கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2024
பார்வையிட்டோர்: 1,382 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு தன் பாதிக்கடமையைச் செய்திருந்தும், பயில்வானுக்கு இன்னும் தூக்கம் பிடிக்கவில்லை. அவன் அன்று பகலில், இரண்டு கடைகளுக்குத் தண்ணீர் இழுத்திருந்தான். ஒரு கடைக்கு விறகு பிளந்திருந்தான். உடலில் தொய்வு உயிரோடிருந்தும் விழிப்பு மரணிக்க மறுக்கிறது. அவனுக்குள் விரவித் திரியும் சிந்தனைத் தர்மம், விழிப்பின் தலை காத்திருக்கிறது. 

‘…செதம்பரம் ஐயாக்கிட்ட அதச் சொல்றதா, வாணாமா?…’

ஒருக்களித்துக் கிடந்த பயில்வான், குப்புறப் படுத்துக் கொண்டான். 


அந்தச் சிற்றூர் அம்பலத்தின் ஏகச் சக்கரவர்த்தி பயில்வான்தான். இருந்துநின்று வழியிருண்டால் ஒதுங்கும் ஓரிரு பிட்சா பாத்திரங்களைத் தவிர்த்தால், அந்த அம்பலம் அவனுக்கேதான் சொந்தமாகிறது. கடந்த முப்பது வருஷ வரலாறு இது. அந்த அம்பலத்துக்குப் பெயரே ‘பயில்வான் அம்பலம்!’ புண்ணியம் தேடிக் கட்டிப் போட்ட யாரோ ஒரு பாவாத்மாவின் பெயர்கூட அடிபட்டுவிட்டது! 

பத்தடிக்குப் பன்னிரண்டு அடி; அரைச் சுவர்கள்; ஏழு தூண்கள்; ஒரு நுழைவு; நாட்டு ஓடு. கோணித் துண்டுகள் மூண்டு தொங்கும் நான்குக்கு நான்கடி வட மூலை, அவனது அந்தரங்க அறை! அந்த ஊர் நாய்கூட அதற்குள் புகாத தனிமை. உயரத்தில், குறுக்கு வாட்டில் இழுக்கப்பட்ட ஒரு கம்பிக் கயிறு. மங்கிப் போன வெள்ளைத் துணிகள் இரண்டொன்று எப்போதுமே அதில் தொங்கிக் கிடக்கும். கீழே ஒரு ட்ரங்குப் பெட்டி. உலகின் முதலாவது சரக்காகக்கூட அது இருக்கலாம்! சில பழந் துணிகளைத் தவிர அதற்குள் வேறு சமாச்சாரம் எதுவுமில்லை. அவன் தூங்காத நேரத்தில், மொத்தமான தலையணை ஒன்றை மையமாக்கிய அவனுயரச் சாக்குத் துண்டொன்று, அந்த ட்ரங்குப் பெட்டியின் மீது இருக்கும். 

பயில்வான் படுப்பது, ‘வெளிக் கூட’த்தில்தான். பூபாளத்தில் எழும் அவன், தன் சாக்குப் படுக்கையை வைப்பதற்காக ஒரு முறையும், இரவு நித்திரைக்காக அப்படுக்கையை எடுக்க இன்னொரு முறையுமாக மொத்தம் ஒரு நாளைக்கு இரண்டே முறைகள்தாம் அந்த அறைக்குள் செல்வான். ட்ரங்குப் பெட்டியை அவன் ஆடிக்கும் அமாவாசைக்குமாகத் திறப்பதால், அது கணக்கில் விழாமல் தப்பி விடுகிறது. பகற் காலங்களில் அவன் படுத்தறியாதவன். இரவு ஒன்பதுக்கோ பத்துக்கோ நீட்டி நிமிர்ந்தானானால், பூபாளம் வரையில் அவன் உசும்புவதே இல்லை. 


அன்றைய இரவு அவனுக்கு மாயமாக 

மாயமாக இருந்தது. எவ்வளவுதான் வசதியாகப் படுத்துப் பார்த்தும் நித்திரை அணையவில்லை. 

‘….செதம்பரம் ஐயாக்கிட்ட அதச் சொல்றதா, வாணாமா?…’ 

மங்கிய தேய் பிறையின் ஒளி, அம்பலத்தினுள் குளிர்ந்திருந்தது. நான்கைந்து நாய்கள் அம்பலத்தைச் சுற்றி ஓடின. நாக்குகளைத் திறந்து நீட்டிக் களைப்பாய் அவை விட்ட ஓசைகள் விரகமாக ஒலித்தன. அம்பலத்தின் முன்னால் நீண்டு கிடந்த தார்ச்சாலை, மஞ்சள் கலந்த வெள்ளைக் கீறலாகத் தெரிந்தது. இருண்ட தாவரங்களின் மிகச் சிறு பகுதிகள் பிறையோடு பேசின. 

பயில்வான் மல்லாந்தான். 

‘….ம்?…சொல்றதா, வாணாமா?….’ 

கடந்த காலம் செய்திருந்த சிக்கலை அவனால் விடுவிக்க முடியவில்லை. ஒரு காரின் சன்னமான ஓசை குபீரெனப் பெரிதாகிக் காற்றாகிப் போனது. தூக்கம் வர வேண்டிய இடத்தில் எரிச்சல்தான் வந்திருந்தது. 

‘…என்னடா சனியன் இது!…’ என்று அலுப்போடு முனகினான். எழுந்து, ஒரு காலை நீட்டி மடக்கி மறு காலைக் குத்திட்டு உட்கார்ந்து கொண்டான். 

பக்கத்தில் கிடந்த துண்டுச் சுருட்டை விரலால் தேடி எடுத்து வாயில் வைத்தான். இடக் கையைப் பின் புறமாகத் தரையில் ஊன்றி வலக் கையை முழங்கால் மீது வைத்து நீட்டியவாறே கொஞ்ச நேரம் வெளிப்புறம் பார்த்தான். பிறகு, சம்மணம் போட்டதற்குக் கிட்டத்தட்டவாக நிலை மாற்றினான். தீப்பெட்டியையும் தடவி எடுத்து ஒரு குச்சியைக் கிழித்தான். அந்தக் குச்சி அணையும் வரையில் அதையே பார்த்திருந்தவன், அதை எறிந்தான். பிறகு இன்னொரு குச்சியைக் கிழித்துச் சுருட்டில் மூட்டினான். 

சுருட்டின் அவியல் நாற்றம் அம்பலத்துக்கு வெளியிலும் பரவத் தொடங்கியது. 


அவனுடைய பெயர் என்னதான் என்று எவருக்குமே தெரியாது. அவன் எந்த ஊர்க்காரன், எந்த மதத்தை, இனத்தை, மொழியைச் சார்ந்தவன் என்றும் எவருக்குமே தெரியாது. அவனுக்கே அவனுடையவை மறந்தும் போயிருக்கலாம். அவனைப் பற்றிய எதையுமே தெரிந்துகொள்ளக் கிராம சேவகருக்கே உத்தரவில்லை போலும்! அவனுட்படச் சகலருக்குமே அவன் பயில்வான்தான். 

அவனைப் பற்றிய ஊகங்கள் பலப் பல. 

அங்கொடையில் இருந்து வந்திருப்பான்; ஏதாவது பெண்ணில் தோல்வி; இந்தியாவிலிருந்து சரளமாக வந்துவிட்ட பரதேசி; யாருமில்லாத லூஸ்…

பயில்வான் ஒரு மர்மம். அறிய எவருக்குமே அக்கறை ஏற்படாத மர்மம். யாரும் எதையாவது வினவினால்தான் பேசுவான். அந்தப் பேச்சும் ஒரு மறுமொழியாக இராமல், ஒரு தத்துவ விசாரமாகவே இருக்கும். அந்தத் தத்துவமும் கேட்போரைச் சிந்திக்கத் தூண்டாமல் சிரிக்கவே வைக்கும். அவனது சிரிப்புப் பற்ற வைக்கும். அந்தப் பைத்தியப் பேச்சைக் கேட்பதற்காகவே பலர் அவனோடு கதைப்பதுண்டு. 

“எப்டீ பயில்வான்?” என்பார் வட்டி பாய். 

“எப்புடீன்னா? …… எப்புடீன்னா அப்புடீன்னுதாஞ் சொல்லணும்!” என்று இழுப்பான் பயில்வான். தொடர்ந்தும் பாய் கிண்டுவார். இவனும் நழுவியே பேசுவான். இவனுடைய குரல், தனக்குத் தானே பேசிக்கொள்ளும் ஓசையை, ஓரளவு பெரிதாக வைத்தது போலவே இருக்கும். என்றாலும் அடி வயிற்றிலிருந்து எழும் அதிர்வு அதில் நிறைந்திருக்கும். 

“நீ ஒரு கல்யாணம் கட்டுனா என்னா?” என்பார் முத்தையா முதலாளி.

“கட்டலாந்தான்!….” என்றவாறே தன் கால் பெரு விரலைப் பார்த்துச் சிறிது யோசிப்பான். பிறகு “கட்டுன பொறகு அவளப் பாக்கிறது யாரு?…அதுவும் போக ஒலகத்தில எங்க ஐயா பொம்பள இருக்கிறா?” என்பான். 

“நீ எங்கப்பா பொறந்தது?” என்று சீண்டுவார் கட்டை :பாஸ். “எங்க பொறக்கிறது!…. எல்லாம் இந்த மண்ணுலதான்!… ஆண்டவன் என்னய மண்ணுல படச்சி மண்ணுலதான் உட்டான்!… ஆகாசத்தில பொறக்க முடியுமா?” என்பான். 

அவனுடைய ஆழம் எதுவென்று அறிய முற்பட்டவர் யாருமில்லை. அவனுக்கு ஆழம் என்றொன்றே இல்லை என்று ஒரு வேளை எல்லாருமே தீர்மானித்திருக்கலாமோ!… 

ஐம்பதைத் தாராளமாகக் கடந்தவன். தேக்கு நிறம். இருபத்தைந்து விகிதத் தலை நரை. பொலிஸ் கட். ஒட்டக் கத்தரிக்கப்பட்ட அகலமான மீசை. ஐந்தடி உயரம். இரண்டோர் அரை நூற்றாண்டுக் கோடுகளைத் தவிர அவனுடைய உடல் பாறை போல் இருக்கும். அந்தக் கால றாத்தலில் நூற்றைம்பது இருப்பான். முப்பது வருஷங்களுக்கு முன் எப்படி இருந்திருக்க வேண்டும்? அதனால்தான் இவன் பயில்வான் ஆகியிருக்கவும் வேண்டும்! 

உண்மையில் அவன் பயில்வான் தான். இரண்டு யார் விறகுக் கட்டைகளிடம் அவனை ஏவினால் ஓரிரு மணித்தியாலங்களுக்குள் பிளந்து தள்ளிவிட்டு வந்து நிற்பான். அதே கையோடு அடுத்த வேலைக்குப் போயும் விடுவான். 

எந்த விதமான சண்டை சச்சரவுக்கும் இவன் போனதாகச் சரித்திரமே இல்லை. எல்லாருக்குமே சந்தோஷத்தை வழங்கி வந்த ஓர் அப்செட் துயரம். 

நிறம் கெட்டுப் போன வெள்ளைச் சாரத்தைத்தான் மடித்துக் கட்டியிருப்பான். அதே நிறத்தில் ஒரு துண்டுத் துணி தோளில் கிடக்கத் திரிவான். வேலை செய்யும் போது அந்தத் துண்டுத் துணி, தலையை இறுக்கிக் கிடக்கும். திடீரென்று ஒரு நாளைக்கு, நிறம் மங்கிய வெள்ளைத் துணியிலான கை வைத்த பெனியன் ஒன்றைப் போட்டு வருவான். அன்று அவன் வேலை செய்ய மாட்டான் என்று அர்த்தம். வேறு எவ்வகையான உடையும் அவன் வசத்தில் இல்லை. 


பயில்வானின் துண்டுச் சுருட்டு இன்னும் சிலேட்டுமம் இழுத்துக் கொண்டிருந்தது. அதே சம்மண விரக்தியில் அவன் ஜீரணமின்றி இருந்தான். 

‘…செதம்பரம் ஐயாக்கிட்ட அதச் சொல்றதா, வாணாமா?…’

அவனைக் குழப்பிக் கொண்டிருந்த அந்த வினாவின் அடுத்த பக்கம் என்னவென்றே அவனுக்குப் பிடிபடவில்லை. 

அம்பலத்தை அடுத்திருந்த அமீன் வீட்டுக்குள்ளிருந்து அமீனின் தாயார் இருமுவது கேட்டது. 

“…இருமலுக்கு மருந்து எடுக்கணும்!…. பணத்த இறுக்கிப் புடிச்சிக்கிட்டு சும்மா லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டே இருந்தா இரும சொகமாகுமா?”.. என்றும் முணுமுணுத்துக் கொண்டான். 

பத்திருபது கடைகளும் முப்பது நாற்பது வீடுகளும் மையப்பட்ட சிற்றூர் அது. முப்பது வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் அவன் அங்கு வந்தான். எங்கிருந்து வந்தானோ தெரியாது. கட்டுமஸ்த்தான கருங்காலி முண்டம். வானத்திலிருந்தும் அவன் விழுந்திருக்கலாம்! 

அவனை அறிந்து கொள்ளும் ஆரம்ப அத்தியாயங்களில், அக்காலத்து வாலிபர்களுள் சிலர் இருந்தது உண்மைதான். ஆனால் விடைதான் கிடைக்கவில்லை. “நீ எந்த ஊரப்பா?” என்றால், “ஊரப் பாத்துத்தான் வேல குடுப்பீங்களா?” என்பான். “யாரோ பாவம்!” என்ற ஆதங்கத் தோல்வியிலேயே அவனும் ஊர்க்காரன் ஆகிப் போனான்! அந்த வாலிபர்களுள் பலர் இன்று முதலாளிகள்; அவனோ அவர்களின் அதே ஊழியன் பயில்வான். 

அம்பலம் அடைக்கலம் கொடுத்தது; கடை கண்ணிகள் வேலை கொடுத்தன. விறகு சுமப்பான்; பிளப்பான்; தண்ணீர் சேகரிப்பான்; வாழைத் தார், காய்கறிக் கோணிகள், மூடைகள் தூக்குவான்; தோட்டத்துச் சம்பள வாசல்களுக்கு மிட்டாய்ப் பெட்டியோ மணிப் பெட்டியோ பொட்டணியோ தூக்குவான். 

அவன் இல்லாமல் அந்த ஊரே இல்லை என்ற நிலை காலப் போக்கில் ஏற்பட்டுவிட்டது. விடிந்துவிட்டால் எல்லோருமே பயில்வான் நாமாவளியில்தான் கிடப்பார்கள்! 

“இந்த பயில்வான் இல்லாத காலத்திலதான் இந்த ஊரே நாறப் போகுது!” என்று இவனே முறைப்பாடு கூறும் காலமும் ஏற்பட்டிருந்தது! 

மடித்த சாரக் கட்டும் தோளில் துண்டுமாகக் காலை ஏழு மணிக்கே அம்பலத்திலிருந்து கிளம்பிவிடுவான். எதிர்ப்படும் முதலாவது ஆசாரிக் கடையில் ஒரு சுருட்டை வாங்கிப் புகைத்துக் கொண்டே தெருவில் நடந்து வருவான். 

அவனது சேவை தேவைப்படுபவர், “பயில்வான்!….. இங்க வாப்பா!” என்று குரல் கொடுப்பார். இவன் போய் அவர் முன் மௌன மலையாக நிற்பான். 

“பெரல்ல தண்ணிய நெரப்பு!” – “அந்த வெறகப் பொளந்து போடு!”- “நாட்டுக்குப் போயீஇ, கோறாள மாத்தியா துண்டுலஅ, மூணு வாழத்தாரு இருக்கு; கொண்டுகிட்டு வா!”…

இப்படி ஏதாவது ஒன்றிருக்கும். 

தான் வேலை செய்யப் போகும் இடம் ஒரு வீடானால், பக்கத்திலுள்ள தேனீர்க் கடைக்குப் போவான். அது தேனீர்க் கடைதானானால், அங்கேயே ஒரு மேசையின் முன் அமர்ந்து கொள்வான். 

‘கா றாத்த பானும் ஒரு பருப்பும் தாங்க!” என்பான். சாப்பிட்ட பிறகு, “பிளேன் டீ,” கேட்பான். 

அதன் பின் தனக்கு ஏவப்பட்ட வேலையில் மூழ்கிவிடுவான். வேலை கிடைத்த பிறகுதான் அவன் தன் காலைச் சாப்பாட்டைப் பற்றியே நினைப்பது. வேலையும் எங்காவது ஓரிடத்தில் அவனுக்காகக் காத்துக் கொண்டுதான் இருக்கும். ஓய்வு நாளில் சேமிப்பில் இருந்துதான் செலவு. 

பயில்வானுக்கு அந்த ஊரில் கிராக்கி அதிகம். மாரி என்ற பேரில் ஒரு மழையில்லா மேகமும் அந்த ஊரில் இருந்தான். இடி, மின்னல்களாக அவன் வசனம் பேசினாலும் வியர்வையே வழியாத பேர்வழி. அதனால் அவன் ஆலை இல்லா ஊருக்கு இலுப்பையாக இருந்தானே தவிரப் பயில்வான்தான் சர்க்கரை! 

இந்தக் காரணத்தால், அதி முக்கியமாகப் பயில்வானைத் தேவைப் படுபவர்கள், முதல் நாளே அவனிடம் ஒப்பந்தம் செய்து கொள்வதுமுண்டு. ஒப்பந்தக் காலங்களிலும் அவன் ஏழு, ஏழே காலுக்கு ஆஜராகிவிடுவான். ஒப்பந்த வேலை முடியும் வரையில் வேறு எந்த விதமான வேலைக்கும் போகவே மாட்டான். என்னதான் திசைக் கரணம் போட்டாலும், “அந்த வேலய முடிச்சிட்டுத்தான்!” என்று நடந்து கொண்டே பேசிவிடுவான்! 

நேர்மையில் அவனோடு போட்டியிட அந்த ஊரில் யாருமே இல்லை என்பதுதான் உண்மை. அவனுக்கு எதிர்ப்பதம்தான் மாரி! 

பருப்புக் கறியுடன் கால் றாத்தல் பானைச் சாப்பிட்டு, ஒரு பிளேன் டீயையும் காலையில் குடித்தானானால், :டெஸர்ட்டைப் போல் ஒரு சுருட்டும் அவன் வாயில் ஒட்டிக் கொள்ளும். பத்துப் பதினொரு மணிக்கும் இதே டைட்தான்! மத்தியானத்துக்கு, அரை றாத்தல் பானும் பருப்பும் பிளேன் டீயும் சுருட்டும்! நான்கு – ஐந்து மணிக்கும் அதே கால் றாத்தல் விஷயம். இரவு எட்டு மணிக்குப் போல் அரை றாத்தல் பாண், பருப்பு, பிளேன் டீ, சுருட்டு! இருந்துநின்று ஒரு வடையையோ சீனி பனிஸையோ கொரித்துப் பார்த்து விட்டு முகத்தைச் சுளிப்பான். சோற்றுச் சங்கதியே அவனிடம் இல்லை! 

முத்தையா முதலாளியின் கடைதான் ஊரிலேயே பெரிய கடை. பல சரக்கு, புடைவை, பாத்திர ஜாலங்கள், ஸ்ட்டேஷனரி, நகை அடகு, தேனீர், :பேக்கரி என்ற சுப்பர் மார்க்கட் அது! அங்கேதான் பயில்வானுக்கு அதிகமான வியர்வையும் வழியும். சில நேரங்களில் இலவசச் சோற்றை முதலாளி நீட்டிப் பார்ப்பார்; இவன் தின்ன மாட்டான்! “கவிச்சி திங்கிறது பாவம்!’ என்பான். 

“எந்த நேரம் பார்த்தாலும் ஒரே பானையும் பருப்பையும் திங்கிறியே அப்பா, வேற எதாச்சும் திங்கக்கூடாதா?” என்று அதிசயப்படுவார் முத்தையா முதலாளி. 

“நாள் முழுக்க வெறகு பொளந்தாலும் ஒன்னார் ரூவாதாங் குடுப்பீங்க! இந்த ஃபஸார்ல எல்லாருமே அப்படித்தான் குடுக்குறாங்க! இதில் பானத் தவுர வேற என்னாத்த திங்க முடியும்? ஒலகத்துல பானத் தவுரவும் வேற நல்ல தீனி ஏதாச்சும் இருக்குதா?” என்பான். முத்தையா முதலாளி உட்பட எல்லோருமே சிரித்துவிடுவார்கள். 


எச்சில் சொத சொதத்த சுருட்டுக் கிள்ளலை அம்பலத்துக்கு வெளியே எறிந்தான் அவன். 

“…அதுதாஞ் சரி!……” என்று முணுமுணுத்துத் தலையைத் தீர்மானமாக ஆட்டினான். “செதம்பரம் ஐயாக்கிட்ட சொல்றதுதாஞ் சரி! நேர்மையான மனுசன். ஏமாந்துறக் கூடாது! ஆனா…. அவரு ஏத்துக்கிடுவாரா? பைத்தியம் ஒளறுதுன்னு மத்தவுங்க மாதிரி சிரிச்சிக்கிட்டே உட்டுப் புடுவாரா?….” 


களைப்பை வெளிக்காட்டாத இயந்திர உழைப்பாளி பயில்வான். எவ்வளவு குறைத்துக் கொடுத்தாலும் மறு பேச்சில்லாமல் பெற்றுக் கொள்ளும் அஹிம்சாவாதி. தானுண்டு தன் பானுண்டு என்று காலத்தோடு கரையும் சந்நியாசி. சண்டை, சரவுகள் இல்லாத, ஒரு சுருட்டின் கடன்கூட இல்லாத அவன் ஒரு பைத்தியக்காரன்தான்! 

அவனிடம் பொடுபோக்கான பேச்சு இருந்ததாக எவராவது நிரூபிக்கட்டுமே! வாயிலிருந்து வரும் எந்த ஓசையும் சீரியஸாகத்தான் இருக்கும். அவனுடைய சீரியஸான பேச்சோ, எல்லாருக்குமே ஓய்வு நேரத் தமாஷாகத்தான் இருந்தது. உலகில் அவனுக்கு மன வேதனையைத் தந்த ஒரே விஷயமும் இதுதான். 

முத்தையா முதலாளி ஊரில் பெரிய மனிதர். பக்திமான். பிள்ளையார் கோவில் சிலை பேசுமானால் அவரது கொடைத் தன்மைகளைப் பற்றி விமர்சனமே செய்யும்! ஏகபத்தினி விரதர்! 

வாசற் கூட்டி மாக்கானின் மனைவி பரத்தை அழகி. :பேக்கரியில் அப்போதுதான் போட்டெடுத்த ஐஸிங் கேக் மாதிரி இருப்பாள். 

குளிக்கப்போகும் பீலிக்காட்டில், ஒரு மாலை அசதியில், இந்தப் பெரிய மனிதரும் அந்தப் பரத்தை அழகியும் பிணையற் பாம்புகளாகக் கிடந்ததை, வயிறு கழிக்கச் சென்ற பயில்வான் கண்டது சத்தியம். 

குளித்துவிட்டுத் திரும்பிய பயில்வான், நேராக முத்தையா முதலாளியின் கடைக்கு வந்தான் ஒரு பிளேன் டீக்காக. 

“மொதலாளி எங்க அம்மா?” என்றான் முதலாளியின் மனைவியிடம். 

“சாமானங் கொண்டாற டவுனுக்குப் போயிருக்காரு; ஏன்?” என்றாள் அவள். 

பயில்வான் அபூர்வமாகச் சிரித்தான். “அவரு….. சாமானம் வாங்கப் போகல்ல! லெச்சிமிப் புள்ளயோட பீலிக் காட்ல இருக்றாரு!” என்றான். 

அவள் மூச்சுத் திணறச் சிரித்தாள். “சரிப்பா! நான் பாத்துக்கிடுகிறேன்!’ என்று சொல்லி விட்டு மறுபடியும் மறுபடியும் சிரித்தாள். 

இன்னும் ஓர் ஒன்றரை மணித்தியாலத்தில், முத்தையா முதலாளி, அடுத்த டவுன் வேனில் சாமான்கள் சகிதம் வந்திறங்கினார். 

அவசரங்களுக்கு அவசியம் கொடுக்கப்பட்ட பிறகு, “ஏன்பா, லெச்சிமியோட நீங்க இனிமேப்பட்டுப் பீலிக்காட்ல இருக்காதீங்க! பயில்வான் ஆத்திரப் படுறான்!” என்று அவள் இன்னொரு வாட்டியும் சிரிக்கத் தொடங்கினாள். 

ஒரு சாட்டையின் நிழலைக் கடந்த முத்தையா முதலாளியின் முகம், குபீரெனச் சிரிப்புக்குள் புகுந்தது. 

“பயில்வான் ஆத்திரப்படுறாரா!…. சரி சரி! இனிமேப்பட்டு அப்பிடியெல்லாம் இருக்க மாட்டேன்!” 

தான் ஒரு சேரிப் பொருளாக அங்கே நிற்பதை விரும்பாத பயில்வான், ‘சீ!…. என்னா ஒலகம்!’ என்று உள்ளே புகைந்து, பிளேன் டீக்குரிய ஆறு சதத்தை மேசைக் கண்ணாடியின் மேல் வைத்துவிட்டுக் கீழே இறங்கினான். 

அந்த நிகழ்ச்சியை அத்துடன் மனத்துக்குள் எங்கோ புதைத்தும் விட்டான். மறுநாள் காலையில் அவருடைய கடையில் பானும் பருப்பும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, லெச்சுமி அங்கே உப்பு ரொட்டி வாங்க வந்தாள். 

“இந்தா, லெச்சுமி! இனிமே நீ என்னோட பீலிக் காட்டுக்கு வராத! … சரியா? … பயில்வான் ரொம்ப மனவருத்தம்படுறான் இல்லியா!….” என்று உரத்த குரலில் பேசிய முத்தையா முதலாளி, கண்ணீர் கிடுகிடுக்கச் சிரிக்கத் தொடங்கினார். 

“சரிங்க மொதலாளி!” என்ற பரத்தை அழகியும் நமுட்டுச் சிரிப்போடு போய்விட்டாள். 

முதலாளியின் இந்தப் படுக்கை விஷயத்தை ஊரே அறிந்துகொண்டது! அறிவித்தவர் அவரேதான்! ஊரே சிரித்தது பயில்வானைப் பார்த்து! 


‘…. நாஞ் சொல்றத செதம்பரம் ஐயா நம்புவாரா?…..’ 

அவனது குழப்பத்தின் புதிய வடிவம் அது. 

மறுபடியும் பயில்வான் மல்லாக்கப் படுத்துக் கொண்டான். இருள் தூங்கிய முகட்டுக் கூம்பைக் கொட்டிக் கொட்டிப் பார்த்தான்…


இந்த லெச்சுமி முத்தையா முதலாளியின் ‘யாவும் கற்பனைக் கதை’ சுமார் பதினைந்து வருஷங்களுக்கு முன் அரங்கேற்றப்பட்ட ஒன்று. அதன் ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு, முத்தையா முதலாளியின் ஏக பத்தினியாரது நாடகம் ஒன்றும் அரங்குக்கு வந்திருந்தது. 

முதலாளியின் வீடு, கடையிலிருந்து கால் மைலுக்கப்பால் இருந்தது. வீட்டின் பின்புற முற்றத்தில், விறகு பிளந்துகொண்டிருந்தான் பயில்வான். கொத்துவதற்காகக் கோடரியை ஓங்கியவனின் நினைவில், லெச்சுமிப் பிணைச்சல் திடீரென்று பளிச்சிட்டதோ என்னவோ! ஓங்கிய கோடரி அப்படியே நிற்க, அதனை அண்ணாந்து பார்த்த பயில்வான், இரண்டு மூன்று நிமிஷங்கள் வரை அப்படியே நின்றான். 

எட்டிப் பார்த்த முதலாளியின் மனைவி, அந்த உழைப்புச் சிலையைக் கண்டு ரசித்தாள். 

என்னா பயில்வான்? வெறகு வெட்றியா, காக்கா பறக்குறதப் பாக்கிறியா!..” என்றாள். 

“வெறகத்தான்… வெட்றேன்…” என்று அதே பார்வையோடு இழுத்த பயில்வான், “அதுக்குள்ளாற காக்கா பறக்குதே!…” என்று மளுக்கென்று கட்டையைப் பிளந்தான். 

“சிரிப்புத்தான் போ !.. சரிசரி, ஒரு சின்ன வேல இருக்கு. கொஞ்சம் உள்ளுக்கு வா!” என்றாள் அவசரமாக. 

கோடரியைக் கிடத்திவிட்டு உள்ளே போனான். 

“இங்க வா!” 

“சொல்லுங்க அம்மா!” 

“இப்புடி வா!” 

“என்னான்னு சொல்லுங்கம்மா!… வெறகப் பொளந்திட்டுப் பணிக்கர் கடைக்குத் தண்ணி இழுக்கவும் போகணும் !….” 

“சரிப்பா, போகலாம்; இங்க வா!….” 

”சீ!….. என்னாங்க இது!….” 

“சத்தம் போடாத! மக குளிச்சிட்டு வந்துர்ரதுக்குள்ள…” 

“நல்ல ஆளுங்கம்மா நீங்க!…” 

பயில்வான் கோடரியைத் தேடி வெளியேறினான். 

அடுத்த அரை மணித்தியாலத்துக்குள் விறகைப் பிளந்து தள்ளிவிட்டு, “நாங் கடைக்கிப் போறேன்மா!….” என்ற குரலோடு முண்டாசைத் தோளில் போட்டு நடந்தான். 

அரை றாத்தல் பானும் பருப்பும் பிளேன் டீயும் முடிய பயில்வான் எழுந்தான். கடையில் அவ்வளவாக ஜனமில்லை. முதலாளியின் மனைவியும் அங்கே வந்து விட்டாள். 

“பயில்வான் வெறகெல்லாத்தையும் வெட்டீட்டான்,” என்றாள். 

“சரி இந்தா,” என்ற முதலாளியின் கையில், சாப்பாட்டுக் கணக்கு முப்பது சதம் போக இருபது சதம் இருந்தது. 

“ஒங்க ஊட்டு அம்மா என்னயக் கட்டிப் புடிக்கப் பாத்தாங்க!” என்று முதலாளியிடம் முறையிட்டான் சில்லறையைப் பெற்றுக்கொண்டே. 

ஒரு கனம் அதே சாட்டையின் நிழல் குறுக்கிட்ட அவரது முகம், அடுத்த கணம் வெடிச் சிரிப்பில் துடித்தது. அவளும் கெக்கலி கொட்டி ஆணைப் போல் சிரித்தாள். அப்போது அங்கே வந்த ஹெட்மாஸ்டர் தியோகுப் பிள்ளையிடமும், “சங்கதி தெரியுமா மாஸ்ட்டர்!… நம்ம பொம்பள இன்னக்கி பயில்வானக் கட்டிப் புடிக்கப் பாத்ததாம்!…” என்று அட்டகாசமாகக் கூறிக் குலுங்கிக் குலுங்கி நகைத்தார் முத்தையா முதலாளி. 

“எட!..பயில்வான் பெரிய ஆள்தான், என்ன!” என்று டீ ஓடர் செய்தார் மாஸ்ட்டர். 

பயில்வானைப்பற்றி அதன் பிறகு ஓர் உற்சாகமான கதை கிளம்பியது:- அவனுக்கு மதன புத்தி! 

பாதையில் எந்தப் பெண் போனாலும், “பயில்வான்!… நீ அந்தப் பொம்பளய முடிச்சா என்னா?” என்றோ, “அந்தப் பொம்பள ஒன்னயத்தான் தேடுறா!” என்றோ வெடிச் சிரிப்புகள் கிளம்பும். 


பயில்வான் மீண்டும் ஒருக்களித்தான். ‘செதம்பரம் ஐயா நல்ல மனுசன்… நாஞ் சொன்னா கேட்டுக்கிடுவாரு!… சொல்லி என்னா புண்ணியம்?…நமக்கு ஏதாவது கெடைக்கப் போகுதா?… சீச்சீ!… நமக்கு ஏதாச்சும் கெடைக்கணும்னுதானா வாழுறது?… சொல்றது நம்ம கடம! இல்லேன்னா அந்தப் புள்ள ஒரு நாளைக்கி அந்த மனுசனோட கழுத்த திருகிப் போட்டாலும் போட்டுறும்!….’ 

அமீன் வீட்டுச் சேவல் கூவியது. 

“அட!… ரெண்டு மணி ஆகுதோ!…” என்று முணுமுணுத்தவன் ஒரு பெருமூச்சு விட்டான். சுருக்கென்று நெஞ்சுக்குள் எதுவோ தைத்த உணர்வு ஏற்பட்டது. ‘சொல்றது நல்லதுதான். எப்புடிச் சொல்றது? பைத்தியம்னு சிரிப்பாரா?… கோவம் வந்து பொம்பளய டாராக் கிழிச்சிப்புடுவாரா? இல்லாட்டிக் கோவிச்சிக்கிட்டு எங்கயாவது போய்டுவாரா?….’ என்ற அனுங்கல்களுடன் நெஞ்சைத் தடவிவிட்டுக் குப்புறப் படுத்தான். 


முத்தையா முதலாளிக்கு மூன்று மகள்மார். மூத்தவளை நான்கு வருஷங்களுக்கு முன்பு சிதம்பரம் முடித்தான். 

சிதம்பரம் படித்தவன்; நேர்மை மிக்கவன்; பண்பாளன். பயில்வானுக்கு அவனிடம் விசேஷ மரியாதை இருந்தது. பயில்வான் மனப்பூர்வமாக அன்பு வைத்திருந்த ஊரார் சிலருள் சிதம்பரம் முதலாமவன் எனலாம். 

கல்யாணம் முடிந்த ஓராவது வருஷத்தில் வெளிநாட்டுக்கு உழைக்கப் போன சிதம்பரம், அன்று மாலையில்தான் வீடு திரும்பியிருந்தான். 

இரவு எட்டு மணியளவில் பணிக்கர் கடையில் இருந்தபோது, சிதம்பரம் எக்கச் சக்கமான சாமான் பொதிகளுடன் வந்திருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். அதைக் கேள்விப்பட்ட கணத்திலிருந்தே பயில்வான் குழம்பத் தொடங்கிவிட்டான். வழக்கமான பானையும் பருப்பையும் பிளேன் டீயையும் விழுங்கிவிட்டு, ஆசாரியார் கடையில் சில சுருட்டுக்களையும் வாங்கிக் கொண்டு வந்து விழுந்தவன்தான். 

சாராயக் கடை மலையாளத்தாருக்கும் சிதம்பரம் மனைவிக்கும் தொடர்பிருந்தமையை ஊர் அறியாது. வீட்டுக்குள்ளேயே கருவைக் கலைத்து மறைத்துவிட்டார்கள். தாய்க்கும் மகளுக்கும் ஒரு நாள் வீட்டுக்குள் நடந்த தர்க்கங்களை அகஸ்மாத்தாகக் காதில் போட்டுக் கொண்டவன் பயில்வான். அதை அவன் சொல்லக் கூடிய யாரும் அங்கே இல்லை. சிதம்பரத்தைப்பற்றி மன ஆழத்தில் மிகவும் பச்சாத்தாபப்பட்டான். சில நாட்களுக்குள் அதை மறந்தது போல் ஆகியும் விட்டான். 

இன்று அந்தக் குழப்பம் மீண்டும் தலையெடுத்து விட்டது. 


மூன்று மணிச் சேவலும் கூவி விட்டது. பயில்வானுக்கு இன்னும் நித்திரை வரவில்லை. நெஞ்சில் வலி கூடிக்கொண்டே இருந்தது. அடிக்கடி அவனுக்கு அப்படி வலி வரும். நன்றாகத் தூங்கி எழுந்தானானால் எல்லாம் சரியாகிவிடும். இப்போது மூச்சு விடவும் கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்தது. நெஞ்சைத் தடவிக் கொண்டே புரண்டு படுத்தான். சிதம்பரத்தின் உருவம் அந்த நெஞ்சுக்குள் தலைகீழாக உருண்டது. 


மறுநாள் காலையிலிருந்து அந்த ஊர் நாறும் காலம் வந்துவிட்டது! 

அம்பலத்தில் பயில்வான் செத்துக் கிடந்தான். 

ஊரார் அவனைப் புதைப்பதற்குரிய ஏற்பாட்டில் இருந்தார்கள். 

சிதம்பரம் வேதனைப்பட்டான். பயில்வானுக்கு அன்புளிப்பதற்காக அவன் வாங்கி வந்திருந்த வெள்ளைப்புடைவை, கோடித் துணியாக மாறி அவன் கரங்களுக்கிடையில் கிடந்தது. 

சிதம்பரம் தன் மனைவியிடம் உடைந்த குரலில் பேசினான். 

“…பாவம்!… பொய்யே பேசத் தெரியாத ஒரு நேர்மையாளி!…. என்னயக் காண முந்தியே போய்ச் சேந்திட்டான்!…” 

– வீரகேசரி

– வெள்ளை மரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, துரைவி பதிப்பகம், கொழும்பு.

அல் அஸுமத் அல்-அஸுமத், பொன்னையா (1942.11.22 - ) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இயற்பெயர் வேலாயுதம். இவரது தந்தை பொன்னையா; தாய் மரியாயி. 1960 - 1964 காலப்பகுதியில் எல்கடுவை அசோகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர் தெகிவளை தொழிநுட்பக் கல்லூரியின் வணிகப் பிரிவில் முகாமையாளராக 1978 வரை பணியாற்றினார். இவரின் பூவின் காதல் என்ற முதல் சிறுகதையும், முதல் கவிதையும் வீரகேசரியில் வெளிவந்தன. மாத்தளையான், விருச்சிகன், சாத்தன், அபூமுனாஃப், புல்வெட்டித்துறைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *