பனி பெய்யும் இரவுகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 29, 2025
பார்வையிட்டோர்: 2,469 
 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-19

அத்தியாயம் – 13

அடுத்த நாள் அவன் லீவு எடுத்திருந்தான். ஹொஸ்பிட்டலுக்குப் போனபோது சாரதாவை அப்போதுதான் ஒப்பரேசன் முடிந்து அறையிலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். 

இன்னும் உணர்வு வரவில்லை. ராமநாதன் அவள் பக்கத்தில் இருந்து அவள் கையைத் தடவிக் கொண்டிருந்தார். 

இவன் போனதும் அவர் இருக்கச் சொன்னார். சாரதாவின் கையில் இரத்தம் பாய்ச்சப்பட்டுக் கொண்டிருந்தது. முகத்தில் ஒக்ஸிஸன் மாஸ்க் பொருத்தப்பட்டிருந்தது. 

“ஒப்பிரேஷன் நல்லபடி நடந்ததாக டொக்டர் சொன்னார்” ராமநாதன் மெல்லச் சொன்னார். வார்ட் நிறைய ஒரே சந்தடியாக இருந்தது. 

“தாங்ஸ் தியாகு” அவர் இவன் முகத்தில் பார்வையைப் பதித்துக் கொண்டார். 

“சாரதாவை ஒப்பிரேஷன் செய்ய சம்மதித்ததற்கு நன்றி” அவன் அது பற்றிக் கதைக்கத் தயாராயில்லை என்பதை எப்படி அவருக்கு விளங்க வைப்பது? 

போன கிழமை வந்துபோன ஞாயிற்றுக் கிழமை இன்னொரு தரம் அவன் வாழ்க்கையில் வரக்கூடாது என்று தான் அவன் யோசிக்கிறான். 

“நான் கொஞ்ச நேரம் வெளியிற் போய்விட்டு வருகிறேன்” அவர் எழும்பினார். நேற்றிலிருந்து அவர் சரியாகத் தூங்கியிருக்கக் கூட மாட்டார். 

பத்து வருடங்களாகத் தெரிந்து கொள்ளாத மனிதரை கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஒரேயடியாகத் தெரிந்து கொள்ள அவன் மனம் ஆவல் படுவதை அவர் அறிவாரா? 

வசந்தி வந்து போனபின் சாரதா ஒப்பரேஷனுக்குச் சம்மதித்தாள் என்று அவர் சனிக்கிழமை இரவு போன் பண்ணியிருந்தார். 

பாரதி பேர்த்டேய் பார்ட்டிக்குப் போகும் வழியிற் தன் வீட்டில் கூடாரம் போட்டதும் ராதிகாவின் வேண்டு மென்ற நடிப்பும் அவனுக்கு எரிச்சலையுண்டாக்கிக் கொண்டிருந்த போதுதான் அவர் போன் பண்ணினார். 

வசந்தி ஏன் இத்தனை வருடங்களுக்குப் பின் ராமநாதன் வாழ்க்கையிற் தலையிட வேண்டும்? இந்தக் கேள்வி தியாகராஜனின் மனத்தைக் குழப்பியது. 

அன்றிரவு – அல்லது அதிகாலை இரண்டு மணி வரை பாரதி யும் ராதிகாவும் அலட்டிக்கொண்டிருந்தார்கள். இருவரும் மெடிக்கல்’ விடயம் பற்றிக் கதைக்க விரும்பாதவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள். ஆனால் அவள் ஏதோ தன் படிப்பு விடயமாகக் கேட்ட கேள்வி பாரதியை ஒரு அரைவாசிப் புரபொசர் ஆக்கி விட்டிருந்தது. 

அவன் பொறுமையுடன் பாரதியின் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தான். தியாகுவும் சேர்ந்து பங்கு பற்றுவதாக அந்தச் சம்பாஷனை இருக்கவில்லை. அவள் வேண்டுமென்றே இவனை அலட்சியமாக நடத்துகிறாள் எனத் தெரிந்தது. 

அடுத்த நாள் எப்போது விடியும் எப்போது ஆஸ்பத்திரிக் குப் போய்ச் சேர்வோம் என்றிருந்தது. 

இரவு இரண்டு மணிக்கு அவன் மேல் மாடிக்குப் போய் விட்டான். பாரதி வீட்டை விட்டுப் போகும்வரைக்கும் ராதிகா அலட்டிக்கொண்டிருந்தாள். பாரதி போக விட்டு அவள் மேலே வந்த போது அவன் புத்தகம் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தான். 

இவனுடன் ரெயினில் வந்த புரபெசர் ஜேம்ஸ் ஞாபகத் துக்கு வந்தார். பாரதியுடன் செலவழித்த இத்தனை நேரமும் அந்த சுவாரசியமான மனிதருடன் பேசிக் கொண் டிருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். 

“வந்த சினேகிதரைக் கீழே இருக்கவிட்டு மேலே வந்து புத்தகம் புரட்டிக் கொண்டிருக்கிறீர்களே”. 

“நீ தான் என்டெட்ரெயின் பண்ணிக் கொண்டிருந்தாயே” 

”பொறாமை பொங்கி வழிகிறது” 

“அதுதானே உம்முடைய இலட்சியம்” 

“எது” இடுப்பில் கை வைத்துக் கொண்டு ராதிகா கேட்டாள். “நான் பாரதியில் பொறாமைப் பட்டிருக்க வேண்டும் என்பது” அவன் அவளைப் பார்க்காமல் மறு மொழி சொன்னான். 

“நான் உங்களைப் போல இல்லை” அவள் குரலில். 

“என்ன கருத்தில் சொல்கிறாய் என்று தெரியவில்லை”

“உங்களுக்காக நான் வீட்டில் நாயாகக் காத்திருக்கிறேன். நான் வேறு யாரோவுக்காக ஓடித் திரியவில்லை.” 

‘சாரதா வேறு யாரோதானே’ அவன் வாய் விட்டுக் கேட்கவில்லை. அவன் கண்கள் அவளைக் கேட்டன. 

“தியாகு” அவள் குரலில் கனிவு, முகத்தில் சோகம். ராதிகா நன்றாக நடிக்கவும் தெரிந்தவளா? 

“ஐலவ் யு தியாகு. நான் அக் காதலை மற்றொருத்தி யுடன் பங்கு போட விரும்பவில்லை.” 

அவள் அழத் தொடங்கி விட்டாள். 

பாரதியுடன் இத்தனை நேரம் கதைத்துப் பேசிக் கொண்டிருந்தது நடிப்பா அல்லது இப்போது இவனிடம் கண்ணீர் விடுவது நடிப்பா? 

“அவள் இவனைக் காதலிக்கிறாளாம், இவனை யாருடனும் பங்கு போட மாட்டாளாம்!” 

“நான் ஒன்றும் முழுக்க முழுக்கச் சரியான மனிதன் ல்லை. என்னிலும் குறைபாடுகள் இருக்கின்றன. ஆனாலும் நீ சாரதா இவ்வளவு சுகமில்லாமல் இருக்கும் போது இவ்வளவு குரூரமாக நடக்கத் தேவையில்லை.”

“சாரதா இப்படி ஒரு நிலையில் இருப்பது உங்களுக்குச் சந்தோசமாக இருக்கிறது .” 

”என்ன முட்டாள்த் தனமாகக் கதைக்கிறாய்” அவளை விளங்கிக் கொள்ளாமற் பார்த்தான் அவன். 

“பெண்களை ஏதோ ஒருவிதத்தில் அடக்கி ஆளவேண்டும் என்று நினைக்கிற ஆண்களில் நீங்களும் ஒருத்தர்”

“நான் ஏன் சாரதாவை அடக்கி ஆளவேண்டும்?”

”ஏன் என்று உங்களுக்கே தெரியும்” 

“எனக்குத் தெரியாது ராதிகா. நீயும் உன்னுடைய பிராய்ட் தியரிகளும் எனக்கு வேண்டாம். எனக்கு அவளில் உள்ள ஆசைதான் இப்படி எல்லாம் என்னை நடத்துகிறது என்று விவாதம் பண்ணத் தொடங்கி விடுவாய். உன் விவாதம் பிழையானது என்பதை நிரூபிக்கத்தான் ஒரு வருடம் அவளைப் பார்க்காமல் இருந்தேனே” 

இதை அவன் சொன்னபோது தன்னைத்தானே வெறுத்தான். ராதிகாவைச் சமாதானப் படுத்துவதற்காகத் தான் இப்படிச் சொல்கிறானே தவிர உண்மையில் என்ன நடந்தது என்று தெரியும். 

அவளுக்கு முன்னால் உண்மையை ஒப்புக் கொள்ளத் தயங்குபவன் அவன். 

“எனக்குச் சோதனை நெருங்குகிறது. என்னால் எந்தப் பிரச்சினைக்கும் முகம் கொடுக்க முடியாது.” 

அவள் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.

“உன் பரீட்சையைக் காட்டி என்னை இமோஷனல் பிளாக்மெயில் செய்யாதே” 

“தியாகு எனக்கு நீங்கள் இல்லாமல் இருக்க முடியாது” அவள் அவனை இறுக்கி முத்தம் கொடுத்தாள். 

“அதுதான் இரவு இவ்வளவு நேரமும் பாரதியுடன் அலட்டிறாயா” 

“பாவம் பாரதி… கல்யாணம் செய்யாத ஃப்ரஸ்ரேஷன்” அவள் அவனின் சேர்ட் பட்டனைக் கழட்டி விட்டாள்.

வெளியில் நிசப்தம். மழையில்லாத ஒரு இரவு! இவன் பிடியில் அவள் கசங்கினாள். 

“ஏன் இந்த வேகம்”அவள் குரலில் ஆச்சரியம். 

“இன்னொரு தரம் பாரதியுடன் அலட்டினால் எனக்கு நிச்சயமாகப் பொறாமை வரும்” அவன் சிரித்தான். நீ என்னுடையவள் மட்டும் என்பதை நிரூபிக்கவா இந்த வேகமும் துடிப்பும்? ராதிகா யோசித்தாள். 

அடுத்த நாள் மதியம் வரை அவர்கள் தூங்கினார்களா அல்லது காதல் புரிந்தார்களா அல்லது ஊடல் செய்தார்களா? 

என்ன இருந்தாலும் ராதிகா சமாதானமாய் இருந்தால் சரி. அது எத்தனை நாளைக்கு? 

ஞாயிற்றுக்கிழமை ஆஸ்பத்திரிக்குப் போனதை அவன் இன்னொரு தரம் நினைத்துப் பார்க்கிறான். 

அன்று அவன் போனபோது யாருமில்லை, சாரதா ஜன்னலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் எத்தனையோ யோசனைகளின் பிரதிபலிப்புக் கண்களில் தெரிந்தது. 

வசந்தியைப் பற்றிக் கேட்பதா? 

இவனைக் கண்டதும் அவள் ஏறிட்டுப் பார்த்தாள். ஒரு கண்ணியமான பார்வை. 

சாரதா இவன் கண்களுக்குள் எதையோ தேடுகிறாளா? 

“ஒப்பிரேஷன் செய்தால் நான் பிழைத்துக் கொள்வேனா?” குரல் தடுமாறச் சாரதா கேட்டாள். 

“லண்டன் டொக்டர்கள் கெட்டிக்காரர்கள் என்று கேள்வி” 

“எனக்கு இரத்தம் கொடுக்காமல் ஒப்பிரேஷன் செய்ய முடியாதாம்…எனக்கு யாரின் இரத்தமும் தேவையில்லை” அவள் சட்டென்று நிறுத்தினாள். 

“ராஜன் கிட்ட வாயேன்.” 

அவன் கட்டிலுக்கு அருகில் கதிரையை இழுத்துப்போட்டுக் கொண்டான். 

“வசந்தி வந்திருந்தாள்” சாரதா நறுக்கென்று சொன்னாள். போனில் ராமநாதன், வசந்தி தன் முதல் மனைவி என்றுதான் சொல்லியிருந்தார். மற்றப்படி ஒன்றும் சொல்லவில்லை. 

அவன் மௌனமாக இருந்தான். 

“வசந்தி இவரின் முதல் மனைவி” இவனின் மௌனம் கலையவில்லை. 

“நான் ஒரு பாவி” அவள் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். 

“சாரதா பெலவீனமான நேரத்தில் இப்படி மனத்தை அலட்டிக் கொள்ளலாமா?” 

“என்னைப் பத்து வருடமாதக் குழந்தையாகத் தாயாக தாரமாக நடத்திய மனிதனை விட்டுச் சாக நினைத்தேனே” 

“சுகமில்லாதவர்கள் பெலவீனமான நேரத்தில் பலதையும் பத்தையும் நினைத்துக் கொள்வார்கள்.” 

அவன் பெரிய மனிதன் மாதிரிச் சொல்லிக் கொண்டான்.

“ராஜன்… உனக்கு இவரைப் பிடிக்காது இல்லையா.”

அவள் இவனை ஏற இறங்கப் பார்த்தாள். 

“ஏன் பொய் சொல்ல வேண்டும்… பிடிக்காமற்தான் இருந்தது” அவன் மென்று விழுங்கினான். 

“என்னை இரண்டாம் தாரமாகச் செய்ததுதானே உனது கோபத்துக்குக் காரணம்?’ 

அவன் தலையை ஆட்டினான். 

“ராஜன்…….” அவள் எழும்பியிருக்க முயன்றாள்.

”அவர் என்னை ஒன்றும் வற்புறுத்திச் செய்யவில்லை. என்னைப் பெண் பார்க்க வந்தது உண்மை. என்னிடம் கேட்டார் வயது வித்தியாசம், தனது முதற் கல்யாணம் பற்றி எல்லாம் என்ன நினைக்கிறேன் என்று. அப்போது நான் இருந்த நிலையில் அதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. என்ன மாதிரி என்று எனக்குத்தெரியாது. அவரில் ஒன்றும் கவர்ச்சியோ காதலோ இல்லை. ஆனால் ஒரு நம்பிக்கை ஒரு வினாடியில் எனக்கு வந்துவிட்டது. அந்த நம்பிக்கையில்தான் நான் பெரியம்மாவுக்கு இவரைச் செய்வதாகச் சொன்னேன். ஆனால் அவர் அப்படியில்லை. என்னைப் பார்த்த வினாடியிலேயே என்னைப் பிடித்து விட்ட தாகச் சொன்னார்.” 

“அதெல்லாம் பழைய கதை.” 

“ராஜன் பழைய நிகழ்ச்சிகளின் படிப்புத்தான் இன்றைய வாழ்க்கையின் பிரதிபலிப்பு.” 

“அந்த அருமையான மனிதருடன் வாழாமல் நான் சாக நினைத்தது எத்தனை தவறு”. 

இவள் என்ன புலம்புகிறாள்? 

“வசந்தி வந்தாள்… நான் ஒப்பரேஷனுக்கு மறுத்தேன் என்று கேள்விப்பட்டதாகச் சொன்னாள். அதற்கும் உனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன். ராமநாதன் போன்ற மனிதர்களை யாரும் உண்மையில் புரிந்து கொள்ள மாட்டார்களா என்று கேட்டாள்.எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. அவர் குடிக்கும் அடிக்கும் பயந்துதான் அவள் ஓடிப் போனதாகக் கேள்விப்பட்டேன் என்று சொன்னேன் அப்படித்தான் ஊரும் நினைத்தது,’ என்று சொன்னாள். வசந்தி, தான் விரும்பியவனுடன் கலியாணம் செய்து வாழ முடியாத சோகத்துடன் இவள் ஏனோ தானோ என்று இருந்ததும் அந்த வேதனையில் அவர் குடித்ததும் உண்மை. ஆனால் இவளுக்கு அடிக்கவும் இல்லை.. கொடுமை செய்யவும் இல்லை. அப்படி ஊரும் நினைத்தது. கடைசியாக இவளுக்கு டைவோஸ் கொடுத்து விட்டாராம். அத்துடன் இவளுடன் காதலாயிருந்த மனிதருக்கும் உண்மை சொல்லி இவளுக்கு வாழ்வளித்தாராம். இப்படி எத்தனை தமிழர்கள் செய்வார்கள்.” 

“நல்ல கதை” ஏன் சாரதா இன்னும் கேவிக் கேவி அழுகிறாள் என்று தெரியவில்லை. 

“இப்படியான நல்ல மனிதருக்கு நான் என்ன செய்தேன். என்ன வாழ்க்கையிது. செத்துத் தொலைந்தால் நல்லது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தேன், நான் ஒரு சுயநலவாதி”. 

“சாரதா வருத்தம் வந்தால் எல்லோரும்தான் எதை எதையோ சொல்லிக் கொள்வார்கள்”. 

“ராஜன்…எனக்கு யாரோ முன்பின் தெரியாத மனிதர் களின் இரத்தம் வேண்டாம். நீ எனக்கு இரத்தம் தருவாயா? என்னுடைய சொந்தக்காரர் யாரும் இருந்தால் தாங்கள் இரத்தம் எடுத்துச் சோதித்துப் பார்க்கத் தயக்கம் இல்லை. என்று சொன்னார்கள்.” 

சாரதா அவசரப்பட்டாள். ஒவ்வொரு நிமிடத்தையும் வாழ்ந்து முடிக்கும் ஆர்வம் அந்த வெளிறிய முகத்திற் தெரிந்தது. 

ராமநாதன் வரும் வரையும் அவள் பார்த்திருந்தாள். அவர் வந்ததும் சாரதாவின் முகத்தில் ஏற்படும் மலர்ச்சியை தியாகுவால் வர்ணிக்க முடியவில்லை.

இவர்களின் உறவும் அன்பும் இவனால் விளங்கிக்கொள்ள முடியாது. பதினெட்டு வயது வரை மட்டும் இலங்கையில் வாழ்ந்து தன்னை தன் இளமையை இங்கிலாந்தில் வளர்த்துக் கொண்ட -விரித்துக்கொண்ட இந்த மேல் நாட்டு மயமான ராமநாதனுக்கும், மலைநாட்டின் குறிஞ்சிப் பூவாய்ப் பூத்து வளர்ந்த – அன்பாலும் தர்ம நியாயங்களாலும் ஊட்டி வளர்க்கப்பட்ட சாரதாவுக்கும். தூன் எத்தனை ஒற்றுமை. 

ராஜனின் இரத்தம் என்னுடைய இரத்தம் மாதிரி இருக்கு மில்லையா?” சாரதாவின் குரலில் ஒரு குழந்தையின் ஆவல். 

ராமநாதன் தியாகுவையும் சாரதாவையும் மாறி மாறிப் பார்த்தார் வசந்தி வந்தது. சாரதாவின் மனத்தை மாற்றியது. இப்போது சாரதா இரத்தம்பாய்ச்சிக்கொள்ள ஒப்புக் கொள்வது எல்லாம் மிக விரைவாக நடைபெறும் மாற்றங்கள். 

இவர் வாழ்க்கையில் எப்போதுமே நடக்காத மாற்றங்கள் இறக்க ஒரு சில நாட்களுக்குமுன் நடப்பதில்லையா? பாரதி அன்று டியுட்டியில் இல்லை, வேறொரு டாக்டர் தான் தியாகுவின் இரத்தத்தைப் பரிசோதிப்பதற்கு எடுப்பதாகச் சொன்னார். 

“நான் ஒரு கொம்பியூட்டர்காரன்” இவன் தன் — இரத்தம் சம்பந்தமான அறிவுகள் பற்றிய பூர்ஜிதத்தைக் காட்டிக் கொண்டான். 

“ஒரு சில மணிதத்தியாலங்களில் முடிவுதெரியும்.உங்க ளின் இரத்தம் சரி என்றால் மிஸ்ஸிஸ் ராமநாதனுக்கு நாளைக்கு ஒப்பரேஷன் நடக்கும்” 

மலர்ந்த முகத்துடன் அந்த டொக்டர் சொன்னபோது தூரத்தில் எங்கோ ஒரு கோயில் மணி அடித்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை. லண்டனைச் சுற்றிய ஏதோ ஒரு ‘சேர்ச்சில்’ மணியடிப்பது சர்வ சாதாரணம். 

அன்று இரவு ஏழு மணிக்கு முடிவு வந்தது. 

அடுத்த நாள் சாரதாவுக்கு ஒப்பரேஷன் செய்வார்களா?

அன்றிரவு தியாகராஜன் இரத்த தானம் செய்து கொடுத்து முடிய இரவு பதினோரு மணியாகி விட்டது.

செவ்வாய்க்கிழமை ஒப்பரேஷன் பெரும்பாலும் நடக் கலாம் என்று டொக்டர் சொன்னார். 

ராமநாதனும் தியாகுவும் ஹொஸ்பிட்டலால் வெளிவந்த போது நடுச் சாமமாவிட்டது.

“நீ பெலவீனமாக இருப்பாய். ஏதாவது சாப்பிட வேணும்” 

ராமநாதன் பரிவுடன் சொன்னார். 

வானத்தில் நட்சத்திரங்களேயில்லை; சரியான குளிர். கரு மேகங்கள் வானை மூடியிருந்தன. 

“பாவம், சாரதா மிகவும் குழம்பிப் போய் இருக்கிறாள்” அவர்கள் இருவரும் வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தில் நடந்து பேசிக் கொண்டிருந்தனர். 

தேம்ஸ் நதி பாலத்துக்குக் கீழ் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது. 

அவள் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறாள்” ராமநாதன் சொன்னார். முதற்தரம் தான் சொன்னதை இவன் தன் காதில் போட்டுக் கொள்ளாமற் போயிருப்பானோ என்ற ஆதங்கத்துடன் சொன்னார். 

“எல்லாம் விரைவில் நடக்குந்தானே” 

அவன் பாலத்தில் சாய்ந்து கொண்டான். ராமநாதன் சொன்னது சரி. அவனுக்குப் பெலவீனமாகத்தான் இருக்.கிறது. 

“வீட்டில் ராதிகா இருப்பாளா” 

“இல்லை நிறையப் படிக்க இருப்பதாக ஹொஸ்டலுக்கு ஏழு மணியளவில் போய் வருவதாகச் சொன்னாள்”

“அப்போ நாங்கள் உன் வீட்டுக்குப் போகலாமா”

“அதற்கென்ன”

“வீட்டில் ஏதும் குடிக்க வைத்திருக்கிறாயா”

அவன் அவரை விளங்காமற் பார்த்தான். 

“நான் ஒரு காலத்தில் பெரிய குடிகாரன்” ராமநாதன் வேதனையாகச் சிரித்தார். 

இருந்த ஒன்றிரண்டு பியரையும் பாரதி குடித்துத் தொலைத்து விட்டான் என்று சொல்ல நினைத்தான்.

“போகிற வழியில் ஏதும் வாங்கப் பார்ப்பம்” 

ஞாயிற்றுக்கிழமையில் எந்த மடையன் இரவில் விஸ்கிக் கடை திறப்பான்? தியாகுவுக்குத் தெரியாது. 

இவர்கள் வெஸ்ட் மினிஸ்டரால் திரும்பிக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தபோது, அப்போதுதான் பூட்டிக் கொண்டிருந்த ஒரு ‘பார்’இல் அநியாய விலைக்கு ஒரு விஸ்கிப் போத்தலை வாங்கிக் கொண்டார். 

தியாகுவுக்கு ஒன்றும் புரியவில்லை. பேசாமற் காரை ஒட்டிக் கொண்டிருந்தான். 

அவர் கார் பின்னால் வந்து கொண்டிருந்தது. இன்று பின்னேரம் அவரது இரண்டு மனைவியர்களும் செய்து கொண்ட ஒப்பந்தம் இவரை நிலைகுலையப் பண்ணி யிருக்குமா? 

பொய்மை, வஞ்சகம், சுயநலம் அடுத்துக் கெடுத்தல், அயலானைப் பழித்தல் போன்றவையே தர்மமாகக் கொண்ட ‘தற்காலத் தமிழ் சமுதாயத்தில் ராமநாதன் போன்ற மனிதர்கள் அசாதாரணமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. என்ன உலகம்! எத்தனை விசித்திரமானது. 

சாரதாவை இந்த மனிதர் செய்து கொண்டபோது எத்தனை ஆத்திரம் வந்தது. அவள் லண்டனுக்கு வந்து எத்தனையோ கடிதம் போட்டுப் பதில் எழுதாமல் இருந்தானே!தான் லண்டனுக்கு வந்த பின்னும் அவளைப் பார்க்கப் போக எத்தனை காலம் எடுத்தது. இதெல்லாம் இந்த மனிதரிலுள்ள ஆத்திரத்தாற்தானே வந்தது? 

அவனுக்குத் தன்னிலேயே வெட்கம் வந்தது. ஹொலவேய் ரோட் ஞாயிற்றுக்கிழமை இரவு கொஞ்சம் அமைதியாகத் தெரிந்தது, 

அத்தியாயம் – 14

வீட்டில் காரைப் பார்க் பண்ணிவிட்டு கதவைத்திறந்தான். மேசையில் ஒரு துண்டு. ராதிகாவின் குறிப்புக் காத்துக் கிடந்தது. நான் உன்னைக் காதலிக்கிறேன். பிரிவது வருத்தமே. பாசமும் இனிமையும் இன்பமும் களித்த நேரத்திற்கு நன்றி கூறுவேன்- ராதிகா. 

அவன் உதடுகளிற் சிரிப்பு. குறும்புக்காரப் பெண் அவள் தானே இவனைச் சந்தோசப்படுத்துகிறாள். இவள் நன்றி சொல்கிறாளே. 

ராமநாதன் வந்து சேர்ந்தார். 

ராதிகாவின் ‘நோட்’ஐப் படித்துப் புன்முறுவல் செய்து ரசித்தார். 
 
“நீ அதிர்ஷ்டக்காரன்” அவர் கிளாஸ் தேடிக் கொண்டிருந்தார். 

“என்ன சொல்கிறீர்கள்”

“ராதிகா கிடைத்தது உன் அதிர்ஷ்டம் என்கிறேன்” 

“ராதிகாவை எனக்கு அறிமுகப்படுத்தியவள் சாரதா தானே” 

“சாரதா உன்னைப் புரிந்துகொண்ட அளவு நீ அவளைப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்” அவர் மடமடவென்று விஸ்கியைக் குடித்து முடித்தார். 

“உனக்குத் தெரியுமா, வசந்தி போன அன்றிலிருந்து நான் குடியைத் தொட்டதில்லை.”

“பின் ஏன் இப்போது குடிக்கிறீர்கள்” 

“சாரதா செத்துப் போய்விடுவாள் என்ற உண்மையை என்னால் தாங்க முடியாது” ராமநாதன் கண்கள் கலங்கின. தூரத்தில் ஏதோ இரண்டு கார்கள் மோதிய பெரிய சப்தம். 

“அவள் தான் ஒப்பிரேஷனுக்கு ஒப்புக்கொண்டு விட்டாளே” 

”அதற்கென்ன? அவளுக்கு ஒப்பரேஷன் நடந்து அவளுக்கு கான்ஸர் என்று கண்டுபிடித்தால் என்ன கதி?” 

“ஏன் இப்படி மனத்தை அலைய விடுகிறீர்கள். சும்மா ஏமாற்றங்களைப் பற்றி யோசிக்காதீர்கள்” 

“இவருக்கு எப்போதாவது இருந்து ஏமாற்றங்கள் வரலாம். இவருக்கு வாழ்க்கையே ஏமாற்றந்தானே?” 

“சாரதா உங்களுக்குக் கிடைத்தது ஏமாற்றமா” 

அவனுடன் இப்படி மனம் விட்டுப் பேசுவான் என்று கனவிலும் நினைக்கவில்லை. 

அவர் இவனைக் கூர்மையாகப் பார்த்தார். 

“அவள் என்னைத் திருமணம் செய்தது உனக்குப் பொறாமையில்லையா” 

அவர் மூன்றாவது கிளாஸை மடமடவென்று குடித்து முடித்தார். 

“நீ ஏதாவது சாப்பிடு” 

அவன் சாப்பாட்டை எடுத்து ‘மைக்ரோ அவனில்’ வைத்தான். 

“நான் இனி குடிக்க மாட்டேன். கொஞ்ச நாளாக இருதயம் மிகவும் வலித்தது. என்னால் அந்த வலியைத் தாங்க முடியவில்லை. நாங்கள் சாதாரண மனிதர்கள். அசாதாரணமாக நடக்க வெளிக்கிடக் கூடாது”. 

அவர் கதிரையில் சௌக்கியமாகச் சாய்ந்து உட்கார்ந்தார். 

அவன் இருவருக்கும் சாப்பாட்டைப் பகிர்ந்து கொடுத்தான். 

“இது ராதிகாவின் சாப்பாடு, உப்புப்புளி இருக்காது” அவன் சிரித்தான். 

“ராதிகாவின் தமக்கை பவானி நல்லாச் சமைப்பாள்”

ராதிகாவின் குடும்பத்தின் தூரத்துச் சொந்தக்காரன் ராமநாதன். 

“காலமும் நேரமும் வர ராதிகாவும் நன்றாகச் சமைக்கப் பழகலாம்” 

“சிலரிடம் சில விஷயங்களை மட்டும்தான் எதிர்பார்க்கலாம். அவள் நாளைக்கு ஒரு பிரபல டொக்டராக வரும் போது அவள் தன் நேரத்தைச் சமயலறையிற் கழிக்க வேணும் என்று எதிர்பார்க்காதே” 

“அவள் இப்போதே தான் சொன்னபடி நான் நடக்க வேண்டும் என்று நினைக்கிறாளே”

“அது தான் காதல்” 

“ஒருவிதத்தில் சுயநலம் என்றுதான் எனக்குப் படுகிறது”

அவன் சலித்துக் சொண்டான். 

“காதலில் மூன்று விதம் என்று தெரியுமா உனக்கு?” அவர் அவன் கொடுத்த சாப்பாட்டை ருசித்தபடி சொன்னார்.

அவன் மௌனமாய் இருந்தான். 

“காதலில் ஈறோஸ். அகாபாய். ஃபிலோ என்று மூன்று வகை. ஈறோஸ் என்பது பருவதாகத்தின் அடிப்படையில் வருவது என்று நினைக்கிறேன். மன்மதலீலை என்று வைத்துக் கொள்ளேன். அடுத்தது அகாபாய் அதாவது தன்னையே ஒரு காதலுக்கு அர்ப்பணித்துக் கொள்வது. அதுதான் நீ என்று வைத்துக் கொள்ளேன். சாரதாவில் உள்ள அன்பில் அல்லது காதலில் உன்னையே அழித்துக். கொள்ளக்கூட எண்ணலாம். மூன்றாவது ஃபிலோ அதாவது இன்டலெக்சுவல், பரஸ்பரம் உணர்ந்த அன்பு ராதிகா முதலாவது வகை. நீ இரண்டாவது வகை. நான் மூன்றாவது வகை என்று நினைக்கிறேன்” 

அவன் அப்படியே உறைந்தபடி உட்கார்ந்தான். அதற்குக் காரணம் வெளியில் அடித்த குளிர் காற்றில்லை. அவர் சொன்ன உண்மைகள் காரணமாக இருக்கலாம்.

”சாரதாவைக் கண்டபோது எனக்கு ஒன்றும் பருவதாகம் பொங்கி வழியவில்லை. எனக்கு ஒரு மனைவி தேவையாக இருந்தது. அவளுக்குத்தான் உன் போன்றவர்களிடம் இருந்து தப்பிக்க ஒரு சந்தர்ப்பம் தேவையாக இருந்தது. நான் அதையுணரச் சில காலம் எடுத்தது. இதெல்லாம் தான் ‘கர்மா’. எது எந்த விதத்தில் நடக்குமோ அது அந்த விதத்தில்தான் நடக்கும்” 

இவர் என்ன வெறியில் பேசுகிறாரா அல்லது இப்படிப் பேசுவதற்காகத்தான் குடித்தாரா? 

“நீ சாரதாவில் வைத்திருப்பது வெறும் அன்பா, வெறும் பாசமா? அதை நீ மறைத்துக் கொள்ளலாம் அல்லது, புரிந்துகொள்ளாமலே வாழ்ந்து முடியலாம். ஆனால் ராதிகாவுக்கு, சாரதாவுக்கு, எனக்குப் புரியாது என்று நினைக்காதே” 

தியாகுவுக்கு இப்போது கோபம் வந்தது. இது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு. 

“கோபப்படாதே தியாகு. இதெல்லாம் இயற்கை. ராதிகா என்றால் ஃப்ராயிட்டின் மனோதத்துவ உண்மைகளைச் சொல்லத் தொடங்குவாள். எல்லாரின் பிரச்சினை களுக்கும் மனத்துள் அடக்கி வைத்திருக்கின்ற பாலுணர் வுகள் தான் காரணம் என்று அவள் வாதிக்கலாம். எனக்கு அதுபற்றித் தெரியாது. நான் என் மனைவியை உண்மை யாகக் காதலிக்கத் தெரிந்தவன். அந்த உணர்ச்சி யுண்டாகச் சில அனுபவங்கள் தேவை. என்னை விரும்பாத வசந்தியை என் தலையிற் கட்டிவிட்டார்கள். எங்கள் எதிர்காலத் துணையைத் தேர்ந்தெடுக்க எங்களை புரிந்துகொள்ளாத பெற்றோர்களை நம்பியதன் பலன், ‘கர்மா’ என்று வைத்துக் கொள்ளேன். தொட்டுத் தாலி கட்டியவளின் கண்ணீரைத் துடைக்க முடியாமல் தண்ணிக்கு அடிமையானேன். இருவர் வாழ்க்கையையும் பாழாக்கிக் கொள்ளாமல் இருவரும் கல்யாணத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம். நான் குடிகாரன் என்ற படியால் அவள் என்னை விட்டு ஓடிப் போனதாக உலகம் சொல்லியது. ஒருவிதத்தில் நல்லதுதான். அல்லது அவளை வேறுவிதமாகத் திட்டியிருப்பார்கள்! திருமணம் ஒரு புனிதமான சங்கமம். அதைச் சடங்குகளால், சாதிகளால் செல்வத்தால் பிணைத்து விடமுடியாது. இரண்டு மனங்களாதான் இணைக்க முடியும்”

அவன் மெளனமாக இருந்தான். 

“இன்று அவனுக்கு இரத்தம் கொடுத்தாய். அவள். ஒப்பரேஷனில் பிழைக்கலாம். அவளுக்குக் கான்ஸர் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அதன் பின்னும் அவள் உண்மையான சந்தோசத்துடன் இருப்பாள் என்பது என்ன நிச்சயம்?” 

“ஏன் முடியாது?” 

“தியாகு அவள் ஏன் செத்துத் தொலைய வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தாள் என்று தெரியும்தானே. அவளுக்கு ஒரு பிள்ளை இல்லை என்பதுதான் அவள் வேதனைக்குக் காரணம்.” 

“பிள்ளை வராத – பிள்ளை தரிக்க முடியாத எத்தனையோ தம்பதிகளுக்கு உதவிசெய்ய என்றுதான் எத்தனையோ கிளினிக்குகள் லண்டனில் இருக்கிறதே” 

“இவ்வளவு காலமும் இதெல்லாவற்றையும் விசாரிக்காமல் இருக்கிறேன் என்று நினைக்கிறாயா” 

“…..”

“சாரதா தான் ஒரு சோதனைக்கும் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து விட்டாள். கடவுள் இருக்கிறார் மன்று பழியைப் போடுகிறாள். நான் என்னை ரெஸ்ட் செய்து பார்த்தேன்…”

அவனை நேருக்குநேர் பார்த்தார். 

”எனக்கு ஒரு தகப்பனாகும் பாக்கியம் இல்லை. இப்போதெல்லாம் விஞ்ஞான ரீதியில் பெண்களைத் தாயாக்க மருத்துவ வசதிகள் எத்தனையோ இருக்கின்றன. விதி சாரதாவைத்தான் மிக வஞ்சகமாக நடத்தி விட்டது. ஒரு தெய்வீகக் கலையைப் பரப்பும் ஒரு கலையரசியாக அவர் தகப்பன் அவளைக் காண நினைத்தார். தன்னைப் போல் ஒரு நல்ல தாயாக அவள் தாய் செந்தாமரை இவளைக் கற்பனை செய்திருக்கலாம். இவளைப் பார். வெறும் பட்ட மரமாக நிற்கிறாளே” 

ராமநாதன் இதுவரை யாரு-னும் இப்படி மனம் திறந்மி பேசியிருக்க மாட்டார் என்று அவனுக்குத் தெரியும். அவர் குடித்த காரணம் இப்போது விளங்கியது. 

“ஆண்களும் ஆண்களால் படைக்கப்பட்ட சமூகக் கட்டுப் பாடுகளும் பெண்களைச் சிறை வைத்திருக்கிறது. ஒரு ஆண் ஒரு மலட்டுப் பெண்ணைச் செய்தால் அவளுக்குக் குழந்தை பிறக்காது என்று தெரிந்ததும் அவனில் பரிதாபம் கொண்டு அவனை இன்னொரு திருமணம் செய்ய அனு மதிக்கிறது. எங்கள் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் தங்கள் உரிமைகளைக் கேட்க இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. அதற்காக நாங்கள் சாரதா போன்ற உத்தமிகளை உதாசீனம் செய்வதா?” 

அவனால் ஒன்றும் பேச முடியவில்லை. 

“எப்படி உதவி செய்யப் போகிறீர்கள்” 

“என்னால் முடியாது. ஆனால் உன்னால் முடியும்” 

ராமநாதன் தெளிவாகப் பேசினார். 

“என்ன சொல்கிறீர்கள்” 

“என் மனைவி சாரதாவுக்கு வாழ்க்கையைக் கொடுப்பாயா என்று கேட்கிறேன். அவள் கான்ஸரிலிருந்து ஒப்பரேஷ னிலிருந்து தப்பிப் பிழைத்தால் அவளைத் தாயாக்க உதவி செய்வாயா என்று கேட்கிறேன்” 

அத்தியாயம் – 15

மேற்கூறிய சம்பாஷணை நடந்தபின் திங்கட்கிழமை வந்தது; போனது. இன்று செவ்வாய்க்கிழமை சாரதா வுக்கு ஆபரேஷன் முடிந்தது. அதன் விளக்கத்தைக் கூடிய விரைவில் ராமநாதனுக்குச் சொல்வார்கள். இன்று ராமநாதனும் தியாகராஜனும் சாரதா அருகில் இருக் கிறார்கள். 

அன்று முழுக்க அவள் சரியாக விழித்துக் கொள்ளவில்லை. நோவுடன் முனகுகிறாள். டொக்டர் வந்து பார்த்தார். நேர் ஸ்மார் ஊசி போட்டார்கள். ராமநாதன் தியாக ராஜனுடன் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. 

தான் சொன்ன விடயத்தைக் கவனமாக யோசிக்கச் சொன்னார். 

அவனால் சரியாக நித்திரை கொள்ள முடியவில்லை. சாரதாவுக்கு செயற்கையாகக் கர்ப்பம் தரிக்கப் பண்ணுதல் மூலம் கர்ப்பம் உண்டாக்க யோசிக்கிறார் ராமநாதன். தியாகராஜனை ஸ்பேர்ம் டொனேற் பண்ணச் சொன்னார்! 

கதைகளில் எல்லாம் இதெல்லாம் நடக்கலாம். ஒரு தமிழன் வாழ்க்கையில் இதெல்லாம் நடக்கலாமா? 

“ஒவ்வொரு வீடும் ஒரு ரகசிய சுரங்கம், அங்கே என்ன என்ன இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. சாரதாவை உணர்ந்தவர்கள் நாம். அவளுக்கு நாம் உதவி செய்யா விட்டால் யார் செய்வது?” 

ராமநாதன் தர்க்கம் பேசினார். 

“அவளுக்காக மட்டும் கேட்கவில்லை. உனக்காகவும் தான் கேட்கிறேன். உன் மனத்திலிருந்து அவளுக்கு நீ விடுதலை கொடுக்க முடியாதா? யோசித்துப் பார் சாரதாவின் உட ம்பில் உன் இரத்தம் மட்டும் ஓ டவில்லை. உன் உயிரும் வளரப் போகிறது என்பது உனக்குத் திருப்தி தரவில்லையா” 

இந்த மனிதனுக்குப் பைத்தியமா? அல்லது இந்த மனிதன் நடமாடும் தெய்வமா? 

”சாரதாவுக்குத் தெரிய வந்தால்…” அவன் ஒப்பாரி வைக்க தகுறையாகக் கேட்டான். 

“எனது டொக்டர் சொல்லப் போவதில்லை. நான் சொல்லப் போவதில்லை. நீ சொல்லித் தொலைப்பாய் என்று நான் நம்பவில்லை” 

“இது பாவமில்லையா” 

“எது பாவம்? ஒரு உயிர் பிழைக்க இருதய தானம் இரத்த தானம் செய்வதில்லையா? இந்த விடயம் விஞ்ஞான ரீதியில் சரியானது” 

”அவளுக்குத் தெரியாமல் இதெல்லாம் செய்வது”

“இதில் ஒரு பாவமும் இல்லை. அவளுக்குக் குழந்தை தேவை. எனக்கு அவள் வாழவேண்டும் என்ற ஆசை நிறைவேற வேணும், உனக்கு ராதிகாவின் உறவு தேவை. நீ சாரதாவுக்காகப் பரிதாபப்பட்டு அலையும் வரை ராதிகாவுக்கும் உனக்கும் ஒருநாளும் சந்தோசம் இருக்கப் போவதில்லை.” 

ராமநாதன் சொல்லும் விடயங்களை அவன் கற்பனை செய்தும் பார்க்க முடியாது. சாரதாவில் அவன் வைத்தி ருக்கும் ஆத்மீக அன்புக்கும் அவர் கேட்கும் உதவிக்கும் எவ்வளவு வித்தியாசம்? 

“ராதிகா சுகமில்லாமல் இருந்தால், அவளுக்கு ஒரு இருதயமோ, கிட்னியோ பழுதடைந்து அவள் இறக்கும் தறுவாயில் இருந்தால் நீ என்ன செய்வாய்?”

ராமநாதன் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவ முறையாக வாழ்க்கையின் உறவுகளையும் தொடங்கி விட்டாரா? 

“இந்தக் காலத்தில் எத்தனையோ டி.என்.ஏ. ரெஸ்ட் செய்கிறார்களே” பாவம் தியாகு, வாழ்க்கையின் முதற் தடவையாகத் தன் பயத்தைக் காட்டிக் கொண்டான்.

கற்பனையில் யாரையும் ரசிக்கலாம். பக்கத்தில் வைத்துப் பார்க்கலாம். உண்மையில் தன் கருவைத் தானமாக இன்னொரு ஜீவனுக்குக் கொடுப்பதென்றால்…? அவல் குழம்பிப் போனான். 

“செயற்கையாகக் குழந்தையுண்டாக்க உலகத்திப் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ரியுப்பில் குழந்தையை உண்டாக்கி விட்டுப் பெண்ணின் கருப் பையுள் வைத்து விடுகிறார்கள். கருப்பைக் குழாய்கள் அடைத்துப் போய் இருக்கும். பெண் குழந்தை பெற ஆசைப்பட்டால் அவள் ஆசையை நிறைவேற்ற இந்த விஞ்ஞான முறை பாவிக்கப்படுகிறது தாயின், தகப்பனின் கருக்கள் ஒன்று சேர முடியாத எத்தனையோ தடைகள் ஒரு பெண்ணின் உடம்பில் இருக்கலாம். அதற்காக விஞ்ஞான வளர்ச்சியைப் பாவிப்பது பிழையில்லையே” ராமநாதன் விடாப்பிடியாக இவனிடம் கேட்டுக் கொண்டிருந்தார். 

அவன் திங்கட்கிழமை வேலைக்குப் போனபோது இந்த யோசனை எல்லாம் தலையில் குவிந்து கிடந்தது. 

செவ்வாய்க்கிழமை சாரதாவுக்கு ஒப்பரேஷன் நடந்தது. வெள்ளிக்கிழமை இவன் ஆஸ்பத்திரிக்குப் போன போது சாரதா படுக்கையில் உட்கார்ந்து தேனீர் குடித்துக் கொண்டிருந்தாள். 

“இதோ பார் இந்தக் கோப்பையைத் தாங்கிக் கொள்ளத் தக்க சக்தியை நீதானே என் உடம்புக்குத் தந்தாய். ராஜன் உனக்கு என் ஆசீர்வாதம் ஏழு தலைமுறைகளுக்கு இருக்கும்” 

அவள் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னாள்! 

ஒப்பரேஷன் நடந்ததன் விளக்கம் என்ன? 

ராமநாதன் அன்று பின்னேரம் வந்தார். அவன் இது வரைக்கும் அவனின் ஒவ்வீசில் நடக்கும் மாற்றங்களைச் சொல்லவில்லை. 

சாரதாவைப் பார்த்துவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள் 

“எங்கேயாவது போவோமா” 

ஏதோ முக்கியமான விடயம் சொல்லப் போகிறார் என்று தெரிந்தது. இதுவரை நடந்த விடயங்களை விட வேறென்ன முக்கியமான விடயங்களைச் சொல்லப் போகிறார்? 

அவர் தியாகுவின் காரில் ஏறிக் கொண்டார், இன்று பின்னேரம் ராதிகா வருவாள். தியாகு முடியுமான விரைவில் வீட்டுக்குப் போக வேண்டும் என்று யோசித்துக் கொண்டான். 

வேலை விடயமாக நடக்கும் மாற்றங்களை இன்னும் அவளுக்குச் சொல்லவில்லை. அவள் என்ன சொல்வாள் என்று தெரியாது. பரீட்சை முடியவிட்டு ஒரு வருடம் அவள் லண்டன் ஹொஸ்பிட்டல் ஏதாவது ஒன்றில் வேலை செய்ய வேண்டும். அவன் எடின்பரோவுக்குப் போவதை விரும்புவாளோ தெரியவில்லை. இருவரும் ‘பார்’ ஒன்றுக்குப் போனார்கள். 

ராமநாதன் பியர் ஓடர் பண்ணிக் கொண்டார். ரேடியோவில் வளைகுடா யுத்தத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

வளைகுடா யுத்தம் தொடங்கி விட்டது. ஆயிரக் கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். அமெரிக்கன் உலகத்தில் எந்த மூலைக்குப் போய் என்றாலும் யாரையும் கொலை செய்யலாம். யாரும் கேட்பாரில்லை. 

“சாரதாவுக்கு ஏற்பட இருந்த பெரிய ஆபத்து நீங்கி விட்டதாக டொக்டர் சொன்னார். அவளுக்கு இருந்த ரியூமர் கான்ஸராக வளரும் நிலையில் இருந்ததாம்” 

ராமநாதன் குரலில் ஒரு நிம்மதி.

“நான் சொன்ன விடயத்தைப் பற்றி யோசித்தாயா?”

“சாரதாவின் கர்ப்பக் குழாய்கள் எடுபட்டுவிட்டன. கருப்பை தப்பிவிட்டது.” அவன் மெளனம் சாதித்தான். “நான் உன்னை வற்புறுத்த முடியாது. ஆனால் உனக்கு இது ஒரு புண்ணியம க இருக்கும். ரெஸ்ட் ரியுப்பில் கரு வளர்த்து கருப்பையில் வைப்பதைவிட வேறு வழியில்லை.” 

“யாருக்கும் தெரிய வந்தால், சாதாரண மனிதர் இதை ஒரு விஞ்ஞான அடிப்படையான நிகழ்ச்சி என்று மட்டுமா சொல்வார்கள்?” 

“அப்படித் தெரிய வராது. உலகத்தில் ஆயிரக் கணக்கான பெண்கள் இந்த விஞ்ஞான முறையில் தாய்மையடைகிறார்கள்.” 

”சாரதாவுக்கு தெரியாமல் இதெல்லாம் செய்வது பாவமில்லையா?’ 

“இதில் ஒன்றும் பாவமில்லை. விஞ்ஞான வளர்ச்சி, நான் யாரையும் கொலை செய்யவில்லை. அவளை வாழ வைக்க ஆசைப்படுகிறேன். அவ்வளவுதான். ஒரு வெறுமையான வாழ்க்கையில் ஒரு விருப்பத்தையுண்டாக்க மாட்டாயா? இருண்ட வாழ்க்கையில் விளக்கேற்ற மாட்டாயா” 

ராமநாதன் குரல் தழுதழுத்தது. கடந்த சில நாட்களாக இந்த மனிதன் மிகவும் நொந்து தான் போய் விட்டார். 

“நான் என்ன செய்ய வேண்டும்” தயக்கத்துடன் கேட்டாள் தியாகு. 

“கிளினிக்குக்கு வந்து ஸ்பேர்ம் டொனேட் பண்ண வேண்டும். அவர்கள் எல்லாச் சோதனையும் செய்வார்கள், எல்லாம் சட்ட ரீதியாகத்தான் நடக்கிறது” 

“அவர்களுக்குத் தெரியுமா யார் ஸ்பேர்ம் கொடுக்கிறார்கள் என்று” 

“சாரதாவைப் பொறுத்தவரையில் ஸ்பேர்ம் ‘பாங்’கின் விடயம் தனக்குத் தெரிய வேண்டாமாம். கிளினிக்கில் அவர்கள் சோதிக்கப் போவது எனது ஸ்பேர்ம் என்று தான் ஒழுங்கு பண்ணப் பட்டிருக்கிறது. 

உண்மையான விடயம் எனக்கும் வைத்திய நிபுணர் ஒருத்தருக்கும் தான் தெரியும். கிளினிக்கு நீ என் பெயரில் போவாய். ஸ்பெசிமனைக் கொடுப்பாய். அவ்வளவு தான் நீ செய்ய வேண்டியது.” 

“எப்போது இதெல்லாம் செய்ய வேண்டும்.” 

“நீ எப்போதும் போய் ஸ்பெசிமன் கொடுக்கலாம். எனது பெயரில் எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருக்கிறேன்”. 

அவன் மெளனமானான். பக்கத்தில் உள்ள பாலம் பிரிந்து கொடுத்து தேம்ஸ் நதியில் போய்க் கொண்டிருக்கும் கப்பலுக்கு இடம் கொடுத்தது. 

இதுதான் டவர் பிரிட்ஜ்ஜின் மகிமை. எந்தவிதமான உயர மான கப்பலும் போக இந்தப் பாலம் தன்னை விரித்துக் கொடுக்கும். கல்லாலும் இரும்பாலும் செய்யப்பட்ட இந்தப் பாலம் ஒரு கப்பல் போக இடம் கொடுக்கிற போது மனித உயிர் வாழ நாங்கள் உதவி செய்ய முடியாதா?

“சரி நான் ஒப்புக் கொள்கிறேன்” அவன் எழுந்தான்.

என்ன யோசிக்கிறான் என்று அவரால் முடிவு கட்டமுடிய வில்லை; ராமநாதன் ஹொஸ்பிட்டல் அருகில் உள்ள இடத்தில் காரை விட்டிருந்தார். 

அவரை இறக்கிவிட்டுப் போகும்போது புரபெஸர் ஜேப்ஸின் ஞாபகம் வந்தது. ஏன் அந்த ஸ்கொட்டிஸ் கிழவனின் நினைவு அவனுக்கு அப்போது வந்தது என்று தெரியாது. 

சனிக்கிழமை போன் பண்ணுவதாகச் சொன்னவன் புதன் கிழமை போன் பண்ணினான்.அவர் இரண்டு தரம் போன் பண்ணியதாகவும் இவன் வீட்டில் இருந்திருக்கவில்லை என்றும் சொன்னார். 

இந்தக் கிழமை முழுக்க, தான் ஒரே குழப்பமாக இருக்கிறதே! 

அவர் சொல்லிய ஹோட்டல் ஒன்றும் அதிக தூரத்தில் இல்லை. 

அவர் எங்கேயோ போய் விட்டு வந்து அப்போது தான் வந்திருக்க வேண்டும். 

டையைக் கழற்றியபடி அறைக் கதவைத் திறந்தார். 

“எங்கே உன்னை இரண்டாம் தரம் சந்திக்காமலே போய் விடுவேனோ என்று நினைத்தேன்” கிழவர் மலர்ச்சியுடன் அவனை வரவேற்றார். 

அந்நியர்களிடம் சிலவேளை மனம் விட்டுப் பழக வேண்டும் போல் இருக்கிறது? 

சாரதா சுகமில்லாமல் இருக்கும் விடயத்தைச் சொன்னான். 

“நெருக்கமான உறவா.” 

ஜேம்ஸ் கிழவன் ஹோட்டல் சிப்பந்தியைத் தேனீர் கொண்டு வரச் சொல்லி விட்டு இவனுடன் கதைத்தார். சாரதா நெருக்கமான உறவா? 

இரத்த உறவில் எத்தனையோ நெருக்கத்தான். 

“ராமநாதன் கேட்பதைக் செய்தால் மிக மிக நெருக்க மானவன் ஆகி விடுவான்!” 

”எனது தாயின் அண்ணன் மகள் அவள்” 

“மிக நெருக்கம்தான். நீ மிகவும் வாடிப் போய் இருக்கிறாயோ” 

அவன் மனம் திறந்து தன் வேலைப் பிரச்சிகளைப் பற்றிச் சொன்னான். 

“எடின்பரோவுக்கு மாற்றமா, நீ இதைச் சந்தோசத்துடன் சொல்வாய் என எதிர்பார்க்கிறேன்”

அவர் கேள்விக் குறியுடன் இவளைப் பார்த்தார். 

“சாதாரணமாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்தால் மாற்றங்கள் சந்தோசமாக இருக்கும். இப்போது ராதிகா கடைசி வருடப் படிப்பு. அவளை விட்டு விட்டு நான் டிசம்பர் வரைக்கும் அல்லது ஜூலை வரைக்கும் என்றாலும் லண்டன் விட்டுப்போக விரும்பவில்லை”. 

“ஆஹா ஆஹா இதெல்லோ உண்மையான காதல்” கிழவன் சந்தோசத்தில் கூவினார். 

தான் அடுத்த நாள் எடின்பரோ புறப்படுவதாகவும் இவன் எடின்பரோ வந்ததும் தன்னை வந்து சந்திக்கும்படியும் சொல்லித் தன் முகவரி அட்டையைக் கொடுத்தார் ஜேம்ஸ்.

– தொடரும்…

– பனி பெய்யும் இரவுகள் (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 1993, பாரி நிலையம், சென்னை

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *