கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 12, 2026
பார்வையிட்டோர்: 244 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2

விகாஷ் காரின் முன்னிருக்கையில் அமர்ந்து வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு….தன் தாய் மாமன் தன்ராஜ் அத்தையோடு ஊட்டிக்கு செல்லும்போதுதான் அவனுக்குள் அந்த ஆசை தோன்றியது.

கார் ஓட்டிக்கொண்டிருக்கும் மாமாவிடம் தற்போது கேட்பது முறையல்ல நினைத்து. மனதை மாற்றி மீண்டும் பார்வையை வெளியே ஓட்டினான்.

இவன் பொறியியல் பட்டதாரி. வெளியில் சென்று வேலை செய்ய விருப்பமில்லாமல் அப்பாவிற்குத் துணையாய் விவசாயத்தில் ஈடுபாடாய் இருக்கும் இருபத்தைந்து வயது இளைஞன்.

இன்றைய நாகரீக வாலிபர்களைப் போல் முகத்தில் நான்கு நாட்கள் தாடி, ஒருவார தாடியெல்லாம் கிடையாது. அழகாய் சுத்தமாய் அன்றாடம் மழித்துக் கொள்பவன். அளவான மீசை. கச்சிதமான உடல்வாகு.

கொள்ளிடம் ஆற்றின் அருகில் இருக்கும் உத்திரை கிராமம் சொந்த ஊர்.

அப்பா ஐந்து வேலி நிலங்களுக்குச் சொந்தக்காரர்.

உழவிற்கு ஒரு ஜோடி காளை மாடும். உல்லாசமாக பெட்டி வண்டியில் சென்றுவர.. நீண்ட கொம்புகள் உள்ள இரண்டு இளம் தெற்கத்தி செவலைக் காளைகளைத் தவிர.. மற்ற பெரு உழவு, சிறு உழவு வண்டி வாசி போக்குவரத்திற்கெல்லாம் பெரிய டிராக்டர் ஒன்றும், சிறு கை டிராக்டர் ஒன்றும் இணைப்பு வண்டிகளுடன் வாசலில் எப்போதும் கிடக்கும். அது இல்லாமல் ஹீரோ, ஹோண்டா இருசக்கர வாகனங்கள் அப்பாவிற்கு ஒன்றும் பிள்ளைக்கு ஒன்றுமாக வாசலில் நிற்கும். குடும்ப போக்குவரத்துக்காக இன்னோவா கார் ஒன்று ஷெட்டில் நிற்கும்.

வீடு…. கிராம தெரு, குடியிருப்புகளைத் தாண்டி சிறிது தொலைவில் சில ஏக்கர் பரப்பில் மா, பலா, தென்னை, இதர மரம் செடி கொடிகள் நிறைந்த குளுகுளு தோட்ட நிழலுக்கு மத்தியில் இரண்டாயிரம் சதுரத்தில் மாடி வீடு.

விகாஷ் அம்மா அப்பாவிற்கு அதிக காலதாமதமாகப் பிறந்த ஒரே பையன்.

இவன் தாய் மாமன் தன்ராஜும் சாதாரண ஆள் கிடையாது. மத்திய உளவுத்துறை பிரிவில் பணி செய்து ஓய்வு பெற்று தற்போது இரண்டாண்டுகளாக சுவாமிமலைக்கு அருகிலுள்ள மருத்துவக்குடி கிராமத்தில் மனைவியோடு வசிக்கும் வாட்டசாட்டமான மனிதர்.

பெண் அமெரிக்காவிலும், பையன் கனடாவிலும் குடியுரிமைப் பெற்று மனைவி மக்கள்களுடன் யாருக்கும் எந்த குறை, தொந்தரவுகளின்றி வசிக்கிறார்கள்.

தங்கை அம்சவள்ளிக்கு விகாஷ் அதிக கால தாமதமாகப் பிறந்தவன் என்பதால் தாய் மாமன் தன்ராஜிக்கு இவன் மேல் அன்பு, பாசம் அதிகம்.

நாட்டின் எந்த மூலையில் இவர் பணியில் இருந்தாலும் இவன் அம்மா, அப்பாவோடு கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினால்…

“டேய் மாப்ளெ! நல்லா இருக்கியாடா…?” என்று விசாரித்து இவன் குரலைக் கேட்காமல் வைக்க மாட்டார். அந்த அளவிற்கு இவன் மேல் பாசம் உள்ளவர்.

அவர்தான் நேற்று இவனைக் கைபேசியில் தொடர்பு கொண்டு…

“டேய் மாப்ளெ ! எங்கே இருக்கே..?” கேட்டார்.

“ஊர்லதான் மாமா. வீட்ல.” என்றான்.

“ஏதாவது முக்கிய வேலையாய் இருக்கியா..?”

“இல்லே ! ஏன் மாமா..?”

“ஒரு வாரம் சுற்றுலா போகலாமா..?”

“எங்கே மாமா…?”

“கொடைக்கானல்!”

“ஏன் மாமா..?”

“வேலையில் எப்போதும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு சுறுசுறுப்பாய் இருந்துவிட்டு இப்போ கிராமத்தைச் சுற்றி வந்து வீட்டிற்குள் அடைந்து சும்மா இருக்குறதுக்குப் போரடிக்குதுடா. அதனால இப்படி போய் வரலாம்.”

“அத்தை வரலையா மாமா…”

“அவள் வராமலா..? அவள்தான் ரெண்டு வருசமா கரோனாவால் வீட்டிலேயே அடைஞ்சி கிடக்கோம். கிளம்புங்கன்னு கிளம்பினாள்.”

“அத்தை வரும்போது நான் எதுக்கு மாமா..?”

“அவள் போர்டா மாப்ளெ. அங்கே இங்கே போகனும்ன்னு ஆசைப்படுவாளேத் தவிர.. போய் அறையில் அடைஞ்சதும் அந்த இடத்தை விட்டு அந்தண்டை இந்தண்டை நகர மாட்டாள். கொஞ்சம் பெருத்த உருவம், முழங்கால் முட்டிக்கால் வலி . கால்வலி, தலைவலின்னு உடம்பும் ஒத்துழைக்காது.

அவளுக்கு வீட்டை விட்டு ஒருவாரம் பத்து நாட்கள் வெளியில் போய் தங்கி இருந்து வரனும் அதுதான் ஆசை.

நான் அப்படியா மாப்ளெ..? ஒரு இடத்துல உட்காராமல் ஓடி ஆடி உழைத்த உடம்பு. நீ இருந்தால் பேச்சுத் துணையாய் வெளியே போய்வர எனக்கு உதவியாய் இருக்கும். அதான் அழைக்கிறேன்.” சொன்னார்.

“வர்றேன் மாமா. இருந்தாலும் அம்மா, அப்பாக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வர்றேன்.”

“அதெல்லாம் நான் சொல்லியாச்சு மாப்ளெ. உன் மருமகனை எங்கேயாவது கூட்டிப் போ. அவனும் வீட்டிலேயே அடைஞ்சு கிடக்கான்னு என் தங்கச்சியும், மச்சானும் சொல்லியாச்சு.”

“அப்படின்னா சரி மாமா. நான் வர்றேன்.”

“சரிடா மாப்ளெ. நாளைக் காலை கிளம்பி இரு. சரியாய் ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வர்றேன்.” சொல்லி வந்து விட்டார்.

திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கொடைரோடு வழியே பயணம்.

அழகான ஓட்டலில் வசதியான அறை எடுத்து அத்தையைத் தங்கவைத்து விட்டு….

குணா குகைக்கு அடுத்து சாலையோரம் காரை நிறுத்திவிட்டு மாமனும், மருமகனுமாய் தனித்து அமர்ந்திருக்கும் போதுதான் விகாஷுக்குள் அந்த ஆசை மீண்டும் தலைதூக்கியது..!

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *