பக்கிரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 8, 2025
பார்வையிட்டோர்: 61 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உச்சி வெயில் ஓட்டை உடைக்கும்போது ஆறு மைலுக்கப்பால் இருக்கும் தேரிருவேலியில் ரன்னர் கார்மேகம் தலைமேல் தபால் பையைத் தூக்கி வைப் பான். தபால்பைக்குள் மணியார்டர், ரிஜிஸ்தர் தபால், பணம் என்று என்னென்ன இருக்குமென்று அவ்வள வாய்த் தெரியாது அவனுக்கு. ஆனால் ஒரு தகப்பன் தாயை விட அந்தப் பைமேல் அவனுக்குப் பொறுப்பு வந்து விடும். 

கையில் வேல்கம்பு நுனியில் சலங்கை சகிதம் படியிறங்கினானென்றால் மிலிட்டரிக் காரன் மாதிரி ஆகி விடுவான். ஆறு மைல் முழுவதும் தொங்கு ஓட்டத்திலேயே ஓடி வருவான். வண்டிப் பாதை யானாலும் ஒத்தையடிப் பாதையானாலும் எதிரே வரும் ஆள்கள் ஒதுங்கி நின்று விடுவார்கள். சலங்கைச் சத்தத்தோடு மூசுமூசென்ற மூச்சு களையும் கேட்டுச் சின்னப் பிள்ளைகள் பிசாசைப் பார்ப்பது போல் கார்மேகத்தைப் பார்ப்பார்கள். 

இந்த ஆறு மைல்களுக்குள் நஞ்சை, புஞ்சை, கண்மாய், காடு, பட்டி, தொட்டி, என்று பல பிரதேசங்களைத் தாண்டுவான் கார்மேகம். எங்காவது கருவமரங்களும் உடை மரங்களும் கத்தாழைச் செடிகளும் தென்படும் இடங்களில் லேஸான தாவர வாசம் வரும். பனை மரங்கள் குடுமிகளோடு நிற்கும். நுனி நிழலில் கூட அடர்த்தி இருக்காது. அப்படியே யிருந்தாலும் நின்று சூட்டுக்குக் காலாற்றிக் கொள்கிற ஆளில்லை கார் மேகம். 

பணிவாசல் ஊர் தாண்டியதும் இந்த ஊர்க் கண்மாய் உள்வாய் ஆரம்பிக்கும். கண்மாய்க்குள் வெகு தூரம் மணற்சாரியிலேயே ஒடி வருவான். இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கு மிடையே ஏழு மடைகள். இரண்டு கண்ணால் பாதிக் கண்மாயைக்கூடப் பார்த்து விட முடியாது. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மீதி கிடக்கும். ஆறுவருசம் முன்னால் நிறை கண்மாயா யிருந்த போது தபால் பையைத் தலையில் வைத்துக் கொண்டு நீந்தியது. அப்புறம் வெட்டுக்குழி தாண்டித் தாண்டித் தண்ணீர் அபூர்வமாய்த்தான் கிடந்தது. வண்ணான் துறைக்கு நேராக ஏறினால் முழங்காலுக்கு மேல் தண்ணீர் வேட்டியை நனைத்ததில்லை. 

கண்மாய்க்கரை இறங்கியதும் விபூதி நிறத்தில் வரப்புகள் கிடக்கும். வயல்களில் அறுத்த தாள் கூட அழிந்து பொட்டல்களாய்க் கிடக்கும். புஞ்சைக் காடு களில் கிள்ளி எடுக்க ஒரு பச்சைச் செடி கிடைக் காது. மைதானம் மைதானமாய்க் கிடக்கும். 

கார்மேகம் வரும் நேரத்தில் ஊருக்குள் சின்னப் பர பரப்பு உண்டாகும். பட்டியலடித்த திண்ணைகளில் உட்கார்ந்து பேன் பார்க்கும் பெண்கள் சலங்கைச் சத்தம் வருகிறதா என்று காதுகளைத் தாழ்த்தி கவனித்துக் கொண்டிருப்பார்கள். கார்மேகம் தெரு வழியாய் ஓடித் தங்கள் வீட்டைக் கடந்ததும் அப் போது பார்க்கும் எந்த வேலையையும் பேச்சையும் நிறுத்தி விட்டு முக்காடுகளைச் சரிப் படுத்துவார்கள். முந்தானையில் முகத்தைத் துடைப்பது போலிருக்கும்; கண்ணையும் சேர்த்துத் துடைத்துக் கொள்வார்கள்; ‘அல்லாவே இண்ணைக்கு அவுககிட்டெருந்து தபால் வரணும்” என்று மனசுக்குள் தொழுகை மாதிரி ஒன்று நடக்கும். 

வெளியூருக்கும் வெளி நாட்டுக்கும் போய்சம்பாதிக்கத் திடமில்லாத ஆம்பிளைகளும் முடியாத அம்பிளை களும் சில வீடுகளில் உண்டு. தங்கள் வீடுகளிலிருந்து போன ஆள்களிடமிருந்து காகிதங்களையும் மணியாடர்களையும் தேடி கார்மேகம் வரும் நேரத்திற் குத் தபாலாபீஸில் இது ஒரு கூட்டமாய்க்கூடும். இந்தக் கொண்டு கார்மேகம் தபாலாபீஸுக்குள் நுழைந்து பையை இறக்கி வைத்து விட்டு போஸ்ட் மாஸ்டரைக் கும்பிடுவான். சரீரம் மேலும் கீழும் இறங்கி ஏறும். தபால் பை வைத்து வைத்து வழுக்கையான தலை வழியாய் வேர்வை பொங்கி வரும். இந்த ரன்னர் கார்மேகம் டிபார்ட்மெண்ட் ஆளில்லை, எக்ஸ்ட்ரா டிபார்ட்மெண்ட் ஆள். அப்போது இவன் சம்பளம் 25 ரூபாய். 

போஸ்ட்மேன் பழனியப்பன், ரன்னர் கொண்டு வந்து போட்ட தபால் பையை இறக்கி ஜன்னல் வளிச் சத்தில் பார்ப்பார். அரக்கு சீல் சரியாக இருக்க வேண்டும். தேரிரு வேலி என்ற எழுத்துகள் சீலில் தெரிய வேண்டும். பார்த்து விட்டு மேஜை மேல் போட்டு அரை வீசைக் கனத்தில் கறுத்துப் போய்க் கிடக்கும் கத்தரிக் கோலால் சீல் சணலை வெட்டிப் பையைத் தூக்கிக் கொட்டுவார். 

மேஜை மேல் உள் நாட்டுக் காகிதங்களும் வெளி நாட்டுக் காகிதங்களும் ஸ்டாம்புக் கட்டுகளும் பாஸ் புத்தகங்களும் ரிஜிஸ்தர் தபால் கட்டும் பட்டியலும் விழும். இவைகளை வரிசையாய் அடுக்குவதற்குள் திண்ணையில் கூடியிருக்கும் கூட்டம் முண்டும். முழு நரையும் பாதிநரையுமாய் இருபது தலைகள் தபால் ஆபீஸின் சின்ன வாசலுக்குள் நீளும். சிலர் தைரியமாக முழு உடம்பையும் தபாலாபீஸுக்குள் கொண்டு வந்து பைக்குள்ளிருந்து விழும் காகிதங்களை பரபரப்பாய் கவனிப்பார்கள். போஸ்ட்மேன் பழனியப்பனுக்கு புழுக்கத்தில் திரேகம் வேர்வைக்குள் கிடக்கும். 

“ஏங்க காயிதங்களை நாங்களா வைச்சுக்கரப் போறோம் தெனமுமா சொல்லணும். வெலகித் திண்ணைக்குப் போங்க” என்பார். இவர் மதுரைப் பக்கமிருந்து இங்கு வேலைக்கு வந்தவர். பத்தாவது முடித்தவர். டிபார்ட் மெண்ட் ஆள். இவருக்கு சம்பளம் அப்போது 75 ரூபாய். 

இவ்வளவு அமளியும் பத்தடிக்குள் நடந்து கொண் டிருக்கும் போது பாதி மேஜைக்கு ஒரு ரிஜிஸ்தரை விரித்துப் போட்டு எழுதிக் கொண்டிருப்பார் மூக்குக் கண்ணாடியோடு போஸ்ட் மாஸ்டர். ஒரு பறவைக் கப்பக் காயிதங் குடுங்க மாமு’ என்று ஒருஇஸ்லாமான பெரியம்மா ஜன்னலில் கேட்கும். ‘காயிதக் கூடு’ கேட்டு ஒரு ஆள் நிற்கும். இரண்டு தலைகள் சேர்ந்து ஜன்ன லுக்கு வந்தாலே போஸ்ட் மாஸ்டருக்கு வெளிச்சம் மறைக்கும். 

மூல வியாதியோடு சிரமப்படும் போஸ்ட் மாஸ்டருக்கு வாசல் கூட்டமும் ஜன்னல் கூட்டமும் அறையை இருளடைய வைக்கும் போதெல்லாம் ராட்சசனாய்க் கோபம் வரும். பெரிய திண்ணைகளோடு ஓட்டுவாட்ட வீடும் நாலு இங்கிலீஷ் வார்த்தைகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் அனுபவப் படிப்பும் ஊரில் கொஞ்சம் நிலங்கரை இருந்ததாலும் 1935 லேயே இவருக்கு பிராஞ்சு போஸ்ட் மாஸ்டர் வேலை போட்டுத் தந்தார்கள். போஸ்ட் மாஸ்டர் நாராயணன் சேர்வையும் டிபார்ட்மெண்ட்ஆளில்லை. இவரும் எக்ஸ்ட்ரா டிபார்ட் மெண்ட் ஆள். இவருக்கும் ரன்னர் கார்மேகத்துக்கும் ஒரே சம்பளம்-25 ரூபாய். 

போஸ்ட் மேன் பழனியப்பன் காகிதங்களை அடுக்கி னார். உள்ளூர் வெளியூர் என்று பிரித்தார். வெளியூர் களில் ஒவ்வொரு ஊருக்காய்ப்பிறகு பிரிக்க வேண்டும். உள் நாட்டுத் தபால், வளிநாட்டுத் தபாலென்று அவசரம் அவசரமாய்ப் பிரித்தார். இவ்வளவு பிரிக்கும் வரை தான் வெளியில் நிற்கும் ஆள்களுக்குப் பொறுமை நிற்கும். இதற்கு மேலானால் ஏடாகூடமாய் எதுவும் நட்ந்து விடும்.பல முறை அப்படி வாக்கு வாதம் முற்றி ஊர்ப் பொது வரை போயிருககிறது. 

பிரித்தது பிரிக்காதது என்றிருந்த எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு திண்ணைக்கு வர, அவரைச் சுற்றிக் கோட்டை கட்டியதுபோல் கூடவே ஆள்களும் திண்னணக்கு வந்தார்கள். வந்திருந்த கூட்டத்தில் மூன்று பேர்களுக்கு மட்டுமே கடிதம் வந்திருந்தது. மற்ற ஆள்கள் சத்தங் கொடுத்தன. 

“இனா அப்துல்லாவுக்கு மணியார்டர் வந்திருக்கா? அனா இபுறாம்சாவுக்கு ரிஜிஸ்தர் தபால் வந்திருக்கணுமே.’ 

போஸ்ட் மேன் வத்த மணியாடர்களிலும் ரிஜிஸ்தர் தபால்களிலுமிருந்த பெயர்களைப் படித்தார். ஒரு ஆளுக்கு மணியாடர் வந்திருந்தது. 

“எவ்வளவு ரூவா?” என்று முகம் கலங்கக் கேட்டார் பழைய கைலியும் தொப்பியுமாய் ஒரு பெரியவர். 

“இருநூறு ரூபா”

“குடுத்தறீயளா?” 

“நாளைக்கு வாங்க. இதையெல்லாம் பதிஞ்சு எடுக்கணும்.” 

“காலையிலெ சுத்துவட்டத்துக்குப் போயிருவியளே.’ 

“போஸ்ட் மாஸ்டர்ட்ட வாங்கிக்கிருங்க. குடுத்துட்டுப் போறேன்.” 

“நல்லாப் பார்த்துருங்க. ஆவன்னா அப்தாகிர்னு தானே இருக்கு.” 

“ஆமா ஆமா. ஒங்களுக்குத் தான்.” 

அரை திருப்தியோடு அவர் எழுந்தார். வந்திருந்த ஆட்களில் கடிதம் கிடைத்தவர்கள் ச சந்தோஷப் பட்டும் கிடைக்காதவர்கள் சஞ்சலப்பட்டும் கலைந்து கொண்டிருந்தார்கள். இன்னும் இருபது காகிதங்களுக்கு மேல் வெளி நாட்டுக் காகிதங்கள் போஸ்ட் மேன் கையிலிருந்தன. 

போஸ்ட் மாஸ்டர் வீட்டம்மாவிடம் ஒரு ஈயச் செம்பு நிறைய புளிச்ச தண்ணி வாங்கிக் குடித்து விட்டுக் காலாற உட்கார்ந்த கார்மேகம் ஓடிவந்தான், தபால் பெட்டியைத் திறந்து காகிதங்களை அள்ளி வந்து சீல் குத்த ஆரம்பித்தான். 

போஸ்ட் மாஸ்டர் கொய்னா மாத்திரை விற்பனை முதல் கார்டு கவர் ஸ்டாம்பு விற்பனை இருப்பு விவரங்களை நீளபாரத்தில் எழுதி முடிக்கக் கட்டுகள் தயாரானது. போஸ்ட்மேன் கட்டுகளிலும் சிறு சிறு பைகளிலும் சீல் வைக்க ஆரம்பித்தார். கறுப்பு அரக்கு விளக்கில் உருகியது. மேஜை,அரக்கு,வட்டமெத்தையில் ஊற்றும் சீல் மை, கோந்து எல்லாமே தபாலாபீஸில் கறுப்பு. எல்லோருக்கும் புழுக்கம். 

பையைத் தூக்கிக் கார்மேகம் தலையில் வைத்து வேல்கம்பும் சலங்கைச் சத்தமுமாய்க் கிளம்பியதும் போஸ்ட் மாஸ்டர் விரல்களைச் சொடக்கு விட்டு நாற்காலியில் சாய்ந்தார். போஸ்ட்மேன் வெளி நாட்டுக் காகிதங்களை எடுத்துக் கொண்டு திண் ணைக்கு வந்தார். படியில் உட்கார்ந்திருந்த பக்கிரி கையையும் காலையும் இழுத்து இழுத்து நடந்து பக்கத்தில் வந்தான் 

இந்த ஊர் கிராமம் தான். ஆனால் ஊர்க் கோடி சேரிவரை சேர்த்தால் ஆயிரம் தலைக் கட்டுக்கு மேல் போகும். வடக்குத் தெருவுக்கும் தெற் குத் தெருவுக்கும் நடுவில் அடைத்துக் கொண்டு நூறு வீடுகள் இஸ்லாமான வீடுகள். 

அங்கேயிருந்து இங்கே வரை அகண்டு கிடக்கும் கண் மாய் பாளம் பாளமாய் வெடிக்க ஒவ்வொரு ஆளாய் மதுரை மெட்ராஸ் என்று வெளியேறி வந்த போது மலேயாக்காரன் கதவைத்திறந்து விட்டான். கப்பலடி யில் லுங்கியோடு நின்று வேலைபார்த்து பெண் டாட்டி பிள்ளைகளுக்காக உயிரை அர்ப்பணிக்கத் தயாராயிருந்தவர்கள் எல்லோரும் மெட்ராஸையும் தாண்டக் கப்பலேறினார்கள். அநேகமாய் இந்த இஸ்லாமான வீடுகள் இரு நூறிலும் பத்திருபது வீடு கள் நீங்கலாய் வீட்டுக்கு ஒரு ஆள் ரெண்டு ஆளாவது போனார்கள். 

 பினாங்குத் துறை முகத்தில் வடிந்த வேர்வை மணியாடர்களாய் இந்த ஊருக்குள் வரும். மணியாடரை விட கடிதம் முக்கியம். கடிதத்தில் ஒரு நபரின் பெய ரும் இடமும் ஊரும் குறிப்பிட்டிருக்கும். அந்த ஊர் பக்கத்தில் தானிருக்கும். அந்தக் கடிதத்தைக் கொண்டு போய் அந்த நபரிடம் கொடுத்தால் இருநூறு முந்நூறு என்று பினாங்கில் கட்டிய வெள்ளிக்குச் சமமாகக் கொடுப்பார்கள். “உண்டியலில் பணம் அனுப்பி யிருக்கிறேன்” என்று கடிதத்திலிருந்தால் இது தான் அர்த்தம். 

இங்கிருந்து போன ஆள்கள் கூட்டாக ஒரு இடத்தில் தங்கிக் கொண்டு தாங்களே பொங்கிச் சாப்பிட்டுக் கொண்டு அனாவசியமாய் எந்த செலவிலும் ஈடுபடா மல் இருந்து அனுப்புவது இந்தப் பணம். ஏழு நாள் கப்பலில் போய்க் கடல் தாண்டி எங்கோ மூட்டை களைத் தூக்கித் திரியும் மகன் முகம் வயசாளிகளுக்கு எந்த நேரமும். மலேயாவிலிருந்து புருஷன் வீடு வரும் ஒரு விடிகாலைப் பொழுதே பகலிலும் ராத்திரியிலும் சொப்பனங்களிலும் வரும் பெண்களுக்கு. ஓங்கியிலி ருந்து ஒரு மூட்டை தலையில் விழுந்தாலும் போதும் தூரம் அதிகம் நாளும் அதிகமென்ற நினைப்பில் தகாத தொடர்பு வந்தாலும் போதும், புருஷன் நமக் கில்லை என்ற பயம் பெண்களுக்கு. 

‘‘786” என்று ஆரம்பித்து “அல்லாவின் கிருபையால் இப்பவும் நான் இவ்விடத்தில் நல்ல தேக சுகத்துடன் இருந்துவருகிறேன். இதுபோல் அவ்விடத்தில்நீ உம்மா அத்தா..” என்று வரும் கடிதத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்கும்போதே பெண்களுக்குப் பொங்கி வரும். 

மலேயாவிலிருந்து வரும் இப்படிக் கடிதங்களை மதுரைப் பக்கம் பத்தாவது முடித்து வருகிற ஆள்களால் வீடு பார்த்து, ஆள் பார்த்துக் கொடுத்து விட முடியாது. வீடுகளுக்கு நம்பர் கிடையாது. தெருக்களுக்குப் பெயர் கிடையாது. பெண்களுக்கு முக்காடு வேற. 

பக்கிரிக்குத் தான் யார் யாரென்று தெரியும். இவன் டிபார்ட் மெண்ட் ஆளுமில்லை” எக்ஸ்ட்ரா டிபார்ட் மெண்ட் ஆளுமில்லை. போஸ்ட் மேனுக்கும் போஸ்ட் மேன் என்று ஊரில் அவனுக்குப் பட்டம். ஒரு எழுத்து எழுதப் படிக்கத் தெரியாது பக்கிரிக்கு. 

பக்கிரிக்கு கை கால் விளங்காது. ஆனால் நடப்பான். பத்தடி நடக்க ரெண்டு நிமிஷமாகும். கையை நீட்டி ஒரு காகிதத்தை வாங்கி சட்டைப் பையில் வைக்க ஒரு நிமிஷமாகும். பேச எத்தனித்து ஒரு வார்த்தை அடிபட்டு மிதிபட்டு வெளி வருவதற்குள் வாய்கோணி இழுத்துக் கொள்ளும். அவன் பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் இந்த ஊரில் மூன்று பேர், ஒருவர் போஸ்ட்மேன் பழனியப்பன்; அடுத்து போஸ்ட் மாஸ்டர் நாராயணன் சேர்வை; இன்னொரு ஆள் இவனை வளர்த்த சின்னம்மா ஆயிசாம்மா.

திண்ணையில் உட்கார்ந்து போஸ்ட் மேன் பக்கிரியிடம் ஒவ்வொரு கடிதமாயெடுத்து அதுயாருக் கென்று படிப்பார். 

‘செய்நம்பு’ 

பக்கிரி ‘அயுப்பு’ என்று குதறிக் குதறிக் கேட்பான். ஊருக்குள் பத்து ‘செய்நம்’புகள் அனுப்பு யாரென்று சொல்ல வேண்டும். ‘அகமது’ என்று பின்னால் திருப் பிப் பார்த்துப் படிப்பார். மலேயா போன ஆட்களில் நாற்பதுக்கு மேல் அகமதுகள். சினா அகமது என்ற வுடன் வாங்கி ஒரு தடவை பார்த்துவிட்டுச் சட்டைப் பைக்குள் வைப்பான். அடுத்த கடிதம் ‘செய்நம்பு’; அனுப்பு காவனை சிக்கந்தர். வாங்கிப் பார்த்து விட்டு இரண்டாவது கடிதமாய்ப் பையில் வைப்பான். 

வரிசையாய் இப்படி ஐம்பது கடிதமானாலும் வைத்துக் கொள்வான். ராத்திரிக்குள் வீடுகளில் பட்டுவாடா முடிந்து விடும். ஒரு கடிதம் இன்னொரு வீட்டிற்குப் போய் விட்டால் கொலை பழி நடந்து விடும். பங்காளி களுக்கு மட்டும் ரகஸ்யங்கள் தெரிந்து விடக் கூடாது. ஒரு வீட்டைப் பற்றி அவ்வளவு தூரத்திலும் பகைமாறாமல் பெண்டாட்டிக்கு எழுதியது பகையாளியிடமே கிடைத்தால் ஊர் துண்டுகளாகி விடும். 

ஆனால் அப்படி ஒரு தப்பு நடந்து யாரும் கேட்ட தில்லை. பக்கிரி மூளையும் தப்பு செய்ததில்லை; பக்கிரி மனசும் தப்பு செய்ததில்லை. பக்கிரிக்கு போஸ்ட்மேன் பழனியப்பன் தன் சம்பளத்திலிருந்து மாதா மாதம் பத்து ரூபாய் கொடுத்து வந்தார். 

அதைவிடப் பக்கிரிக்கு ஊரில் இருந்த மரியாதைதான் முக்கியம். சாப்பாட்டு நேரத்திற்கு பக்கிரி தெருவில் நடந்தால் பெண்கள் கூப்பிட்டு சாப்பாடு கொடுப்பார் கள். மலேயாவிலிருந்து வாசமாய் வந்திறங்கியதும் பெட்டியைத் திறந்து பெண்டாட்டிக்கு. உம்மாவுக்கு, அத்தாவுக்கு என்று துணிமணிகளை எடுத்துக் கொடுப் பார்கள். வாய் கோணி ‘ஆயித’ என்று வாசலில் அல்லா அனுப்பிய ஆள் போல காகிதம் கொடுக்கும் பக்கிரிக்கு மறுநாள் காலையில் கைலி, பனியன் சோப் எல்லாம் கொடுப்பார்கள். 

சாயாக் கடைப்பக்கம் போய்ப் பக்கிரி ஒரு நிமிடத் திற்கு மேல் நிற்க வேண்டியதில்லை. யார் சொல்லி யாவது ஒரு சாயா வந்து விடும். சமயங்களில் ஓமப் பொடியும் மிக்சரும் கூட வரும். 

ஒவ்வொரு வருசமும் ஐப்பசி கார்த்திகைகளில் கறுப்பு கறுப்பாய் வந்து ஆகாயம் பார்க்க வைக்கும் மேகம். கண்ணாமூச்சி காட்டி விட்டு ஓடிவிடும். நாற்றங் காலிலே சாவியறுக்க வைத்து விடும். மலேயா வரத் தில் ஊர் வயிறு நிரம்பியது. 

போஸ்டாபீஸைப் பார்க்க இன்ஸ்பெக்டர்கள் வந்தவர் கள் இவ்வளவு காகிதங்களும் மணியாடர்களும் ரிஜிஸ்தர் தபால்களும் இந்த ஊருக்கு வருவதைப் பார்த்து இனியும் இது பிராஞ்ச் ஆபீஸாக இருக்கக் கூடாது,சப் ஆபீஸாக ஆக்க வேண்டுமென்று மேலாவிற்கு எழுதிக் கொண்டேயிருந்தார்கள். ஒரு தடவை வந்த இன்ஸ் பெக்டர் தெற்குத் தெருவில் ராமையாக் கோனார் வீட்டைக் கூட சப் ஆபீஸ் வைக்க இடம் பார்த்து விட்டுப் போனார். இந்த ஊரைப் பற்றி நகரங்களில் என்னென்னவோ நடந்திருக்கின்றன. 

இதெல்லாம் இப்படி இருக்க மலேயாவில் என்னவோ நடந்து விட்டது. ‘இனி ரெண்டு மாசந்தான் மலேயா சம்பாத்யம். ஊருக்கு வரவேண்டிய கட்டாயம் வந்து விட்டது. கெடுபடி அதிகமாகி வருகிறது’ என்று முதலில் ஒரு கடிதம் சவுக்கத்தலியிடமிருந்து வந்தது. ஒரு கடிதம் இரண்டாவது கடிதம் என்று அடுத்தடுத்த வீடுகளுக்கு வரஆரம்பித்தது. ஊரே கலங்கி நிற்க ஆள் கள் கூட்டம் கூட்டமாய் மதராசிலும் நாகபட்டினத்தி லும் கப்பல்களில் வந்திறங்கி ஊருக்குள் வந்தனர். 

ஊருணியில் குளிக்கக் கூட்டம், சத்திரத்தில் ஆடுபுலி ஆடக் கூட்டம், பள்ளிவாசலில் தொழுகைக்குக் கூட்டம் என்று நிரம்பிக் கிடக்க கார்மேகம் ஆறுமைல் களுக்கப்பால் தேரிருவேலியில் தூக்கித் தலையில் வைக் கும் பை கனமற்றுப் போனது. தபாலாபீஸ் சுரத்தில் லாமல் நடந்தது. பக்கிரி படியில் உட்கார்ந்து எழுந்து போய்க் கொண்டிருந்தான். 

ஒரு நாள் வந்த தபால் பையில் போஸ்ட் மாஸ்டருக்கு மேலாவிலிருந்து வந்த உத்தரவைப் படித்து விட்டுத் தொய்ந்து உட்கார்ந்தார். வரப் போகும் ஒண்ணாந்தேதி சப் ஆபீஸாக மாறுகிற தென்றும் தெற்குத் தெருவில் பார்த்திருந்த கட்டிடத்திற்கு ரிக்கார்டுகளைக் கொண்டு போக வேண்டுமென்றும் உத்தரவாகி யிருந்தது. சில நாளில் பரமக்குடியிலிருந்து ஒருவர் வந்தார். மடமட வென்று தெற்குத் தெருவிற்கு ரிக்கார்டுகள் போக ஒண்ணாந்தேதி சப் போஸ்ட் மாஸ்டரோடு தபாலாபீஸ் நடக்க ஆரம்பித்தது. 

மூன்று மாதங்கழித்து இன்னொன்றும் நடந்தது. முதுகுளத்தூரிலிருந்து தேரிருவேலிக்கு தபால் வந்து தேரிருவேலியிலிருந்து இங்கு கொண்டு வரு வதும் இதை ஒரு ஆள் தூக்கிக்கொண்டு ஒடி வருவதும் அனாவசியம் என்று பஸ்ஸில் பை வர ஆரம் பித்தது. ஊருக்கு பஸ் விட்டு ஒரு மாதத்திலேயே இது நடந்து விட்டது. 

போஸ்ட் மாஸ்டர் நாராயணன் சேர்வை ரன்னர் கார்மேகம் இரண்டு பேருக்கும் வேலையில்லை. ஒரு மாதந்தாண்டி போஸ்ட் மாஸ்டர் மதுரையில் மகன் வீட்டிற்குக் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு போய் விட்டார். கார்மேகம் தஞ்சாவூர்ப் பக்கம் ஆடு மேய்க்கப் போய் விட்டான். போஸ்ட்மேன் டிபார்ட் மெண்ட் ஆளானதால் சப் ஆபீஸில் போஸ்ட்மேனாய் வேலையைத் தொடர்ந்தார். 

பக்கிரி தான் பாவம். அவனை ஆபீஸும் ஆள்களும் அனுதாபமாய்ப் பார்த்ததோடு சரி. சாயாக் கடை முன் மூன்று மணி நேரம் நின்றாலும் ‘குடி’ என்று சொல்ல நாதியில்லை. பழைய கைலி யும் கிழிந்த பனியனுமாய்த் திரிந்தான். கடிதங்களை வைத்துக் கொள்ளும்படி பெரிய பையுள்ள சட்டை போட்டே ஜனங்கள் பார்க்கவில்லை. 

பஸ்ஸ்டாண்டில் வெகு நேரம் நிற்பான். இறங்கி ஏறும் தபால் பைகளை வெறித்துப் பார்ப்பான். நேரங் கெட்ட நேரங்களில் வந்து ஆயிசா அம்மாவிடம் திட்டு வாங்கினான். 

போஸ்ட்மேன் பழனியப்பன் உள்படப் பலரும் தபாலாபீஸில் மாறிக் கொண்டேயிருந்தார்கள். பக்கிரியின் முத்திரைகள் தபாலாபீஸெங்கும் கிடைக்கவேயில்லை. 

பல வருஷங்களுக்கப்புறம் ஆயிசா அம்மாவிடம் ‘பக்கிரி இருக்காரா’ என்று ஒரு ஆள் வந்து வாசலில் நின்று கேட்டான். காக்கி பேண்ட், காக்கி சட்டை- போஸ்டாபீஸ் ஆள். பக்கிரி உள்ளேயிருந்து வந்தான். தலை முடியெல்லாம் நரைத்திருந்தது. 

“போஸ்ட் மாஸ்டரும் போஸ்ட் மேனும் ஒங்களை ஆபீஸுக்குக் கூட்டிக்கிட்டு வரச் சொல்றாங்க. துபாயி லெருந்தும் குவைத்திலிருந்தும் வர்ற காயிதங்களைக் குடுக்கத் தெரியலையாம்.” 

உள்ளே போய் பெட்டியைத் திறந்து காகிதங்களை வைத்துச் செல்கிற மாதிரி தைத்திருந்த சட்டையை எடுத்தான் பக்கீர் மஸ்தான் என்கிற பக்கிரி.

– சாசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, அன்னம் பி.லிட், சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *