பலாத்காரம்
‘கிரீச்…..’
உலகிலுள்ள கோடிக்கணக்கான உயிர்களில் ஒன்று. இந்த உலக பந்தங்களிலிருந்து விடுதலை பெற்றக் கொண்டது.!
அடிபட்ட நாயைத் தூக்கி எறிவதுபோல், அந்த உயிரற்ற மனிதச் சடலத்தை இழுத்து எறிந்துவிட்டு அந்த ராணுவ ஜீப், மேலே தன் பயணத்தை மேற்கொண்டது.
அதன் உறமலும், சீற்றலும் இதயமற்ற அரக்கனை நினைவுறுத்திற்று.
விலை மதிப்பற்ற ஒரு மனித உயிரை, மின்வெட்டும் நேரத்தில் குதறி எறிந்து விட்டு தன் பாட்டில் அந்த ஜீப் ராஜ கெம்பீரத்தோடு ஓடிக்கொண்டிருந்தது.
இத்தனைக்கும், எமனின் மறு அவதாரமான அந்த ஐPப்பில் இருந்தவர்கள் அத்தனை பேரும் மனிதர்கள்தாம்!
சட்டத்தின் பிரதிநிதிகளான – ‘கடமையின் காவல்களான’ – அந்த மனிதக் கும்பலில் ஒருவனாக இருந்த கோபாலின் மன உலையில் நகச் சூடு பிடித்தது.
ஜீப் முன்னேறியது.
அதோ வீதியில் ஒரு வளைவு. அந்த வளைவில் தன்னந்தனியே ஓர் ஓலைக் குடிசை. அந்த இடத்தில் வந்து நின்றது ராணுவ ஜீப். ஜீப்பிலிருந்து ‘தட தட’ என்று துள்ளிக் குதித்தனர் ராணுவ வீரர்கள்.
‘சேரம புச்சாப்பாங்!’
கட்டளை பறந்தது. தனிச் சிங்களத்தில்.
வானரச் சேஷ;டையை ஆரம்பித்தனர் ராணுவ வீரர்கள்.
யாருக்கும், எந்தத் தீங்கும் நினைக்காத அந்த ஓலைக் குடிசையை, நெருப்பின் நா தழுவியது!
ஓலைக் குடிசையை மட்டும் தானா தீயின் நாக்குத் தழுவியது?
அதோ ஜீப்பினுள்ளே, ராணுவ வீரர்களோடு ராணுவ வீரனாய்க் குமைந்த உள்ளத்தோடு – நகச் சூடேறிய நெஞ்சத்தோடு இருக்கும் கோபாலின் நெஞ்சிலும் – பற்றிப் படர்ந்தது.
தன் எரிக்கும் பணியை முடித்துக் கொண்டு அங்கிருந்து பறந்தது ஜீப்.
பத்து நிமிஷம் சென்றிருக்கும்…..
பரந்து விழுதூன்றிக் கிளைபரப்பி நின்ற ஓர் ஆலமரத்தின் கீழ் அமைதியாக இருந்த கோயிலுக்கு சமீபமாக ஜீப் வந்து நின்றது.
‘அமைதி’யை நிலை நாட்டுவதற்காகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இராணுவ வீரர்கள், ‘தட தட’ என்று கீழே இறங்கினார்கள்.
அந்தச் சின்னஞ் சிறு ஆலயத்தின் உக்கி உழுத்த வாயிற் கதவைப் ‘பூட்ஸ்’ பாதங்கள் முத்தமிட்டன.
ஆலயக் கதவு திறந்து கொண்டது.
‘பக்தர்கள்’ கூட்டம் ‘மள மள’ என்று ஆலயத்துள் நுழைந்தது.
உள்ளே கும்மிருட்டு, செழும்பு பிடித்த அந்தப் பழைய தூண்டாமணி விளக்கில் திரியும் இல்லை, எண்ணெயும் இல்லை.
‘டோர்ச் லைட்’ அடிக்கப்பட்டது. ஒரு வீரன், தீக்குச்சியைக் கிழித்துச் சிகரட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான்.
மூலஸ்தானத்தை நோக்கிப் ‘படையெடுத்தது’ அந்தப் படைவீரர் கூட்டம்.
வணக்கத்துக்காக வைக்கப்பட்டிருந்த சூலாயுதமும், வேலாயுதமும் பிடுங்கப்பட்டன!
மூலையில், ‘சடங்கு’ காலத்தில் பாவிக்கப்படும் கண்ட கோடலியும், கத்தியும், அலவாங்கும் இன்னும் இரண்டொரு துரப்பிடித்த சாமான்களும் ‘பக்தர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.
அத்தனை பொருட்களும் வாரி எடுக்கபட்டன.
நாடு முழுக்க பிரகடனப்படுத்தபட்டிருந்த அவசரகாலச் சட்டத்துக்கும், வடக்கிலும், கிழக்கிலும் அமுலாகி இருந்த ஊரடங்குச் சட்டத்துக்கும் மாறான செயலாம் அப்படி ‘ஆயுதங்கள்’ இருப்பது!
ராணுவ வீரர்களின் ‘பாரா’ மீண்டும் தொடர்ந்தது.
கோபாலின் குருதி கொதித்தது. தன் இனத்தின் விடுதலை வேட்கையை வேட்டையாடும் இந்தச் சிங்கள ராணுவ வீரர்களின் வெறிச் செயலுக்கு நாமும் உடந்தையா? கடமை என்ற சூட்டுக்கோல் நம் கண்களைக் குத்திக் குருடாக்கிவிட்டதா?
கேள்விகள் பூதாகாரமாய் எழுந்தன. கோபாலின் உள்ளத்தில், நெஞ்சில் மூணடிருந்த ‘நகச்’ சூட்டில் சற்று உறைப்பு ஏற்பட்டது. அந்த உறைப்பு உலைக்களமாக மாறி – அவன் உள்ளத்தை எரிமலையாக வியாபிக்கச் செய்த சம்பவம் ஒன்று சற்று நேரத்தில் நிகழ இருந்தது அவனுக்கு அப்பொழுது தெரியவில்லை!
வடக்கிலும், கிழக்கிலும் வேகமாக நடைபெற்ற, சரித்திரப் பிரசித்தி பெற்ற சத்தியாக்கிரத்தை முறியடிப்பதற்காக, ராணுவம் கட்விழ்க்கபட்டிருந்த இருட்காலம்.
ஊண் மறந்து – உறக்கம் துறந்து உரிமை பெறுதற்காகத் தமிழ் மக்கள் திரண்டெழுந்து யுத்த நோன்பைச் செயலற்றதாகப் பண்ணுதற்காக அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தையும், ஊரடங்கையம் பிரகடனப்படுத்தியிருந்த கறைபடிந்த காலம்.
மாதக் கணக்கில் மழையில் தோய்ந்து. வெயிலில் கருகி, பனியில் விறைத்துத் தம் தாயினைக் காக்கத் தமிழ் மக்கள் புரிந்த அகிம்ஸைப் போரைக் குதறி எறிந்து நிர்மூலப்படுத்த அரசாங்கம் போர்ப்பறை கொட்டிய பயங்கர நாள்.
கிழக்கு மாகாணத்தின் ‘கொட்டத்தை’ அடக்குவதற்காக அரசாங்கத்தால் அனுப்பட்டிருந்த ராணுவக் கோஷ;டியில் நமது கதாநாயகனான கோபாலும் ஒரு ராணுவ வீரனாக ‘டியூட்டி’.
தன்னுடன் கடமைபுரிய வந்திருந்த சிங்கள வீரர்களும், ராணுவக் கோஷ;டியின் தலைவரும் கடமையின் பெயரால் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமை அவன் இரத்தத்தில் கொதிப்பை ஏற்படுத்தியது.
தான் ஒரு விசுவாசமுள்ள அரசாங்க ஊழியன் என்பதையும், இனப்பற்றிற்கும், இரக்கத்துக்கும் தான் பொறுப்பேற்றுள்ள தொழிலில் இடமில்லை என்பதையும், அப்படி இரக்கம் காட்டுதல் ராஜத்துரோகம் – தேசத்துரோகம் என்பதையும், தனக்கு அளிக்கபட்டுள்ள கடமையினின்றும் பிறழ்வது, மனச்சாட்சியைக் குழிதோன்டிப் புதைக்கும் செயல் என்பதையும் அவன் மறந்தான்.
அப்படி அவன் பேயாகமாறியதற்கு – சற்று முன்னர் ராணுவத்தினர் ஓர் உயிரை ஜீப்புகளுக்குப் பலியாக்கியதோ, ஓலைக் குடிசையைத் தீக்கு இரையாக்கியதோ, இறைவன் உறையும் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தியதோ மட்டும் காரணமல்ல!
கொடுமையின் எல்லை என்று கருதப்படும் ஒரு காரியத்தை அவர்கள் செய்தனர். அதுவும் அவன் எதிரே செய்தனர்.
அந்நிகழ்ச்சியின் பின் அவன் மிருகமானான்! பைசாசாகினான்!…
ஆலயத்தைச் சீரழித்த ஜீப், ஆக்ரோஷத்தோடு முன்னேறியது.
அதன் கண் வைத்த தொலையில் ஓர் உருவம். ஜீப் முன்னேற அந்த உருவத்தை நன்கு பார்க்கக் கூடியதாக இருந்தது.
பெண்!
பெண்ணொருத்தி தன் இடுப்பில் ஒரு குழந்தையைச் சுமந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக நடந்து கொண்டிருந்தாள்.
பின்னால் பாய்ந்து வந்த ஜீப்பின் அரவம் கேட்டதும் அவளுடைய நடை ஓட்டமாக மாறியது.
நொடிப் பொழுது தலைவரிடமிருந்து கட்டளை பிறந்தது.
‘நவத்தப்பாங்!’
அந்தப் பெண்ணை முந்திக்கொண்டு ஜீப் நின்றது.
புலால் வேட்கை கொண்ட மனிதப் புலிகள் ‘தட தட’என்று கீழே குதித்தன.
பெண்மை பிராண்டப்பட்டது!…..
சித்திரவதை தோற்கக் கொடுமையைச் செய்தவர்கள் சற்று நிதானமாக அதைச் செய்திருக்கலாம்.
கோபால்?
அவன் இப்பொழுது மனிதனே அல்ல!
புரண்டு வரும் காட்டாற்று வேகத்தில் கோபால் ஜீப்பைச் செலுத்திக்கொண்டு வந்தான். கொந்தளிக்கும் பொங்குமாங் கடலாய்க் குமுறிய அவன் உள்ளத்தில் இப்பொழுது அமைதி! தமிழனாய்ப் பிறந்ததன் கடமை தீர்ந்துவிட்ட தென்ற ஒரு நிறை பூரிப்பு!
அவனை இப்பொழுது ‘தியாகி’ என்பதா? ‘கெட்டிக்காரன்’ என்பதா?
சற்றுமுன்னர்தான் அவன் ஒரு கொலையைச் செய்தான். ‘தன் கையில் அதிகாரம் இருக்கின்றது. தான் நினைத்தால் எதையும் செய்யலாம் என்று தப்புக் கணக்கு போட்டு, தன் கண்ணெதிர் ‘ஈச்மன் வேலை’ புரிந்த இராணுவத் தலைவனைக் கொலைப் பிணமாக்கிவிட்டு அவன் வந்து கொண்டிருக்கிறான்.
தன்னுடைய இந்த தீரச் செயலை மக்களிடம் சொல்லி, அவர்கள் துணையுடன், எஞ்சியுள்ள இராணுவ வீரர்களை எமலோகம் அனுப்பும் இணையற்ற திட்டத்துடன் அவன் வந்து கொண்டிருக்கிறான்.
அவன் உள்ளம் இன்பலாகிரியில் சங்கமமாகின்றது. தன்னுடைய இந்த முயற்சி, தமிழன்னை உருக்கும் கண்ணீரைத் துடைத்தாலும் துடைக்கலாம் என்ற இன்ப நினைப்போடு அவன் ஓடோடி வருகிறான்.
தடால்!
பாதையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒரு மரக்கட்டைமீது மோதுகின்றது அவனுடைய ஜீப்!
சாமர்தியமாகச் சமாளித்துக்கொண்டு ஜீப்பை நிறுத்துகின்றான்.
அவன் அப்படி ஜீப்பை நிறுத்துவதற்கும் துப்பாக்கி வெடிகள் காட்டுப் புறத்தே இருந்து பல கோணங்களில் தீர்வதற்கும் சரியாக இருந்தது.
கோபாலின் மார்பையும், வயிற்றையும், கழுத்தையும் துப்பாக்கி ரவைகள் முத்தமிடுகின்றன! சல்லடையாய்த் துளைக்கின்றன!
ராணுவ ஜீப்பொன்றைத் தடுத்து, அதிலிருந்த பட்டாளக்காரரைப் பழிதீர்த்துவிட்டோம் என்ற கொக்கரிப்போடு ஜீப்பைக் ‘கைப்பற்ற’ நெருங்கிய மக்கள் கூட்டத்தை மருள மருளப் பார்க்கிறான் கோபால். அவர்களிடம் எதையோ சொல்ல அவன் வாய் துடிக்கின்றது.
அதற்குள் கண்கள் நிலைகுற்றி விடுகின்றன!
![]() |
இயற்பெயர் – கந்தையா நவரத்தினம் இடம் – பிறப்பிடம் – பொலிகண்டி, இலங்கை வாழிடம் – ரொறன்ரோ, கனடா கல்வி – M. Sc. (Agriculture Economics – University of Peradeniya) B. A. (Honors in Political Science – University of Peradeniya) விசேட விஞ்ஞான ஆசிரிய பயிற்சி (பலாலி) தொழில் – Accreditation Facilitator / Specialist (Retired) Accreditation Assistance Access Centre,…மேலும் படிக்க... |