்குள்ளிருந்து, குழந்தை ‘குவா குவா’ என்று அழுகிற சத்தம் வந்தது. அந்தச் சத்தம், அவர் மனப் புண்களில் மருந்து தடவி வாழைக் குருத்தால் ஒற்றியதுச் போன்ற சுகத்தைக் கொடுத்தது. அதைக் கூர்மையாக செவிகுளிரக் கேட்டபடி படுத்திருந்தார் பிள்ளை. மைத்து னரும் வைத்தியரைக் கூட்டிககொண்டு பதினோரு மணிக்கு வந்து சேர்ந்தார். கோமதியம்மாளுக்குப் பிரக்ஞை தப்பிவிட்டது. வைத்தியர் நாடியைச் சோதித்து விட்டு ‘பார்க்கலாம்’ என்றார். 

”குழந்தைக்குப் பாலூட்ட வேறு யாரையாவது ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டுப் புறப் பட்டார். அவர் முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. 

பிள்ளைக்குத் தூக்கம் வரவில்லை. 

இரவு மூன்று மணியிருக்கும். மைத்துனர் வந்து அழைத்தார். ‘அக்கா உங்களைப் பார்க்கம்ணு மிங்கிறாள்.” 

கோமதியம்மாள் படுக்கையில் வதங்கிக் கிடந்தாள். சிறிது பிரக்ஞை இருந்தது. சோகம் செறிந்த அவள் முகத்தில் ஒரு புதிய ஒளி ரேகை விட்டிருந்தது. 

காத்தபெருமாள் பிள்ளை பக்கத்தில் உட்கார்ந்தார். கோமதியம்மாள் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முனைந்தது அவருக்குப் பொறுக்க முடியவில்லை. 

மெல்ல அவள் கைகளை எடுத்துப் பற்றிக்கொண்டு ”கோமதி,உனக்கு என்ன வேணும். சொல்லு” என்றார். 

அவள் பேசாமல் அவரைப் பார்த்துக்கொண்டிருந் தாள். நாக்கு எழவில்லை அவ்வளவுதான். பிரக்ஞை மறுபடியும் ஒளிந்து கொண்டது. 

வீட்டுப் பெண்டுகள் பொருமிக் கண்ணீர் விட்டார் கள். மைத்துனர் வாயில் துண்டைக் கொண்டு மூடியபடி விம்மினார். 

“இங்கே அழக்கிழக் கூடாது. யாரும்!” என்று தைரியுஞ் சொல்லிவிட்டு கூடத்துக்குப் போனார் பிள்ளை. 

கோமதி போகிறாள். இருந்திருந்தால், பையனை வளர்த்துப் பார்ப்பதில், ஒத்தாசையாக இருந்திருப்பாள்.ம்… அது ஒன்றுதான் அவளுக்குக் குறை…….வேறு என்ன? அவள் மகராஜி” என்று பற்பல நினைவுகள் அவரைச் சூழ்ந்தன. 

விடிந்து, செவ்வாய்க்கிழமை கால் வைக்கிற நேரத் தில், கோமதியம்மாள் புறப்பட்டுப் போய்விட்டாள் 

ஊரார் வந்தார்கள். வீட்டில் ஒரே அழுகையும் அமளியுமாக ஆயிற்று. பிள்ளைக்குக் காரியம் ஓடாமல், அதிர்ச்சியில் இடிந்துபோய் உட்கார்ந்திருந்தார். 

‘பெண்மக்க’ளுக்குச் சொல்லி யனுப்பினார்கள். பாவூரிலிருந்தும் பாளையங்கோட்டையிலிருந்தும் அவர் கள் வந்துதான் ‘எடுப்பார்’கள் 

மைத்துனர் செண்பராம பிள்ளை, பண்ணை வீட்டா ரிடம் போய் ஐஞ்ஞூறு ரூபாய் கைமாற்று வாங்கிக் கொண்டு வந்ததாகப் பிள்ளையவர்களிடம் நடுவில் தெரிவித்துக்கொண்டார்ச் 

ஒன்பது மணிக்குத் தந்திச் சேவகன் வந்தான்-“உடனே புறப்படவும்” என்று ஆவுடைநாயகம் கொடுத்திருந்தான். “ஹ்ம்……” என்று சிரித்தார் பிள்ளை. 

பதில் தந்தி கொடுப்பது முடியாதாகையால், நம்பிக் கையான ஒரு ஆளைப்பிடித்து “வீட்டில் துக்கம். கோமதி தவறிப் போனாள். காரியத்தை இப்பொழுதுக்கு நிறுத்தி வைக்கவும்” என்று சூசகமாக ஒரு குறிப்பைக் கொடுத்தனுப்பினார். 

”மனைவியைப் பறிகொடுத்த மனிதனுக்குக் கவலை யைப் பார்த்தீரா?’ என்று ஊரார் தமக்குள் கசமுச என்று பேசிக்கொண்டார்கள். 

‘எல்லா வாரிசு பிறந்திருக்கிற தெம்புதான்’ என்றார் ஒருவர். 

காடேற்று முடிந்தது. பிள்ளையின் அதிர்ச்சியில் பெரும்பகுதி நீங்கிவிட்டது. பழையபடி நான்கு நாட் களுக்கு முன் வேலை செய்ய ஆரம்பித்த யந்திரம் தன் முழு வேகத்துடன் சுழன்றது. குழந்தை…குழந்தை…… மகன்…… என்ற ஒரே நினைவு. அந்த இயந்திரத்தை அவருடைய நெஞ்சு என்ற பழைய கொட்டகையில் வைத்து முடுக்கிப் பெரு முழக்கத்தோடு ஓட்டிற்று. கொட்டகை அதிர்ந்து விழுந்துவிடுமோ என்று பயப்படும் படியாக இருந்தது, அந்த பூத இயந்திரத்தின் அமானுஷ்யத் துடிப்பு. 

அவருடைய மூத்த மகள் தன் தம்பியைத் தூக்கி வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் அழுது அழுது வீங்கியிருந்தன. பக்கத்தில் இளையமகள் புட்டிப் பாலைத் தயாரித்துக் கொண்டிருந்தாள். 

இரு பெண்மக்கள் மீதும் பிள்ளைக்கு ஒரு வெறுப்பு உண்டாயிற்று. ‘இவர்கள் இரண்டுபேரும் வீட்டை விட்டு நகர்ந்தார்கள் 

ஆண் குழந்தையும் பிறந்தது’ என்ற நி னைப்புத்தான் காரணம். 

மைத்துனரைக் கூப்பிட்டார். குழந்தையைக் கவனித் துக்கொள்ளும்படியும், தான் திருநெல்வேலிக்குப் போய் விட்டு ‘பதினாறு’க்குள் வந்து விடுவதாகவும் சொல்லி விட்டுப் புறப்பட்டார். 

கையில், சொந்த வீட்டை அடமானம் செய்து வாங்கிய ரூபாய் ஆயிரமும் சொச்சமும் இருந்தது. 

சத்திரத்து அறைக்கு வந்து சேர்ந்தார்; அங்கு ஆவுடைநாயகம் தூங்கிக்கொண்டிருந்தான். ‘தம்பி, தம்பி’ என்று கதவைத் தட்டினார். அவன் விழித்துக் கொண்டு கதவைத் திறந்தான். 

“வாங்க. அண்ணி காலம் ஆகிப்போச்சு போலிருக்கு? ம்… கடையி காலத்திலே விட்டுட்டுப் போயிட்டாக” 

“…அவ கதை முடிஞ்சிது, எல்லாம் அவன் பார்த்துக்கிட்டிருக்கான். எதிர்த்தாப்பிலே.” 

“குழந்தை நல்லா இருக்கில்லா?” 

“ஏதோ இருக்கிறான், அவன் ஒருத்தன் பொழைச்சுக் கிடந்தாப்போதும். மத்த எல்லாம் கவிழ்ந்து போனாலுந் தான் என்ன?” 

நாம் யாருக்கு என்ன நியாயம் செய்தோம். அப்படி விதிவந்து சூழ! உங்க தாத்தா காத்தபெருமாள் பிள்ளை இருந்த கியாதிக்கு, அவர் பேர். சொல்ல ஒங்க குடும்பத்திலே, இப்பத்தான் பொறந்திருக்கிறான். இது தான் தெய்வசங்கல்பம் என்கிறது.” 

“…மேல வீட்டுப் பாட்டையாவும் அப்படித்தான் சொன்னாரு.’புள்ளை உங்க தாத்தாவை உரிச்சு வச்சாப் போல இருக்கான். பயதத்துக்களைத் தாண்டி தீர்க்கா யுசாக் கிடப்பான்பாரு’ என்றார்…ஏதோ? நாம் நெனச்ச படியா எல்லாம் நடக்கு?’ 

‘இப்ப பாருங்க, அன்னைக்கு, நான் ஒங்க வீட்டி லிருந்து புறப்படறப்போ, இப்படி நீங்கவரத் தாமசப்படும், இங்கே கொடுத்த அச்சாரம் முங்கிப்போகுமிண்ணு கனவிலேயும் நெனச்சா இருந்தோம்?” 

“என்ன தம்பி,விவரமாச் சொல்லு?” 

“திங்கக்கிழமை ராத்திரியே புள்ளியைக் கண்டு பேசி ஆயிரத்தை அச்சாரமாகக் குடுத்தேன்.சி.ஐ.டி. தொந்தரவு பலமாக இருக்கு. நீங்க சரக்கை நாளை ராத்திரிக்குள்ளே டெலிவரி’ எடுத்துக்கிடணும்’ அப் படிண்ணாங்க. நீங்க வருவீக, வந்ததும் தொகையைக் கட்டிப்புட்டு, சரக்கை அய்யர் கிட்டங்கியிலே தள்ளி ‘செக்’கை வாங்கிக்கிடலாமிண்ணு பிளான் போட்டிருந் தேன். காலையிலே ஒங்களைக் காணலை தந்தியைக் குடுத்தேன். பதில் தெரிஞ்சதும் அப்படியே அசந்து போய்ட்டேன். இதுக்குள்ளே போலீஸ், ஸிஐடி காரனுக்கு உளவுதெரிஞ்சி மும்மரமாக இருக்கிறதாகக் கேள்விப்பட்டேன். ஒண்ணும் ஓடலை,இங்கே வந்து பேசாமப் படுத்திட்டேன். நீங்க குடுத்த அஞ்ஞூறு என் கையிலிருந்த அஞ்ஞூறு ரெண்டும் மண்ணாய்ப் போச்சு”

பிள்ளை பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தார். பணம் பறிபோன அதிர்ச்சி அவர், நெஞ்சை ஒரு குலுக்குக்’ குலுக்கிற்று. 

“ஏன் மண்ணாய்ப் போச்சு என்று வாயைப் பொத் திக்கிட்டு உட்காரணும்? போலீஸிலே எழுதிவைப்போம். ஏமாளிப் பயல்னு நெனச்சாங்களா?” 

ஆவுடை நாயகம் சிறிது சிரித்தான், பிள்ளைக்குக் கோபம் வந்தது. “நீங்க, காரியத்தினுடைய வகை தொகை தெரியாதமாதிரி பேசுறீக, ஏன் குடுத்தே, எந்த சரக்குக்குக் குடுத்தே, ‘பெர்மிட்’ இருக்கா? இப்படி கேள்வி வளைச்சுகிட்டுவரும்? வீண் தொந்தரவு, அகப் பட்டுக்கிண்டா அவமானம் வேறே.” 

“இதெல்லாம் தெரிஞ்சுதான் என்னை இளுத்துகிட்டு வந்தியா?” 

“தெரியாமல் என்ன?… ஒங்க தாமசத்தினாலே காரியம் குட்டிச் சுவராகப் போச்சு. இல்லாட்டா, ஒரு லக்ஷம் அடிச்சிருக்கலாமே! ஆசை இல்லாவிட்டால், தைரியம் வருமா? ஏதோ நம்பிக்கை வச்சுத்தானே, பணத்தைத் தந்தீங்க எங்கிட்ட” 

ஆவுடை நாயகத்தை அந்த அறையிலேயே கழுத்தைப் பிடித்து நெறித்துக் கொன்றுவிடலாமா என்று எண்ணம் தோற்றிற்று பிள்ளைக்கு. “சீ-கொலைகாரன் மகன் என்றல்லவா தன் குழந்தையைப் பழிப்பார்கள்” என்ற அச்சம் ஆத்திரத்துக்கு அறிவுவிலங்கு பூட்டியது. 

“…சரி ஆவுடை நாயகம் போனதை எண்ணி என்ன செய்ய? இருக்கிறதைப் பார்ப்போம். மேற்கொண்டு ஏதாவது வழியிருக்கா? கிட்டங்கி அய்யருகிட்ட கேட்டா இப்படிச் சொல்ல மாட்டாரா?”

“அவனா? அவன் பெரிய கொள்ளைக்காரனாச்சே அதிலேயும் இந்தத் தடவை ரொம்பக் கள்ளப்பட்டுப் போயிட்டான். இனிமேல் அவனை வழிக்குக்கொண்டு வருகிறது என்றால் அசாத்தியந்தான்!” 

“எதுக்கும் ஒரு அஞ்நூறு ரூபாயைக்கொண்டு காட்டினால், பய வலையிலே விழுவானா மாட்டானா?”

ஆவுடைநாயகம் நிமிர்ந்து உட்கார்ந்தான் ‘கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை செய்யணும்! பய இந்த ஆவுடைநாயகம் கண்ணியிலே விழாம எங்கே போயிடுவான்?… அப்போ, நீங்க ரூபாய் சகிதம் தயாராத் தான் வந்திருக்கியண்ணு சொல்லுங்க” 

தான் விரித்த கண்ணியில் ஆவுடை விழுந்துவிட்டது என்று நிச்சயப்படுத்திக்கொண்டார் காவனனாபிள்ளை. 

“எதுக்கும் தயாராத்தான் இருக்கேன்.நீ புறப்பட்டா எனக்கு காரியம் முடியும்ணுதான் தோணுது. அஞ்ஞூறு பாதாளமட்டும் பாயுமே, தம்பீ”

“ம்… அஞ்ஞூறா?… அய்யனை நீங்க லேசுப்பட்ட ஆளுண்ணு நினைக்காதீங்க!எமன்கிட்ட கருப்பு மார்க் கட் பண்ணினவன் அவன்?” 

“நம்மகிட்ட பண்ணுகிற மாதிரிதான்” 

“ஆயிரத்துக்குக் கொறைஞ்சு அவனை மறுபடியும் நாடமுடியாது. யோகம் இருந்தால் பெரிய ரூபா நாலுக்கு ஒரு தட்டுத்தட்டலாம்.” 

“சரி, ஆயிரமே வச்சுக்க. இடம் எது?” 

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஆவுடை நாயகம் பிள்ளை காதுக்குள் இரகசியத்தை உபதேசித்தான் 

“சரி, நீ போ. மிச்சத்தைக் கையிலே எடுத்துக்கிட்டு. நான் சரியாக பதினொரு மணிக்கு வாறேன்.” 

ஆவுடைநாயகம் பணத்தை வாங்கிக்கொண்டு புறப் பட ஆயத்தமானான். 


மறுநாள் காலை பத்து மணி வெயில் சுள்ளென்று அடித்தது. வீட்டிலிருந்து ஒரு கடிதம் வந்து அறையில் கிடந்தது.பிள்ளை எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டு அதை எடுத்தார். அவருடைய முகத்தில் விவரிக்க முடியாத வைராக்கியமும் கொடுமையும் குடி கொண்டிருந்தது. கடிதத்துக்குள் என்ன சேதி ருக்கிறதோ என்ற சோதனையில் மனம் இறங்கியது. கைகள் கடிதத்தை உடைக்கத் தயங்கின 

‘குட்மார்னிங்’ எனறு ஒரு ஸல்யூட் அடித்தான் எதிரே நின்ற போலீஸ் ஜவான். அவனை எங்கேயோ பார்த்தமாதிரி இருந்தது ஒரு துண்டுக் கடிதத்தை நீட்டி விட்டு அவன் போனான். 

கடிதம் ஸி.ஐ.டி. இன்ஸ்பெக்டரிடமிருந்து வந்தது. நெடுநாளாக நடந்துவந்த கூட்டுறவுக் கொள்ளை மார்க்கட் நபர்களைக் கையும் களவுமாய்க் கண்டு பிடிப்ப பதில் உதவிசெய்ததற்காக சொந்த ஹோதாவில் மிகுந்த நன்றி தெரிவித்திருந்தார். அதோடு கவர்ண்மெண்ட் வெகுமதிக்கும் சிபாரிசு செய்திருப்பதாகக் கண்டிருந்தது. 

கடிதத்தைக் கிழித்துக் குப்பைத்தொட்டியில் போட் டார் பிள்ளை. அடுத்த கடிதத்தை உடைத்தார். அதை எழுதியது பிள்ளையின் மூத்த மகள். 

பதினாறு விசேடம் கழிந்ததும் தம்பியைத் தானே எடுத்துக்கொண்டு வளர்க்கத் தீர்மானித்திருப்பதாகவும், அதனால் அவர் தன்னோடு வந்து வீட்டில் இருக்க வேண்டுமென்றும், தன் மாப்பிள்ளையும் இது விஷயத்தில் மிகுந்த கவலையோடு இருப்பதாகவும் எழுதியிருந்தாள். அதோடு தங்கச்சி சிறியவள் என்பதனால், அவள் பேச் சைக்கேட்டு தம்பியை அவள் வளர்க்கும்படி விடலாகா தென்றும் எழுதியிருந்தாள். கடைசியாக, தம்பி குமார ஸ்வாமிக்கு இப்பொழுது புட்டிப்பால் கரைத்துக் கொடுத்து வருவதாகவும், திரு நெல்வேலியிலிருந்து நாலைந்து பால் புட்டிகள் கட்டாயம் வாங்கிக்கொண்டு வரவேண்டுமென்றும் சொல்லி முடித்திருந்தாள். 

பிள்ளை கடிதத்தை முழுவதும் படித்து நிமிர்ந்தார் அவர் நெஞ்சில் ஓடிய பூதாகாரமான இயந்திரச் சுழற்சி ஒரு வலிப்பு வலித்துக் குரூரமாகச் சத்தமிட்டு வேகத்தை நிறுத்தியது. அது இரைந்து கொண்டிருந்த கட்டிடம் நொறுங்கிக் குமைந்தது. என்றாலும் இத்தனை நாள் ஓடியதால் வந்த வேகத்தில், சக்கரம் தலைகிறங்கிச் சுழன்று கொண்டிருந்தது. 

பையில் சில்லறையை எண்ணிப் பார்த்தார். சரியாக ஆறணா இருந்தது. இங்கிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு ஓரணா.அங்கிருந்து மாராந்தை அஞ்சனா இதைச் செல் வழித்துக்கொண்டு போகப்போகிறது எங்கு? வீடா அது? 

அடுத்த அறையில் கல்பானந்த யோகிக்குப் பிறகு, ஹனும ஜோஸ்யர் ஒருவர் இருந்தார். அவரிடம் அஞ்சணாவைத் தட்சிணை வைத்துக் கையை நீட்டினார் காவன்னா பிள்ளை. 

“புத்திரன் ஜனனம். வேளை நீசம். அப்பனைத் தெருவிலே நிறுத்தி ஈசவரணாக்கி அழகு பார்க்கும்” என்றார் ஹனும ஜோஸ்யர். 

கையை வெடுக்கென்று பறித்துக்கொண்டு சாலைக் குமாரஸ்வாமி கோயிலுக்குள் நுழைந்தார் மாராந்தை காத்த பெருமாள் பிள்ளை. 

குமாரஸ்வாமி, வந்துவிட்டேன்” என்றார். வேகம் மங்கித் தள்ளாடிய இயந்திரம் நின்றது. நெஞ்சு நொறுங்கி விழுந்த அதை மூடிற்று. 

தாயாருக்கு ஈமக்கொள்ளி வைத்த மதலை தகப்பனாருக்கும் ‘கொள்ளி’ வைத்தது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தது பிறகு என்ன செய்யும்?

– முல்லை கதைகள், 1945ல் முல்லை இதழில் வெளிவந்த கதைகள், தொகுத்தவர்: முல்லை பி.எல்.முத்தையா, முதற் பதிப்பு: செப்டம்பர் 1998, முல்லை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *