நிறைவு
(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்பத்தின் இலக்கணத்தை அறிய ஒரு மகான் புறப்பட்டார்.
இன்பத்தைப் பற்றிப் பலரிடம் விசாரணை நடாத்தினார்.
‘இறைவனுடன் இரண்டறக் கலப்பதே இன்பம்’ என்றார் ஒரு சமயத் துறவி.
‘ஓயாத தத்துவக் கடைசலே இன்பம்’ என்றான் தத்துவஞானி.
‘கலைகளும் அவற்றின் ரசனையுமே இன்பம்’ என்றான் கலாரசிகன்.
‘பணம்; மேலும் பணம்; மேன் மேலும் பணம். அதுதான் இன்பம்’ என்றான் லேவாதேவிக்காரன்.
‘மதுவும், விதம் விதமான மங்கையரும். இவற்றை விட்டால் இப் பூலோகத்தில் இன்பமே கிடையாது’ என்றான் சிற்றின்பப் பிரியன்.
‘சுகமான தூக்கத்திலேயுள்ள இன்பம் பிறிதொன்றிலுமில்லை’ என்றான் சோம்பேறி.
‘சிரங்கைச் சொறிவதிலும் பார்க்க மூன்று லோகங்களிலும் வேறு இன்பத்தைக் காணமுடியாது’ என்றான் சருமரோகி.
மனங்களின் போக்குகளும் அவை நாடும் இன்பங்களும்.
‘இவற்றுள் உண்மையான இன்பம் எது?’
இதன் உள்முடிச்சை அறியமுடியாத மகான் அலைந்தார்.
அப்பொழுது, ஒரு குடியானவன் நிலத்தைப் பண்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.
அவனைப் பார்த்து. ‘இன்பம் எதிலே இருக்கின்றது?’ என்று கேட்டார்.
‘உழைப்பும் அதன் பயனுந்தான் இன்பம். உங்களுக்கும் ஒரு மண் வெட்டி தரட்டுமா?’ என்றான்.
மகான் சிந்தித்தார்.
குடியானவன் தன்னுடைய வேலையில் மூழ்கிவிட்டான்.
– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.