நிலமங்கை
கதையாசிரியர்: சாண்டில்யன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 119
(1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8
அத்தியாயம் 5 – பறந்த பறவைகள்

வாழ்க்கையில் பல புரவிகளின் பாய்ச்சல்களை அனாயாசமாகத் தாங்கியிருந்த பாண்டிய இளவரசன் அந்தப் பாவையின் பாய்ச்சலைத் தாங்க இயலாதவனாகத் தரையில் புரண்டான். எதற்காக அந்தப் பெண் அப்படித் திடீரென்று, அத்தனை பலமாகவும் வேகமாகவும் தன்மீது பாய்ந்தாள் என்பதை நினைக்கவோ, தான் உருளும் படியான அத்தனை பலம் அந்த ஏந்திழைக்கு எங்கிருந்து வந்தது என்பதை ஊகிக்கவோ, அவசியமில்லாத நிலையில், திடீரென மின்னல் வேகத்தில் வெளியே கேட்ட மரணக் கூச்சலால் பாண்டிய இளவரசன் பெரு வியப்பெய்தினானாகையால், உருண்ட நிலையிலிருந்து விநாடிக்குள் எழுந்திருந்து வெளித் தாழ்வாரத்தை நோக்கி ஓடி, இரண்டு கோடிகளிலும் கண்களைச் செலுத்தினான். எதிரே கீழே மார்பில் குறுவாளுடன் உயிரை மெள்ள மெள்ளக் கக்கிக் கொண்டிருந்த ஒரு வீரனைத் தவிர வேறு எந்தக் காவலரும் அந்தத் தாழ்வரையில் அவன் கண்ணுக்குப் புலப்படவில்லையாதலால், அவன் விடுவிடுவென்று நடந்து மாண்டு கொண்டிருந்தவன் அருகே சென்று உட்கார்ந்து அவனைக் கூர்ந்து கவனித்தான். அவனும் அரண்மனைக் காவலாளிகளில் ஒருவன்தான் என்பதைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொண்ட இளவரசன் “டேய்! யார் நீ?” என்று வினவினான். அத்துடன் அவன் மார்பில் குறுவாள் பாய்ந்த இடத்தில் வந்து கொண்டிருந்த ரத்தத்தை நிறுத்த அவனது ஆடையின் ஒரு பகுதியைக் கிழித்து அதில் திணிக்கவும் செய்தான். ஆனால் குருதி குறையவோ நிற்கவோ இல்லையாதலால் அந்த வீரன் இறப்பது திண்ணம் என்ற தீர்மானத்துக்கு வந்த இளைய பாண்டியன், “டேய்! உன் பெயரென்ன? இந்த வேலைக்கு உன்னை யார் ஏவியது?” என்று வினவினான்.
வீரனின் மரண மூச்சு பலமாக வந்து கொண்டிருந்ததால், மார்பு கத்தியுடன் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. இருமுறை ஏதோ சொல்ல வாயெடுத்தான் வீரன். முடியாததால் மடியைக் காட்டிவிட்டு பட்டென்று கண்ணை மூடி விட்டான். அவனுக்கு இந்த உலக பந்தம் நீங்கி விட்டதை உணர்ந்த வீரபாண்டியன், அவன் மடியைத் தடவி அதிலிருந்த ஓர் ஓலையை எடுத்துக் கொண்டான். அதே சமயத்தில் அவ்விடம் வந்த அழகியும் மாண்டவன் மார்பிலிருந்த தனது குறுவாளை இழுத்து எடுத்து ரத்தத்தை அவன் ஆடையிலேயே நன்றாகத் துடைத்த பிறகு, தனது இடையிலிருந்த அதன் உறையில் செருகிக் கொண்டாள்.
வீரபாண்டியன் ஒரு விநாடி தாழ்வரையின் வெளிச்சத்தில் அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். சிறிதும் உணர்ச்சியற்ற அவள் முகத்தில், தான் ஒருவனைக் கொன்றுவிட்டோம் என்ற அனுதாபமோ, வெறுப்போ ஏதுமில்லாமல், முகம் சர்வ சாதாரணமாகக் காணப்பட்டதையும் அவள் சற்றும் சலிக்காமல் குறுவாளைப் பிடுங்கி மாண்டவன் உடையில் – ஏதோ சகஜமான அலுவலைப் புரிவது போல் துடைத்து விட்டுத் தனது இடையில் செருகிக் கொண்டதையும் கண்ட வீரபாண்டியன், ‘இவள் ஒருவேளை குணத்தில் ராட்சசியாயிருப்பாளோ?’ என்று, நினைத்தான், அவளைப் பற்றிய நினைப்பில் கையிலிருந்த ஓலையைக் கூடப் படிக்கவில்லை அவன். அவள், தன்னைத் தொடரும்படி அவனுக்குச் சைகை செய்து மீண்டும் அறைக்குள் செல்லவே, இளைய பாண்டியனும் வேறு வழியின்றி அவளைத் தொடர்ந்தான்.
உள்ளே இளவரசன் வந்ததும் அறைக் கதவையும் தாழ்வரைச் சாளரத்தையும் தாழிட்டாள் அவள். பிறகு இளவரசனை நோக்கி, “இனி படியுங்கள் ஓலையை,” என்று உத்தரவும் இட்டாள். அவள் உத்தரவிட்ட தோரணையைக் கண்ட பாண்டிய இளவரசன், ஒருமுறை அந்தப் பெண்ணையும் நோக்கிவிட்டு ஜமாலுதீனையும் நோக்கினான். ஜமாலுதீன் கூறினான், “எசமான்! அவள் சொல்லுகிறபடி செய்யுங்கள்,” என்று. இளவரசன் ஓலையைப் பிரித்துப் படித்தான் அறை வெளிச்சத்தில். அதில் கண்ட விஷயம் அவனுக்குப் பிரமிப்பை அளிக்காவிட்டாலும் கையெழுத்து பிரமிப்பை அளிக்கவே செய்தது.
“வீரபாண்டியனை எப்படியும் ஒழித்துவிடு!” என்ற சொற்கள் தான் ஓலையில் கண்டிருந்தன. விஷயம் அப்படித்தானிருக்கு மென்பதை ஏற்கெனவே ஊகித்துவிட்ட இளவரசன், அந்தக் கையெழுத்தைக் கண்டு பெருவியப்புக் கொண்டான்.
“இந்தக் கையெழுத்து…” என்று அவன் துவங்கி வாசகத்தை முடிக்கு முன்பாக, “உங்கள் தமையனாருடையது” என்று கூறினாள் அந்தப் பெண்.
ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த வீரபாண்டியன், “ஆம், அது உனக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினான் அந்த அழகியை நோக்கி.
“குலபதியும் அவன் ஆட்களும் உங்களைக் கொல்ல வருவது எனக்கு எப்படித் தெரிந்ததோ அப்படித்தான்.” என்றாள் அவள். அதுவரை ஏதும் பேசாமல் நின்றிருந்த ஜமாலுதீன் மெள்ள வாயைத் திறந்து, “எசமான்! நான் சொன்னது சரியாகப் போய்விட்டதல்லவா?” என்று வினவினான்.
“என்ன கூறினாய்? எது சரியாகப் போய் விட்டது?” என்று எதிர்க் கேள்வி போட்டான் வீரபாண்டியன்.
“இவள் குறுவாளெறிவதில் வல்லவளென்று சொல்லவில்லையா நான்?”
“சொன்னாய்.”
“உங்களுக்கு இவள் துணை தேவை என்று சொல்லவில்லையா?”
“ஆம், கூறினாய்.”
“இரண்டும் சரியாகப் போய்விட்டதல்லவா?”
“சரியாகத்தான் போய்விட்டது.”
“இனி இவள் சொற்படி நடப்பதில் தவறென்ன? தவிர என் பரிசு எப்படி?” என்று கேட்டு அந்தக் கோர நிலையிலும் சிரித்தான் அரபு நாட்டவனான ஜமாலுதீன்.
அவன் சிரிப்பை ரசிக்காத இளவரசன் கண்களில் மெள்ளச் சினம் துளிர்த்தது.
“சிரிப்பதற்கு இது சமயம் அல்ல!” என்று கண்டிப்பாக அறிவித்தான்.
“சமயத்திற்கு என்ன?” என்று கேட்டான் ஜமாலுதீன்.
“தாழ்வரையில் ஒருவன் மாண்டு கிடக்கிறான்,” என்பதைச் சுட்டிக் காட்டினான் இளவரசன்.
“அவன் அங்கு மாண்டு கிடக்காவிட்டால் அந்த நிலையில் உங்களை இந்த அறையில் காணும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கும்” என்று கூறிய ஜமாலுதீன், “எசமான்! இந்த நாட்டிலிருக்கும் தங்களுக்கு, இத்தகைய சதிகளும் கொலைகளும் புதிதாக இருக்கலாம். எங்கள் நாட்டில் இது பரம சகஜம். உங்கள் நாட்டைப் போல் வணிகமும் சீரும் சிறப்பும் நிறைந்து எங்கள் நாடு இருக்குமானால் தினம் ஒரு மன்னர் இறப்பார். தினம் புதுமன்னர் ஏற்படுவார்,” என்றும் விளக்கினான். இளவரசன் சிறிது நேரம் சிந்தனையில் இறங்கினான்.
“எனது அண்ணன் கேவலம் இந்த மண்ணுக்காகவும் மணிமகுடத்திற்காகவும் தந்தையையே கொலை செய்கிறான்; தம்பியைக் கொலை செய்ய முயலுகிறான்; பாண்டிய நாட்டில் இதுவரை நடக்காத விந்தை, விபரீதம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அத்துடன், `இந்தப் பெண் யார்? எங்கிருந்து வந்தாள்? எனக்கும் தெரியாத மர்மங்கள் இவளுக்கு எப்படித் தெரிந்திருக்கின்றன?’ என்றும் கேட்டுக் கொண்டான்.
அவன் மனத்திலோடிய எண்ணங்களை அந்த மங்கைத் தெரிந்து கொண்டிருக்கவேண்டும். ஆகவே அவள் சொன்னாள், “இளவரசே! நான் யார் என்பதைப் பற்றியோ, எப்படி இந்த விஷயங்களை அறிந்தேனென்பது பற்றியோ கேள்வியில்லை. இவற்றையெல்லாம் முன் கூட்டி எதிர்பார்த்த ஒருவர் என்னை அனுப்பியிருக்கிறார். உங்களைக் காக்க அவர் இட்ட கட்டளையை நிறைவேற்றுகிறேன். இந்த அரண்மனையில் நீங்களிருக்கும் ஒவ்வொரு கணமும் உங்கள் உயிர் ஆபத்திலிருக்கிறது. அதோ அந்தத் தாழ்வரையில் கிடப்பவனை ஒரு விநாடி நான் பார்த்திராவிட்டால், எவனாவது உங்களைத் தீர்த்துக்கட்ட வருவான் என்று எச்சரிக்கையடன் நான் இருந்திராவிட்டால், என்ன நடந்திருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. நல்ல வேளை தாழ்வரையில் ஒரு விளக்கு இருந்தது. வந்தவன் நிழலும் முன்னதாக சாளரத்தில் விழுந்தது. இல்லையேல் விபரீதம் விளைந்திருக்கும். அவன்மீது குறுவாளெறிந்து உங்களையும் கீழே தள்ளினேன்.”
இந்த விளக்கத்துடன் பேச்சை நிறுத்தினாள் அந்தப் பேரழகி. அவளது துரிதமான செய்கையை நினைத்து வியந்த இளவரசன், “அவன் மீது குறுவாளெறிந்தாய் சரி. என்னை எதற்காகக் கீழே தள்ளினாய்?” என்று கேட்டான் இளவரசன். “அவன் நிழலில் முன்னதாகத் தெரிந்தது அவன் குறுவாள்தான். ஒருவேளை நான் குறி தவறியிருந்தாலும் அவன் குறுவாள் உங்கள் மீது பாயக்கூடாதல்லவா?” என்று சமாதானம் சொன்ன அவள், அப்பொழுதுதான் தான் செய்த காரியத்தை உணர்ந்தாள். அதனால் அவள் முகம் வெட்கத்தால் பெரிதும் சிவந்தது அதைக் காணவே செய்தான் வீரபாண்டியன். அத்தனை ஆபத்திலும் அவள் அழகு எத்தன்மையது என்ற நினைப்பே அவன் உள்ளத்தில் எழுந்தது. இருந்தாலும் அதனாலேற்பட்ட வேகத்தை அடக்கிக் கொண்டு, “உன் பெயரைச் சொல்ல முடியுமா?” என்று பணிவுடன் கேட்டான்.
அவள் சிறிது சிந்தித்துவிட்டுத் தலையை அசைத்துக் கொண்டாள். “இப்பொழுது வேண்டாம். போகும் போது சொல்கிறேன்,” என்று கூறவும் செய்தாள்.
“எங்குப் போகும்போது?” என்று வினவினான் இளவரசன். “அதையும் பிறகு சொல்கிறேன்.”
“ஏன்?”
“இந்த அரண்மனையில் நாம் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் மரணம் நம்மை அணுகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் காயல்பட்டணமே உங்களுக்குத் தற்சமயம் பந்தோபஸ்தான இடமல்ல.”
“சரி! உன்னை அனுப்பியவர் யார்? அதையாவது சொல்வாயா?” “அதை மட்டும் இரண்டு நாட்களுக்குச் சொல்வதற்கில்லை.”
“அதற்குப் பிறகு…?”
“சொல்ல அவசியமில்லை.”
“ஏன்?”
“அவரை நீங்களே சந்திப்பீர்கள்.”
இன்னும் மேலே ஏதோ கேள்விகளைக் கேட்கப் போன இளவரசனைத் தனது கைகளில் ஒன்றைத் தூக்கித் தடுத்த அந்தப் பெண், “ஜமாலுதீன்! புரவிகள் தயாராயிருக்கின்றனவா?” என்று வினவினாள்.
“இரண்டு புரவிகளை நான் வழக்கமாகத் தங்கும் மாளிகைக் கொட்டடியில் கட்டி வைத்திருக்கிறேன்,” என்றான் ஜமாலுதீன். “சரி வாருங்கள்” என்று கூறிய அந்த அழகி, வாயிற்கதவை மெல்லத் திறந்து வெளியே பார்த்தாள். பிறகு ஜமாலுதீனையும் இளவரசனையும் நோக்கி, “வாட்களை உருவிப் பிடித்துக் கொள்ளுங்கள்,” என்று உத்தரவிட்டு முன்னே நடந்தாள்.
அவள் நடையில் பெரும் கம்பீரமிருந்ததை அவளுக்குப் பின்னால் சென்ற இளவரசன் கவனித்தான். அவள் தனது குறுவாளின் மேல் கையை வைத்திருந்தாளே தவிர, அதை உருவிப் பிடித்துக் கொள்ளவில்லையென்பதை அவள் வலது கை மடிந்து முன்னால் சென்றிருந்ததிலிருந்து ஊ ாகித்துக் கொண்ட இளவரசன், குறுவாளெறிவதில் அவளுக்கிருந்த பூரண நம்பிக்கையை உணர்ந்ததாலும் வியப்பெய்தவில்லை. அந்த வேகத்தைத்தான் அவன் சற்று முன்பே அறிந்திருந்தானே. ஆனால் ஒரு விஷயம் அவனுக்கு வியப்பாயிருந்தது. அவள் சென்ற வழிகளைக் கண்ட இளவரசன் அரண்மனையை அவள் அக்கக்காக அறிந்திருக்கிறாளென்பதை உணர்ந்தான். தாழ்வரையின் கோடியிலிருந்த ஒரு ரகசியக் கதவை அவள் திறந்து, படிகளில் இறங்கிய போதும், பிறகு நந்தவனத்தின் வெளியே வந்து வெளிக்கதவை மூடியபோதும் அவன் வியப்புடனே நடந்து சென்றான். பிறகு இரண்டு சந்துகள் வழியாக அவள் ஜமாலுதீன் மாளிகையின் கொட்டடிக்கு வந்ததைக் கவனித்ததும் அவள் ஒரு பெரும் வேவுகாரியாயிருக்க வேண்டும், அல்லது அரச குடும்பத்தைச் சேர்ந்தவளாயிருக்க வேண்டும் என்று தீர்மானித்தான், கொட்டடியில் இரு புரவிகளை ஜமாலுதீன் சேணம் போட்டுப் பயணத்துக்குத் தயாராக வைத்திருந்தான். அவற்றில் வெள்ளையாயிருந்த புரவியைச் சுட்டிக்காட்டி, “எசமான் உண்மையில் இதுதான் தங்களுக்கு நான் கொணர்ந்த பரிசு. பிறகுதான் பரிசு மாறிவிட்டது.” என்று கூறினான் புன்முறுவலுடன்.
புரவிப் பிரியனும், அசுவ லட்சணங்களை நன்றாக அறிந்தவனுமான வீரபாண்டியன், அந்தப் புரவியின் கழுத்தைத் தடவிக் கொடுத்தான். பிறகு கன்னத்தை முத்தமிட்டான். அடுத்தபடி ஜமாலுதீனை நன்றி ததும்பும் கண்களுடன் நோக்கி, “ஜமாலுதீன்! இந்தப் பரிசை நான் என்றும் மறக்கமாட்டேன்” என்று கூறிவிட்டுப் புரவியைக் கொட்டடியிலிருந்து வெளியே இழுத்து வந்து ஆரோகணித்தான். இன்னொரு பழுப்பு நிறப் புரவிமீது அந்தப் பெண் அனாயாசமாகத் தான் ஏறி, ஜமாலுதீனிடம் விடை பெற்று, “ஜமாலுதீன்! நாம் மீண்டும் சந்திக்கும்போது என் கதையை உனக்குச் சொல்லுகிறேன், அதுவரை இந்தப் பரிசை வைத்துக்கொள்,” என்று ஒரு முத்துமாலையைக் கச்சையிலிருந்து எடுத்து அவனை நோக்கி விட்டெறிந்தாள். அதை அவன் கையில் பிடிப்பதற்கும் பழுப்பு நிறப் புரவி பறப்பதற்கும் நேரம் கனக்கச்சிதமாக அமைந்திருந்தது. வீரபாண்டியனின் வெள்ளைப் புரவியும் அம்புபோல் பாய்ந்து சென்றது கொட்டடியை விட்டு. ஜமாலுதீன் தனது கையில் அந்த முத்து மாலையைப் பிடித்த வண்ணம் நீண்ட நேரம் நின்றிருந்தான். அவன் உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருந்தன. அந்த அலைகளைக் கலைக்க ஒரு கை அவன் தோள் மீது பதிந்தது. “இனி நீ என்னுடன் வரலாம்” என்ற சொற்கள் அவன் காதில் ரகசியமாக ஓதப்பட்டன. ஜமாலுதீன் அசையவில்லை.
“பறவைகள் பறந்து விட்டன” என்று அலட்சியமாகச் சொன்னான் திரும்பாமலே.
“ஒன்று பறக்கவில்லை.”
“அது நான்?”
“ஆம்”
ஜமாலுதீன் பெரிதாக நகைத்தான்.
“ஏன் நகைக்கிறாய்?” என்று மீண்டும் கேட்டது காதுக்கருகில் அதே குரல். ஆனால் அடுத்த கேள்வியைக் கேட்கும் நிலையில் அது இல்லை.
அத்தியாயம் 6 – இருண்ட தோப்பு! கனவுச் சொற்கள்!
ஜமாலுதீனை மட்டும் அவன் தோள் மீது கையை வைத்தவன் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால், அந்த எதிர்பாராத நிகழ்ச்சி ஏற்பட்டிருக்காது. அரபு நாட்டிலிருந்து ஆண்டு தோறும் புரவிகளைப் பாண்டிய நாட்டு மன்னனுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தைப் பெற்றிருந்த ஜமாலுதீன் வாழ்க்கையில் பலதரப்பட்ட சதிகாரர்களையும் பலதரப்பட்ட அபாயங்களையும் பார்த்திருந்தவனென்பதைப் பின்னாலிருந்தவன் உணர்ந்திருந்தால், மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருப்பான். தவிர தன்னந்தனியாக அந்த அரபு நாட்டுப் புரவி வணிகன், ஐந்தாறு பேர்களைச் சமாளிக்க வல்லவன் என்பதை மற்றவன் அறிந்திருந்தால்கூட அந்தத் திடீர் நிகழ்ச்சி விளைந்திருக்காது. தன்னந்தனியாக ஜமாலுதீன் அகப்பட்டுக் கொண்டானென்ற துணிவினாலும் இன்னும் இருவருடன் வந்திருந்த தைரியத்தாலும் அந்த மனிதன் எச்சரிக்கைச் சொற்களை ஜமாலுதீன் காதில் ரகசியமாக ஓதினான். ஆனால் தன்மீது கையொன்று பதிந்த உடனேயே எச்சரிக்கை யடைந்துவிட்ட ஜமாலுதீன், அவனுடன் வேண்டுமென்றே இரண்டு மூன்று வார்த்தைகளைப் பேச்சுக் கொடுத்தான்; அப்படிப் பேச்சுக் கொடுத்த வண்ணம் சரேலென்று அசுர வேகத்தில் திரும்பிய அவன் உடலும், அதற்கு முன்பாகவே தோளில் பதிந்து விட்ட கையை இரும்புப் பிடியாகப் பிடித்துவிட்ட அவன் இடது கையும் பின்னாலிருந்தவனைச் சுற்றி இழுத்து விட்டதாலும், இன்னொரு கை பலமாக முஷ்டியாகக் குறுகி இரும்புத் துண்டு தாக்குவது போல பின்னால் வந்தவன் உதடுகளில் பதிந்து விட்டதாலும், தாக்கப்பட்டவன் பெரிதாக அலறிச் சரேலென்று தரை தனக்குத்தான் சொந்தமென்று கீழே விழுந்து புரளலானான். அந்தச் செய்கையால் மிரண்ட இரண்டொரு புரவிகள் கொட்டடித் தளைகளிலிருந்து அசைந்து குளம்புகளைத் தூக்கிக் கால்களைத் தரையில் உருண்டவன் முகத்தில் வைத்துவிடவே, அவன் அலறல் ஊரைப் பிளந்து விடும் போலிருந்தது. அடுத்த விநாடி ஜமாலுதீன் மீது இருவர் பாய முயன்றாலும், அதையும் முடியாமல் அடிக்க மாளிகைக்குள்ளிருந்து இரு அராபியர்கள் ஓடி வரவே, கொட்டடியிலிருந்து பாய முயன்றவர்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்து, வேகத்தில் தங்களுக்குப் புரவிகளும் ஈடாக முடியாதென்பதைக் காட்டவே, கொட்டடியில் நிசப்தம் குடி கொண்டது. தனக்கு உதவி செய்ய வந்த இரு அராபியரையும் விளித்த ஜமாலுதீன் தரையில் கிடந்தவனை மாளிகைக்குள் கொண்டுவருமாறு கட்டளை இட்டான்.
மாளிகை விளக்கில் அவனைப் பார்த்ததும் இகழ்ச்சி நகை கொண்டான் ஜமாலுதீன்.
“குலபதியாரா?” என்று போலி மரியாதையுடன் விசாரிக்கவும் செய்தான்.
குலபதியின் உதடுகளில் ஜமாலுதீனின் குத்தினால் உதிரம் கொட்டிக் கொண்டிருந்தது. முகத்தில் புரவியின் குளம்படிகள் மிதித்ததால், சதைப் பிய்ந்து மிகக் கோரமாகக் காட்சியளித்தான் குலபதி. இத்தனையிலும் வீராப்பை மட்டும் விடாமல், “இதற்கு மன்னவருக்கு நீ பதில் சொல்ல வேண்டியிருக்கும்,” என்றான்.
“எதற்கு?” ஜமாலுதீன் சர்வசாதாரணமாகக் கேட்டான்.
“உதடுகளைக் காயப்படுத்தியதற்கு.” என்றான் குலபதி.
“என்ன பிரமாத காயம்!” என்று அலுத்துக் கொண்ட ஜமாலுதீனின் மீசை இளக்காரமாக அசைந்தது.
“என்ன பிரமாத காயமா! உதடுகள் பிய்ந்திருக்கின்றன.”
“என் குத்தில் சாதாரணமாக இரண்டு பற்களாவது உதிருவது வழக்கம்”.
“இதில் வழக்கம் வேறா?”
“ஆம், எதிலும் வழக்கமென்பது ஒன்று உண்டு.”
“என்ன சொல்கிறாய் நீ?”
“உன்னைப் போல் திருட்டுத்தனமாகப் பதுங்கி இளவரசரைக் கைது செய்வது சிலர் பழக்கம். அவர்கள் இருட்டில், தக்க பக்கபலத்துடன் போராடுவார்கள். நமது வழக்கம் வேறு. பகலிலேயே போராட முடியும்.”
இதைக் கேட்ட குலபதியின் முகம், காயம் அளித்த கோரத்தைவிட இன்னும் அதிகக் கோரமாக மாறியது.
கோபத்தின் காரணமாக, “என்னாலும் பகலில் போராட முடியும்” என்று சீறினான் அவன்.
“அப்படியா!” என்றான் ஜமாலுதீன்.
“ஏன் அதில் சந்தேகமா?” என்று வினவினான் குலபதி கம்பீரத்துடன்.
“சந்தேகமில்லை.”
“நிச்சயம் போலிருக்கிறது.”
“ஆமாம். இந்த இரவின் நிகழ்ச்சிகள் சந்தேகமின்றி உன் வீரத்தை நிரூபிக்கின்றன” என்ற ஜமாலுதீன் இடிபோல் நகைத்தான்.
அதனால் சற்று அவமானமே அடைந்த குலபதி, “இது என் யோசனையல்ல. அரசர் யோசனை. யாருமறியாமல் இளவரசரைப் பிடித்து வரச் சொன்னார்” என்று கூறினான். அவன் குரலில் சலிப்பு மிக அதிகமாகத் தெரிந்தது.
“அதிலும் சந்தேகமில்லை எனக்கு” என்ற ஜமாலுதீன், “குலபதி, உங்கள் நாட்டு மன்னர்களை மூன்றாமவன் கெடுக்க வேண்டியதில்லை. அவர்களே பரஸ்பரம் கொலை செய்து கொள்வார்கள், முத்துக் கொழிக்கும் பாண்டிய நாட்டின் வீழ்ச்சி இன்றிரவு ஆரம்பித்திருக்கிறது, வெகு சீக்கிரம் பயங்கர விளைவுகள் ஏற்படும்” என்று தீர்க்கதரிசி போல் பேசிய ஜமாலுதீன் தனது வீரர்களை நோக்கி.
“இவன் காயங்களைக் கழுவி மருந்து போட்டு, நமது மதுவில் சிறிது கொடுத்து அனுப்பிவிடுங்கள்” என்று உத்தர விட்டான்.
“என்னை விடுதலை செய்யப் போகிறாயா?” என்று வியப்புடன் வினவினான் குலபதி.
“ஆம்!” ஜமாலுதீன் பதிலில் எந்தவிதமான உணர்ச்சியுமில்லை.
“விடுதலையான பின்பு நான் வீரர்களுடன் வந்தால்?”
“அரசர் உன்னை வெட்டுப் பாறைக்கு அனுப்புவார்.”
“ஏன்?”
“போர்ப் புரவிகளுக்குப் பாண்டிய நாடு என்னை எதிர்பார்க்கிறது. தவிர இங்கு நீ என்னை ஏதாவது செய்வது அறிந்தால் காயல் மக்கள் உன்னைப் பிய்த்தெறிந்து விடுவார்கள். சரி, சரி போ” என்று கூறிய ஜமாலுதீன் அவனைத் திரும்பிப் பாராமல் உள்ளே சென்றுவிட்டான். ஜமாலுதீன் வீரர்கள் மட்டும், “பிரபு! வருகிறீர்களா? முகத்துக்கு வைத்தியம் செய்கிறோம்” என்று அவனை ஏளனத்துடன் அந்த மாளிகையின் மற்றொரு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அதே சமயத்தில் காயல்பட்டணத்தை விட்டுக் காற்றெனப் புரவிகளில் அந்த வீரமங்கையும் வீரபாண்டியனும் பறந்து கொண்டிருந்தார்கள். பக்கத்தில் பழுப்பு நிறப் புரவியில் வந்த அழகியின் ஒவ்வோர் அசைவையும் பக்கவாட்டில் பார்த்துக் கொண்டே சென்றான் வீரபாண்டியன். அவள் திடமாகப் புரவியில் அமர்ந்திருந்ததால் அவள் யௌவன பீடங்களின் தன்மை சற்று அளவுக்கு அதிகமாகவே அவன் கண்களுக்குத் தெரிந்தது. அவள் இடை அத்தனை வேகத்திலும் சிறிதே அசைந்ததையும், அவள் புரவிமீது பாதி குனிந்த வண்ணம் மிக லாவகமாகப் புரவியைச் செலுத்தியதையும், நிலவு பளிச்சிட்ட அந்த நேரத்தில் அவள் ஏதோ தேவதைபோல் விளங்கியதையும் கண்ட வீரபாண்டியன், “உண்மையில் இவள் என்னைக் காக்க வந்த தேவதைதான், மானிடப் பெண்ணல்ல” என்று தனக்குள் சிலாகித்துக் கொண்டான். இத்தனைக்கும் அவளைப்பற்றி எதுவும் தெரியாதென்பதை நினைக்க, அவன் மனதில் சொல்லவொண்ணா வியப்பு நிரம்பிக் கிடந்தது.
“யாரோ இவளை அனுப்பியதாகச் சொன்னாளே, அவர் யாராயிருக்கும்?” என்றும் தனக்குள் கேட்டுக் கொண்டான். அவளை ஏதாவது கேட்கலாமென்றாலோ அவள் புரவி போகிற வேகத்தில் எதையும் பேசுவதும் சாத்தியமல்லவென்று தோன்றியது அவனுக்கு. ஆகவே ஏதேதோ எண்ணங்கள் ஊசலாட அவன் புரவியைப் பேசாமலேயே செலுத்தினான். கிட்டத்தட்ட ஐந்து நாழிகைப் பயணத்துக்குப் பின்பு, அவள் மெள்ளத் தனது புரவியின் வேகத்தைத் தளர்த்தி, அவனையும் தளர்த்த சமிக்ஞை செய்தாள். பிறகு சற்று எட்ட இருந்த தோப்பைக் கவனித்ததும், “அதோ, அங்கு செல்வோம்,” என்று சாட்டையால் சுட்டிக் காட்டினாள்.
“எதற்கு?” என வினவினான் வீரபாண்டியன்.
“மறைவி மாயிருக்கிறது.” என்றாள் அவள்.
“எதற்கு மறைவிடம் நமக்கு இப்பொழுது?” என்று கேட்டான் வீரபாண்டியன் ஏதும் புரியாமல்.
“காதலுக்கல்ல.” என்று கூறி, அவள் கலகலவென நகைத்தாள் அவனை நோக்கி.
“அது எனக்குத் தெரியும்,” என்றான் இளையபாண்டியன் கோபத்துடன்.
“எப்படித் தெரியுமோ?” அந்தப் பெண்ணின் கேள்வியில் கேலி ஒலித்தது.
“காதலுக்கு ஆண்கள்தான் பெண்களை அழைப்பார்கள்…”
“அதில் இளவரசருக்கு நிரம்ப அனுபவம் போலிருக்கிறது,” என்ற அவள் மீண்டும் நகைத்துவிட்டு, “சொல்கிறபடி கேளுங்கள். இன்னும் அபாயம் நம்மைவிட்டு விலகவில்லை,” என்று கூறிக்கொண்டே புரவியைத் தோப்பை நோக்கிச் செலுத்தினாள்.
தோப்பு மிகவும் அடர்த்தியாக இருந்ததால் சந்திர வெளிச்சம்கூட அதை ஏதோ ஓரிரண்டு இடங்களில்தான் ஊடுருவியிருந்தது. மற்ற இடங்களில் நல்ல இருட்டே இருந்ததால் சந்துஷ்டியுடன் தலையை அசைத்தாள் அந்தப் பெண். பிறகு நல்ல இருட்டாக இருந்த மரத்தடியொன்றில் தனது புரவியைக் கட்டிவிட்டு அத்துடன் இளவரசன் புரவியையும் கட்டப் பணித்தாள். இரண்டு புரவிகளும் கட்டியானதும் தனது புரவிமீது இருந்த அரபு நாட்டுத் துப்பட்டியொன்றைத் தரையில் விரித்துப் படுத்துக்கொண்டு, “நீங்களும் ஒரு துப்பட்டியை விரித்துப் படுத்துக் கொள்ளுங்கள்,” என்று வீரபாண்டியனை நோக்கிக் கூறினாள். வீரபாண்டியன் துப்பட்டியை எடுக்காமல் மரத்தடியிலேயே உட்கார்ந்தான். உட்கார்ந்து நீண்ட நேரம் அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் படுத்த உடன் கண்களை மூடினாள். மூடிய மாத்திரத்தில் உறங்கியும் விட்டாளென்பதை, அவள் சீரான மூச்சும், எழுந்து எழுந்து தாழ்ந்த அழகான மார்பகமும் நிரூபித்தன. படுத்த நிலையிலும் பரவசப்படுத்தும் அவள் எழிலை விடாமல் பருகிய வண்ணம் உட்கார்ந்திருந்தான் வீரபாண்டியன். இருட்டடித்த அந்த இடத்திலுங்கூட எங்கிருந்தோ வந்த ஒரே ஒரு சந்திரக்கிரணம் அவள் முகத்தில் கீற்றாக விழுந்து, வானமே அவளுக்கு விபூதி தீட்டுவது போன்ற பிரமையை அளித்திருந்தது. அந்தப் பிரமையில் வீரபாண்டியன் ஈடுபட்டிருந்த சமயத்தில், அவள் இதழ்களில் ஓர் புன்னகை ஓடியது. பிறகு இதழ்கள் விரிந்து தூக்கத்தில் இரண்டொரு சொற்களை உதிர்த்தன. அப்பொழுதுதான் விளங்கியது மர்மம் வீரபாண்டியனுக்கு. ‘அப்படியா விஷயம்!’ என்று உள்ளூர வினவிக் கொண்ட வீரபாண்டியன் இதயத்தில் அவளைப் பற்றிச் சிறிது பயமும் உதயமாயிற்று.
– தொடரும்…
– நிலமங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1977, வானதி பதிப்பகம், சென்னை.