நூர்ஜகான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 9, 2026
பார்வையிட்டோர்: 373 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நூர்ஜகான் பீவி என்னைக் கூப்பிட்டு அனுப்பி னாள் என்ற சேதி எனக்கே வியப்பளித்தது, ‘பேகம் சாகிபாவது…….என்னையாவது ……..கூப்பிடுவதாவது! என்ன ஆச்சர்யம்’ என்றேன்.

‘நூரு பீலி உங்களைத்தான் கூட்டிவரச் சொன்னாக’ என்றாள் கள்ளங்கபடமறியாச் சிறுமி. அவள் தான் என்னை அழைக்க வந்தவள்.

‘நீ யார்? உன் பேர் என்ன? பேகத்துக்கு நீ என்ன உறவு’ என்ற கேள்வி அடுக்குகளைச் செவியுற்று அவள் திணறினாள். மாதுளை மொக்குப் போன்ற தன் உதடுகளை எச்சில்படுத்திக்கொண்டே ‘என் பேரு தில்ரூபா, நூரு பீவிக்கு… பீவிக்கு……..!’ என்று இழுத்தாள், என்ன சொல்வதெனப் புரியாமல்,

‘வீட்டில் வேறு யாரும் இல்லையா? சாகிப்ஜீ’?’

”சாச்சா ஊரில் இல்லை. வீட்டில் யாரும் கிடையாது. பீவிக்கு உடம்புக்குக் குணமில்லையாம்.உங்களை…’

‘சரி, வாறேன்….போ’

துள்ளும் இளமறி போலே வெளியே பாய்ந்தாள் தில்ரூபா.

நூர்ஜகான் பீவி என்னை அழைப்பானேன்? இது இயல்பான! கேள்வி. அவள் மீது எனக்கு எப்பொழுதுமே சந்தேகம் தான். முதல் முறை பார்க்கும் பொழுதே அவள் கண்வீச்சு சொன்ன பாடம் இது.

காலையிலும், மாலையிலும் வாய்க்காங் கரைக்கு நான் அப்படித்தான் போவது வழக்கம். மாமரங் களுக்கு இடையே செல்லும்போது குளுமையாக இருக்கும். அத்துடன் குஷ்யூட்டக்கூடியது கோஷாவின் பார்வை. முதல் சந்திப்பு இப்படித்தான் நடந்தது.

நான் தெருவில் போய்க்கொண்டிருந்தேன். சதா அடைத்துக் கிடக்கும் அந்த வீடு அன்று சற்றே திறந்து காணப்பட்டது. கதவருகிலே, கனகாம்பரப் பட்டு உடுத்திய பட்டாணிப் பெண் நின்றாள். நான் கவனித்த வேளையிலேயே அவளும் பார்த்தாள். பதுங்கவில்லை. அவள் கோஷா மங்கை என்றாலும் சிரித்தாள். அவளை நான் எங்காவது இதற்கு முன் பார்த்திருக்கிறேனே ?… பிரமை! அவ்வளவுதான்.

அன்றிருந்து தினம் மாலையில் கதவருகில் கண்டு களிக்க முடிந்தது அந்த அழகியை, பின் காலையில் கூடக் காணும் பாக்கியம் கிடைத்தது. இன்று மாலையிலே அவள் கதவை அகலத் திறந்து போட்டி ருந்தாள். உள் வாசலில், என்னை அழைத்த பெண் ணுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் முக்காடு நழுவிக்கிடந்தது. மார்புச் சேலை மறைக்க வேண்டிய தொழிலை மறந்து நடுவே புரண்டது. நான் வீசிய பார்வையில் அவள் தோற்றம் சிக்கிய வேளையிலே அவளும் பார்த்து நகை மலர்ந்தாள்.

அவள் ஏன் அப்படிச் செய்யவேணும் என்பது என் புதிர். அதற்கு மேற்பட்ட புதிராக அல்லவா இருக் கிறது அவள் அழைப்பு.

அவள் வீடு தனிமையில் நின்றது. பக்கத்தில் வீடுகள் இல்லை. மாந்தோப்பு, பின்புறம் வாய்க்கால். வீட்டில் அவளைத் தவிர வேறு யாருமே இல்லையாம். அதனால் எனக்கு ஒரு துணிவு பிறந்தது. எனினும் வீட்டுக்குள் நுழைய தயக்கமாகத்தான் இருந்தது காலடி ஓசை சேட்டதும் ‘வாருங்கள்!’ என்ற இன் குரல் வந்தது.

நேரே இருந்த அறையில் புகுந்தேன்.அங்கு அவள் இருந்த தோற்றம்! ஆஹாஹா!… மொக லாய சம்பரதாயப்படி நீண்ட கொழ கொழத்த பை ஜாமா அணிந்திருந்தாள், மேலே நீண்ட சில்க் ஜிப்பா, தோளில் அங்க வஸ்திரம். அழகுக்காகத்தானே தவிர அழகை மறைக்க அல்ல! திவானில் அவள் சாய்ந்திருந்த ‘போஸ்” கவர்ச்சி மிக்கது. விம்மிய மார்படை, தாழ்ந்த வயறிடை, துவண்டு கிடந்த ஜிப்பாவின் நெளிவுகளும், எழில் வதனத்தில் நெளிந்த முழு நகையும், சிங்காரிக்க அற்புதமாகச் சாய்ந்திருந்தாள், பாதுஷாவின் பட்டமகிஷி போலே.

என்னைக் கண்டதும் ‘எங்கே வரமாட்டீர்களோ என நினைத்தேன்’ என்றாள்.

‘ஏன் என்னைக் கூப்பிட்டீர்கள்?’

‘கூப்பிட்டீர்கள் ஆவது கள்! ஏன் கூப்பிட்டே நூருன்னு சொல்லுங்க’ என்ற பதில் என்னைத் திடுக் கிட வைத்தது. இவ்வளவு உரிமை பாராட்டும் துணிவு இவளுக்கு எப்படி வந்தது?’

‘என்ன, முன்பு கூப்பிடலையா? நான் வளர்ந்து விட்டேன். ஜிஹாங்கீர் கூட வளர்ந்துவிட்டான் நீங்கள் அன்றுபோல்தான் இன்றும்…’

மின்சாரப் பொறியைத் தட்டிவிட்டாள். உள்ளத்திலே பளிச்சிட்டது நினைவு. ‘இவள் ஜிஹாங்கீரின் இளைய சகோதரி நூருவா? அட்டே, என்ன ஜோரா வளர்ந்திருக்கா!’ என்றது மனம். ‘ஜிஹா இப்போ எங்கேருக்கான்? என்றேன்?’ அவன் எனது பள்ளித் தோழன்.

‘சென்னையிலே. உங்களைப் பற்றி அடிக்கடி பேசுவோம். என்னால் உங்களை மறக்கவே முடியலை. இப்போ நான் எப்படி இருக்கேன். ஊங்?’ என்றாள் குழைவாக. அப்பொழுது கர்வம் கொண்ட மயில் போல நிமிர்ந்து அசைந்தாள்.

‘ரொம்ப அழகா இருக்கே. சொக்கழகுதான். அது சரி. நீ கோஷா இல்லையா? என்னைக் கூப்பிட்டனுப்பலாமா?’ என்று கேட்டு வைத்தேன்.

‘ப்சூ! அதுக்கென்னவாம்’ என்றாள் அந்த ஓய்யாரி. என் பார்வை அவள் மீது சென்று சென்று மீண்டது. அவளுடைய விழிகளும் அப்படித்தான் அவ்வேளைகளில் அவளது வெண் தந்த முகம் சிவப்பாகி மிளிரும்.

‘இன்னைக்கி…’

என்னவோ சொல்ல வாயெடுத்தாள். பிறகு ‘இருங்கள்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள், அவள் அழகை ரசிக்காமல் இருக்க முடியுமா? அவள் மீண்டும் வந்தாள், கையில் ஒரு தட்டுடன். ‘உங்களுக்கு முந்திரிக் கொத்துன்னா ரொம்பப் பிடிக்குமே. இது நானே செய்தது. முன்பு எங்கம்மா செய்து தருவாளே அதைப்போல இருக்கா. பாருங்க’ என்று குனிந்து தட்டை என் முன்னால் வைத்தாள்.

அவள் மென்மூச்சு என்மீது பட்டு என்னைப் புல்லரிக்க வைத்தது. எங்கே அவள் தலை என் முகத்தில் இடித்துவிடுமோ எனப் பயந்து பின்னால் சாய வேண்டியதாயிற்று. அவள் பூசியிருந்த ‘டாம்கோ ஹேர் ஆயில்’ ஜாஸ்மின் மணம் கமகமத்தது. ‘உங்களுக்கு ரொம்பப் பிரியமானதாச்சே மல்லிகை மணம்’ என்றாள் நூரு.

முந்திரிக்கொத்தைப் பிட்டு வாயில் போட்டுச் சுவைத்தேன். ஊறிய இன்பப் பெருக்கால் ‘ரொம்ப நல்லாருக்குடி’ என்று வார்த்தைகள் உதிர்ந்தன, எனது, தவறை உணர்ந்து ‘ச்….ச்…ச்’ என்றேன். அவளோ துள்ளும் கயல் விழிப் பார்வையும் கள்ள நகையும் உகுத்து, தன் செங்காந்தள் விரலால் என் கன்னத்தைத் தட்டிவிட்டு உள்ளே ஓடினாள். அவள் தோளிலே கிடந்த மென் பச்சை சல்லாத் துணி – ஜிகினா தைத்தது – என்னைத் தடவிச் சென்றது. அதிலும் மல்லிகை மணம்.

கையில் தேநீர்க் கோப்பையுடன் திரும்பி வந்தாள். என் கண்கள் கூச்சத்தை ஒழித்துவிட்டன. தாராளமாக அந்த அழகுக் காட்டின் மீது மேய்ந்து திரிந்தன. என்னருகில் வந்தமர்ந்த நூரு ‘உனக்கு எங்க வீட்டு டீ ரொம்பப் பிடிக்குமே!’ என்றாள். உணர்ச்சிப் பிசகைத் திருத்தி ‘உங்களுக்கு’ என்றாள் உடனேயே.

‘நூரு, சாகிப் ஜீ’

‘அது கிடக்கு, ஊருக்குப் போயிருக்கு, வர ஒரு வாரம் ஆகும்’, என்று சொன்னாள். வெறுப்பும் அதிருப்தியும் அவள் குரலிலும் முக பாவனையிலும் விளையாடின, ‘நீங்க நாளைக்கும் வரணும். தினம் வர மாட்டீங்களா?’ என்று கெஞ்சினாள்.

‘எதற்கு?’

‘எதற்கா!’

இரண்டு பூங்கரங்கள் என் தோளை வளைந்தன. மென் இதழ்களின் ஸ்பர்சம் என்னை மயங்கச் செய்தது.

‘புரிஞ்சுதா, என் ராஷா!’ என்றாள் அந்த அழகுக் கோஷா.

– இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளில் சில 1942ம் வருஷம் எழுதப்பட்டவை, 1943ல் சிலவும், 44, 45ல் மற்றவையும் உருவானவை.

– நாட்டியக்காரி, முதல் பதிப்பு: 1964, கவிக்குயில் நிலையம், தென் திருவிதாங்கூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *