பனி பெய்யும் இரவுகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 3,134 
 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-19

அத்தியாயம் – 16

அவன் வீடு போய்ச் சேர இரவு எட்டு மணியாகி விட்டது. இன்று அவளின் முடிவை அவன் தன் மனேஜசருக்குச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. ராமநாதன் சொல்லிய விடயம் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. 

ராமநாதன் சொல்கிற விடயம் நடப்பதாயிருந்தால் அவன் உடனடியாக எடின்பரோ போக முடியாது! 

ராதிகா குளித்துக் கொண்டிருந்தாள், இவன் வரும்போது சாப்பாடு வாங்கி வந்திருந்தான். 

அவளுக்குச் சிக்கன் ரீகாவும் சிக்கன் தண்டோரியும் பிடிக் கும். கொஞ்சம் சலட் செய்தான். மேசையில் சாப்பாடு தயார். 

சாப்பாட்டின் மணம் மூக்கிலடித்தது. 

அவன் ஒரு பியர்க்கானை எடுத்து உடைத்துக் கொண்டு டி.வி. முன்னால் உட்கார்ந்தான். 

ஏதேதோ நிகழ்ச்சி. மனம் ஓடவில்லை. 

“ம் என்ன அருமையான சாப்பாடு” அவள் சாப்பாடு போட்டுக் கொண்டு வந்து அவன் அருகில் உட்கார்ந்தாள். 

சாரதாவுக்கு எப்படி என்று கேட்க மாட்டாளா? 

“எப்படி வேலை” 

திடீரென்று கேட்டாள். ராதிகா அவன் டி.வி. பார்ப்பதை விட்டு அவளைப் பார்த்தான், 

“நீங்கள்தான் ஏதோ வேறு உலகத்தில் இருக்கிறீர்களே. மால்க்கமும் லிண்டாவும் சொன்னார்கள். லிண்டா மால்க்கத்தை எடின்பரோ போக விடமாட்டாள் என்று மால்க்சம் நினைத்துக் கொண்டிருந்தான்… என்ன மாற்றம். லிண்டா மால்க்கம் எடின்பரோ போவதற்குச் சம்மதித்து விட்டாள்” 

கோழியைக் கடித்துக் கொண்டு சொன்னாள் ராதிகா.

இவன் தன் சாப்பாட்டில் கையைத்தான் பதிக்கவில்லை. மனம் எங்கேயோ போய்க் கொண்டிருந்தது. 

“என்ன பேசாமல் இருக்கிறீர்கள்” தன்னுடைய கோழியை இவன் வாயில் திணித்தாள் ராதிகா.

இவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“நான் எடின்பரோ போகவில்லை.”

அவளைப் பார்க்காமல் சொன்னான் தியாகு.

”என்ன” அவள் குரலில் சந்தேகத் தொனி ஒலித்தது. 

“நான் இப்போது எடின்பரோ போகத் தயாராயில்லை”.

“ஏன் போக மாட்டீர்கள்” 

“ஏன் எடின்பரோவுக்குப் போக வேணும். லண்டனில் ஒரு வேலை பார்த்துக் கொண்டால் போகிறது”

“வேலையில்லாத் திண்டாட்டம் இவ்வளவு தூரம் ஊதிப் போயிருக்கிற நேரத்தில் பேசுகிற பேச்சா இது” அவள் அழுது விடுவாள் போல் இருந்தது. 

”கொஞ்ச நாள் வேலையில்லாமல் இருந்தால் என்ன குடி முழுகியா போகும்.” 

அவன் சாப்பாட்டுக் கோப்பையை மேசையில் வைத்தான். 

“தியாகு, எங்கள் கல்யாணத்தை என் படிப்பு முடிந்த கையோடு வைப்பதாக வீட்டில் காத்திருக்கிறார்கள். அது தெரியும் தானே உங்களுக்கு” 

“திட்டம் போட்டபடி உலகம் நடக்கிறதா”

அவள் மௌனமாக இருந்தாள். 

“இதெல்லாம் சாரதாவுக்காகச் செய்யும் தியாகமா” அவள் குரலில் கிண்டல்; அவமானம் செய்யும் கிண்டல்.

“ராதிகா நாங்கள் தேவையில்லாத விடயங்களைப் பற்றியா பேச வேணும். இன்னும் ஆறுமாதத்தில் நான் இன்னொரு வேலை எடுக்க மாட்டேனா?” 

“நீங்கள் என்னை எப்படி எல்லாம் வேதனைப் படுத்துகிறீர்கள் தெரியுமா? சோதனைக்கு இன்னும் ஆறுமாதம் தான் இருக்கிறது. அதற்கு முன் உங்களிடமிருந்து எனக்கு ஆறுதல் கிடைப்பதைவிட இப்படிக் கரைச்சல்தான் கிடைக்குது.” 

அவள் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். 

“நான் உனக்குச் சரியில்லாதவனாக இருக்கலாம்” தியாகு முணு முணுத்தான். 

“இந்த ஞானம் இந்த மோதிரத்தை என் விரலில் போட முதல் வந்திருக்க வேணுமே” அவள் எரிச்சலுடன் கத்தினாள். 

“இப்போதென்ன குடிமுழுகிப் போய்விட்டதா” அவன் எடுத்தெறிந்து பேசினான். 

“என்னோடு விளையாட வேணாம் தியாகு, நான் நீங்கள் சுண்டு விரலசைத்தால் சுருண்டு விடுகிற தமிழ்ப் பெண் இல்லை” 

“நான் இப்போது எடின்பரோவுக்குப் போக முடியாது.” இதற்கு மேல் என்னுடன் ஒரு பேச்சும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்வதுபோல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். 

அவள் ஓடி வந்தாள். அவனை உலுக்கிறாள். தலையைப் பிடித்து உலுக்குகிறாள். “தியாகு உங்கள் எதிர் காலத்தை நாசமாக்க வேண்டாம். பிளீஸ் கிடைக்கிற வேலையை விட வேண்டாம்.” 

“ராதிகா வீணாக என்னுடன் கோபிக்காதே” 

“நீங்கள் ஒரு வடிகட்டிய முட்டாள். வாழத் தெரியாத பேயன்” அவள் திட்டித் தொலைத்தாள். 

அவள் அழுவதற்கு, ஆந்திரப்படுவதற்கெல்லாம் நிறையக் காரணங்கள் உள்ளன. 

அவனுக்குக் கோபம்வரவில்லை. அவளை இந்த நிலையிற் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ஒன்றிரண்டு வருடங்களாக இவன் வாழ்க்கையோடு இணைந்திருக்கிறாள். இப்போது வெண்ணெய் திரண்டு வரும்போது தாளியுடையலாமா? 

அவளுக்குத் துணையாக இருக்க வேண்டியவன் துன்பம் கொடுக்கிறானே! 

அவளுக்கு இது கடைசி வருடம் 

அவள் முழு மூச்சாகப் படிக்க வேண்டும், அவளின் படிப்புக்கு அவன் ஒத்துழைப்புத் தேவை; அவன் என்னடா வென்றால் ”உனக்கு நான் சரியில்லை என்று நினைத்தால் விட்டுப் போயேன்” என்கிற மாதிரித்தானே சொல்கிறான். 

“நீங்கள் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறீர்கள்” அவள் குரலைத் தணித்துச் சொன்னாள். சண்டையைக் கூட்டாமல் சமாதானமாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்து விடவேண்டுமென்ற ஆவல் அவள் குரலில் ஒலித்தது. 

“நீண்ட நேரமாய் யோசித்துத்தான் முடிவு கட்டியிருக்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால் உன் பரீட்சை நெருங்கும்போது நான் உன் அருகில் இருப்பதையே விரும்புவாய் என்று நினைத்தேன்.” 

“வேலையில்லாத மனிதராய் என்னுடனிருந்து பிரச்சினையும் மனவேதனையும் தவிர வேலையுள்ள மனிதனாய் தூரத்திலிருப்பது நல்லதில்லையா” 

“உறவுகளே உத்தியோகத்தின் அடிப்படையிலா” இந்தக் கேள்வி அவளைக் குத்தியிருக்கவேண்டும். அவனை எரித்து விடுவதுபோற் பார்த்தாள். 

“எனது ஸ்ரேட்டஸைப் பார்ப்பதானால் நான் பாரதி போன்ற ஒரு டொக்டரைக் கட்டலாமே” 

அவனுக்கு இப்போது உண்மையாகக் கோபம் வந்தது.

இத்தனை நாளும் இவனோடு கலந்தவள், இன்பத்தையே பெரும்பாலும் இதுவரையும் அனுபவித்தவள் இவனுக்குத் துன்பம் வந்தபோது ஸ்ரேட்டஸ் பற்றிப் புலம்புகிறாளே.

“பாரதியின் விருப்பமென்றால் தாராளமாய்ப் போய்ப் படுத்துக் கொள்ளலாம்.” 

அவன் தனக்கும் கோபம் வரும் என்று காட்டிக் கொண்டான். 

“இதெல்லாம் அந்தத் தேவடியாள் சாரதாவால் வந்து. வினைதானே? அவள் லண்டனில் இருக்கிறாள். அவளைப் பிரிய மாட்டீர்களே.” 

அவளும் திட்டத் தொடங்கினாள், 

“வாயை அடக்கிப் பேசு ராதிகா, அவள் ஒரு ஏழை என்பதால் நீ எதையும் பேசலாம் இல்லையா? நீங்கள் எல்லாம் முற்போக்குப் பெண்களா? படுக்கையைப் பகிர்ந்து கொள்ள மட்டும் முற்போக்கு, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைக் கண்டால் பத்தினி வேஷம், உனக்கும் ஒன்றும் படிக்காத சாதாரண மனிசிக்கும் என்ன வித்தியாசம்?” 

“என்ன வித்தியாசமா? நான் மனத்தில் சாரதாவை நினைத்துக் கொண்டு உங்களோடு படுத்தெழும்பவில்லை. உங்களுடைய ரகசிய ஆசைகளை மானசீகக் காதல், ஆத்மீக உறவு மண்ணாங்கட்டி என்று மறைத்து வைத்து விளையாடவில்லை. உறவுகள் நேர்மையின் அடிப்படை யில் அமைய வேணும் நான் ஒன்றும் ஒளித்து மறைத்து பேசுவதில்லை, எது என் மனதில் படுகிறதோ அதையே பேசுவேன்.” 

அவள் படபடவென்று மேலே போனாள். விறுவிறு வென்று உறுப்புக்களை எடுத்து பெட்டியில் போட்டாள். இவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

உண்மையாகத்தான் என்னைவிட்டுப் போகப் போகிறாளா? 

“ராதிகா பிளீஸ், பொறுமையாக யோசிக்கப் பழகு.” 

‘யு ஆர் ஏ பஸ்ராட்” அவள் அழுகையினுடனே கத்தினாள்.

“நாங்க எல்லோருமே சில வேளைகளில் அப்படியில்லையா” அவன் தாழ்மையாகச் சொன்னான். கோபம் கிண்டலாக மாறியது. 

“போய்ச் சாரதாவுடன் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள். ராமநாதன் மாமா ஒரு பேயன்தானே. அவர் கடவுள் தலையில் போட்டுக் கொண்டு கஷாயம் வாங்கட்டும். நீயும் அவரும் நரகத்திற்குப் போங்கள்.” அவள் வெளியேறினாள். 

அவள் போனது மழையடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது பூகம்பத்திற்குப் பின் ஏற்படும் அமைதி. 

ராதிகா இவனை உண்மையாகவே விட்டுப் போய் விட்டாளா? 

பெற்றோர் தீர்மானித்த திருமணத்துக்கு இன்னும் ஆறேழு மாதங்கள் இருக்கின்றன. போன வருடம் கல்யாணம் நிச்சயமாகி மோதிரம் மாத்திக் கொண்டதே பெரிய வைபமாக இருந்தது. இவள் தன் படிப்பு முடியும் வரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டாள். 

இப்போது எந்த முகத்துடன் தன் பெற்றோரிடம் போய்ச் சொல்லப் போகிறாள்? 

என்ன சொல்வாள்? 

போன வருடம் சொன்னதுபோல் “இவர் என்னை விடத் தன் மச்சாளிடம்தான் பெரிய அன்பு” என்று விளையாட்டுத் தனமாகச் சொல்வது போலத்தன் பெற்றோர்களிடம் சொல்வாளா? 

தனிமையில் என்ன சொன்னாள். 

“நீங்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது”

துல்லியமான, ஆனால் துணிவான பேச்சு அவளுக்கு. அவள் அருகில் இருந்தால் இந்த வீடே கலகலக்கும். இந்த ஜன்னல் சீலை தென்றலில் ஆடும். நாற்காலிகள் கதை பேசும், மாடிப் படிகள் சுமைதாங்கிச் சிரிக்கும், கொட்டும் ஷவரில் அவள் குழந்தையெனக் குதூகலிப்பாள், இவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ஆயிரம் கதை சொல்வாள், அவள் இன்று போய்விட்டாள். 

அவனுக்குத் தெரியாமலே தன்னை இவனுக்கு அர்ப்பணித் தவள். “நான் சுதந்திரமான பெண், என்னை ஒருவரும் ஆட்டிப் படைக்க முடியாது. நான் எனது அக்கா பவானி மாதிரியில்லை. அவள் குக்கருக்கு மாலை போட்டுவிட்டுத் தன் படங்களுக்கு மஞ்சள் பூசி மணவாழ்க்கை நடத்துகிறாள். நான் படிப்பேன். பட்டம் பெறுவேன். எனக்கு விருப்பமான இடங்களுக்கெல்லாம் போவேன். கல்யாணம் என்று வந்தால் என் இஷ்டப்பட்ட மாதிரியே செய்வேன்.” 

ராதிகா தற்கால நவநாகரிகப் பெண்ணாகத் தன்னைப் பிரகடனப் படுத்தியிருந்தாலும் அவள் ஒரு இந்திய கவிதை, வாசிக்க வாசிக்க அலுக்காதவள். ஒவ்வொரு தடவை வாசிக்கும்போதும் ஒவ்வொரு புதிய கவிதை அவள்.

ராதிகா உண்மையிலேயே என்னிடம் இருந்து ஓடி விட்டாளா? 

எனக்குக் கோபம் வருவதற்காகப் பாரதியைப் பற்றிப் பேசினாயா, அல்லது பாரதியில் உனக்கு அன்பு வரத் தொடங்கிவிட்டதா? 

அது உன்னால் எப்படி முடியும்? உடம்பாலும் உள்ளத் தாலும் ஒன்றாகியபின் ஒருத்தரை ஒருத்தர் வெறும் வார்த்தைகளாற் பிரித்துக் கொண்டு போய்விட்டாயே? லண்டனில் இளவேனிற் காலத்தில் உன் இனிய சிரிப்பைக் காற்றில் கேட்டு தேம்ஸ் நதி தவழுமே. பார்க்குகளும் புற்தரையும் உன் பாதம் படாமல் பரிதவிக்க விடலாமா! கோபத்தில் என்னையே தூக்கியெறிந்து பேசிவிட்டாய், ஆனால் எப்படி ஒதுங்கிக் கொள்வாய். 

தியாகராஜன் சிலையாய் உட்கார்ந்திருந்தாலும் அவன் மனம் சுக்குநூறாக உடைந்து கொண்டிருந்தது. இந்தக் கதவு அவள் கைப்பட்டு அழகு பெற்றது. இந்த அறை அவள் வரவால் உயிர் பெற்றது அவன் அவள் மூச்சால் உணர்வு தெளிபவன். 

ராதிகா ஏன் உனக்கு இந்தப் பிடிவாதம்? சாரதாவின் தூய வாழ்க்கை உனக்குப் புரியாதம்மா; பெரியம்மா செல்வமலரிடமிருந்து விடுதலை பெற யாரையோ கல்யாணம் செய்து கொண்டு எங்கேயாவது ஓட இருந்த வளுக்கு இராமநாதன் கிடைத்தது புண்ணியம் என் கிறாள். தன்னை விரும்பி, சீதனம் ஒன்றும் கேட்காமல் செய்த அவர் அவளைப் பொறுத்தவரையில் ஒரு ரட்சகன். அவரைக் கல்யாணம் செய்துதான் என்ன கண்டாள்? 

எல்லாப் பெண்களும் ஆசைப்படுவதுபோல அவளுக்கு ஒரு குழந்தை கூடக் கிடைக்கவில்லை. அந்த அன்பை அவள் தியாகராஜாவிற் சொரிந்தாள். அந்த அன்பை ராதிகா வாற் பொறுக்க முடியவில்லையே. 

“ராதிகா உனக்கு எப்படித் தெரியும் சாரதா ஏன் ஆஸ்பத்திரியிலிருக்கிறாள் என்று; அவளுக்கு இந்த மாதிரி ஒரு நோய் வந்ததே ஒரு அதிர்ச்சியில்தான். அவளைத் தன்னால் கர்ப்பவதியாக்கமுடியாது என்றதும் ராமநாதன் செயற்கைக் கர்ப்ப மூலம் அவளைத் தாய்மை கொள்ளலாமே என்று கேட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சி, அத்தோடு நீ என்னை அவளிடமிருந்து பிரித்துவிட்டாய் என்ற அதிர்ச்சி. எல்லாம் சேர்ந்து அவள் வேதனைதான் அவளின் மானசீக ஆசையாக செத்துத் தொலைந்து விட்டால் பிரச்சினையில்லை என்ற பிடிவாதம் அவள் வயிற்றில் கட்டியாக வளர்ந்திருக்கும் என்பது உனக்கு என்னவென்று புரியும்? 

ராதிகா நீ நினைத்ததெல்லாம் உனக்குக் கிடைத்தது. அவள் கிடைப்பதைக் கொண்டு சந்தோஷப்படப் பழகி விட்டவள்! 

“தாலி கட்டாத தாய்க்குப் பிறந்து, இரண்டாம் மனைவியாக ஒருவரை மணந்து யாரோ முன்பின் தெரியாதவரால் கர்ப்பம் அடைய வேண்டும் என்ற நிலை வந்தால் உனக்கு வாழ்க்கை வெறுக்காதா?”

“ராமநாதன் அன்று குழந்தை மாதிரி விம்மிறாரே, அவள் இல்லாமற் தன்னால் வா ாழமுடியாது என்ற அந்த அன்பை நான் ஒருநாளும் அனுபவிக்கவில்லையே. எந்தக் கணவன் இந்த உலகத்தில் இம்மாதிரித் தூய் தெய்வீக அன்பை வைத்திருப்பான்?” 

தியாகராஜன் எழுந்தான். தன் வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் முடிந்த உணர்ச்சி மனத்தை அழுத்தியது. அவன் வாழ்க்கையில் மட்டுமல்ல, சாரதாவின் வாழ்க்கையில், ராதிகாவின் வாழ்க்கையிலும்தான் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது! 

அத்தியாயம் – 17

பனிக்காலம் முடிந்து இலையுதிர்காலம் வந்தது. சாரதா எழுந்து நடக்கத் தொடங்கி விட்டாள். பட்ட மரங்களில் இலைகள் துளிர்த்தன. பறவைகள் பறக்கத் தொடங்கின. பூக்கள் பூத்துக் குலுங்கின. செரி புளோசம் பூக்கள் தன் காதலைப் பூமியில் கொட்டியிறைத்தது. 

அமெரிக்கரும் பிரித்தானியரும் முஸ்லீம்களைக் கொன்று குவித்துவிட்டார்கள். வளைகுடா யுத்தத்தில் அமெரிக்கன் பாவித்த ஆயுத மகிமைகளைக் குழந்தைகள் டி.வி.யில் கண்டு ரசித்தன. 

தியாகராஜன் எதிர்பார்த்தது போல் அவனின் கொம்பனி அவனை வேலையிலிருந்து துரத்திவிடவில்லை. லண்டன் கிளையில் வைத்திருந்த ஒன்றிரண்டு எஞ்சினியர்களில் அவனும் ஒருத்தனாக இருந்தான். ஆனாலும் பெரும் பாலும் இந்தக் கிளை மூடப்படலாம் என்று பேசிக் கொள்ளப்பட்டது. 

மால்க்கம் எடின்பரோ போய்விட்டான். அவனுக்குச் சந்தோசம்தான். ஆனால் மால்க்கத்தின் காதலி லிண்டா தான் கொஞ்சம் யோசித்தாள். 

“மால்க்கம் எடின்பரோவிலிருந்து என்ன கூத்துக்களை செய்வானோ” என்று அங்கலாய்த்துக் கொண்டாள்.

லிண்டா கூட ராதிகாவைப் பற்றித் தியாகராஜாவிடம் கதைப்பதை விட்டு விட்டாள். ராதிகா தியாகராஜனுடன் பேசாமல் விட்டு மூன்று மாதங்களாகி விட்டன. சோதனைக்கு விழுந்து விழுந்து படிப்பதாகச் செய்தி கிடைத்தது. 

பாரதி ஏதோ இன்னுமொரு ஆஸ்பத்திரிக்கு மாற்றலாகிப் போய் விட்டான் என்றும் கேள்வி. 

தமிழ்ப் பாகவதர்கள் மாதிரித் தலையாட்டிக் கை காட்டிக் கொண்டு ஏதும் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டான். 

சாரதாவின் உடம்பில் இப்போதுதான் கொஞ்சம் தசை பிடிக்கிறது. அவர்கள் வீட்டுக்கு தியாகராசா அடிக்கடி. போவது கிடையாது. ராமநாதன் போன் பண்ணுவார். 

அவனைப் பார்க்க ஒரு தயக்கம். ராதிகா இவனுடன் தகராறு பண்ணிக் கொண்டிருப்பது தெரியும். தான்தான் காரணமாயிருக்கும் என்று அவளுக்குத் தெரியாமல் இல்லை. 

போன வருடம் சாரதா இவனிடம் வந்து “ராஜன் உனக்கு என்னில் அன்பிருந்தால் தயவுசெய்து என்னைப் பார்க்காதே…” என்று கேவிக் கேவியழுததை அவன் மறக்கவில்லை. 

ராதிகா சாரதாவைக் கண்ட பாட்டுக்குப் பேசிவிட்டாள். அந்தக் குரூரமான குற்றச்சாட்டைச் சாரதாவாற் தாங்க முடியாமலிருந்தது. 

ராதிகாவை இவனுக்குச் சாரதாதான் சிபாரிசு செய்தாள். சந்திக்கப் பண்ணினாள் என்று தற்செயலாகக் கேள்விப் பட்டபோது ராதிகா புலிபோல் எகிறிக் குதித்தாள். 

“என்னை என்னவென்று நினைத்தீர்கள். வலைபோட்டுப் பிடிக்கும் மான் என்றா நினைத்தீர்கள்” அவள் ஆவேசத் துடன் கேட்டாள். 

“யார் முயற்சியாய் இருந்தால் என்ன நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறோம். அதுதானே தேவை” அவன் உண்மையுடன் சொன்னான். 

தன்னில் அன்பிருந்தால் சாரதாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்றாள் ராதிகா. 

தன்னில் அன்பிருந்தால் தன்னை வந்து பார்க்க வேண்டாம் என்று சொன்னாள் சாரதா. 

தியாகு தன் மனம் சொன்னபடி நடந்தான். ராதிகாவுக் காகச் சாரதாவைப் பார்ப்பதை விட்டுவிட்டான். ஆனால் அவளில் உள்ள பரிவை அன்பை, பாசத்தை மறக்க முடியவில்லை. 

சாரதா ஆஸ்பத்திரிக்குச் சத்திரசிகிச்சைக்கு அட்மிட் பண்ணப்பட்டதும் அங்கு ராமநாதன் இவனிடம் கேட்ட உதவியும் தியாகுவின் மனத்தில் எத்தனையோ போராட்டங்களைத் தோற்றுவித்து விட்டது. 

தான் தன் மனைவியைத் தாயாக்க – விஞ்ஞான உதவியைப் பயன்படுத்த இன்னொருத்தன் உதவியை ராமநாதன் கேட்கிறார். ராம்நாதன் போல் எத்தனை மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்வார்கள். 

அவள் இவரின் இயலாமையை நம்பத் தயாரில்லை. எல்லாம் கடவுள் செயல் என்கிறாள். அப்படி நம்புபவளை இவர் வாழவைக்கத் துடிக்கிறார். 

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் இவனை கிளினிக்குக் கூட்டிக் கொண்டு போனார் ராமநாதன். 

செயற்கையாகக் கர்ப்பம் உண்டாக்கச் சாரதா சம்மதித்து விட்டதாகவும் ஆனால் தனக்கு எந்த விளக்கமும் தேவை யில்லை என்றும் சொல்லி விட்டாளாம். 

கிளினிக்கில் இவனை ராமநாதன் என்ற பெயரில் பதிந்து கொண்டார்கள். இவன் பெயர் ராமநாதன், வயது முப்பத்தைந்து என்றெல்லாம் மாற்றி வைத்துக் கொண்டார்கள். 

“எனக்கு என்னவோ பயமாக இருக்கிறது. அவளுக்கு உண்மை தெரிய வந்தால்…” தியாகராஜன் திணறுவதைப் பார்த்துச் சிரித்தார். 

“கடந்த ஒன்றிரண்டு வருடமாக நான் டொக்டரிடம் சொல்லி வந்திருக்கிறேன். சாரதா தாயாக வேண்டும் என்று நான் எவ்வளவு தூரம் விரும்புகிறேன் என்று அவளுக்குத் தெரியும். நான் அவளைக் கஷ்டப்படுத்த வில்லை. நான் இறந்து விட்டால்…”

ராமநாதன் மறந்துபோய் ஏதோ சொல்ல வந்ததைச் சொல்லி விட்டார் என்ற பாவம் முகத்தில் தெரிந்தது. இவனுக்கு ஏதோ… விளங்கியும் விளங்காத மாதிரித் தோன்றியது. 

இவர் முன்ஏற்பாடாக ஏதோ செய்கிறார் என்று அவன் மனம் சொல்லியது. 

“தியாகு நான் நாற்பது வயதைத் தாண்டியவன். சாவு எப்போதும் வரலாம். நான் போய்விட்டால் அவள் தனித்துப் போவாளே” 

ராமநாதன் குரல் மிக மிகத் தொய்ந்து தொனித்தது. 

“அவள் தனித்துப் போவாளே.” அவர் மீண்டும் மீண்டும் சொன்னார். 

“நான் இருக்கிறேன்” அவன் முணுமுணுத்தான். அவனை அன்றுதான் முதற்தரம் பார்ப்பதுபோற் பார்த்தார்

அவன் வாட்ட சாட்டமான முப்பதுவயது படித்த கூர்மையான கண்களையுடைய – மிக மிகக் கண்ணியமான தோற்றத்தையுடையவன். இவனை இன்றுதான் முதற் தரம் பார்ப்பதுபோல் பார்த்தார். 

அவனுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. சித்திரை மாதக் காற்று திறந்த கதவால் ஓடிவந்து இவன் முகத்திலடித்தது. ‘நீ உன் சுய உணர்வுக்கு வா’ என்று அந்தக் காற்றுச் சொல்லியது போல். இவன் தன்னைச்சி சுதாகரித்துக் கொண்டான். 

“அனாதைக் குழந்தையை எடுத்து வளர்க்கலாம் என்று சொன்னேன். அவளுக்கு அது மிகவும் பிடித்த விசயமாக இருக்கவில்லை.” 

இவருக்கு ஏதும் நடந்தால் அவள் என்ன செய்வாளாம். இவர் பகிடியாய்க் கேட்பதுபோல் கேட்டாராம்.

“லண்டனில் யாரும் தனியாக இல்லையே, அதைவிட ஏன் செத்துப் போகிற கதைகள் சொல்கிறீர்கள்” என்று சாரதா இவரின் வாயை மூடிவிட்டாள். 

“மலட்டுத் தன்மை என்பது விஞ்ஞானம் வளர்ச்சியடை யாத காலத்தில் பெரிய பிரச்சினையான விதம் இப்போது மலட்டுத் தன்மையைத் தீர்க்க எத்தனையோ முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நீ மலடியாயிருந்தால் என் சொந்தக்காரர் என்னை இன்னொரு கல்யாணம் செய்யச் சொல்லி நிர்ப்பந்திக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம், நான் மலடாய் இருப்பதனால் நீஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்”

ராமநாதனின் கேள்விகள் அவளுக்கு விளங்காது. அவள் வாழ்ந்த முறை, நம்பிய கட்டுப்பாடுகள் வித்தியாசமானவை. 

“சாரதா ஆண்டாண்டு காலமாக ஆண்கள் தங்கள் சந்தோசங்களுக்கு, சமுதாய விருத்திக்கு என்றெல்லாம் தான் பெண்களைப் பயன்படுத்துகிறார்கள். பெண்கள் தங்கள் சுய தேவைகளை, ஆசைகளை, அபிலாசைகளைப் புரிந்து கொள்ள மாட்டார்சுளா” அவர் இப்படி எல்லாம் கேட்டது அவள் மனதைக் குழப்பி விட்டது. கல்யாணம் இரு மனிதர்களின் சங்காம் என்று நம்பி வாழ்ந்து பழகியவள் அவள். இப்போது இந்தச் சங்கமத்தில் ஒரு கறையா? 

அவருக்கும் வசந்திக்கும் உள்ள உறவை, எப்படி விவாகரத்து வந்தது என்றெல்லாம் அவள் கேட்கவில்லை. இந்தக் குடிகாரனுடன் யார் இருப்பது என்று சொல்லி விட்டு வசந்தி போய்விட்டதாகக் கேள்விப்பட்டிருந்தாள்.. ஆனால் அவர் சாரதாவைத் திருமணம் செய்த நாளி லிருந்து மதுவைத் தொட்டதில்லை. எத்தனை குழப்பங் கள் அவள் மனத்தில். அவளை விஞ்ஞான ரீதியாக யோசினை பண்ண அவர் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும், 

ராமநாதன் தனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் தியாகராஜனைப் பார்த்தார். 

அவன் மனத்தில் ஓடும் குழப்பங்கள் அவரால் புரியக் கூடியதாக இருந்தது. 

“உன் மனத்தில் வைத்துப் பூசை வைத்துக் கொண்டிருக் கிற அன்புக்கு மதிப்புக் கொடு தியாகு” 

இவர் என்ன சொல்கிறார்? 

தியாகு பேசாமலிருந்தான். 

“நீ என்னை முதன்முதற் கண்டபோது உன் கண்களில் தெரிந்த அனலில் தெரிந்தது உன் மன அறையில் என்ன பூஜை நடக்கிறது என்று. தியாகு உன்னுடைய அன்பை நான் மதிக்கிறேன். அந்த அன்பை நீ சாரதாவுக்கு வெளிப் படுத்தியிருந்தால் அவள் அந்த நெருப்பில் அழிந்து போயிருப்பாள். உன் அன்பை அந்த விதத்தில் அவள் ஏற்றுக் கொள்ள முடியாதவாறு உன்னில் ஒரு தாய்மை யுடன் இருக்கிறாள். ராதிகா அன்று போன் பண்ணினாள். என்ன சொன்னாள் தெரியுமா” 

இவன் இன்னும் வாய் திறக்காமலிருந்தான். 

“உனக்கும் சாரதாவுக்கும் உள்ள அன்பைத்தான் விளங்கிக் கொள்வதாகச் சொன்னாள்’” 

”என்ன” இது ஒரு புதிய விசயம் இவனுக்கு. 

“என்ன சொன்னாள் ராதிகா” இப்போது தியாகு அவரை நேரே பார்த்தான். 

“ராதிகா சொன்னாள், பெரும்பாலான மனிதர்கள் சுய நலவாதிகள், சமுதாயம், கலாச்சாரம் என்ற கட்டுப்பாட்டுக்குள் தங்களைச் சிறை வைத்திருக்கும் கோழைகள். சாரதாவில் அன்பிருந்தால் தியாகு அவளோடு வாழ்ந்திருக்கலாம். அதைவிட்டு விட்டு மானசீக அன்பென்று சொல்லி ஏன் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும். ஃப்ராயிட் சொல்கிற மாதிரி சாரதாவில் தியாகுவுக்கு உள்ள அன்பு ஒரு இடிபஸ் ‘கொம்ளக்ஸ்’ அதை தியாகு என்னதான் சொல்லி மறைத்தாலும் தியாகு அந்த உணர்விலிருந்து விடுதலை பெறும் வரை தியாகு ஒரு சுதந்திரமான மனிதனாக வாழப் போவதில்லை.” 

அவனுக்கு அதைக் கேட்க ஆத்திரமாக இருந்தது. இந்த இடிபஸ் கொம்ளக்ஸ்’ பற்றி அவள் எத்தனையோ தரம் அவனிடம் வாதிட்டுச் சண்டை பிடித்திருக்கிறாள். 

இவன் சாரதாவுக் கென்று நினைத்துக் கொண்டு தன்னை வருத்திக் கொள்வது ஒரு ‘மஸோசிஸம்’ என்று திட்டியி ருக்கிறாள். இதெல்லாம் கோபத்தில் வரும் வெறும் வார்த்தைகள் என்றுதான் இதுவரை நம்பியிருந்தான். இப்போது என்னடா என்றால் ராதிகா தன் கண்டு பிடிப்புக்களை மற்றவர்களுக்கும் பரப்பிக் கொண்டிருக்கிறாளா?

“தியாகு நீ ஒரு மஸோஸிஸ்ட் என்றோ இடிபஸ் கொம்ளக்ஸில் இருந்து விடுபட முடியாதவனென்றோ. உன்னை மதிப்பிட்டுத் தரப்படுத்தப் போவதில்லை. செயற்கைக் கருவுண்டாக ஒரு சுகதேகியாக ஒருத்தரின் ஸ்பேர்ம் தேவை. விஞ்ஞான ரீதியாக டொக்டர்கள் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள டி.என்.ஏ பொருத்தங்கள் பார்த்து இந்த செயற்கையாக கருவுண் டாக்கும் முயற்சியில் இறங்குவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இருதயம் பழுதாகிவிட்டால் இன்னொரு இருதயம் வைத்துப் பொருத்துவது மாதிரி, பள்ளன் பறையன், தீண்டாச் சாதி என்றெல்லாம் இரத்ததிலும் இருதயத்திலும் எந்தப் பிரிவுமில்லை. அதே போல ஆரோக்கியமான ஒரு குழந்தை பிறக்க ஆரோக்கி யமான ஒரு ஆணின் கருவும் முட்டையும் தேவை. அந்த ஆரோக்கியமான ஆண் நீயாய் இருந்தால் அந்தக் குழந்தை எங்கள் குழந்தை என்ற பரிபூரண உணர்ச்சி வரும் என்றுதான் யோசித்தேன்.” 

ராமநாதன் கெமிஸ்ட்ரியில் படித்துப் பட்டம் பெற்ற ஒரு விஞ்ஞானி. அவருக்கு இந்த சமயம் கோட்பாடுகளுக்காக வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்வது பிடிக்காது. விசயத்தை நேரடியாகச் சொன்னார். 

“ராதிகா உன்னில் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் தெரியுமா” 

ராமநாதன் பெரும்பாலும் ராதிகாவின் பேச்சை இவனிடம் எடுப்பது குறைவு. அவள் இவனுடன் கதைக் காமல் விட்டு விட்டாள் என்று கேள்விப்பட்டபோது ராதிகா சாரதாவைப் பழி சொல்லாமல் இருக்கவேண்டும். என்று துக்கப்பட்டார். 

“ஆனால் அவள் அன்பில் ஒரு துளியை என்றாலும் பாரதிக்குக் கொடுப்பாள். என்று நினைக்கிறாயா?” 

பாரதிக்கு ஏன் ராதிகா அன்பைக் கொடுக்கவேண்டும்? இவன் கேள்விக் குறியுடன் அவரைப் பார்த்தான். 

“ஓ நீ கேள்விப்படவில்லையா? பாரதி ராதிகா வைக் கேட்டு அவள் தகப்பனுடன் கதைத்ததாகப் பவானி சென்னாள்'” 

“என்ன?” அவன் குரலில் இடி, மழை, வெள்ளம். 

“ஏன் ஆச்சரியப் படுகிறாய்? அவள் கோபித்துக் கொண்டு போனாலும் ஏன் போய்விட்டாள் என்று ஒரு தரமாவது நீ போன் பண்ணவில்லையாமே, அதையும் பவானிதான் சொன்னாள்.” 

அவனுக்கு உலகத்திலேயே கோபம் வந்தது, 

பாரதியுடன் ராதிகாவைச் சேர்த்து அவனால் கற்பனை கூடச் செய்ய முடியாமலிருந்தது. 

“மிஸ்டர் ராமநாதன் உங்கள் ஸ்பெசிமன் ரெடியா” என்று ஒருத்தி வந்து புன்னகைத்தாள். ஸ்பேர்ம் எடுத்துத் தரச் சொல்லிக் கொடுத்த கண்ணாடிப் போத்தல் தியாகு வின் கையில் இருந்தது. 

அவன் அவள் காட்டிய மறை விடத்துக்குள் போனான். உலகத்தில் அவனுக்குத் தெரிந்ததெல்லாம் பாரதியின் பாகவதர் தோற்றமும் ராதிகாவின் இனிய சிரிப்பும் முட்டாளாக தான். என்னவென்று அவன் இவ்வளவு நடந்து கொண்டான்? கனவு வாழ்க்கையால் ராதிகாவை இழக்கலாமா? 

“தாங்க்யூ மிஸ்டர் ராமநாதன்! அவள், அந்த நேர்ஸ் அவனிடமிருந்து ‘ஸ்பெசிமனை வாங்கிக் கொண்டாள். 

அத்தியாயம் – 18

“உலகத்துப் பிரச்சினைக்கெல்லாம் காரணம் மனிதனின் தேவை. அந்தத் தேவையின் அடிப்படை பசியாக இருக்க லாம். காதலாக இருக்கலாம். இவைகள் கிடைக்கா விட்டால் மனிதன் அந்த விரக்தியில் எதையும் செய்ய முயல்வான். காதலிற் தோல்வியுற்றவன் ஒரு பெரிய போர் வீரனாக மாறுவான். பசியில் வாடியவன், ஒரு காலத்தில் ஒரு கொடைவள்ளலாக, அல்லது கொடிய கொள்ளைக்காரனாக வரலாம்” இப்படிச் சொன்ன ராதிகா எப்படி அந்த முட்டாள் பாரதியை முத்தமிட்டுக் கொள்ளலாம்? 

அவனுக்கு ராதிகாவையும் பாரதியையும் ஒன்றாய் நினைத்துப் பார்க்கும்போது வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. 

தியாகு இப்போது எடின்பரோவில் வாழ்கிறான். ஆனி மாத முற்பகுதியில் அவனுக்கு லண்டனைவிட்டு ஓட வேண்டும்போல் இருந்தது. 

கிளினிக்கில் ஸ்பேர்ம் கொடுத்து ஒன்றுரண்டுமாதங்களால் சாரதாவின் பெண் கருவை எடுத்து ரியுப்பில் வைத்து அவர்கள் ஐஸ் பெட்டியில் போட்டுவைத்திருந்த தியாகு வின் ஸ்பேர்முடன் சேர்த்துவைத்தார்கள். டெஸ்ட்ரியூப் பில் கரு உருவாகி விட்டதா என்று தெரியச் சில நாட்கள் எடுக்கும். அப்படித் தெரிந்தபின் அந்த வளர்ச்சியடைந்த கருவை, எம்றியோவை, எடுத்துச் சாரதாவின் கருப்பை யில் வைப்பார்கள் என்றொல்லாம் தியாகு தெரிந்திருந் தான். அந்த ஆராய்ச்சிக் கட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அவன் லண்டனில் இல்லை. அதற்கு இரண்டு கிழமைகளுக்கு முன் எதிர்பாராத விதமாகச் சாரதா இவன் வீட்டுக்கு வந்திருந்தாள். 

அவள் முகம் மிகவும் கலங்கிப் போயிருந்தது. இவனைக் கண்டதும் கண் கலங்கி விட்டது. ராமநாதன் உண்மை யைச் சொல்லி விட்டாரா? அவன் திறந்துவிட்ட கதவைப் பிடித்தபடி நின்றிருந்தாள். 

“உள்ளே வா என்று சொல்ல மாட்டாயா” 

இவள் குரலில் தான் என்ன கம்பீரம். 

“இரண்டாம் தரம் வந்து என்னை உன்னிடம் கெஞ்சப் பண்ணி விட்டாயே” அவள் அவன் கண்களைப் பார்த்த படி சொன்னாள். 

என்ன கேட்கப் போகிறாள்? 

அவனுக்கு இருதயம் படபடவென்று அடித்தது. 

“நான் இன்று உன்னிடம் ஒரு சத்தியம் கேட்கப் போகிறேன்” 

அவன் குடலுக்குள் பாம்புகள் ஊர்வதுபோல் ஒரு பயங்கர உணர்ச்சி. 

“இதோபார் எனது பேச்சு, எனது நடை, எனது நான் என்ற மூச்சே உன் இரத்தத்தால் உயிர் பிழைத்தது தானே” 

அவன் பேசாமல் நின்றான். 

“நீ இரத்த தானம் தாராமல் இருந்திருந்தால் நான் செத்துத் தொலைத்திருக்கலாம் இப்போ… இப்போ அந்த உயிரை மற்றவர்கள் அவமானத்துக்காகச் சிதைத்துக் கொள்ளலாமா.” 

அவள் கண்களிலிருந்து நீர் பெருகிக் கொண்டிருந்தது.

ராமநாதன் தன் உயிர் போனாலும் இந்த ரகசியத்தை இவளுக்குத் தெரியப் படுத்த மாட்டேன் என்று சொன்னாரே இப்போது என்ன என்றால் இவள் இப்படி வந்து நிற்கிறாளே! 

“சாரதா இப்படியெல்லாம் என்ன பேச்சு?” 

“நீ … நீ… என்னில் வைத்திருக்கிற அன்புக்காக இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அநியாயமாக்கலாமா” 

“…..”

“ராதிகா உன்னைப் பழிவாங்கத் தன்னை அழித்துக் கொள்ளப் போகிறாளா” 

அவன் இன்னும் மௌனம். 

“உன்னைப் பழிவாங்க யாரையாவது கட்டிக் கொண்டால் போகிறது. அவர்தான் சாரதாவைக் கோயிலாக்கி வைத்திருக்கிறாரே என்று பவானிக்குச் சொன்னாளாம்”

“ராதிகா அழுதால் நான் அழிந்து போவேன். ராஜன் அவள் உன்னில் உயிரையே வைத்திருக்கிறாள். 

உனக்கு அந்த அன்பைத் தாங்கிக் கொள்ள ஏன் பெல மில்லை? ஏன் உன்னை அழித்துக் கொள்கிறாய்? அந்த அழிவில் ஏன் என் பெயரை இழுபடச் செய்கிறாய்.என் கணவர் ஒரு உத்தமர். அவருக்காக நான் வாழவேணும். பிளீஸ் என்னை வாழவிடு அவன் எதிர்பார்க்க வில்லை. 

அவனால் அதிக தூரம் ஓடமுடியவில்லை. 

அடுத்த நாளே மிஸ்டர் கிறினைப் போய்ச் சந்தித்தான். மால்க்கத்தை லண்டனுக்கும் தன்னை எடின் பரோவுக்கும் அனுப்ப முடியுமா என்று கேட்டான்.

மிஸ்டர் கிறீன் வழுக்கைத்தலையைத் தடவிக் கொண்டார். 

“உனக்கு எடின்பரோ பிடிக்காதென்றாய்” 

“எனக்கு இப்போது லண்டன் பிடிக்காது” 

மிஸ்டர் கிறீன் முகத்தில் குழப்பம், 

“இரண்டு மூன்று மாதம் எடுக்கும்…” அவர் இழுத்தார். 

 “இந்த வார முடிவில் நான் லண்டனைவிட்டுப் போக முடியாவிட்டால் இந்தக் கொம்பனியை இன்றோடு விடுகிறேன்.” 

லண்டனில் எத்தனை லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்? இவன் மடையன் என்ன சொல்கிறான்? “நாளைக்கு வா சொல்கிறேன்” மிஸ்டர் கிறீன் எரிச்சலுடன் முணுமுணுத்தார். 

அவன் அன்றிரவு மால்க்கத்துக்குப் போன் பண்ணினான். மால்க்கம் லண்டன் வரவிருப்பமில்லை என்று ஒப்பாரி வைத்தான். லிண்டா ஒரு மாட்டுக் கயிறுபோட்டு அவனை அடக்கி வைப்பாள் என்ற பயம். 

“ஒரு ஆறுமாதம் என்றாலும் வாயேன்” இவன் கெஞ்சி னான். உலகத்தின் மூலைக்கே ஓடிவிட வேண்டுமென்ற ஆவேசம். 

அடுத்தவாரம் எடின்பரோ போய்ச் சேர்ந்ததும்புரபெசஸர் ஜேம்ஸின் வீட்டைத் தேடிப் பிடித்தான். ரெயிலில் கண்ட பிரயாணம் இப்படித் தொடர்வதில் பெரிய சந்தோசம் அவருக்கு. 

அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் என்று சொன்னார், எல்லாரும் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். என்றுகேள்விப் பட்டான். 

அவருடைய ய மனைவி ஒரு பழைய காலத்துக் கொள்கை களையுடைய கிறிஸ்தவமாது. முற்போக்குள்ள ஜேம்ஸ் கிழவரும் இந்த கிறிஸ்தவ சமயத்தை கடுமையாகத் தொழும் ஒரு பெண்மணியும் எப்படி ஒன்றாக வாழ முடியும் என்று அவனால் கற்பனை செய்ய முடியவில்லை. அவர்களின் வீட்டில் ஒரு நல்ல அறை கிடைத்தது.

எடின்பரோக் கோட்டை இவனின் ஜன்னலாற் தெரிந்தது. அடுத்த பக்கத்தில் கடலலை மெல்லமாய் வந்து கற்பாறைகளில் தட்டும் காட்சி தெரிந்தது. 

ஸ்கொட்டிஸ் சாப்பாடுதான். இவனுக்குச் சாப்பாடு ஒரு நாளும் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அதுவும் ராதிகாவைக் கண்ட நாளிலிருந்து சாப்பாடு ஒரு பிரச்சினையாகவேயில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கடையிற்தான் வாங்குவான் ராதிகாவின் சாப்பாட்டைச் சாப்பிட்டால் கல்யாணம் செய்ய முதலே சன்னியாசம் எடுக்க வேண்டிவரும். 

புரபெஸர் ஜேம்ஸ் நிறையப் படித்துக்கொண்டே இருப் பார். இந்தியத் தத்துவங்களைத் தன்னிடம் கேட்காமல் இருக்க வேண்டும் என்று மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டான்.) அவர் உபநிடதம், பகவத் கீதை போன்ற வற்றைப் படித்திருப்பதாகச் சொன்னார். 

பகவத்கீதையா? பார்த்திபனையும் கண்ண பரமாத்மாவை யும் பற்றி நினைக்கும் நினைவில் அவன் மனம் இல்லை. இருவருக்கும் மொசாட்டின் இசை பிடிக்கும் என்பது அவனுக்கு மகிழ்ச்சி. 

மனைவியார் கிறிஸ்தவ சங்கங்களுக்கு என்று அலையும் போது இவர் நீட்யேசயுைம், சார்த்ரேயையும் பற்றிப் பேசுவார். 

“மார்ஸிஸம் பற்றி அறிவாயா?’ வெளியில் நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தது. தூரத்தில் எடின்பரோ கோட்டையில் ஏதோ விசேடம் போலும். பெரிய ஆரவாரம். இவன் “இல்லை” என்றான். 

இவன் என்னதான் படித்திருப்பான் என்று நினைத்தாரோ தெரியவில்லை. 

“நான் எனது யூனிவர்சிட்டிப் படிப்பு முடிய அமெரிக்கா போயிருந்தேன். புதிய இடம். ஆட்கள் பழக்கம் இல்லை. லைப்ரரி தேடிப் போனேன். மார்க்ஸ், மாட்டின் லூதர் போன்றவர்களின் அருமையை அங்கேதான் கண்டேன். சின்ன வயதில் மிகவும் கட்டுப்பாடான கிறிஸ்தவனாக நான் வளர்க்கப்பட்டேன். கார்ல் மார்க்ஸ் என்னை மாற்றிவிட்டார்”. 

அவர் ஓகோ ஓகோ என்று சிரித்தார். 

அடுத்த நாள் வேலையால் வரும்போது லைப்ரரி தட்டுப் பட்டது. உள்ளே போனதும் ஒரு இந்தியப் பெண்மணி என்ன புத்தகம் தேடுகிறீர்கள் என்று அன்பாகக் கேட்டாள். 

“எடின்பரோ புதிது. நேரம் போகமாட்டேன் என்கிறது”‘, அவளின் சிரிப்பு அலாதியானது. அழகான நடை, பார்த்த. படியே சித்திரம் வரையத் தூண்டும் ஒரு வசீகரம். 

“இந்தியனா” என்றாள்.

“இலங்கையன்,” 

இருவரும் தங்கள் பெயர் என்னவென்று சொல்லிக் கொள்ளவில்லை. இவன் பெயரை இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் அவன் லைப்ரரியில் சேர்ந்து கொள்ளப் போகிறான்.

கதைப் புத்தகங்களா? அல்லது கருத்துள்ள புத்தகங்களா எடுப்பது? 

ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயைத் தூக்கிக் கொண்டான். வெளியில் நல்ல வெயில். 

இந்த மாதிரி வேளைகளில் ராதிகாவுடன் கைகோர்த்துக் கொண்டு லண்டனில் திரிவது இனியும் முடியுமா? 

அவன் தன் வீட்டை வாடகைக்கு விடச் சொல்லி ராமநாத னிடம் சொல்லியிருந்தான். இவன் அவசரமாக லண்டனை விட்டு ஓடியபோது சாரதாவாலா அல்லது ராதிகா பாரதி யுடன் பழகுகிறாள் என்பதாலா என்று அவருக்குத் தெரியாது. ராமநாதன் இவன் சொல்லாமல் தான் ஒன்றும் கேட்கப் போவதில்லை என்று நினைத்திருக்க வேண்டும். அவருக்கு இவனை நன்றாகத் தெரியும்; இவனது பயங்கள்,பதட்டங்கள், போராட்டங்கள் முழுக்க அவருக்குத் தெரியும் என்பது இவனுக்குத் தெரியும்.

அந்த வசந்த காலம் எப்படிப் போய்த் தொலையப் போகிறது என்று நினைத்தவனுக்கு இரண்டு மாதம் முடிய இந்தக் காலம் எப்படி விரைந்து ஓடிவிட்டது என்று யோசித்தான். 

இந்தியாவில் வைத்து இந்தியப் பிரதமர் ரஜிவ் காந்தியை கொலை செய்துவிட்டார்கள். இவன் லைப்ரரிக்குப் போனபோது நர்மதா இவனை அந்நியன் போலப் பார்த்தாள். 

இவனைப் பார்த்த விதத்தில் அவள் என்ன நினைக்கிறாள் என்று தெரிந்தது. 

”ஐ ஆம் சொறி நர்மதா” அவன் இலங்கைத் தமிழர் சார்பில் மன்னிப்பு கேட்க முடியுமா? 

லண்டனிலிருந்து ஒரு தகவலும் இல்லை ராதிகா பற்றி. ஊரிலிருந்து அடிக்கடி கடிதம் வந்தது. தன் மகன் 

ஒரு லேடி டொக்டரைச் செய்யப்போகிறான் என்று பூரித்துப் போயிருந்த காந்திமதி, ராதிகா பாரதி விடயம் கேள்விப் பட்டுத் துடிதுடித்துப் போய் எழுதியிருந்தாள். 

“உன் வாழ்க்கையில் இப்படி ஒரு ஏமாற்றம் நடக்கக் கடவுள் விடலாமா” பெற்ற மனம் துடித்து அழுதது. 

தகப்பன் வழக்கம்போல் வாழ்க்கையில் இதெல்லாம் ஒரு அனுபவம் என்று நினைத்துக் கொள் என்று எழுதியிருந்தார். 

தனக்கும் தன் காதலிக்குமிடையில் உறவு முறிந்துவிட்டது என்று தெரிந்த நண்பர்களான மால்க்கத்துக்கும் லிண்டா வுக்கும் சொன்னான். லிண்டா ராதிகாவின் சினேகிதி. இவனில் மிகக் கோபமாக இருந்தாள். ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை. 

மால்க்கமும் லிண்டாவும் ஒரு கிழமை எடின்பரோவில் தங்கியிருந்தார்கள். 

“ராதிகா இல்லாமல் உன்னால் எப்படி வாழமுடியும்” லிண்டா கேட்டாள். 

ராதிகா தன் சினேகிதியிடம் எல்லா விடயங்களையும் சொல்லுபவள். 

“இன்னொரு பெண்ணுடன் ராதிகாவுடன் வாழ்ந்தது போல் சந்தோசமாக வாழ்வாயா”. லிண்டா நேரடியாகக் கேட்டாள். 

“ராதிகாவும் நானும் வாழ்ந்த வாழ்க்கை வித்தியாச மானது” அவன் தன் வாழ்க்கையை இறந்த காலமாகப் பேசுவதை யிட்டுத் துக்கப்பட்டான். 

”குட் செக்ஸ் அன் கிரேட் ஃபன்” லிண்டா கேலி செய்தாள்; குரலில் ஆத்திரம். 

“அதற்கு மட்டும் தானே பெண்களை பாவிக்கிறீர்கள்.” “நீ அப்படிப்பட்டவனாக என்னை நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்”. 

“என்ன சண்டை” மால்க்கத்துக்கு நல்லவெறி. தள்ளாடிக் கொண்டு வந்தான். 

“ஸீ இஸ் ஸ்டில் இன்லவ் வித் யு” லிண்டா போய் விட்டாள். 

அத்தியாயம் – 19

1992.

தை மாதம் முடியப் போகிறது. தியாகு கிறிஸ்மஸ் பண்டி. கைக்குக் கூட லண்டனுக்குப் போகவில்லை. 

இதே மாதம் போன வருடம் எடின்பரோவிலிருந்து லண்ட னுக்கு அவன் ராதிகாவுக்காக விழுந்தடித்துக் கொண்டு ஓடியது ஞாபகம் வந்தது. 

இப்போது அவள் லேடி டொக்டராக கிறின்விச் ஹொஸ் பிட்டலில் வேலை செய்கிறாளாம். லண்டன் எலிஸபெத் ஹோல் இசைவிழாவில் அவளுடன் பாரதியைக்கண்டதாக ராமநாதன் எழுதியிருந்தார். 

சாரதா அடுத்த மாதம் தாயாகப் போகிறாள்! என்ன விந்தை? தந்தை யார் அந்தக் குழந்தைகளுக்கு என்று தெரிந்தால் என்ன நடக்கும்? 

பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. 

இன்று ராமநாதனிடமிருந்து ஒரு பெரிய கடிதம் வந்தது. படிக்க அவனுக்குப் புல்லரித்ததுதான். சாரதாவை மனம் திருத்தி செயற்கைக் கர்ப்பம் செய்யப் பண்ணியதை விஞ்ஞான ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும், சமய ரீதி யாகவும், ஒழுக்க ரீதியாகவும் தான் பல தடவை யோசித்த தாக எழுதினார். ‘ஆனாலும் ஐலவ் மை வைப். அவள் சந்தோசமாக வாழவேண்டும்.’ இந்த இடத்தில் நீர்த்துளி பட்டா எழுத்துக்கள் அழிந்திருக்கும். அவன் மேலே படித்தான். “ஐ நோ யு லவ் மை வைப் ரூ அவனால் அதற்கு மேல் வாசிக்க முடியவில்லை. இப்படி அவர் ஏன் நினைக்கக் கூடாது. அவனுக்கு அழுகை வந்தது. 

அழுகை வந்தது என்று தெரியாது. கடிதத்தை வைத்து விட்டு அழுதான். நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் அழுதது குறைவு. அதற்குமேல் அந்தக் கடிதத்தை அவனால் வாசிக்க முடியவில்லை. அடுத்த நாள் வாசிக்க கடிதத்தை எடுத்தபோது டெலிபோன் அடித்தது. 

‘ராதிகா பேசுறன்’ வெளியில் பனி பெய்து கொண்டிருந்தது. அவன் குரல் அடைத்து விட்டது. தொண்டைக்குள் தொலைந்துபோன வார்த்தைகளை எப்படிக் கைவிட்டுத் தேடுவதாம்? 

அவன் உள்ளம் சிலிர்க்க நின்றான். 

“ராமநாதன் மாமா செத்துப் போய்விட்டார்”. 

அவள் அழுதுகொண்டே சொன்னாள். அவனுக்கு அதற்கு மேல் கேட்க என்ன இருக்கிறது? 

வெளியில் நடந்தான். இந்தக் கொட்டும் பனியில் எங்கே போகிறான் என்று புரபெஸர் ஜேம்ஸ்எட்டிப்பார்த்தார். தூரத்தில் தெரியும் எடின்பரோ கோட்டையை நோக்கி நடந்தான். 

வானம் பிளந்து மாமா ராமநாதனுக்கு பனிமலர் கொட்டுகிறதா? 

அவன் பனிமலரில் நனைந்து போனான். அப்போது பின் னேரம் ஐந்து மணி. பனிக்காலம். தெருவில் சன நடமாட்டம் இல்லை. இருள் படர்ந்த உலகத்தில் அவன் திசை தெரியாமல் நடந்தான். 

”நான் செத்துப் போனால் அவள் தவித்துப் போவாளே” ராமநாதன் சொல்லியது அவன் காதில் கூவியது. 

அவள் தனித்துப் போகக் கூடாது என்பதற்காகத்தான் என்னைக் கெஞ்சினீர்களா ராமநாதன்? வானத்தைப் பார்த்துக் கேட்டான். 

சாரதாவுடன் சேர்ந்து பதுளை மலை முகட்டிலிருந்து வானத்திலுள்ள நட்சத்திரங்களைக் காட்டி இறந்து போன மனிதர்கள்தான் நட்சத்திரமாவார்கள் என்று பேசிக் கொண்டது ஞாபகம் வந்தது. 

“ராமநாதன் நீங்கள் புனிதமான மனிதன், பெற்றோருக்க கல்யாணம் செய்து கல்யாணம் செய்தவளின் கண்ணீரைத் தாண்ட முடியாத கண்ணியம் உள்ளவர் நீங்கள். உறவுக்குள் ஒளித்து வைத்திருந்த எனது விரக தாபத்தை எனக்கே வெளிப்படுத்தியவர் நீங்கள். உங்கள் மனைவி தனியாக வாழக்கூடாது என்பதற்காக முன் ஏற்பாடாக அவளைத் தாயாக்கிய தியாகி நீங்கள்” 

அவன் பைத்தியக்காரன் மாதிரிப் பேசிக் கொண்டான். கொலைவெறி பிடித்தலையும் தமிழ் இனத்தில் அவர் ஒரு புனிதப் பேர்வழி. வாழ்க்கைக்கு, உயிருக்கு மதிப்புக் கொடுக்கும் ஒரு தூய மனிதன் அவர். 

அவன் மினுமினுக் என்று தெரியும் எடின்பரோ நகரத்தைப் பார்த்தான். இது ஏழை இந்தியரின் குடிசைகள் அல்ல என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும் அவனது பழைய ஞாபகங்களை அவனிடமிருந்து பிரிக்க முடியவில்லை அவரின் கடிதம் அவன் சட்டைப்பையில். கனத்தது. நேரே தெரிந்த ‘பார்’ ஒன்றுக்குப் போனான். ஒரு பியர் ஓடர் பண்ணிக் கொண்டான். போன வருடம் இதே மாதம் ராமநாதன் விஸ்கி குடித்தது ஞாபகம் வந்தது.பார் லையிட் மங்கலான வெளிச்சம். ஆனாலும் ராமநாதனின் எழுத்துக்களை வாசிப்பது அவ்வளவு கஷ்டம் இல்லை. முத்து முத்தான எழுத்துக்கள். 

…..இந்தக் கடிதத்தை ஆஸ்பத்திரியில் இருந்து எழுது கிறேன். சாரதாவுக்குக் குழந்தை பெறும்வரை இந்த விடயத்தை உனக்குச் சொல்லக் கூடாது என்று இருந்தேன். ஆனால் இப்போது ஆஸ்பத்திரியில் எனது இருதய 

சத்திர சிகிச்சைக்காக வந்திருக்கிறேன். சத்திர சிகிச்சை வெற்றி என்று தான் டொக்டர்கள் சொல்லப் போகி றார்கள். ஆனால் எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. ஏன் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறேன் என்று எனக்கே தெரியாது. இப்படி ஒரு பயம் மனத்தில் இருந்தபடியால் சாரதாவைத் தனியாக விட்டுவிட்டுச் செத்துப் போகக் கூடாது என்று முடிவு கட்டினேன்.

ஏழெட்டு வருடமாக எனக்குத் தெரியும். இந்த வருத்தம் ஒரு பிரச்சினையைத் தருமென்று. ஆனாலும் எனக்கு என்னவோ ஒப்பரேஷனுக்கு விருப்பமில்லை. எனக்கு ஏதோ எப்போதாவது இருந்து நெஞ்சுநோ வரும் என்று சாரதாவுக்குத் தெரியுமே தவிர எவ்வளவு சீரியசானது என்று அவளுக்குக் கனவிலும் தெரியாது. போன வருடம் நீ அவளைப் பார்க்க வரக்கூடாது என்று உனக்குத் தடை யுத்தரவு போட்டபின் மிகவும் ஆடிப் போனாள். உலகத்தில் உண்மையான அன்பு செலுத்த உன்னைத் தவிர உறவினர் யாருமில்லையே. நீங்கள் இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன்’ என்றழுதாள். அன்றே முடிவு செய்து விட்டேன் இவளைத் தனியாக விட்டுவிட்டு நான் போகப் போவதில்லை என்று. கடவுள், சம்பிரதாயம் என்ற நம்பிக்கைகளுக்குள் தங்களைச் சிறை வைத்திருக்கும் அவள் மன உணர்ச்சிகளை வெல்வது சரியான வழியாகத் தெரியவில்லை. 

ஒவ்வொரு நாளும் அவளுக்குப் புத்தி சொல்லத் தொடங் கினேன். எனக்குள் ஒரு வெறி. என்னை நான் வெல்ல வேண்டும் அல்லது அவளை நான் வெல்ல வேண்டும் என்ற துடிப்பு. அந்தப் போராட்டம்தான் அவளை நோயாளியாக்கியது. தியாகு ஒரு மனிதன் சாக நினைத்தால் வருத்தம் தானாகத் தேடிவரும் என்று தெரியுமா உனக்கு? எட்டு வருடத்திற்கு முன் எனக்குத் தெரிந்தது நான் தகப்பனாக முடியாது என்று அன்றிரவே எனக்கு இருதயம் வலிக்கத் தொடங்கி விட்டது. ஏன் ஒரு மலடனாக வாழவேண்டும் என்ற ஆத்திரத்தில் என்னை அழித்துக்கொள்ளும் வெறிதான் அது. 

தியாகு நான் உன் அன்பைப் பாவித்துக் கொள்ளவில்லை. சாரதாவில் நீ வைத்திருக்கும் அன்பு எனக்கு உன்னை 

நீ முதல் நாள் சந்தித்த அன்றே தெரிந்தது. உனது பார்வை யில் தெரிந்த வெறுப்பு என்னைக் குலுக்கி விட்டது. 

நீ சின்னப்பையன் அப்போது. உன் அன்பை கவனமான வழிக்குத் திசை திருப்ப முடியாத வயது. உனக்கு. ஆனாலும் உன் அன்பை விதவிதமான பெயர்கள். சொல்லி நீ ஏமாற்றிக் கொண்டாலும் உனக்குத் தெரியும். உன் மனம் என்று நினைக்கிறேன். கல்யாணம் ஆன ஆரம்பக் காலத்தில் சாரதா உண்மையாகத் தன் பெரியம்மா செல்வமலரிடமிருந்து தப்பித்துக் கொள்ளத் தான் என்னைச் செய்தாளா அல்லது உன்னிடமிருந்து தப்பத்தான் என்னைச் செய்தாளா என்று நான் யோசித்தது உண்டு. சாரதா ஒரு தெய்வம். உன்னைத் தம்பி என்ற உறவுக்கு அப்பால் பார்க்கத் தெரியாத புண்ணிய ஆத்மா அது. அவளுக்கு நாங்கள் விடயம் தெரிந்தால் செத்துப் போவாள். நான் குழந்தைகள் பிறக்கும் வரைக்கும் உயிரோடு இருப் பேனோ தெரியாது. குழந்தைகள் என்று சொல்கிறேனே ஆமாம் சாரதாவின் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருப்பதாக ஸ்கானில் கண்டுபிடித்தார்கள். நாளைக்கு. எனக்கு சத்திர சிகிச்சை. பிழைப்பேனோ தெரியாது. இல்லாவிட்டால் சாரதாவை அவள் குழந்தைகள் காப்பாற்றுவார்கள். நீ கட்டாயம் ராதிகாவிடம் போக வேண்டும். பாரதியை அவள் கல்யாணம் செய்ய மாட்டேன் என்று சொல்லி விட்டாளாம். சோ மச். ஹோ பாக் டு ராதிகா.” 

தியாகு கடிதத்தைப் படித்து முடித்து விட்டான். 

வீட்டுக்கு வந்தபோது இரவு ஒரு மணியிருக்கும்.

புரபெஸர் ஜேம்ஸ் நீட்சேயுடன் மாரடித்துக் கொண் டிருக்க வேண்டும். 

“உனக்கு என்ன பைத்தியமா இந்தப் பனியில் அலை கிறாயே ;’ கிழவர் அன்புடன் கண்டித்துக் கொண்டார். அவன் அவரிடம் விடயத்தைக் சொல்லிமுடிய இரவு மூன்று மணியாகி விட்டது. ”செத்த போக வீட்டுக்குப் வில்லையா” கிழவர் அன்பாகக் கேட்டார். 

“இல்லை சாரதாவைப் பார்க்க வேறு யாரும் இருப்பார்கள்” அவன் வேதனையுடன் சொன்னான். 

ஆங்கிலேய – ஸ்கொட்டிஸ் மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான விடயங்கள் கல்யாண வீடும், செத்த வீடும்தான். இவன் தன் நெருங்கிய சொந்தக்காரர் ஒருத்தரின் செத்த வீட்டுக்குப் போகாதது புரபெஸர் ஜேம்ஸ்சுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. 

அவன் கொஞ்ச நாளாக ஏதோ குழம்பிப்போய் இருக் ஏன் கிறான் என்று அவருக்குத் தெரியும். ஆனால் குழம்பிப் போய் இருக்கிறான் என்று தெரியாது. அவர் “அதைப் பற்றிக் கேட்கக் கூடிய மனிதர் இல்லை. 

பனி கொட்டி,மலை மறைந்த காலம் போய் இளவேனிற் காலம் பிறக்கப் போகிறது. 

ராதிகா இரண்டொருதரம் போன் பண்ணினாள். முதற் தரம் ராமநாதன் இறந்து விட்டார் என்று சொல்லப் போன் பண்ணினாள். செத்த விடயத்தை மட்டும் கேட்டுவிட்டு அவள் எப்படியிருக்கிறாள் என்று கூடக் கேட்கவில்லை. 

அடுத்த தடவை சாரதாவுக்குக் குழந்தைகள் பிறந்த விடயம் பற்றிச் சொன்னாள். 

Digitized by Noolaham Foundation. noolaham.org | aavanaham.org 

இவள் எப்படியிருக்கிறாள் என்றோ சாரதா எப்படி இருக்கிறாள் என்றோ இவன் கேட்கவில்லை. இப்படித் தன்னைத்தானே ஒடுக்கிக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது. 

இவன் ஏதும் மேலதிகமாகக் கேட்கமாட்டானா என்று அவள் தயங்குவது இவனுக்குப் புரிந்தது. இருவருக்கு மிடையில் நானூறு மைல்களுக்கு மேல் வித்தியாசம் இருக்கலாம். ஆனாலும் அவள் பெருமூச்சு அவனுக்குக் கேட்டது. 

உங்களுக்கு என்ன நடந்தது என்று அவள் கேட்க துடிப்பது அவனால் உணரமுடிந்தது. 

சாரதாவை ஏன் நீ பார்த்துக் கொள்கிறாய் என்று இவன் கேட்க மாட்டானா என்று அவள் ஏங்குவதை இவனால் கருத்தில் எடுக்க முடியும். 

அவனைப் பொறுத்தவரையில் சாரதா ஒரு இறந்த காலம், ஆனால் ராதிகா? 

ஒரு நாள் லைப்ரரிக்குப் போனபோது நர்மதா இவனை ஏற இறங்கப் பார்த்தாள். 

“என்ன சுகமில்லையா” அவள் பரிவுடன் கேட்டாள் அந்தக் குரலே இவனுக்கு எத்தனையோ ஆறுதலாக இருந்தது. 

“அப்படி ஒன்றும் இல்லை” பொய் சொல்கிறான் என்று அவளுக்குத் தெரியும். 

“மிகவும் இளைத்துப் போய் இருக்கிறீர்கள்” நர்மதாவின் இனிய குரல் அவனைச் சுண்டியது. 

“உனக்கு போய் பிரண்ட் இருக்கிறானா” அவள் கண்களைப் பார்த்துக் கொண்டு இவன் கேட்டான். அவள் இல்லை என்பது போற் தலையாட்டினாள். 

“உங்களுடன் ஒரு படம் பார்க்கவோ அல்லது ஒரு நல்ல இசை விழாவுக்கோ நீங்கள் என்னைக் கூப்பிட்டால் மறுக்க மாட்டேன்:. 

அவள் குரலில் நிதானம். ராதிகா சாரதா போல் இவள் இல்லை. அவர்களிடம் இல்லாதது இவளிடமிருக்கிறது. 

“ஐ லைக் யு நர்மதா” அவன் விடைபெற்றான். சாரதாவின் குழந்தைகள் சரியாக அவள் தகப்பன் சத்திய மூர்த்தி போல் இருப்பதாக ராதிகா சொன்னாள். இவன் ‘உம்’ போட்டுக் கொண்டான். 

“சத்தியன், நாதன் என்று தன் மகன்களுக்குப் பெயர் வைத்திருக்கிறாள்.” ராதிகாவின் குரலில் பிளீஸ் என்னுடன் கதையுங்கள் என்ற தவிப்பு. சத்தியமூர்த்தி – ராமநாதன் போன்ற மனிதர்களைச் சாரதா வளர்க்கப் போகிறாள். “நல்ல பெயர்கள்” தியாகு மெதுவாக முணுமுணுத்தான். 

“பையன்கள் நல்ல பையன்கள். சாரதாவுக்குத் துணையாக நான் அவள் வீட்டிலேயே இருக்கிறேன். பாவம். சாரதா. மாமாவின் பிரிவால் மிகவும் வாடி விட்டாள்”. ராதிகா மேலும் சொல்லிக் கொண்டிருந்தாள். செத்த வீட்டுக்கு கூடப் போகாமல் சாரதாவிடமிருந்து தன்னைத் துண்டித்து விட்டானே! இவன் இருதயம் என்ன இரும்பாலா செய்தது?”

“லண்டன் பக்கம் வரமாட்டீர்களா” ராதிகாவின் கெஞ்சல் மனதை என்னவோ செய்தது. 

“நீதானே எடின் பரோவுக்குப் போகச் சொன்னாய்” அவன் குரல் தழுதழுத்தது. 

“தியாகு நீங்கள் போட்ட மோதிரத்தை நான் இன்னும் கழட்டவில்லை” 

அவன் மெளனமாக ரெலிபோனை வைத்தான். 

அன்றிரவு நர்மதா வீட்டில் சாப்பாடு. நர்மதா அழகாக உடுத்திருந்தாள். மொசாட் றெக்கோட்டை அவள் போட்டதும் இவனுக்குச் சிரிப்பு வந்தது. ராமநாதன் தன் வீட்டுக்கு வந்து தானாக ‘ரேடியோவைத் திருப்பிய போது கேட்ட இசை. அந்த இசை இவனை ராதிகாவுடன் ஷவர் எடுத்த நினைவைக் கிளப்பியது. இவன் முகத்தை மூடிக் கொண்டான். 

“என்ன ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்” நர்மதா மெது வாகக் கேட்டாள். 

ராதிகா எனக்கு இந்த வினாடியிற் தேவை என்று சொல்ல முடியுமா? 

“வீட்டுக்குப் போகிறேன்” அவளுடன் மேலும் பேசிக் கொண்டிருக்க மனம் இல்லை. 

வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்போது “லண்டன் பக்கம் வரமாட்டீர்களா” என்று ராதிகா கேட்ட குரல் துரத்திக் கொண்டு வந்தது. 

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. அறையிலேயே கழித்தான். ஜேம்ஸ் குடும்பம் இரண்டு கிழமைக்கு கிளாஸ்கோ போய்விட்டார்கள். வீடு அமைதியாக இருந்தது. 

மொசாட் றெக்கோட்ஸ் எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டுக் கொண்டான். 

மாலை வந்தது. வெளியில் போகலாமா? யாரோ கதவைத் தட்டினார்கள். 

அலுப்புடன் கீழே வந்து கதவைத் திறந்தான். ராதிகா! இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக் கொள்ளவில்லை. “உங்களுக்கு என்னில் விருப்பமில்லை என்றால் நீங்கள் போட்ட மோதிரத்தைத் திருப்பித்தர வந்திருக்கிறேன்”; அவள் உதடுகள் துடித்தன. நீர் பொங்கும் விழிகளை அவனால் சகிக்க முடியவில்லை. 

மடைவெள்ளம் பாய்ந்தது. பிரிந்தவர்கள் கூடினால் பேசவும் வேண்டுமோ! 

(முற்றும்)

– பனி பெய்யும் இரவுகள் (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 1993, பாரி நிலையம், சென்னை

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *