பனி பெய்யும் இரவுகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 27, 2025
பார்வையிட்டோர்: 4,243 
 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

“என்ன தியாகு பேசாமல் இருக்கிறாய்? ராதிகா தாறுமாறாகத் திட்டினாளா” 

ராமநாதன் ஹைபரி கோர்ணரில் காரைத் திருப்பினார்.

“அப்படி ஒன்றும் இல்லை” 

“நெருக்கமான உறவென்றால் இதெல்லாம் சர்வ சாதாரணம்”. 

“நெருக்கமில்லாத உறவுடன் எத்தனை தம்பதிகள் இருக்கிறார்கள்” அவன் சிரித்தான். 

ராமநாதன் அவனைத் திரும்பிப் பார்த்தார். என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. 

“தியாகு நீ சில வேளை சாதாரண உலகத்தின் சாதாரண மனிதன் மாதிரித்தான் யோசிக்கிறாயோ என்று எனக்குச் சந்தேகம் வரும்” 

தியாகு மறுமொழி சொல்லவில்லை. 

ராமநாதனை அவனுக்குப் பிடிக்காது; தனக்குத் தானே இதுவரையும் சொல்லிக் கொண்டிருந்தவன் இப்போது அவர் தன்னைப் பற்றிச் சொல்வதை நம்பாமல் தூக்கி எறிந்து விடுவதா? அல்லது உலகத்து அனுவங்கள் நிறைந்த. இவரிடமிருந்து அப்படி ஏன் நினைக்கிறீர்கள் என்று கேட்பதா? 

கார் பென்டன்வில் ரோட்டில் திரும்பியது. இஸ்லிங்டனில் இன்று ‘அன்ரீக்’ சாமான்கள் விலைபடும். உலகத்தின் பல பாகங்களிலுமிருந்து இன்று ஆயிரக்கணக்கான பணக் காரர்கள் இஸ்லிங்டனுக்குப் படை எடுப்பார்கள். இங்கிலாந்தின் கடந்த காலச் சரித்திரத்தின் சாட்சியாக ஒரு பழைய கதிரையாக, அல்லது டுப்ளிகேட் வைர நெக்லஸ் வடிவத்தில் வாங்கிப் போவார்கள். பழையவனின் சரித்திரத்தை, அனுபவத்தை, அழிந்துவிட்ட நினைவுகளை இன்னொருத்தன் தன்னுடைய தாக்கிக் கொள்வதில் எவ்வளவு கஷ்டப்படுகிறான். 

“வாழ்ந்து மறைந்து விட்ட உனது மாமாபோல் நீயும் வாழ ஆசைப்படுகிறாயோ என்று எனக்குச் சந்தேகம் வரும்” ராமநாதன் பார்வையில் பாதை: இவனைப் பார்க்கவில்லை. 

கார் இப்போது ஒரு ட்ரவிக்லைட்டில் நின்றது. 

தியாகராஜனின் மனதில் சுளீரென ஒரு சாட்டையடி. 

“அழகுகளை ரசித்து, இயற்கையை ரசித்து, தன் மனச்சாட்சிக்கு அடி பணிந்து, வாழ்ந்த மனிதர் உனது மாமா சத்தியமூர்த்தி என்று நினைக்கிறேன்” 

தன் மாமாவைப் பற்றித் தெரிந்தது, உணர்ந்து கொண்டது எல்லாம் இவனைப் பொறுத்த வரையில் அசாதாரணமான நிகழ்ச்சிகள்; அவர் ஒரு அசாதாரண மனிதர். செல்வமலர் மாமி திட்டிக் கொள்வதுபோல் அந்த மனிதன் ஒரு பைத்தியக்காரனில்லை, வாழத் தெரியாதவனில்லை. உலகத்துக்காக நடித்து, உலக நாடகத்தில் பங்கெடுத்து, மற்றவர்களுக்கு முகஸ்துதி பாடி நடிக்காத மனிதர். 

கிங்ஸ் குறோஸ் ஸ்ரேசன் பக்கம் கார் போய்க்கொண் டிருந்தது.ஸ்ரேசனைச் சுற்றி விபச்சாரிகள் நிறைந்திருப்பதாகப் பத்திரிகைகளில் படித்திருக்கிறான். குளிருக்கு எல்லாரும் தலையிலிருந்து கால் வரை மூடிக்கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். இவர்களுக்குள் உடம்பைக் காட்டிப் பிழைக்கும் பெண்களை எவ்வாறு அடையாளம் கண்டு பிடிப்பார்கள்? 

“என்ன போசிக்கிறாய்? அழகலான உலகத்தில் உன் மாமா போன்றவர்கள் அசாதாரண மனிதர்கள், பொய்மைக்குள் தன்னைச் சுருட்டிக் கொள்ளாமல் தன்னுணர்வின் தர்மப் பாதையில் நடப்பவர்கள்” 

ஏன் இப்படி உயரத்தில் பேசுகிறார் ராமநாதன்? இவர் ஒரு சாதாரண மத்திய தரவர்க்கத் தமிழன். தர்மத்தையும் தெய்வத்தையும் சத்தியசாயிபாபா பூசைக்குள் காண்பவர்கள். ஏழ்மையையும், அதர்மத்தையும் விதி என்றும் கர்மபலன் என்றும் சொல்பவர்கள். 

“ஏழைப் பெண்களை ருசித்துக் கழித்துவிட்ட தமிழன், பணக்காரன் தமிழ்ப் பரம்பரைக்கு சத்தியமூர்த்தி ஒரு விதிவிலக்கு என்று நினைக்கிறேன்” அவரின் வார்த்தைகள் அவனைக் கவர்ந்தது. 

கார் ஹொஸ்பிட்டல் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. தேம்ஸ் நதி அமைதியாய் ஓடிக்கொண்டிருந்தது. 

பரந்த ஆற்றில் குப்பையும் கூளங்கலும் அடிபட்டு ஓடிக் கொண்டிருந்தன. 

“பகல் பன்னிரண்டு மணியிலிருந்து பின்னேரம் எட்டு மணிவரைக்கும் விசிட்டிங்ரைம். நான் கொஞ்ச நேரத்தில் வருவேன். நீ போய்ப் பார்” 

அவர் காருக்குள் இருந்தபடி சொன்னார். 

ஏன் நான் தனியாகப் போய்ப் பார்க்கவேண்டும் என்று சொல்கிறார்? 

சாரதாவை ஒப்பிரேஷனுக்குச் சம்மதிக்கச் சொல்லித் தானே என்னை அனுப்புகிறார்? 

தான் இருந்தால் இவன் அவளுடன் மனம் விட்டுப் பேச முடியாது என்று நினைக்கிறாரா? 

அவளின் உயிர் பிழைப்பது இப்போது இவன் கையிலா இருக்கிறது? 

சாரதாவைத் திருமணம் செய்து பத்து வருடங்களில் ஒன்றிரண்டு வார்த்தையைத் தவிர வேறொன்றும் பேசிக் கொள்ளாத இந்த மனிதர் இப்போது அவளின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் பணியை இவனிடம் ஒப்படைப்ப தென்றால் இவனைப்பற்றி அவர் கணித்து வைத்திருக்கும் அபிப்பிராயம் மிகக் கண்ணிய மானது, என்று நினைத்துக் கொள்வதா? அல்லது இவனைத் தன் இக்கட்டான நேரத்தில் பயன்படுத்திக் கொள்கிறார் என்று நினைத்துக் கொள்வதா? 

அவனுக்குப் புரியவில்லை. புரியத் தேவையுமில்லை. சாரதா சுகமாய் வீட்டுக்குப் போனால் அதுதான் அவனுக்குத் தேவை; சந்தோஷமான நிகழ்ச்சி. 

மாமா உயிரோடு இருந்தால் தன் மகளை இந்த நிலையிற் கண்டால் துடித்துப் போவார். செல்வமலர் மாமி திட்டிக் கொள்ளலாம். ‘என்னை அழப் பண்ணியவர்கள் சந்தோசமாக இருப்பார்களா’ என்று. ஆனால் செல்வமலரைச் சந்தோசப் படுத்த மாமா பொய்யனாக நடந்திருக்க வேண்டுமா? 

பதுளையில் ஒரு வேலைக்காரியைத் தன் தேவைக்குப் பாவித்து விட்டு கொழும்பு வந்து சம்பிரதரயக் கோட்பாடுகளுக்காக அவரால் வாழ முடியவில்லையே! அதை ஏன் அவள் உணர்ந்து கொள்ளவில்லை. 

“வாழ்க்கையில் தன்னை முன்னேற்றிக் கொள்ளாத முட்டாள்” செல்வமலர் மாமி இப்படியும் திட்டினாள். முன்னேற்றம் என்றால் என்ன? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதா? தேவைகளுக்கு மட்டும் பெண்களைப் பாவித்து தூக்கி எறிவதா? அப்பா அருளம்பல மும் மாமி செல்வமலரும் எத்தனையோ தரம் இது பற்றி விவாதித்துக் கொண்டது இவனுக்கு ஞாபகம் இருக்கிறது. செல்வமலர் அப்பாவுடன் ஒரு பிரைவேட் கொம்பனியில் வேலை செய்பவள். 

அந்தச் சினேகிதத்தில்தான் சத்தியமூர்த்தி குடும்பம் அவளை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். 

செல்வமலர் மாமி எப்போதும் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் பேர்வழி. அளவுக்குச் சற்று மீறித்தடித் திருந்த உடம்பு. முப்பது வயதுவரையும் கல்யாணம் ஆகாமல் இருந்த சோகம். பின்னர் கல்யாணமாகி நான்கு வருடங்களில் வேலைக்காரிக்குத் தன் கணவனை இழந்து விட்ட தோல்வி. எல்லாம் சேர்ந்து அவளை ஒரு வெறுப்புள்ள பெண்ணாக்கி விட்டிருந்தது. 

அவளைப் பொறுத்த வரையில் உலகம் அவளுக்குக் கொடுமை செய்து விட்டது. தன்னைச் சத்தியமூர்த்திக்குக் கட்டிவைத்த தன் பெற்றோர்களை வைதாள். தன்னைச் சத்தியமூர்த்தி குடும்பத்துக்கு அறிமுகம் செய்து வைத்த அருளம்பலத்தைத் திட்டித் தீர்த்தாள். 

‘அந்த மனிதன் ஒரு காமப் பிசாசு, கலைகள் கத்திரிக்க காய்கள் என்று புலம்புவதெல்லாம் இளம் பெட்டைகளை ரசிப்பதற்குத்தானே’ அவள் புலம்புவாள். 

சத்தியமூர்த்தி, இசையில் தன்னை மறப்பவன், சித்தி ரத்தில் உயிராயிருப்பவன் என்றெல்லாம் அருளம்பலம் சொல்லியிருந்தார். 

செவ்வாய் தோசமோ என்ன இழவோ என்றிருந்த செல்வமலருக்குச் சத்தியமூர்த்தி கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் அவளின் பெற்றோர்கள் நினைத்தார்கள். பெண் பார்க்க என்று அவர் வந்தபோது முன்ஹோலில் மாட்டியிருந்த ரவிவர்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாராம். 

‘பெண்ணோட ஏதாவது கதையேன்டா’ என்று அருளம் பலம் கிசுகிசுத்தபோது “உங்களுக்கு பாலச்சந்தரின் வீணையிசை பிடிக்குமா” என்று சத்தியமூர்த்தி கேட்டாராம். 

செல்வமலர் மருண்டு போனாளாம். 

அருளம்பலம் தன்மகன் தியாகுவிற்குச் சொல்லிச் சிரிப்பார். 

“செல்வமலருக்கும் அவருக்கும் ஒத்து வராது என்று தெரிந்தும் ஏன் கலியாணம் செய்து கொண்டாராம்”.

இந்தக் கேள்வி கேட்கும்போது தியாகுவுக்கு இருபது வயது, தகப்பனுக்கு ஐம்பத்தி நான்கு வயது. 

மகனை ஏற இறங்கப் பார்த்தார் தகப்பன் அருளம்பலம். தகப்பனும் மகனும் சினேகிதர்களாய்ப் பழகத் தொடங்கியது எல்லோருக்கும் ஆச்சரியமே. 

தியாகராஜன் நான்கு கருச்சிதைவுகளுக்குப் பின் தாய் காந்திமதியின் வயிற்றில் பிறந்தவன். 

தாயின் செல்லப் பிள்ளை. தகப்பனின் சிநேகி தான் மற்ற இளைஞர்கள் மாதிரியில்லாமல் தகப்பனுடன் சினேகிதமாக இருப்பது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. 

அருளம்பலத்தைத் தகப்பனாராகக் கொண்டது தன் அதிர்ஷ்டம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வான் தியாகராஜன். 

அருளம்பலம் தன்னைக் கூட்டிக்கொண்டு பதுளைக்குப் போனதும் அவன் சாரதாவை முதன் முதல் கண்டதும் இன்னும் கனவுபோல் இருக்கிறது. அதன் நினைவில் உடல் சிலிர்த்தது. 

“என்ன வெளியில் சரியான குளிரா” சாரதா ஹாஸ்பிட்டல் கட்டிலில் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தாள். இரவு மங்கிய வெளிச்சத்தில் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம். அவனுக்குப் பரிதாபகரமாக இருந்தது. 

மிகவும் மெலிந்து, வெளிறிப்போய் இருந்தாள். இவனைக் கண்டதும் முகத்தில் ஒரு மலர்ச்சி பரவியது என்று சொல்லாமலே தெரிந்தது 

“என்ன சரியாகவே நித்திரையில்லையா” அவள் தன் முன்னங்கைகளை அமர்த்தி இன்னும் கொஞ்சம் வசதியாக உட்கார முயற்சித்தாள். 

“நீ எப்படி இருக்கிறாய் என்று நான் கேட்க வேணும். நீ என்னைப் பற்றிக் கேட்கிறாயே” 

“எனக்கென்ன, டொக்டர்கள் சரியாகப் பார்த்துக் கொள்கிறார்களே” 

“டொக்டர்களிடம் மட்டும் எங்கள் உயிரின் நிலையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஒப்புக் கொடுப்பது சரியில்லை என்று நினைக்கிறேன்” 

“என்ன உபதேசம் பண்ண வந்திருக்கிறாயா”

“கேட்பதற்குத் தயாராய் இருந்தால் முயற்சி செய்யலாம் என்று தான் நினைக்கிறேன்.” 

“செத்துப் போக நினைக்கிறது ஒவ்வொருத்தருடையதும் உரிமை” 

சாரதாவா இப்படிப் பேசுகிறாள். அவன் மெளனமாய் இருந்தான். அவள் எவ்வளவு விரக்தியாக இருக்கிறாள் என்பது குரலில் ஒலித்தது. 

“இது மிகவும் சுய நலமான முடிவு” 

“எது” அவள் கண்கள் இவனையூடுருவியது. 

“உங்களை நேசிப்பவர்களை விட்டு ஓடிப் போக  நினைப்பது” 

“நான் ஒருத்தி இல்லாவிட்டால் உலகம் என்ன அப்படியே நின்று விடுமா” 

“நிற்காதுதான். அதற்காகக் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்காமல் உயிர் விடத் துணிவது கோழைத்தனம். இப்படி ஒவ்வொருவரும் செத்துத் தொலைத்தால் என்ன நடக்கும்?” 

“ஒன்றும் நடக்காது. ஏனென்றால் எல்லாரும் என்னைப் போல துரதிர்ஷ்டசாலிகள் இல்லை…அவர்களுக்கு வாழவென்று ஏதோ இருக்கிறது” 

”உனக் கொன்றுமில்லையா? ஏன் முட்டாள்தனமாப் பேசுகிறாய்…” 

“எனக்குத் தாய் தகப்பனில்லை, கட்டிய கணவருக்குச் சந்தோசம் கொடுக்க எனக்குக் குழந்தை பிறக்க வில்லை. இந்த லட்சணத்தில் கான்ஸர் வந்து செத்துத் தொலைந். தால் என்ன நட்டம் வந்து கொட்டப் போகிறதாம்” 

“இப்படிப் பேசுவது முட்டாள்த்தனம்”

“எப்படிப் பேசுவது. மற்றவர்களின் எதிர்பார்ப்புக் களுக்காக வாழநினைப்பது முட்டாள் தனம் என்கிறேன்”

“நூற்றுக்கு நூறு வீதமாக இருக்காது, கொஞ்சம் விட்டுக் கொடுத்து வாழுவோமே தவிர ஒருத்தரைஒருத்தர் அடிமை கொள்ள மாட்டோம்.” 

அவன் இவளை இன்னொருதாம் உற்றுப் பார்த்தான். இந்த வெளிறிய முகத்திலும் தான் எத்தனை கவர்ச்சி. இவளையிப்படியே பார்த்து ஒரு ஓவியம் வரையலாமே! இந்த முகத்திற் தான் என்ன பவித்திரம்; உண்மைகளுக்காக வாழ்ந்து முடிந்துவிட வேண்டும் என்ற துடிப்பு. 

“ராஜன்…… ” அவள் பெரிய ஒரு பிரசங்கம் செய்யப் போகிறாள் போல் முக பாவனையிருந்தது. 

“ராஜன்……” அவள் தொடர்ந்தாள். 

“உனக்கு என்னை விளங்கப்படுத்திச் சொல்ல வேண்டும் என்று எனக்கு ஒரு அக்கறையுமில்லை. நான் ஒன்றும் தற்கொலை செய்து தப்பித்துக் கொள்ள நினைக்கும் கோளையுமில்லை. என்ன மாதிரி ரியூமர் எனக்குத் தெரியாது. கான்ஸராகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஒப்பிரேஷன் செய்யும் உடல் நிலையில் இல்லை. எனக்கு இருக்கும் இரத்த அளவு போதாதாம். அவரின் இரத்தம் எனக்குப் பொருந்தாது. நான் யாரோ ஒரு மனிதரின் இரத்த தானத்தை வாங்கி ஒப்பிரேஷன் செய்து, அதன்பின் எனது ரியூமர் கான்ஸர் வகையைச் சேர்ந்தது என்று சொல்லி எனக்கு ஒன்றோ இரண்டு வருடம்தான் வாழலாம் என்ற நிலையும் ஏற்பட்டால் என்ன செய்வதாம்? கான்ஸர் என்று தெரிந்தபின் அணுவணுவாய்த் துடித்துச் செத்துப் போவதைவிட இப்போது நான் செத்துவிட்டால் கரைச்சல் இல்லையே” அவன் மௌனமாக நின்றான். இவள் எத்தனையோ விடயங்களைப் பற்றி யோசித்தபின் தான் இதெல்லாம் முடிவு கட்டியிருக்கிறாள்! அவன் என்ன சொல்வதாம்?

“நான் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பதாகக் கோபிக்காதே, நீ சொல்லும் காரணங்கள் எல்லாம் எனக்கு விளங்குகிறது. ஆனாலும் நீ முட்டாள்த்தனமாக மற்றவர்களின் இரத்தத்தை ஏற்றிக் கொள்ளமாட்டேன் என்று சொல்வதும், அதற்காக ஒப்பிரேசனைத் தட்டிக் கழிப்பதும் ஒரு பிற்போக்கு வாதமான கருத்து என்று தான் நினைக்கிறேன். இப்போது எல்லாம் இருதயத்தை யும், கிட்னியையும் தானம் செய்வது எவ்வளவோ நடை முறை சாத்தியமென்றாகி விட்டபின் இன்னொருத்தர் இரத்தத்தைப் பாய்ச்சிக் கொள்வதில் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாயே.” 

“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான தத்துவங் களும், ஆத்மீக நம்பிக்கைகளுமிருக்குமென்பதை ஏன் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறாய்” 

“சாரதா நீ ஒரு பரந்துபட்ட மனதுடைய பெண் என்று தான் நினைத்தேன்…” 

“இப்போது என்ன நினைக்கிறாய்” 

“உனக்காக வாழ நினைக்காவிட்டாலும் உன்னில் அன்புள்ளவர்களுக்காக வாழ நினைக்கக் கூடாதா” 

அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளின் கட்டிலுக்கு அருகில் உள்ள ஜன்னலால் பாராளுமன்றம் கம்பீரமாகத் தெரிந்தது. உலகத்தின் பாதியை அடிமை கொண்ட வெள்ளை ஆதிக்கத்தின் சிந்தனைகளின் பிறப்பிடமாய்ப் பாராளுமன்றம் வானத்தைப் பிளந்து கொண்டு நின்றது. 

மனித மனங்களை அடக்கி ஆளும் பழம் நம்பிக்கைகளால் இவள் தன்னைத் தானே அடிமைப் படுத்திக் கொள்கிறாளா? 

அத்தியாயம் – 11

“ஏன் நாங்கள் நீண்ட வராந்தாவிலேயே சந்தித்துக் கொள்கிறோம்” பாரதியைக் கேட்டான் தியாகு. பாரதி ஸ்டெதெஸ்கோப்பைச் சுற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். 

பாரதி வழக்கம் போல் பெரிதாகச் சத்தம் போட்டுச் சிரித்தான். தலையாட்டிக் கைகளை அசைத்து அவன் பேசுவான். யாரோ ஒரு பாகவதருக்குப் பெற்றிருக்க வேண்டும். எல்லாச் சாயல்களும் அப்படியே இருக்கிறது. “எப்படி உன்னுடைய மச்சாள் டொக்டர் தன் நோயாளியைப் பற்றிப் பார்வையாளனிடம் கேட்டான். 

“பிடிவாதமாக இருக்கிறாள். கான்ஸாராக இருந்தால் ஏன் இந்தச் சத்திர சிகிச்சை எல்லாம் என்று யோசிக்கிறாள் போலும்.” 

“முட்டாள் மனிஷி, கான்ஸாராகத்தான் இருந்தாலும் இந்தக் காலத்திற்தான் எத்தனையோ ட்ரீட்மென்ட்ஸ் இருக்கே எனக்கென்னவோ இப்படிப் பிடிவாதங்களைக் கண்டாற் பிடிக்காது.” 

ஆஸ்பத்திரியால் வந்ததும் தியாகு வாட்டர்லூ றெயில்வே ஸ்ரேசன் பக்கம் திரும்பினான். 

“ஏன் காருக்கு என்ன நடந்தது?” 

“வரும்போது சாரதாவின் கணவருடன் பேசிக் கொண்டு வருவதற்காக அவர் காரிலேயே வந்தேன்.”

வாயில் வந்த பொய்யைச் சொன்னான். ராதிகா இவன் காரை எடுத்துக் கொண்டு போனதைப் பற்றிச் சொல்ல வில்லை. 

“எங்கேயிருப்பதாகச் சொன்னாய்” 

“ஹைகேட்டில்” 

“பரவாயில்லை நான் லிப்ட் தருகிறேன், நான் மாமா ஒருத்தர் வீட்டு பேர்த்டேய்க்குப் பார்னட் போக வேண்டியிருக்கிறது”

இவனுடன் லிப்ட் எடுத்துப் போனால் வீட்டுக்குள் வந்து விட்டுப் போ என்று எப்படிச் சொல்லாமலிருப்பது? ராதிகா இன்னும் மூஞ்சியை நீட்டிக் கொண்டிருக்க மாட்டாள் என்று என்ன நிச்சயம்? 

ராதிகாவுக்காக நான் ஏன் பயப்படவேண்டும்? 

“ஒரே ஒரு நிபந்தனை. மெடிக்கல் விடயமாக எதையும் சொல்லிப் போரடிக்காதே, எப்போது ஓய்வு வரும் வீட்டுக்குப் போய் ஒரு நித்திரை போடலாம் என்றிருக் கிறேன், போற வழியெல்லாம் மெடிக்கல் சம்பந்தமான கேள்வி கேட்டால் ஆவென்று அலறுவேன்”

“தியாகுவுக்குச் சிரிப்பு வந்தது. ராதிகாவும் இதைத்தான் சொல்வாள். மெடிக்கல் சம்பந்தமாக எதையும் கேட்காதீர்கள்.” 

கார் வெஸ்ட் மினஸ்ட்டர் பாலத்தைக் கடந்து கொண்டி ருந்தது. பின்னேரம் ஐந்து மணிக்கே இருள் பரவி உலகை மறைத்து விட்டிருந்தது. 

கல்யாணம், காதல் ஒன்றுமில்லையா என்று பாரதியைக் கேட்க நினைத்தான்.பாரதி பல குழந்தைகள் உள்ள வீட்டில் பிறந்தவன். 

“..உனக்குக் கல்யாணம் இன்னும் ஆகவில்லை என்று நினைக்கிறேன்.” பாரதி இவன் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் சம்பாஷணையைத் தெரிந்துக் கொண்டவன் போற் சொன்னான். 

“காதல் நடந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளேன்.” 

பாரதி இன்னுமொருதரம் சத்தம் போட்டுச் சிரித்தான்.

“என்ன சிரிப்பு”

“நீ அதிர்ஷ்டசாலி, காதலிக்கக் கொடுத்து வைத்தவன்”

“இதில் என்ன அதிர்ஷ்டம் இருக்கிறது” 

தியாவுக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை. 

“இல்லாமல் என்ன? என்னைப் போன்ற வர்காதல் செய்வது பற்றிக் கற்பனையும் செய்ய முடியுமா? மூன்றுகல் அடுப்பு மாதிரி மூன்று தங்கச்சிகள். அவர்களுக்குச் சீதனம். அதற்காக நான் உழைக்க வேண்டும். இந்த நிலையில் தனி மனித ஆசைகளுக்கு எங்கே இடமிருக்கிறது? மத்திய தர வர்க்கத் தமிழன் ஒரு மரச் சிலை, உயிரும் உணர்வும் இல்லாமல் திரு விழாவுக்கு எடுபடுகிற சிலை மாதிரி தேலைகளுக்குப் பாவிக்கப்படவும் பாவிக்கப்படத் தெரிந்தும் வாழப் பழகிக் கொண்டவன்.” 

பாரதியின் குரலில் விரக்தி, இவனுடைய வயதுதான் அவனுக்கும். “தமிழ்க் குடும்பத்தில் டொக்டராகப் பிறந்தாற்தான் என்ன தொழிலாளியாகப் பிறந்தாற்தான் என்ன? கல்யாண வியாபார ஒழுங்குகளுக்குக் கட்டுப் படாமல் வாழ முடிகிறதா?” 

கார் ‘சார்ல்ஸ் டிக்கன் மியுசியம்’ இந்த வழியில் என்று காட்டப்பட்டிருக்கும் சந்தியினடியில் உள்ள ட்ரவிக் லைட்டில் நின்றது. 

“யார் பெட்டை” பாரதி கல்லூரிக் காலத்தில் படித்த தொனியிற் கேட்டான். 

இவனுக்கு அந்தச் சொல்லே பிடிக்கவில்லை. மௌனமாக இருந்தான். 

“லண்டனில் வளர்ந்த தமிழ்ப் பெட்டைகள் வெள்ளைக் காரர் மாதிரி வாழத் தெரிந்தவர். தமிழ்ப் பண்பாடு கலாச்சாரம் என்பவற்றில் அக்கறையில்லாதவர்கள். நாங்கள் கவனமாக இருக்க வேணும்” 

“தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன?” இவன் கேள்விக்கு அவன் திரும்பிப் பார்த்தான். 

றோஸ்பரி அவெனியுவில் பழமையான், அருமையான புத்தகம் விற்கும் வியாபாரி தன் புத்தகப் பெட்டிகளைக் காரில் ஏற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் தியாகு ஒன்றிரண்டு தரம் பழைய புத்தகங்கள் வாங்கியிருக்கிறான். 

இந்தப் புத்தக வியாபாரி ஒரு தடவை இவனுக்குச் சொன்ன கதை ஞாபகம் வருகிறது. 

உலகத்தில் பெயர் போன ஒரு சாஸ்திரப் புத்தகம்; அது இப்போது அச்சிலில்லை. அதைத் தேடி ஒரு வெளி நாட்டுப் பிரமுகர் வந்தாராம். அந்தப் புத்தகத்தின் பெயர் சொல்லிக் கேட்டாராம். 

அதற்கு அந்தப் புத்தக வியாபாரி “ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு அந்தப் புஸ்தகத்தைத் தேடுகிறீர்கள். அந்தப் புத்தகம் தான் இப்போது அச்சில் இல்ல, கிடைப்பதும் அருமையான காரியம்” என்று சொன்னாராம். 

அதற்கு அந்த வெளிநாட்டுப் பிரமுகர் சொன்னாராம். “எங்கள் நாட்டு ஜனாதிபதி இங்கு மாணவராய் இருந்த போது யாரோ ஒருவர் அந்தப் புத்தகத்தின் குறிப்பின் படி இவர் ஒருகாலத்தில் ஒரு நாட்டின் ஜனாதிபதி யாவார் என்றும் எதிரிகளை மிகவும் இலகுவில் அடக்குவார் என்றும் சொன்னாராம், எனவே எங்கள் ஜனாதிபதி இந்த சாஸ்திரத்தைத் தன் இளவயதில் நம்பா விட்டாலும் இப்போது நம்புகிறார்; அவருக்கு இப்போது எழுபத்தைந்து வயது. அவர் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பார், எப்படித் தன் எதிரியை வெல்ல முடியும் என்று தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறார்” என்றும் சொன்னாராம். 

புத்தக வியாபாரி நீங்கள் எந்த நாடு, உங்கள் ஜனாதிபதி யின் பெயர் என்ன என்று கேட்ட போது வந்த பிரமுகர் தான் இலங்கைக் ஹைக்கமிஷனிலிருந்து வந்திருப்ப தா கவும் ஜனாதிபதியின் பெயரையும் சொன்னாராம்.

அந்தக் காலத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மிகக் கொடூரமான பயங்கர வாதம் கட்டவிழ்த்து விடப் பட்டிருந்தது. புத்தக வியாபாரி ஒரு இடது சாரி; இலங்கையில் தமிழர்களுக்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும் என்று சொன்னாராம், என்னிடம் அந்தப் புத்தகமில்லை. இருந்தாலும் உன் போன்ற நாசகாரர்களுக்கு விற்கமாட்டேன். உங்க ஜனாதிபதி விரைவில் செத்துப்போவான்.” என்று சொன்னாராம்.

“என்ன ஏதோ கேள்வி கேட்டு விட்டு ஏன் புத்தகக் கடைக் காரனைப் பார்த்துக் கனவு காண்கிறாய்”

பாரதி என்ன கேள்வி கேட்கிறான்? 

தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி இவன் கேள்வி கேட்டதை ஞாபகப் படுத்துகிறானா? 

“தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன?” 

தியாகு இன்னொருதரம் கேட்டான். 

“பண்பாடு…” பாரதியால் அதற்குமேற் தொடர முடிய வில்லைப் போலும். இவனைத் திரும்பிப் பார்த்தான். 

“ஒரு பியர் எடுப்போமா” பாரதியின் கேள்வியில் தியாகு சிரித்து விட்டான். 

பியர் எடுக்காமல் கலாச்சாரச் சர்ச்சை இவனுக்கு வராதோ? 

“வீட்டுக்குப் போகவேணும், நேற்றுத்தான் எடின்பரோ வில் இருந்து வந்தேன், நித்திரை கொள்ள வேணும்” 

தியாகுவின் இந்த விளக்கம் பாதியுண்மை, பாதியுண்மை யில்லை. 

ராதிகா காத்திருப்பாள் நான் உடனே அவளிடம் போக வேண்டும் என்பதுதான் உண்மை. 

கார் ஹொல்வேய் ரோட்டால் ஆமை வேகத்தின்தான் போக வேண்டியிருந்தது. இருளும் மழையும் மக்கள் கூட்டமும் ஒரே அமளியாயிருந்தது. 

“சரி உன் வீட்டிலாவது ஒரு பியர் கிடைக்குமா பார்ப்பம்” பாரதி சொன்னான். 

பாரதிக்கு பியர் கொடுப்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை என்பது தெளிவாகியது. 

ராதிகாதான் கதவைத் திறந்தாள். 

ஓகோ ஓகோ என்று சத்தம் போட்டுக் கொண்டு வந்த பாரதியின் வாய் சட்டென்று அடைத்தது தியாகுவுக்குத் தெரியாது. 

அவள் தியாகுவைப் பார்த்தாள். “உங்களுடன் வருபவரை எனக்கு அறிமுகம் செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.” குத்தலாகச் சொல்கிறாளா? 

“ஓ… ஐயாம் சொறி… இது எனது பழைய சினேகிதன் பாரதி” 

அவள் பாரதிக்குக் ‘ஹலோ’ சொன்னாள். 

“பாரதி இது என் வருங்கால மனைவி, ராதிகா” 

பாரதி ஹலோ என்று கை குலுக்கப் போனான். ராதிகா கை குலுக்கிக் கொள்ளவில்லை. கௌரவமாகக் சிரித்துச் சமாளித்து விட்டாள். 

“எங்கே சந்தித்தீர்கள் என்று கேட்கவில்லையே” ராதிகாவுடன் பேச வேண்டும் என்ற ஆவல் அவன் குரலில் அப்பட்டமாய்த் தொனித்தது. 

“சொன்னாற் கேட்டுக் கொள்கிறேன்.” 

அவள் முன்னால் இருந்து கொண்டான். தியாகராஜன் இரண்டு பியர்….. ரின்னுடன் வந்து சேர்ந்தான்.

”இவர் மைத்துனியின் டொக்டர் நான். தற்செயலாகத் தான் சந்தித்தோம்.” 

ராதிகாவின் முகபாவம் மாறுவதைப்பாரதி கவனிக்க வில்லை.பாரதி எதையாவது பேசி ராதிகாவின் கவனத்தைக் கவர முயல்கிறான் என்பது அவன் காலடி எடுத்து வைத்த நிமிடத்திலேயே தெரிந்தது. 

இவன்தானே சிறிது நேரத்துக்குமுன் ‘தமிழ்க்கலாச்சாரம்’ பற்றிக் கதைத்தான்? இப்போது யாரோ ஒருத்தனின் வருங்கால மனைவியை எச்சில் வழியப் பார்க்கிறான்?

“நீங்கள் பியர் எடுக்கவில்லையே” பாரதி ராதிகாவையே கேட்கிறான்? தியாகு ராதிகாவைப் பார்த்தான். சாதாரண நாட்களாக இருந்தால் ஏதாவது குறும்புத்தனமாகக் கூறுவாள். இப்போது இருக்கும் மூட்டில் ஒன்றும் சுடச்சுடச் சொல்லாமல் “எனக்கும் படிப்பு வேலை நிறையக் கிடக்கு” என்றாள். 

“என்ன படிக்கிறீர்கள்?”

“மெடிஷின் ஃபைனல் இயர்” 

“அடேயப்பா மெடிஷின் படிக்கிறீர்களா. அதுவும் ஃபைனல் இயர்… உங்களைப் பார்த்தால் அப்படி ஒன்றும். வயதாகத் தெரியவில்லை” 

“என்ன வயது தெரியவில்லை? எனக்கு இருபத்தைந்து வயது. இந்த வயதிற்தானே பெரும்பாலானவர் ஃபைனல் எடுப்பார்கள்” அவளும் இப்போது பாரதியுடன் சேர்ந்து அரட்டையடிக்கும் ‘மூட்டு’க்கு வந்து விட்டாள் என்று அவள் குரலின் தொனி காட்டியது. 

“உங்களைப்பற்றி இந்த மடையன் ஒன்றுமே சொல்ல வில்லையே” 

”அவருக்கு மச்சாளின் வருத்தத்தில் பெரிய சோகம்”

அவள் குரலில் அனல். ஆனால் அந்தத் தொனியைப் பாரதி எப்படிக் கண்டு பிடித்தான்? 

“எனக்கு என் வேலை விடயம் பற்றிக் கதைக்க விருப்பமில்லை” அதைக் காரில் வரும் போதே சொல்லி விட்டானே. தியாகு மெளனமாய் மற்ற இருவரையும் பார்த்துக் கொண்டான். 

“பின்னேரச் சாப்பாட்டை எங்களுடன் வைத்துக் கொள்ளலாமே”. ராதிகா கடைக்கண்ணால் தியாகராஜனைப் பார்த்து விட்டுச் சொன்னாள். 

“என்ன……சாப்பாடா…… உங்களுக்குச் சிரமம் இல்லை என்றால்……” பாரதி தேனாகக் குழைந்தான். 

“இந்த மடையன் தானே ஒரு பார்ட்டிக்குப் போவதாகச் சொன்னான்?” தியாகராஜனுக்குப் பாரதியின் நடத்தை ஆச்சரியத்தை மூட்டியது. 

பாரதி கல்லூரியில் படிக்குப்போதே பெண்கள் என்றால் கொஞ்சம் ‘இளகிப்’ போவான். அந்தக் குணம் இத்தனை போய்த் வருடமாக, இந்த நேர்ஸ்மாரைக் கண்டும் தொலைய வில்லையா? 

“எங்களுக்கு ஒரு பிரச்சனையுமில்லை… எதையும் யாருடனும் பங்கு போட்டுக் கொள்வதென்றால் எங்களுக்கு நல்ல விருப்பம்” தியாகுவுக்கு அவளின் கிண்டல் ஆத்திரத்தை யுண்டாக்கியது. 

“கரும்பு தின்னக் கூலியா? உங்களுக்கு ஏன் வீண் சிரமம்”

இந்தப் பாரதி மெடிக்கல் கொலிஜ்ஜுக்குத்தானே போய்த் தொலைந்தான்? இந்போது பார்த்தால் இப்படி நடிக்கிறானே! ஓஸ்கார் கொடுக்கத் தக்கதான நடிப்புத்தான். 

“சரி நான் ஏதும் கெதியாய் சமைக்கப் பார்க்கிறேன்” அவள் எழும்பினாள். 

“நான் ஏதும் உதவி செய்ய வேணுமென்றால் மிகச் சந்தோஷப் படுவேன்” 

அவன் பின் தொடர்ந்தான். பாரதியா இப்படிக் குழைகிறான்? பாரதி தானாக இன்னொரு பியரை உடைத்துக் கொண்டான்.பிரிஜுசுக்குள் நிறைய பியர் இருக்கிறது. அவன் கூடாரமடித்துக் குடியிருந்து கொண்டு குடித்துத் தொலைக்கப் போகிறானா? இவள் விருந்துக்குக் கூப்பிட் டால் அவன் ஏன் மாட்டேன் என்று சொல்லப் போகிறான்? தியாகுவிற்குக் கோபம் வந்தது. 

ஏன் பாரதியுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் என்றிருந்தது. நேரம் போய்க் கொண்டிருந்தது. 

டெலிபோன் மணியடித்தது. 

நேரத்தைப் பார்த்தான் தியாகு. இரவு பதினொருமணி. நேற்று இந்த நேரம் இவளைக் காண எத்தனை துடிப்புடன் வந்து சேர்ந்தான்? இருபத்தி நான்கு மணித் தியாலங்களிடையில் வாழ்க்கையில் ஒருநாளும் சந்திக்காத இந்தப் படுபாவி பாரதிக்கு விருந்து சமைக்கிறாள். இதெல்லாம் எனக்குச் செய்யும் பழி வாங்கலா? டெலிபோனை எடுத்து ஹலோ என்றான். 

“ராமநாதன் பேசுறன் …… நேர காலம் போய்ப் போன் யண்ணி எழுப்புறத்துக்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கோ” அவர் தாழ்மையுடன் சொன்னார். 

“பரவாயில்லை சொல்லுங்கோ” 

“சாரதா ஒப்பிரேஷன் செய்யச் சம்மதிச்சு விட்டாள்” ராமநாதன் சொன்னவற்றை இன்னொருதரம் அசை போட்டுப் பார்த்தான். நம்ப முடியவில்லை. 

“உண்மையாகவா” 

“உண்மையாகத்தான்” ராமநாதனின் குரலில் மகிழ்ச்சி. தியாகுவுக்குப் பாரதியின் அலட்டல் மறந்து போய்விட்டது. ராதிகா பாரதியுடன் செல்லம் பண்ணுவது போல் நடந்து கொள்வது கண்ணில் படவில்லை. அவன் மனக் கண்ணில் சோர்ந்த, வெளிறிய, நோவுடன் துடிக்கும் சாரதா தோன்றினாள். 

“வசந்தி போய்ப் பார்த்தாளாம். அவள்தான் தன் மனத்தை மாற்றினாளாம்”

“யார் வசந்தி” 

“அவள் என் முதல் மனைவி” 

அத்தியாயம் – 12

திங்கட்கிழமை தியாகுவுக்கு ஒரு சோதனையான நாளாகி விட்டது. வெள்ளிக் கிழமை பின்னேரம் எடின் பரோவிலிருந்து வந்த நேரத்திலிருந்து நடக்கும் நிகழ்ச்சிகள் இவனின் வாழ்க்கையில் இதுவரை நடந்து கொண்டிருக்கும் அனுபவங்களுக்கு எதிர் மாறாகத்தானிருந்தது.

மால்க்கம் ஹரிஸன் முகத்தை நீட்டிக் கொண்டிருந்தான் “என்ன நடந்தது” ஒவ்வீசுக்குப் போய்ப் பத்து மணி வரைக்கும் மால்கத்தைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. 

“நீ இன்னும் மனேஜரைப் பார்க்கப் போகவில்லையா” மால்க்கம் வழக்கம் போல் உற்சாகமின்றிக் கேட்டான். 

தனக்கும் ராதிகாவுக்கும் பிரச்சினை நடப்பதுபோல் அவனுக்கும் லிண்டாவுக்கும் பிரச்சினை வந்திருக்குமா? ஏன் மூஞ்சியை நீட்டிக் கொண்டிருக்கிறான்.

“பதினொரு மணிக்குத் தன்னை வந்து பார்க்கச் சொல்லி ‘நோட்’ ஒன்று அனுப்பியிருக்கிறார்.” 

“குட் லக்” மால்க்கம் மேலே ஒன்றும் சொல்லாமற் போய் விட்டான். 

என்ன நடந்து விட்டது இவனுக்கு? கொம்பனியில் ஏதும் பிரச்சினையா? இவர்கள் கொம்பனி “இண்டஸ்ரி மெஷினறி” செய்வதில் பெயர் பெற்றவர்கள்.

தியாகுவும் மால்கமும் கொம்பியூட்டர் செக்ஸனில் வேலை செய்கிறார்கள். சிறிய அளவில் டிசைனிங் செய்கிறார்கள். மேலே உயர இடமுண்டு, ஆனால் இங்கிலாந்தில் உண்டாகியிருக்கும் பொருளாதார தேக்கம் இவர்கள் கொம்பனியையும் தாக்கியிருக்கிறது. 

நூற்றுக் கணக்கான சிறிய கொம்பனிகள் வாரந்தோறும் மூடப்பட்டுக் கொண்டு வருகின்றன. இவர்களிடம் ஓட கொடுக்கும் கொம்பனிகளிற் பல பொருளாதார பிரச் சினையால் திண்டாடுகிறது. ஆனாலும் கொம்பனியில் ஆள்க் குறைப்பு நடத்துவதற்கான அறிகுறிகள் ஏதும் இப்போது இல்லை. 

எப்போது பதினொரு மணியாகும் என்று காத்திருந் தவன் போல் மனேஜர் அறையுள் நுழைந்தான். 

“ஹலோ,ராஜன், கம் இன், எப்படி எடின்பரோ”, மனேஜர் மலர்ச்சியுடன் வரவேற்றார். வெள்ளைக்காரர் சிரித்துக் கொண்டே எந்தவிதமான சீரியஸான விடயத்தையும் சொல்வார்கள் என்பது அவலுக்குத் தெரியாததல்ல. 

அவன் சுருக்கமாக எடின்பரோ ட்ரெயினிங் பற்றிச் சொன்னான். “சந்தோசமாகப் போனதாக எல்லோரும் சொன்னார்கள்” மனேஜர் இன்னும் மலர்ச்சியான முகத்துடனிருந்தார். 

“மற்றப்படி ஒரு பிரச்சினையுமில்லையே” மனேஜர் ஏதோ பிரமாண்டமான விஷயத்தை அவிழ்த்து விடப் போகிறார் என்று மனம் சொல்லியது. 

ஏதும் பிரச்சினை என்று எதைப்பற்றிக் கேட்கிறார்?

சாரதாவுக்குச் சுகமில்லாமலிருப்பது இவன் மனத்தில் உண்டாகியிருக்கும் பெரிய பிரச்சினை. அதைப்பற்றி ஏன் சொல்லிக் கொண்டிருக்க இந்த மனேஜருக்கு வேண்டும்? மனேஜர் இருக்கையை விட்டெழுந்தார். 

மனேஜர் குட்டி போட்ட பூனை போல் அங்குமிங்கும் நடந்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டார், டையைச் சரிசெய்து கொண்டார். 

மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்தார். 

ஐம்பது வயதான மிஸ்டர் கிறீன் தன் வழுக்கை விழும் மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டார். 

மொட்டைத் தலையுள்ளவர்களுக்கு இருதய வருத்தம். அறிகுறிகள் கூட இருக்குமாம்; தியாகுவுக்கு ஞாபகம் வந்தது. 

பின்னர் தன் கைகளைக் கும்பிடுவதுபோல் குவித்துக் கொண்டு மேசையில் தூக்கி வைத்தார். 

“கொம்பனியில் ஆள்க்குறைப்பு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது” 

மால்க்கத்தின் முகத்தில் தெரிந்த எரிச்சலின் காரணம் இப்போது தெரிந்தது. 

இவன் பேசாமல் இருந்தான். 

“லண்டன் கிளையை முற்றாக மூடவேண்டிய நிர்ப்பந்தம். பெரும்பாலானவர்களுக்கு வேலை போகப் போகிறது. ஒரு சிலரை எடின்பரோவுக்கு மாற்ற உத்தேசித்திருக்கிறோம்” 

அவர் இப்போது கைகளை விரித்துக் கொண்டார். விரல் களால் மேசையிற் தட்டிக் கொண்டிருந்தார். ரொம்பவும் நேர்வஸ்ஸாக இருந்தார். அப்பட்டமாகத் தெரிந்தது.

என்ன கேட்பது? நான் வேலையிழக்கப் போகிறேனா அல்லது மாற்றப்படப் போகிறேனா என்று கேட்பதா?

இவன் மெளனமாக இருந்தான். வெள்ளைக்காரர் தேவையில்லாமல் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். அவன் அவர்களிடம் படித்த நல்ல விடயங்களில் அதுவு மொன்று. 

“நீ அதிர்ஷ்டசாலி என்று நம்புகிறேன்”

அவர் சிரித்தார். சிகரெட் புகைத்துக் காவியேறிய பற்கள், இவன் பொறுமையாக இருந்தான். இருதயம் நிமிடத்துக்கு நூறு தரம் துடித்தது. 

“உன்னை எடின்பரோவுக்கு மாற்றியிருக்கிறார்கள்” அவன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான் என்று நினைத்தவரின் முகம் ஏமாற்றத்தைக் காட்டியது. சாரதா சாகக் கிடக்கிறாள். உடனடியாக எடின்பரோவுக்குப் போவதா? 

அவர் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். வெள்ளை முதலாளிகள் ஒரு நிமிடத்தையும் விரயம் செய்யாதவர்கள். 

“உடனே பதில் சொல்ல வேண்டுமா” அவன் குரலில் உயிரில்லை. 

“உங்கள் ஃபியான்சே ராதிகாவுடன் கலந்தாலோசிக்கப் போகிறீர்களா” அவர் இன்னொரு தரம் தன் காவி படிந்த பற்களைக் காட்டிக் கொண்டார். 

கொஞ்ச நாளைக்கு முதல் அங்கு நடந்த பார்ட்டிக்கு அவளும் வந்திருந்தாள். அவளையிந்த காவிப் பற்களுக்கு நிறையப் பிடித்துக் கொண்டது. அடுத்த நாள் தன் மொட்டையைத் தடவிக் கொண்டு இவன் ஒரு அதிர்ஷ்டசாலி என்று பாராட்டினார். 

அவர் வாழ்க்கையில் பெரிய துரதிர்ஷ்டசாலிதான்! அவர் மனைவி தன்னிடம் படித்த மாணவனுடன் போய் விட்டாள். அதன் பின் இவரின், தலைமயிர் எல்லாம் உதிர்ந்துவிட்டது. பாவம் மனிதர். 

“உங்கள் மறுமொழி எனக்கு வெள்ளிக்கிழமை தேவை” அவர் கையை நீட்டினார். கைகுலுக்கப் போகிறார். இனி வெளியே போகலாம் என்பதை இப்படித்தான் நாகரீகமாகக் காட்டிக் கொள்வார்கள். 

இவன் எழுந்து கொண்டான். அடுத்த திங்கட்கிழமை வரைக்கும் பொறுக்க முடியுமா என்று கேட்க நினைத்தான். ஏனென்றால் சனி ஞாயிற்றுக்கிழமையில் ராதிகா வருவாள். இது பற்றிக் கலந்து ஆலோசிக்கலாம். ஆனால் அவனுக்கு ஒரு கிழமை தேவையில்ல. இப்போதே என்ன செய்வது என்று முடிவு கட்டிவிட்டான். வெள்ளிக்கிழமை சொல்லிக் கொண்டாற் போகிறது. 

‘ஸீயு’ சொல்லிவிட்டு ஒவ்வீசை விட்டு வெளியேறினான். 

கண்டீனில் மால்க்கம் காத்திருந்தான். 

“பிளடி ஸிற்” மால்க்கம் கொம்பனியைத் திட்டிக் கொண்டான். இங்கிலாந்துப் பொருளாதாரத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்த கொன்சர்வேட்டிவ் கட்சியைத் திட்டிக் கொண்டான். மார்க்கிரட் தச்சரையும் திட்டினான். 

லன்ஞ் ரைம் என்றும் பார்க்காமல் இவனையும் இழுத்துக் கொண்டு ‘பாரு’க்குப் போனான். விஸ்கியில் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டான். அதன்பின் மார்க்கிரட் தச்சரை இழிந்த பாஷையில் திட்டிக் கொண்டான். அரச குடும்பத்தை ஆபாசமாகப் பேசினான்; அரசியல் ரீதியாய் அவன் ஒரு ‘அனாக்கிஸ்ட்’, எல்லாரையும் திட்டித் தீர்ப்பான். அவன் தாய் பரம்பரையில் ஐரிஸ், தகப்பன் இங்கிலிஸ் குடித்தால் ஐரிஸ்காரன். குடிக்காவிட்டால்தான் ஒரு இங்கிலிஸ் ஜென்ட்டில்மன் என்று தன்னைத்தானே சுய விளம்பரம் செய்து கொள்வான் மால்க்கம். 

சினேகிதனைப் பார்த்துக் கொண்டிருந்தான் தியாகு. எடின்பரோவுக்குப் போகும் உத்தியோகத்தர்களில் அவனும் ஒருத்தன். அவனுக்கு எடின்பரோ நன்றாகப் பிடிக்கும். அதற்குக் காரணம் ஸ்கொட்டிற்தான் விஸ்கி உற்பத்தி செய்கிறார்கள் என்பது மட்டுமல்ல. இவனை எப்போதும் தன் கட்டுப்பாட்டில் – லண்டன் சூழ் நிலையில் வைத்துக்கொள்ள நினைப்பவள் அவனின் காதலி லிண்டா. 

அவள் பிரபல டிசைனிங் கொம்பனி ஒன்றில் பார்ட்னராக லண்டனில் வேலை செய்கிறாள். தன் வேலை முன்னேற் றத்தில் மிகக் கவனமுள்ளவள். அதே நேரம் மால்க்கத்தில் சிறிதும் நம்பிக்கையில்லாதவள். 

“குடித்துவிட்டு இந்த மால்க்கம் எனக்குப் பக்கத்தில் படுத்தால் இவன் வாயில் வரும் பெண்கள் பேரை எல்லாம் குறிப்பில் எழுதினால் ஒரு அகில உலக வைப்பாட்டிகள் சங்கம் இவனுக்கு அமைத்துக் கொடுக்கலாம்” என்று ஒப்பாரி வைப்பாள் லிண்டா. மதுவிலும் மங்கைகளிலும் மால்க்கத்திற்கு ஒரு மயக்கம்! பாவம் லிண்டா. 

“நீ என்ன செய்யப் போகிறாய். ராதிகா உன்னை நம்பலாந்தானே. நீ ராதிகா பூசை செய்யும் பக்தன் இல்லையா” 

சாரதாவையும் தன்னையும் சேர்த்து ராதிகா திட்டுவதை இவன் இன்னும் கேட்கவில்லையே. 

மால்க்கம் தன் நெருப்பு நிறத் தலையைப் பிய்த்துக் கொண்டான். 

எடின்பரோ போகாவிட்டால் அவனுக்குப் பைத்தியம் பிடிக்கும். மால்க்கம் எடின்பரோ போனால் அவன் காதலிக்குப் பைத்தியம் பிடிக்கலாம். 

தியாகு நாளையிலிருந்து இரண்டு நாளைக்கு லீவு கேட்டிருந்தான். பேர்ஸனல் டிப்பார்ட்மென்ட்டுக்குப் போய் அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் போய்விட்டான். 

மாலையில் ஹொஸ்பிட்டலுக்குப் போக வேண்டும். நாளைக்கு சாரதாவுக்குச் சத்திர சிகிச்சை நடக்கும். கொன்சேன்ட் நேற்றுத்தான் அவள் ஒப்பிரேஷன் பத்திரத்தில் கையெழுத்திட்டாள்.

எஸ்கலேட்டரில் ஏறிக் கொண்டிருந்த தியாகுவின் முகத்தில் ஒரு சிறிய புன்சிரிப்புத் தோன்றி மறைந்தது. ஒரு காலத்தில் சத்தியமூர்த்தி மாமாவின் பதுளை நகரில் அமைந்த வீட்டின் விறாந்தையிலிருந்து கொண்டு சாரதா வும் அவனும் நட்சத்திரங்களை எண்ணி விளையாடியது நினைவில் வந்தது. 

ஆடி மாதக் கோடைவெயில் காலத்தில் அவனுடைய தகப்பன் அருளம்பலம் தியாகுவுடன் தன் மைத்துனா
சத்தியமூர்த்தியைப் பார்க்கப் போயிருந்தார். சத்திய மூர்த்தியின் தங்கை காந்திமதி – தியாகுவின் தாய், வேலைக்காரி சாரதாவுடன் குடித்தனம் நடத்தும் தமையன் வீட்டில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொண்டாள். 

தன் கணவர் அருளம்பலத்துடன் காந்திமதி போட்ட சண்டை எல்லாம் விழலுக்கிறைத்த நீராய்ப் போய் விட்டது. 

”உன்னைத் தொட முதல் உன் அண்ணன்தான் எனது மிக சமுதாயத்தின் நெருங்கிய சினேகிதனாக இருந்தான். நிர்ப்பந்தங்களுக்குப் போலியாக வாழ்ந்து தொலைக்காமல் மனித நேயத்துக்கு, உண்மையான காதலுக்கு மதிப்புக் கொடுக்கும் என் சினேகிதனை உனக்காக ஒதுக்கத் தயாராயில்லை”

அருளம்பலம் தன் மகன் தியாகுவையும் இழுத்துக்கொண்டு கொழும்பிலிருந்து பதுளைக்கு ரெயின் எடுத்து விடுவார். தியாகு என்ற பெயரை வைத்தவரே சத்தியமூர்த்திதான். காந்திமதி தியாகுவை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த போது சத்தியமூர்த்தியின் தாய் இறந்து விட்டாள். தன் மகன் ஒரு வேலைக்காரியை மனைவியாக்கிக் கொண்டதில் அவள் இருதயம் புண்பட்டு விட்டது. அந்தக் கிழவியின் தலைமுறையில் சிங்கள ஏழைப் பெண்களும், இந்திய வாலிபர்களால் வசதிபடைத்த ஏழைப் பெண்களும் அனுபவித்துக் கழித்துவிடப் பிறந்தவர்கள். ஒரு இந்தியக் கூலியைக் குடும்பக் காரியாக்கி விட்டானே! 

மத்தியதரத் தமிழ்த் தாயால் அதைத் தாங்கமுடியவில்லை எப்போது இறந்து தொலைவேன் என்று சாப்பிடாமல் இருந்து தவம் செய்தாள். 

சாரதா பிறந்து விட்டாள் என்று கேள்விப்பட்டதும் செல்வமலர் வந்து மாமியார் காலைப்பிடித்துக் கதறினாள். 

பின்னர், தன் மனம் போனபடி சத்தியமூர்த்தியின் குடும்பத்தைத் திட்டித் தீர்த்தாள். 

கிழவி படுத்த படுக்கையாய் இருந்த போதும் தன் மகன் தன்னைப் பார்க்கக் கூடாது என்று சட்டம் பிறப்பித்து விட்டாள். 

அவள் இறந்தபோது சாரதா எழும்பி நடக்கத் தொடங்கி யிருந்தாள், குழந்தையையும் தூக்கிக் கொண்டு தாயின் செத்த வீட்டுக்கு வந்திருந்தார் சத்தியமூர்த்தி. 

சினேகிதன் அருளம்பலம் மனைவியைப் பார்த்தார்; காந்திமதி விறுவிறுவென்று உள்ளே போய்க் கதவைப் பூட்டிக் கொண்டாள். “அந்தச் சனியன் என் வீட்டில் கால் எடுத்து வைக்க விடமாட்டேன்’ பிள்ளை வயிற்றை தாங்கிப் பிடித்துக் கொண்டு அவள் சத்தம் போட்டாள். செத்த வீட்டுக்கு வந்திருந்த நல்லநாயகம் தத்தித் தத்தி நடந்து வந்த சாரதாவைத் தூக்கிக் கொண்டார். சத்தியமூர்த்தி தாயின் கடைசிக் கருமங்களை முடித்துக் கொண்டார். முகத்தில் உள்ள துயரம் தாயைப் பிரிந்த தாலா அல்லது தான் பட்ட அவமானத்தாலா என்று யாருக்குத் தெரியும். அருளம்பலம் சினேகிதனை வழிய னுப்ப ஸ்ராண்டுக்கு வந்தார். 

சாரதா அவரைப் பார்த்துச் சிரித்தாள். அருளம்பலம் கண்களில் நீர் பொங்கியது. குழந்தையை வாங்கி ஆசை தீர முத்தம் கொடுத்தார். 

“இத்தனையழகு உனக்குத் தேவைதானா” குழந்தையிடம் பைத்தியக்காரன் போற்கேட்டார். “உலகத்தையே ஏளனம் செய்து சிரிக்கிறாளே. இந்தச் சிரிப்பிற்தான் எத்தனை அழகு” அருளம்பலம் தேம்பினார். 

“நீ வித்தியாசமானவன், உன்னைப் பைத்தியகாரன் என்று வீட்டில் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஆத்மீக உணர்வுகளில் அசையாத நம்பிக்கையுண்டு. அது தான் செந்தாமரையின் புனித அன்புக்கு உன்னைத் தியாகம் செய்து விட்டாய்” 

“பெரிதாகத் தூக்கி வைச்சுப் பேசாதே அருள், எனக்கு மற்றவர்கள் மாதிரி போலியாய் வாழத் தெரியவில்லை. கொழும்பு நகரும் செல்வமலரும் எனக்கு மிக அந்நிய மான விடயங்கள். செந்தாமரை என் உள்ளுணர்வின் ஒரு பங்கு. சாரதா என் எதிர்காலக் கனவுகளின் ஒரு பிரதிநிதி” 

“சாரதாவை எப்படி வளர்க்க எதிர்பார்க்கிறாய்” 

சத்திய மூர்த்தி பொக்கை வாய் திறந்து சிரிக்கும் மகளைப் பார்த்தார். பின் நிர்மலமான நீல வானத்தைப் பார்த் தார். “என் மகள்… என் மகள் பதினாறு குழந்தைகளைப் பெற வேண்டும், அவர்கள் உலகத்தில் உள்ள அத்தனை கலைகளையும் படிக்க வேண்டும். என் மகள் கலையில் சரஸ்வதியாய் இருக்க வேண்டும்.” 

“ஆகா ஆகா என்ன கற்பனை, இப்போதே வீணையைத் தூக்கிக் கொடுத்து விடாதே” 

“அவளுக்கு எப்படி வாழ்க்கையமைகிறதோ தெரியாது. எனக்கு ஏதும் நடந்தால் என் குழந்தையைப் பார்த்துக் கொள்வாயா”

“என்ன சத்தியமூர்ந்தி இப்படிக் கேட்கிறாய், உன்னு டைய வயதுதானே எனக்கும், எனக்கு ஏதும் நடக்காது என்று என்ன நிச்சயம். காந்திமதி வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை ஆனால் அவனைக் கேட்போம்” இருவரும் சிரித்துக் கொண்டார்கள். 

“ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று காந்திமதி சொல்லிக் கொண்டிருக்கிறாள்… ஒரு நல்ல பெயர் சொல்லேன்’ அருளம்பலம் கேட்டார். 

சத்தியமூர்த்தி சிந்தித்தார். 

“தியாகராஜன் என்று பெயர் வையேன்” 

“இசையிற் பெரிய மேதையாக வருவான் என்று எதிர்பார்ப்பா” 

“அதுவும் ஒரு காரணம், அடுத்தது என் மகளுக்காக உனது மனைவியின் வரட்டுக் கௌரவங்களை அவன் தியாகம் செய்ய வேண்டுமே” 

அருளம்பலம் தன் சினேகிதனின் குறும்புப் பேச்சைக் கேட்டுச் சிரித்தார். 

“பயப்படாதே. யார் வெறுத்தாலும் அவன் விரும்பினால் நான் உன் மகளைச் செய்து வைக்கிறேனே.” 

“என் மகள் உங்கள் குடும்பத்தை விரும்ப வேண்டுமே” சினேகிதர்கள் இருவரும் பலத்த சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டார்கள். 

அருளம்பலம் அதன்பின் சத்திய மூர்த்தியைக் கண்டதும் தியாகராஜன் ஐந்து வயதாக இருக்கும் போதுதான். அப்போது சாரதாவுக்கு சரி கம பத நிசா பழக்கிக்கொண் டிருந்தார் சத்தியமூர்த்தி. 

அவள் காலில் சங்கிலி போட்டுக் கலீர் கலீர் என்று நடப்பதை தன் ஓட்டை விழுந்த பல்லுடன் ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தான் தியாகு. 

இவர்கள் பதுளைக்குப் போனவிடயம் கேள்விப்பட்டு காந்திமதி இன்னொரு தரம் சத்தம் போட்டதுதான் மிச்சம். அருளர் அதன்பின் ஒரு வருடத்துக்கு ஒருதர மாவது பதுளைக்குப் போகாமல் விடமாட்டார்.

கொழும்பு நகர அவசர வாழ்க்கையும் பதுளை நகரின் இனிய இயற்கை அழகும் நேர் விரோதமானவை. வெள்ள வத்தையில் காலை ஏழரை மணிக்கு வெளிக்கிட்டு ஒன்பது மணிக்குக் கோட்டை ஸ்ரேசனில் பதுளை ரெயின் எடுத்து மலை நாட்டை ஊடறுத்துக் கொண்டு செல்லும் ரெயினிற் செல்வதே ஓர் இனிய அனுபவம். 

இளவயதிற் தகப்பதுடன் போனவன் பன்னிரண்டு லயதானதும் பாடசாலை விடுமுறை விட்டதும் மாமா வீட்டுக்குப் போகலாமா என்று கேட்க ஆரப்பித்து விட்டான். 

மலைநாட்டின் இயற்கையழகு யாரையும் மதி மயங்கச் செய்யும். மலையிடுக்குகளால், மலைவிளிப்புகளில் உட ரெட்ட மெனிக்கா’ என்று பெயர் கொண்ட ரெயின் போய்க் கொண்டிருக்கும். 

பூமித்தாயின் உயர்ந்த மார்பகங்காளாகத் தெரியும் மலை முகடுகள். ஒன்றோடு ஒன்றிணைந்து அல்லது பிரிந்து பாயும் சில சிறு நதிகள், உலகத்து ரகசியத்தை எல்லாம் வைத்திருக்குமாற் போல அடர்ந்து வளர்ந்த அடக்கி காடுகள். அதற்கப்பால் சாரதா! 

தியாகராஜனைத் தம்பி என்று சொல்வாள் சாரதா. செந்தாமரைக்கும் சத்தியமூர்த்திக்கும் சாரதாவுக்குப் பின் வேறொரு குழந்தையும் பிறக்கவில்லை. 

“உலகத்து அழகை எல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டு என் குழந்தை பிறந்திருக்கிறாளே அதே பெரிய அதிர்ஷ்டம் தானே” பெருமிதத்துடன் சொல்வார் சத்தியமூர்த்தி. 

அவர்கள் – சத்தியமூர்த்தி, செந்தாமரை, சாரதா மூவரும் வாழ்ந்த உலகம் தியாகராஜனால் அனுபவிக்க முடியாத புதிய உலகம். அந்த உலகம் அவற்றின் வாழ்க்கை. தனித்துவமானது. மலைச் சாரலில் அமைந்திருந்தது அவர்கள் வீடு. மலையடிவாரத்தில் ஏழைத் தொழிலாளி களின் குடிசைகள். சாரதாவும் தியாகுவும் குழந்தை களாக இருக்கும்போது, நீலவானில் மினுங்கும் நட்சத்திரங்களைப் பற்றித் தங்கள் கற்பனையை அவிழ்த்துவிடுவார்கள். 

“செத்துவிட்ட மனிதர்கள்தான் வானத்தில் நட்சத்திரமாய்த் தெரிவார்களாம்” 

“அப்படி என்றால் பூமியில் நட்சத்திரமாய்த் தெரிவது யார்” தியாகு மலையடிவாரத்தில் புகார் நடுவில் மின்னும் ஏழை இந்தியனின் வீட்டு வெளிச்சத்தைப் பற்றிய விளக்கம் தெரியாமல் சாரதாவைக் கேட்டான். அவள் இவனை உற்றுப் பார்த்தாள். 

“அவங்க தேயிலை பறிக்கிற மனிசங்க” என்றாள்.

அந்த நினைவு அவன் அடிமனத்தில் பதிந்து விட்டது. 

யாழ்ப்பாணத் தமிழனின் அரசியல் தந்திரத்தால் உரிமைகளையிழந்த தமிழ்நாட்டுப் பிரஜைகள் வானத்துத் தாரகைகள் தானே! 

பிரபஞ்சத்தின் எத்தனையோ இயற்கை நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்தத் தொழிலாளர்களின் இறப்பும் பிறப்பும் நடந்து கொண்டிருக்கிறதா? 

1977ஆம் ஆண்டு வந்தது. தமிழ் ஈழம் கேட்டுத் தமிழர் பாராளுமன்ற ரீதியாக வாக்களித்து விட்டார்கள். இலங்கை மத்திய தர தமிழ் வர்க்கம் யூனிவர்சிட்டிக்குப் போக முடியவில்லை. அரசாங்க உத்தியோகங்களைத் தாங்களே பெறவேண்டும், என மனத்தில் வைத்துக் கொண்டு தமிழர் உரிமை பறி போவதாகக் குரல் எழுப்பி நாட்டைத் துண்டு போட வாக்குப் பெட்டிகளை நாடிவிட்டார்கள். ஆங்கிலேயர்களிடம் ஏன் அவர்கள் ஈழம் கேட்கவில்லை? வட்டுக் கோட்டை மகாநாட்டுக்கு எத்தனையோ மாதங்களுக்கு முன் லண்டனில் பேசி முடிக்கப்பட்ட ‘தமிழீழம்’ சிங்கள இனவாதிகளின் கொடூர உணர்ச்சியைத் தூண்டியது. 

அந்தத் தமிழீழத் தாகத்துக்குப் பலியானவர்கள் இந்தியத் தொழிலாளிகள். யாழ்ப்பாணத்துத் தமிழன் உயர்த்திய குரலுக்கு இந்தியத் தமிழரின் குரல்வளை நெருக்கப் பட்டது. 

77ஆம் ஆண்டுக் கலவரத்தில் தமிழீழத்துக்கு ஓடிப் போ என்ற கூக்குர லுடன் சிங்கள வெறியர்கள் இந்தியத் தொழிலாளர்களைக் கொலை செய்தார்கள். பெண்களைக் கற்பழித்தார்கள். லயன்களைத் தீக்கிரையாக்கினார்கள்.

சாரதா அப்போது நல்லநாயகம் தம்பதிகளுடன் கொழும்புக்குப் போய்விட்டாள். 

மலைநாடு ஆறாய் பெருகியது இரத்தத்தால். தன் உயிரிலும் உயிரான செந்தாமரை…… சத்தியமூர்த்தியை ஏன் குற்றுயிரும் குலையுருவுமாய்த் தப்ப விட்டார்கள்? 

அவரால் செந்தாமரையின் கதறல்களை மறக்க முடிய வில்லையே! அவள் அந்த மூர்க்கர்களால்…

நல்லநாயகம் சில நல்ல மனிதர்களுடன் சேர்ந்து வவுனியா வில் புனர்வாழ்வுக்கழகம் அமைக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தார். சத்தியமூர்த்தியின் ஆத்மா செந்தாமரை யுடன் பதுளை மலைச்சாரலில் எப்போதோ சங்கமமாகி விட்டது.உடம்பு மட்டும் தன் மகளுக்காக ஊசலாடிக் கொண்டிருந்தது. 

“இவர் இறந்துவிட்டால் என் கெதி என்ன” சாரதாவுக் குப் பதினேழு வயது. இந்த வயதிற்தானே இவளின். தாயை இவர் ஏற்றுக் கொண்டார். 

இந்தக் குழந்தையின் கதி என்ன? 

“நல்ல நாயகம் உனக்குக் கோடி புண்ணியம் கிடைக்கும். என் மகளைக் காப்பாத்து’ சத்தியமூர்த்தி தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டார். 

“எனக்குச் செய்த பாவத்துக்குக் கடவுள் அவரைத் தண்டிக்கத் தானே வேணும்” செல்வமலர் திட்டிக் கொண்டாள். 

சத்தியமூர்த்தியும் சாரதாவும் தெகிவளையில் இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 

தியாகு அடிக்கடி போவான். 

இவனுக்கு அப்போது பதினைந்து வயது. அவன் தாய் காந்திமதி இவனை எவ்வளவோ தடுத்தும் கேட்டாமல் மாமாவைப் பார்க்கப் போவான். தகப்பன் அருளம்பலம் சாரதாவை வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வேன் என்று தன் மைத்துனரிடம், அருமைச் சினேகிதரிடம் சொல்ல முடியாத நெருக்கடி. 

“அந்த வேலைக்கார நாயின் மகள் இந்த வீட்டிற் காலடி எடுத்து வைத்தால் நான் தற்கொலை செய்து சாவன்” என்றெல்லாம் காந்திமதி திட்டித் தீர்ப்பாள். 

எப்போதோ போக வேண்டிய உயிர் சாரதாவின் பத்தொன்பதாவது வயது வந்த ஒன்றிரண்டு நாட்களிற் போய் விட்டது. 

அவள் ஏ லெவல் முடித்திருந்தாள். படிக்க வேண்டிய கெட்டிக்காரி. நல்லநாயகம் அப்போது லண்டனுக்கு வர முயற்சி செய்து கொண்டிருந்தார். 

செல்வமலர் நாகமெனச் சீறினாள். “என்ன கொடுமை; அந்தத் தேவடியாள் மகளை வைத்திருப்பதா” 

“பெரியம்மா நான் உங்கடை வேலைக்காரியா இருக்கேனே” சாரதா தானாகப் போனாள். வேறு ஒரு வழியும் இல்லை. 

செல்வமலர் தனக்கு முன்னால் இருக்கும் தன் கணவரின் மகளை நேரே பார்த்தாள். 

அடேயப்பா இப்படியும் ஒரு கவர்ச்சியா?

இவள் தாயும் இவள் மாதிரியே இருந்தாள் போலும்……

தன் முன்னால் நீலப் பாவாடையும் தாவணியும் போட்டு, சிவப்புச் சட்டையின் விளிப்பில் சங்குபோல் ஒரு கழுத்துடன் வந்து நிற்கிறாளே இந்தத் தேவதையை வேலைக்காரி என்று ஏற்பதா? 

செல்வமலர் மலடி – கல்யாணமாகி நான்கு வருடமாய் ஒரு ‘பூ காய்’ கிடைக்காதவள்; அப்படிக் கிடைத்திருந்தால் ஒரு வேளை சத்தியமூர்த்தி அவளை விட்டு செந்தாமரை காலடியில் சங்கமமாகி விட்டிருக்க மாட்டாரோ? 

சாரதாவுடன் தியாக ராஜா. அருளம்பலம், நல்லநாயகம் தம்பதிகள் வந்திருந்தனர். 

வாய் கூசமாற் தன்னை ‘பெரியம்மா’ என்கிறாளே! இவள் குரலென்ன வீணையின் நாதமா? 

மெல்ல அடி எடுத்து வந்தாளே. அந்த நடையென்ன பரத நாட்டிய பாவங்களா? 

‘பெரியம்மா’ என்றாளே. அது என்ன பிரபஞ்சத்தைப் பிளந்து வந்த பாசக் குரலா? 

உன்னால் ஆளமுடியாத அன்பின் சின்னம் நான், என்னை ஏற்றுக்கொள் என்கிறாளோ, 

தியாகு செல்வமலர் மாமியைப் பார்த்துக் கொண்டு நின்றான். 

சத்தியமூர்த்தி இறந்தபின், நல்ல நாயகம் லண்டன் போக முதல் சாரதாவை ஒரு பெண்கள் விடுதியிற் சேர்த்து விட்டுப் போக யோசித்தார். அவள் ஒரு தனியார் கொம் பனியில் டைப்பிஸ்ட் ஆகச் சேர்ந்திருந்தாள். 

“மாமா நான் அனாதைதான் ஆனா அதற்குமுன் பெரியம் மாவை ஒருக்கால் பார்க்கக் கூட்டிக் கொண்டு போங்கோ” 

நல்ல நாயகம் அருளம்பலத்தின் ஆலோசனையை நாடினார். அருளம்பலத்தால் மறுப்புச் சொல்ல முடிய வில்லை. 

சாரதாவையும் கூட்டிக் கொண்டு செல்வமலர் வீட்டுக்குப் போனபோது தூரத்தில் கோயில் மணி ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. கொள்ளுப்பிட்டிக் கடற்கரை மாலை நேர ஆரவாரத்தில் மூழ்கிக் கிடந்தது. இவர்களைக் கண்ட ஆச்சரியம் அவளை விட்டுப் போக ஒரு நிமிடம் எடுத்திருக்க வேண்டும். 

வந்தவர்களை எப்படி வரவேற்பது? அல்லது ஏன் இங்கே வந்தீர்கள் என்று கேட்டுத் தொலைப்பதா என்றெல்லாம் யோசிக்க முதல் ‘பெரியம்மா’ என்று கூப்பிட்டாளே இவள். குரலிற்தான் என்ன கனிவு. அத்துடன் ஒரு கம்பீரம் வேறு. 

இவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என்று அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். எப்படி எதிர் நோக்குவது இந்தச் சந்தர்ப்பத்தை? 

சாரதா தாமதிக்கவில்லை. தன்னையும் தன் தாயையும் இந்த மத்திய தர வர்க்கத் தமிழர்கள் எப்படி நடத்துவார் கள் என்று தெரியும். 

“பெரியம்மா உங்களின் வேலைக்காரியா இருக்கிறேன்” என்றாளே! 

அன்றிரவு தியாகராஜா நித்திரை கொள்ளவில்லை. நீலப் பாவாடை தாவணியுடன் சாரதா கனவு காட்டினாள். 

அந்தக் கண்களின்  கம்பீரத்தை அவன் முன்னர் ஒரு  நாளும் சந்தித்ததில்லை. 

பதினேழு வயதுப் பையன் நீலப் பாவாடை தாவணியைக் கனவு காணலாமா? 

உடம்பு வியர்த்தது மட்டுமா கட்டில் நனைந்தது.தியாகு நீண்ட நாட்களாகச் சாரதாவைப் பார்க்காமல் இருந் தான். அவளை ஏன் பார்க்க வேண்டும்? அவள் தான் ஒவ்வொரு நாளும் அவன் கனவில் வந்து தொலைக்கிறாளே! 

அவன் ஐந்து வயதுப் பையனாக இருக்கும்போது பனி படர்ந்த புல்தரையில் இவனோடு சேர்ந்து நடந்தவள் இன்று பத்தொன்பது வயதில் இவன் பருவ மேடையில் நடனமாடுவதை அறிந்து கொள்வாளா? 

அம்மாவுக்குப் பயந்தில்லை. ஆனால் இவனாகவே சாரதாவைப் பார்ப்பதைக் குறைத்துக் கொண்டான். 

செல்வமலரும் சாரதாவும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ளட்டும் என்று தன் மனத்தைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டான். 

செல்வமலர் தன் மைத்துனி காந்திமதியிடம் வரும்போது சாரதாவைப் பற்றிப் பேசும்போது அவள் உண்மைகளை மறக்கப் படும்பாடு இவனுக்குத் தெரியும். 

”ஏன் எனக்குத் தேவையில்லாத வம்பு. யாராவது ஒரு நல்ல இடத்தைப் பாருங்கோ, எனக்கு மட்டுமா அவள் பொறுப்பு” செல்வமலருக்குச் சாரதாவின் அழகின் சொரூபம் பயத்தைக் காட்டியிருக்க வேண்டும்.

சாரதாவுக்கு இருபத்து ஏழு வயதாகி விட்டது. பூமியைப் பிளந்து நிற்கும் கனவாக ஒளிர்கிறாள். இவளுக்குத் தகுந்தவன் யார்? பாவம் செல்வமலர். 

ராமநாதன் அப்போது இலங்கைக்கு பெண் வேட்டையாட வந்திருந்தார். கல்யாணம் ஆகி ஆறு மாதத்திலேயே மனைவியைப் பிரிந்து கொண்டாராம். தனக்கு அடங்கி நடக்கத் தக்கதாக யாரையும் பார்க்க வந்திருப்பதாகத் தன் சொந்தக்காரர் செல்வமலருக்குச் சொல்ல வந்தார். 

அவர் வந்த நேரம், அவர் சாரதாவைப் பார்த்த நேரம் ஒன்றும் தெரியாது தியாகுவுக்கு. 

“ஏதோ நான்தான் வேணுமென்று செய்து வைத்தது எண்டு நீங்க சொன்னாலும் சொல்லுவியள். இந்தப் பெட்டையை ராமநாதன் கேட்டிருக்கிறார்.” 

செல்வமலரின் குரல் அவசரப்பட்டது. ஏதோ கேட்பவ னின் தலையில் இந்தச் சனியனைக் கட்டிவிட வேண்டும். அவள் யோசித்திருந்ததாக எந்தச் சாடையும் அவள் குரலிலில்லை. 

“எத்தனை வயது வித்தியாசம்… அந்த ஆள் முதலில் கல்யாணம் செய்தவரா?” அருளம்பளம் விரிவாகக் கேட்டார். 

“என்ன மண்ணாங்கட்டிக் கேள்விகள். லண்டன் மாப் பிள்ளை சுட்டிவைத்தால் என்ன” காந்திமதியின் படபடப்பான குரலுக்கு அப்பால் ஏதோ பயம் இருப்பதைத் தியாகு அறியாமல் இல்லை. 

இவன் சாரதாவைச் சந்திக்கப் போனபோது அவள் ராம நாதனுடன் சேலை செலக்ட் பண்ணப் போய் விட்டதாகச் சென்னாள். அன்றிரவு சாரதா கனவில் வரவில்லை; ஏனென்றால் இவன் தூங்காமல் விழிந்திருந்து அழுதான். 

– தொடரும்…

– பனி பெய்யும் இரவுகள் (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 1993, பாரி நிலையம், சென்னை

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *