பார்த்ததும் பூத்தது!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 138 
 
 

ஒருவரிடம் திட்டமிட்டு சம்மந்தப்பட்ட காரியத்துக்காக மட்டும் சிக்கனமாகப்பேசாமல், சம்மந்தமில்லாத வார்த்தைகளையெல்லாம், மனதில் தோன்றுவதையெல்லாம் தோன்றியபடி பேசினோமென்றால், அவர்களும் குறை காணாமல் புன்னகைத்தால் அவர்கள் நமக்கு நண்பராக, நண்பியாகத்தகுதியுள்ளவர்கள் என புரிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு ஒரு மணி நேரம் முன் கூட்டியே சென்று விட்ட கயா, தனதருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தாள்.

“படிச்சிட்டீங்களா….?”

“படிக்காம எப்படி பரீட்சை எழுத வர முடியும்?”

“நல்லா படிச்சிட்டீங்களான்னு கேட்டேன்…”

“நல்லாப்படிக்காம மோசமாவா படிப்பாங்க?”

‘இந்தப்பொண்ணோட பேசவே முடியாது. இவங்க நமக்கு சுத்தமா செட்டாக மாட்டாங்க’ என நினைத்தபடி எழுந்தவள், கேன்டீன் வரை சென்று இரண்டு பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டாள். 

‘நேரத்தைப்போக்க வசமாகும் மனமுடையவர்கள் யாராவது கிடைப்பார்களா?’ என அவளது கண்கள் சுற்றிலும் தேடின.

பக்கத்தில் ரோஸ்ட் வாங்கி சாப்பிட ஆரம்பித்த பெண் கயாவைப்பார்த்து புன்னகைக்க, ஆர்வமானாள்.

“ஹாய்” என கயா சொன்னதும், அனைத்து பற்களும் தெரிய சிரித்தவள் தட்டை எடுத்துக்கொண்டு கயா டேபிளுக்கு வந்தாள். முகத்தைப்பார்த்தபடி எதிரே அமர்ந்து “ஹலோ….” என்றாள்.

“உங்களை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு. நீங்க கோயமுத்தூரா?” எனக்கேட்டாள் கயா.

“இல்லே, ஈரோடு”

“அப்பா…” என ஆச்சர்யமாக எண்ணத்தை வெளிப்படுத்தியவள், “அங்கேயிருந்து இவ்ளோ தூரம் வந்தீங்களா….?” கயா கேட்டாள்.

“இதென்னங்க தூரம்? நூறு கிலோமீட்டர் தானுங்க. என்னோட பிரண்ட்டு நித்யாவுக்கு தெலுங்கானாவுல போட்டிருக்காங்க….” என சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தாள்.

“உங்க பேரு….? “

“ரிது… நல்லாருக்குங்களா….?”

“சூப்பர் பேரு. என்னோட பேரு கயா… எப்படியிருக்கு?”

“ஏங்க….”கூமாபட்டி தங்கபாண்டியைப்போல் இழுத்தவள், “எனக்கு இந்த பேரு வெச்சிருக்கனம்னு சின்ன வயசுல இருந்து தீராத ஆசைங்க…. உங்கள சந்திச்சதுல சந்தோசம். நீங்க கோயம்புத்தூர் தானா?”

“ஆமாம். சரவணம்பட்டி. நீங்க எந்த காலேஜ்….?”

“நான் ஈரோடு மெடிக்கல் காலேஜ். எய்ட்டீன் பேட்ஜ். நீங்க?”

“நான் செவன்டீன்…. கோயம்புத்தூர் சிஎம்சி…. போன வருசம் பிஜி நீட்ல ஐம்பதாயிரம் ஏஐ ரேங்க். டெர்மடாலஜி எடுக்கனம்னு ஆசை. கிடைக்கல. அதுதான் இந்த வருசமும் எழுதறேன். முடிச்ச உடனே பர்ஸ்ட் நீட் எழுதல… எழுத தோணல”

“எனக்கும் தான். இதுதான் பஸ்ட்… போன நீட் எழுதுனா கெடைக்காதுன்னு தெரியும். ஏன்னா ஹௌஸ்சர்சன்ல வேலை ஓவர். படிக்க நேரமில்லை. அதனால எழுதல. ஒரு வருசம் பிரேக் எடுத்தா கெடைக்கும்னு… இந்த டைம் நீங்க நல்லா படிச்சீங்களா? நீங்க எனக்கு ஒரு வருசம் சீனியர் வேற. அதான் கேட்டேன்”

“வீட்டில இருந்துட்டே படிச்சேன். நீ சென்டருக்கு போனியா?” நட்பு பலப்பட ‘ங்க’ கட்டானது.

“நானும் வீட்ல இருந்து தான் மேரோ மூலமா படிச்சேன்”

“சூப்பர். உன் கூட பேசிட்டே இருக்கோணும்னு தோணுது. டைம் ஆயிடுச்சு. அம்மா வேற பதட்டமா இருக்காங்க…”

“ஏன்?”

“இந்த நீட்லயாச்சும் நல்ல ரேங்க் வந்தா தானே பிஜி எடுத்ததும் கல்யாணம் பண்ணி வெச்சிட்டு கடமைய முடிச்சுக்கலாம்னு தான்”

“எனக்கு கல்யாணத்துல இஷ்டமில்லை”

அதிர்ச்சியடைந்த கயா “என்ன சொல்லறே….?”

“பிஜியே ஒரு கல்யாணம் மாதிரிதான். அதுக்குள்ள போயிட்டா எப்பத்தூங்கப் போறோம், எப்ப குளிக்கப்போறோம், எப்ப சாப்பிடப்போறோம்னு நமக்கே தெரியாது. இதுல கல்யாணம் வேற நடந்திருச்சுன்னா அந்த எழவுக்கு வரலே, இந்தக் கல்யாணத்துக்கு வரலே, வீட்டுக்கு வந்தவங்களுக்கு நல்லா சமைச்சுப்போடலேன்னு மாமியா டார்ச்சரு, ஹனிமூன் போக முடியலேன்னு புருசன் டார்ச்சரு இருக்கும். ரெண்டு பேரோடு ஒரே டைம்ல வாழ முடியாதுங்கிற மாதிரி படிப்ப முடிச்சிட்டு வாழ்க்கைப்படிப்ப பத்தி யோசிக்கலாம்னு வீட்ல சொல்லியிருக்கேன்….”

“நீபெரிய ஆளுதான். சரி எக்ஸாம் முடிச்சிட்டு நெறையா பேசுவோம். உன்னோட நெம்பர் குடு…” எனக்கூறிய கயா, ரிதுவின் அலைபேசி எண்களை தனது அலைபேசியில் பதிவு செய்ததோடு தனது எண்ணிலிருந்து ஒரு ‘ஹாய்’ அனுப்பி விட்டு தனது தாயிடம் அலைபேசியைக்கொடுத்துவிட்டு தேர்வு நடக்கும் அறையை நோக்கி வேகமாக ஓட்டமும், நடையுமாகச்சென்றாள்.

தேர்வு முடிந்து வெளியே வந்ததும் மறுபடியும் ரிதுவும், கயாவும் சந்தித்து ஒரே ஹோட்டலுக்கு சென்று உணவருந்தினர்.

பேசிக்கொண்டே இருந்தார்கள். ‘இரண்டு பேரும் ஒரே காலேஜ் செலக்ட் பண்ண வேண்டும். கோர்ஸ் எதுவாக இருந்தாலும் சரி’ என உறுதியாக முடிவு செய்தனர்.

“சத்தியமா சொல்லறேன். நான் என்னோட லைப்புல உன்ன மாதிரி மனசுக்கு புடிச்ச ஒரு பொண்ணபார்க்கவே இல்லை. நீ வேற லெவல். வயித்து பசிக்கு சாதாரண சாப்பாடு தான் கெடைச்சிருக்கு. ஆனா மனப்பசிக்கு பிரையாணியே கெடைச்சிருச்சுங்க. நட்புங்கிற பிரையாணி” என மனதில் பட்டதைச்சொல்லி மகிழ்ந்தாள் ரிது.

படிப்பு தவிர நிறைய பேசினார்கள். அங்கிருந்தவர்கள் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தனர். நல்ல நட்பு கிடைத்ததை நினைத்து இருவரும் கட்டியணைத்தபடி கைகுலுக்கி பிரியவே மனமின்றி பிரிந்து அவரவர் வந்த காரில் ஏறிச்சென்றனர்.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *