பக்கத்து வீட்டுக்காரன்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2025
பார்வையிட்டோர்: 519 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எவ்வளவு அழகிய குளம் அது! ஆகாயத்து மேக மாலைகள் வரும்போதும் போகும்போதும் தம் முடைய சிங்கார அழகுகளைப் பார்ப்பதற்காகப் பூமி யில் பதித்துவைத்திருக்கும் உயர்ந்த நிலைக்கண்ணாடி யோ அது என்று தோற்றியது. 

அந்தக் குளத்தின் கரையில் ஓர் அழகிய புதரும் இருந்தது. வட்டமான, ஓரத்தில் பட்டை தீட்டிய நிலைக் கண்ணாடிக்குப் பொருத்திய, சித்திர வேலைகள் செய்த சட்டமோ என்று அது தோற்றியது. 

குளத்தில் மீன்கள் ஆனந்தமாகத் துள்ளும். புதரில் பறவைகள் உல்லாசமாகப் பாடும். 

தற்செயலாக ஒரு மீனுக்கும் ஒரு பறவைக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

“குளத்துக்குள்ளே நீந்தும்போது மிகவும் ஆனந்தமாக இருக்கும் அல்லவா?” என்று பறவை மீனைக் கேட்டது. 

யாருக்குத்தான் அகந்தை இல்லை? மீன் குளத் துக்குள்ளே இருக்கும் அற்புதங்களை வர்ணித்தது. அந்த வர்ணனை முடிந்ததும், “ஆகாயத்தில் பறப்பது வெகு வேடிக்கையாக இருக்கும் அல்லவா?” என்று கேட்டது. 

பறவை ஒரு மகாகவியைப்போல ஆகாய யாத் திரையை வர்ணித்தது. மீன் மனத்துக்குள்ளேயே தவித்துப் புழுங்கியது. 

சீக்கிரமே அவை இரண்டுக்கும் குளக்கரையில் சந்திப்பு ஏற்பட்டது. மீன் நீரை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தது. பறவை தண்ணீரில் இறங்கிக் கொண்டிருந்தது. 

மரத்தின்மேல் ஏறி, அப்புறம் ஆகாயத்திலே பறக்கவேண்டும் என்பது மீனின் ஆசை. 

ஆனால் அது மரம் வரையில்கூடப் போகவில்லை. குளக்கரைமீதே துடிதுடித்து இறந்தது. 

பறவையும் குளத்தினுள்ளே செல்லவில்லை. தாமரைக் கொடிவலையில் அதன் கால்கள் சிக்குண்டன. நட்ட நடுவிலேயே அது மூச்சடைத்துச் செத்துப்போயிற்று. 

அன்று குளக்கரையில் இருந்த பறவைகள், “இந்தப்புதரின் அருகில் உள்ள குளம் மிகவும் நல்லது, அப்பனே! இந்த மாதிரியே நமக்கு அடிக்கடி மீன்கள் தின்னக் கிடைக்கும்!” என்று தமக்குள் பேசிக் கொண்டிருந்தன. 

குளத்துக்குள்ளே இருந்த மீன்கள், “நம்முடைய குளத்தினருகே உள்ள புதர் மிகவும் நல்லதப்பா! இந்த மாதிரியே நமக்கு அடிக்கடி பறவைகள் தின்னக் கிடைக்கும்!” என்று பேசின. 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *