பீகிங் நகர பெரியமணி





(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பீகிங் என்னும் சீன நகரில் பெரிய கண்டா மணி ஒன்றிருக்கிறது. அதை அடித்தால் நகரம் முழுவதும் அன்றி அநேக மைலுக்கு அப்பால்கூட கேட்கும். அந்த மணியை அடித்தால் எல்லா மணியைப் போல் சப்தம் கேட்காது.மி-தி-ய-டீ, மி-தி-ய -டீ என்று சொல்லுவது போல ஒலிக்கும். இப்படி ஒலிப்பதற்கு சைனாக்காரர்கள் ஒரு காரணம் கூறுவார்கள்.

அந்தக் காலத்தில் சீனாவில் யூங்லூ என்ற பெயருடைய அரசனிருந்தான். சுற்றுப் புறத்திலிருந்த ராஜ்யங்களின் மேல் எல்லாம் படை எடுத்து அவை களை தனதாக்கிக் கொண்டான். தன் புகழ் உச்ச நிலையை அடைந்த உடன் தலைநகரை மாற்றி விடுவ தென்று முடிவு செய்தான். அதற்காக தன் காரியஸ்தர் களை எல்லாம் தேசமெங்கும் அனுப்பி வைத்தான். முடிவில் பீகிங் என்ற நகரைத் தலைநகரமாகத் தேர்ந் தெடுத்து, நகரத்தைப் புனர்நிர்மாணம் செய்வதில் ஈடு பட்டான். புதிய தலைநகரில் பல அழகிய கட்டிடங்கள் தோன்றின. அவற்றுடன் ஒரு பெரிய மணிக்கூண்டும் தோன்றிற்று. இந்த அழகிய மணிக் கூண்டுக்குப் பொருத்தமான பெரிய கண்டாமணியையும் அமைக்க வேண்டுமென்று அரசன் விரும்பினான். வெண்கலச் சிற்பி குவான்ஜுவை வரவழைத்து இந்த வேலையை அவனிடம் ஒப்படைத்தான்.
சிற்பி உடனே பெரிய மணியை செய்வதற்கான வேலையில் கவனம் செலுத்தினான். சுற்றுப்புறத்தி லுள்ள கன்னார்கள் பலரும் இந்த வேலையில் கலந்து கொண்டார்கள்.
மாதக் கணக்காகக் கஷ்டப்பட்டுப் பெரிய மணிக்கு ஆஸ் தயார் செய்தார்கள். உருக்கி ஊற்ற வெண்கலத் தைச் சேகரித்தார்கள்.
குறிப்பிட்ட தினத்தில் மணியை வார்ப்பதென்று முடிவு செய்யப்பட்டது. பரிவாரமும் நகரப் பெரி யோர்களும் சூழ மகாராஜா அந்த இடத்திற்கு வந்தார். சிற்பி வெண்கலத்தை உருக்கி ஆஸில் ஊற்றினான். ஆனால் ஆஸினால் அந்த சூட்டைத் தாங்க முடியவில்லை. பட்டென்று வெடித்து உடைந்து விட்டது.
மகாராஜாவுக்கு கோபம் மூண்டது அவ்வளவு பணமும் உழைப்பும் வீணாவதால் அவருக்கு வருத்தம். எனவே மறுபடியும் சிற்பிக்கு மற்றொரு வாய்ப்பளித் தார்.
மறுமுறையாக சிற்பி நல்ல புது ஆஸ் ஒன்றைத் தயார் செய்வதில் கவனம் செலுத்தினான். சில மாதங் கள் கழிந்தன.
மறுபடியும் மணியை வார்க்கும் தினம் வந்தது. முன் போலவே எல்லோரும் வந்து கூடினர். கவலை யுடன் பேச்சு மூச்சில்லாமல் சூழ உட்கார்ந்திருந்தனர். சிற்பி மறுமுறை வெண்கலத் திராவகத்தை ஆஸின் மீது நிதானமாக ஊற்றினான். நல்ல வேளை ஆஸ் கெட வில்லை. அப்பாடா என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே மணியை எடுத்து சிற்பி பரிசோதித்தான். ஆஸ் கெடாமல் இருந்த போதிலும் மணியின் வார்ப்பு சரியாக இல்லை. தேனீயின் கூண்டைப்போல் மணி எங்கும் ஓட்டையும் பொறையுமாக இருந்தது. அவ மானத்தால் சிற்பிக்குத் தலைதூக்க முடியவில்லை.
‘மூன்றாம் முறையாக ஒரு வாய்ப்பளிக்கிறேன். குற்றமில்லாத மணியைச் செய்தால் பிழைப்பாய். இன்றேல் தலை போய்விடும்’ என்று மகாராஜா கர்ஜித்தார்.
வருத்தத்துடன் சிற்பி வீடு வந்து சேர்ந்தான். வார்ப்புத் தொழில் புஸ்தகங்களை எல்லாம் அலசி அலசி கவனமாகப் படித்தான். படித்ததுடன் ஆண்டவனே என்னைக் காப்பாற்று என்று தினம் தவறாமல் பிரார்த் தனை செய்தான்.
சிற்பிக்கு கோஐ என்ற பெயருடைய மகள் ஒருத்தி இருந்தாள். இதுவரை நடந்தவற்றை எல்லாம் அவள் கவனித்து வந்திருந்ததால் அவளுடைய நெஞ்சமும் குமுறிக் கொண்டிருந்தது. இந்தத் தடவை தசப்பனா ருக்கு வெற்றி கிட்டாவிட்டால் அவரை இழக்க நேரிடுமே என்ற துயரம் அவள் மனதை அறுத்துக் கொண்டிருந்தது.
ஒரு நாள் தந்தையும் அறியாமல் அவள் மலைச்சாரலை நோக்கி நடந்து சென்றாள். அங்கே ஒரு குகையில் ஒரு மந்திரவாதி இருந்தார். அவரைக் கண்டு தன் தகப்பனாருக்கு நேரவிருக்கும் ஆபத்தைப் பற்றிக் கூறினாள். மந்திரவாதி ஏதோ ஒரு மருந்தை எடுத்துக் கரைத்துக் குடித்த மறு நொடியில் அவருக்கு சுயநிலை தவறி ஆவேசம் மூண்டுவிட்டது.
‘பெண்ணே: பெரிய மணி ஒலிக்க வேண்டுமா? ருகி ஓடும் வெண்கலத்துடன் அழகிய பெண் ஒருத்தி யின் ரத்தமும் சேராவிட்டால் பெரிய மணி பிறக்காது. மணி ஓசை கேட்காது’ என்றார்.
இந்தச் சொற்களைக் கேட்டவுடன் கோஐக்கு என்ன செய்ப வேண்டுமென்பது தெரிந்து விட்டது. அழகி என்றுதான் அவளையே சொல்லுவார்கள். எனவே மனத்தில் ஒரு தீர்மானம் செய்து கொண்டாள். பிறகு தந்தைக்கும் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தாள். தான் அறிந்த உண்மையையோ, தான் கொண்ட உறுதியையோ தந்தையிடம் தெரிவிக்கவில்லை எப் பொழுதும் போல் வீட்டுக் காரியங்களைச் செய்து வந்தாள். சிற்பியும் பெரிய மணி வார்ப்பதற்கான காரியங்களில் அதிக கவனத்துடன் ஈடுபட்டிருந்தான்.
இந்தத் தடவை வெற்றி கண்டு விடுவேன் என்று தோன்றுகிறது என்று தந்தை அடிக்கடி சொல்லிக் கொண்டு வந்தார். சந்தேகமே இல்லை; வெற்றி இந்தத் தடவை நிச்சயம் என்று கோஐயும் ஒவ்வொரு தடவை யும் பதில் கூறினாள்.
கடைசியில், பெரியமணி வார்க்க மூன்றாவது தடவையாக தினம் குறிப்பிடப்பட்டது. ராஜாவும், பரிவாரமும் நகர பிரமுகர்களும் ஸ்திரீகளும் மணி வார்க்கும் இடத்தில் உட்கார்ந்திருந்தனர். எதிர்புறத்தே ஒரு மேடையும் அதன் நடுவில் ஒரு பெரிய கருங்கல்லும் வைத்துக் கட்டப்பட்டிருந்தது. பக்கத்தில் கொலையாளி கோடாலியும் கையுமாக நின்று கொண்டிருந்தான்.
வெண்கலம் தளதளவென்று கொதித்துக் கொண் டிருந்தது. ஆஸின் மீது எடுத்து ஊற்றுவதற்கு சிற்பியும் அவன் தோழர்களும் ஆரம்பித்தனர். உருகிய திராவகத்தை ஆஸின் மேல் எடுத்து ஊற்ற ஊற்ற உஸ்ஸென்ற சத்தமும், புகையும் எழுந்து கொண்டிருந்தன. முடியும் சமயம், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அப்பா என்று கூவிக்கொண்டே கோஐ கொதிக்கும் ஆஸின் மேல் தாவிப் பாய்ந்தாள். அதே சமயத்தில் கடைசி வெண்கல திராவகமும் ஆஸின் மீது கொட்டப்பட்டது. திடுக்கிட்ட சிற்பி ஐயோ என்று கதறி மகளைப் பிடிக்க முயன்றான். ஆனால் அவன் கையில் அகப்பட்டதெல்லாம் அவள் மிதியடிதான். கோஐ வெண்கல மணியுடன் ஒன்றாகி விட்டாள். தகப்பனாருக்கும் வந்திருந்தவர்களுக்கும் துயரம் தாங்க வில்லை. ஹோவென்று கதறினார்கள்.
துயரத்தின் கடுமை ஓய்ந்த பிறகு பெரிய மணியை ஆஸை விட்டு எடுத்துப் பரிசோதித்தார்கள். எவ்வித குறைபாடும் இல்லை. சுத்தமாகவும் அழகாகவும் இருந் தது.
மறுநாள் மணிக்கூண்டில் பெரிய மணியை ஏற்றிக் கட்டினார்கள். முதல் முதலாக ராஜா மணியை அடித்து ஓசை எழுப்பினான். ஆனால் என்ன ஆச்சர்யம்! பெரிய மணி மற்ற மணிகளைப்போல் ஒலிக்கவில்லை. விம்மலுடன் ஏறி இறங்கி பாய்ந்து நீண்டு ஓசை ஒலித்தது. மகாராஜாவும். மற்றவர்களும் வியப்புடன் ஊன்றி கவனித்தார்கள் மி -தி-ய – டீ மி -தி-ய-டீ என்று பெரிய மணி ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. மகாஜனங்களுக்கெல்லாம் கண்டாமணி சொல்லும் ரகசியம் விளங்கி விட்டது. கோஐ தன் மிதியடிக்காக ஏங்கிக் கொண்டிருந்தாள்!
மி-தி-ய-உ, மி -தி-ய-டீ
– 1934 முதல் 1968 வரையில் ஹனுமான், சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் வெளியானவை ஆகும்.
– காக்கைகளும் கிளிகளும், முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |