பனிக்கட்டி உருகிழன்…?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2025
பார்வையிட்டோர்: 603 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மெல்லிய வளையோசை காதில் கேட்டது. ஷமீர் திரும்பிப் படுத்துக்கொண்டான். 

கூந்தலை மறைத்த முக்காடும், முகத்தை மறைத்த நாணமும் ஏந்திய இரண்டு திரைகளுடன் அந்தப்பெண் தோன்றினாள். 

ஒருகணம் மட்டுமே அவனை ஏறிட்டுப் பார்த்தாள்… மிரட்சியும், செவ்வரியும் கலந்த கண்களில் ஒட்டு மொத்த மாகப் பயம் தெரிய, சட்டென விலகிச் சென்றாள். ஷமீர் பின்னால் ஓடிச்சென்று அவளது கைகளைப் பற்றிக் கொண்டான். அவள் சடாரென அவனது தோள்களில் விழ…. 

“வேணாம், வேணாம். எழும்புங்க போவோம்…” 

கர்ணகடூரமான குரல். தாய் கோபாவேசத்துடன் நின்றிருந்தாள். 

‘ஏன்?’ பார்வையால் வினவினான். 

“இந்தப் பொண்ணு அவ்வளவு அழகாயில்லை. அதோட நிறமும் குறைவு…” 

ஷமீர் ஸ்தம்பித்து அப்படியே நின்றிருந்தான். அந்தப் பெண்ணைக் காணவில்லை. 

தூக்கம் கலைந்து விழிகளை அகலத் திறந்தான் ஷமீர். கண்டது கனவா? அசூயையாக இருந்தது. 

இன்று மாலை நேரில் கண்ட அந்தப் பெண்ணை, மீண்டும் எப்பொழுதுமே காண முடியாதா? கனவில் மட்டும் தானா காண முடியும்? அதுவும் இன்றைய கனவில்…. நாளைய கனவில் வேறொரு பெண்ணா? இதயத்தை முழுவதும் நனைத்துச் சென்றது ஏக்கம். ஒருவகையான பரிதாப உணாச்சி உடம்பை போர்த்துக் கொண்டது. 

இப்போது நிஜமாகவே வளையொலி கேட்டது. கனவல்ல என்று உணர்ந்து காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். அடுத்த அறையில் இருந்து வந்தது அஸ்ரிபாவின் வளையொலி. அஸ்ரிபா தம்பியின் மனைவி. 

இருவரும் காதலித்தார்கள். கைப்பிடித்து குடித்தனமும் நடத்துகிறார்கள். 

அவள் கிசுகிசுவென்று ஏதோ கேட்பதும், தம்பி பதில் சொல்வதும் கேட்டது. இந்த அர்த்த ராத்திரியில் என்ன பேசிக்கொள்கிறார்கள்? 

நானும் யாராவது ஒரு பெண்ணைக் காதலித்திருக்கலாமோ என்று அவனுக்குள் திடுமென கேள்வி எழுந்தது. காதலிக்காதது என் குற்றமா? எனக்கொரு நல்ல பெண்ணைப் பார்த்து மணமுடித்து வைக்கவேண்டிய பொறுப்பை என் தாயிடம் விட்டது தப்பா? என் இளமையை இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படி சுட்டெரித்துக் கொள்வது? உம்மா ஏன் இதைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள்? ஒருவேளை, வாப்பா இருந்திருந்தால் எல்லாம் சரியாக நடந்திருக்குமோ? எழுந்து மின்விளக்கை ஏற்றி நேரத்தைப் பார்த்தான். விடிகாலை நான்கு மணி. 

இதுவரை எத்தனையோ பெண்களைப் பார்த்தாயிற்று. ஒவ்வொரு பெண்ணைப் பார்க்கும்போதும், இவள்தான் என் மனைவி என்று நினைத்துக் கொள்வதும், பின் உம்மா மறுதலிக்கும்போது மனம் உடைந்து போவதும், அன்று பார்த்த பெண்ணை இரவெல்லாம் எண்ணி ஏங்குவதும், அவளைக் கனவில் கண்டு தூக்கம் கெடுவதும் என்ன வாழ்க்கை? 

அவனுக்கு வெறுப்பாக இருந்தது. வேலைக்குச் சென்றாலும் மனதை ஒருநிலைப்படுத்தி ஈடுபட முடியுமா என்ற கேள்வி நெஞ்சையும், உடம்பையும் அரித்தது. 

தஹஜ்ஜத்(நடுநிசித் தொழுகை) தொழுது தனது மனக் குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக எழுந்து கொண்டான். 

பின்கட்டில் மணக்க மணக்க உணவு தயாராகிக் கொண்டிருந்தது. வேலைக்குச் செல்வதற்குத் தயாராகிவிட்ட ஷமீர், காலை உணவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தான். மெல்ல அடியெடுத்து ஒருபெண் உணவுத் தட்டைக் கையில் கொண்டு வருகிறாள். உடம்பில் பரிமள சுகந்தம் காந்தியாக ஏறிட்டுப் காந்தியாக…ஏறிட்டுப் பார்த்தான். 

அஸ்ரிபா சாப்பாட்டு மேசையை நோக்கி வந்து கொண்டிருந்தாள். சட்டென ஒரு குற்றவுணர்வு உடம்பை உராய்ந்து சென்றது. இவள் என் மதினி. தம்பியின் மனைவி. 

சே…! 

‘யா அல்லாஹ் பாவத்திலிருந்து என்னைக் காப்பாற்று…’

“எனக்கு சாப்பாடு வேணாம்..” 

எழுந்து வேகமாக வெளியே சென்றான். 

பஸ்ஸினுள், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந் தான் ஷமீர். குளிர்ந்த காலை நேர இளங்காற்று இதமாகத் தழுவிச் சென்றது. லேசாக உற்சாகம் பற்றிக் கொண்டது. எனினும், தூக்கமற்ற கண்கள் எரிந்தன. 

கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டான். முன் சீட்டில் ஒரு இளம் பிக்கு அமர்ந்திருந்தார். ஏறத்தாழ தனது வயதுதானிருக்கும் என ஷமீர் அனுமானித்தான். நான் முப்பத்தெட்டு வயது துறவி; காவியுடை அணியாத துறவி; விரும்பாமலே துறவறத்தை ஏற்றுக்கொண்ட துறவி. அவர்…? அவர்மீது ஏனோ ஒரு பரிதாபம் ஏற்பட்டது. என்னென்ன காரணங்களால் இவர் துறவியானாரோ? விரும்பியே ஏற்றுக்கொண்டாரோ? இல்லை, நிர்ப்பந்தம் காரணமாக இருக்கலாமோ? எனக்கும், அவருக்கும் ஏதோ ஒருவித ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறதே…! 

சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான். 

மீண்டும் நிமிர்ந்து பார்த்தபோது அந்த பிக்குவின் தலையில் இரண்டு கொம்புகள் முளைத்திருந்தன. பின்புறம் நீளமான வால் இருந்தது. சட்டென பார்வையைத் திருப்பிக் கொண்டான். கொஞ்ச நேரம் வெளியே பார்வையை ஓட விட்டு மீண்டும் திரும்பிப் பார்த்தான். அந்த பிக்கு கையிலிருந்த குறிப்பேடு ஒன்றை ஆழ்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். இப்போது அவருக்குக் கொம்புகளும் இல்லை. வாலும் இல்லை. 

அந்தப் பிக்குவிலிருந்து கவனத்தைத் திருப்ப வேண்டும். அவரை மீண்டும் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தோன்றிற்று. பஸ்ஸினுள் அமர்ந்திருந்த அத்தனை பிரயாணிகளையும் ஒருமுறை திரும்பிப் பார்த்தான். 

எல்லா பயணிகளும் ஏதோ ஒரு இலக்கை நோக்கிய வர்களாக அமர்ந்திருந்தனர். முகங்களில் அன்றைய கேள்வி யின் பிரதிபலிப்பு. சிலர் முகங்களில் நீண்ட நாளைய கேள்வி. 

திடீரென்று பயங்கர சிரிப்பொலி கேட்டது. அவ்வளவு பிரயாணிகளுக்கு உள்ளேயிருந்தும் ஒவ்வொரு பேய்கள் எழுந்தன. சிரித்தபடி அவனை நோக்கி அணிவகுத்து வந்தன. ஷமீர் தலையை உலுக்கிக் கொண்டான். 

மீண்டும் பஸ்ஸினுள் பார்வையை ஓடவிட்டான். இப்போது ஏதும் வித்தியாசமாகத் தெரியவில்லை. தனக்குள் ஏதோ நிகழ்வதை உணர்ந்தான். கண்ணாடிக் குமிழொன்று படீரென வெடித்துச் சிதறினாற்போல்…! 

“அல்லாஹ்வே, நான் வேலைக்குப் போய்ச் சேரும்வரை என்னைக் காப்பாற்று.” கலவரத்துடன் பிரார்த்திக்கத் தொடங்கினான். 

“இந்தா ஷமீர், இதப்பாரு. இன்னைக்கு இந்தப் பொண்ணப் போய் பாத்துட்டு வருவோம்…” உம்மா போட்டோவை நீட்டினாள். 

கையில் எடுத்துப் பார்த்தான். ஏதும் குறை தெரிய வில்லை. இந்தப் பெண்ணாவது உம்மாவுக்குப் பிடிக்கணும்…’ பிரார்த்தித்துக் கொண்டான். தனது வேண்டு தலை தொழுது முறையிடுவதற்காக உள்ளே சென்றான். 

பெண்ணின் சகோதரன் கொண்டு வந்த தேநீரைச் சுவைத்தபடி, பெண்ணின் தாயாரிடம் உம்மா பெருமை பேசிக்கொண்டிருந்தாள். 

“என்ட மகனப்போல ஒரு நல்ல எளந்தாரிய நீங்க இந்த உலகத்திலேயே காணமுடியாது. அவ்ளோ ஒழுக்கம்… பக்தி… இப்ப ஆம்புளப் புள்ளைகள் என்ன மாதிரி கெட்டுப் போயிருக்காங்க. பாக்குறீங்கதானே…நா அவன அப்புடி வளக்கல்ல….” 

பெண்ணின் தாய் அகலச் சிரித்து தலையாட்டியபடி கேட்டுக் கொண்டிருந்தாள். 

பெண் வந்து கதவோரம் நின்றது. உம்மா ஏற இறங்கப் பார்த்தாள். தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஷமீர், அவளது தலைக்கு மேலே ஒரு பேய் எட்டிப் பார்ப்பது கண்டு திடுக்கிட்டான். 

பக்கத்தில் பெண் வீட்டார் யாரும் இல்லை என்பதை நிச்சயித்துக்கொண்டு உம்மா அஸ்ரிபாவிடம் குசுகுசுத்தாள். “பொண்ணுட முகம் சிறுசாயிருக்கே. பரக்கத்(விருத்தி) இருக்கா துண்டு சொல்லுவாங்க. அதோட கட்டையான பொண்ணு குடும்பத்த நடத்த சரிவராது. என்ன சொல்ற ஷமீர்?” 

தாயை ஏறிட்டுப் பார்த்தான். அவளது முகத்தில் சதைகள் கிழிந்து வெறும் மண்டையோடும், கோரப் பற்களும் தெரிந்தன. அவளைப் பார்க்கப் பயமாக இருந்தது. கண்களை கசக்கி விட்டுக்கொண்டு மறுபடி பார்த்தான். மீண்டும் முழு எலும்புக்கூடாக நின்றது தாயின் உருவம். 

ஷமீர் திகைப்புடன் எழுந்து நின்றான். தன்னைச் சுற்றிலும் மண்டையோடுகள் நிறைந்திருப்பதையும், ஒரு மயானத்தின் நடுவே தான் நிற்பதையும் உணர்ந்தான். 

“எனக்கு இனி கல்யாணம் நடக்காது.” அவனது உதடுகள் மெல்ல முணுமுணுத்தன. 

உம்மா திகைப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் வேகமாக நடந்து வெளியிறங்கி, மெயின் வீதியில் நிறுத்தியிருந்த பஸ்ஸில் ஏறினான். 

– மல்லிகை அநுராதபுரச் சிறப்பிதழ், அக்டோபர் 2006.

– முடிவில் தொடங்கும் கதைகள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2012, நூலாசிரியர் வெளியீடு, கெகிறாவ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *