நிலாவின் சிரிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 96 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மொட்டை மாடியில் உட்கார்ந்தபடி வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என் உள்ளத்தில் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்த மகிழ்ச்சியை அந்த நிலா எப்படியோ தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் அது என்னைப் பார்த்துக் சிரிப்பதாகத் தெரிந்தது. ஆமாம். நிலா என்னைப் பார்த்துச் சிரித்தது! 

என் மகிழ்ச்சிக்குக் காரணம் என்ன தெரியுமா? என்னிடம் ஒரு ரூபாயும் எட்டணாவும் இருந்ததுதான். நாளை மாலை ‘ஏமாற்றம் ‘ என்னும் அற்புதமான படத்திற்கு ஒன்றேகால் ரூபாய் டிக்கெட்டில் செல்லப் போகிறேன். அந்தப் படம் பல வாரங்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது! என்றாலும் இதுவரை என்னால் பார்க்க முடியவில்லை. நாளை பார்த்து விடு வேன். மீதமுள்ள கால்ரூபாயை என் இஷ்டப்படி செலவு செய்வேன். எவ்வளவு நாளாகச் சேர்த்து வைத்த பணம்! நாளை என் வாழ்க்கையிலே ஒரு பொன்னான நாள். சந்தேகமே இல்லை. 

இப்படி எண்ணியதும், என்னை அறியாமலேயே சிரித்தேன். மேலே, வானத்தில் பவனி வந்த நிலாவும் சிரித்தது. 

பொழுது விடிந்தது! 

“கண்ணா! கண்ணா!” 

படுக்கையை விட்டு எழுந்திருப்பதற்கு முன்பே என் அக்காள் என்னை அழைத்தாள். நான் இருந்த இடத்தை விட்டு அசையாமல்,”என்ன?” என்று கூவினேன். அக்கா என்னிடம் வந்தாள். ரகசியக் குரலில், “கண்ணா, உன்னிடம் எட்டணா இருந்தால் கொடுடா! நாளைக்குக் கொடுத்து விடுகிறேன். ‘கலாவாணி’ பத்திரிகை வாங்க வேண்டும்” என்று கேட்டாள். 

என்னிடம் பணம் இருந்தது. ஆனால், நான் கொடுத்து விடுவேனா? “என்னிடம் தம்படிகூட இல்லை” என்று கூறிவிட்டேன். 

மணி பத்து இருக்கும். 

அப்பா வந்தார். “கண்ணா, பள்ளிக்கூடம் போக வில்லையா?” என்று அன்போடு கேட்டார். “இன்று சனிக்கிழமை. விடுமுறை!” என்று சுருக்கமாகச் சொன்னேன். 

“கண்ணா, நீ ஏதாவது காசு சேர்த்து வைத்திருக்கிறாயா? வைத்திருந்தால் ஒரு ரூபாயாவது, எட்டணாவாவது கொடு. நாளை மறுநாள் முதல் தேதி. அன்று எட்டணா அதிகமாகப் போட்டு உன் காசைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்று கேட்டார். 

“அப்பா, நீங்கள் கொடுக்கிற காசில் சேர்த்துக் கூட வைக்க முடியுமா? என்னிடம் காலணாக்கூட இல்லை” என்று கூறிவிட்டேன். அப்பா “சரி” என்று கூறிவிட்டுப் போய்விட்டார். 

மாலை ஐந்து மணி. 

நான் சட்டையை மாட்டிக்கொண்டு சினிமாவுக்குச் கிளம்பத் தயாரானேன். வாசலில் ஏதோ சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தேன். அம்மாவிடம் காயகறி விற்பவன் ஏதோ தகராறு செய்து கொண்டிருந்தான். 

“என்னம்மா இது சத்தம்?” என்று கேட் டேன். 

“கண்ணா, காலையில் இவனிடம் நாலணாவுக்குக் காய்கறி வாங்கினேன். சாயங்காலம் பணம் கொடுப்பதாகச் சொன்னேன். இன்றைக்கு உன் அப்பா காலணாக்கூடத் தரவில்லை. நாளைக்குப் பணம் தருகிறேன் என்றால் கேட்காமல் சத்தம் போடுகிறான். உன்னிடம் ஒரு நாலணா இருந்தால் கொடுக்கிறாயா? அப்பா வந்ததும் வாங்கித் தருகிறேன்” என்று கேட்டாள் அம்மா. 

என் மனம் இளகவில்லை. “என்னிடம் ஏதம்மா பணம்?” என்று கூறிவிட்டு வெளியே புறப்பட்டேன். நேராக சினிமாக் கொட்டகைக்குச் சென்றேன். அங்கே பத்தணா டிக்கெட் எளிதாகக் கிடைத்தது. என்றாலும் நான் அதை வாங்கவில்லை. ஒரு ரூபாய் நாலணா டிக்கெட் விற்குமிடத்திற்குச் சென்றேன். டிக்கெட் தருபவனிடம், “ஒரு டிக்கெட் கொடு” என்று கூறிக்கொண்டே என் சட்டைப் பையில் கையை விட்டேன். எனக்கு ‘பகீர்’ என்றது. முழு அரை ரூபாய் மட்டும் இருந்தது. ஒரு ரூபாய் நோட்டைக் காணவில்லை. தேடித் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை. 

டிக்கெட் தருபவர் ஒரு டிக்கெட்டைக் கிழித்து என்னிடம் நீட்டினார். நான், “மன்னிக்க வேண்டும். என் பணத்தைக் காணோம்!” என்று கூறி, அந்த இடத்தைவிட்டு வெளியே வந்தேன். ஒரு ரூபாய் எங்கேயோ, மாயமாக மறைந்துவிட்டது. சட்டைப் பையில் இருந்த கைக்குட்டையை நான் அடிக்கடி எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது ரூபாய் நோட்டும் வெளியிலே வந்து, எங்கேனும் விழுந்திருக்க வேண்டும்! 

இப்போது என்ன செய்வது? பத்தணா டிக்கெட் வாங்கக்கூடக் காசில்லை. ஆறணா டிக்கெட் வாங்கலாமா என்று யோசித்தேன். சற்று முன்னால் பத்தணா டிக்கெட் வாங்கக்கூடாது என்று நினைத்தேன் நான். ஆனால், இப்போது ஆறணா டிக்கெட் வாங்கச் சென்றேன். ஆறணா டிக்கெட் தரும் இடத்தில், ‘நிறைந்து விட்டது’ என்னும் பலகை தொங்கிக்கொண்டிருந்தது!

பேசாமல் வெளியே வந்தேன். கொட்டகையை விட்டுச் செல்லாமல், உள்ளேயும் போகமுடியாமல் வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவன் என் அருகே வந்து, “தம்பி, டிக்கெட் வேணுமா? ஆறணா டிக்கெட் எட்டணா” என்றான். 

உடனே என் முகம் மலர்ந்தது. கொஞ்சங்கூட யோசிக்காமல் என்னிடமிருந்த எட்டணாவை அவனிடம் கொடுத்துவிட்டு, அவன் கொடுத்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டு கொட்டகைக்குள் ஓடினேன். 

கொட்டகையில் டிக்கெட் வாங்குபவரிடம் டிக்கெட்டைக் கொடுத்தேன். “அப்பாடா! இனிமேல் நிச்சயம் படத்தைப் பார்த்து விடலாம்” என்று எண்ணி மகிழ்ந்தேன். 

அப்போது, “தம்பி, இந்த டிக்கெட்டை நீ எங்கே வாங்கினாய்?” என்று கேட்டார் டிக்கெட் வாங்குபவர். 

“ஏன்? என்ன விஷயம்?” என்று கலவரத்துடன் கேட்டேன். 

அவர், “இது நேற்று விற்ற டிக்கெட். இன்று செல்லாது. உன்னை எவனோ ஏமாற்றிவிட்டான்” என்று கூறிக்கொண்டே நான் கொடுத்த டிக்கெட்டை என்னிடம் திருப்பிக் கொடுத்தார். 

அதை வாங்கிக்கொண்டு வருத்தத்துடனும், வெட்கத்துடனும், அவமானத்துடனும் வெளியே வந்தேன். வெளியே என்னிடம் டிக்கெட் விற்றவன் இருக்கிறானா என்று பார்த்தேன். அவன் என்ன, பைத்தியக்காரனா அங்கேயே நிற்க? என் கையி லிருந்த செல்லாத டிக்கெட்டைக் கோபத்துடன் கிழித்துப் போட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன். 

எங்கெங்கோ சுற்றினேன். இரவு ஏழு மணி இருக்கும். ஒன்றரை ரூபாயுடன் உற்சாகத்தோடு வெளியே சென்ற நான், அவ்வளவு பணத்தையும் இழந்துவிட்டு, வருத்தத்தோடு, சோர்வோடு, கால் நோவோடு வீடு திரும்பினேன். 

அக்காள் என்னைப் பார்த்தாள். உடனே என்னிடம் ஓடி வந்தாள். “கண்ணா, பக்கத்து வீட்டுப் பங்கஜம் எனக்கு ஒரு ரூபாய் தர வேண்டும். அதைக் கொடுத்து விட்டாள். நான் ‘கலாவாணி’ வாங்கிக் கொண்டேன். கடையில் உனக்குப் பிடித்தமான குழந்தைப் பத்திரிகை ‘மல்லிகை’யும் வந்திருந்தது. வாங்கிக்கொண்டு வந்தேன். இந்தா” என்று ‘மல்லிகை’யை நீட்டினாள். 

நான் அவள் முகத்தைப் பார்த்தேன். அதில் அன்பு நிறைந்திருந்தது. நான் ஒன்றும் கூறாமல் ‘மல்லிகை’ யை வாங்கிக்கொண்டேன். 

அப்பா உள்ளேயிருந்து என்னை அழைப்பது கேட்டது. அவரிடம் சென்றேன். “கண்ணா, இன்று ஆபீசில் ஐந்து ரூபாய் கடன் வாங்கினேன். உனக்கு முதல் தேதி வாங்கித் தருவதாகச் சொன்னேனே, கலர் பென்சில், அதையும் வாங்கி வந்தேன். உன் மேஜை மேல் இருக்கிறது. எடுத்துக்கொள்” என்றார். 

“சரியப்பா” என்றுகூறிவிட்டு நேராக மொட்டை மாடிக்குச் சென்றேன். ஒரு மூலையில் உட்கார்ந்தேன். காலையிலிருந்து நடந்தவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தேன். 

அப்போது அம்மா, “கண்ணா” என்று அழைத்துக் கொண்டே மாடிக்கு வந்தாள். 

“காபி சாப்பிடாமலே சாயங்காலம் வெளியே போய்விட்டாயே! காபி ஆறிப் போச்சு. நீ வந்ததும் சூடு பண்ணிக் கொண்டு வந்தேன். சாப்பிடு கண்ணு” என்று பாசத்தோடு காபிக் குவளையை என்னிடம் நீட்டினாள். அம்மாவின் அன்பையும் என் இரும்பு இதயத்தையும் நினைத்துப் பார்த்தேன். 

அம்மா கீழே போய்விட்டாள். அக்கா, அப்பா, அம்மா அனைவரும் என்னிடம் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள். நான் அவசர நேரத்தில்கூட அவர்களுக்கு உதவ மறுத்தேன். அதற்குத் தகுந்த தண்டனை கிடைத்துவிட்டது. அவர்களுக்கு உதவாத பணம் எனக்கும் உதவவில்லை. 

இவ்வளவு நேரம் பணம் வீணானதே என்று வருந்தின நான், “அது வீணாகவில்லை. எனக்கு நல்ல நடத்தையைக் கற்பித்தது. தகுந்த தண்டனையும் கொடுத்துவிட்டது” என்று திருப்தி அடைந்தேன். ‘இனி நானும் அப்பா, அம்மா, அக்காள் முதலியவர்களைப் போலவே அன்பாக நடந்து கொள்வேன். என்னால் முடிந்த உதவிகளை யெல்லாம் செய்வேன்’ இப்படி முடிவு செய்துகொண்டு வானத்தைப் பார்த்தேன். என் முடிவை ஆதரிப்பதைப்போல நிலா என்னைப் பார்த்துச் சிரித்தது! 

– அன்புத் தாத்தா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1957, பாரி நிலையம், சென்னை.

முனைவர் பூவண்ணன் பூவண்ணன் (வேள்ள தாமோதர கோபாலகிருஷ்ணன்; பிறப்பு: 5 செப்டம்பர் 1932 - இறப்பு: ஜனவரி 11, 2013) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சிறார்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். தமிழ் இலக்கியம், சிறார் இலக்கியம் குறித்து ஆராய்ந்து வரலாற்று நூல்களைப் படைத்தார். தனது இலக்கியப் பணிகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றார். பூவண்ணன் - Tamil Wiki நேர்காணல்: டாக்டர் பூவண்ணன் (2005) http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=1072 பூவண்ணன்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *