நினைவுச் சுழல்





(1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் பட்டணம் வந்து சில நாட்கள் ஆகியிருந்த போதிலும், அன்று மாலைதான் உலாவ வெளிக் கிளம்பினான். அந்தி மங்கல் வெளிச்சத்தில் நிழலின்றி நடந்தவன் பைத்தியக்காரனைப் போல, முன்னும் பின்னும் உன்னிப்பாய்ப் பார்த்துக் கொண்டே நடந்து கொண் டிருந்தான். ஒளிந்த இடத்தினின்றும் திடீரென்று வெளிப் பட்டவனாக அவன் தோன்றினான். உலகம் அவனுக்கு வெகு புதுமையாகத் தெரிந்தது.
ஒரு தரம் அவன் தலையை நிமிர்த்தி எதிரே நோக்கிய போது, நான்கைந்து பெண்கள் குதூகலமாகப் பேசிக் கொண்டு எதிரே வருவதைப் பார்த்தான். அவர்களுடைய குதிகால் உயர்ந்த ‘பூட்ஸ்’ அவர்கள் மூளையைவிடப் பளபளவென மின்னின. நாகரிகத்தில் நெளியும் அவர்கள் நடையோ வெனில், அவர்கள் தலை வகுடை விடக் கோணலாக அவனுக்குத் தோன்றியது. அந்தப் பெண் களின் ஒருத்தியுடைய கன்னம் குழிந்து சிறிது சிவப்பாக இருந்தது. அதைக் கவனித்த அவனுக்குச் சிரிப்பு வந்தது. தன் விடுதி அறைச் சுவரின் சுண்ணாம்புப் படல் விழுந்த இடம் அவன் நினைவிற்கு வந்ததுபோலும்! ஏதோ விட்டுவிட்டு, எல்லோரும் குருவிகள் போன்று, உதட்டால் ஒற்றைப் பதத்தில் ஆங்கிலம் பேசிக் கொண்டு போயினர்.
அவர்களில் ஒருத்தி, இவனைக் கண்டதும் சிறிது திடுக்கிட்டவள் போல் சிறிது வாயைத் திறந்தாள். இவன் ஒன்றும் புரியாமலே வேகமாக அவர்களைக் கடந்து தன் அறையை அடைந்தான். கொஞ்சம் கொஞ்சமாக இருட்டுக் கண்டு கொண்டிருந்தது.
உள்ளே சென்றவன் மேஜைமீது இருந்த குப்பியி னின்றும் கொஞ்சம் அதிகமாகவே பிராந்தியைப் பருகினான். விரித்துக் கிடந்த தன் படுக்கையின் மீது உட்கார்ந்தான்… எழுந்து நடந்தான். மனது மிகக் குழம்பியது. உள் நின்று எழுந்த ஒரு வேகம் உதட்டிலே பேச்சாக மாறியது. “எதிரே நீ? ஆமாம், நீதானே, நானும் தான்.” படுக்கையில் உட்கார்ந்து கொண்டு பக்கத்திலிருந்த பிடிலை எடுத்துக் கையால் மீட்டினான். அவன் மனது சொல்லிக் கொண்டிருந்தது. அவன் காதில் விழவில்லை. சோகம் கொண்டு சுற்றி, இருள் சூழ்ந்திருந்தது. பிடிலும் அதைத்தான் தொனித்துக் கொண்டிருந்தது. சிறிது சென்று எதிரே நோக்கியவன் யாரையோ பார்த்தது போல் விழித்துக் கொண்டிருந்தான். துக்கமுற்ற அவன் மனது ஏதோ பாடியது. கண்களில் நீர் அருவிக் கொண்டிருந்தது. ஒருவகைப் பயம் கொண்டு விரல்கள் தடுமாறின. அடிமனத்தில் மூழ்கியது மெல்லிய படலம் போன்று மிதந்து “இரவான இரவே – நீயா, வரும் சுவடற்று” என இருளில் முணுமுணுத்தவன் எதிரே கண்டான்: தெளிவற்று மங்கல் ஒளியில் அவள் நின்று கொண்டிருந்தாள். அவளுடைய முகம், திடீரென வாய்விட்டு அலறுதலில் கிடைக்கும் ஆறுதலை அவனுக்கு அளித்தது.
“என்ன சேகரா – எப்போது வந்தாய்?” என்று அவள் கேட்டபோது இவன் திடுக்கிட்டான்.
“இல்லை, நான்கு ஐந்து நாளாயிற்று. நீ எங்கே இருக்கிறாய் என்பது தெரியவில்லை. உன்னைப் பார்க்க-” என்றான்.
அவன் அறையைச் சிறிது சுற்றி, இருட்டில் கவனித்ததில் அவன் மேஜையின்மீது இருந்த குப்பியை அவள் கண்டாள்.
சிறிது சீற்றத்துடன், “சரி, அதோ என்ன?” என்றாள். “ஒன்றுமில்லை” என்று அவன் இழுத்தது ஒரு உளறல் போன்று கேட்டது. “சரி, அதைக் கொட்டப் போகிறேன். நீ யாரென உனக்குத் தெரிகிறதா? மாமா இருந்தால் இப்படி இருப்பாயா?” என்று பேசியவளுக்கு மேலே வருத்தத்தி னால் பேச முடியவில்லை.
“இனி இல்லை. இது மட்டும்-” எனத்தலை குனிந்து கொண்டே மன்றாடுபவன் போல் சொன்னான்.
சிறிது நேரம் அவ்விடம் பேசாது நின்று கொண்டிருந் தவள் திடீரெனத் திரும்பி, “சரி, பிறகு பார்க்கிறேன்” என்று சொல்லி வெளிச்சென்று தன் சிநேகிதிகளுடன் போய் விட்டாள்.
கமலா படித்துக் கொண்டிருந்த கல்லூரி வருட விழாக்கொண்டாட இருந்தது. அன்று தேக்கச்சேரி முடி வடைந்த பின் ஒரு மணிநேரம் சங்கீதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரி மாணவிகளிலே கமலாதான் மிகவும் நன்றாகப் பாடுபவளாகக் கருதப் பட்டவள். மற்றும், சங்கீதப் பயிற்சிக்காக ஒரு வகுப்பு அக்கல்லூரியில் இருந்ததினால், பாடுவதற்கும் பிடில் வாசிக்கவும் மாணவிகள் நிறைய இருந்தார்கள். அந்த ஒரு மணி அவகாச சங்கீதக் கச்சேரிக்குக் கமலாவைப் பாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மற்றும் கமலாவே பிடில் வாசிக்கத் தெரிந்த ஒரு சிநேகிதியைத் தனக்கு வாசிக்க ஏற்பாடு செய்திருந்தாள்.
முதல் நாள் மாலை சேகரனைக் கண்டது முதல், ஏதோ காணாமற்போன வஸ்துவைத் தேடி எடுக்க முயற்சிக்கும் ஒரு சிரமம் போன்று, அவள் மனது அடித்துக் கொண்டிருந்தது. அவனைப் பாலிய முதல் தான் அறிந்த விதம் ஒவ்வொன்றையும் கிளறிப் பார்த்தாள். மனதிற்கு மட்டும் ஒன்றும் புரியவில்லை.
சேகரனுடைய தகப்பனார், கமலாவின் மாமன், அவர் ஒரு சீமானாகத்தான் இருந்தார். அவனுடைய சிறுவயதிலேயே அவர் இறந்துவிட்டார். மற்றும் சேகரனுடைய தாயார் சமீபத்தில், இரண்டு வருஷங்களுக்கு முன்புதான் காலம் சென்றாள். சேகரன் கமலாவிற்கு சுமார் ஏழு அல்லது எட்டு வயது மூத்தவனாக இருக்கலாம். சிறு வயதில் இருவரும் சேர்ந்தே சகோதர சகோதரியாக விளையாடினவர்களானாலும் சமீபமாக அதிகமாகப் பார்த்துக் கொண்டதில்லை.
காலையில் கமலா அவனைப் பார்க்கச் சென்றாள். அவன் அறையில் நுழையும்போது உள்ளிருந்து பிடில் சப்தம் வருவதைக் கேட்டுச் சிறிது வெளியிலேயே நின்றாள். சிறிது கேட்டும், அவன் வாசித்ததின் மூலமாக, உயர்ந்த சாதகன் என்பதையும், அவன் ஞான நுட்பத்தின் மாதிரியையும் தெரிந்து கொண்டாள். அவள் உள்ளே நுழைந்தவுடன், சேகரன் சிறிது திடுக்கிட்டான். கமலா விற்கும் அதிகமாக அங்கிருக்கப் பிடிக்கவில்லை. அவன் இவ்வளவு கேவலமாகக் குடிப்பழக்கத்தை மேற்கொண் டான் என்று நினைக்கும் போது மிகுந்த வருத்தம் கொண்டாள். எவ்வளவோ உன்னதமாக இருக்கவேண்டி யவன் எதற்காக இப்படிப் போய்விட்டான் என்பதே அவளுக்குத் தெரியவில்லை. மற்றும் தன் எதிரிலே அவன் அவ்வளவு சஞ்சலம் காட்டிக் கொள்வதும் பிடிக்கவில்லை. எதிரே கண்டவுடன், எதையாவது பேச வேண்டியவள் போல, “சேகர், இன்று எங்கள் கல்லூரி வருட விழா… நான் பாடப் போகிறேன்; நீதான் எனக்கு பிடில் வாசிக்க வேண்டும். தெரியுமா?” என்றாள்.
அவன் “சரி” என்று சொல்லியது இவளுக்குச் சரியாகப் படவில்லை. மற்றும் அதே கணத்தில் தான் எதற்காக அவ்விதம் சொன்னோம் என்ற யோசனை எழ, அவள் சீக்கிரமே அவனைவிட்டு அகன்றாள்.
தேக்கச்சேரி முடிவடைந்து கொண்டிருந்தது. ஐந்து மணி ஆகப்போகிறது. சேகரனைக் காணோம். மிருதங்கக் காரன் வந்துவிட்டான். சேகரன் வரப்போகிறதில்லை என்று எண்ணி, தன் சிநேகிதியையே வாசிக்க ஏற்பாடு செய்தாள் கமலா. ஐந்து மணியிலிருந்து ஆறு மணிவரையிலும் அக்கச்சேரி நடைபெற வேண்டியது என நிகழ்ச்சிக் குறிப்பில் கண்டிருந்தது.
அன்று நல்ல கூட்டம். பட்டணத்தின் பிரமுகர்கள் அநேகமாக எல்லோரும் தம்பதி சகிதம் வந்திருந்தனர். எல்லோரும் வரிசையாகப் போட்டிருந்த ஆசனங்களில் கச்சேரி கேட்க அமர்ந்துவிட்டனர்.
கச்சேரி மேடைமீது வேறு வகையின்றிக் கமலாவின் சிநேகிதி ஏறும் சமயத்தில், சேகரன் வந்து சேர்ந்தான். மேடையில் காலியாக இருந்த ஒரு இடத்தை நிரப்பவே வந்தவன்போல் திடீரென்று அங்கே வந்து உட்கார்ந்தான். பிடிலை எடுத்துச் சுருதி சேர்த்துக் கொண்டான். எட்டி யிருந்தும் அவன் வாய் வாசனையைக் கமலா உணர்ந்தாள். கண்களும் அவன் நிலைமையை நன்குணர்த்தின.
கமலா, கச்சேரியை யதோக்தமாகவே செய்ய எண்ணி, முதலில் வர்ணம் பாட ஆரம்பித்தாள். ஒரு கணம் தாமதித்து சேகரன் சேர்ந்தான். இனிமையானதெனினும் திடீரென மிகுந்த இனிமையுடன் “சரிசரி” என இரண்டு தரம் அவன் வில்லை இழுத்துச் சேர்ந்து வாசிக்க ஆரம்பித்தான். அப்போது சபையோரிடம் ஒருவகைப் பரபரப்புக் காண ஆரம்பித்தது.
அவள் ராக ஆலாபனையை முடித்தவுடன் இவனுக்கு விட்டாள். மூன்று நிமிஷம் வாசித்தான். நன்றாக வாசிக் கிறான் என்பதை உணர்ந்து, சபையோரிடம் தலை ஆட்டம் காணப்பட்டது.
தோடியில் அவள் கீர்த்தனம் எடுத்தபோது ஏதோ வெறிச்சென்று இருந்தது. இவன் பக்கம் கமலா பார்த்த போது அவன் சும்மா இருப்பதைக் கண்டாள். அவனும் சேர்ந்து வாசிக்க ஆரம்பித்தபோது அந்த மண்டபம் நிரம்பியது மாதிரியாகத் தோன்றியது.
மது மயக்கம் அவன் ரத்தத்திலே கலந்து துடிப்பைக் கொடுத்திருக்கலாம். அவனுடைய மௌனம் கலைந்து சங்கீதமாக விகஸித்திருக்கலாம். எட்டிய ஆசனங்களில் பல வர்ணப் பட்டு வஸ்திரத்தில் பதுமைகள் போன்று சமைந்து இருந்தவர்களை அநேக ஸ்வரச் சித்திரங்களாக அவன் கண்டிருக்கலாம்.
ஆனால் அவன் அப்படி வாசிக்க இவைகள்தானா? அவனுடைய ஜீவ உள்ளக் கிளர்ச்சியானது சங்கீத பாஷையிலே ஏதோ பேசுவது போன்றுதான் கமலா எண்ணினாள். தனக்கு ஏதாவது அது சமாசாரம் சொல்லுகிறதா என்று கவனிக்க அவள் சிறிது நின்றாள். அவன் வாசித்துக் கொண்டிருந்தான். ஆமாம், அது மாதிரி அவன் வாசித்ததே இல்லை.
அறியாது பந்தம் இறுகிக் கொண்டது. கண்டு கொள்ளாத வரையில் நிரடான முடிச்சாகத்தான் இருந்தது. அறிந்து கொண்டு அதன் சிடுக்கில் அமைதியை நாடும் போது அது நழுவிக்கொண்டது. யாராலும் கூடவர முடியாத அவ்விடத்தை அடையும் ஆவலைத்தான் சப்தித்தது போன்று, கருணையையும் கடந்த உணர்ச்சி யற்ற சிரிப்பைத் தான் ஒலித்தது அந்த நாதம்- “ஆம், போகிறேன்.உன்னால் முடியாது கடந்து தாண்டி அறிய.”
மிகைப்பட்டதினால் ஒளிக்கப்பட்டவன் என்ற உணர்ச்சி கொள்ளும் ஒருவகை இனிப்பு – இல்லை எனத் தடித்து நிரூபிக்கும் ஆர்வத்தில் அமைதியற்ற அலை களைத்தான் அவள் மனத்தில் எழுப்பினான்.
ஹிருதயத்தின் சங்கீத ஒலி சப்தமின்றி வெளி வியாபகம் கொள்ளும் என்ற நினைப்பினால், அதை விடாது பிடித்து விரல் நுனி வழியே பிடில் தந்திகளிலே ஏற்றி நாதரூபமாக்கச் சிரமப்பட்டான். நீல வானத்தை அணுகி, மறைந்த சூரிய ஒளியில் சலிக்கும் அநேக வித வர்ண மேகங்களைத் தான் காட்டி நின்றன அவன் பிடித்த ஸ்வர கற்பனைகள். உயரே பறந்து மறைந்தும், காதில் இனிக்கக் கூவும் இன்னிசைப் பறவைகளே போன்று அவன் கீதம் சபையோர்களைப் பரவசமாக்கியது.
இறந்த காலத்தின் எதிரொலி இடைவிடாது அசரீரி யாகக் கூப்பிடுவதாக எண்ணிக் கமலா கவனித்து நின்றாள். அவள் கண்கள் தளும்பின. பார்வை மங்கிற்று. கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பாலிய நினைவுகளைத் தனக்கு வெகு சமீபமாகக் கண்டாள்.
கார்த்திகை மாதத்தில் தன் வீட்டு வாயிலிலிருந்து கிழக்கே கண்ணுக்குத் தெரியும் வரையில் பச்சைப் பசேலென்ற நெற்பயிர்க் கடலின் கொந்தளிப்பு – வெட்டுக் கிளியின் இடைவிடாச் சப்தம் – வரப்புக்களின் நடுவே, பார்வை மறையும் வரையில், திட்டுத்திட்டாகக் குட்டை யான கருவேல மரங்கள் படர்ந்து நின்றிருந்தன. எட்டிய சேரிகளின் தூரத் தோற்றம், சாசுவதத்திலே அழுந்தப் புதைந்தன போன்று கண்ணெதிரே நின்றன. ஆகாயம் மேக மறைப்பினால் மந்தமாகத் தோன்றும் – மழை அடிக்கும் போது வீட்டினுள் தன் தாயாரின் குரல், தனக்கு மிகுந்த பிரியமான குஞ்சுப் பாப்பாவின் இனிமையான மழலைச் சொற்கள்…
அர்த்தமற்று இவைகள் மனத்தை இன்பமயமாக்கின. அளவுக்கு மீறிய அதிக இன்பத்திலும், உணர்வு சோர்வு கொள்ளா வகையில், கமலா கேட்டு நின்றாள். அவள் கண்களில் பனிப்படலம் போன்று நிச்சயமற்ற நினைவு களின் ஞாபகம் மிதந்தது. அவன் கானம் அவளுக்கு ஏதாவது செய்தி கொண்டதா? அவள் கவனித்துக் கொண்டிருந்தாள்.
கல்லூரி சங்கீதப் பயிற்சியாளர் மூக்குக் கண்ணாடி யுடனும், சரிகை அங்கவஸ்திரத்துடனும் முன்னே உட்கார்ந்திருந்தார். அவர் அடிக்கடி நழுவி நழுவிக் கீழிறங்குவது போல் மூக்கின் மேலே சரிந்த தனது மூக்குக் கண்ணாடியை மேலே இழுத்து விட்டுச் சரி பண்ணிக் கொண்டார். ஆனால் நழுவி நகர்ந்து, ஸ்திரமற்று.
மேலோங்கிச் சிதறிச் செல்லும் அவரது சிந்தையை அவரால் சரிசெய்துகொள்ள முடியாதவர் போலத்தான் அவர் விழித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதற்குப் பிறகு ராகமாலிகை பாட ஆரம்பித்தாள் கமலா. “ராகமாலிகை எடுத்திருக்கிறாள் ஸார்!” என வறட்டுத் தவளைபோன்ற குரலில் விழி பிதுங்கும்படி சொல்லக்கூட முடியவில்லை அந்த புரொபஸருக்கு. பாவம் அவர் கைகள்தான் அடிக்கடி கண்ணாடியை நாடின.
சேகரின் உதடுகள் சோர்வு கண்டு பிரிந்தன. அவன் கண்கள் பிரகாசம் அடைந்தன. மிக அழுத்தமாக லயித்துச் சேர்ந்தே வாசித்து வந்தான். இரவின் இருள் வெளியில் பயந்த இரு குழந்தைகளின் மௌனமான பிணைப்புப் போல் இருந்தது அந்தச் சேர்ந்த வாசிப்பு.
நடுவே எதையோ கண்டு திடுக்கிட்டு “அதோ அதோ” என்று ஒன்று வீரிட்டது போன்ற குரல் கேட்டது. சேகரன் மட்டும் வாசித்துக் கொண்டிருந்தான். “ஆம் நான் போகிறேன். எட்டிய தூரமல்ல – யாவராலும் தொடர முடியாத – அங்கே!” திருப்பித் திருப்பி இதையே அவன் பிடில் சொல்லிக் கொண்டிருந்தது…..
அவன் பிடிலைப் பெட்டியினுள் வைத்து எடுத்துக் கொண்டு சாவதானமாக வெளியேறினான்.
இரவு அவன் அறையை அடைந்ததும் அவன் மனது நிதானமின்றிச் சலித்தது. மிச்சம் மீதி குப்பியிலிருந்ததைக் குடித்தான். மனது மிக பீதி அடைந்த நிலையில் உட்கார்ந்தான். மறுபடியும் தன் பிடிலை எடுத்து வைத்துக் கொண்டு வாசித்தான். அலுப்பும் சோகமும் தந்திகளி னின்றும் வீறிட்டன. சேகரன் தன்னுடைய பழைய நிலையை அடைய வேண்டினான். அப்படியாயின் தன்னால் எவ்வகை நிலையில் வளர முடியும் என்பதை எண்ணினான். உலகிலே ஒளிக்கப்பட்டவனேபோன்று இருத்தலை மிக வேண்டினான். ஆனால் இப்போது எங்கு ஒளிந்து கொண் டிருக்க முடியும் என்பதுதான் புரியவில்லை. போவதாகத் தோன்றும் இடமோ எல்லையற்றதாக இருந்தது. செய்ததைத் துடைத்து மறைக்கும் வல்லமை இல்லாததி னால், தான் செய்த ஒவ்வொரு காரியங்களின் மதியீனத் தையும் கண்டான்.
அன்று இரவு மழை நன்றாக அடித்து நின்றது. அவன், மறுநாள், அதிகாலையிலேயே எழுந்தான்.
வெளியில் உட்கார்ந்து கத்திக் கொண்டிருந்த அநேகம் பக்ஷிகளை அவன் பார்த்தான். விடுபட்ட நாணினின்றும் அம்பு பறப்பதுபோல் கீச்சிட்டு விர்ரென்று ஆகாயத்தில் எழும்பி மறைந்தன சில. மற்றும் சில, கத்திக் கொண்டே, தரையைத் தொடும் வகையில் சிறகு விரித்து இரை தேடப் பறந்தன. உலகத்தில் புது ஒளி பரவுவதாகச் சேகரன் நினைத்தான். வீதிகள் மழையினால் சுத்தமாக்கப் பட்டிருந்தன. மேலே வானம் நிர்மலமாகத் தெரிந்தது. சாலை ஓரங்களில் நின்றிருந்த ஒன்றிரண்டு மரங்கள் ஆனந்தக் கண்ணீர் உதிர்ப்பதே போன்று ஜலத்துளிகளைச் சொட்டி நின்றன. காலைச்சூரியன் உதயமானான். சேகரன் விடுதியை விட்டு வெளியேறினான்.
அன்று சாயந்திரம் கமலா, சேகரனைக் காண வந்தாள். அவன் இருந்த அறை காலியாக இருந்தது.
கல்லூரி விடுதியின் மேல் மாடியில் இரவு வெகு நேரம் வரையில் அவள் தனியாக உட்கார்ந்திருந்தாள். சந்துஷ்டி அற்ற உலகினின்றும் எவ்வளவு தூரம் விலகி நிற்க முடியும். என்று நினைப்புள்ளவைபோல் எண்ணிலா நக்ஷத்திரங்கள் உயரே அமைதியில் பிரகாசித்திருந்தன. எட்டிய மாதா கோவில் மீது நின்ற சிலுவை, ஆன்மாக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் கையை விரித்து ஆசீர்வதிக்கும் பாவனையில் தோன்றியது. ஒரு குடிகாரனுடைய உளறல் சப்தம் தூரத்தில் மறைந்து கேட்டுக் கொண்டிருந்தது. உலகத்தின் சிறு ஒளிக்காட்சி நிரம்பிய மனத்தில் தளும்பிய கண்களால் மெழுகப்பட்டது போன்றிருந்தது. ஒன்றும் நன்றாகத் தெளிவுபடாது எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. மனது விரிவாகி எட்டிய வெளியில் சென்றது.
அவள் சிநேகிதி படியேறி வந்து கொண்டிருந்தாள். மெதுவாக நெருங்குவது இவளுக்குத் தெரியவில்லை. எங்கேயோ இருந்து, ஒளிந்ததை தேடித் தருவித்து அழைத்ததை, அது மறைந்தும் சஞ்சலம் கொடுப்பதற்குக் காரணம்?
சேகரன் எங்கு சென்றான் என்பது தெரியாததனாலா இவ்வளவு மனச்சஞ்சலம்? அல்லது அவனிடம் ஏதாவது ரகசியம் அவளால் பகரப்பட்டதாக நினைத்து அவன் இழப்பில் சஞ்சலமா?
அவனிடம் என்ன ரகசியம் தன்னால் கொடுக்கப் பட்டது என்பது புரியவில்லை. ஏதோ அது மாதிரியான எண்ணம் அவள் மனத்தில் உண்டானது உண்டு. அவன் மறைந்துவிட்டான் என்பதில் ரகசியமும், வெளிக்காணாது மறைந்தது என்ற எண்ணத்தில் சிறிது மன ஆறுதலும் கொண்டாள். ஆனால் அவன் மறைவு இவளுக்கு ஒரு வகையில் அமைதியைக் கெடுத்தது.
தன் மனத்தில் புரியாது புறம்பாக மறைந்து நின்ற ஒரு உணர்ச்சி எழுப்பப்பட்டதுதான் இவ்வகை மனக் கிளர்ச்சிக்கு ஆதாரம் போலும்! “என்ன எண்ணம், அறியாத வகையில் ரகசியமெனக் கருதிய எண்ணம் அவனோடு பகிர்ந்து கொண்டேன்? வெளியே தெளியத் தோன்ற முடியாதது, உள்ளே இருந்ததா? இந்தப் புரியாத அமைதியின்மைக்குக் காரணம்? தன்னுடைய மனதே பிளவு கொண்டு, ஒன்றை யொன்று ஒன்றுமில்லாததற்கு பரிகசிப்பது தானா?…”
அவளால் யோசிக்க முடியவில்லை. முடியாததையும் உணரமுடியவில்லை. வட்டத்தைச் சுற்றிச்சுற்றி, ஆரம்ப இடமே முடிவிடமாகச் சுழன்று விரிவு பட்டு, சிறிது மனவெழுச்சி கொண்டு, பிறிதொரு சுழலில் அகப்பட்டாள். அண்டத்தை பரிணமித்து நிற்கும் சுழற்சிக்கு விரிவுபட அவளுக்கு மூளை வன்மையில்லை. வேகமின்றிக் குழம்பும் சுழலில் அகப்பட்டு, தடுமாற்றத்தில் ஆதிநிலை
யிலும் அடிபட்டு போவதைத்தான் கண்டாள். தன் பெண்மையின் வீழ்ச்சியை நன்கு உணர்ந்து கொண்டாள்.
அவள் சிநேகிதி வெகு சமீபம் வந்துவிட்டாள். அவளைத் தட்டி, “என்ன கமலா, எவ்வளவு நேரம் மேலே இருக்கிறாய்? வா, கீழே போகலாம்” என்று சொல்லிக் கீழே அழைத்துச் சென்றாள்.
– மணிக்கொடி 1937.
![]() |
மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர். எஸ். மணி ஐயர் என்கின்ற இயற் பெயருடைய மௌனி, ஜூலை 27, 1907-ல் தஞ்சாவூர் மாவட்டம்,…மேலும் படிக்க... |