பிரதோஷ பெருமாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 20, 2025
பார்வையிட்டோர்: 110 
 
 

“ஹலோ, நமஸ்காரம். நான் அட்வகேட் சம்பத்குமார் தான் பேசுறேன்.”

“என்ன, கண்டுபிடிக்க முடியலையா? டோர் நம்பர் 108 தான். ஓ… அந்தக் ரேஷன் கடைக்கு முன்னாடி இருக்கீங்களா? அப்படியே கொஞ்சம் முன்னாடி வாங்க. நாலு வீடு தள்ளி வாங்க. வாசலில் ஒரு பெரிய கோலம் இருக்கும். திண்ணையில், எதிர்த்த வீட்டு மாமி உட்கார்ந்திருப்பாங்க. ஒரு துளசி மாடம் இருக்கும். பெரிய வாசல்… கேட்டுக்கு மேலே சக்கரத்தாழ்வார் சின்னம் கூட இருக்கும். என் நேம் பிளேட் இருக்கும், ‘சம்பத்குமார் எம்.ஏ., பி.எல்., பி.ஜி.டி.ஏ.டி.ஆர்., நோட்டரி அட்வகேட்’.”

தாம் படித்த படிப்பையும், செய்யும் தொழிலையும், செல்வச் செழிப்பையும் ஒரே நொடியில் சொல்லி முடித்தார் 62 வயது நிரம்பிய சம்பத்குமார். கும்பகோணத்தில் பிறந்து, தற்போது சென்னையில் மிகப் பிரபலமான சிவில் வழக்கறிஞர். சம்பத்குமார் கே. ஐயர் – உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர். தும்பைப் பூ வெள்ளை நிறத்தில் உடை அணிந்து தோன்றும் அவர், வழக்கு நடத்தும்போது நீதிபதிகளே அசந்து போகும் அளவுக்கு அசாத்திய வாதத் திறமை கொண்டவர். சட்டத்தின் தர்மத்திற்கும், திருவாய்மொழி தர்மத்திற்கும் உட்பட்டு வாழ்பவர்.

“யார்கிட்ட இவ்வளவு விவரமா அட்ரஸ் சொல்லிட்டு இருக்கீங்க?”

மடிசார் புடவையில், முந்தானியில் கைகளைத் துடைத்தவாறே, முன்வாசலை நோக்கி நிமிர்ந்து வந்தார், மிஸஸ் வனிதா சம்பத்குமார். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின், நங்கநல்லூர் கிளை மேலாளர்.

“இன்னைக்கு சனி பிரதோஷம். அதனால பூஜைக்குத் தேவையான ஒரு சில முக்கியமான பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செஞ்சிருந்தேன். அதை எடுத்துக் கொண்டு வந்த பையன் விலாசம் கேட்டான், அவனுக்குத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன். என்ன இப்போ?” என்றார் கல்லூரி நாட்களில் ஸ்பின் பவுலிங் போடுவதில் ஒரு கில்லாடி என்று பெயர் பெற்ற சம்பத்குமார்.

“சரி சரி, நல்ல நாளும் அதுவுமா நான் ஏன் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டும் இந்த மகானுபாவ மனிதனிடம்” என்று சொல்லிக்கொண்டே மிஸஸ் வனிதா உள்ளே சென்றார்.

“டேய் ஜப்பான்! அந்தக் கொரியர் பையன் வர்றான். நம்ம ஆர்டர் பண்ண இந்த லிஸ்ட் படி சரியாக இருக்கிறதான்னு செக் பண்ணு. வாங்கிட்டு கையெழுத்து போட்டு அனுப்பிவிடு, சரியா? காரை துடைத்து ரெடி பண்ணி வை. இன்னைக்கு ஒரு முக்கியமான டிஸ்கஷன் இருக்கு, கொஞ்ச நேரத்தில் போகணும்.”

“சரிங்க சார்,” என்றார் ராஜப்பன், சம்பத்குமார் சாரியின் கார் ஓட்டுநர். அவரை எல்லோரும் ‘ஜப்பான்’ என்றே அழைப்பார்கள். அது ஏன் என்பது அவருக்கும் தெரியாது.

“லீலா மாமி, நல்லா சூடா ஒரு காபி போட்டு எடுத்துட்டு வாங்களேன். காபி குடிச்சிட்டு இந்தப் பேப்பர் படிக்க ஆரம்பிச்சிடலாம்,” என்று அடுப்பறையை நோக்கி குரல் கொடுத்தார் சம்பத்குமார்.


வீட்டுப் பணியாள் லீலா காபி எடுத்துக் கொண்டு வரவும், எதிர்வீட்டு சக வழக்கறிஞர் சுவாமிநாதன் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. வருவதைப் பார்த்தவுடன் சம்பத்குமார் சார், “ரெண்டு காபி எடுத்துட்டு வந்துடுங்கோ,” என்று சொன்னதைக் கேட்ட அவரின் ஆத்துக்காரி, வங்கி அதிகாரி வனிதா மாமி ‘கமக்’கென்று சத்தம் வராமல் சிரித்தார். அவருக்குத் தெரியும் அடுத்த அரை மணி நேரத்தில் என்ன நடக்கப் போகிறது என்று.

“என்ன சார், சனி பிரதோஷ பூஜை எல்லாம் பலமா இருக்கும் போல. இன்னைக்கு கொரியரில் பொருள் வருது, உங்க கார் டிரைவர் வேற என்னென்னமோ இறக்கி வைக்கிறார். ரொம்ப விசேஷமா இருக்கு போல!” என்றபடியே உள்ளே நுழைந்தார் எதிர் வீட்டு சுவாமிநாதன்.

“வாங்க மிஸ்டர் சுவாமிநாதன், எப்படி இருக்கீங்க? உங்களைப் பார்த்த உடனே காபி சொல்லிட்டேன்.”

சோபாவில் அமர்ந்த சுவாமிநாதன், எதிலிருந்த டீப்பாயைப் பார்த்தபடியே பேச ஆரம்பித்தார்.

“சார், ரொம்ப நாளாக உங்களிடம் கேட்கணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். ‘ஹிந்து’, ‘எக்ஸ்பிரஸ்’ என்று ரெண்டு பேப்பர் எதுக்கு சார் படிப்பீங்க? ஒரே செய்திதானே… ‘அல்மோஸ்ட் சேம்’ இல்ல!”

“மிஸ்டர் சுவாமிநாதன், உங்களுக்கு ‘ஹிந்து’வில் செய்திகள் எப்படி இருக்கும்னா… சோல்கர் பௌலிங் மாதிரி இருக்கும். ஆனா எக்ஸ்பிரஸ்’ல, பிரசன்னா, சந்திரசேகர் பௌலிங் மாதிரி இருக்கும்! புரியுதா?” ‘ஹிந்து’ பேப்பர் ஒரு சாஃப்டான ஸ்பின்னைப் போடும். ‘எக்ஸ்பிரஸ்’ அப்படி இல்லை… அவர்கள் அக்ரசிவ் ஃபாஸ்டர்! எந்த சிச்சுவேஷனையும், ‘ஹிந்து’ பேப்பர், கொஞ்சம் சாஃப்டா மாற்றும்… அதுதான் ‘ஹிந்து’வின் எடிட்டோரியல் ஸ்டைல்! ஒரே விஷயத்தை: ‘ஹிந்து’ மென்மையா சொல்லும். ‘எக்ஸ்பிரஸ்’ அதிரடியா வெளியிடும்.”

“சரி, காபி சாப்பிடுங்கள்!”

“மேடம், நான் என்ன கேள்வி கேட்டேன்? உங்க ஆத்துக்காரர் என்ன பதில் சொல்றாரு பாத்தீங்களா?”

“அவர் என்ன புக் படிச்சிட்டு இருந்தார் என்று பார்த்தீர்களா? அது அப்படித்தான் பேச சொல்லும்?”

“145 பக்கம் உள்ள பெரிய புத்தகம், தமிழ்நாடு திட்டக்குழுவின் ‘ஹீட் மிட்டிகேஷன்’ பற்றிய புத்தகம். தமிழ்நாட்டில் வழக்கமான வெப்பத்தை விட இப்ப கொஞ்சம் அதிகமாயிடுச்சா… அதைப்பத்தி படிச்சிட்டு இருக்காரு. அதனால கொஞ்சம் சூடு ஏறிடுச்சு, அதான் கொஞ்சம் மூளை மக்கர் பண்ணுது. படித்து முடித்துவிட்டார் என்றால் சரியாயிடும்.”


“மாமி, கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. தப்பு இருந்தால் மன்னிச்சுக்கோங்க. இருந்தாலும் எனக்கு பொறுக்கவில்லை. அதனால்தான் கேட்கிறேன்.” இவ்வளவு சிரமப்பட்டு உங்களை சங்கடப்படுத்திவிட்டு இந்தச் சனி பிரதோஷம் கொண்டாடுறீங்களே, இது எதுக்காக? என்ன பலன் கொடுக்கும்னு நம்புறீங்க? சும்மாதான் கேட்கிறேன், கோச்சுக்காதீங்க.”

“அதுவா, சனி பிரதோஷ பூஜை செஞ்சா சனி பகவான் கோபத்தால் ஏற்படுகிற தோஷம் குறையும். சிவபெருமான் அனுக்கிரகம் கிடைக்கும். நிதி நெருக்கடி போகும். அதைவிட முக்கியமாக வீட்டில் அமைதி நிலவும். சண்டை சச்சரவுகள் குறையும். முக்கியமா, சார் தொழில் சம்பந்தப்பட்டது. ரொம்ப முக்கியம். ஏன்னா சனீஸ்வரன் வந்து நீதிபதி இல்லையா? இன்னும் என்னென்னவோ இருக்கு. சிவபெருமான் தேவர்களைக் காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது. அன்று பிரதோஷ பூஜை முடிந்ததும் மற்றவர்களுக்கு கேட்காமல், நந்தியின் காதில் சென்று நம்முடைய வேண்டுதலை சொன்னால், அதை அவர் சிவனிடம் சொல்லி விரைவில் நிறைவேற்றி வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பத்து வருஷமா பண்ணிட்டு இருக்கேன். இதுவரைக்கும் நல்லாதான் போயிட்டு இருக்கு. இப்பதான் கொஞ்சம் உடம்பு படுத்தது. எவ்வளவு தூரம் ஓடுமோ ஓடட்டும்.”

“அதான் மாமி கேட்கிறேன். உடம்பு படுத்தது, மாமாவுக்கு. வயசு ஆயிடுச்சு. இன்னும் எத்தனை நாளைக்குதான் நீங்க கஷ்டப்படப் போறீங்க? ஒரே பொண்ணு, அவளும் அமெரிக்கால இருக்கா. அதான் எனக்குக் கொஞ்சம் சங்கடமா இருந்தது. சரி, ஆழ்ந்த நம்பிக்கையில் கொண்டாடுறீங்க. செய்யுங்க. உங்களுக்கு என்னென்ன தேவைப்பட்டாலும் நான் இருக்கேன், செய்வதற்கு.””அமெரிக்காவில் இருக்கிற பாப்பு வீட்லயும் இப்படி கொண்டாடுவாங்களா?” லீலா மாமி அக்கறையுடன் வினவினாள்.

பாப்பு, இவர்களுடைய ஒரே மகள். வைஜெயந்திமாலா என்று பெயர் சூட்டி இருந்தாலும் பாப்பு என்பது செல்லப் பெயராகிவிட்டது. எல்லோருக்கும் அவள் பாப்பு தான். அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் மிகப்பெரிய உத்தியோகம். நான்கு படுக்கையறை கொண்ட ஒரு வீடு. நடு ஹாலில் ஒரு ஊஞ்சல். வருடத்திற்கு இரண்டு முறை இந்தியா வந்து செல்வது வழக்கமாக இருந்ததால், இந்த குடும்பத்தில் எல்லோருக்கும் அவர் பரிச்சயமானவர்.

“சரி சரி லீலா, பூஜைக்கு வந்த சாமான் எல்லாம் எடுத்து வை. வெள்ளி விளக்கு, வெள்ளி டம்ளர்/சம்பு, தட்டு, குங்குமச்சிமிழ், தூபக்கால்/சாம்பிராணி தட்டு – எல்லாத்தையும் நல்லா அலம்பி வை. மாமா வந்து ஏதாவது குற்றம் சொல்லப் போறார். பாலாபிஷேகப் பாத்திரம், தீர்த்தப் பாத்திரம் இரண்டையும் ஒரு துணி போட்டு தொடச்சு வை. இப்போ ஆரம்பிச்சால்தான் சாயந்திரம் நாலரை மணிக்குள் எல்லாம் சரியா வரும்.”

லீலாவுக்குக் கட்டளையிட்டபடியே மிஸஸ் வனிதா மேடம் கொரியரில் ஆர்டர் செய்த பொருட்கள் எல்லாம் வந்துவிட்டதா என்று சரி பார்க்க, ஊதுபத்தி, சாம்பிராணி, கெட்டி கற்பூரம், தீப எண்ணெய், திரி இத்தியாதி அனைத்தும் சரியாக இருந்தது. சிறப்பு பூஜையில் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை உபயோகித்து பூஜை செய்தால் அவருக்குப் பிடிக்காது என்பது தெரியும்.

ஓட்டுநர் ராஜப்பாவிடம், மாவிலை எடுத்து நிலைப்படியில் கட்டுமாறு தன்னுடைய வேலைகளில் ஒன்றாக அவரும் ஒரு வேலை சொன்னார்.


“மாமி புளி கரைசல் போட்டு விளக்கவா?” என்று வேலைக்கார லீலாவின் குரல் ஹாலில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் மாமாவின் காதில் தெளிவாகக் கேட்டது.

“என்னது புளிக்கரைசலா? ஏன் அந்த பீதாம்பர பவுடர் என்ன ஆச்சு?” குடித்துக் கொண்டிருந்த காபி டம்ளருடன் திண்ணைக்கு வந்து, கொரியரில் வந்த பார்சல் லிஸ்ட்டை செக் பண்ணி மீண்டும் உரத்த குரலில், “Irresponsible fellows! இர் ரெஸ்பான்சிபில் ஃபெல்லோஸ் ஆர்டர் பண்ணா ஒழுங்கா அனுப்பணும் என்கிற ஒரு உணர்ச்சியே இல்லாதவர்கள். திருப்பி யாரும் கேட்க மாட்டாங்க அப்படிங்கற தைரியம்.”

மிஸ்ஸஸ் வனிதா மேடத்திற்குப் புரிந்துவிட்டது, மாமாவின் முதல் விக்கெட் இன்று காலி என்று.

“எல்லாம் ரெடி பண்ணி வைங்க. நான் இரண்டு மணி நேரத்தில் திரும்பி வந்து விடுகிறேன்,” என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றார் அட்வகேட் சம்பத்குமார்.

ஹாலிலிருந்து எதிர் வீட்டு சுவாமிநாதன் சாரைக் காணோம்…


இன்று விரதம் என்பதால் மதிய உணவு பற்றி கவலைப்படாமல் அவருடைய வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள்.

மாலை 4 மணி நெருங்கும்பொழுது மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டது. வீட்டிற்குள் இருந்த நான்கு பேரும் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே இருந்தார்கள். ஏன், எதற்கு என்பது அவர்களுக்குத் தெரியாமல். வழக்கறிஞர் சாரியின் குரல் அப்போதைக்கப்போது ஒலித்துக்கொண்டே இருந்தது.

எல்லாவற்றையும் சரிசெய்து மிஸ்ஸஸ் வனிதா பூஜை அறைக்குக் கொண்டு வந்து சேர்த்தபொழுது மணி நான்கைத் தொட்டுவிட்டது.

“சரி சரி, நான் போய் இன்னொரு முறை ஸ்நானம் பண்ணிட்டு வந்துடறேன்,” என்று சொல்லிவிட்டு வழக்கறிஞர் சார் மீண்டும் ஒருமுறை குளியலறைக்குச் சென்றார். அவர் பூஜை செய்யும்போது உடுத்துவதற்குத் தேவையான மயில் வேஷ்டியையும், மயில் துண்டையும் எடுத்து மிஸ்ஸஸ் வனிதா குளியல் அறைக்கு அருகில் இருந்த மேஜை மீது வைத்தார். மீண்டும் ஒருமுறை எல்லாம் சரியாய் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து, தன்னுடைய சிரமத்திற்கு மத்தியிலும் இவ்வளவு வேலையை ஒழுங்காக செய்திருக்கிறோமே என்று பாராட்டிக்கொண்டார். பூக்கள், சந்தனம், கற்பூரம், நெய், விளக்கு, பச்சரிசி, வெல்லம் எல்லாம் தேவைக்கு ஏற்ப இருந்தன. கூடவே ஒரு தாம்பூலத் தட்டில் பழங்களும் வைக்கப்பட்டிருந்தன. எள் சாதம், வெள்ளை பாயாசம், கற்கண்டு, தேன் இவை அனைத்தும் தேவையான அளவில் இருந்தன.

குளித்துவிட்டு வந்த வழக்கறிஞர் சார், சனீஸ்வரன் படத்திற்கு நீர் தெளித்து, எள் எண்ணெய் விளக்கேற்றி வழிபட்டார். 108 முறை ஸ்தோத்திரம் பாராயணம் செய்தார்.

சிவ பூஜை, நந்தி பூஜை, சனி பூஜை முடிந்தது. படையலில் இட்ட உணவுப் பொருட்களை தானம் செய்வதற்காக திருமதி வனிதா வாசலுக்கு வரவும், திண்ணையில் அமர்ந்திருந்த எதிர் வீட்டு மாமி கண்ணில் படவும் தானம் செய்தார். எதிர் வீட்டு மாமி விழுந்து நமஸ்காரம் செய்தார். ஒரு வழியாக பூஜை முடிந்ததும், களைப்பில் திருமதி வனிதா சோபாவில் அமர்ந்து,ஒரு வாய் நீர் அருந்திவிட்டு மொபைல் போனில் “All complete” என்று ஒரு டெக்ஸ்ட் அடித்தார். அப்பொழுது பொழுது அட்வகேட் சார் மீண்டும் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்.

“அவன் சொன்னா உனக்கு எங்கப்பா போச்சு? உனக்கு என்ன குருவி தலையா? இல்லை சுண்டைக்காய் தலையா? சரி சரி வை. நல்ல நாளும் அதுவுமா என்கிட்ட திட்டு வாங்காதே!” திருமதி வனிதாவின் கணக்குப்படி அடுத்த விக்கெட்டும் வீழ்ந்தது.


சிறப்பு நாட்களில் சம்பத்குமார் சார் தாம்பூலம் தரிப்பது வழக்கம். கும்பகோணத்தில் வீட்டின் பின்புறம் கொல்லையில் வெற்றிலை கொடி இருந்ததையும், ஒரு வெற்றிலை இரண்டு ரூபாய்க்கு விற்பதையும் யோசித்துப் பார்த்து அடிக்கடி தாம்பூலம் தரிப்பதை விட்டிருந்தாலும் கூட இன்று தாம்பூலம் தரிப்பதற்கு ஆயத்தமானார். நீண்ட நெடிய ஐயம்பேட்டை வெற்றிலையை இரண்டு பக்கமும் கழுவி நடுவிரல் நகங்களால் கீறி அதில் கொஞ்சம் பன்னீர் சுண்ணாம்பு தடவி சீவலை வாயில் மிதக்கிக் கொண்டே வெற்றிலையை உருளைக்கிழங்கு வறுவல் சாப்பிடுவது போல மெல்ல கடித்து சாப்பிடுதல் சுகமோ சுகம் என்பார். என்றும் அப்படித்தான் செய்தார். ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு தனக்குப் பிடித்த ஆனந்த பைரவி ராகத்தில் கட்டுண்டு, கண்கள் மூடி, ஒவ்வொரு ஸ்வரத்தையும் உள்வாங்கி, பரவச நிலையில் மெதுவாக ஆடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய கைபேசி ஒலித்தது. திரையில் பாப்பு என்பதைப் பார்த்ததும் கைபேசியை மனைவியிடம் கொடுத்து, சைகையால், “பேசிக் கொண்டிரு” என்று சொல்லி, திண்ணைக்குச் சென்றார்.

பணியாள் லீலா கொண்டு வந்த ஃபர்ஸ்ட் டிகாக்ஷன் காபியை குடிப்பதற்கு சோபாவில் கால்களை சம்மணம் போட்டு அமர்ந்திருந்த மேடம் காபி டபரா செட்டை அப்படியே கீழே வைத்துவிட்டு மகளிடம் பேச ஆரம்பித்தார். இந்தத் தொலைபேசி அழைப்பு ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் வரும் என்றாலும் கூட இன்று இது மிகவும் தேவைப்பட்டது.

“ரோஜாவை ரசிக்கும் அதே வேளையில் ரோஜாவின் முள்ளையும் ரசித்தால் வலிகள் பறந்து போகும். அதனால? நீங்களா விரும்பி விரதம் இருக்கணும், சடங்கு சம்பிரதாயம் அப்படின்னு முடிவு எடுத்ததுக்கு அப்புறம், இந்த மாதிரி கஷ்டமா இருக்குது, உடம்பு வலிக்குது, என்னால முடியல அப்படின்னு எல்லாம் சொல்றது எல்லாம் எப்படி எடுத்துக்கறதுன்னு எனக்கு புரியல. சரி நான் டாடி கிட்ட பேசி பார்க்கிறேன், நீங்க வச்சுருங்க சரியா? குட் நைட்!” என்றவாறு பாப்பு டெலிபோன் தொடர்பைத் துண்டித்தாள்.

தன் செல்ல மகள் சொல்வதும் சரியாகத்தான் பட்டது வனிதா மேடத்திற்கு. இந்த மாதிரி தினங்களில் அதிகாலையில் எழுந்து, எல்லா வேலைகளும் தன் தலையில் போட்டுக்கொண்டு, தினசரி செய்கிற வீட்டு வேலைகளுடன் சேர்ந்து பூஜைக்காக சிறப்பு வேலைகளையும் செய்து வருகிற விருந்தாளிகளையும் கவனித்து முகம் கோணாமல் திருப்பி அனுப்பி கடைசியில், எல்லோரையும் திருப்தி செய்துவிட்டு ஓய்வு எடுக்கிற பொழுது நமக்குள்ளே அந்த “இவை தேவைதானா?” என்கிற

கேள்வி ஓடும். அப்பொழுது இந்த மாதிரி யோசனைகள் சரிதான் என்றும் படும். ஆனால் அடுத்த பூஜை சமயம் வரும்போது மனக்குரங்கு தாவி தாவி பழைய இடத்தை நோக்கி ஓடும். இது இயல்பு என்பது வனிதா மேடம் அவர்களுக்கும் புரிந்தது.

தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டதும் சம்பத்குமார் சார் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலையைத் துப்பிவிட்டு வாயை அலம்பிவிட்டு, அடுத்த போன் கால் தனக்குத்தான் வரும் என்று தெரிந்ததனால் மீண்டும் ஊஞ்சலில் வந்து ஆயாசமாக அமர்ந்தார். டெலிபோன் ஒலித்தது. எதிர்முனையில் மகள் என்ன பேசினாள் என்பது தெரியாவிட்டாலும் இவர் மட்டும் மீண்டும் மீண்டும் தலையை ஆட்டுவதும், “சரிமா… சரி… பார்த்துகிறேன்… சரி…” என்று சமாதானம் சொல்வதுமாக அந்த உரையாடல் தொடர்ந்தது. என்ன பேசினார்கள் என்பது ராஜ ரகசியம்.

ஊஞ்சலிலிருந்து இறங்கிய சம்பத்குமார் சார் உரத்த குரலில் சொன்னார், “ஓகே ஓகே… அடுத்த முறை பூஜைக்கு கேட்டரிங் சொல்லிவிடலாம். குட் பை!” என்று சொல்லி தன் படுக்கை அறைக்குத் திரும்பினார். வனிதா மாமிக்கு இன்று நிம்மதியாக உறக்கம் வரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *