பீதரம்பரையர்




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஊருக்கு ஒரு பீதாம்பரையர் வந்தார். கோடி வீட்டுத் திண்ணையில் அவர் உட்கார்ந்திருப்பதாக, ஒவ்வொரு வீட்டுக்கும் செய்தி எட்டியது. உடனே நான் – அப்போது சிறு பையன் – என் வானர் சைன்யத்துடன் கிளம்பினேன்.

சிறு வயதில், என்னைச் சுற்றி எப்போதுமே ஒரு சிறிய வானர சைன்யம் உண்டு. இங்கே என் குழந்தைப் பருவத்தில் ஒரு கிழவனார் எனக்குச் சூட்டிய ஒரு பட்டம் ஞாபகத்துக்கு வருகிறது. இப்போதுகூட அதைச் சொல்ல எனக்குக் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது. வெட்கம் இரண்டு விதங்களில் ஒன்று: ‘என்ன மோசமான பட்டம்’ என்ற எண்ணம்; மற்றது, ‘அந்தப் பட்டம் வாங்கிய நாமா இப்படி இருக்கிறோம்?” என்ற வருத்தம். அப்படி என்ன விசேஷமான பட்டம் என்று கேட்பீர்கள். ஒன்றும் இல்லை; ‘மந்திரிக் குரங்கு. என்ற (பரிணாம ரீதியான) பட்டம்! இன்னொரு பையனுக்கு ‘ராஜாக் குரங்கு’ என்பது கிழவனார் சூட்டிய பட்டம். எல்லாப் பையன்களும் நான் சொன்னபடி ஆடுவார்கள், ‘ராஜாக் குரங்கு’ உள்பட. “இதோ இந்த நடைவண்டியில் அதோ அந்த எருமைக் கன்றைக் கட்டி வண்டி ஸவாரி செய்’ என்று ராஜாக் குரங்குக்கு ஒரு முறை நான் யோசனை சொல்ல, அவன் அப்படியே செய்து மூன்று குட்டிக் கரணங்கள் அடித்துப் பல் உடைய, அவனுடைய அருமை அம்மாள் என்னிடம் குஸ்திக்கு வர நான் ஓட்டமாக ஓடிய ஒரு நாள் சம்பவமும், எனக்கு மரம் ஏறத் தைரியம் இல்லாவிட்டாலும் ஊரிலுள்ள பையன்களை எல்லாம் கொய்யா மரங்களைக் காலி செய்யும்படி செய்து பலனில் நானும் பங்கு கொண்ட பல நாட்களும் எனக்கு இன்றும் நினைவிருக்கின்றன; ஆனால் இந்தப் பீதாம்பரையர் வந்தது அந்த ஊரில் அல்ல; வேறு ஊரில். என்றாலும், அங்கேயும் ஒரு சிறிய படை என்னிடம் திரண்டுதான் இருந்தது. படையுடன், பீதாம்பரையரைப் பார்க்கப் புறப்பட்டேன்.
பீதாம்பரையர் நல்ல வாலிபம்; செக்கச்செவேல் என்ற மேனி; வைதிகத் திருக்கோலம்; விபூதி, ருத்திராட்சங்கள் கச்சிதமாய், அவற்றுக்குரிய அங்கங் களில் விளக்கமாகத் துலங்கின. மேலே ஒரு சிவப்புப் பட்டை, அரையும் குறையுமாக அவர் போர்த் திருந்ததிலும், ஒரு லாகவம் தென்பட்டது. கையிலே, கம்பராமாயணம்… கம்பனுக்கு இப்போதுதான் யோகம் என்று நினையாதீர்கள்; அப்போதெல்லாம் கிராம கிராமாந்திரங்களில் இருந்த கம்பன், இப்போது மெள்ளப் பட்டணம் பார்க்க வந்திருக்கிறான்; அவ்வளவுதான் விஷயம். கிராமத்துச் சரக்குகள் பட்டணத்துச் சந்தைக்கு வந்தால், என்ன ஆகும்? கலப்படம் மலியும். ஆனால், அந்தப் பிரச்னை நமக்கு எதற்கு இங்கே? நம் பீதாம்பரையர் என்ன செய்து கொண்டிருந்தார் என்றல்லவா சொல்லவந்தேன்? அவர் கம்பராமாயணப் பிரசங்கந்தான் செய்துகொண் டிருந்தார். ‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவென… என்ற மாயா விளக்கத்தைத் துலக்கிக் கொண்டிருந்தார். அப்போது எனக்கு அது ஒன்றும் புரியவில்லை. ‘இப்போது புரிந்ததா?’ என்றால். இப்போதைக்கப்போதேமேல்’ என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆயிற்று; தெய்வ வணக்கம் ஆயிற்று. அடுத்த பாட்டு, பிறகு அதற்கும் அடுத்த பாட்டு. இப்படியாக. மூன்று, நான்கு பாட்டுக்களைப் படித்து வியாக்கியானம் செய்தார் பீதாம்பரையர். வாசாம் கோசரமாக வர்ஷித்து விட்டார். நல்ல வியாகரண பண்டிதரான சாம்பசிவ சாஸ்திரிகளே திறந்த வாய் மூடாமல் மகாவியப்புடன் அந்தப் பிரசங்க மாரியைக் கேட்டுக்கொண் டிருந்தார். எனக்கும் ஆச்சரியந்தான் – பிரசங்கத்தில் அல்ல; ஊரெல்லாம் தம் புலமைக்கு வணங்கி மரியாதை செலுத்தி வரும் சாஸ்திரிகளே மயங்கிய காட்சியைக் கண்டு ஆச்சரியம். ஆனால், என் படை ஆச்சரியப்படவில்லை. அது என்னைப் பின்வாங்குமாறு முடுக்கிக்கொண்டும் இருந்தது. கக்கரிப்பந்தலைப் படையெடுத்தாலும் ஏதாவது பயன் உண்டு என்பது அதன் எண்ணமாக இருந்திருக்கலாம். ஆனாலும், நான் இன்னும் கொஞ்சம் காத்திருந்தேன், இந்தக் கம்ப ராமாயணம் எங்கேதான் போய் முடிகிறது என்பதைப் பார்க்க லாம் என்று.
அது வெகு சீக்கிரத்திலேயே முடிந்து விட்டது. நாலாவது பாட்டில் பாதியோடு, பீதாம்பரையர் நிறுத்திக் கொண்டு, தலைநிமிர்ந்து. “இப்படியே போகிறது” என்று பரத நாட்டிய அபிநய தோரணையில், எல்லையற்ற அகண்டத்தைக் குறிப் பிடும் முத்திரை போல் தமது லளிதமான கையை வானை நோக்கி ஏறிட்டுத் தூக்கிக் காட்டினார். கம்ப ராமாயணம் கால் தலை காண முடியாப் பெருங்கடல் என்றும், அதில் கை சளைக்காமல் என்றென்றும் தாம் நீந்திக்கொண்டே இருக்க முடியும் என்றும், ஆனால் அது எதிரே இருப்போருக்குக் கஷ்டமாகுமே என்ற கருணையினாலேயே தாம் நிறுத்த வேண்டி இருப்ப தாகவும் தொனித்தது அவர் குரல்… அப்பாடா! பிரசங்கம் முடிந்தது!
பின்பு, பீதாம்பரையர், ஊர் யோக விசாரணைகளில் இறங்கினார். தம் தாத்தாவுக்கும் இந்த ஊரிலிருந்த தாத்தாக்களுக்கும் இருந்த சம்பந்தம், ஸ்தல மூர்த்தியின் மகிமை, நெல்விளைச்சல் இப்படியாகப் பல விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டு, மாலையிலே தமது வித்தையைக் கொஞ்சம் காட்டு வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று, அவர் கேட்டுக் கொண்டார். முதல் வீட்டுக்காரரான சாஸ்திரிகளும் அதற்கு இசைந்தார். பீதாம்பரையர் ஸ்நானத்துக்கு எழுந்தருளினார்.
அடுத்த காட்சி, எங்கள் வீட்டுத் திண்ணையிலே நடந்தது.
“அட்டா! என்ன போங்கள்! பீதாம்பர வேடிக்கை என்றால், வெறும் கூத்தாடித்தனம் என்று அல்லவா நாம் நினைக்கிறோம்? ஆனால், அவரிடம் என்ன வித்பத்தி நிறைந் திருக்கிறது! அடேயப்பா! அவர் கம்பராமாயணம் சொன்னால், இன்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம்; அவ்வளவு அற்புதம்…” என்று புகழ்ந்தார் சாஸ்திரியார்.
தலையை ஆட்டினார் என் சிற்றம்மையின் கணவர்; ”சரி; சாயங்காலம் ஆடச் சொல்லி, ஏதாவது கொடுத்து விட்டால் போகிறது. விஷயமெல்லாம் இதற்குத்தானே?”
ஆம்; அதற்குத்தான். ‘சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்…’ நாம் செய்வதெல்லாம் ‘நாழி அரிசிக்கே தானே?
மாலையில், டண் டண் டணார், டண் டண் டணார் என்ற ஓசை தெருக் கோடியிலே கேட்டதும், எல்லாருக்கும் முன்னே நானும் என் படையும் ஆஜராகிவிட்டோம். கூட்டமும் நன்றாகவே திரண்டது. பீதாம்பரையரும் அவருடைய சிஷ்யர் களும் பல வித்தைகள் காட்டினார்கள். எல்லாம் எனக்கு ஞாபகத்தில் இல்லை. பெரிய எழுத்து விக்கிர மாதித்தன் கதை என்ற நூலில் இந்திர ஜாலம் என்று வருகிற கதையைப் படித்திருந்த எனக்கு, ஐயரின் இந்த வித்தைகளில் ஒன்றோ இரண்டோதான் சற்று ஆச்சரியமாக இருந்தது. மற்றவை சாதாரணமாகவே தோன்றின.
மாத்திரைக் கோலை வைத்துக்கொண்டு, கோலிக் குண்டுகளை ஒரு கிண்ணத்திலிருந்து மறு கிண்ணத் துக்கு ஐயர் போகச் செய்தார். அவருடைய சீடனா, வாயால் குடித்த கண்ணீரைக் காதால் வேளி விட்டான். குட்டிச் சீடன் அபூர்வமான அந்தர்கள் அடித்தான். சிக்கிச் சிடுக்காக்கிக் கசக்கி ஒரே வாயாக மென்று விழுங்கிய நூல், பச்சை, சிவப்பு, மஞ்சள், ஊதா, நீலம், கறுப்பு முதலிய பல வர்ணங்களில் நீளமாக இழுக்க இழுக்க வெளியே வந்தது.மண்ணில் புதைத்த மோதிரம் எலுமிச்சம் பழத்துக்குள்ளிருந்து வந்து குதித்தது. சீட்டுக்கள், வளையங்கள், இன்னும் பல தளவாடங்கள் ஆகியவைகளைக் கொண்டும் ஐயரின் கோஷ்டியார் பல வேடிக்கைகள் செய்தார்கள்.
பிறகு, நான்கு சிறு கம்பங்களை ஐயர் நட்டார்; மேலே ஒரு விதானம் கட்டி,நாலுபுறமும் திரையிட்டு மூடினார். ஒரு புறத்தில் திரையைத் திறந்து, வித்தை யாடிகளில் ஒருவனை, ஒரு கம்பத்தில் கயிற்றால் கட்டி, கடைசி முடிச்சை யார் வேண்டுமானாலும் போடச் சொன்னார். பின்பு கை இரண்டையும் சேர்த்து விலங்கிட்டுப் பூட்டிச் சாவியை எங்களிடம் கொடுத்து விட்டார். என்னவோ மந்திரம் உச்சரிப்பவர்போல் ஏதேதோ சொல்லித் திரையை மூடி மூடித் திறந்தார். ஒவ்வொரு தடவை திறக்கும் போதும், கட்டுக்கட்டிை. விலங்கிட்ட வித்தையாடி, கட்டு அவிழாமல் கம்பத் துக்குக் கம்பம் மாறி நின்றான்
இன்னும் வித்தையாடி திரைக்குள்தான் இருக் கிறான். திரை மூடியபடி இருக்கிறது, உள்ளே இருக்கும் வித்தையாடிக்கும் வெளியே இருக்கும் பீ தாம்பரையருக்கும் தர்க்கம் நடக்கிறது.
“அடே. வா வா! வெளியே வா.’
“நான் மாட்டேன்.”
“ஏன் மாட்டாய்?”
“பறக்கப் போகிறேன்”
“எவ்விடத்துக்கு?”
“டில்லிப் பட்டணத்துக்கு.”
“அடடே! எங்களை விட்டுப் போய்விடாதே.”
பதில் இல்லை.
“அட தம்பீ! மோசமா செய்துவிட்டாய்?”
ஈன சுரத்தில் பதில் வருகிறது: ‘நான் இப்போது திருவாரூருக்கு மேலே பறந்துகொண் டிருக்கிறேன். நொடியில் திரும்பிவருகிறேன். வரும்வரையில் திரை யைத் திறக்க வேண்டாம்; திறந்தால், பறந்தே போவேன்.”
“ஐயையோ! அப்படிச் செய்துவிடாதே. வா, வா. கீழே வா.”
“வருவேன்.ஆனால் தாகமாக இருக்கிறது.”
“சுத்த ஜலம் ஒரு செம்பு வேண்டுமா?”
“வேண்டாம்.”
”மோர் ஒரு படி வேண்டுமா?’
“வேண்டாம்.”
“பால் ஒரு குடம் வேண்டுமா?”
“வேண்டாம்.’
“உன் தாகத்துக்கு என்னதான் வேண்டும்?”
“சிவப்பாக இருக்குமே, அது வேண்டும்.”
”ரத்தமா?”
“ஆமாம்.”
“ஆடு வெட்டவா?”
“ஐயோ! வேண்டாம்.”
“”கோழி அறுக்கவா?”
“சை! வேண்டாம்.”
“எது தான் வேண்டும்? சொல்லித் தொலை.
“நர பலி.”
எங்கள் அத்தனை பேரையும் துக்கிவாரிப் போட் டது. பீதாம்பரையர் மட்டும் துளிக்கூட மனம் கலங்க வில்லை. டமாரத்தைப் பலமாக அடிக்கச் சொன்னார். குட்டிச் சீடனைத் திரைக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.
“தம்பீ, மேலே போன அண்ணனுக்காக உன் உயிரை கொடுப்பாயா?”
“ஆஹா! கொடுக்கிறேன். ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்று வீரதீரமாகச் சொல்லிய சிறுவன், கம்பீரமாக மார்பைத் திறந்து காட்டினான்.
பீதாம்பரையரும் உறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து விறுவிறு என்று தீட்டினார். டும் டுடும் டும், டும் டுடும் டும் என்று அலறியது முரசம். கூட்டத் திலிருந்த அனைவரும் பரபரப்போடு பார்த்துக்கொண் டிருந்தோம். திடீரென்று ஒரு மூலையிலிருந்து ஒரு குரல் கேட்டது.
“அடபாவி! விடு என்னை!”
“அட இழுக்காதே, ஐயா!”
“ஐயோ, இதென்ன மோசம்! என்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருக்கிறானே!”
“நானா கட்டினேன்? என்னைத் தான் கட்டி விலங்கிட்டிருக்கிறதே!’
இந்தக் கலவரம் நடந்த திசையிலே, பலர் சிரிக்கக் தொடங்கிவிட்டார்கள்
அங்கே பார்த்தால் திரைக்குள் இருந்த வித்தை யாடி. கட்டும் விலங்குமாக வெளியே நிற்கிறான் அவனுடைய கட்டிலே, கம்பத்துக்கும் பதிலாக வேடிக்கை பார்க்க வந்த ஓர் அப்பாவி மனிதன் மாட்டிக்கொண்டிருக்கிறான்! இப்படி ஒருவருக்கும் தெரியாமல், மாயமாக வித்தையாடி வெளியே வந்து வீட்டான்!
இந்த அரிய வித்தைக்குப் பிறகு, ஐயரின் பெரிய வித்தையான வாயுஸ்தம்பம் நடைபெற்றது. நாலு கம்பங்களுக்கும் நடுவே ஒரு சிறிய கழி நட்டிருந்தது. அதன் பக்கத்தில் முகத்தை விலக்கி உடம்பெல்லாம் அழகிய பட்டினால் மூடி, ஐயர் கால் நீட்டிப் படுத்துக் கொண்டார். சேஷசயனப் பெருமாள்போல் ஒரு கையைத் தலைக்கு முட்டுக்கொடுத்து, மறு கையால் தரையில் நட்டிருந்த சிறு கழியின் அடியை வருடிக் கொண்டு, கண்ணை மூடி, சுவாஸ பந்தனம் செய்வது போல் தோன்றினார். திரை விழுந்தது.
சில நிமிஷம் கழித்துப் பிரதம சீடன் திரையை நீக்கினான். என்ன ஆச்சரியம்! ஐயர் தரைக்குமேல் இரண்டடி உயர்ந்து, அந்தரத்தில் அநாயசமாகப் பஞ்சணைமீது படுத்தவர் மாதிரி கால் நீட்டி உறங்கு கிறார். தரைக்கும் அவருக்கும் தொடர்பே இல்லை. சிறு கழியின் அடியை விட்டு, இப்போது அதன் முடியைக் கைப்பிடித்திருக்கிறார். இந்த அற்ப ஆதாரத்தை அல்லாமல் வேறேதும் இல்லை; ஆகாச சயனம் என்றே சொல்லவேண்டும். பிரமித்துப் பரம மெளனத்துடன், அந்த அற்புதக் காட்சியை அனைவரும் கண்ணாரக் கண்டோம். ஒரு விநாடி சென்று, இரு விநாடியும் கழிந்தன; திரை மூடி மீண்டும் திறந்தது. முன்போலவே ஐயர், தரைக்கு வந்திருந்தார். ஆனால், கண் விழிக்கவில்லை; சுவாஸ் பந்தனமும் தளரவில்லை. ஐயரின் முகத்திலே சீடர்கள் பரபரவென்று தண்ணீரை அடித்து, மூர்ச்சை தெளிவித்தார்கள். கண்ணைத் திறந்த ஐயர், ஏதுமே நடவாததுபோல், மௌனப் புன்னகையுடன், எழுந்து உட்கார்ந்தார். வித்தை முடிந்தது. எனக்கு மட்டும் எல்லாம் ஒரே தந்திரங்களாகவே தோன்றின. ஏன் காமும் செய்யலாகாது என்றும் எண்ணினேன்.
வீட்டுக்குச் சென்றோம். என் வானர சைன்யத் தைக் கொண்டு, சீட்டுக்கட்டு, கோலிக்குண்டுகள், கொட்டாங்கச்சிகள், கோலாட்டக்கழி ஆகிய உபகரணங்களைத் தருவித்தேன். கோலாட்ட மாத்திரைக்கோலின் சகாயத்தோடு, கோலிக் குண்டுகளைக் கொட்டாங்கச்சிகளுக்குள் ஆச்சரியமாக ஒன்றில் இருந்து ஒன்றுக்கு மாற்றிக் காட்டினேன். சீட்டுக்கட்டிலே கடிகார வித்தை முதலியவைகளைச் செய்து காட்டினேன். அந்தர்கள் என்னால் போட முடியாது. உடல் வணங்கி வேலை செய்வது எப் போதுமே என் வழக்கம் அல்ல; அது காந்தி தர்மத் துக்கும் பொது உடைமைத் தத்துவத்துக்கும் விரோதமோ என்னவோ நான் அறியேன். ஆனால், என் தந்தை எனக்கு வகுத்த தர்மம் அதுதான். என் சிறு விரலை அசைக்கக்கூட அவர் சம்மதியார்.
ஆகையால், பிற பையன்களை அந்தர் அடிக்கச் செய்தேன். அதன்பின், என் வித்தைகளைப் பெரியவர் களுக்கு முன்பு செய்து காட்டத் தொடங்கினேன். அவர்கள் ஓரளவு ஆச்சரியப்பட்டார்கள்; ஆனால் பரிகாசமும் செய்தார்கள்.
“பீதாம்பரையர் இப்படித்தான் செய்தாரோ? கோலிக் குண்டுகளைக் கைக்குள் ஒளிக்கிறாயே. அவர் மந்திரமல்லவா செய்தார்?”
“மந்திரமும் இல்லை, மாயமும் இல்லை. எல்லாம் வெறும் தந்திரந்தான்.
“தந்திரமா? எங்கே உன்னை இந்தக் கம்பத்தில் கட்டுகிறேன்; அந்தக் கம்பத்தில் போய் நில், பார்ப் போம்.”
“வித்தையாடியைக் கட்டியதுபோல் என்னையும் பின்புறமாகவே கயிற்றைவிட்டுக் கட்டுங்கள். தளர்ந்த விலங்கையும் போடுங்கள். கையை இடுக்கால் இழுத்துக் கழற்றி, மற்றொரு கம்பத்திடம் போய்த் திரும்பவும் மாட்டிக்கொள்கிறேன்.”
“கம்பத்துக்குக் கம்பம் போனதுதான் இப்படித் தந்திரம் என்கிறாய். அத்தனை ஜனங்களும் பார்த்துக் கொண்டிருக்க ஒருவருக்கும் தெரியாமல் திரைக்குள் இருந்தவன் மாயமாக வெளியே வந்தானே; அதெப்படி?”
ஆம், அதுதான் எனக்கும் புரியவில்லை. மை வேலையாக இருக்குமோ; மந்திரமாகத்தான் இருக் குமோ? உள்ளுக்குள்ளே பலவிதமாக யோசித்தேன். என்றாலும், “எல்லாம் தந்திரந்தான்” என்று அவர் களிடம் ஒரே அடியாகச் சாதித்தேன்.
“அதென்னப்பா! எப்படி என்று சொல்லு?”
எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.
அதுவாவது போகட்டும்; ஒரே ஒரு சிறு கழியின் முனையைத் தொட்டுக்கொண்டு, ஆகாசத்தில் அவர் படுத்திருந்தாரே; அதற்கென்ன சொல்லுகிறாய்?’
அதுவும் எனக்குப் புரியவில்லை.
மறுநாள் பொழுது விடிந்தது. நான் ஏதோ வேலையாகப் பக்கத்து ஊர்க் கோயில் மானேஜரைப் பார்க்கச் சென்றேன். அந்த வீட்டுத் திண்ணையிலே உட்கார்ந்திருந்தார் பீதாம்பரையர். அதே கம்பராமாயணத்தில், அதே சுந்தரகாண்டத்தில், அதே அலங்களில் தோன்றும் பொய்ம்மை அரவினைப்பற்றி, அதே பிரசங்கந்தான் ஆரம்பமாகியிருந்தது. என்ன பொருத்தம்! ‘பொய்ம்மை அரவு’தானே பீதாம்பர ஜால வேடிக்கை?
அங்கேயும் அதே மூன்றரைப் பாட்டுக்களுக்குப் பிறகு, ‘இப்படியே போகிறது’ என்ற அதே அகண்டாபினய முத்திரையோடு, பிரசங்கத்தை முடித்தார் பீதாம்பரையர். பிரசங்கத்தில் நேற்றைக் கும் இன்றைக்கும் எள்ளளவும் மாறுதல் இல்லை. எனக்கு அது புளித்துப்போன சரக்கு; ஆனால்,, கோயில் மானேஜரோ அங்காந்து, பெரு வியப்புடன், அதைச் செவிமடுத்துப் பூரித்தார். ‘ஆஹா! என்ன வித்பத்தி!’ என்று வாய்விட்டுப் புகழவும் புகழ்ந்தார். ஆனால், பீதாம்பரையருக்கு ஐந்தாவது பாட்டுத் தெரியுமா? அதை யார் கேட்பது? நான் சிறுவன்; கேட்டேனானால் அதிகப் பிரசங்கித்தனம் ஆகும்; கேட்கவில்லை; முடிவு மாத்திரம் செய்துகொண்டேன்: ஐந்தாவது பாட்டு அவருக்குத் தெரியவே தெரியாது!
அன்று மாலை அந்த ஊரிலேயும் வித்தை, நடந்தது. என் வானர சைன்யத்துடன் நானும் சென்றேன். முதல்நாள் நடந்த சிறிய வித்தைகள்
எல்லாம் அன்றும் நடந்தன. அவைகளில் நாங்கள் அதிகக் கவனம் செலுத்தவில்லை. திரைகட்டும் கட்டம் வந்தது. வெகு ஜாக்கிரதையாக, என் படையைப் பல கூறுகளாகப் பிரித்து, திரைக்கு நான்கு திசைகளிலும் காவல் போட்டேன். கட்டுக் கட்டிய வித்தையாடி கம்பத்துக்குக் கம்பம் மாறினான் என்றாலும்,யாரும் அறியாமல் வெளியே வர வேண்டுமே? அதற்காக நேற்றுப் பூர்த்தியாகாத சிறுத்தொண்டர் நாடகம் இன்றும் ஆரம்பமாயிற்று. “நர பலியா வேண்டும்? இதோ குத்துகிறேன், பார்; வெட்டுகிறேன். பார்” என்று ஆர்ப்பரித்தார் ஐயர். நேற்று வேடிக்கை பாராத ஜனங்க ளெல்லாம், அண்ணனுக்காக உயிரை விட வந்த’ சிறுவனை, வைத்த கண் வாங்காமல்தான் வெகு கவலையோடு பார்த்துக்கொண் டிருந்தார்கள். ஆனால், என் காவல் படைமட்டும், வைத்த கண் வைத்தபடி திரையையே கவனித்தது. அதன் கவனத்தைத் தம்மிடம் இழுக்க, ஐயர் எவ்வளவோ பாடுபட்டார். பலிக்கவில்லை. கட்டுக் கட்டிய வித்தையாடி, வேறு வழியில்லாமல், என் படையின் முன்னிலையிலே தலைகுனிந்து, ஜனங்கள் கைகொட்டி நகைக்க, பகிரங்கமாக ஓடி வந்தான். ரகசியத்தை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அன்றிரவு வீட்டுக்குச் சென்று பெரியவர்களிடம் இதைத் தெரிவித்தோம்.
“இருக்கட்டும்; அந்த வாயு ஸ்தம்பனத்துக்கு என்ன சொல்லுகிறாய்?”
வாயு ஸ்தம்பனமாவது, ஜல ஸ்தம்பனமாவது! எல்லாம் ஒரே மாதிரியான புரளிதான் என்று எனக்குத் தோன்றியது. ஆனால், இன்று வரையில் எனக்கு அது எப்படி என்று மட்டும் புரியவில்லை. வாயுஸ்தம்பனம் எப்படிச் செய்தார்? மற்ற வித்தை களின் மர்மம் தெரிந்துவிட்டதால் அவை எனக்கு மறந்துகூடப் போய்விட்டன. ஆனால், அற்புதமான அந்த வாயுஸ்தம்பனக் காட்சி இன்றும் என் கண் எதிரே நிற்கிறது. ‘வாழ்வோர் வாழ்வென்றுரைக்கும் இந்த வர்ணத்திரையைக் தூக்காதே’ என்று பாடினார் ஓர் ஆங்கிலப் புலவர். அந்த வர்ணத் திரையைத் தூக்க முயன்றால், உண்மையை நாம் கண்டுவிடலாம்; கண்டு விடுகிறோம். ஆனால் கண்டு அடையும் பயன் என்ன? வெறும் ஏமாற்றந்தான்; சில சமயம் பயங்கரமாகவும் இருக்கும். சத்தியம் ஏமாற்றத்திலும் பயங்கரத்திலுந்தானா இருக்கிறது? அழகிலும் இன்பத்திலும் இல்லையா?
– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி…மேலும் படிக்க... |