பனி பெய்யும் இரவுகள்





(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

வார்ட் ஸிஸ்டர் அவனை சாரதாவின் கட்டிலருகே காட்டிக் கொண்டு போனாள்.
“இந்த நேரம் விசிட்டிங் செய்வது சரியில்லை, இந்த வார்ட் டொக்டர் சிபாரிசு செய்தபடியால் உங்களை அனுமதிக்கிறேன்” மெல்லிய குரலில் சொன்னாள். ஐரிஸ் நாட்டைச் சேர்ந்தவள் என்பது குரலிற் தெரிந்தது.
“தாங்க்யு சிஸ்டர்”
சாரதா நல்ல நித்திரை போலும், அவள் கையில் ஏதோ ஒரு ட்ரிப் ஏற்றப் பட்டிருந்தது. அவள் முகம் இரவின் மங்கிய ஒளியில் மஞ்சளாய்த் தெரிந்தது. கண்கள் தாமரை மொட்டுக்கள் போல் மூடிக் கிடந்தன.
சாதாரணமானவை அவள் கண்கள். அவை மூடிக் கிடந்தன. அவளை இந்த நிலையில் அவன் ஒரு நாளும் கண்டதில்லை.
‘சிலிப்பிங் பியூட்டி’ என்று மனம் சொல்லியது. அவள் நிலை ஒன்றும் பியூட்டியாய் இல்லை என்று தெரியும். ஒரு வருடம் அவளை அவன் சந்தித்ததில்லை. ஒன்றிரண்டு முறை டெலிபோனிற் பேசியிருக்கிறான். ஒரு வருடத்தின் பின் இந்த இளம் காலை நேரத்தில் ஒரு நோயாளியாய் அவளைச் சந்திப்பான் என்று கனவும் காணவில்லை.
எந்தக் கலைஞனையும் அல்லது கலையுணர்வு உள்ளவர் களையும் கவருபவை அவளுடைய அழகிய – சிவந்த இதழ்கள். இந்த மங்கிய வெளிச்சத்தில் வெளிறிப் போய்த் தெரிந்தன. மெல்லிய மூச்சு நிதானமாய் வந்து கொண்டிருந்தது. நித்திரைக்கு மருந்து கொடுத்திருப்பதாக வார்ட் ஸிஸ்டர் சொல்லி இருந்தாள். அதுதான் இந்த ஆழ்ந்த நித்திரை போலும். அவன் அவள் பக்கத்திலிருந்த கதிரையில் உட்கார்ந்தான்.
ஏதோ கனவோ அல்லது இவன் வந்திருக்கிறான் என்ற உணர்வோ சாரதாவின் வாய் ஏதோ முணுமுணுத்தது. என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை.
ஏதோ சொல்லிப் புலம்புகிறாள்.
என்னைப் பற்றிக் கனவு காண்பாளா? பைத்தியக்காரத் தனமாக நினைத்துக் கொண்டான். அப்படி நினைத்துக் கொண்டதற்காகத் தன்னையே நொந்து கொண்டான்.
இவளின் நோயைப் பற்றி ராமநாதன் இவனுக்கு எதுவும் சொல்லவில்லை. டொக்டர் பாரதியைத் தற்செயலாகக் கண்டது, ஏதோ கடவுளைக் கண்டதுபோல் இருக்கிறது. இல்லை என்றால் அவனுக்குச் சாரதாவின் நிலை பற்றி ஒன்றுமே தெரியாமலிருந்திருக்கலாம்.
“நான் சாரதாவின் டொக்டர், அதற்காக அவளின் நோயைப் பற்றியோ உன்னிடம் செல்ல முடியாது. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன். அவளுக்குச் சத்திர சிகிச்சை உடனடியாக நடக்க வேண்டும். எவ்வளவு தாமதிக்கிறதோ, அவ்வளவுக்கு அவள் உயிருக்கு ஆபத்து இருக்கலாம்”
“சத்திர சிகிச்சை ஏன் செய்ய முடியாது” தியாகு அவசரமாய்க் கேட்டான்.
“அவள் சம்மதிக்க மாட்டாளாம்” பாரதியின் குரல் தோல்வியைத் தொனித்தது.
“சம்மதிக்க மாட்டாளா?” தியாகு நம்ப முடியாமல் கேட்டான்.
“தியாகு, எனக்கு அவள் மனநிலையைப் பற்றி விளக்கிக் கொண்டிருக்க இது நேரமில்லை. அவள் கணவன் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டார்.”
“என்னை ஒன்றும் வெட்டிக் கிழிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டாளாம்”.
பாரதி தன் நேரத்தைப் பார்த்தபடி சொன்னான்.
“ஏன் சாரதா ஒப்பரேஷன் செய்ய ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறாய்”
மெல்லிய குரலில் அவள் காதில் கிசுகிசுத்தான் தியாகு.
இவன் குரல் அவள் புலன்களில் ஏறியிருக்குமா? எத்தனை ஆழமான நினைவுகளோடு என்ன கனவு காண்கிறாளோ?
”ஏன் சாரதா ஒப்பரேஷன் செய்யமாட்டேன் என்கிறாய்”
அவன் இந்தக் கேள்வியை எத்தனை தரம் கேட்டான் என்று அவனுக்கே தெரியாது. மெல்லிய மூச்சொலிகள் தவிர அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
“நீ கொஞ்சம் பெரியவனாய் இருந்தால் இவளைக் கவனிக்கச் சொல்லி உன்னிடம் கேட்கலாம். இவளின் தலையெழுத்துத்தான் தம்பி தங்கச்சியில்லாமல் பிறந்து விட்டாளே”
பெரிய மாமா சத்தியமூர்த்தி இப்படித்தான் ஒருநாள் சொன்னார். அப்போது இவனுக்குப் பதினைந்து வயது அவளுக்குப் பதினேழு வயது.மாமா மரணப் படுக்கையி லிருந்தார். அவர் செந்தாமரையுடன் வாழ்கிறார் என்ற ஆத்திரத்தில் அவரின் குடும்பம் அவரைத் தூரவிலக்கி வைத்திருந்தது. தியாகராஜனும் அவன் தகப்பன் அருளம் பலமும் மட்டும் சத்தியமூர்த்தி மாமாவைத் தூரத்தில் வைக்கவில்லை. அருளம்பலம் சத்தியமூர்த்தியின் தங்கையான காந்திமதியைக் கலியாணம் செய்ய முதலே இளமை யிலிருந்தே சத்தியமூர்த்தியின் நண்பனாக இருந்தவர். சத்தியமூர்த்தி உத்தியோகம் பார்க்கப் போன இடத்தில் இன்னொரு பெண்ணுடன் (அதுதான் செந்தாமரை, சாரதாவின் தாய்) உறவு கொண்டதும் அவளுடன் வாழ்க்கை அமைத்துக் கொண்டதும் மத்திய தரவர்க்க மான அவரின் மனைவி குடும்பத்தை அவரிடமிருந்து தூர விலகப் பண்ணி விட்டது.
இதெல்லாவற்றையும் இப்போது இப்போது நினைத்து என்ன பயன்? சத்தியமூர்த்தி மாமாவின்- செந்தாமரையின் காதலின் சின்னம் இன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.
தியாகராஜன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் சாயல் அப்படியே சத்திய மாமாவை உரித்த சாயல், மாமா நல்ல நிறமும் சாந்தமான போக்கு முடையவர். தியாகுவின் தாய் முன் கோபமுடையவள். தமையனுக்கு எதிர்மாறானவள். தியாகு எப்போதும் அடக்கமாக இருப்பான்.
“நீயும்தான் உன் மாமா போல் இருக்கிறாய், அவரை மாதிரியே உன்னை நம்பியிருக்கும் மனைவியை விட்டு விட்டு யாரும்…” சத்தியமூர்த்தியின் மனைவி செல்வமலர் கண்களில் நீர் வரும்.
அவள் ஒன்றும் மாமா சத்தியமூர்த்தியை நம்பியோ அல்லது அன்புடன் எதிர்பார்த்தோ இருந்ததாக தியாகு வின் இளம் மனதில் ஞாபகமில்லை. அவர்களின் சிக்கலான வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முதலே மாமா இறந்துவிட்டார். மாமா இறக்க பல நாட்கள் முன்னரே செந்தாமரை இறந்து விட்டாள். இயற்கை மரணமல்ல. 1977ம் ஆண்டு இலங்கை அரசாங்கம், இலங்கை வாழ் தமிழர்களுக்கெதிராக ஏவிவிடப்பட்ட பயங்கர வகுப்பு வாதத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இந்தியத் தமிழரில் செந்தாமரையும் ஒருத்தி.
சிங்கள இனவாதம் சகிக்காமல் தமிழ் ஈழம் கேட்டதன் பலன் 1977ம் ஆண்டின் இனக் கலவரம். அதில் பலியா னோர் பலர் பிரஜாவுரிமையுமில்லாத இந்தியத் தோட்டத் தொழிலாளர். இலங்கைத் தமிழரின் ஈழக் கோரிக்கைக்குத் தங்கள் உயிரைக் கொடுத்த தியாகிகளில் ஒருத்திதான் சாரதாவின் தாய் செந்தாமரை.
அவளின் இழப்பு மாமாவை வாழ்க்கையின் எதிர் காலத்தை இழக்கப் பண்ணிவிட்ட து. இளம் பெண் சாரதாவுடன் கொழும்புக்கு வந்து நோயாளியாய் இருதய நோயுடன் போராடி விட்டு மகளை அனாதையாக்கி விட்டு இறந்து விட்டார்.
வாழும் வரை தன்னுடன் அன்பில்லாமல் வாழ்ந்துவிட்டு இறந்த பின் அவருக்கும் வேறு யாரோ ஒருத்திருக்கும் பிறந்த காதற் சின்னமான சாரதாவைத் தனியாக விட்டுப் போன ஆத்திரத்தை செல்வமலர் பதினேழு வயதான சாரதாவிற்கு இழைத்த கொடுமையை அருளம் பலத்தாற் தாங்கமுடியவில்லை. சினேகிதனின் மைத்துனனின் மகள் வேலைக்காரிபோல் நடத்தப்பட்ட கொடுமையைத் தாங்க முடியாமல் அவர் மனைவியிடம் சீறியதை நேரில் கண்டவன் தியாகராஜன்
“அண்ணா செய்த அநியாயத்துக்குச் செல்வமலர் பழி வாங்காமல் சாரதாவை வீட்டில் வைத்திருப்பதே பெரிய காரியம்” காந்திமதி தமையன் செய்த ‘குற்றத்தை’ வாழ் நாள் பூராவும் மறக்க மாட்டாள் போலிருந்தது.
செல்வமலர் பழிக்குப் பழிவாங்கத்தான் பதினைந்து வருட வித்தியாசமுள்ள ராமநாதனைச் சாரதாவுக்குச் செய்து வைத்தாளா?
“இவளுக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பார்த்தாயா. காந்திமதி லண்டனில் இருக்கிற எங்கள் சொந்தக்காரப் பையன் ஒருத்தன் இவளைக் கலியாணம் செய்யச் சம்மதித்திருக்கிறான்.?”
செல்வமலர் குரலில்தான் எத்தனை சந்தோசம்!
தன் வாழ்க்கையைப் பங்கு போட்டவளின் மகளுக்கு ஒரு நல்ல வாழ்வைச் செய்து வைப்பதுதான் செல்வமலரின் ‘தூய’ நோக்கமாக இருக்கும் என்று தியாகராஜன் நம்பத் தயாராயில்லை, ஆனால் அவளைத் தடுக்க முடிந்ததா? தியாகு பெருமூச்சு விட்டுக் கொண்டான்.
“ஏன் ஒப்பரேஷன் செய்து கொள்ள மாட்டேன் என் கிறாய் சாரதா’ இப்படி இன்னொருதரம் வாய்விட்டுக் கேட்ட பின் அவன் அழுதே விட்டான்.
அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ‘அவன் அழுதது என்பது குறைவான காரியம்.
அவன் ஆண் மகன் அழக்கூடாது!
அவனுக்குத் தெரியும் அவள் ஏன் ஒப்பரேஷன் செய்து கொள்ள மறுக்கிறாள் என்று.
செல்வமலரின் பிடியிலிருந்து ‘தப்ப’ யாரையாவது கலியாணம் செய்யத் தயாராயிருந்தாள். சொல்லி வைத் தாற்போல் ராமநாதன் அந்த நேரம் பார்த்து பெண் வேட்டையாட கொழும்புக்குப் போயிருந்தார். இருபத் தாறு வயதில் திருமணம் செய்து, கொஞ்ச நாளிலேயே விவாகரத்து செய்து விட்டு இப்போது முப்பத்தைந் தாவது வயதில் ஒரு பெண் தேடி வந்திருந்தார் ராமநாதன்.
தியாகராஜனுக்கு அந்தப் பழைய நினைவுகளை ஞாபகப் படுத்த விருப்பமில்லை.
“ஏதோ வாழ்ந்து விட்டுச் செத்துத் தொலைந்து போகத் தானே.” இப்படி அடிக்கடி சொல்வாள் சாரதா.
உள்ளக் குமுறல்களைக் காட்டிக் கொள்ளாமல் “ஏதோ” வாழ்ந்து கொண்டிருந்தவளா சாரதா?
“என் தலைவிதி எனக்கொரு தம்பியில்லை, தங்கச்சி யில்லை. அள்ளியணைக்க ஒரு குழந்தையுமில்லை. நீயும் என்னைக் கோபித்தால் நான் எப்படித் தாங்குவேன்”
இப்படி ஒருதரம் அழுதவள்தான் போன வருடம் “ராஜன் நீ என்னிடம் உண்மையாக அன்பு வைத்திருப்பதானால் என்னை வந்து பார்க்காதே” என்று கெஞ்சினாள். அவளை அப்படிக் கெஞ்சப் பண்ணியது ராதிகாவின் குரூரமான நடத்தைகள்தான் என்பது அவனுக்குத் தெரியாததல்ல.
எவள் வந்து தியாகராஜன் வாழ்க்கையில் சந்தோசம் தருவாள் என்று நினைத்தானோ அந்த ராதிகாவே அவள் வாயில் சாரதாவை எப்படி எல்லாம் பேசிவிட்டாள்?
உலகத்துக் கொடுமைகளுக்கெல்லாம் உன்னைப் பலி கொடுக்கப் போகிறாயா சாரதா? வயிற்றில் ஒரு குழந்தை தருவதற்குப் பதில் ஒரு கொடிய புற்று நோயைக் கடவுள தந்துவிட்ட வேதனையில் சாகத் துணிந்து விட்டாயா சாரதா”
அவன் மெல்ல முணுமுணுத்தான்.
அவள் அசைவது போலிருந்தது. அவள் முகம் அவன் பக்கம் திரும்பியது. கண்கள் மெல்ல விழித்துக் கொண்டன. தான் ஏதோ கனவு காணுகிறேன் என்ற பிரமையோ என்னவோ கண்களை வெட்டி விழித்தாள்.
மெல்லிய வெளிச்சத்தில் அவள் கண்களில் தொக்கி நின்ற கேள்வியைப் புரிந்து கொண்டான் தியாகு.
“என்னை இப்படி ஏமாற்றலாமா சாரதா” அவன் ஒரு கேள்வியைக் கேட்பான் என்று வாழ்க்கையில் ஒரு நாளும் அவன் நினைத்ததில்லை.
போன கிழமை எடின்பரோ மலைச்சாரல் கிழறிவிட்ட எத்தனையோ இளமை நிகழ்ச்சிகளின் நெகிழ்ச்சி, இன்று இந்தக் கொடிய பனி பெய்யும் இருலொன்றில் லண்டன் ஆஸ்பத்திரியில் அனாதையாய் அவளைக் கண்டபோது அவனால் தாங்க முடியவில்லை.
”என்னில் உண்மையான அன்பிருந்தால் என்னை விட்டுத் தூரப் போய்விடு என்றாய். அதற்காக நீ என்னிட மிருந்து தொலைந்தே போகலாமா சாரதா” அவனுக்கென்ன பைத்தியமா. இப்படிப் பேசுகிறாளே! அவள் இப்போது நன்றாக விழித்துக் கொண்டாள்.
“அழாதே ராஜன், நான்…” அவள் குரல் அடைத்துக் கொண்டது.
”இந்த நேரத்தில் என்ன செய்கிறாய்” அவள் குரல் மிக மிகப் பலவீனமாக இருந்தது.
“நீ ஹொஸ்பிட்டலில் இருப்பதாக கொஞ்ச நேரத்துக்கு முன்தான் தெரியும்… அதுதான் ஓடி வந்தேன்.”
வெளிறிப் போயிருந்த அவள் இதழ்களில் ஒரு புன்சிரிப்பு. இந்தச் சிரிப்பை அவன் கண்டு ஒரு வருடமாகி விட்டது. மின்னலென வந்து மழை பெய்யும் ஒரு மோகனச் சிரிப்பு. இன்னொருதரம் காணமாட்டோமா? என்று தவிக்கும் அழகிய சிரிப்பு.
“நீ என்ன டொக்டரா உன்னுடைய அவள் தானே டொக்டராகப் போகிறாளே. அவளையும் சேர்த்துக் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே”
சாரதா என்ன கிண்டலா செய்கிறாள். ராதிகாவைப் பற்றி இவளுக்கு என்ன தெரியும்? அல்லது அவளைச் சரியாகப் புரிந்து கொண்டு இப்படிச் சொல்கிறாளா? பக்கத்தில் இருந்த நோயாளி “நேர்ஸ்” என்று கூப்பிட்டாள். நேர்ஸ் வந்தாள். இவன் இன்னும் சாரதாவின் பக்கத்திலிருப்பதைப் பார்த்து விட்டு “கூடிய விரைவில் நீங்கள் இடத்தைக் காலி செய்தால் நன்றாய் இருக்கும்” என்று அழகிய சிரிப்புடன் சொன்னாள்.
“என்னடாப்பா, விடியற் காலையில் இப்படிப் பெண்கள் வார்ட்டில் நின்று தொணதொணக்கிறாய்.” என்பதன் தமிழாக்கமே அதுவா!
எதுவாக இருந்தால் என்ன, அவன் நீண்ட நேரம் அந்த இடத்தில் இருக்க முடியாது.
“ஒப்பிரேஷன் செய்யச் சரி என்று சொல்லேன் சாரதா”
அவன் அவசரமாகச் சொன்னான். அவள் அவனை வெறித்துப் பார்த்தாள்.
“நான் ஒப்பிரேஷன் செய்து கொள்ளாவிட்டால் உனக்கென்ன” என்பது போன்ற பார்வையது.
“நாளைக்கு வருகிறேன்”
அவன் வார்ட்டை விட்டு வெளியே வந்தபோது மழை இன்னும் சிணுங்கிக் கொண்டிருந்தது. தேம்ஸ் நதியில் உல்லாசப் படகுகளிலிருந்து வந்த ஓசை இன்னும் அடங்க வில்லை.
வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் இன்னும் உல்லாசப் பிரயாணிகள் – இரவில் லண்டனின் அழகை ரசிக்கும் இளம் டூரிஸ்ட் ஒன்றிரண்டு பேர் நடந்து கொண்டிருந்தார்கள்.
பாராளுமன்றம் கம்பீரமாகத் தலை தூக்கி நின்றது. ‘பிக்பென்’ மணிக்கூடு மூன்று மணிகளைப் பெரிய சத்தத்துடன் அலறி முடித்தது.
நேற்றுப் பின்னேரம் எடின்பரோவிலிருந்து வெளிக்கிட்ட தற்கும் இப்போது நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எத்தனை வித்தியாசம். பன்னிரண்டு மணித்தியாலங்களில் எத்தனை மாற்றம், சில வேளைகளில் வாழ்க்கையில் ஒன்றுமே நடக்காதது போல இருக்கும், சில வேளைகளில் ஏன் எல்லாம் ஒரேயடியாக வருகின்றன?
ஒரு நாளில் எத்தனை வித்தியாசமான நிகழ்ச்சிகள்! வீட்டுக்குப் போனதும் என்ன நடக்கும்? ராதிகா என்ன மாதிரி மூட்டில் இருப்பாள்?
அத்தியாயம் – 5
மார்கட்டுகளுக்குச் சாமான்கள் கொண்டு போகும் லொறிகள் இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தன. வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது ராதிகா முன் ஹாலில் சோபாவில் சோர்ந்து போய்ப் படுத்திருந்தாள்.
டெலிவிஷன் இன்னும் ஓடிக் கொண்டிருந்தது. அவளை எழுப்பவோ அல்லது அவளுக்கு ஒரு பிளாங்கெட்டைக் கொண்டு வந்து மூடிவிடவோ அவன் யோசிக்கவில்லை. கதவைப் படாரென்று சாத்தினான்.
டெலிவிஷனை ஓவ் பண்ணினான். அவள் சட்டென்று கண் விழித்தாள். அவள் மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்துக் கொண்டாள்.
அவன் அவற்றை ஒன்றும் பெரிது படுத்தாமல் விறுவிறு என்று மேலே ஏறினான். உடம்பு சோர்ந்து போய் இருந்தது.
இவன் தன்னிடம் ஏதும் பேசுவான் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும். ராதிகா இவனைப் பின் தொடர்ந்து வருவது கேட்டது.
அவன் சட்டையைக் கழட்டி ஹாங்கரில் மாட்டிவிட்டு கட்டிலிற் பொத்தென்று விழுந்தான்.
கம்பளிக்குள் நுழையும் வரை உடம்பு சில் என்று குளிர்ந்தது. ராதிகா அவன் முன் வந்து நின்றாள்.
சண்டைக்கு ஆயத்தம்! அவனால் சண்டை பிடிக்க முடியாது.
அவன் திரும்பிப் படுத்தான்.
“ராதிகா தயவு செய்து என்னைக் குழப்பாதே. ஐ’ஆம் வெரி ரயேட்”
‘ஹொஸ்பிட்டலுக்குப் போக மட்டும் களைப்பில்லையாக்கும்.”
“ஹொஸ்பிட்டலில் யாரும் யுத்தப் பிரகடனம் செய்ய வில்லை”.
“நான் ஒன்றும் சண்டைக்கு வரவில்லை.”
“சந்தோசமான விடயம்”
அவன் மீண்டும் அவள் பக்கம் திரும்பினான்.
அறையின் மங்கிய வெளிச்சத்தில் அவளின் கவர்ச்சி அவனை என்னவோ செய்தது.
சில்க் நைட்கவுணுக்குள்ளால் அவள் அழகிய பருவம் அவனைக் குத்தியது.
இதுக்குத்தானே எடின்பரோவிருந்து ஓடோடி வந்தான். சினேகிதர்கள் காரில் ஏறிக் கும்மாளம் அடித்துக் கொண்டு வரும்போது, எக்ஸ்பிரஸ் ரெயில் எடுத்து இவளிடம் தானே ஓடிவந்தான்.
ராதிகா அவன் மன நிலையை ஒரு நொடியில் உணர்ந்து கொண்டாள். படபட வென்று ஒன்றிரண்டு கம்பளிகளை அலுமாரியிலிருந்து எடுத்தாள். அவனுக்குப் பக்கத்தில் கிடந்த ஒரு தலையணையைத் தூக்கிக் கொண்டாள்.
“தனிக் குடித்தனமா” அவனின் தூக்கக் கலக்கம் பறந்து விட்ட து, குரலில் குறும்பு, அவளிலுள்ள கோபமும் குறைந்து கொண்டு வந்து கொண்டிருந்தது.
சாரதா ஹொஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருப்பதை இவள் வேண்டுமென்று தான் சொல்லாமல் விட்டாள். இப்போது அது பற்றித் தர்மம் ஆரம்பித்தால் ‘நான் வேண்டுமென்றா செய்தேன், ஏதோ மறந்து விட்டது என்று சொன்னாலும் சொல்லலாம். அது உண்மையான காரணமாக இருக்காது.
ஏன் அந்தச் சண்டையைத் தொடங்கவேண்டும். அவன் தான் சாரதாவைப் பார்த்துவிட்டு வந்துவிட்டானே.
அவள் விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறினாள்.
என்ன செய்வது. பின்னால் ஓடிப் போவதா?
இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தில், அவளைத் தன் பாட்டுக்கு விட்டுவிடுவதுதான் சரியானது.
இது வரைக்கும் அவளைப் பொறுத்தவரையில் அவன் பின்னால் ஓடியதாகத் தெரியவில்லை. தனது அடக்க மான குணாதிசயங்களுக்கும் அவனுக்கும் சரிவராது என்று முடிவு கட்டி விட்டுச் சாரதாவுக்கு தன் முடிவைச் சொன் னான், ராதிகாவைச் சந்தித்த காலத்தில்.
அத்தோடு தனக்கு யாரையோ பிடித்து முடிச்சுபோட்டு வைப்பதைத் தவிர்க்கச் சொல்லி விட்டான். அப்போது அவனது குடும்பம் இலங்கையிலிருந்து கனடா குடிபெயர முடிவு கட்டிக் கொண்டார்கள். லண்டனில் இவன் படிப்பு முடிந்ததும் தங்களுடன் வந்து சேரச் சொல்லி விட்டார்கள்.
அம்மா தன் பிள்ளைகளைகள் எல்லோரையும் தன் சுண்டு விரல் ஆணைக்குள் கட்டுப்பட வைக்கப் பார்க்கிறாள்.
உனக்கு லண்டன் பிடித்துக் கொண்டால் அங்கேயே இரு. அத்தோடு உனக்கு விருப்பமான யாரையும் வேண்டு மானாற் கட்டிக் கொள். நான் ஒரு நாளும் பழைமை வாய்ந்த தகப்பனாக இருக்க விரும்பவில்லை. இருக்கப் போவதுமில்லை. இருபத்தியொரு வயதுக்கு மேல் ஒரு மனிதனுக்கு இன்னொருத்தர் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்ற பழைய கருத்தை எதிர்ப் யவன் நான்.
ஏன் இதெல்லாம் எழுதுகிறேன் என்றால் உனது தங்கை ராகினியின் கல்யாணம் எப்படி நடந்தது என்று உனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான். அவள் தன்னுடன் படித்த யாரையோ விரும்பினாளாம். உமது அம்மாவும் மாமி செல்வமலரும் சேர்ந்து தாங்கள் தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையைச் செய்யச் சொல்ல ராகினியை வற்புறுத்துவதைப் பார்க்கக் கோபம் வருகிறது. அம்மா இலங்கையை விட்டு எங்காவது போய்விடவேண்டும் என்பதற்கு இலங்கையில் எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மட்டும் காரணமல்ல சொற்படி கேட்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாள்.
“நீ எப்போதாவது என் ஆலோசனை பற்றி யே என்று நினைக்கிறேன். எனக்கு எதையும் வைக்கத் தெரியாது. உனது வாழ்க்கையை நீ அத்திவாரம். போடும்போது உனக்கு விருப்பமான ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ஒரு கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். மனமும் உடலும் வேறு வேறு விதமான தேவைகளை எதிர்பார்க்கும். ஆத்மா இன் னொரு சாமான். வாழ்க்கையில் இன்னுமெதையோ எதிர் பார்க்கும்.
இருபத்தியொரு வயதுக்குப் பின் ஒரு ஒப்பமில்லாத முடிவுக்கு வர உன்னால் முடியும் என்று நினைக்கிறேன். அவனின் அப்பா இப்படித்தான் எழுதினார். அருளம்பலம் மாஸ்டர் எப்படி காந்திமதி என்ற பெண்ணுக்குக் கணவனாக வந்து சேர்ந்தார் என்று அவன் பல தடவை யோசித்திருக்கிறான்.
அவனுடைய தாய் காந்திமதியும் தகப்பன் அருளம்பலமும் படிப்பிலோ பழக்க வழக்கங்களிலோ மிகவும் எதிர்மாறா னவர்கள். அம்மா இந்தியாவில் படித்தவர். அப்போது தான் மாமா சத்தியமூர்த்தியைச் சந்தித்தாராம். இந்தியா சுதந்திரமடைய ஒரு வருடம் முந்தி இந்தியா போனவர்கள் தமிழ்நாட்டில் அண்ணாதுரையும் கருணாநிதியும் தமிழ் உணர்ச்சியைத் தட்டிக் கொண்டிருந்த நாட்களிற் திரும்பி வந்தார்கள் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.
தியாகு அவனுடைய இளவயதிலிருந்தே அப்பாவின் பிள்ளை. அவரோடு நெருக்கமாகப் பழகியவன். அவனுக்கு அவன் தாயை அணைத்துக் கொஞ்சியது ஞாபகமில்லை. ஆனால் அப்பாவின் தோள்களில் ஏறி கொழும்புக் கடற் கரை மண்ணில் குதித்து விளையாடியது ஞாபகமிருக்கிறது.
அப்பா அவனின் சினேகிதன் இப்படி ஒரு மகனுக்கு அப்படி ஒரு தகப்பன் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று அவன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.
லண்டனுக்கு வந்து முதல் ஒன்றிரண்டு வருடங்கள் வீட்டு ஞாபகம் அவனை மிகவும் வாட்டியது. எண்ணெய் ததும்பிய தோற்றமளிக்கும் தேம்ஸ் நதிக் கரையில் நடக் கும் போது அவன் மனம் கொழும்புக் கடற்கரைக்கு ஓடிப் போகும்.
குறும்புத்தனமான குழந்தைபோல் கரையைத் தட்டி ஓடும் கடல்லைகளுடன் ஓடிப் பிடித்த ஞாபகம் மனதை வாட்டும்.
வெயில், குளிர் என்று மட்டும்தானா பருவம் மாறும்? துக்கம், சந்தோஷம் என்றும் மாறிக் கொண்டிருந்தது. அவன் லண்டனுக்கு வந்த போது சாரதா வீட்டில் தங்கி நிற்காதது சந்தோசமான விடயமாகத்தான் இப்போது தெரிகிறது.
சாரதாவுக்கு நிச்சயம் அவன் மனநிலை தெரிந்திருக்க வேண்டும் அவள் அவனை வற்புறுத்தவில்லை. சொந்தக் காரர்கள் வீடுகளில் பேத்டேயும் கல்யாண வீடுகளும் அடிக்கடி நடக்கும், அவன் போக மாட்டான்.
ஒருதரம் அவனை வற்புறுத்தி இழுத்துக் கொண்டு போனது ராதிகாவின் பேத்டே பார்ட்டிக்குத்தான். அதன் பின் தற்செயலாக ராதிகாவை அவன் நாஷனல் பிலிம் தியேட்டரிற் கண்டான்.
இவளைக் கண்டதும் அவனுக்கும் ஆச்சரியம் வந்திருக்க வேண்டும்.”தமிழர்கள் என்றால் பிலிம் தியேட்டர் பக்கம் வர மாட்டார்கள் என்று நினைத்தேன்” அவனுக்கு எதையும் மறைத்துக் கதைக்க முடியாது என்பது ஒரு நிமிடத்தில் அவனுக்குப் புரிந்தது.
அவன் அன்று ஒரு லத்தின் அமெரிக்கப் படம் பார்க்க சினேகிதருடன் போயிருந்தான். அந்தச் சினேகிதன் மால்க்கம் ஹரிஸன். அவள் அதேபடத்திற்கு தன் சினேகிதி லிண்டா பிரவுண் என்பவளுடன் வந்திருந்தாள்.
இவனைத் தன் பதினெட்டாவது பிறந்த தினவிழாவிற் கண்டவள் ஒரு வருடம் முடிய நாஷனல் பிலிம் தியேட்டரில் காண்கிறாள்.
அன்று ஒரு அழகான மாலை நேரம், அருமையான வசந்தத்தின் பிரதிபலிப்பு தெரிந்தது. வெயிலைக் கண்டால் மனிதர் முகத்திலும் சந்தோஷம் தெரியும். தேம்ஸ் சூரிய வெளிச்சத்தில் வெள்ளி அலைகளைப் பிரதி பலித்தது. தங்களைக் கண்டதும் ‘ஹலோ’ என்று கூடச் சொல்லாமல் தமிழர்களின் கலையுணர்வை விமர்சனம் செய்வது அவனுக்குச் சிரிப்பாக இருந்தது.
“இது என்னுடைய சினேகிதன் மால்க்கம் ஹரிஸன்” தியாகு தன் நண்பனை அறிமுகம் செய்து வைத்தான்.
“இது என்னுடைய சினேகிதி லிண்டா பிரஷண்” ராதிகாவை மால்க்கத்துக்கு உடனே பிடித்து விட்டது. லிண்டாவுக்கு மால்க்கத்தைப் பிடித்தது என்று சொல்லாமலே தெரிந்தது.
என்ன ஆச்சரியம், அன்று அந்த வசந்த கால மாலை நேரத்தில் உண்டாகிய உறவு இன்று வரையும் தொடர்கிறது.
“கல்லூரி தொடங்கவில்லையா” அவன் கேட்டான்.
“தொடங்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு ஸ்கொட் லாந்தில்தான் இடம் கிடைத்தது. அவ்வளவு தூரம் போய்ப் படிக்க அம்மா விடமாட்டாளாம். அத்தோடு இந்த வருடம் நான் ஹொலிடே போகப் போகிறேன். டொக்டராக வந்தால் ஒரு வருடம் லீவு எடுக்க முடியாது.”
பத்தொன்பது வயதில் இப்படிச் சொல்கிறாளே!
“நாங்கள் இருவரும் இந்த வருடக் கடைசியிலிருந்து ஆறு மாதம் இந்தியா போக இருக்கிறோம்.” லிண்டாவின் குரல் மிகவும் மெல்லிய குரல், அவளுடைய ஆங்கிலம் லண்டனுக்கு அப்பாற்பட்டவன் என்பதைக் காட்டியது. லிண்டாவைப் மிகவும் சங்கோஜமான பெண் என்று பற்றி நினைத்தான். ஆனால் அவள் என்னவென்றால் இந்த வாயாடி ராதிகா மாதிரியே பேசுகிறாள்.” எனது தகப்பன் டெல்லியில் வேலை செய்கிறார்” லிண்டாவே சொன்னாள்.
“நாங்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுவோம்’ ராதிகா சிரித்தாள். வசந்த காலத் தென்றல் அவளின் கூந்தலுடன் விளையாட, மேற்கே செல்லும் சூரியன் அவள் கண் களுக்குள் பிரதிபலித்தான்.
ஒரு வினாடி. ஒரே ஒரு அந்த வினாடி, அவளுடைய அந்தச் சிரிப்பு, தேம்ஸ் நதிக்கரையின் பின்னணியில் அவள் சாய்ந்கிருந்த கோலம் எல்லாம் சேர்ந்தோ என்னவோ அவள் மனத்தில் ஏதோ ஒரு சங்கற்பத்தை யுண்டாக்கி விட்டது.
சுதந்திரமாக வளர்ந்து, சுதந்திரமாகச் சிந்திக்கத் தெரிந்தவள். அழகிய கலைகளையும் அருமையான படங் களையும் ரசிக்கத் தெரிந்தவள். டொக்டராக வந்தாலும் இப்படியே இருப்பாளா, அல்லது சிறுமிகளுக்குள்ளும், பிளட்குறூப்ஸுக்குள்ளும் மனிதர்களை எடை போடு வாளா?
“நான் இவளுடையவனாக இருந்தால் எத்தனை அதிர்ஷ்டசாலி”! தான் அப்படி நினைத்துக் கொண்டது முட்டாள் தனமான விஷயமோ என்று தெரியாது, அவன் கொழும்பில் மிகக் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்டவன். அல்லது தான் கட்டுப்பாடாக வளர்க்கப்பட்டவன் என்றாவது நினைத்துக் கொண்டிருப்பவன் அவனுக்கு அப்போது இருபத்து நாலு வயது. வாழ்க்கையின் வசந்த மான பருவம். இளம் மங்கைகளின் சிரிப்பில் உலகின் ஆக்கத்தையும் அழிவையும் எடைபோடும் வயது. எதையும் செய்ய முடியும் என்று நினைத்துக் கொள்கிற வயது.
நாஷன பிலிம் தியேட்டருக்குக் கொஞ்சத் தூரத்தில் யாரோ ஒரு பாடகன் ஏதோ பாடிக்கொண்டிருந்தான். என்ன பாட்டு, காதற் பாட்டுத்தான்.
“இந்தியாவுக்குப் போனால் போஸ்ட் கார்ட் போட மறந்து விடாதீர்கள்” மால்க்கம்தான் சொன்னான்.
“நீ என்ன நினைக்கிறாய், இவர்களுக்குப் போஸ்ட் கார்ட் போடலாமா” ராதிகா குறும்புத்தனமாகக் கேட்டாள். அவளின் பார்வை. தியாகுவில் நடனமாடிக் கொண்டி ருந்தது. ஒரு இளம் பெண் இப்படி நேரடியாய்ப் பார்த்தது அவனுக்குப் பழக்கமில்லை. அவன் மிகத் தர்ம சங்கடப்பட்டான்.
“இவர்கள் விலாசம் தந்தால் எங்களிடமிருந்து ஒன்றிரண்டு போஸ்ட் கார்ட் கிடைக்கும் அதிர்ஷ்டசாலி களாக இவர்கள் இருக்கலாம் என்பதில் எனக்கு ஆச்சரிய மில்லை” சங்கோஜி என்று நினைக்கப் பண்ணிய லிண்டாவா இப்படிக் கிண்டல் செய்கிறாள்.
நண்பர்கள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள். அதன்பின் அந்தப் பெண்கள் இந்தியா போக முன்னர் நால்வரும் சேர்ந்து அடிக்கடி சினிமா, நாடகம் எனப் போயிருக்கிறார்கள்.
ஒரு மாலை நேரம் ராதிகா அவன் அறைக்கே வந்தாள். அவன் அப்போது ஒரு இந்திய குஜராத்தி வீட்டுக்காரர் வீட்டில் இருந்தான். அவர்களின் பெண்கள் யாரும் இப்படி ஒரு வாலிபனின் அறைக்குப் போயிருக்க மாட்டார்கள் என்பது அவர்கள் இவனைப் பார்த்த பார்வையிலிருந்து தெரிந்தது.
“உங்கள் சாரதா எங்கள் வீட்டுக்காரர்களைச் சாப் பாட்டுக்குக் கூப்பிட்டிருப்பதாக அக்கா சொன்னாள்.” அவள் அப்படித் திடீரென்று அங்கு வந்த அதிர்ச்சியே அவனால் தாங்கிக் கொள்ளக் கொஞ்ச நேரம் எடுத்தது. இப்போது உங்கள் சாரதா என்று அவள் சொன்னது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
“ஸீ இஸ் வெரி ஃபொண் ஆப் யு” ராதிகா இவனை உற்றுப் பார்த்தாள்.
“ஆமாம் எனது மைத்துனி என்பது உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்”.
“ஸீ இஸ் வெரி பியூட்டிபுல்” ராதிகா இன்றும் இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.ஏன் இங்கிலிசில் பேசித் தொலைக்கிறாள்.
“இருக்கலாம்” அவன் அசட்டையாகச் சொன்னான்.
“இட்ஸ் பிற்றி ஸீ இஸ்…” அவள் என்ன சொல்ல நினைத்தாளோ தெரியாது சொல்ல வந்தவளின் வார்த் தைகள் அப்படியே நிற்க இவன் கண்களுடன் அவள் பார்வை தழுவிக் கொண்டது.
அவன் தர்ம சங்கடத்துடன் தன் பார்வையைத் திருப்பிக் கொள்ளவில்லை. அவளை அப்படியே அள்ளி எடுத்து முத்தமிடவேண்டும் போலிருந்தது.
“யு ஆர் ஸோ பியூட்டிபுல் ரூ” அவன் அப்படிச் சொல்வான் என்று அவனே எதிர்பார்க்கவில்லை. அவள் கண்களில் தோன்றி மறைந்த ஒரு சிரிப்பு “உன்னைப் பற்றி எனக்குத் தெரியும்” என்று சொல்லியது.
அவள் அவன் முன் நின்றால் ஆடிப்போய்விடுவான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
அத்தியாயம் – 6
அவன் காலையில் எழும்பியபோது இரவில் நடந்த தெல்லாம் கனவு போலிருந்தது. நித்திரை கொள்ள முதல் அவனின் அறையை விட்டு ஓடிய ராதிகாவின் ஞாபகம் வந்தது.
அவளை நினைக்கப் பாவமாகவும் இருந்தது. எனக்காக நேற்றெல்லாம் காத்திருந்தவள். இரவில் அவ்வளவு தூரம் கண்டிப்புடன் நடந்திருக்கக்கூடாது.
இன்னுமொரு யோசனை வந்து மனம் மாற முதல் தடதட வென்று படியிறங்கிறான். சோபாவில் கம்பளிக் குள்ளாய்ப் படுத்திருந்தாள் ராதிகா. எத்தனை பொல்லாத வாய் இவளுக்கு, மோதிரம் போட்டுக் கொண்ட உடனேயே இவ்வளவு ஆட்டிப் படைக்கிறவள் தாலி கட்டிக் கொண்டால் என்ன பாடு படுத்தப் போகிறாள்.
நீண்ட நேரம் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். எழுப்புவதா? விடுவதா?
மனித மனம் ஆசைக்கும் கோபத்துக்கும் இருளில் அடிமையாகக்கூடியது என்பது அவனுக்குத் தெரியும்.
அவளுடன் சமாதானம் பண்ண அவனின் உள்மனது ஆசைப்பட்டாலும் அவள் நேற்று நடந்து கொண்ட விதத்தினாலுண்டான கோபம் இன்னும் தீரவில்லை.
கம்பளிப் போர்வைக்குள் எவ்வளவு அடக்கமாகத் தூங்கு கிறாள்? இவன் நரம்புகளில் முறுக்கேற்றி, இரத்த நாளங் களில் அக்கினியாய் ஊற்றெடுக்கப் பண்ணுபவள் எவ்வளவு அடக்கமாகத் தூங்குகிறாள்.
பக்கத்தில் அணைத்திருந்து தாலாட்டவேண்டும் போன்ற குழந்தைத்தனம் அவள் முகத்தில்.
அவள் குழந்தை தானே! கஷ்டங்கள் தெரியாமல், துன்பங்களை அனுபவியாமல் வளர்ந்தவள். குழந்தை மனம் கொண்டவள். ஏனென்றால் அவளுக்கு இந்தச் சிக்கலான உலகத்தின் கொடுமைகள் தெரியாது.
பருவங்கள். படிப்புக்கள், காதல் என்றெல்லாம் திட்ட மிட்டப்படி நடந்துகொண்டு போகின்ற அவள் வளர்ச்சி யில் அவன் படும் துன்பத்தை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறில்லையா?
அவன் குனிந்து அவள் முகத்தில் முத்தமிட்டான்.
பஞ்சுபோல் மென்மையான உடம்பு. அவளுக்கு முகத்தில் பருவக் குறியாக வரும் ஒரு பருக்கள் கூட இல்லை. இருபத்தைந்து வயதாகிவிட்டது. இன்றும் அந்த முகத்தில் எத்தனை தூய்மையான பாவம், குழந்தைத் தனம்.
அவனால் நீண்டநேரம் தன் உணர்ச்சிகளையடக்க முடிய வில்லை. அவன் பிடியில் அவள் கொடியாய்த் துவண்டாள்.
வெளியில் இன்னும் மழை பொழிந்து கொண்டி ருந்தது. சனிக்கிழமையின் ஷொப்பிங் ஆரவாரம் இன்னும் வெளியிற் தொடங்கவில்லை.
இவர்களுக்கென்று இந்த உலகமே மௌனமாக இருப்பது போலத் தோன்றியது. இவன் படுக்கையறைக்கு அப்பாலுள்ள செரி மரம இப்போதே துளிர்க்கத் தொடங்கி விட்டது. தை மாதம் துளிர் விடும் ஒன்றிரண்டு மரங்களில் செரிமரமும் ஒன்றாக இருக்க வேண்டும். மாடிக் கூரையின் மூலையில் கூடு கட்டியிருக்கும் வெள்ளைப் புறா இவன் முத்தங்களுக்குத் தாளம் போட்டது,
அவள் அவனின் அன்பில் திளைத்தாள். இரவு நடந்த எதையும் இருவரும் பேசிக் கொள்ளப் போவதில்லை என்பது அந்தச் சங்கமத்தில் உறுதியானது. இந்த ஒரு சில மணி நேரம் ஒரேயடியாக நிலைக்காதா? மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு யாரோ கதவு மணியை அடித்த போது அவர்கள் இருவரும் குளித்துக் கொண்டி ருந்தார்கள். அவளின் மெல்லிய உடலின் மேடு பள்ளங் களுக்குச் சோப்பு போடுவதில் அவனுக்கு அலாதியான விருப்பம். பளிங்குத் தரையில் நீரோடுவது போல் அவள் பொன் உடலில் நீர்த்துளி தெறிப்பது கண் கொள்ளாக் காட்சி.
ஷவருக்கு முன்னால் கண்களை மூடி அவள் கழுத்தை வளைத்து முகத்தை யுயர்த்துவது எந்தப் பரத நாட்டியக் கலையும் காட்டாத பாவம். அவளின் சங்குபோன்ற கழுத்துக்களில் மெல்லிய சங்கிலி நீர்த்துளியில் நனைந் தாட அவள் ஷவருக்கு முன்னால் நின்றிருந்தாள்.
வெளியில் யாரோ கதவு மணியை அடிக்கும் சத்தம் மீண்டும் கேட்டது.
இடையில் ஒரு டவலைக் கட்டிக் கொண்டு, தலையை ஒரு டவலால் துடைத்துக் கொண்டு அவன் படியிறங்கி வந்தான்.
கதவின் கண்ணாடிக்கு வெளியில் தெரிந்த உருவம் ராம நாதனாக இருக்கலாம் என்பதை அவன் உடனடியாகத் தெரிந்து கொண்டான்.
அவன் வீட்டுக்கு அவர் வந்ததே அருமை. சாரதா இந்த வீட்டு வாசற்படி மிதித்தது கூட இல்லை. ஒரு இடமும் அதிகம் போகாதவள் அவள்.
அவளின் தாய் வழியில் உறவினர் என்று இங்கிலாந்தில் சாரதாவுக்கு யாரும் இல்லை. தகப்பன் வழியில் தியாகுவும் இன்னும் எத்தனையோ உறவினர்களும் இருக்கிறார்கள். இருந்தும் அவள் அதிகம் வெளியில் போக மாட்டாள். ராதிகாவின் தமக்கை பவானியை அவளுக்குப் பிடிக்கும். எப்போதாவது இருந்து அங்கே போவாள். சாரதா வரா விட்டால் ராமநாதன் வெளியிடங்களுக்குப் போவதும் அருமை.
இன்று இங்கு வந்திருக்கிறார். ராமநாதனை தியாகு வுக்குப் பிடிக்காது. அது அவருக்குத் தெரியும். அவர் அவனைவிடப் பதினைந்து வயது முதியவர். அவனின் மைத்துனியைத் திருமணம் செய்து கொண்டவர்.
சாரதாவை ராமநாதன் திருமணம் செய்து கொண்டது தான் அவனுக்குப் பிடிக்காதது என்று அவருக்குத் தெரியும்,
அவனுக்குப் பிடித்தமான விதத்தில் அவர் நடக்கமுடியாது, முயலவுமில்லை.
அவன் கதவைத் திறந்தான். வெளியிலுள்ள குளிர் அப்படியே அவன் முகத்திலடித்தது. அவன் உடம்பு குளிருக்குச் சிலிர்த்துக் கொண்டது.
“ஐ ஆம் ஸோ சொறிடு டிஸ்ரேப் யூ” அவர் மெல்லிய குரலில் முணுமுணுத்தார். அவர் சுபாவம் அப்படி. தாழ்ந்த குரலிற்தான் பேசுவார். உயர்ந்த உருவமும், பரந்த தோற்றத்தையும் தருபவர்; அவர் எப்போதும் ஸ்மார்ட்டாக உடுப்பவர். ஒரு பெரிய கெமிக்கல் கொம்பனி ஒன்றில் பெரிய வேலையிலிருப்பவர். தலையில் மயிர் உதிரத் தொடங்கியிருந்தது. கன்னப்பக்க மயிர் அப்படியே நரைத்துப் போய்விட்டது.
கதவைத் திறந்தவனின் பார்வையில் உடனடியாகத் தட்டுப் பட்டது ராமநாதனின் சோகமான கண்களே.
மேல் மாடியிலிருந்து ராதிகா கீழே எட்டிப் பார்த்தாள்.
“ஹலோ ராதிகா” ராமநாதன் ராதிகாவைப் பார்த்துச் சொன்னது அவளுக்குச் சரியாகக் கேட்காமல் விட்டாலும், “ஹலோ மாமா” என்று சொன்னாள். குரலில் உயிரில்லை.
ஒரு கொஞ்ச நேரம் அந்த வீட்டில் பூரண அமைதி. ராமநாதன் ஹாலில் போய் உட்கார்ந்திருந்தார். தியாகு மேலே போய் உடுப்பு மாற்றிக் கொண்டிருந்தான். ராதிகா கட்டிலின் விளிம்பிலிருந்து முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருநதாள்.
கீழே போய் ராமநாதனுடன் கதைக்கக் சொல்லலாம என்று கேட்க நினைத்தான். அவளிருக்கும் கோலத்தைப் பார்த்தால் மெளனம் நல்லது என்று பட்டது.
கீழே பார்த்துக் கொண்டு காற்பெருவிரலால் கார்ப்பெட் டில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
சில நிமிடங்களுக்கு முன் உயிரும் உணர்வும் உள்ள ஒரு பெண்ணாயிருந்தவள் ராமநாதனைக் கண்டதும் சிலையடித்துப் போயிருக்கிறாள்.
அவள் சேர்ட்டுக்குப் பட்டன் பூட்டினான். அவன் பார்வை உயர்ந்தது. இருவரும் ஒருத்தரை ஒருத்தர் கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘சாரதாவுக்கு எப்படியாம்’ என்று கேட்க மாட்டாளா என்று ஏங்கினான் அவன்.
அவள் இன்னும் உடுப்பு மாற்றிக் கொள்ளவில்லை.
ராமநாதன் வந்து கதவைத்தட்டிய நேரத்தில் அவசரமாகத் தூக்கிப் போட்டுக் கொண்ட அவளுடைய ரெஸிங் கவுணுடன் இன்னும் இருந்தாள்.
“குளிர் பிடிக்கும். உடுப்பை மாத்தலாமே”
அவன் அவள் அருகிற் சென்று அவளின் ஈரம் படிந்த தலையைத் தடவி விட்டான்.
பெரிய அக்கரைதான் உங்களுக்கு’ என்பதுபோல் அவள் இன்னொருதரம் பார்த்தாள். இவளின் கண்களிற்தான் எவ்வளவு பாஷைகள் அடங்கிக் கிடக்கின்றன?
அவள் கண்களில் நீர் முட்டியது. நீரில் நனைத்த மல்லிகை இதழ்கள்போல் அவள் விழிகள் படபடத்தன.
கீழே ரேடியோவின் சத்தம் கேட்டது. இந்தப் பொல்லாத மெளனத்தைத் தாங்காமல் ராமநாதன் தானாகவே ரேடியோவைத் திருப்பியிருப்பார்.
ரேடியோவில் மொஸாட்டின் இசை கேட்டுக் கொண் டிருந்தது.பியானோவில் யாரோ மொஸாட்டைத் தட்டிக் கொண்டிருந்தார்கள்.
இவன் படுக்கையறை லைட்டை அணைத்துவிட்டு ஜன்னலைத் திறந்து விட்டான். சூரியன் உலகத்தில் எந்த மூலையில் ஒதுங்கி விட்டானோ தெரியவில்லை. மழை விட்டிருந்தாலும் வானம் மப்பும் மந்தாரமுமாய் கரும் முகில்களால் மறைக்கப்பட்டிருந்தது.
அவன் கீழே போனபோது ராமநாதன் சோபாவில் கண்களை மூடியபடி இருந்தார். கைவிரல்கள் சோபாவின் விளிம்பில் தாளம் போட்டுக் கொண்டிருந்தன.
அவருக்குச் சங்கீதம் பிடிக்கும் என்று தெரியும். சாரதா வுக்கும் அவருக்குமுள்ள ஒற்றுமைகளில் இதுவும் ஒன்றா? ”உனக்கு மொஸாட்டைப் பிடிக்குமா?”
அவன் தலையாட்டிக் கொண்டான்.
“இளமையில் நல்லாகப் பாடுவாயாமே” அவர் குரலில் விரு சந்தோஷம்.
அவன் தர்மசங்கடத்துடன் தலையாட்டிக் கொண்டான்… “வீட்டில் டாக்டர் அல்லது எஞ்சினியராக வரவேண்டும் என்று படிப்பித்திருப்பார்கள்… சங்கீதம் தன்பாட்டுக்கு கடற்கரைப் பக்கம் காத்து வாங்கப் போயிருக்கும்” அவர் குரலில் அதிருப்தி.
இவருக்கொரு குழந்தையிருந்தால் சங்கீத வித்துவானாகப் படிப்பிப்பாரா? சாரதாவுக்குத்தான் அந்த அதிர்ஷ்டமில்லையே.
”சாரதா எப்படி” இவன் நேரடியாகக் கேட்டான்.
அவர் இவனை நேரே பார்த்தார். சாரதாவுக்கும். இவருக்கும் கல்யாணமாகிப் பத்து வருடங்களாகின்றன. இருவரும் தனிமையில் சந்தித்தது இதுதான் முதற் தடவை.
“ஒப்பரேஷன் செய்ய மாட்டேன் என்கிறாள்”
“தெரியும் – இரவு போயிருந்தேன்”
“ஓம் நீ வந்து போனதாக டொக்டர் பாரதியும் சாரதாவும் சொன்னார்கள்”
“ஏன் மாட்டாளாம்”
அவர் எழும்பிப் போய் ஜன்னலால் வெளியிற் பார்த்தார். கேற்றைத் தாண்டி தபாற்காரன் வந்து கொண்டிருந்தான்.
“நீ அவளுக்குப் புத்தி சொன்னாயா?”
“நான் அவளைவிட பெரியவனில்லையே”
அவர் சிரித்தார். அது ஒரு சோகச் சிரிப்பு.
“நீ வயதில் பெரியவனாக இருந்தால் அவள் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டாளே”
அவர் என்ன காரணத்தை உள்வைத்து இப்படிச் சொல் கிறார் என்று அவனுக்குத் தெரியாது. ஆனாலும் இப்படிச் சொன்னதை அவன் விரும்பவில்லை.
“அவள் எனக்கு ஒரு சகோதரி மாதிரி” அவன் ஏன் இவருக்கு இதெல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருக் கிறேன் என்று தனக்குள் எரிச்சல் பட்டுக்கொண்டான். அவர் இன்னொருதரம் இவனை ஏறிட்டுப் பார்த்தார் ஜன்னலருகிலிருந்து வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டார்.
ரேடியோவில் பன்னிரண்டரை மணிச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்கள்.
அமெரிக்கனும் பிரிட்டிஷ்காரனும் சேர்ந்து சதாம் ஹுசேனை உதைத்துத் தள்ளுவதற்கு எப்படித் திட்டம் போடுகிறார்கள் என்று ரேடியோ அறிவிப்பாளர்: சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
“பாஸ்ரட்ஸ்” ராமநாதன் குரல் சாடையாக உயர்ந்தது.
“தங்களுக்கு எண்ணெய் கிடைப்பதற்கு எத்தனை உயிர் போனாலும் இவர்களுக்குக் கவலையில்லை”
“கோப்பி போடட்டுமா”
தியாகு பேச்சை மாற்றினான். அரசியல் அவனுக்குப் பிடிக்காது.
“குளிருக்கு ஏதும் குடித்தால் நல்லதுதானே”
ராமநாதன் தான் வந்த விடயத்தை எப்படி ஆரம்பிப்பது என்பதை யோசிக்கிறாரா?
வெளியில் கார்களின் ஓசை காதைப் பிளக்கத் தொடங்கி விட்டது. மலிவாகக் கிடைத்தபடியால் இந்த வீட்டை அவன் வாங்கினான்; ரோட்டோர வீடு. ஒரே சத்தம். வீட்டுக்கு அருகில் பாதாள ரயில் இருக்கிறது. தூரத்தில்
இரண்டு பெரிய பார்க்குகள் இருக்கின்றன. நேரமிருந்தால் லைப்ரரிக்குப்போய் மணிக்கணக்காக இருந்து புத்தகம் வாசிப்பான்.
என்ன என்று இல்லை, எது நல்ல புத்தகம் கிடைக்கிறதோ அவைகளை எல்லாம் வாசிப்பான். ஒருநாள் ஜானகி ராமன் அடுத்த நாள் வேர்ஜினியா வூல்ஸ் அவன் கைகளிருக்கும். ராதிகாவின் தொடர்பு இறுக்கமடைந்து அவள் கல்யாண ஒப்பந்தம் செய்து மோதிரம் மாற்றிக் கொண்டபின் புத்தகம் வாசிப்பது குறைந்து விட்டது.
அவன் கோப்பி போடப் போனான். ராதிகா இன்னும் கீழே வர மாட்டாளாம்.
”காலையிலிருந்து சாரதாவுக்குச் சரியான வயிற்று வலி’ ராமநாதன் குசினிக்குள் வந்தார்.
“இந்த ரியுமர் என்ன விதக் கரைச்சல் கொடுக்கிறது. பாவம் அவள். தன் பிடிவாதத்தை விடமாட்டேன் என்கிறாள். சத்திர சிகிச்சைக்குப் பயந்துதான் மாட்டேன் என்கிறாள் என்று நினைத்தேன். ஆனால் அதைவிட வேறு ஒன்று அவள் மனத்தை வாட்டுகிறது. சாரதா மனம் விட்டுச் சொல்ல முடியாத துக்கம் என்னவென்று நான் எப்படித் தெரிந்து கொள்வது”
ராமநாதன் ஏன் இதை எல்லாம் எனக்குச் சொல்கிறார்?
தியாகு நேற்றிலிருந்து இன்னும் சாப்பிடவில்லை. கோப்பியின் மணம் பசியையுண்டாக்கியது. இரண்டு மூன்று துண்டு ரொட்டியை எடுத்து ‘கிறிவில் போட்டான். றோஸ்ட் பண்ணும் மணம் இன்னும் பசியைத் தூண்டிவிட்டது.
“உங்களுக்கும் ஏதாவது சாப்பிடத் தரட்டுமா”
“மத்தியானம் லன்ஞ் எடுக்கிற நேரம், காலைச் சாப்பாடா”
ராமநாதனுக்கு தியாகு இரவு பட்ட துயரம் தெரியாது. சாரதாவைக் கண்ட நேரத்திலிருந்து அவனுக்குப் பசியில்லை.
அவர் தனக்குச் சாப்பாடு ஒன்றும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு கோப்பி குடித்துக் கொண்டிருந்தார். தியாகு கோப்பியையும் வாட்டிய ரொட்டியில் பட்டரும் பூசி எடுத்துக்கொண்டு மேலே போனான்.
ராதிகா வெளிக் கிளம்பப் போகிறாள் என்பதற்கு அறிகுறி தெரிந்தது.
“ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போகலாமே”
”சாரதாவுக்கு இந்த உபசாரம் எல்லாம் பிடிக்குமென்று நினைக்கிறேன்”
“சாரதா சுகமில்லாமலிருக்கிறாள்” நேற்றிலிருந்து மூடி மறைக்கப்பட்ட பிரச்சினை பூதாகாரமாக உருவெடுக் கிறது.
“சிலருக்குச் சுகமில்லாமலிருப்பதில் சந்தோசம்” எவ்வளவு குரூரம் இவள் குரலில்.
“சாரதா சிலவேளை இறந்து விடலாம்”
“அப்போதாவது உங்களுக்கு அவளிடமிருந்து விடுதலை கிடைக்குமா”
ராதிகா அவன் பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறு வென்று கீழே போய்விட்டாள்.
“சீ யு மாமா” ராமநாதனை நேரே பார்க்காமல் அவள் கதவைச் சாத்திக்கொண்டு வெளியேறுகிறாள். அவனுடைய காரை அவள் ஸ்ரார்ட் பண்ணிக் கொண்டிருந்தாள்.
சாரதாவை இவன் போய்ப் பார்க்கக் கூடாது என்ப தற்காக இவள் காரை எடுத்துக்கொண்டு போகிறாளா?
தியாகு கீழே வராமல் படுக்கையறை ஜன்னலால் அவள் போவதைப் பார்த்துக் கொண்டு நின்றான். இவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, நடத்தக்கூடிய தர்க்கங் களை, பாவிக்க வேண்டிய ஆயுதங்களை எல்லாம் ஒரு கேள்வியில் கேட்டு விட்டாளே!
சாரதாவை இவ்வளவு தூரம் இவள் வெறுக்கும்படி நான் என்ன செய்து விட்டேன்?
இவள் தனக்குத்தானே எதையெல்லாமோ கற்பனை செய்துகொண்டு தன்னையும் வருத்திக் கொண்டு என்னை யும் வருத்துகிறாளா?
போன வருடம் இவன் சாரதாவை இனிச் சந்திப்பதில்லை என்று முடிவு கட்டியதற்கு இவளின் சந்தேகங்கள் தானே காரணம்?
தன் குரூரமான வார்த்தைகளால் எவ்வளவு தூரம் ராதிகா சாரதாவை வருத்திவிட்டாள் என்பது ராதிகாவுக்குத் தெரியாதா அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி நடந்து. கொள்கிறாளா?
தான் சாரதாவைவிடப் படித்தவள், நாளைக்குத் தியாகு வின் மனைவியாக வரப் போகிறாள் என்பதற்காகச் சாரதாவைப் பற்றி எதையும் சொல்லலாம் என்று நினைப்பது எவ்வளவு அகங்காரம்!
அவனுக்கு வந்த கோபத்தில் ராதிகா நேரேயிருந்தால் பெரிய பூகம்பமே நடந்திருக்கலாம்.
ராமநாதனுக்கு இந்த நாடகமெல்லாம் விளங்குமா? அவனின் மௌனத்திலிருந்து அவருக்கு ஏதோ விளங்கி யிருக்க வேண்டும்.
இவன் வெளிக்கிடத் தயாராகும் வரைக்கும் அவர் மௌனமாக இருந்தார்.
காரில் போய்க் கொண்டிருந்தபோதும் ராமநாதன் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.
‘சாரதா இறந்து விட்டால் உங்களுக்கு அவளிடமிருந்து விடுதலை கிடைக்குமில்லையா ராதிகாவின் கேள்வி அவன் காதில் பயங்கரமாக ஒலித்துக் கொண்டிருந்தது. தை மாதக் குளிர் அவன் உடம்பில் படவில்லை. அவன் புலன்களெல்லாம் விறைத்த மாதிரியான உணர்ச்சி.
இந்த அளவு ராதிகா சாரதாவைப்பற்றி நினைக்கு மளவுக்கும் பேசுமளவுக்கும் சாரதா ராதிகாவுக்கு என்ன தான் செய்து விட்டாள்.
மாமா சத்தியமூர்த்தி உயிரோடிருந்தால் இதெல்லாம் நடக்குமா? பெண்கள் தங்கள் உரிமைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உரிமைகளுக்காக வாதாடும் ராதிகா சாரதாவைப் பற்றி இப்படிப் பேசலாமா? பெண்களே பெண்களுக்கு எதிரியா? இவள் இப்படிப் பேசினால் படியாத அப்பாவிகள் என்னவெல்லாம் பேசுவார்கள்? அவன் மனத்தில் ஆயிரம் கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு கப்பால் சத்தியமூர்த்தி மாமாவின் கருணை ததும்பும் முகம் தெரிந்தது.
கடைசி நிமிடம் அவர் இவனைக் கண்டபோது இவனைப் பார்த்துக் கேட்ட கேள்வி நினைவில் வந்தது.
“தியாகு நான் இதெல்லாம் உன்னுடன் கதைக்கக்கூடாது. உனக்கு இந்த உலகத்தை விளங்கிக் கொள்ளும் வயது இன்னும் வரவில்லை. பதினைந்து வயதில் சைக்கிளில் உலகம் சுற்றும் இளம்வயதில் சாரதாவைப் பார்த்துக் கொள்கிறாயா என்று கேட்பது அபத்தமாக இருக்கிறது. எனது நண்பன் நல்லநாயகத்தையும், உனது தகப்பனை யும் உன்னையும் தவிர என்னால் யாரையும் இந்து உலகத்தில் நம்ப முடியாது.”
சத்தியமூர்த்தி மாமாவுக்கு அப்போது எத்தனை வயதாக இருக்கலாம்? அதை எல்லாம் சிந்தித்துப் பார்க்கும் வயதா அவனுக்கு?
அவனுக்கு நினைவு தெரிந்த நாள்முதல் அவரைப் பற்றித் தெரிந்ததெல்லாம் அவனுக்கு ஆச்சரியமான விடயங்கள். அவர் வித்தியாசமான மனிதராக வாழ்ந்து மறைந்து விட்டார். வினோதமான சிந்தனைகள் அவரின் வாழ்க்கை யில் எத்தனையோ சோதனைகளை எதிர் நோக்கப் பண்ணி விட்டது. ஆனால் இதுவரையும் அவனைப் பொறுத்த வரையில் அவனுக்கு அவன் பெரிய மாமா. நேர்மைக்காக வாழ்ந்து நேர்மையால் அழிந்து முடிந்தவர். அந்த நினைவு அவனிடமிருந்து பிரியுமா?
– தொடரும்…
– பனி பெய்யும் இரவுகள் (நாவல்), முதல் பதிப்பு: செப்டம்பர் 1993, பாரி நிலையம், சென்னை
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |