பழிப்பன சொல்லாமை




(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
உடைமைப் பொருளே யன்றி மக்கள் மதிப்புக் கொடுத்துக் காக்கின்ற வேறு பொருள்களும் பல உள் அவைகளில் முதன்மையானது நல்ல பெயர். நல்ல பெயர் என்பது ஒருவன் நல்லவன் என்று பொதுவாக மக்கள் எல்லோரும் மனத்திற் கொண்டிருத்தல். அப்படிப்பட்ட வனை மக்கள் பலரும் பாராட்டிப் பேசுகின்றனர். மேலும் மக்கள் அவனிடம் நம்பிக்கை வைக்கின்றனர். அவனை அலுவலில் வைத்துக்கொள்கின்றனர்; அவனுக்கு உதவி யாகப் பேசுகின்றனர். இவ்வாறு நல்லவன் தன் நற்பெய ரினாலேயே பற்பல வழிகளில் முன்னேற்றமடைகின்றான்.

நல்லவனுக்கு நல்ல பெயர் வரவேண்டியது முறைமை யும் உரிமையுமாகும்; அதனால் அவனுக்குச் சிறப்பு உண்டு. நற்பெயரே அவனுடைய நற்குணத்திற்குக் கைம்மாறாகும். அதனால் அவன் எப்போதும் நல்லவனாகவே யிருக்க ஊக் கப்படுகின்றான். நல்லவனுக்கு நல்லபெயர் கிடைக்கா விட்டால் அவன் நல்லவனாகவே எப்போதும் இருப்பது ஐயுறவே. அதனைக் கண்டு ஏனையோரும் நல்லவராக இருக்க முயலமாட்டார்கள். ஆகையால் மக்கள் எவருக் கும் அவரவர் தகுதிக்குத் தக்கபடி நன்கு மதிப்புக் கொடுக்கவேண்டுமென்பது முதன்மையான தொன்றாகும்.
தீமை செய்யாதவனைத் தீவினையனென்றும், கடமை யில் தவறாதவனைப் பிழைச்செய்பவனென்றும் உண்மை போலத் தோன்றப் பிறரிடம் அவர்களைப் பழித்துப் பேசுதல் மிகக் கீழான செயல் ஆகும்.
ஆதலால், ஒருவனைப் பொருளிழக்கச் செய்வதற்கு மேல் நற்பெயரிழக்கச்செய்வது அவனுக்குப் பெருந் தீங் கிழைப்பதாகும். ஆகையால் எவரைப் பற்றியும் எதனைச் சொல்வதானாலும் நாம் உன்னிப்போடிருக்கவேண்டும். ஒருவனுடைய நற்பெயர் கெட்டுப்போய்விட்டால் அவன் அதனைத் திரும்ப அடைவதருமை. பழிச்சொல்லும் இழிசொல்லும் மக்களிடம் ஒன்று பத்தாகவும், பத்து நூறா கவும் பரவி, ஒருவனுடைய நற்பெயரை அறவே கெடுத்து அவனையறியாமலே அல்லல் விளைக்கும். வாய்விட்டுச் சென்ற சொல் திரும்பவந்து உட்புகுந்து மறைந்து போகுமா? பிறன் ஒருவனுடைய நற்பெயரில் மன மார்ந்த மதிப்புவைத்த ஒருவன் அவனைப்பற்றிப் பழிப்பும் இழிப்பும் வாய்விட்டுப் பேசமாட்டான்; பிறர் அவ்வாறா கத் தன்னிடம் சொல்லினும், அதனைக் காதுகொடுத்துக் கேட்கவுமாட்டான்; கேட்டாலும் அதனைப் பிறனெவ னிடத்தும் சொல்லவுமாட்டான். நற்பயனற்ற எவ்வகைச் சொல்லையும் வாய்விட்டுச் சொல்லாதிருப்பது உலக வாழ்க் கையிற் பெருநலச் சிறப்புத் தருவதொன்றாகும்.
1. வஞ்சிக்கப்படாதவன் வஞ்சிக்கப்பட்டது
சாக்கரத்தீசர் ஒரு கிரேக்கப் பேரறிவாளர். அவர் எம்மகனுக் கும் அணுவளவு தீமையுஞ் செய்ததில்லை; அவர் எவர்க்கும் நல்லூழியமே செய்துவந்தார். அவர், பிறர் நலமே தவிர தந்ந லம் நாடுவதில்லை. எவ்வகை இடுக்கணிலும் அவர் எது சரியோ, எது செய்யத்தக்கதோ அதனையே செய்வார். அவர் தம் வாழ்நாட் களிலெல்லாம் பிறர் நலத்துக்கும், பிறர் இன்பத்துக்குமே பாடு பட்டுவந்தார். இவருக்கும் இழிவும் பழியும் வந்தது இரங்கத் தக்கதே.
அக்காலத்தில் கிரேக்க நாட்டில் மாயாவாதக்கூட்ட மொன்றி ருந்தது. அவர்கள் சொல்வன்மையினால் பொய்யை மெய்யாகக் காட்டிப் பேசுவர். அவர்கள் வலையிற் சிக்கியவர்கள் பற்பல கிரேக் கர். அதனைப் பொறாராய்ச் சாக்கரத்தீசர் அக் கூட்டத்தாரின் உண்மை கலவாத வெறும் பொய்யை மக்கட்கு எடுத்துக்காட்டி அவர்தம் மனத்தை நல்வழியில் திருப்பப் படாத பாடுபட்டு வந்தார். இஃதேயன்றி அவர் அரசியலார் குற்றங்குறைகளையும் அச்சமின்றி யெடுத்துக்காட்டிப் பேசிவந்தார். கால வேறுபாட்டா லும் கிரேக்க மக்களின் அறிவீனத்தாலும் இவர் உண்மைக் கென்றே பாடுபட்டது எடுபடாமற்போயிற்று.
கிரேக்கர் பல தெய்வக் கொள்கையர். அரசியலாரும் அத் தகையோரே. சாக்கரத்தீசரோ தெய்வம் ஒன்றேயென் றுணர்ந் தவர். அவர் தம் கொள்கையை மக்கட்கு வற்புறுத்திச் சொல்லி வந்தார். ஆயினும் அவர் கிரேக்கர்களின் எத்தெய்வத்தையும் பழித்தோ இழித்தோ பேசுவதில்லை. அப்படியிருந்தும், மாயா வாதக் கூட்டத்தார் இவ்வுண்மையை மறுத்து அழிவழக்குப் பேசிச் சாக்கரத்தீசர் பலதெய்வப் பழிப்பாளர், மக்கட்குக் கெடு புத்தி யூட்டுபவர், அரசியலார்க்கு இரண்டகஞ் செய்பவர் என்னுங் குற்றங்களை அவர் மேற் சாட்டி, அவரை நீதிமன்றத்துக்கு இழுத்துவிட்டனர். நீதியாளரும் உண்மைக்கு மாறுபட்ட கொள்கையுடையவராதலால் சாக்கரத்தீசரை நஞ்சூட்டிக் கொல்லத் தீர்மானித்துவிட்டனர். உலகப் பேரறிஞராகிய சாக்க ரத்தீசர் பழியும் இழிவும் பட்டுப் பரக தியடைந்தார்
2. ஏழைக்குறும்பி எலினி
எலினி என்னும் ஏழைக் குறும்புக்காரி ஒருத்தியிருந்தாள். அவள் மக்கள் உண்டென்பதை இல்லென்பாள், இல்லென்பதை யுண்டென்பாள். அவள் எவ்வகையிலுந் தனக்குத் தாழ்ந்த நிலைமையில் இருப்பவர்களையே மெய்ச்சி மேலாகப் பேசுவாள். தகுதியுள்ளவர்களை ஏதோ ஒரு பயனற்ற காரணங்காட்டித் தகாக வரே யென்பாள். உலகம் புகழும் நல்லோரையும் பொல்லோ ரென்பாள்.
ஒருவரை ஈவிரக்கமுள்ளவர் என்று நண்பர் சொன்னால் அவள், “அவர் வலது கை செய்யும் உதவியை இடது கை யறியுமே! அவர் மறைவாகச் செய்த உதவி ஏதாவதொன்று சொல்லுங்கள் பார்ப்போம்,” என்பாள்.
ஒருவரைக் குறித்து எலினியின் நண்பர், “அவர் மிக நல்லவர்” என்றால், உடனே அவள், “அவர் வெளிக்கு நல்லவரே, அவர்தம் மனப்பான்மையை நீங்கள் அறிவீரோ! கண்ணுக்கழகாக இருக்கும் பழங்களெல்லாம் வாய்க்குச் சுவை தருமோ,” என்பாள்.
“பந்தன் என்பவன் தன் அழகுக்கேடான கிழ மாமன்மீ அன்பாயிருக்கின்றான்,” என்று தன் நண்பர் சொனனால், அதற்கு அவள், “சொத்துக்கு ஆசைப்பட்டன்றோ மாமன்மீது பந்தன் பத்தி காட்டுகின்றான்,” என்பாள்.
இவ்வாறு அழிவழக்குப் பேசுந்தன்மை எலினியிடம் இல்லா விட்டால் அவள் மற்றெவ்வகையிலும் உயர்ந்தவளே ஆவாள். ஆனால், பிறப்போடு பிறந்தது இறக்கும்வரை இருந்தேதீரும் அல்லவா?
3. பணக்காரன் பாழ்பட்டது
ஒரூரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவன் பிறரைப் வற்றிப் பழிப்பாகவும் இழிப்பாகவும் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுவிட்டான். அறிவிலிகளெல்லாம் அவனுக்குக் கூட்டாளிகள். அவனுடன் எல்லோருஞ் சேர்ந்து ஊரிலுள்ள நல்லோரை யெல்லாம் பொல்லாப்பாய்ப் பேசிக் கெக்கொலி கொட்டிச் சிரிப் பதே வேலையாகக்கொண்டிருந்தனர். ஆகையால் அவ்வூரில் நல்லவர் ஒருவரும் அவன் வீட்டுக்கு வருவதே யில்லை.
இவ்வாறு சிலநாட்கள் செல்ல அச்செல்வன் தன் கூட்டத்தா ரையே நேருக்கு நேராய்ப் பழித்தும் இழித்தும் பேசத்தொடங் கினான். பணச்செருக்கு பல்வகைத் தீமையுஞ் செய்யுமன்றோ? எவனுக்குந் தன்மதிப்பென்பது ஒன்றுண்டல்லவா? நேருக்கு நேரான வசைச் சொற்களை எவர்தாம் பொறுப்பர்! “சீ இவன் கெட்டான்” என்று உடன் கூட்டத்தார் ஒவ்வொருவராக அவனை விட் டகன்றுபோயினர். தன்னந்தனியே நின்றான் பணக்காரன்.
ஒருநாளிரவு அவன் வீட்டில் திருட்டுக் கும்பல் புகுந்து. இருப்பவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டனர். அக்கம் பக்கத்தாரும் அவனுக்கு யாதோருதவியுஞ் செய்ய அணு கினாரில்லை. பணக்காரன் பணமெல்லாமிழந்து ஊரூர் சென்று பிச்சையெடுத்துப் பிழைத்துவந்தான். பழித்தலும் இழித்தலும் பணக்காரனையும் பாழாக்கினது பார்த்தீர்களா?
க. அயலான்மேல் பொய்ச்சான்று பகர நிற்காதே. -மோசே கட்டளைகள்
உ. அயலானுக்குப் பகையாகக் காரணமின்றிச் சான்று சொல்லப் போகாதே.
ங. மனத்தூய்மையை விரும்புகின்றவன் வாக்கின் நலத்தால் அரசனுக்கு நண்பனாகின்றான்.
ச. உண்மை வாக்கு எப்போதும் நிலைநிற்கும் ; பொய்வாக்கோ ஒரு நொடிப்பொழுதே! -பழமொழிகள்.
ரு. முறுகிய கூரறிவுடையோர் மக்களிடம் பிறர் காணாத குற்றங் குறைகளை யெல்லாம் கண்டுரைப்பர்; பிறர் தம நற்குண நற்செய்கைகளைக் காண அவ்வறிவைப் பயன் படுத்துவது மேலானது. சூரியன் ஒளியை நுகர்தலைவிட்டு அதனுடைய கரும்புள்ளிகளின் மேல் கருத்துச் செலுத்து வது மேலான தன்று. -செட்ஜ்விக்
சு. பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல்.
எ. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும்.
அ. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறந்தெரிந்து கூறப் படும்.
க. துன்னியார் குற்றமுந் தூற்று மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு. -திருவள்ளுவர்.
க0. பழிப்பன பகரேல். -ஔவையார்.
கக. பிறர்பிறர் சீரெல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல். -குமரகுருபரர்
– நல்லொழுக்கப் பாடம், முதற் பதிப்பு: ஏப்ரல் 1951, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிட், திருநெல்வேலி.
![]() |
சேலை சகதேவ முதலியார் (1874 - ஜூலை 28, 1953) தமிழ்ப் பாடநூல்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் பதிப்பாசிரியராகவும், செந்தமிழ்ச்செல்வி இதழின் ஆசிரியராகவும் இருந்த மணி திருநாவுக்கரசு கோரியதற்கு இணங்க பள்ளி மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளான கழகத் தமிழ்ப்பாட வரிசையில் ஆறு நூல்களை சேலை சகதேவ முதலியார் செம்மை படுத்திக் கொடுத்தார். அந்நிறுவனம் வெளியிட்ட…மேலும் படிக்க... |