அவள் கேட்ட கேள்வி
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: October 12, 2026
பார்வையிட்டோர்: 149
(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கவிதா வீட்டிலிருந்து புறப்பட்டு பஸ் ஸ்டாப்பிற்கு வந்தபோது அவன் திடீரென்று தென்பட்டான். அவளுக்குள் கோபமும் எரிச்சலும் பொங்கியது.
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் பஸ் வந்ததும் அவள் பின்னால் ஏறிக் கொண்டான். கவிதாவிற்கு கோபம் கரை கடந்து ஓடியது. தன் அலுவலக ஸ்டாப்பிங் வந்ததும் இறங்கி வேகமாக நடக்க அவனும் பின் தொடர்ந்தான்.
அவள் ஆபீஸிற்குள் சென்று விட பின் தொடர்ந்தவன் வாசலிலிருந்த செக்யூரிட்டியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
கவிதா தன் மேஜையில் கைப்பையை வைத்து “மானேஜர் சார் ஒரு நிமிடம் டீ குடித்து விட்டு வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு வெளியே வந்தாள்.
செக்யூரிட்டியிடம் பேசிக் கொண்டிருந்தவனைப் பார்த்து “ஏ! மிஸ்டர் வர்றீங்களா காபி குடிக்கலாம்” என்று கவிதா கேன்டீனை நோக்கி நடக்க மரியின் ஆட்டுக்குட்டி போல அவள் பின்னால் சென்றான்.
இருவரும் எதிரெதிரே அமர்ந்ததும், “உங்களுக்கெல்லாம் அறிவு கிடையாதா? நீ கொடுத்த கடிதத்தை யெல்லாம் நான் கிழித்து போட்ட பிறகுமா இன்னும் உனக்கு புத்தி வராமல் என் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறாய். உனக்கு வேறு வேலையே கிடையாதா?
காலையிலே… பார்த்தால் பஸ்ஸ்டாப், ஆபீஸ் என்று பின்னாலே வருகிறாய். சாயங்காலமானால் நான் ஆபீஸிலிருந்து எப்போது வருவேன் என்று காவல் கிடக்கிறாய். போன பிறவியிலே எங்கள் வீட்டு நாயாக பிறந்திருப்பாயா?” என்று கோபத்தில் கத்தினாள்.
“நீங்கள். பேசி முடித்து விட்டீர்களா? எனக்குப் பேச கொஞ்சம் சான்ஸ் தருவீர்களா?” என்றான் சாந்தமாக.
“ஏம்பா, நான் இவ்வளவு திட்டின பிறக்கும் உனக்குக் கோபம் வரவில்லையா?”
“ப்ளீஸ், இந்தக் குமாரும் சில விஷயங்கள் உங்களிடம் பேசலாம் என்பதற்காகத் தான் மௌனமாக இருக்கிறேன். இதையே வேறு, யாராவது பேசியிருந்தால் நடப்பதே வேறு விதமாக இருந்திருக்கும்.
கவிதா நான் கேட்கிறேன் என்று வருத்தப்படாதீர்கள்.. நீங்கள் என்னை உண்மையாக காதலிக்கிறீர்களா இல்லையா?”
“மிஸ்டர் குமார் காதல் யாசித்து வருவதில்லை. அடி மனத்தில் உருவாகுவது.”
“என்னை காதலிக்கிறீர்களா”
“இல்லை”
“வேறு யாரையாவது காதலிக்கிறீர்களா?”
“இதுவரை இல்லை.“
“ஏன் என்னை விரும்ப மறுக்கிறீர்கள்? என்னிடம் என்ன குறை கண்டீர்கள்? என்னிடம் அழகில்லைா? படிப்பில்லையா? இல்லை பணம் இல்லையா?”
“எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்”
“என்ன சொல்ல வருகிறீர்கள்?”
“குமார் நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?”
“எம்.ஏ.”
“நீங்கள் பெரிய பணக்காரர் இல்லையா?”
“ஆமாம். நான் பணக்காரப் பையன், ஏமாற்றி காதலித்து கைவிட்டு விடுவேன் என்று பயப்படுகிறீர்களா?”
“அப்படியெல்லாம் நான் ஏமாந்து போகிறவளில்லை. உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கும்”
“இப்போது ஒரு ஐயாயிரம் ரூபாய் பையில் இருக்கும்”
“என்னைவிட பணக்கார பையனாக பார்த்து காதலிக்கும் எண்ணம் உண்டா?”
“கேட்டதற்கு பதில் சொல்லுங்கள்” என்ற போது சர்வர் வர “இரண்டு காபி கொண்டு வாப்பா” என்ற கவிதா “ம்! சொல்லுங்கள்” என்றாள்.
“ஆறு ஏழு கோடி ரூபாய் சொத்து மதிப்பிருக்கும்”
“அவ்வளவு வசதி படைத்தவரா. நீங்கள்? வெரிகுட் அதிலே நீங்கள் சம்பாதித்தது எவ்வளவு”
“கவிதா நீங்கள் என்ன கேட்கிறீர்கள்”
“மிஸ்டர் குமார் அந்தச் சொத்தெல்லாம் உங்கள் அப்பா சம்பாதித்தது தானே? நீங்கள் ஏதாவது உங்கள் சுயபுத்தியை உபயோகித்து சம்பாதித்துண்டா?”
“என் அப்பா பணம் எனக்கு வரக்கூடியது தானே? நான் ஏன் சம்பாதிக்க வேண்டும்.”
“சரியான மரமண்டையாக இருக்கிறீர். நாளைக்கே என்னைக் காதலிப்பதற்கு உங்கள் அப்பா தடை விதித்தால் நீங்கள் வீட்டை விட்டு வந்து விடுகிறீர்கள். அப்போது என்ன செய்வீர்கள்? பெண்டாட்டி சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிடப் போகிறீர்களா?”
“என்ன சொல்ல வருகிறீர்கள் கவிதா”
“போய்யா, போய் சுயமா உழைத்து சம்பாதிக்க முயற்சி செய். அப்புறம் காதலை ஏற்றுக்கொள்வது பற்றி பரிசீலிக்கலாம்” என்று கவிதா கத்த சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் திரும்பிப் பார்க்க மெளனமாக தலையைக் குனிந்து கொண்டு எழுந்து நடந்தான் குமார் வாசலை.. நோக்கி.
– 28.1.1996, மராத்திய முரசு.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
காதல் மழை
புஷ்பராஜ் கந்தசாமி
October 9, 2026
அபூர்வ கிறிஸ்துமஸ் பரிசு
ஜூனியர் தேஜ்
October 9, 2026
ஹார்மோனியம்
புஷ்பராஜ் கந்தசாமி
October 6, 2026
