நிலமங்கை
கதையாசிரியர்: சாண்டில்யன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 168
(1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12
அத்தியாயம் 9 – பொறுத்தார்

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்துவிட்ட அந்த சம்பவம் அவன் கண்களையும் திறக்க விடவில்லை, கை கால்களையும் ஆடவிடவில்லை. நிலமங்கையைப் பலவந்தமாக இழுத்த கையில் ஏதோ சுருக்கென்று அவனுக்குத் தெரிந்தது. பிறகு நரம்புகளில் ஓடிய மின்சாரம் போன்ற சக்தி தெரிந்தது. அடுத்தபடி ஏதும் தெரியவில்லை. தெரிந்தபோது ஏதும் புரியவுமில்லை, அந்த இளங்காளைக்கு.
அவன் விழித்தபோது நிலமங்கை அவனுக்கு வெகு அருகில் உட்கார்ந்து கொண்டு அராபியர்கள் தோற்பையிலிருந்து நீரை எடுத்து அவன் கண்களையும் முகத்தையும் அலம்பிக் கொண்டிருந்தாள் அந்தச் சமயத்தில், அவன் எழுந்திருக்க முயன்றதும், ‘வேண்டாம்’ என்று சைகை செய்த அவள், அவன் கைகளையும் கால்களையும் தன் மலர்க்கைகளால் வருடினாள். அதனால் முழுச்சுரணை பெற்றாலும் எழுந்திராத வீரபாண்டியன் நிலமங்கையின் நிச்சலமான முகத்தை வியப்புடன் உற்று நோக்கினான்
“நிலமங்கை! எனக்கு என்ன ஏற்பட்டது? நான் ஏன் இப்படி விழுந்து கிடக்கிறேன்?” என்று வினவினான்.
“மயக்கம் ஏற்பட்டது. அதனால் விழுந்து விட்டீர்கள்.” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னாள் நிலமங்கை.
“மயக்கம் எதனால் ஏற்பட்டது?” என்று வினவினான் வீரபாண்டியன்.
“ஆசை மிகுதியால்!”
“ஆசை மிகுதியாலா?”
“ஆம். அத்துமீறி என் கையைப் பிடித்து உங்களை நோக்கி இழுத்தீர்கள்…” என்று வாசகத்தை முடிக்காமலே தனது சிசுருஷையைத் தொடர்ந்து, அவன் அங்கிக்குள்ளும் தனது கையை விட்டு மார்பையும் தடவினாள்.
“மனையாளைத் தொடுவது அத்து மீறியதாகுமா?” என்று சினத்துடன் கேட்டான் வீரபாண்டியன்.
“மனையாளாக நிச்சயிக்கப்பட்டிருக்கிறேன் இன்னும் மனையாளாகவில்லை – நாலுபேர் அறிய” என்றாள்
நிலமங்கை, எந்தவித சலனத்தையும் முகத்திலோ சொற்களிலோ காட்டாமலே.
“அதனால் தொடக்கூடாதாக்கும்?”
“கூடாது.”
“காயல் அரண்மனையில் என்னையும் தள்ளி என்மீது விழுந்தாயே?”
“அது ஆபத்துக்கான தர்மம். அதனால் பிழையில்லை.”
“நீதி சாஸ்திரம் படித்திருக்கிறாய் போலிருக்கிறது?” என்ற வீரபாண்டியன் கேள்வியில் ஏளனமிருந்தது.
“ஆம் படித்திருக்கிறேன்,” என்ற நிலமங்கை அவனை உற்று நோக்கி, “பாண்டிய நாட்டு ராணியாகப் போகிறவளுக்கு வேண்டியதையெல்லாம் சொல்லி வைத்திருக்கிறார்” என்று விளக்கினாள்.
இதைக் கேட்ட வீரபாண்டியன் உணர்ச்சிகள் சற்றுக் கொந்தளிக்கவே, “யார் அவர்?” என்று வினவினான்.
“அதுதான் பின்னால் தெரியும் என்று கூறியிருக்கிறேனே” என்ற நிலமங்கை சிகிச்சை முடிந்துவிட்டதால் எழுந்து நின்றாள்.
“இனி நீங்களும் எழுந்திருக்கலாம்” என்றாள்.
வீரபாண்டியன் ஒரு விநாடி கை கால்களை நீட்டி மடக்கிப் பார்த்து, அவை உபயோகத்துக்கு வந்துவிட்டதை உணர்ந்து, மெள்ள எழுந்து நின்றான். பிறகு அப்படியும் இப்படியும் சிறிது நடந்து பார்த்தான். கடைசியாக நின்று நிலமங்கையை உற்று நோக்கி, “நிலமங்கை! நீ என்னை என்ன செய்தாய்?” என்று வினவினான் பிரமிப்பும் கோபமும் நிறைந்த குரலில்.
“ஆண்களுக்குத்தான் பலம் அதிகம், பெண்களை எது வேண்டுமானாலும் செய்து விடலாமென்று நினைத்தீர்கள். என் கையைப் பிடித்து அந்த ஆணவத்தில் இழுத்தீர்கள்.”
“உம்! சொல் மேலே.”
“மலையாளத்தில் பழக்கமாயிருக்கும் நரம்படியை லேசாக அடித்தேன்.”
“நரம்படியா?”
“ஆம், நரம்புகளின் கேந்திர ஸ்தானங்கள் உடம்பின் பல இடங்களிலிருக்கின்றன. அவற்றில் ஏதாவதொன்றில் லேசாகத் தட்டினால் போதும், பிராணன் போய்விடும்.”
“அது உனக்குத் தெரியும்?”
“ஆம்.”
“அப்படியானால் என் பிராணன் ஏன் போகவில்லை?”
“எனக்குத் தேவையாயிருக்கிறபடியால்…” என்ற நிலமங்கை, “மிக மெதுவாகத்தான் தங்கள் கை நரம்பை நெருடினேன்.” என்று கூறினாள்.
“அதிலேயா நாலடி தள்ளி விழுந்தேன்!”
“ஆமாம்!”
இதைக் கேட்டதும் சற்று நிதானித்த வீரபாண்டியன், “நிலமங்கை ஒரு ராட்சஸி” என்று கூறினான் சினத்துடன்.
“என்னைப் பலவந்தம் செய்கிறவர்களுக்கு நான் ராட்சஸிதான்.” என்றாள் நிலமங்கை.
“மற்றவர்களுக்கு ரோஜாப்பூ போலிருக்கிறது?” என்று கேலியாகக் கேட்டான் வீரபாண்டியன்.
“பன்மை வேண்டாம்… ஒருவரைப் பற்றிச் சொன்னால் போதும்” என்றாள் நிலமங்கையும் புன்முறுவல் செய்து.
“அந்த ஒருவர் யாருமிருக்க முடியாது. தினம் உன்னிடம் நரம்படி யார் படுவான்?” என்று வினவினான் வீரபாண்டியன்.
“அடிபட வேண்டியதில்லை. உரிமையுள்ளவர்” என்ற அவள் அவனை நெருங்கி வந்து, அவன் தோளைப் பற்றி, அவன் கண்களுடன் தனது கண்களைக் கலந்தாள். வீரபாண்டியன் தோள்களைச் சிறிது அசக்கினான்.
“இங்கு நரம்பு ஸ்தானம் ஒன்றுமில்லையே” என்றும் வினவினான்.
“இல்லை, இருந்தாலும் நெருட மாட்டேன்!” என்ற நிலமங்கை அவன் மார்பு மீது சாய்ந்தாள்; அவன் கைகள் அவளைச் சுற்றி வளைத்தன. அவற்றில் வளைந்தாள் அவள். அத்துடன் சொன்னாள், “சற்றுப் பொறுங்கள். பொறுத்தார் பூமியாள்வார். இன்னும் ஒருநாள்…” என்று.
அந்தச் சமயத்தில் தான் அந்த எதிர்பாராத தலையீடு வந்தது. வந்த தலையீடு எதிர்பாராமலும் பயங்கரமாகவும் வந்தது.
அத்தியாயம் 10 – சுற்றி வந்த வேல்கள்
“ஒ ரு நாள் போதாது, பூமியும் ஆள முடியாது” என்ற சொற்கள் தோப்பின் ஒரு மூலையிலிருந்து எழுந்தன. அதனால் பிணைந்த இருவரும் பிரிந்து இரண்டடி எடுத்து வைத்துத் தங்கள் வாட்களை எடுக்க முயன்றார்கள்.
“பயனில்லை, உங்களை நோக்கி வேல்கள் குறி வைக்கப்பட்டிருக்கின்றன” என்ற குலபதியின் குரலைத் தொடர்ந்து, திடீரென தீபங்கள் தெரிந்தன அந்தத் தோப்பில். அந்த தீபங்கள் வீசிய வெளிச்சத்தில் குலபதி வெளியே வந்தான் நான்கு வீரர்களுடன், அந்த நால்வரும் முந்திய நாள் சண்டையில் பங்கு கொண்டவர்களல்லவென்பதையும், புது வீரர்களென்பதையும் புரிந்து கொண்டான் வீரபாண்டியன். குலபதியின் வாய் அதிகமாக வீங்கியிருப்பதையும் கண்டதால் அவனுக்கு யாராலோ பலமான அடி விழுந்திருக்க வேண்டுமென்றும் ஊகித்தான். இருப்பினும் ஆயுத
பாணிகளான நான்கு வீரர்களுக்கு முன்பு நிராயுதபாணிகளான தாங்கள் இருவரும் ஏதும் செய்யமுடியாதென்பதை உணர்ந்த வீரபாண்டியன், குலபதியின் கவனத்தை வேறு திசைக்கு
இழுக்க விரும்பி, “உன் உதட்டுக்கு என்ன ஏற்பட்டது குலபதி?” என்று விசாரித்தான்.
“அந்த அராபியன் குத்து விட்டான். ஆனால் மடையன்” என்றான் குலபதி உற்சாகத்துடன்.
“யார் ஜமாலுதீனா?”
“ஆம்.”
“அவன் எப்படி மடையன்?”
“எதிரியைத் தானாகவே விடுதலை செய்தவனை எப்படி அழைப்பது? நீங்கள் கொட்டடிலிருந்து பறந்ததும் அவனைப் பிடிக்க முயன்றேன். என்னைக் குத்தி வீழ்த்தினான். என் ஆட்களையும் பிடித்தான். ஆனால் எனக்கு சிகிச்சை செய்து விடுதலையும் செய்தான்…” என்ற குலபதி பெரிதாக நகைத்தான்.
வீரபாண்டியன் சிறிதே சிந்தனையில் இறங்கினான்.
“என்ன சிந்திக்கிறாய்? உதவ அராபியன் இல்லையே என்று நினைக்கிறாயா? அவன் வரமாட்டான். நீங்கள் தப்பி விட்டதாக மனப்பால் குடிக்கிறான்.” என்ற குலபதி மீண்டும் நகைத்தான் வீரபாண்டியனை நோக்கி.
“இப்பொழுது என்ன செய்ய உத்தேசம்?” என்று போலி பயத்துடன் வினவினான் வீரபாண்டியன்.
“உன்னையும் இந்தச் சிறுக்கியையும் மதுரைக்குக் கொண்டு போக உத்தேசம்” என்று பேசிக் கொண்டே போனவன், “அட! இவளெங்கே?” என்று நாற்புறமும் நோக்கினான்.
நிலமங்கையின் நகைப்பு அவன் பக்கத்திலிருந்து உதிர்ந்தது.
“ஓ! என் பக்கத்துக்கு வந்து விட்டாயா! பெண்ணே! நீ புத்திசாலி. இதற்குக் கண்டிப்பாய் பயனுண்டு” என்று கூறி அவள் மீது தனது கையை வைக்கப் போனான். அந்தச் சமயத்தில் வெற்றியுடன் வீரபாண்டியனையும் நோக்கினான்.
வீரபாண்டியன் முகத்தில் எள்ளுடன் கொள்ளும் வெடித்தன. “டேய் குலபதி! அவள் மீது கையை வைக்காதே” என்று சீறினான் பெரும் சினத்துடன்.
“வைத்தால் என்ன செய்வாய்?” என்று அவன் கேட்டதும் நிலமங்கை சொன்னாள், “குலபதி! அவர் கிடக்கட்டும். உன் கையை இப்படிக் கொடு. நானே பிடித்துக் கொள்கிறேன்,” என்று.
“பலே பலே!” என்று சிலாகித்த குலபதி கையை நீட்டினான். நிலமங்கையும் அவன் கணுக்கையைப் பற்றினாள்.
“அங்கா பிடிப்பது? என் உள்ளங்கையை பற்றவேண்டும்” என்று மேலும் ஏதோ பேச முயன்ற குலபதியின் புருவங்கள் இரு முறை துடித்தன.
“ஐயோ” என்று அலற முற்பட்டான் குலபதி. அதற்கும் இடங்கொடாத அவன் உதடுகள் கோணக் கோண இழுத்தன. திடீரென மண்ணில் சாய்ந்தான்,
தலைவன் திடீரெனச் சாய்ந்ததும் வீரபாண்டியனையும் நிலமங்கையையும் தீர்த்துவிட மற்ற நான்கு வீரரும் வேல்களைத் தூக்கி வீச முற்பட்டனர். ஆனால் வேல்கள் அவர்கள் கைகளைவிட்டு அகல மறுத்தன. நால்வர் மார்புகளிலும் நான்கு குறுவாள்கள் பாய, நால்வரும் மல்லாந்து வீழ்ந்தனர்.
அதே சமயத்தில் மரங்களின் மறைவிலிருந்து வெளி வந்த ஜமாலுதீன், “இளவரசே! அபாய காலத்தில் தாமதிப்பது நல்லதல்ல,” என்று எச்சரிக்கையும் செய்தான்.
வீரபாண்டியன் கண்களில் நன்றி ததும்பியது.
“நீ எங்கிருந்து முளைத்தாய் திடீரென்று?” என்று வினவினான் வீரபாண்டியன்.
“இவனை ஆரம்பம் முதல் நம்பவில்லை நான்,” என்று கீழே கிடந்த குலபதியைச் சுட்டிக் காட்டி விட்டு, “இவனுக்குச் சிகிச்சை செய்து மதுரைக்குச் செல்லும்படி கூறினேன். இருப்பினும் இவன் மீது ஒரு கண் வைத்திருந்தேன். இவன் காயலிலிருந்து கிளம்பிய போது நானும் கிளம்பினேன்.” என்று சுருக்கமாக விஷயத்தைக் கூறினான் ஜமாலுதீன்.
“இவன் உதட்டுக் காயம்?” என்று விளக்கம் கேட்டான் வீரபாண்டியன்.
“நான் அளித்த பிரசாதம்” என்ற ஜமாலுதீன், “ஆமாம். இவன் ஏன் இப்படிக் கோணக் கோண இழுத்துக் கொண்டு கிடக்கிறான்?” என்று வினவினான் வீரபாண்டியனை நோக்கி. “இவள் அளித்த பிரசாதம்” என்று நிலமங்கையைச் சுட்டிக் காட்டினான் வீரபாண்டியன்.
“நரம்பு அடி. இதைச் சீனத்தில் பார்த்திருக்கிறேன். இங்கும் வந்துவிட்டதா?” என்று முணு முணுத்த ஜமாலுதீன், லேசாக நகைத்தான். அத்துடன் நிலமங்கையை நோக்கி, “மகளே! வீரபாண்டியனுக்கு இந்தச் சிகிச்சை செய்து விடாதே,” என்றும் கூறினான் நகைப்பின் ஊடே.
“செய்தாகிவிட்டது.” என்ற வீரபாண்டியனும் அவனுடன் சேர்ந்து நகைத்தான்.
அராபியனான ஜமாலுதீன் உதடுகளில் நமட்டு விஷமம் தெரிந்தது.
“மகளே! கணவனை மிகவும் துன்புறுத்தாதே!” என்றும் கேட்டுக் கொண்டான் அராபியன்.
`கணவனா? அந்த ரகசியம் உனக்கும் தெரியுமா?” என்று வினவினான் அவன்.
“அது ரகசியமல்ல! நீங்கள் சென்ற மறு நாட்காலை காயலில் எல்லாரும் இதைப் பற்றித்தான் பேசினார்கள். மதுரைக்குத் தூதர்கள் பறந்துவிட்டார்கள். நீங்கள் செல்லுங்கள்.” என்றான். “நாளை நானும் பயணமாகிறேன் எங்கள் நாட்டிற்கு,” என்று அறிவித்தான்.
அவனைக் கட்டித் தழுவி மீண்ட வீரபாண்டியன்,
நிலமங்கையை நோக்கினான். அவள் புரவிகளை நோக்கிக் கைகாட்ட, இருவரும் அதில் ஆரோகணிக்கப் புரவிகள் நகர்ந்தன.
அவர்கள் போவதைப் புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டு நின்ற ஜமாலுதீனும் தோப்புக்குள் புகுந்து சென்று, தனது புரவியில் ஏறி காயல் மார்க்கத்தில் அதை நடத்தினான். அதற்கு நேர் எதிர்த் திக்கில் சென்று கொண்டிருந்த வீரபாண்டியனும் நிலமங்கையும் நீண்ட நேரம் மௌனமாகவே புரவிகளைப் பறக்க விட்டார்கள். சிறிது தூரம் சென்றதும், “இப்பொழுது எங்கு செல்கிறோம்?” என்று வினவினான் வீரபாண்டியன்.
“வீரதவளப்பட்டணத்திற்கு.” என்றாள் நிலமங்கை. “எதற்கு?” என்று வீரபாண்டியன் வினவினான்.
நிலமங்கை பதில் கூறவில்லை. வீரதவளப் பட்டணத்தை மறுநாள் மாலை அடைந்ததும் அங்குத் தங்களை எதிர் நோக்கியிருந்தவரைப் பார்த்துப் பெரும் பிரமிப்புக்கு உள்ளானான் வீரபாண்டியன். விளங்காத பல விஷயங்கள் அவனுக்கு விளங்கலாயின.
– தொடரும்…
– நிலமங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1977, வானதி பதிப்பகம், சென்னை.