கதையாசிரியர்: ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2024
பார்வையிட்டோர்: 2,005 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மலைநாடு குளிர்ந்து போயிருக்கின்றது. பனி தோய்ந்த மலைகளும், மரங்களும், புல் பூண்டுகளும் பசுமையாக இருக்கின்றன….. 

மலைகளும், மேகங்களும் காதல் செய்கின்றன… மலைகள் ஆண்களாகவும், முகில்கள் பெண்களாகவும் ஆரத் தழுவி ஆலிங்கனம் செய்கின்றன. 

தேயிலைக் காடுகளில் கற்பாறைகள் குகைகளாகவும் வீடுகளாகவும், மன்னர் காலத்துக் கோட்டைகளாகவும், தென்பட்டு மாமல்ல புரத்துச் சூழலை நினைவூட்டிக் கொண்டிருக்கும்.’ 

அந்தக் கல் இடுக்களில் இன்பக் கதைகள் பேசி…… அவரோடு எச்சில் படுத்தி ‘அலுவா’ சாப்பிட்ட காதல் நினைவுகளை ராமாயி கிழவி ஒருதடவை நினைத்து நெஞ்சு இனிக்க எச்சிலை விழுங்கினாள். துயரங்களைத் தோளிலும், நெஞ்சிலும், மடியிலும் சுமந்த அவளுக்குள்ளே காதலும் சுவையூட்டிய காலங்கள் இருந்திருக்கின்றன 


அந்த மலையுச்சியில் தான் ராமாயி வசிக்கும் பிள்ளைமடுவம் இருக்கின்றது. 

தொழிலாளர் குடியிருக்கும் வீடுகளுக்கெல்லாம்….அப்பால் …….. தூரத்தில்…. அந்தப் பிள்ளை மடுவம் இருக்கிறது. ஒரு கூடாரத்தின் எஞ்சிய பகுதியாக அரைகுறை நிர்மாணத்தோடு… இரு பொந்துகளைக் கொண்டிருக்கிறது…. அந்தப் பிள்ளை மடுவம். 

உடைக்கப் பட்ட ஒரு பழைய லயத்தில் கழற்றிய ஓட்டைத் தகரக் கூரைகளால் மீண்டும் ஒரு கூடாரமாக அந்தப் பிள்ளை மடுவம் உருவாகியிருந்தது. எந்த நேரத்திலும் இது இடிந்து விழப்போகும் ‘சாய்ந்த கோபுரமாக’ காட்சி கொடுத்தது. கடலில் மூழ்காது கரை ஓங்கிக் கிடக்கும் கப்பலைப் போல! 

குட்டிச் சுவருக்குக் கூரை மாட்டியிருக்கும் அலங்காரச் சின்னமாக அந்தப் பிள்ளை மடுவத்திற்கு ராமாயி பாஷையில் ‘புள்ளக்காம்பரா’ (Creche) என்ற பெயரும் உண்டு. 

அந்தக் கூடாரத்தில் ஒரு நாள்… ராமாயி குடியேறினாள். 

சின்னஞ்சிறிய அறை. 

-சிலந்திகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த குகை. 

அவளது பஞ்சை பராரியான ‘தட்டுமுட்டு’ச் சாமான்களை அள்ளி வந்திருந்தாள். எல்லாமே மட்பாண்டங்கள்……. ஒரு சின்னத் தகட்டுப் பெட்டி………அதை ‘ரேங்குப் பொட்டி’ என்று செல்லமாகச் சொல்லுவாள். மற்றைவையெல்லாம் மண்சட்டிகள்….. நெளிந்த கிண்ணங்கள்……..ஒரு பழைய பாய்….. ஒரு போத்தல் லாம்பு……. ராமாயி தகரப் பெட்டியை அந்த மூலையில் வைத்தாள். மற்றச் ‘சொத்துக்களை’ எதிர்த்த மூலையில் அடுக்கினாள். ஜன்னல் பக்கத்தில் அடுப்பைப் போட்டாள். 

அவளது அந்திய காலத்தில்… அந்த முதுமை படர்ந்த முகத்தில் ஒரு மகிழ்ச்சியிலும் எதையோ சாதித்துக் கொண்ட பெருமிதமும், நிம்மதியும் தவழ்ந்தன. ஒரு காலத்தில் ‘தென்காஞ்சி நகைகளை’ச் சுமந்து ‘ஆட்டிய’ காதுகள், இன்று வெறும் தோலாகத் தொங்கினாலும் அவைகள் அழகாகத் தொங்கின! அவளது குழிவிழுந்த கண்கள் குப்பி விளக்கின் சுடரொளியாய்ப் பிரகாசித்தன. 

கூன் விழுந்து மேனி தளர்ந்து போனாலும், அந்த மூதாட்டி தனிக்காட்டு ராணியாகத் தனக்கென்று ஒரு தனிவீட்டில் சொந்தமாக வாழப் போகும் ஓர் உற்சாக உணர்வில் திளைத்துப் போயிருந்தாள். 

அன்றைய பொழுது மிகவேகமாகக் கழிந்தது. கொஞ்ச நேரத்திற்குள் சமையல் முடிந்தது. சோறும் கறியும் ஏழ்மையாகவிருந்தாலும் …….. சமையல் மணம் வீசியது. அடுப்பங் கரையில் குளிர் காய்ந்து கொண்டு அமைதியாகச் சாப்பிட்டாள். 

மழையிலும், குளிரிலுமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு கூடாரம் கிடைத்திருந்தாலும் ஆள் அரவம் இல்லாமல் …….. ஒரு குழந்தைச் சத்தமோ, குழந்தையை ஆறுதல் படுத்தும் ஒரு தாயின் குரலோ இல்லாமல்…. மனிதவாடையே அற்ற ஒரு ஏகாந்தச் சூழலில்….. அந்த இரவில் அவள் தன்னந்தனியாக இருந்தாள். 

இருள் கவ்வியதும் பிள்ளை மடுவம் சூனியமாகியது. இருட்டில் ஆவிகள் நடமாடுவது போன்ற பிரமை… கூரைக்குள் புகுந்த குளிர் காற்று உறுமல் சத்தமிட்டது. ராமாயிக் கிழவி கண்களை மூடிக் கொண்டு செத்துப் போன தன் கணவனை தாயை தகப்பனை – குலதெய்வத்தை வேண்டிக் கொண்டாள். 

தைரியம் வந்தது. அந்தக் கிழிந்த பாயில் சாய்ந்தாள். வாழையடி வாழையாகச் சொந்த பந்தங்களோடு இரத்த உறவுகளோடு பல பரம்பரைகளைக் கண்ட அவள் இன்று ஒண்டிக்கட்டையாக ஒதுக்கப் பட்டு விட்டாள். எந்த உறவுகளும் வயசான காலத்தில் நிராகரிக்கப் படுவது உண்மை. 

ராமாயி தன்னைச் சுதாகரித்துக் கொண்டு சுகமாகத் தூங்கினாள். 


வைகறை புலர்ந்தது. தேயிலைச் சிட்டுக்கள் பாடின.. ராமாயிக் கிழவி உச்சிமலை வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். கிழக்குச் சூரியனைக் கும்பிட்டாள். 

வேலைக்குப் புறப்படும் நேரம். 

பிள்ளைக் காரிகள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு மடுவத்திற்கு வந்தார்கள். ‘பட்டாபலியாக’ ‘துண்டைக் காணோம் துணியைக் காணோம்’ என்ற அவசரக் கோலத்தில் ராமாயியிடம் குழந்தைகளை ஒப்படைத்து விட்டு வேலைத் தலத்திற்கு ஒடினார்கள். 

பிள்ளை மடுவத்தில் பல வகையறாக்கள்……..! 

குப்புறப் படுப்பவை, தவழுகின்றவை,நிற்பவை, நடப்பவை! கிழவி ராமாயி நிற்பவைகளை நடப்பவைகளை நிலத்தில் விட்டு விட்டு, மற்றதுகளை தொட்டிலிலிட்டு ஆட்டினாள். 

குளிர் வாடை – ஊதல் காற்று. 

ராமாயி தகரக் கதவைச் சாத்தினாள். 

அவள் வயதுக்குப் பிள்ளை பராமரிக்கும் ஆயாவேலை மிகமிகக் கஷ்டமான வேலை. அழுகின்ற குழந்தைகளை ஒவ்வொரு தொட்டிலாக எவ்வளவு நேரம் நின்று கொண்டு ஆட்டுவாள்……? ராமாயிக்கு மூட்டுக்கள் வலியெடுத்தன. முழங்கால்களைப் பிடித்துக் கொண்டு நிலத்தில் உட்கார்ந்தவள், தொட்டில்களைக் கையால் தள்ளிக் கொண்டிருந்தாள். 

தொட்டில்கள் ஆடின. 

குழந்தைகள் தூங்குவதற்காக அவள் தாலாட்டுப் பாடினாள். அவள் தாலாட்டுப் பாடி எத்தனை காலங்கள்………! பழைய நினைவுகள்…….. உணர்வுகள் குமிழிட்டன. அவள் உணர்ச்சிவசப் பட்டாள். ஒரு வெளிக்கொணர முடியாத துயரம் ததும்பியது. அவளது இளமைக் காலங்களில் இல்லறச் சம்போகத்தில் எத்தனை கர்ப்பங்கள் எத்தனை சிசுக்கள் எத்தனை தடவை பால் சுரந்து உடைக்கும் மார்பகங்கள்….! அவள் அழுகை ஊமையாக நின்றது. அவள் தாலாட்டுப் பாடினாள். 

அந்தச் சோகத்தின் இனிமை கூடாரத்துக்குள் எதிரொலித்தது. அந்த வெறிச்சிட்டுக் கிடந்த கூடாரத்திற்கும், அந்த முதுமைத் தாயின் வெறுமை மனத்திற்கும் எத்துணை ஒற்றுமைகள்! 

தொட்டிலில் குழந்தைகள் தூங்கிவிட்டன. அவள் களைப்படைந்தாள். தரையில் விளையாடிய ‘பெருசுகள்’ ஆடின……. ஓடின……..ஒன்றையொன்று கட்டிப் பிடித்து….. விழுந்து….. எழும்பி ……. அழுது……. நீராடி…….. குளம்கட்டி…….. தரைமெழுகி… கூக்குரலிட்டன. அவைகளையும் சாந்தப் படுத்தினாள். ராமாயி. 

பகல் சாப்பாட்டு நேரம் தாய்மார்கள் பிள்ளைகளுக்குப் பால் கொடுக்க வந்தார்கள். ராமாயி அந்த இடை வெளி நேரத்திற்குள் ‘சட்டுப்புட்டுன்னு’தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டாள். ஒரு கோப்பை சாயத் தண்ணியையும் தயாரித்துக் கொண்டாள்! சாப்பாடு… ராமாயிக் கிழவிக்கு கருவாடு என்றால், ‘உசுரு!’ ‘அலுவா’ சாப்பிடக் கொள்ளை ஆசை! ஒரு கோப்பைச் சோற்றைக் குழம்புக் கூட்டு இல்லாமல் வெறுமனே சாப்பிட்டு விடுவாள். கீளான் கெளுத்தி பால்சுறா – மாசிக் கருவாடு….! 

இப்போதெல்லாம் அவைகளைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூட அவளுக்குத் தகுதி கிடையாது. அந்த மாதிரித் தீனியையெல்லாம் யாரிடமும் கேட்பதற்கு அவளுக்கு வெட்கமாகவிருந்தது. நாக்கு ‘செத்துப் போனாலும்’ அந்தக் காலத்தில் சாப்பிட்ட ருசி…. ‘வெறி’ இருந்தாலும் தனது தரித்திரமான நிலையில் இன்று இப்போது யாரிடமும் கேட்க முடியுமா? எவ்வளவு மரியாதைக் குறைவான விசயம்…….? ‘சாவப்போற வயசுக்கு ஆச என்னாத்துக்கு?’ 

தன்மானம் அந்தத் தள்ளாத வயதுக்குள்ளும் இருந்தது. 

தாய்மார்கள் வேலை முடிந்து குழந்தைகளை வீட்டுக்குத் தூக்கிச் செல்வதற்கு வந்தார்கள். 

ஆய்….ஊய் என்ற குதூகலத்தோடு ராமாயிப் பாட்டியிடம் சிரித்துக் கேலி பேசிவிட்டுப் பிள்ளைகளைத் தூக்கிச் சென்றார்கள். 

பிள்ளை மடுவம் மீண்டும் மயான அமதி கொண்டது. ராமாயிக்கு அந்த மரண அமைதியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இரவு சூழ்ந்தது. மனிதக் குரலைக் கேட்பதற்கு அவள் ஏங்கினாள். 

அபூர்வமாக….. என்றைக்காவது இரவு நேரங்களில் அவளது பேரன்மார்கள் பிள்ளை மடுவத்தைக் கடந்து போவதுண்டு. அப்போதெல்லாம் ‘பாட்டி…….? என்று ஒரு சத்தம் செய்துவிட்டுப் போவார்கள். 

அவள் ஏங்கினாள். 

தன் சொந்தப் பேரக்குழந்தைகள்….. பாசத்தோடு தன் வீட்டுக்குள் நுழைவார்கள்…… தன்னை விசாரிப்பார்கள்…… அடுப்படியில் உட்காருவார்கள்…. ‘என்னா பாட்டி சாப்பாடு? என்று சட்டியைத் திறந்து பார்ப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்தாள். 

அவை ஒன்றும் நடந்ததில்லை. அந்த நேரங்களிலெல்லாம் வேதனைச் சுமை நெஞ்சை அழுத்தும்…. இப்போது அவள் எவருக்குமே வேண்டப் படாதவள் …… 


ஒரு இரவு சுவற்றில் போத்தல் லாம்பு மினுக் மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. ஜன்னல் இன்னும் மூடவில்லை. ராமாயி இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு வெற்றிலை சுவைத்துக் கொண்டிருந்தாள். 

அது பௌர்ணமி இரவு ஜன்னல் வழியாகப் பூரண நிலவு அவள் முகத்தைப் பாசத்தோடு பார்த்தது. காற்று தென்றலாக மடுவத்தை மோதிச் சென்றது. நிலவைப் பார்த்தவள். பெருமூச்செறிந்து முணுமுணுத்தாள். 

‘ஆ….. அப்பனே!’ 

அவள் யாரை ‘அப்பனே’ என்றாள்? 

தன்னைப் பெற்ற தகப்பனையா………? மகனையா…..? படைத்த கடவுளையா…..? 

இவரைத் தான்… என்று எவரையுமே சொல்ல முடியாது! அவர்கள் எவருமே இப்போது அவளோடு இல்லை. எல்லோரும் எங்கோ வெகுதூரத்தில்…. கடவுள் கூட அப்படித்தான் அவளுக்கு! 

அவள் மனம் பின்னோக்கியது….. 

இளமைக் காலத்தில் அவள் எத்தனை முறை இப்படி நிலாவைப் பார்த்திருப்பாள்? ஐம்பது வருசங்களுக்கு முன்பு…..! காதல் அரும்பி மலர்ந்த காலத்தில் தனது கணவனுடன் அந்த முதல் வீட்டில் -அந்த முதல் நாளில் அந்த இஸ்தோப்புத் திண்ணையில் அவரின்மேல் சாய்ந்த படி…. புன்னகை செய்த புதுநிலவைப் பார்த்துச் சிரித்தகாலம்…! அந்த இன்ப நிலவோடு பழகிச் சிரித்த ஓர் ஆண்டுக்குப் பின்னர். ஒரு குழந்தையைப் பெற்றுக் கரங்களில் ஏந்திய அதே நிலவை மீண்டும் பார்த்து மகிழ்ந்த காலம்….. அந்தக் காலங்கள் முதிர்ந்து….. பேரக் குழந்தைகள் அதே பெரு நிலவைப் பார்த்து விளையாடுவதில் லயித்து மகிழ்ந்த காலம்…….! 

‘…….’

இன்று இங்கே……. அதே நிலவைப் பார்ப்பதில் அவள் மனம் வலியெடுத்தது. மூச்சு தொண்டையை அடைக்க அவள் திணறினாள். 

தன்னைத் தவிக்கவிட்டுச் சென்ற கணவனை நினைவிலிருந்து மறக்க முயன்றாள்…… தங்கள் திருமணங்களுக்குப் பிறகு தன்னை நிர்க்கதியாக விட்டுச் சென்ற பிள்ளைகளை மறக்க முயன்றாள்… எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது பேரப்பிள்ளைகளை தன் கழுத்தைச் சுற்றியிருந்த அவர்களது பிஞ்சுக் குளிர்ந்த கரங்களை மறக்க முயன்றாள். 

இந்த ஜன்னலில் தன்னை எட்டிப் பார்க்கும் நிலாவைத் தவிர, இந்த உலகத்தில் எல்லாரையும் எல்லாவற்றையும் மறக்கத் துடித்தாள்… 

கடைசியாக அவள் மெதுவாக எழும்பி ஜன்னலருகே சென்றாள். அவளது குமரிப் பருவத்துக் குறுஞ்சிரிப்போடு நிலவைப் பார்த்தாள். அங்கே தன் இன்பத்தையும், துயரத்தையும் இரண்டறக் கலந்து சுவைத்தாள். 

நிலவோடு ரகசியம் பேசுவது போல் தலையை ஆட்டினாள். நடுங்கும் தன்சூம்பிய கரங்களைக் கூப்பி… எல்லையற்ற அண்டவெளியில் மிதக்கும் அந்தத் தங்கத் தாம்பூலத்தைக் கும்பிட்டாள். 

உடல் தள்ளாடியது. மெல்ல ஜன்னலை இழுத்துச் சாத்தினாள். 

முகம் கண்ணீரில் நனைந்தது. 

சுவரில் தொங்கிய போத்தல் லாம்பு தூங்கி வழிந்து கெண்டிருந்தது. 

ராமாயி அந்த மூலையில் கிடந்த பாயில் போய் சுருண்டு கொண்டாள். 

ஊதல் காற்று வெளியே பெருமூச்சு விட்டது.

– ஆங்கில தொகுதி: Mother of the creche, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.

– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *