கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 5,742 
 
 

நான்கு தங்கைகளுக்கும் திருமணம் முடிந்து போனதை நினைத்துப் பார்த்த போது “அப்பாடா…” என்றிருந்தது. கடைசி தங்கை கல்யாணிக்கும் திருமணம் முடிந்த கையோடு அதற்கு அடுத்த இரண்டாவது மாதம் இவன் தன் புதிய வீட்டு கிரஹப் பிரவேசத்தை வைத்திருந்ததும், அப்பாவும், அம்மாவும் மன நிறைவோடு வந்து போனதும் மறக்க முடியாதது.

கடமை அனைத்தும் முடிந்து போன வேளையில் விக்ராந்தியாக இருவரும் இருந்தது பார்க்க நிறைவாக இருந்தது.

“நீங்களெல்லாம் இருந்து செய்து வைக்கலேன்னா நாங்க என்ன பண்ணுவோம்…யார் கிட்டே போய் நிற்போம்” என்று கல்யாணிக்கு கழுத்தில் தாலியேறிய வேளையில் நா தழுதழுக்க, நெஞ்சடைக்க அம்மா தன்னிடம் விம்மியதை நினைத்துப் பார்த்தான் இவன்.

“பாவம் அம்மா, ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்யாணம் முடிவதற்குள் என்ன பாடுபட்டுப் போனாள். தன் வயசான காலத்தையும், தள்ளாமையினையும் பொருட்படுத்தாமல் பல இடங்களுக்குப் போய் வந்து கொண்டுதான் இருந்தாள். அங்கங்கே தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி வைப்பதும், ஜாதக நகலைக் கொடுத்து வைப்பதும், ஏதாவது வந்ததா என்று அடிக்கடி போய் கேட்பதும், சங்கத்திற்குச் சென்று ஜாதகம் எடுத்து வருவதும், அலையாய் அலைந்தாள்.

“நாலு பெண்டுகளைப் பெத்துப் போட்டுட்டோமே, கடமை இருக்கே… மூச்சு நிக்கிறதுக்குள்ளே முடிச்சாகணுமே” அம்மா இப்படி அடிக்கடி புலம்பும் வேளையில்,

“ஆமா, ஜாதகம் எடுத்துண்டு வந்து பொருத்தம் பார்த்துட்டா மட்டும் போதுமாக்கும்.. டப்பு (பணம்) வேணாமா? அதுக்கு நாங்க தானே வந்தாகணும்?” இப்படி ஒரு நாள் தம்பி கூறியபோது அம்மா கலங்கித்தான் போனாள்.

“டேய் சங்கரா.. வாயை மூடு.. நம்ம தங்கைகளுக்கு நாம செய்யாமே வேறே யார் வந்து செய்வா? என்ன பேசறே நீ” என்றான் இவன்.

“ஏதோ உங்களுக்கும் கடமை இருக்குன்னு தோணித்துன்னா செய்யுங்கோப்பா- அதற்கு மேலே நான் என்ன சொல்லமுடியும். நானும் உங்க அப்பாவும் என்ன சொத்தா சேர்த்து வச்சிண்டு இருக்கோம். நிமிர்ந்து பேசறதுக்கு? எங்க கிட்டே எங்க உசிரைத் தவிர வேறெதும் இல்லை. அதுவும் நீங்க பார்த்து

சோறு தண்ணி ஊத்தறதாலே ஓடிண்டிருக்கு. கடைசிக்காரிக்கும் ஒரு இடம் கிடைச்சிருச்சின்னா அப்புறம் நிம்மதியா எப்போ வேணாலும் கண்ணை மூடுவோம்…”

தங்கை கல்யாணிக்கும் நல்ல இடமாகத்தான் அமைந்தது. “அவள் மனதுக்கு ஏற்றாற்போல்…” என்று அம்மா கூறினாள். அம்மா பெண் பிள்ளைகள் மேல் கொண்டிருந்த அளவு கடந்த பாசத்தினைக் காட்டியது அந்த வார்த்தைகள்.

இதைவிட நல்ல வரன்களெல்லாம் கடந்த ஒரு ஆண்டாகவே வரத்தான் செய்தன. அதையெல்லாம் வேண்டாம் என்று கல்யாணி மறுத்திருந்ததையெல்லாம் மறக்க முடியுமா என்ன?

“இந்தப் பையன் கொஞ்சம் குட்டையா இருக்கான். ஆகையினாலே வேண்டாம்” என்று கூடச் சொல்லி ஒரு வரனை அவள் ஒதுக்கியது நினைவில் இருந்து அகலாதவை.

“நம்ம குடும்பம் இருந்த இருப்பென்ன, நாம வளர்ந்த வளர்ப்பென்ன,ஹோட்டல்ல வேலை பார்த்துண்டு அப்பா நம்மளையெல்லாம் படிக்க வைக்க எத்தனை கஷ்டப்பட்டிருப்பார். தான் அரை வயிறும் கால் வயிறுமா கிடந்து கடனை வாங்கி நம்ம பசியைப் போக்க அம்மா எத்தனை பாடு பட்டிருப்பாள்? நாற்பது வருட காலம் அப்பா நெருப்புல வெந்ததும், அம்மா படாத பாடுபட்டு நம்மளை எல்லாம் வளர்த்ததும்தான். நம்மளை மாதிரி ஏழைக் குடும்பத்திலே பிறந்து வளர்ந்தவாளெல்லாம், இப்படி உயரம் பத்தாது. நிறம் கொஞ்சம் மட்டு, பையன் சிரிச்சா நல்லா இல்லே, நடந்தா சரியில்லேன்னு சொல்லலாமா? அது திமிருல்லே…!

“நல்ல குடும்பமா, ஒழுக்கமான பையனா? குணமானவனா? இதைத் தான் பார்க்கணும்?”

“கண்ட சினிமாவைப் பார்த்து, கண்ட புஸ்தகத்தையும் படிச்சிட்டு மனசுலே வேண்டாத கற்பனைகளை யெல்லாம் வளர்த்துண்டு நின்னா யார் அல்லல்படறது? இன்னும் எத்தனை இடத்துக்கு லோ லோன்னு அலையறது?”

“எனக்கா யாரும் அலைய வேண்டாம். அது வர்றபோது வரட்டும்…”

“எப்டி? வீடு தேடி வந்து குதிக்குமாக்கும்..”

“ஆமா. அப்படித்தான்..”

என்ன உளறுகிறாள்? என்று நினைத்தது நான்கு நாட்கள் கழித்து தெரியவந்தது.

“இந்தப் பாருங்கோ மாமி. உங்காத்துப் பொண்ணு என் பையனோட சேர்ந்து பழகறா போலிருக்கு, கொஞ்சம் சொல்லி வையுங்கோ… எங்காத்திலே இன்னும் இரண்டு பெண்கள் கல்யாணத்துக்கு நிக்கிறா. அவாளுக்கு முடிச்சிட்டுத்தான் என் பையனுக்கு நான் கல்யாணம் பண்ணப்போறேன். அதுவும் வேலை பார்க்கிற பெண்ணா …. என் பிள்ளை என் பேச்சைத் தட்ட மாட்டான். ஆகையினாலே உங்க பொண்ணை கொஞ்சம் அமுக்கி வையுங்கோ..”

இதைவிட வேறே என்ன வேணும் நமக்கு? உங்க அடக்கி வையுங்கோன்னு அவா வந்து சொல்லி இதைக் கூடத் தடுக்க முடியாத பிள்ளைப் பூச்சியா இருந்திருக்கான் அந்தப் பையன்… அப்படிப்பட்ட ஒரு பையனோட இவ பழகியிருக்கா.. நாம பண்ணின புண்ணியம் அல்லது இவ நல்ல காலமோ.. ஏதோ காப்பாத்தப்படணும்னு இருந்திருக்கு. அதனாலே அவா வந்து சொல்லிட்டுப் போறா… உங்க பையனை முதல்ல அடக்கி வையுங்கோன்னு நாம போய்ச் சொல்ல அவர் கிட்டே… இங்கே என்னடான்னா விஷயம் தலை மாறிப் போச்சு.. மிஸ்டேக் நம்ம பொண்ணு மேலே தான்னு ஆயிட்ட மாதிரி.. பெண்கள் தான் வீட்டுக்கு அடங்கி கிடக்கணும்… இங்கே கதையே மாறியிருக்கு… என்ன வேண்டிக்கிடக்கு இந்தக் கண்றாவியெல்லாம்… சகிக்கலை.” பொரிந்தான் இவன்.

அன்று அலுவலகம் விட்டு வந்த போது அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

கல்யாணி மூட்டைப் பூச்சி மருந்து சாப்பிட்டு பொறுக்க மாட்டாமல் தரையில் உருண்டு புரண்டு கொண்டிருந்தாள். ஏறக்குறைய இறந்து விடுவாள் என்ற முடிவுக்கே வந்து அண்ணாவுக்கும், தம்பிக்கும் தந்தி கொடுத்து விடலாம்

“ஈஸ்வரா.. இன்னும் என்னவெல்லாம் சோதனை பண்ணப்போறாயோ என்னை இது நாள்வரைக்கும் பட்ட கஷ்டமெல்லாம் போறாதா?” அம்மா புலம்பினாள்.

உங்களைப் பார்த்தா எங்க அப்பா மாதிரியே இருக்கு என்று சொல்லிக் கொண்டு சளைக்காமல் அடிக்கடி வீட்டுக்கே வந்து அப்பாவுக்கு ஜெனரல் செக்கப் பண்ணிப் போன அந்த டாக்டர் மட்டும் அன்று மறுத்திருந்தால் விஷயம் முடிந்து போயிருக்கும். போலீஸ் கேஸ் ஆகாமல் வீட்டுக்கு உபகரணங்களையெல்லாம் கொண்டு காரியத்தை கமுக்கமாய் முடித்தார்.

பருவப் பெண்ணின் இதமான சோபிதம் போய் வாடிப்போன வெற்றிலையாய் நின்றாள் கல்யாணி.

கொஞ்சம் கொஞ்சமாய் அந்த நினைவுகளிலும், கனவுகளிலும் இருந்து அவள் மீண்டு வருவதற்கே ஏறக்குறைய இரண்டாண்டுக்கு மேல் பிடித்தது. தெளிந்து, பதமாகி நிதானத்துக்கு வந்தபோது, “இவர்கள் நம்மவர்கள், நமக்கு வேண்டியதைத்தான் செய்வார்கள்” என்று எல்லோர் மேலும் நம்பிக்கை பிறந்தது. அந்த வரனும் அமைந்தது. ஒரே வார்த்தையில் ‘சம்மதம்’ என்றாள் கல்யாணி.

திருமணம் இனிதே நடந்தேறி மதியம் சாப்பாட்டுப் பந்தி முடிந்த போது,

“ஒரு வேன் ஏற்பாடு பண்ணுங்கோ.. திருப்பரங்குன்றம், அழகர்கோவில், மீனாட்சியம்மன் கோவில்களுக்குப் போக வேண்டியிருக்கு…” என்று பையன் வீட்டார் புதிதாய் உண்டாக்கிய செலவு கூடப் பெரிதாய் தெரியவில்லை. அதனினும் தீவிரமாய் கோயில்களுக்கெல்லாம் போய் வந்த பின்பு,

“இந்தவேனை இப்படியே தஞ்சாவூர் வரைக்கும் பேசி விட்டிருங்கோ… நாங்களெல்லாம் இதிலேயே போய் இறங்கிடறோம்..” என்ற போதும்,

“சரி, முடிச்சிட்டா போச்சு…” என்று பிள்ளைகள் மேல் உள்ள நம்பிக்கையில் அப்பா ஓங்கிச் சொன்ன போது அவருடையதும், அம்மாவுடையதுமான சந்தோஷம் மட்டுமே, திருப்தி மட்டுமே அப்பொழுது பெரிதாய் இருந்தது.

எல்லாம் சுபமாய் முடிந்த மறுநாள் அம்மா இவனிடம் வந்து, டேய் ரமணா, எனக்கு ஒரு ஆட்டோவோ, ரிக் ஷாவோ பிடிச்சு விடேன்… மீனாட்சியம்மன் கோவில் வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்றாள். “நானும் வரேனே.” என்று கூடப் புறப்பட்டான் இவன்.

அன்று அம்மா ஒவ்வொரு சாமியாய் நின்று நின்று கும்பிட்டதும், அம்மன் சந்நிதியில் இருந்து வெளியே வருவதற்கே வெகு நேரம் பிடித்ததும், நெஞ்சு விம்ம விம்ம கண்ணீர் வழிய அவள் வணங்கி உருகிப் போனதும் மறக்க முடியாதவை.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் தென்பட்ட அனுமார் கோயிலைப் பார்த்த போது, “இங்கேயிருந்தப்போ மூத்தவ சாந்தி கல்யாணம் சீக்கிரம் முடியணும்னு இந்த கோவிலை எத்தனை தடவை சுத்தியிருப்பேன் தெரியுமா? இப்பவும் இந்த அனுமாருக்கு வடைமாலை சாத்தறேன்னு வேண்டியிருக்கேன். ஊருக்குப் புறப்படறதுக்குள்ளே நேர்ச்சையை முடிச்சிட்டுப் போகணும்…”

அடுத்த முறை கிரஹப் பிரவேசத்திற்கு அப்பாவும், அம்மாவும் வந்திருந்த போது அம்மா சற்றுத் தெளிர்ச்சியாய் தென்பட்டது பார்க்க திருப்தியாய் இருந்தது. அது நாள் வரை முகத்தில் இருந்து வந்த தீராத சோகமும், சஞ்சலமும், கவலை ரேகைகளும் விலகியிருந்ததாய் தெரிந்தது.

“ஏம்மா.. நீயும் அப்பாவும் கொஞ்ச நாளைக்கு எங்கிட்ட இருந்துட்டுப் போங்களேன்.” என்றான் இவன்.

“இனிமேல் எங்களுக்கென்னப்பா.. உங்க மூணு பேர் கிட்டேயும் மாறி மாறி இருக்க வேண்டியது தான். இருந்தாலும் இப்போ கல்யாணம் முடிஞ்ச கையோட உடனடியா பெரியவன் கிட்டேயிருந்து கிளம்பி வர்றது அத்தனை நல்லாயில்லே.. ஆயிரந்தா ஆனாலும் இந்த மூணு கல்யாணத்திலேயும் முக்கிய பங்கு அவன் தான்… ஆகையினாலே கொஞ்ச காலம் போகட்டும்.. அதுக்கப்புறம் கிளம்பி வர்றோம்…”

“உங்கம்மா சொல்றதும் சரிதான்..” என்று ஆமோதித்தார் அப்பாவும்

இருந்தாலும் வந்த சுவட்டோடு புறப்படாமல் ஒரு பத்து நாள் இருந்து விட்டுப் போவது இவனுக்குத் திருப்தி தந்தது.

அன்று ஊருக்குப் புறப்பட இருந்த அப்பாவையும், அம்மாவையும் பக்கத்து வீடு, அண்டை வீடு என்று இருந்தவர்கள் வந்து பார்த்துப் போனதும், காலில் விழுந்து நமஸ்கரித்து ஆசி வாங்கிக் கொண்டதும், புகழ்ந்து பேசியதும் மறக்க முடியாதவைகள். ரொம்பவும் பெருமையான விஷயமாகவும் இருந்தது இவனுக்கு.

“உங்கப்பா நினைச்சிருந்தா உங்க எல்லோரையும் ஹோட்டல் வேலைக்கே அனுப்பியிருக்க முடியும். ஜாலியா, தன்னோட இளம் பிராயத்திலிருந்தே ஹாய்யா இருந்திருக்க முடியும். உங்கம்மாவும், உங்க படிப்பிலேயும், வளர்ச்சியிலேயும் கவனம் இல்லாமே எதுக்கு கிடந்து, மாயணும்னு அவுத்து விட்டிருக்கலாம்… அனுதினமும் நெருப்பிலே வேகற, கரண்டி பிடிக்கிற உத்யோகம் தன்னோட போகட்டும்னு ஒரே உறுதியா நின்னு உங்க எல்லோரையும் ஆளாக்கியிருக்கிறார் உங்கப்பா. அதுக்கு காலம் பூராவும் உறுதுணையா இருந்திருக்கா உங்கம்மா. ரொம்பப் பெரிய, பிரமிக்க வைக்கிற விஷயம் இது. இன்னிக்கு நீங்களெல்லாம் நாலுபேர் மதிக்கிற நிலையிலே இருக்கேள்னா, அதுக்கு உங்க அப்பா அம்மாவோட உழைப்பும், சின்சியாரிட்டியும் தான் காரணம். முழுக்க முழுக்க அர்த்த பூர்வமான வாழ்க்கைன்னா அது உங்க ஃபாதர் மதருடைய லைஃப்தான்னு சொல்லணும்.

அன்று இருவரையும் ரயிலேற்றி விட்டு இவன் வீடு திரும்பிய போது, அடுத்த ஆண்டு நிறைவடையப் போகும் அப்பாவின் எண்பது வயது கருதி, ஆயிரம் பிறை கண்ட சதாபிஷேக வைபவத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தான் இவன்.

நினைத்த மாத்திரத்தில் தீர்க்க சுமங்கலியான அம்மாவின் மங்களகரமான அந்த முகம் நினைவில் வந்து பதிந்தது.

– மதுரைமணி பொங்கல் மலர், 1993

உஷாதீபன் 1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *