கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 7, 2025
பார்வையிட்டோர்: 3,155 
 
 

மாடியிலிருந்து தரை தளத்திற்கு வந்திருந்த சுசீலா சட்டென்று புடவைத் தலைப்பை எடுத்து மூக்கையும், வாயையும் சேர்த்துப் பொத்திக் கொண்டு பார்த்தாள். படியிறங்கி வந்ததிலும் அவளுக்கு மூச்சு வாங்கியது. ஒரு மாசமாயிற்று. லிஃப்ட் வேலை செய்யவில்லை. அதற்கு செலவு இருபதாயிரத்தைத் தாண்டுகிறது என்பதால் யாரும் காசு தர முன்வரவில்லை. ஏறி, இறங்கிச் செத்தாலும் சரி…தம்பிடி பேராது என்றிருக்கிறார்கள். அடுக்ககத்தில் குடியிருப்பதில் அடுக்கடுக்காய்ப் பல சிரமங்கள் உண்டு. வந்த பின்னால்தானே தெரிகிறது?

காம்பவுண்டு நுனியில் மூடப்பட்டிருந்த சதுர இரும்பு மூடியைக் கடப்பாரையைக் கொண்டு நெம்பித் தூக்கி கழிவு நீர் வழித் தொட்டியைத் திறந்தான் உச்சிப்புளி.

நீங்க தள்ளிப் போயிருங்க சார்…என்றான் அருகில் நின்றிருந்த சுந்தரத்தைப் பார்த்து. மேல் துண்டால் பொத்திக் கொண்டிருந்த சுந்தரம்… இருக்கட்டும்…நீங்க வேலையை ஆரம்பிங்க….என்றார்.

தொட்டியில் கொழ கொழவென்ற கழிவும், நீரும் கசடுமாகத் தளதளத்து மிதந்து கொண்டிருந்தது. வாடை ஆளைத் தூக்கியது. வெளியே மூடியை மீறி வழிந்து சென்றிருந்ததால், துர் நாற்றம் அதிகமாயிருந்தது. கசடுகளோடு கழிவுத் தண்ணீர் இரும்பு கேட்டைத் தாண்டி சரிவுப்படிகளில் இறங்கியிருந்தது.

இன்னும் கொஞ்சம் போச்சுன்னா ரோட்டுல ஓட ஆரம்பிச்சிடும் சார்…..அப்புறம் பிரச்னை ஆயிடும்….என்றான் உச்சிப்புளி.

ஆமாமா….அதான் அவசரமா உங்களக் கூப்பிட்டது….என்றார். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டார். யார் வீட்டிலாவது வேடிக்கை பார்க்கிறார்களா? என்று. புகார் கொடுக்காமல் இருந்தால் சரி. கார்ப்பரேஷன் வண்டி வாரம் ஒரு முறையோ, இரு முறையோ வருகிறதுதான். அந்த நேரம் கண்ணில் பட்டால் அபராதம் பதினஞ்சாயிரம். அருகில் குடியிருப்பவர்கள் புகார் சொல்லியும் இது நடந்து விடுகிறது. இங்காவது லாரியில் இறைக்கப்படுகிறது. பல வீட்டில் ரோட்டுச் சாக்கடையோடல்லவா இணைத்திருக்கிறார்கள்? அதை யார் சொல்வது? சொல்லாமல் இருக்கத்தான் காசைக் கொடுத்து வாயை அடைத்திருக்கிறார்களே? வேலியே பயிரை மேய்ந்தால்?

சுத்தம் பண்ணிடுவோம் சார்…அதுக்குச் சொல்லல….இங்க மட்டுமில்ல…..பெரிய செப்டிக் டாங்க் போறவரைக்கும் வழில இருக்கிற நாலு சதுரத்தையும் தோண்டிக் க்ளீன் பண்ணனும்….இல்லன்னா இது போயி…அங்கங்க அடைச்சிக்கிட்டு நிக்கும்….என்று சொல்லி நேர் கோட்டின் இடது கடைசி நுனியில் இருக்கும் பெரிய செப்டிக் டாங்க் வரை அங்கங்கே உள்ள சதுரங்களைக் காண்பித்தான் அவன்.

இது ஒண்ணுதானே ஒழுகுது….இங்கதானே ஓவர்ஃப்ளோ ஆகுது…அப்போ…இங்கே மட்டும் தோண்டினாப் பத்தாதா…? நீ என்னப்பா…பெரிய்ய்ய வேலயா இழுத்து விடுறே….?

அப்டியில்ல சார்….அதெல்லாமும் அடைச்சி அடைச்சிதான் இங்க வந்து தேங்கியிருக்கு….எட்டு வீட்டுக்கும் லிங்க் இருக்குல்ல சார்… அவசரத்துக்கு என்ன பண்றதுன்னு, பேசின்ல கண்டதையும் போடக் கூடாது….பேப்பர், பீத்துணி, முடிக் கத்தை..காய்கறித் தோல், .குழந்தைங்க கழிவுன்னு சுருட்டிச் சுருட்டி அதுக்குள்ள வீசியெறிஞ்சா…கொஞ்சம் கொஞ்சமாச் சேர்ந்து அடைக்கத்தான சார் செய்யும்….சரியா தண்ணியும் ஊத்த மாட்டாங்க….அப்டியே ஊத்துனாலும், இந்தக் கழிவுகளோட சேர்ந்து மத்த கழிவுகளும் போய் நின்னுக்கிடும்….பெரிய டாங்குக்குப் போற வழி இப்டித்தான் அடைபடும்… யாரும் சொன்னாக் கேட்குறதில்ல…..நாம என்ன சார் பண்ண முடியும்? அப்பப்போ இப்டிக் க்ளீன் பண்ணித்தான் ஆகணும்….

இங்கு அடுக்ககம் கட்டும்போது உச்சிப்புளிதான் வாட்ச்மேன். அவனுக்கு எதெது எங்கே லிங்க் இருக்கிறது என்று நன்றாய்த் தெரியும். ரிப்பேருக்கு அடிக்கடி அவனை அழைப்பதே அதற்காகத்தானே!

இதற்குத் துட்டுப் பிரட்டுவதே பெரும்பாடாகிப் போனது. இன்னும் மூணு வீட்டில் காசு வந்தபாடில்லை. இவன் என்னடான்னா பெரிய செலவு வச்சிருவான் போல்ருக்கே…? என்று பயந்தார் சுந்தரம். மனதுக்குள் ஒரு கணக்கு ஓடிக் கொண்டிருந்தது அவருக்கு.

ஒவ்வொரு முறையும் இவர்தான் இந்தக் க்ளீனிங் வேலைகளைக் கவனிக்கிறார். வேறு எவரும் தலையைக் காட்டுவதில்லை. மொத்தம் எட்டு வீட்டில் ஆறு வீட்டுக்காரர்கள் வாடகைக்கு வந்தவர்கள். ஒரு சொந்த வீடு தனி மனுஷி. அதுவும் வயசான கேஸ். இவரும் வயசானவர்தான். ரிடையர்ட் ஆயாச்சே…! ஆனால் அது கணக்கில் வராது. ஆம்பிளயாச்சே…! எனக்கென்ன வந்தது என்றிருக்கிறார்கள். சொந்த வீடு வைத்திருப்பவன்தான் பாடாய்ப் பட வேண்டியிருக்கிறது,

சங்கம் அமையுங்கள் என்கிறார்கள். எட்டு வீட்டு அடுக்ககத்திற்கு என்ன சங்கம் வேண்டிக் கிடக்கிறது? ஆளுக்கு மூணு மூணு மாசம் பராமரிப்புப் பொறுப்பு.

அவ்வளவுதான். அதாவது ஒழுங்காக நடக்கிறதா என்றால் அதுவுமில்லை. சம்ப்பில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்று கூடப் பார்க்காமல் மோட்டார் ஸ்விட்ச்சைத் தட்ட வேண்டியது. வெத்து மோட்டார் ஓடி ஓடி ஏர் லாக் ஆக வேண்டியது. பிறகு குய்யோ முறையோ என்று வந்து நிற்க எத்தனை முறைதான் ஓடி ஓடிப் போய்ச் சரி பண்ணுவது? ஏர் லாக் ரிலீஸாகி மேலே தொட்டியில் தண்ணீர் விழுகிறதா என்று கூட நாமே போய்ப் பார்த்து உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. பொறுப்பிலிருப்பவர் பாதி நாள் ஊரில் இருப்பதில்லை. பிறகு தண்ணி லாரிக்கு எவன் புக் பண்ணுவது?

இன்று சொன்னால் நாளைதான் வரும் மெட்ரோ லாரி. தொட்டி காலி. தேவைக்கு என்ன செய்வது? ஆளாளுக்கு கழுவாமல் கிடப்பார்கள் போலிருக்கிறது? யாரோ பார்க்கட்டும் நமக்கென்ன வந்தது என்றிருந்தால்? பிரைவேட் லாரிக்குச் சொல்ல அடுத்த ஒரு மணியில் அவன் வந்து கொட்டிவிட்டுப் போய் விடுகிறான். ரேட் ஜாஸ்தி. இவர்களின் கவனக் குறைவுக்கு, பொது நஷ்டமா? இதென்ன அநியாயம்? சொந்த வீடு என்று ஒரு சந்தோஷம், நிறைவு உண்டா? சதா என்னவாவது ஒரு பிரச்னை. போதுண்டாப்பா…சாமி…!

தனி வீடு என்றால் எதுவானாலும் நம்மோடு போகும். இது பெருந்தொல்லையாவில்ல போச்சு? சுந்தரத்திற்கு தாளாத அலுப்பு. பெரிய தப்புப் பண்ணியாயிற்று என்கிற நினைப்பு வந்து விட்டது. நல்ல வேளை நூறு, நூற்றைம்பது வீடுகள் உள்ள அபார்ட்மென்டில் போய் மாட்டவில்லை.. அங்கிருக்கும் பிரச்னைகளைக் கவனித்தால் இது தங்கம்…! ஆனாலும் காசையும் கொடுத்து, பணத்தையும் லட்சக்கணக்காய் இழந்து, தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொண்ட மாதிரி ஆகிப் போனது!!

பையன் பெயருக்கே வீட்டை ரிஜிஸ்டர் பண்ணியிருந்ததால் பொறுமுவதைத் தவிர வேறு வழியில்லாமல் நின்றார் சுந்தரம். தன் பெயருக்கு என்று பதிந்திருந்தால் என்றோ விற்றுத் தலை முழுகியிருப்பேன் என்று வீரம் பேசினார். பசங்களுக்கென்ன நன்றி உணர்ச்சியா இருக்கு? தலைமுறை மாறிய தவறுகள்…! ஐம்பது லட்சம் கொடுத்து வீடு வாங்கியது ஒரு விலையாகவே தெரியவில்லையே அவர்களுக்கு? இப்பத்தான் எல்லாத்தையும் கோடில பேசறாங்களே…!

பக்கா ஏரியாப்பா இது. இன்னும் ரெண்டு வருஷத்துல தண்ணிக் குழாய், பாதாளச் சாக்கடை எல்லாம் வந்துடப் போறது. ரெயில்வே ஸ்டேஷன், பஸ்-ஸ்டான்டு, அத்தனையும் பக்கம். குறிப்பா இங்கயிருந்து எல்லா ஐ.டி. ஆபீஸ்களும் நார்மலான தூரம்தான். மெயின் ரோடுல போய் நின்னா எல்லா கம்பெனி பஸ்ஸூம் இந்த வழியாத்தான் போறது வருது. இந்த வசதி வேறே எங்கயும் கிடைக்காது….தெரிஞ்சிக்கோ….நீ நல்ல இடமாப் பார்த்துத்தான் வாங்கியிருக்கிறே…எதுக்கு அநாவசியமாக் குறைப்பட்டுக்கிறே…. சமாதானம் சொல்றானாம் அப்பனுக்கு….!

என்ன….உங்களைத்தானே….! – சத்தம் கேட்டுத் திரும்பினார். இங்க வாங்கோ….என்று முகத்தை அஷ்டகோணலாக்கிக் கொண்டு அழைத்தாள் சுசீலா. என்ன என்றவாறு போய் நின்றார். எதற்காக இத்தனை எள்ளும் கொள்ளும்?

அங்க பக்கத்துல போய் நின்னுண்டு என்ன கொஞ்சிண்டிருக்கேள்? ஈஷிக்காதீங்கோ… எம்புட்டு நேரம் ஒட்டிண்டு வேடிக்கை பார்க்கணும்….தள்ளி

நின்னுண்டு சொன்னாப் போறாதா? ஏதாச்சும் வியாதி வெக்கை வந்து வைக்கப் போறது……இங்கயே இருந்தமேனிக்கே சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கோ….இல்லாட்டா சீக்கிரம் சரி பண்ணுப்பான்னுட்டு சட்டுன்னு வந்து குளிக்கிற வழியப் பாருங்கோ…சம்ப்ல தண்ணி குறைவா இருக்கு…லாரி வந்தாத்தான் ஆச்சு…! அவனோட என்ன உறவாடல்…வள வளன்னு.? ஊருல எத்தன குழி தோண்டினேன்னு கேட்டாகணுமா? கோபமாய் நொடித்தாள் சுசீலா.

சுந்தரத்திற்கு சங்கடமாயிருந்தது அவளின் பேச்சு. அப்டிச் சொல்லாதறீ…எவ்வளவு கஷ்டமான வேலை தெரியுமா? க்ளீன் பண்றேன்னு அவன் வந்து நிக்கிறதே பெரிசு….உறவாடல் அது இதுன்னு அவன் காது கேட்கப் பேசறியே? தகுமா? இந்த வேலை பண்றவனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும். அதைத் தெரிஞ்சிக்கோ…! குத்தி விட்டு, தோண்டி எடுத்து வெளில போட்டு, சரி பண்றது என்ன சாதாரணமா?.நாத்தம் கொடலப் பிடுங்கும்…தெரியுமில்ல? ஆழமான தொட்டில க்ளீன் பண்ண இறங்கி, எத்தனை பேர் விஷ வாயு தாக்கி இறந்து போயிடறாங்க… அவுங்க உயிர் மட்டும் என்ன அவ்வளவு மலிவாப் போச்சா? நம்மள மாதிரி மனுஷாள்தானே. அவாளும் ?.. பாவம்டீ…..ரெண்டு வார்த்தை அவனோட சகஜமாப் பேசினாத்தான் என்ன? குறைஞ்சு போயிடுவோமா? அப்படி நாம என்ன உசத்தி, அவனென்ன தாழ்த்தி? ? தெய்வப் பிறவிகளா? அநாவசியமா ஒருத்தர் மனசு சங்கடப் படுற மாதிரிப் பேசக் கூடாது…! தப்பாக்கும்…ஆகாத வார்த்தை சொல்லாதே….! அடுக்காது. செப்டிக் டாங்க் கழிவு எடுக்கிறது என்ன அத்தனை ஈஸியாப் போச்சா உங்களுக்கு? இன்னைக்கு சாயங்காலம் போய் பாதுகாப்புக்கு ஊசி போட்டுக்குவான் அவன். அது தெரியுமா உங்களுக்கு? அப்பத்தான் நாளைக்கு ஏதாச்சும் இப்டி வேலை வந்தா அவன் தொடர முடியும்…! செத்துப் பிழைக்கிற பிழைப்புடீ….சாதாரணமா நினைச்சிடாதே…! அது பாவமாக்கும்….!!

முறைத்துக் கொண்டே படியேறினாள் சுசீலா. இது என்ன சொன்னாலும் கேட்காது…..அஉற்றிணையில் அவள் முனகிக்கொண்டே போனது இவருக்குக் கேட்கத்தான் செய்தது. ஆள் நேரடியாய் நின்று, இருந்து பார்த்து செய்கிறாரே என்கிற நன்றியில்லையே? ஏன்…இவ பையனை வந்து நிக்கச் சொல்றது? சுருங்கிப் போயிடுவானோ? அது சரி….மத்த வீட்டுக்காரன்களுக்கே எதுவும் அக்கறை இல்லை…இவளைச் சொல்லி என்ன செய்ய? – நொந்து கொண்டார் தனக்குத்தானே…! ஏழு வீட்டில் ஒருவன் கூட தலை நீட்டவில்லையே? ஆட்கள் இருக்கிறார்களா, இல்லையா என்கிற அளவுக்கு கமுக்கமாய் கிடக்கிறார்களே….! சொந்த வீடு வச்சிருக்கிறவனுக்குத்தான் அக்கறை….எங்களுக்கென்ன வந்தது?

சார்….வந்து பாருங்க….. – குரல் கேட்டு…..நகர்ந்தார் சுந்தரம். அடுத்தடுத்த சதுரங்களைத் திறந்து குத்தி விட்டு, அடைசல் சரி பண்ணி, வாளியில் தண்ணீர் பிடித்துப் பிடித்து நாலு குழிகளிலும் அடித்து ஊற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தான் உச்சிப்புளி. ஏற்றுக் கொண்ட வேலையில் அவனது கவனமும், அதைத் தெளிவுறச் செய்வதில் இருந்த தீவிர ஈடுபாடும்….இன்னொரு ஆளைக் கூடக் கூட்டி வந்திருக்கலாம் என்றுதான் அவருக்குத் தோன்றியது. கூலி அதிகமாகும்…இதுக்கே முக்கி முனகுகிறார்கள்…! நாங்க ரெண்டே பேர்தான். காலைல ஒரு முறை கக்கூஸ் போனா முடிஞ்சிது. அதிலும் பாதி நாள் நாங்க ஊர்லயே இருக்கிறதில்லை…பிறகு எதுக்கு சம பங்கு கொடுக்கணும்? இப்படியான ஆராய்ச்சியும் கேள்வியும் வேறு. மனிதர்கள் மனசு

எப்படியெல்லாம் வேலை செய்யும், சிந்திக்கும் என்று யாராலுமே கணிக்க முடியாது. பீத்த புத்தி என்பது பலருக்கும் பொது போலும்?

சாலையில் கழிவு நீர் லாரிகள் போய்க் கொண்டிருந்தன. இந்தப் பகுதியில் இது சகஜம். சதா ஒன்று கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கும். ஏதாவது ஒரு அபார்ட்மென்டில் சுத்தம் நடந்து கொண்டேயிருக்கும். நல்ல பைசா. கைல காசிருந்தா நாமளே இப்டி நாலு லாரி வாங்கி விடலாம் போல்ருக்கே…என்று தோன்றும். இன்ன வேலையை இவனிவன்தான் செய்யணும்னு ஏதேனும் சட்டம், வரைமுறை இருக்கா என்ன?

சார்….எல்லா வீட்லயும் டாய்லெட் பேசினைச் சுத்தம் பண்ணச் சொல்லுங்க…ஆளுக்கு ஒரு வாளித் தண்ணிய அடிச்சி ஊத்தி விடச் சொல்லுங்க…..வழில அடைச்சிருந்ததுன்னா அதுவும் கீழே இறங்கி ஓடி வந்திடும்…..-அவன் சொற்படி அங்கிருந்தபடியே ஒவ்வொரு வீட்டுக்கும் ஃபோன் போட்டார் சுந்தரம். இந்த வயசான காலத்தில் நல்ல வேலை தனக்கு. அடுக்ககத்தில் வீடு வாங்கினதுக்கு இதுவும் வேணும்…இன்னமும் வேணும்…!

எல்லாம் சுத்தமாகி, நான்கு சதுரங்களையும் மூடியபிறகு சுற்றிலும் டெட்டால் கலந்து தெளித்து, பிறகு ப்ளீச்சிங் பவுடரைத் தூவச் சொன்னார். கழுவி விட்ட இடங்களிலும் தண்ணீர் போகப் பெருக்கி, பரவலாகப் பவுடர் தூவி எந்த துர் நாற்றமும் இல்லாமல் ஆக்கி கை கால்களைக் கழுவிக் கொண்டு வந்து நின்றபோது, கூலியைத் தயாராய் நீட்டினார் சுந்தரம்.

வாங்கி எண்ணிப் பார்த்தவன்…திருப்தியோடு…ரொம்பச் சந்தோசம் சார்….என்று பெரிய கும்பிடாய்ப் போட்டான். இங்கே யார்ட்டயும் எதுவும் சொல்லிக்க வேண்டாம்…தெரிஞ்சிதா….? என்றார் சுந்தரம்.

ஏதோ புரிந்து கொண்டவனாய் சரிங்…சார்….என்று சல்யூட் அடித்தான். வர்றன் சார்…ஏதாச்சும் வேலைன்னா கூப்டுங்க.. நானே வர்றேன்….என்றவாறே நகர்ந்தான். அதுவே அவன் திருப்தியை உணர்த்தியது.

விறு விறுவென்று மாடிக்கு ஏறினார் சுந்தரம். அறுபது தாண்டிய வயதிலும் தன்னால் தடங்கலின்றி ரெண்டு மாடி ஏற முடிந்திருப்பதை எண்ணி மனம் சந்தோஷப்பட்டது.

யப்பா….யப்பா….யப்பா…..? பையன் அலறுவதைக் கண்டு, என்னடா…என்னாச்சு? என்று பதறிப் போனார். நாலடி தூரத்தில் எதற்கு இப்படிக் கத்துகிறான்? ஏண்டா….? என்றார் பதிலுக்கு.

அப்டியே பாத்ரூமுக்குள்ள நேராப் போயிடு….இங்க எங்கியும் உட்கார்ந்துடாதே….! எல்லாத் துணியையும் நனைச்சிடு….குளிச்சிட்டு பிறகு உறாலுக்குள்ள வா….நீ உள்ளே நுழைஞ்சவுடனேயே கப்பு அடிக்கிறாப்ல இருக்கு…எனக்கு குமட்டுது…..

ஏண்டா..படுபாவி… என்னடா இப்டிச் சொல்றே….? ஒரு வாய் காப்பி சாப்டுட்டுப் போறேண்டா….இவ்வளவு நேரம் அங்க கால் கடுக்க நின்னிருக்கேன்ல….? கண்காணிச்சிருக்கேன்ல…டயர்டா இருக்குடா….?

போய்…நாலு சொம்பு படக்குன்னு தலைல விட்டுண்டு வாங்கோ…அப்புறம் காப்பி குடிக்கலாம்….அந்த அநாச்சாரத்துல போய் நின்னுட்டு, அதே வாயோடயும், கையோடயும் காபி வேறே ஊத்தணுமா…?…போங்கோ…சடார்னு போயிட்டு வாங்கோ…..இம்புட்டு நேரம் ஜன்னல் வழியா வந்த சுகந்த மணம் பத்தாதா? யப்பாடா…என்னா நாத்தம்? – பையனுக்கு சப்போர்ட்.

ஜன்னல சாத்திக்க வேண்டிதானே…யார் வேண்டான்னா? நா என்னடீ பண்ணினேன்…வேடிக்கைதானே பார்த்தேன்….அதுக்கே ஒட்டிண்டிடுத்தா? நன்னாயிருக்குடி உங்க ஆச்சாரம்….? எனக்கே விலக்கா….? ஒரு வாய் காபிக்கு இதுவா பேச்சு? ரொம்ப அநியாயம்டீ….? என்றவாறே தன் அறைக்குள்ளிருக்கும் பாத்ரூமுக்குள் நுழையப் போனார் சுந்தரம்

பையன் அவரின் புத்தக அலமாரிப் பக்கம் ஒளிந்தவன் போல் நின்று தீவிரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்த மாதிரிக் கண்ட கண்ட புஸ்தகத்தையெல்லாம் படிச்சிட்டுத்தான் அப்பா இஷ்டத்துக்குப் பேசறார்…தெரிஞ்சிதாம்மா….இங்க வந்து பாரு…என்னென்ன புக்ஸெல்லாம் வரிசை கட்டியிருக்குன்னு….அவருக்குன்னு தனி டேஸ்ட்டு…..கொடி பிடிச்சிண்டு….!

அதுநாள்வரை தன் அறையின் அந்த அலமாரிப் பக்கமே எட்டிக் கூடப் பார்க்காத, தலையைக் கூடத் திருப்பி நோக்கியிராத தன் மகன், அன்று அவன் மனது சொன்ன பாதுகாப்பு அவசியம் கருதி, அங்கு வந்து புகுந்து கொண்டதைக் கவனித்தார் சுந்தரம்….

இன்னிக்குத்தான் உனக்கு இந்தப் புஸ்தக வாசனையே அடிச்சிதாக்கும்? ஒரு பார்வை பார்த்தவுடனே எல்லாமும் தெரிஞ்சி போச்சா…? பேஷ்… வெறுமே…. பார்த்திட்டுச் சொல்லாதே… எதையும்…..! .படிச்சிட்டுச் சொல்லு, புரியுதா…? – என்றவாறே நிதானமாய் பாத்ரூமுக்குள் குளிக்க நுழைந்தார்.

உஷாதீபன் 1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *