பரிசு – ஒரு பக்க கதை





அம்மா ரெடி மிக்ஸ் சமையல் போட்டி ஊர் ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நிறைய ஊர்களில் பரிசுக்குரிய போட்டியாளரை தேர்ந்தெடுப்பது கஷ்டமாகவே இல்லை. ஆனால் கும்பகோணத்தில் மட்டும் ஐந்து பேர் நல்ல சுவையுடன் தயாரித்திருந்தார்கள். அவர்களில் ஒருவரை மட்டும் எப்படி தேர்ந்தெடுப்பது குழம்பித்தான் போனாள். ஐந்து பேரில் நான்கு இளம் பெண்கள், ஒருவர் வயதான பெண்மணி.
அவருடன் வந்திருந்த கணவர் “ இதற்கு போய் என்ன குழப்பம் ஐந்து பேரிடமும் தனித்தனியாக இந்த கேள்வியை கேட்டுப்பார்…” என்று ஒரு யோசனையை சொன்னார்.
ஐந்து பேரையும் வரவழைத்து” சமையல் சுவையாக இருக்க என்ன செய்ய வேண்டும் ?”என்று கேட்டாள்.
“அம்மா ரெடி மிக்ஸில் சமைத்து அதை அழ அழகாக டெகரேஷன் செய்தால் கண்ணை கவரும் ருசி கிடைக்கும் …”என்று ஒவ்வொரு மாதிரியாக நான்கு இளம்பெண்களும் சொன்னார்கள்.
வயதான பெண்மணி மட்டும், “அம்மா ரெடி மிக்ஸில் சமைத்து அதை அம்மாவின் அக்கறையோடு பரிமாறும் போது சுவையோ சுவை …”என்றாள்.
என்னதான் சுவையாக சமைத்திருந்தாலும் அதை அன்போடு பரிமாறினால்தான் சாப்பிட முடியும் என்று சொன்ன வயதான பெண்மணிக்கே பரிசு கிடைத்தது.
– 5 June 2013
![]() |
உஷா அன்பரசு, வேலூர். கல்வி- M.A தமிழ். இத்தளத்தில் வெளியாகியுள்ள என் சிறுகதைகள் பெரும்பாலானவை பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. என் கதை, கவிதை, கட்டுரை என என் படைப்புகள் வெளிவந்த பத்திரிக்கைகள் தினமலர்-பெண்கள் மலர், வாரமலர், பாக்யா, தேவதை, காலைக்கதிர், ராணி, கல்கி, தங்கமங்கை. மேலும் http://tamilmayil.blogspot.com என்ற என் வலைப்பக்கத்தில் என் படைப்புகள் அனைத்தையும் வாசிக்கலாம். மின்னஞ்சல்: uavaikarai@gmail.com - உஷா அன்பரசு, வேலூர்.மேலும் படிக்க... |