பிரயாணி





(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பாறைமீது அவன் உடலைச் சுருட்டிக்கொண்டு படுத்துத் தூங்கிவிட்டான்.
எத்தனையோ காலமாக யாத்திரை செய்துவரும் பிரயாணி அவன்.
குளிர்ந்த வைகறைக் காற்றுப் பட்டு உடல் சிலிர்த்தவுடனே அவன் எழுந்தான். இரவு முழு வதும் நடக்கவேண்டும் என்று முடிவு கட்டியிருந்தும் நடுவே தனக்கு எப்படித் தூக்கம் வந்துவிட்டது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவன் திடுக்கென்று எழுந்தான்; பிறகு –
மெதுவாக நடந்து சென்றான். பேசச் சக்தி இல்லாத அவன் கால்கள் இரண்டும், ரத்தம் கறுத்துப் போய், ஒரே ரத்தக்களரியாக இருந்தன. நடக்கும் போது கற்கள் படுவதால அவனுடைய காலின் ஒவ் வோர் அணுவிலும் சகிக்க முடியாத வேதனை உண் டாகி, அவன் துடியாகத் துடித்தான்.
அலுப்படைந்து அவன் ஒரு பாறைமேல் உட் கார்ந்தான். தற்செயலாகப் பின்னால் திரும்பிப் பார்த்தான்: அந்தக் காட்சி எவ்வளவு அழகாக இருந்தது! பனிமூட்டத்திலே தென்பட்ட மரங் களின் அந்த உச்சாணிக்கிளைகள், தாயின் முன்றானைக் குள்ளே மறைந்துகொண்டு தலையை மட்டும் நீட்டிப் பார்க்கும் சிறுகுழந்தைகளைப்போலத் தோற்றின.
அவன் எதிரே பார்த்தான்: பனி மூட்டத்தைத் தவிர வேறு ஒன்றுமே தென்படவில்லை. முன்பின் தெரியாத பயங்கரமான கடல் தன் முன்னால் விரிந்து கிடப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அவன் பயந்துபோனான்.
வந்த வழியே திரும்பிப் போய்விடலாம் என்று எண்ணி, அவன் முகத்தைக்கூடத் திருப்பிக்கொண் டான்.
அதற்குள் திடீரென்று வெயில் வீசியது. பனி மூட்டம் பரபரவென்று கலைய ஆரம்பித்தது. தன் தலையிலே கட்டியிருக்கும் காயக்கட்டை யாரோ- அவிழ்ப்பதுபோல அவனுக்குத் தோற்றியது.
தான் நடந்து வந்த வழியை அவன் பார்த்தான். சற்று நேரம் முன்பு அவன் எந்த மரங்களின் உச்சாணிக் கிளைகளைப் பார்த்தானோ, அவை ஒரு பயங்கரமான காட்டில் வளாந்த மரங்கள். அவன் காலை ரத்தக்களரியாக்கிய முட்கள அந்தக் காட்டிலே தான் அவனைக் குத்தின. அந்தப் பிரயாணத்தை நினைத்தவுடனே அவனுக்கு மெய் சிலிர்த்தது.
அவன் தன் கால்களின் கீழே சுற்று முற்றும் பார்த்தான். பருக்கைக் கல், பெரிய கற்கள், பாறை கள் ஆகியவை இருந்தன. ஆனால் எங்கும் முள் இல்லை. சுற்றுப்புறத்து இயற்கையைப்போலவே அவன் பார்வையிலும் ஒளி வீசியது.
அவன் மறுபடி எதிரே பார்த்தான். சற்று நேரம் முன்பு பனி மூட்டத்தில் மறைந்திருந்த பகுதி கள் யாவும் இப்போது தெளிவாகத் தென்பட்டன. அழகிய பூஞ்சோலை; அதனுள்ளே, திவலைகளை மேலே தூக்கி எறிந்து சொரியும் நீரூற்று; அந்த நீரூற்றை ஆசீர்வதிக்கும் கோயிலின் பொற்கலசம்; சோலையிலே குதித்து விளையாடும் குழந்தைகளின் மங்கலான தோற்றம் –
அவன் அந்தத் திசையை நோக்கி ஓட்டமாக ஓடி னான். அவன் கண்களிலே மிதக்கும் ஆனந்தத்தைப் பார்த்தால், அவன் கால்கள் சல்லடையாகிவிட்டிருக் கின்றன என்பதை யாரும் உண்மை என்றே நினைக்க மாட்டார்கள்!
– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க... |