நாளைய மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 10, 2025
பார்வையிட்டோர்: 3,849 
 
 

(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம் – 7

சுமதியின் மகனுக்குக் கையில் காயம். ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணவேண்டிய காயம். நடுஇரவில் சுமதி போன் பண்ணித் தம்பியை அழைத்தாள். 

அவனிடம் காரில்லை. டாக்சி எடுத்துக் கொண்டு வடக்கு லண்டன் போகவேண்டும். தனது மருமகனுக்கு என்ன காயம்,எப்படி நடந்தது என்றுகேட்டு விசாரிக்க முதல் அவனுக்குச் செந்திலில் சந்தேகம் வந்தது. மருமகன் சிவம் மிகவும் சூடிகையான எட்டு வயதுப்பையன். செந்திலின் கோபத்திற்கு ஆளாகியிருப்பானா? குடிகாரன் மட்டுமல்ல, செந்தில் இப்போது அடிகாரனாகவும் மாறிவிட்டான். சுமதியைப் படுத்தும் பாடு இப்போது ஊர்சிரிக்கும் விடயமாகி விட்டது. டாக்சி எடுத்து தமக்கை வீடு சென்றான். 

இரவு பன்னிரண்டு மணிக்குச் சுமதியின் அழுகை நெஞ்சைப் பிழிகிறது. முன்பின் யோசிக்காமல் மெலனியின் டெலிபோன் நம்பரை டையல் பண்ணினான். 

யாரிடமாவது உதவி, அல்லது ஆலோசனை கேட்க வேண்டும் போலிருந்தது. மெலனியை இந்த நேரத்தில் கூப்பிடுவதைப் பற்றி அவள் என்ன நினைப்பாள் என்று கூட அவன் யோசித்துப் பார்க்கவில்லை. 

சுமதியின் குரல் அவனை அப்படிப் பண்ணியிருந்தது.இவ்வளவு காலமும் எவ்வளவு கொடுமைளைச் சகித்திருக்கிறாள் என்பது அவன் லண்டனுக்கு வந்த பின்தான் தெரிகிறது. 

ஏன் என்னை நடுராத்திரியில் கூப்பிட்டாய் என்று மெலனி திட்ட வில்லை. இருபது நிமிடங்களில் அவன் இருக்கும் இடத்திற்கு வந்தாள். 

நடுச்சாமம் என்றும் பார்க்காமல் மாமா ராமநாதனுக்குப் போன் பண்ணிவிடயத்தைச் சொன்னான். 

மெலனியுடன் ஹாஸ்பிட்டலுக்குப் போய்ச் சேர்ந்தவுடன் சுமதி ஓடிவந்து தம்பியின் கைகளைப் பிடித்து அழத் தொடங்கி விட்டாள். அக்ஸிடென்ட் அண்ட் எமேர்ஜென்சி டிப்பார்ட் மெண்டில் குழந்தைகளுடன் அனாதை போல் காத்திருந்த தமக்கையில் பரிதாபம் வந்தது. எப்படி இந்த நேரத்தில் தனபால் மாமா வந்தார் என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அவரும் ஹொஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்தார். 

ரவிசந்தேகப்பட்டது சரிதான். செந்தில் தன் குடிவெறியில் சுமதியை அடிக்க அதைத் தடுக்கப் போன மகனைத் தள்ளி விழுத்தியதால் அவனது கை உடைந்து விட்டது. 

செந்தில் பக்கத்திலிருந்தால் அவனைக் கொலை செய்யுமளவிற்கு கோபம் வந்தது. விம்மலுக்கும் குமுறலுக்குமிடையே சுமதி நடந்த விடயத்தைச் சொன்னாள். 

எட்டு வயதுப் பையனோ உடைந்த கையால் வழியும் இரத்தத் தைப் பார்த்துப் பயந்து சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தான். எமேர் ஜென்சி டிப்பார்ட்மென்டில் மணிக்கணக்காகக் காத்திருப்போர் தொகை யுடன் இவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். 

தனபால் மாமா தனது மருமகனின் நடத்தை குறித்து மிகவும் வருத்தப்பட்டார். எட்டு வயதில் இந்தக் குழந்தை ஏன் இந்தக் கொடுமை களைச் சந்திக்கிறது? குடும்பம் என்பதன் அர்த்தம் என்ன. “சின்னப் பையன். இந்த வயதில் இந்தக் கஷ்டமெல்லாம் படவேணுமா?” அவர் பெருமூச்சு விட்டார். அன்பும் ஆதரவும் கொடுக்க வேண்டிய குடும்பங் ‘களில் எத்தனை குழந்தைகள் இப்படிக்கஷ்டப்படுகிறார்கள்? தந்தையன் பைத் தன் பதின்மூன்று வயதிலிருந்து இழந்தவன் ரவி. அந்த அன்பிற்கு ஏங்கியவன். பதின் மூன்று வயதிலேயே தன் தம்பிகள், தங்கைகளுக்குக் ‘குடும்பத் தலைவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டவன். 

ஒருத்தர் மாறி ஒருத்தராக குடும்பத்தில் தம்பிகள் அழகேசன், கண்ணன், சங்கீதா இறந்தபின் தமக்கை சுமதி நன்றாக வாழ வேண்டு மென்று பிரயாசைப்பட்டவன். 

லண்டன் மாப்பிள்ளைக்காக பட்ட கடனை அடைக்க எவ்வளவோ பாடுபட்டவன். அவன்கண்முன்னால் இந்தக் குழந்தைகள் படும் பாட்டை அவனால் சகிக்க முடியவில்லை. 

சுமதியின் மகன் சிவத்தை வார்ட்டில் அட்மிட் பண்ணினார்கள். சுமதியின் கண்கள் வீங்கியிருந்தன. “அடிபட்டு அழுது வீங்கும் கண் களுடன் எத்தனை பெண்கள் இந்த உலகத்தில் நடைப் பிணங்களாக வாழ்கிறார்கள். ” மெலனி பெருமூச்சு விட்டாள். 

சுமதியின் மகள் தூங்கி வழிந்து கொண்டிருந்தாள்.சுமதி அந்தச் சின்ன மகளுடன் வார்டில் நிற்க முடியாது. பாதுகாப்பு என்று மாலையிட்ட கணவன் அருகில் இல்லை. தம்பியின் கோபம் அவளுக்குப் புரிந்தது. சுமதி தன் வாழ்க்கை குறித்து மிக மிக வேதனைப்பட்டாள். தன பால் மாமா தனியாக வாழ்பவர்., அவர் அந்தக் குழந்தையைக் கொண்டு போகமுடியாது. பெண் குழந்தை ரேணுகா தனக்கு முன்னால் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து சோர்ந்து போயிருந்தாள். ரவி தன் தூங்கி வழியும் மருமகளைத் தூக்கிக் கொண்டான். “அக்கா நீ ஹாஸ்பிட்டலில் நிற்பது அவசியம். நான் மெலனியுடன் வீட்ட கொண்டு போறேன், ரேணுகா பாவம் அவள் தூக்கமில்லாமல் கஷ்டப்படுகிறாள்.” 

“நீ நாளைக்கு வேலைக்குப் போகவேணுமே,” தம்பியின் வேலை யில் உள்ள அக்கறையுடன் சொன்னாள் சுமதி. 

“ஒன்றிரண்டு நாள் வேலைக்குப் போகாவிட்டால் எனக் கொன்றும் ஆகிவிடாது, எனது மேலதிகாரி மெலனி, அவளே என்னுடனிருக்கிறாள்”. 

அவன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்தான். மெலனி பின்தொடர்ந்தாள். 

காலை நான்கு மணிக்குச் சுமதியின் வீட்டுக்கு வந்தான். மெலனி சுமதியின் சமயலறையில் ரவிக்குக் காப்பி போட்டுக் கொடுத்தாள். மெலனியின் அன்பு அவனை நெகிழப் பண்ணியது. மெலனி அவன் தங்கை சங்கீதாவை ஞாபகப்படுத்தினாள். இப்படியொரு காலை நேரத்திற்தான் சங்கீதா வீட்டை விட்டுப் போனாள். சமுதாய விடு லைக்குத் தன்னைத் தியாகம் செய்யப் புறப்பட்டாள். 

“அண்ணா, நான் எடுக்கும் இந்த முடிவு உனக்கு ஆச்சரியம் தரும். ஆனால் உலகத்தில் பிறந்த எல்லோருக்கும் ஒவ்வொரு கடமையுண்டு என்று நினைக்கிறேன். இந்த நாட்டில் கெளரவ முள்ள தமிழ் இனமாக வாழவேண்டுமென்றால் எத்தனையோ தியாகங்கள் செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. போன கிழமை சிங்கள ராணுவத்தால் கொடுமை செய்யப்பட்டு இறந்த கோணேஸ்வரி போன்றவர்களின் மரணம் விரயமாகக் கூடாது. அவர்கள் ஒரு கோணேஸ்வரியை இந்த ஊரிலிருந்து அழிக்கலாம். ஆனால் ஓராயிரம் சங்கீதா போன்ற பெண்கள் தங்கள் உயிரைக் கொடுத்தென்றாலும் எங்கள் இன விடுதலைக்குப் போராடுவார்கள். 

எனது எதிர்காலத்தை எப்படி எல்லாமோகற்பனை செய்திருப்பாய். நான் எதிர்காலத்தை என் இனத்தின் விடுதலைக்கு அர்ப்பணிக்கிறேன். இலங்கை ராணுவத்தினருக்கு எங்கள் பெண்கள் அவர்களின் காமப் பசிக்கு இரையாவதைத் தடுக்க சங்கீதா போன்றவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்யத்தான் வேண்டும். அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். கோணேஸ்வரிபோன்ற பெண்களின் உடல் புதைக்கப்படலாம். அந்த விதைப்பில் எத்தனையோ சங்கீதா போன்ற பெண்கள் இலங்கை சிங்கள ராணுவத்தினருக்கு மரண கீதம் பாடப் பிறப்பார்கள்… இது சங்கீதாவின் கடிதம். 

ரவி நாட்டுக்குத் தன்னையிழந்த சங்கீதாவை யோசித்தான். இப் போது தன் வீட்டாரின் திருப்திக்காக செந்திலை மணந்த தமக்கை சுமதியை யோசித்தான். 

ஆண்மகன் என்றும் பாராமல் அழுதான். 

காப்பி போட்டுக் கொண்டு வந்த மெலனி தன் சினேகிதனை அணைத்துக் கொண்டாள். அந்த அணைப்பு அவன் அழுகையை இன்னும் கூட்டியது. 

அம்மாவைத் தவிர இப்படிப் பாசத்துடன் அவனை யாரும் அணைத்ததில்லை. தம்பிகளின் மரணம், தங்கையின் மரணம், தகப் பனின் மரணம் என்று எத்தனையோ சொல்ல முடியாத துயர்களை அனுபவித்தபின் அம்மாயாரையும் அணைப்பது கிடையாது. தன்னைத் தானே ஒடுக்கிக் கொண்டாள். ஒதுங்கிக் கொண்டாள். 

ரவி மெலனியின் அணைப்பில் அழுதான். தன் தங்கை சங்கீதா பற்றிச் சொன்னான். தன் கண்களுக்கு முன்னால் சுடப்பட்டு முளை சிதறியிறந்த தகப்பன்பற்றிச்சொன்னான். தமிழர்கள் இலங்கையிற் பட்ட கொடுமைகளைச் சொன்னான். 

எத்தனையோ ஆசைகளுடன் படிக்கச் சென்று இந்திய ராணுவத் தினரால் சுடப்பட்ட அழகேசன் பற்றிச் சொன்னான். இலங்கை ராணுவத் தினரால் கைது செய்யப்பட்டு தொலைந்து போனதாகச் சொல்லப்பட்ட – ஆனால் உயிரோடு புதைக்கப்பட்ட தன் அருமைத் தம்பி கண்ணன் பற்றிச் சொன்னான். அடக்கி வைத்திருந்த எத்தனையோ துன்பக் கதைகளைத் தன் மனம் திறந்து மெலனியிடம் கொட்டினான். அழுகை மடை திறந்து வந்தது. இத்தனை வருடங்களாக அடக்கி வைத்திருந்த அணைதிறந்து விட்டது போலிருந்தது. 

“ஒரு டாக்டராக இருந்தால் என்ன, சாதாரண கூலியாயிருந்தால் என்ன துன்பங்கள் சிலவேளை எத்தனை உறுதியான மனத்தையும் உலுக்கி விடும்….மெலனி நான் ஏன் சைக்கிரியாட்ரிஸ் ஆக ஆசைப் பட்டேன் என்று கேட்டாயே. எனது பதிலை ஒரு வார்த்தையிற் சொல்ல முடியாது.மனம் பேதலித்துப் போயிருக்கும் என் தாய் போல எத்தனை யோ தாய்கள் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் இருக்கிறார்கள்.தாய் தகப்பனையிழந்த குழந்தைகள், கணவனையிழந்த மனைவிகள், அண்ணன் தம்பியற்று வாழும் குடும்பங்கள் என்று எத்தனையோ பேர் இலங்கையிலிருக்கிறார்கள். மன வைத்தியனாக என்னால் அவர்களுக்கு ஏதும் செய்ய முடியுமென்றால் சந்தோசப் படுவேன்…. எனது துயர் மறப்பேன், உலகத்திற்குச் சேவை செய்வது எங்களுக்குச் சேவை செய்வதில்லையா?” ரவியின் அழுகை ஓய்ந்து கொண்டு வந்தது. 

“ரவி நீங்கள் ஹாஸ்பிட்டலுக்கு வரவேண்டாம். நான் மிஸ்டர் டெய்லருக்குப் பதில் சொல்கிறேன்”. மெலனி சொன்னாள். 

“என்னால் உனக்கும் டெய்லருக்கும் பிரச்சினை வரவேண்டாம் மெலனி.” 

“நான் அவரை விரும்பவில்லை என்பதை அவரால் ஏற்க முடியாமலிருக்கிறது. என்னை நீங்கள் குழப்புவதாகக் கற்பனை செய்து கொண்டு உங்களைப் பிழை பிடிக்கிறார். உண்மையில் நான் இந்த டிப்பார்ட்மென்டைப் பிரிந்து போவது நல்லது என்று நினைக்கிறேன். டெய்லர் அப்போதென்றாலாவது உண்மையை உணர்ந்து கொள்வார்.” 

“உனது பிரிவு எங்கள் பலபேரைத் துன்பப்படுத்தும்.”

“உண்மையாகவா?” மெலனி அவனையுற்றுப் பார்த்தாள்.

”நான் ரொம்பவும் வருந்துவேன், நான் சந்தித்த பெண்களில் நீ மிகவும் வித்தியாசமான பெண், உன் உறவை மதிக்கிறேன்.’ 

“அப்படியானால் உன் படிப்பு முடிய இலங்கைக்குத் திரும்பிப் போகாமல் எடின்பரோவுக்கு வாயேன்.” 

அவன் வாயடைத்துப் போய்விட்டான். தன் எதிர் காலத்தில் இவ்வளவு அக்கறை மெலனிக்கிருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. 

“ரவி என்னில் உனக்குப் பிடிப்பிருக்கா?”

மெலனியின் குரல் மிகவும் ரகசியமாகக் கேட்டது. 

மருமகளுக்குக் காலைச் சாப்பாடு செய்து கொடுப்பது புது அநுபவம். மெலனியின் அணைப்பிலிருந்தது முதல் அநுபவம். மெலனியின் அன்பு அவன் மனதை மிகவும் குழப்பிவிட்டது. 

காலையில் சித்திரா போன் பண்ணினாள், தகப்பன் போன் பண்ணிச் சொன்னதாகச் சொன்னாள். சித்திராவுக்காகத் தான் மெலனியுடன் நிற்பதாகச் சொன்னான். சித்திரா அதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை. மாமா ராமநாதன் போன் பண்ணினார். தான் அமெரிக்காவுக்கு ஒரு கொன்பரன்ஸ் விடயமாகப் போவதால் தன்னால் வரமுடியாதென்றார். சுமதி படும் பாட்டுக்கு மிக மிக மனவருத்தப்பட்டார். 

“செந்தில் கையை முறித்துவிட்டான். சுமதி ஹாஸ்பிட்டலில் நிற்கிறாள்.அவள் வந்தவுடன்தான் செந்தில் பற்றி என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும்.” 

“என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறாய்?” ராமநாதன் தயக்கத்துடன் கேட்டார். குடும்ப ரகசியம் காப்பாற்றும் தயக்கமது. 

“செந்திலைப் பிடித்துப் போலிஸில் கொடுக்க வேண்டும்” ரவி உறுதியுடன் சொன்னான். அவன் பொறுமை எல்லை கடந்துவிட்டது. மாமாவிடமிருந்து எந்த பதிலுமில்லை. மத்திய தர மக்கள் எதையும் சமாளித்து வாழப் பழகிவிட்டார்கள். அவர் விதிவிலக்கல்ல. 

“அப்படிச் செய்வதனால் செந்தில் திருந்துவான் என்று நினைக் கிறாயா?” ராமநாதன் குரலில் நம்பிக்கையில்லை. 

“திருந்த முடியாதவர்களை திருந்தப் பண்ண எத்தனையோ வழிகள் உண்டு. நாங்கள் குடும்ப கௌரவம் பார்ப்பதனால்தான் செந்தில் போன்றவர்கள் இப்படிச் செய்கிறார்கள். மாமா, ஒரு மனிதனைத் திருத்தினால் அவன் குடும்பம் திருந்தும். குடும்பம் திருந்தினால் சமுதாயம் திருந்தும். சமுதாயம் திருந்தினால் நாடு திருந்தும். சுமதியின் மகன் செந்திலின் அடிமாடல்ல. அந்தப் பையன் நாளைய சந்ததி. அவனை அடிப்பதற்கும் உதைப்பதற்கும் தாய் தகப்பனுக்கு எந்த உரிமையு மில்லை.எங்கள் வயிற்றில் பிறந்த குற்றத்திற்காக இந்தக் குழந்தைகள் இந்தக் கஷ்டம் பட வேண்டுமா?” மருமகன் சிவத்தின் எதிர்கால நன்மைக் காக வாதாடினான் ரவி, 

“இது சுமதியின் சொந்த விடயம்.” மாமா ராமநாதனுக்கு இந்தப் பொலிஸ் விடயமெல்லாம் சரிவராது என்பது அவர் குரலிற் தெரிந்தது. 

“மாமா, அரசியல் ரீதியாக அடிவாங்கினால் அதை எதிர்க்க ஆயுதம் எடுக்கிறோம், குடும்பம் என்ற அமைப்புக்குள் எத்தனையோபெண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், குழந்தைகளின் வாழ்க்கை சின்னா பின்னமாக்கப்படுகிறது. இதெல்லாவற்றையும் முகம் கொடுக்காத எங்களுக்கு ஏன் விடுதலை வேணும்? எங்களை நாங்கள் அடிமைப் படுத்திக் கொண்டு வாழலாமே”

”நான் அமெரிக்கா போகவேண்டும், நீ செய்ய வேண்டிய விடயங்களைச் சரியாக யோசித்துச் செய்.” அவர் அவனுடன் வாதிட விரும்ப வில்லை என்று சொல்லாமற் சொன்னார். 

மாமா போன்றவர்கள் நேற்றைய மனிதர்கள், மாற்றங்களுக்குச் சரியாக முகம் கொடுக்கத் தெரியாதவர்கள். ஆகவும் கூடிப் போனால் எதையும் விதியின் தலையில் தூக்கிப் போடத் தயங்காதவர்கள். ரவி தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். 

காலையில் மெலனி சொல்லிவிட்டுப் போன விடயங்கள் ஞாபகம் வந்தன. 

எத்தனை நேர்மையான பெண் அவள்? தன் வாழ்க்கையில் மறைக்க வேண்டிய விடயங்கள் என்பதைக்கூட இவளிடம் மனம் விட்டுச் சொன்னானே. 

“ரவி, செந்திலுக்குப் பாடம் கற்பிக்காவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக அவன் இந்தக் குடும்பத்தை அழித்து விடுவான்” சுமதி குடும்பத்தைத் தெரிந்து கொண்ட சினேகிதியாக அவள் புத்தி சொன்னாள். 

ரவியின் ஆத்திரத்தையும் புரிந்து கொண்ட தோரணையில் சொன் னாள் அவள். “ரவி, உங்கள் ஆத்திரம் என்னால் புரிகிறது. குழந்தை சிவத்திற்காக நீங்கள் எடுக்கும் முடிவும் தெரிகிறது. ஆனால் பெரும் பாலான குடும்பங்களில் குடும்ப கெளரவம் என்ற பெயரில் ஆண்கள் செய்யும் கொடுமைகளைப் பெண்கள் மூடி மறைப்பதனால்தான் ஆண்மகனின் கொடுமை நீடித்துக் கொண்டு வருகிறது,ஆண்களின் கொடுமையை மிக மிக இளவயதில் அனுபவித்தவன் நான்” மெலனி மேலும் சொன்னாள். அதிகாலைப் பொழுதில் ரவி தன் மனம் விட்டுத் தன் துயரங்களைச் சொன்னது அவள் மனத்தை வருத்தியிருக்கிறது என்பது அவள் பேச்சில் தெரிந்தது. 

“ரவி, அன்று பீச்சுக்குப் போகும்போது நீ ஏன் சைக்கியாட்ரிட்டாக வந்தாய் என்று என்னைக் கேட்டாயே, அதற்கு மறுமொழி சொன்னால் நீ நம்ப மாட்டாய்” 

ரவி சோகத்துடன் சிரித்தான். “மெலனி, நான் ஒரு இலங்கைத் தமிழன். கடந்த இருபது வருடங்களாக, கொலை, குண்டு வெடி,ஆள் கடத்தல், அதிரடித்தாக்குதல்கள் பாலிய வன்முறை என்பவற்றை மிகவும் தெரிந்து கொண்டவன். உன்னைப்போல் வெள்ளைக்கார மேற்தட்டு வாழ்க்கையில் தரமாக வாழ்ந்து, படித்து பட்டம் பெறவில்லை. எனது தகப்பன் செத்தபின் வறுமை என்றால் என்னவென்று தெரிந்தது. எனது மாமனார் ராமநாதன் போட்ட பிச்சைதான் எனது படிப்பு. தனது தங்கை கமலாவின் வாழ்க்கை அழிந்து போகாமல் அவர் எடுத்த முயற்சிதான் எனது படிப்பு. அவர் குற்ற உணர்வில் – ஒரு கைங்கரியமாகச் செய்திருக் கலாம். ஆனாலும் அவர் உதவிதான் எனது பட்டப் படிப்பு. இப்படி இல்லாமை நிலைப் பற்றி உனக்கென்ன தெரியும்.’ 

இவற்றைச் சொல்லி முடிய அவன் குரல் கலங்கியிருந்தது. கண்கள் இன்னொருதரம் நீர் பனித்தது. 

மெலனி அருகில் வந்தாள். அவன் கண்ணீரைத்தன் முத்தத்தால் துடைத்து விட்டாள். அவளின் செய்கை அவனுக்குப் புதிது. அவள் முத்தம் அவன் உடம்பில் புல்லரித்தது.” மத்திய தர வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லையென்று நினைக்கிறீர்களா?”மெலனி சாந்தமாகக் கேட்டாள். 

“பிரச்சினையில்லாதவர் மனிதரில்லை. ஆனால் எனது அனுப வங்கள், வாழ்க்கை முறை, வாழ்ந்த அரசியல் சூழ்நிலை பொல்லாதது என்றுதான் சொல்ல வந்தேன்.” 

“ஏழுவயதுப் பெண் தனது சித்தப்பனால் பாலியற் கொடுமைக்கு ஆளாவது எந்தச் சமுதாயத்திலும் நடக்கும். ஆண்களின் கொடுமைக்கு இனம்,மதம்,நாடு,மொழி என்ற எல்லை கிடையாது.” 

இப்போது மெலனியின் குரல் தடுமாறியது. 

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். பக்கத்திலுள்ள ரெயில்வே ஸ்டேசனில் காலையில் ஆரம்பிக்கும் ஆரவாரம் கேட்டது. ரெயில் ஒன்று வந்து நின்றது. 

ரவி நிமிர்ந்து பார்த்தான். 

“உனது தாய்,ஒன்று தொடர்ந்து ஒன்றாக நான்கு உயிர்களைப் பறிகொடுத்து மனநிலை தடுமாறினாள். என் தாய் தன் ஒரே ஒரு மகளின் குழந்தைத்தனம், எதிர்காலம் என்பன ஒரு சில நிமிடங்களில் பறிக்கப் பட்டதையறிந்து துடித்தாள். மனநோயாளியானாள். உலகத்திற்குத் தெரிந்தால் தன் மகளின் எதிர்காலம் பாழாகுமே என்பதால் தனக்குள் நினைத்து நினைத்து அதிர்ந்து போனாள். அவள் போலத் தாய்கள் எத்தனைபேர் உலகத்திலிருக்கிறார்கள். ஏழு வயதிலேயே கறைபடிந்த பெண்கள் எத்தனை பேர்? இவர்களுக்கு என்னால் செய்ய முடிந்ததைச் செய்யத்தான் நான் இந்தப் படிப்பைத் தொடர்ந்தேன்” மெலனி நிமிர்ந்து நின்று சொன்னாள். குரலில் உறுதி முகத்தில் ஆவேசம். ரவி மெலனியை ஏறிட்டு நோக்கினான். அந்த ஏழு வயதுப் பெண்? 

“என்ன பார்க்கிறாய். இப்போது என்னைப் பார்க்க வித்தியாசமாக இருக்கிறதா?” மெலனியின் குரலில் ஆத்திரம். தன்னை உலகமறியா வயதில் கொடுமைப்படுத்தியவனில் உள்ள ஆத்திரம், அந்த அதிகாலையில் வெடித்தது. பற்களை இறுகக் கடித்துக் கொண்டாள். உதடு நடுங்கியது. 

“மெலனி… மெலனி,ஐயம் ஸாரி” 

ரவி தவித்துப் போனான். 

“ஸாரி சொல்லுமளவுக்கு நான் ஒன்றும் உடைந்து போகவில்லை. எனக்கு நடந்த கொடுமையின் பிரதிபலிப்பால் ஒவ்வொரு நாளும் துடித்தேன். யாரும் ஆண்கள் நெருங்கி வந்தால் ஆத்திரத்தில் ஓடி விடுகிறேன். டெய்லரின் நெருக்கம் எரிச்சல் வருகிறது. அவர் என் சித்தப்பாவை ஞாபகப்படுத்துகிறார். அவருக்கு நான் என் இறந்த கால வாழ்க்கையைச் சொல்ல வேண்டுமென்று எனக்கு ஒரு நியதியுமில்லை. உன்னை எனக்குப் பிடிக்காது என்று டெய்லரிடம் சொல்லவும் விருப்பமில்லை.” 

“பாவம் மெலனி,” இப்படி நினைப்பதை விட ரவியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வானம் பொத்துக் கொண்டு மழையைக் கொட்டியதுபோல் தன் உள்ளக் கிடக்கைகளைக் கொட்டி விட்டு அவள் போய்விட்டாள். 

சோர்ந்து துவண்டுபோய் சுமதி வந்தாள். மகனின் உடைந்த கைக்குப் பிளாஸ்டர் போட்டிருப்பதாகவும், ஒன்றிரண்டு நாட்களில் வீட்டுக்கு வரலாம் என்று, டாக்டர்கள் சொன்னதாகச் சொன்னாள். இரவெல்லாம் ஆஸ்பத்திரியில் நின்ற சோர்வு அவள் முகத்தில் தெரிந்தது. 

“இதைப்பற்றிப் போலீசுக்குச் சொல்லவில்லையா?” ரவியின் குரலில் கடுமை. தமக்கையை ஏறிட்டுப் பார்த்தான். ”எதைப்பற்றி?’ சுமதியின் கேள்வி குழந்தைத்தனமாகப்பட்டது. “எதைப்பற்றியா? உன் புருஷன் உன் மகனின் கையை ஒடித்த தைப் போலீசுக்குச் சொல்லவில்லையா என்று கேட்டேன்.” 

அவள் மறுமொழி சொல்லாமல் அவனைப் பார்த்தாள். 

“கல் என்றாலும் கணவன் புல் என்றாலும் புருஷன் என்று புராணம் பாடப் போகிறாயா? கணவன்மாருக்கு மனைவியும் குழந்தைகளும் அடிமையில்லை. கணவனை விட்டால் வேறு வழியில்லாத ஏழைகள் இப்படி உருப்படியில்லாத வசனங்களைப் பேசிக் கொண்டு உதை வாங்கிக் கொண்டு வாழ்கிறார்கள். உனது மகனின் எதிர்காலத்தைப் பார்? அடியும் உதையும் வாங்கிய குழந்தை குடிகாரனாக மாற நிறைய வாய்ப் புண்டு. குழந்தைகள் கண்ணாடிகள். தாய் தகப்பனின்நடத்தையின் பிரதி பிம்பங்கள். உனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பார். நீ பூட்டிய அறைக்குள் அடி வாங்கிக் கொண்டு அந்தக் காயங்களை மறைக்கக் காஞ்சிபுரம் சேலையைக் கட்டிக் கொண்டு ஊர்வலம் போ. ஆனால் உன் குழந்தைகளின் எதிர்காலத்தை யோசித்துப் பார்” ரவி வெடித்தான். எரிமலையாய் அவன் வசனங்கள் பறந்தன. 

சுமதி அழுது கொண்டிருந்தாள். அவளிடம் பேசிப் பிரயோசன மில்லை என்று தெரிந்தது.ரவி வெளியேறிவிட்டான். ரெயிலுக்குப் போகும் வழியில் தனபால் மாமா வந்து கொண்டிருந்தார். தனது குடும்பம் போல் சுமதியின் குடும்பத்தைப் பார்க்கும் அவரின் இரக்க குணம் ரவியின் மனத்தைத் தொட்டது. 

வேரறுந்த கிளைகளாக எத்தனையோ இளம் தம்பதிகள் தனியே வாழும் போது எத்தனையோ பிரச்சனைகள் வரும். அவற்றையெல்லாம் நிவர்த்தி செய்ய, புத்தி சொல்லித் திருத்தப் பெரியோர்கள் இல்லாவிட்டால் வெளிநாட்டில் வாழும் இளம் தமிழர் என்ன செய்வார்கள்? 

தனபால் மாமாவுடன் இன்னொருதரம் சுமதி வீட்டுக்குப் போய் சுமதியின் நித்திரையைக் குழப்பத் தயாரில்லை. 

ஏதாவது கோப்பி கபேக்கு மாமாவைக் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று யோசித்தான். 

“என்ன இன்னைக்கு வேலைக்குப் போகல்லயா?” மாமா உண்மை யான அனுதாபத் தோரணையிற் கேட்டார். 

“சின்ன மருமகளைப் பார்க்க யாரும் இருக்கவில்லை மெலனியும் நானும் வந்தோம். மெலனிகாலையில் வேலைக்குப் போய்விட்டாள்” 

ஹாஸ்பிட்டலிலிருந்து மெலனியுடன் அவன் வந்ததை அவர் கவனித்தார் என்ற படியால் அவராக மெலனி பற்றிக் கேள்வி கேட்க முதல் ரவியாகச் சொன்னான். 

தனபால் மாமாதன்னைப் பற்றி எந்த விதமான தப்பபிப்பிராயமும் வைத்திருப்பதை அவன் விரும்பவில்லை. தகப்பனின் சினேகிதன் அவர். ரவியின் குடும்பத்தில் மிகவும் அக்கறை கொண்டவர் உண்மைகளைப் பேசுபவர், புரிந்துகொள்பவர். 

வெளியில் மழைபெய்து ஓய்ந்திருந்தது. 

மாமாவின் முகத்திலும் நித்திரைக் களைப்பு. நல்ல தூக்கமில்லாமல் இங்கும் அங்கும் திரிகிறார் என்று தெரிந்தது. 

எப்போதும்போல் கையில் பத்திரிகையிருந்தது. அரசியல் நிகழ்ச்சி நிரலைப் படித்து விட்டு அங்கலாய்ப்பார். 

“காப்பி நன்றாக இருக்கிறது.” ரவியின் முகத்தில் படிந்திருந்த கோபத்தை மாற்ற ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொல்கிறார் என்று தெரிந்தது. 

“மாமா அடிக்கடி இந்தியாவுக்குப் போவதால் இந்தியத் தமிழ் வாடையடிக்கிறது.” ரவி சொன்னான். 

“இந்தியாவில் எங்கப்பா சுத்தத் தமிழ் இருக்கு? ஆங்கில மோகத் தால பொறுக்கி இங்கிலீஸ் பேசுவாங்க, தமிழ் பேசறதைக் கவுரவக் குறைவாக நினைக்கிறாங்க. தமிழ் படங்களைப் பார், ரெட், யூத், தோஸ்து, பிரண்ட்ஸ், நியூ என்றெல்லாம் பேர் வைக்கிறார்கள். இப்ப தமிழ் உணர்வு உள்ள எல்லாரையும் உள்ளே தள்ளிப்போடுகிறார்கள்.’ மாமா பெருமூச்சுடன் சொன்னார். 

“இலங்கைத் தமிழரின் அமைதிக்காக மேற்கு நாட்டு வெள்ளை யர்கள் இவ்வளவு சிரத்தை எடுக்கிறார்கள். ஆனா, அண்டை நாடான தமிழகம் ஏன் இப்படி எதிர்த்துக் கொதிக்கிறதோ புரியல்ல”. 

ரவி மாமாவிடம் கேட்டான். 

“ரவி, தமிழ் நாட்டுத் தமிழ் மக்களின் உணர்ச்சிக்கும், ஈழத் தமிழர் களுக்கு அமைதி கிடைக்க வேண்டுமென்ற சாதாரண தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கும், இன்றைக்கு ஆட்சியிலிருக்கும் தலைமையின் நடவடிக்கைக்கும் எந்தக் தொடர்பும் கிடையாது. இதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கெதிரான ஒரு சிலரின் பொறாமையின் எதிரொலி”. மாமா தெளிவாகச் சொன்னார். 

மாமா ஒவ்வொரு வருடமும் இந்தியா போய் வருகிறவர். அவர் குடும்பம் இந்தியாவில் வாழ்கிறது. 

“இந்தியக் கலாச்சாரத்தில் தன் குழந்தைகள் வளரவேண்டுமென்று அவர் நினைக்கிறார். இந்தியக் கலாச்சாரம் என்றால் என்னவென்று கேள்வி கேட்கும் நிலையும் வரலாம். அமெரிக்க ஆதிக்கம் கொக்கோ கோலாவிலிருந்து மக்டோனால்ட்ஸ் மலிவுச் சாப்பாட்டுக் கடை வரைப் பரவுகிறது. மத்திய தரத் தமிழர்களின் எதிர்காலம் அமெரிக்காவை நோக்கிக் கற்பனை செய்கிறது.” மாமா அங்கலாய்ப்புடன் சொன்னார். 

“மாமா கலாச்சாரம் எப்போதும் மாறிக்கொண்டும் தெளிவு பட்டுக் கொண்டுமிருக்கும். இந்திய, இலங்கை, இங்கிலீஸ் கலாச்சாரம் என்று பிரித்து வைக்கப் பெரிதாக ஒன்றுமில்லை. எத்தனையோ பரிமாணங் களால் நிரம்பியது கலாச்சாரம்”. 

மாமா சிரித்தார். 

”ஏன் சிரிக்கிறீர்கள்?” ரவி கடைக்காரன் கொண்டு வந்த கோப்பியை உறிஞ்சியபடி கேட்டான். 

“இந்தியத் தமிழ் எழுத்தாளர் ஒருத்தர், தான் தமிழ்க் கலாச்சாரத் திற்காக எழுதுகிறேன் என்று தம்பட்டம் அடிக்கிறார். அவரின் தலைக் கனம் பற்றிச் சிரிக்கிறேன்”. 

“இதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை மாமா, அந்த எழுத்தாளனுக்குக் கலாச்சாரத்தின் ஆணிவேர்கள் என்று அறிஞர்கள் காட்டும் சில அத்தியா வசியங்களின் பரிமாணங்கள் தெரியாதவர் என்று நினைக்கிறேன்”. 

ரவி மாமாவை அரசியல் பேச்சிலிருந்து திசை திருப்ப யோசித்தான். 

அத்தியாயம் – 8

“சுமதியின் கணவரின் செய்கைபற்றி போலீசாருக்கு அறிவிக்கலா மென்று யோசிக்கிறேன், ரவி மாமாவின் முகத்தின் உணர்ச்சிகளை உற்று நோக்கியபடி கேட்டான். 

“ரவி உனக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் என்னென்ன நடக்கிறது என்று தெரியாது. நீ போலீஸாருக்குப் போய் உனது மருமகனின் கையை உனது மைத்துனர் ஒடித்து விட்டார் என்று புகார் கொடுக்கலாம். உனது தமக்கையும் மருமகனும் உனது புகாருக்கு உதவியாக இருப்பார்கள் என்று என்ன நிச்சயம். எங்கள் தமிழ்ப் பெண்கள்தாம் கணவன்கையால் இறப்பது புண்ணியம் என்று முட்டாள்தனமாக நினைக்குமளவுக்கு எங்கள் தமிழ்க்கலாச்சாரம் போதித்து வைத்திருக்கிறது”. 

“மாமா, சுமதி செந்திலுடன் வாழ்வதால் என்ன பிரயோசனம்?’ சுமதியின் உடன் பிறந்த தம்பி என்ற ஸ்தானத்திலிருந்து அவன் கேட்டான். 

“செந்திலைப் பிரிந்து போவதால் என்னத்தைக்காணப் போகிறா?” அப்படி மாமா கேட்டது ரவிக்கு ஆச்சரியமாக இருந்தது. மாமா பெண் களின் விடுதலையை ஆதரிப்பவர். 

“எங்கள் இந்து சமயத்தில் உள்ள எத்தனையோ தத்துவங்கள் பெண்கள் ஆண்களைவிடச் சக்தி வாய்ந்தவர்கள் என்று சொன்னாலும், நடைமுறையில் பெண்கள் ஆண்களின் சுகத்திற்கும் தேவைக்கும் பாவிக்கப்படும் வெறும் பண்டங்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள். சுமதிக்குத் தனியாகப் போய் வாழும் உரிமையிருக்கிறது. இங்கிலாந்தில் தனியாக வாழும் பெண்களுக்கு உதவி செய்ய எத்தனையோ ஸ்தாபனங்கள் இருக்கின்றன. ஆனால் சுமதி அதை முழுமனத்துடன் ஏற்பாளா?, தன்னைக் கணவனிடமிருந்து விலகிப் போக நீதான் காரணம் என்று திட்டிக் கொண்டிருக்க மாட்டாள் என்று என்ன நிச்சயம்?” மாமா கேட்டார். 

“வாழ்க்கையில் வரும் தோல்விகள்தான் பெரிய படிப்பினை. இவ்வளவு காலமும் செந்திலுடன் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து சுமதி எவ்வளவோ படித்திருப்பாள். அந்தப் படிப்பினைகளை எதிர்காலத் திற்குத் தேவையானால் பாவிக்கட்டும்.” 

“ரவி, நீ நினைப்பதும் சொல்வதும் மிகவும் உண்மையான விஷயங்கள், யதார்த்தம் அப்படியல்ல … உனது தமக்கையின் வாழ்க் கையில் அத்தனை அக்கறை என்றால் ஏன் நீ லண்டனிலேயே தங்கக் கூடாது. உனது வாழ்க்கையில் தத்துவங்களைத் திடமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாய், அதை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுப்பாயா?” சாப்பிட்டுக் கொண்டிருந்த கேக் ரவியின் தொண்டையில் அடைத்து விட்டது. “அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற நப்பாசையில் ஓடி வந்து இங்கே என்ன நிம்மதியைக் கண்டோம்.” என்று பெருமூச்சு விடுகிற மாமாவா இப்படிச் சொல்கிறார். 

“இந்த வெள்ளைக்காரர் அகதிகளாய் வருபவர்களால் தங்கள் கலாச்சாரம் அழிவதாக ஒரு பக்கம் ஓலம் வைக்கிறார்கள். அடுத்த பக்கம் அவர்கள் செய்யாத தொட்டாட்டு வேலைகளைச் செய்ய அகதிகள் தேவை. லண்டனில் அரை குறை அடிமைகளாக வாழ அகதிகள் தேவை. அப்படி நாங்களும் வாழ்ந்து பழகிவிட்டோம். அரசியல் என்ற பெயரில் பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகளில் தர்மம் அழிந்து அதர்மம் ஆட்சியிலிருக்கிறது. கொள்ளையடிக்கப்போரும் மனநிலைக் குழப்பம் வந்தவர்களும் மக்கள் பிரதிநிதிகளாக ஆட்சியிலிருக்கிறார்கள். ஏதோ பேருக்கு என்றாலும் ஜனநாயகம் இங்கேயுண்டு. பிழைத்துக் கொள்ள லாம். படிக்கலாம். பணம் உழைக்கலாம் ஏன் நீ தேவை யில்லாமல் திரும்பிப் போகப் போகிறாய்”. 

மாமாவின் மேற்கண்ட கேள்விக்கு ரவியால் பதில் சொல்ல முடிய வில்லை. மெலனியும் இதே கேள்வியைத்தான் கேட்டாள். “என்ன ரவி யோசிக்கிறாய், சந்திரிகாவும்,ரணிலும் யார் மக்களின் நம்பிக்கையைக் கூடப்பெற்றிருக்கிறார்கள் என்பதற்காக எத்தனையோ பலப்பரீட்சைகள் செய்கிறார்கள். இலங்கைத் தமிழரின் வாழ்வு எப்போதும் இவர்கள் கையில் பகடைக்காய்தான். இலங்கைத் தமிழருக்கு நிரந்தரமான அமைதி வாழ்க்கை இப்போது கிடைக்கும் என்று நான் நம்பவில்லை’ 

“மாமாதயவு செய்து அவநம்பிக்கையுடன் பேசாதீர்கள்.தமிழர்கள் இலங்கையில் அழிந்ததுபோதும், இழந்ததுபோதும், வசதியுள்ளவர் களும், வாழத் தெரிந்தவர்களும், படித்த பலரும் நாட்டை விட்டு ஓடி விட்டார்கள். இலங்கைத் தமிழர் எல்லோரும் நாட்டை விட்டு ஓடமுடி யாது. அவர்கள் அங்கே தான் வாழப் போகிறார்கள். அவர்களுக்குச் சமாதானம் தேவை.” 

“ரவி, மூன்றாம் நாடுகளில் அரசியல் ஒரு வியாபாரம், அங்கு யாரையும் வாங்கலாம், எந்தக் கொள்கையையும் விற்கலாம். இதற்கு எதிராக ஒன்றுபடாத விதமாகச் சாதாரண மக்களை சாதி, மதம், இனம், மொழிரீதியாக ஆளும் வர்க்கம் பிரித்து வைத்திருக்கிறது. உண்மையான ஜனநாயகத்திற்கு மதிப்பிருந்தால் இலங்கைத் தமிழருக்கு இந்தக் கதி வந்திருக்காது.இந்த நாட்டில் இந்தக் கொடுமைகள் நடக்காது. தனிமனித வழிபாடு, தான் பிழைத்தாற் போதும் என்ற சுயநலம், குடும்பத்திற்குச் சொத்துச் சேர்ப்பதற்குப் பதவியை உபயோகிக்கும் அரசியல் வாதிகள் என்போரால் எங்கள் நாடுகளில் அரசியல் நாற்றம் எடுக்கிறது. இதனால் சாதாரண மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.நீ ஒரு சாதாரணடாக்டர் உன்னையும் இதெல்லாம் பாதிக்கும். இங்கிலாந்தில் உனக்கு முறையான மைத்துனி சித்திராவுக்கும் உனக்குப் பின்னால் சுற்றும் மெலனியும் இருக்கிறார்கள். ஒருத்தியைச் செய். லண்டனில் செட்டில் பண்ணு.’ ரவிக்கு மாமா சொல்வது ஒரு விதத்தில் ஆச்சரியமாக இருக்கவில்லை. மாமா மற்றவர்கள் நினைப்பது போலத்தான் நினைக்கிறார். வயது வந்த ஆண்மகன் ஒரு பெண்ணுடன் பழகினால் அது வெறும் சினேகிதமாக இருக்க முடியாது என்பதை இவரும் நம்புகிறாரா? இலங்கையில் பெண் களின் நிலை போராட்டத்தில் சம பங்கு எடுக்கப் பண்ணியிருக்கிறது. எத்தனையோ மாற்றங்கள் நடக்கிறது. “மாமா உங்கள் கணிப்பை வேறு விதத்தில் பார்த்தேன். சித்திரா எனது மைத்துனி, மெலனி எனது மேலதிகாரி, இவைகளுக்கப்பால் இவர்களுடன் எனக்கு எந்த உறவும் கிடையாது.’ 

“வாழ்க்கையின் தேவைகள் சிலவேளை உறவுகளை நியமிக் கின்றன.” அவர் இப்படிச் சொன்னதும் அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். 

தனபால் மாமா எழுந்தார். ரவிக்கு இந்த விஷயம் பற்றிப் பேசப் பிடிக்கவில்லை என்று முகத்தில் தெரிந்தது. 

“கல்யாணம், குழந்தைகள், உறவுகள் என்பன வாழ்க் கையின் நியதிகள். மனிதர்கள் சாதாரண ஆசைகளினால் உந்தப் படுபவர்கள். நீ ஒரு சைக்கியாட்ரிஸ்ட், சாதாரண மனித தேவைகள் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. உடை, உணவு, இருக்க இடம், பகிர்ந்து கொள்ள ஒரு பற்றுத் தேடாதவன் சாதாரண மனிதனுக்கு அப்பாற்பட்டவன். அந்தத் தேடல்கள் வரும்போது உனக்கு முன்னால் சித்திராவும், மெலனியும் இருக்கிறார்கள்.சுமதிக்காக நீ லண்டனில் வாழ வேண்டும். இப்போது இலங்கைக்குப் போய் இன்னுமொரு யுத்த சூழ்நிலையில் ஏன் நீ அகப்படவேணும்?” 

எத்தனை கேள்விகள்? தனபால் மாமா போய் விட்டார். ரவி ஸ்தம்பித்துப் போய் ‘நின்றான்’. லண்டனில் நான் தங்கா விட்டால் என் எதிர்காலம் பாதிக்கப்படுமா? அவன் யோசித்தான். 


சித்திரா தன் சினேகிதி ஜேனைப் பரிதாபத்துடன் பார்த்தாள். ஜேனின் கர்ப்பம் தெரிந்தவுடன் டேவிட்டும் ஜேனும் அடிக்கடி தர்க்கப் பட்டுக் கொண்டார்கள். 

ஒரு சில வாரங்களுக்கு முன் உயிரும் உடலுமாயிருந்த டேவிட்டும் இப்போது எடுத்ததெற்கெல்லாம் தர்க்கம் செய்து கொள்வது அவர்கள் ஒருத்தருக்கொருவர் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பதைக் காட்டியது. 

கர்ப்பப்பையில் இப்போது தான் அந்தச் சிசு இடம் பிடித்திருக்கும். அதற்கு முதலே கல்லறை கட்டச் சொல்கிறான் டேவிட். 

எங்களுக்குப் பிள்ளைகள் தேவையில்லை என்று சொன்னதை மீறி ஜேன் கர்ப்பமாயிருப்பது தனக்குச் செய்த துரோகம் என்று டேவிட் நினைக்கிறான். ஜேன் ஆத்திரத்துடனும் அதே நேரம் மிக மிகத் துயரத் துடனும் சித்திராவுக்குச் சொன்னாள். 

சித்திரா ஜேனுக்குத் தேவையான ஆறுதல்கள் சொன்னாலும் ஜேனின் வயிற்றில் வளரும் சிசுபற்றித்தான் அதிகம் யோசித்தாள். 

“சித்திரா, உனக்கு இந்த நிலை வந்தால் என்ன செய்வாய்?’ ஜேனின் கேள்வி சித்திராவைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. 

நாராயணனின் மார்பில் முகம் புதைத்து எதிர்காலம் பற்றிக் கனவு கண்டதை அவள் மறக்கத் துடித்த காலங்கள் உண்டு. 

அவன் முகம் திரும்பிய பக்கமெல்லாம் தனக்குத் தெரிவதாகப் பிரமைப்பட்ட காலமெல்லாம் கனவாகிப் போய்விட்டது. முதற்குழந்தை ஆணாக பிறந்தால் என்ன பெயர் வைப்பது? பெண்ணாகப் பிறந்தால் என்ன பெயர் வைப்பது என்று சிந்தித்ததெல்லாம் நேற்றைய மழை. 

“எனக்கு இந்த நிலை வந்தால்…” சித்திரா யோசித்தாள். கல்யாண மில்லாமல் தாய்மையடைந்த சொந்தக்காரர் யாரையும் அவளுக்குத் தெரியாது. சினேகிதிகளில் ஜேன் ஒருத்திதான் கஷ்டப்படுகிறாள். திலகவதி தன் மகள் சித்திரா கல்யாணத்திற்கு முன் கர்ப்பம் தரிப்பதை ஒருநாளும் விரும்பமாட்டாள். 

சித்திராவும் தன்னை அந்த நிலையில் வைத்துப் பார்க்க விரும்ப வில்லை.நாராயணனிடமிருந்த உறவை மறக்க முடியாது. அதற்காக அவள் நடந்துபோன விடயங்களால் மன ஊனமும் அடையவில்லை. நாராயணனின் தொடர்பு மூலம் குழந்தை வந்திருந்து அவள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப்பாள்? “ஜோர்ஜ் பிள்ளைகளில் ஆசைப்படுவாரு,” ஜேன் இன்னொரு கேள்வியைக் கேட்டாள். “பெரும்பாலான மனிதர்கள் தங்கள் வம்ச விருத்திக்கு, குடும்ப வளர்ச்சிக்குக் குழந்தைகளை விரும்புவார்கள். ஜோர்ஜ் பிள்ளைகளில் ஆசைப்படுவான்.” சித்திராதயக்கமின்றிச் சொன்னாள். 

“எனக்குச் சகோதரர் சகோதரிகள் கிடையாது. நான் ஒரு அநாதை. என்னைத் தங்கள் வளர்ப்புக் குழந்தையாய் வளர்த்தவர்களுக்கு என் னைத்தவிர யாரும் இல்லை. உனது அன்பு நான் எப்போதும் அனுபவிக் காத அன்பு. உனது அன்பு என்றைக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.’ 

இப்படித்தான் ஜோர்ஜ் சொன்னான். 

சித்திராவின் நினைவு நாராயணனிலிருந்து ஜோர்ஜில் தாவியது. 

”நன்றி நாராயணன் … நீ என்னை மறந்து விட்டது அல்லது மறுத்து விட்டதற்கு நன்றி. அந்த நிலை வந்திராவிட்டால் இன்று ஜோர்ஜைச் சந்தித்திருக்க மாட்டேன். ஒரு கதவு சாத்தப்பட்டால் இன்னொரு கதவு திறக்கப்படும் என்பது நல்ல தத்துவம்தான். திறக்கப்பட்ட கதவும் இருட்டறையைக் காட்டாமல் இருந்தால் நல்லது.”

“என்ன நான் ஏதோ கேட்கிறேன். பதில் சொல்ல மாட்டேன் என்கிறாய்?” ஜேன் தன் சினேகிதியைக் கேட்டாள். 

கனவு உலகத்திலிருந்து திரும்பி வந்தாள் சித்திரா. ஜேன் தன்னைக் கேள்விகேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று தெரியும். ஆண்களின் செயல்களைப் பற்றித்தான் ஜேன் கேட்பாள். ஆங்கிலப் பெண், அந்தக் கலாச்சாரத்திலுள்ள ‘சுதந்திரம்’ என்ற வாழ்க்கையமைப்பில் தங்கள் எதிர் பார்ப்புகள், சந்தோசங்களைச் சிறை வைத்துத் திண்டாடும் ஜேன் போன்ற பலரை சித்திரா சந்தித்திருக்கிறாள். 

பத்து வயதுப் பெண்ணாகக் கொழும்பிலிருந்து ஓடி வந்தபோது அவளின் இறந்தகால நினைவுகள் ஒரு தமிழ்க் குழந்தை என்ற அணுகு முறையில் மிகமிகத் துன்பமாக இருந்தது. வித்தியாசமான மொழிபேசுவ தால், சமயத்தைக் கடைப்பிடிப்பதால், வேறு இனமாக இருப்பதால் மனிதனை மனிதன்உயிரோடு கொழுத்தும் சுற்றாடல லிருந்து இலங்கை யிலிருந்து விமானம் ஏறியபோது எதிர்காலம் பற்றி ஒன்றும் தெரியாது. தெரியாத வயது, புரியாத உலகம். அன்பான தகப்பனின் மார்பில், விமானத் திலிருக்கும்போது தூங்கி விழுந்தாள். 

குளிரடித்த காற்று லண்டனில் வரவேற்றது. அதிகம் சனமில்லாத தெருக்கள், உயர்ந்த கட்டிடங்கள். சித்திரா வேடிக்கை பார்த்தபடி வடக்கு லண்டனில் வந்து சேர்ந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. 

திலகவதியின் உறவினர்கள், எப்போதோ லண்டனுக்கு வந்து குடியேறியவர்கள் காட்டிய அன்பிலும், ஆதரவிலும் இலங்கையில் நடந்த கொடுமையை மறக்கத் தொடங்கினாள் சித்திரா. 

அனாதையாய் விடப்பட்ட ஜோர்ஜைச் சந்தித்த போது பரிதாபப் பட்டாள். 

“டேவிட் என்னைவிட்டுப் போய்விடுவான் என்று நினைக்கிறாயா?” 

ஜேனின் குரலில் தொனித்த அழுத்தம் சித்திராவை உலுக்கியது. அது ஒரு சாதாரண கேள்வி. நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிர்காலச் சந்தோசத்திற்கும் அடிப்படையான கேள்வி.டேவிட் போய்விட்டால் வாழ்க்கை ஊனமாகி விட்டதாக நினைக்காதே. பெண்கள் மனப்பலம் உள்ளவர்கள். ‘நாராயணன் என்னைவிட்டுப் போனபோது நான் எப்படி இருந்தேன்?’ 

ஜேனின் நிலையில் தன்னை வைத்துச் சிந்தித்தாள் சித்திரா. தன் காதல் பற்றித் தாய் தகப்பனுடன் பேசி அவர்களின் சம்மதத்துடன் சித்திராவை இந்தியாவுக்கு அழைத்துத் திருமணம் செய்வதாகத் தான் நாராயண் சொல்லி விட்டுப் போனான். 

‘தயவு செய்து மன்னித்துவிடு. நான் உனக்கு ஒரு சினேகிதனாக மட்டும்தான் இருக்க முடியும்….’ 

அவனிடமிருந்து வந்த அடுத்த கடிதங்களை சித்திரா பொருட் படுத்தினாளா இல்லையா என்று ஞாபகமில்லை. 

ஒன்றாக இருந்துவிட்டு, இருமனித உடல் ரகசியங்களை அனுப் வித்து விட்டு எப்படி இவனால் ஒரு சாதாரண சிநேகிதனாகத் தன்னை மாற்றிக்கொள்ள முடியுமென்று புரிந்து கொள்ளும் மனநிலை அப்போது சித்திராவுக்கு இல்லை. அது குழம்பிப் போய்க் கிடந்தது. 

“Be practical ஜேன்” சித்திரா எங்கேயோ பார்த்துக் கொண்டு சொன் னாள். நாராயணனுக்குப் பிடித்த வார்த்தைகள் அவை. ‘பிராக்டிக்கலாக இருப்பதன் தடைகளைப் புரிந்து கொண்டுதான் சொன்னானா? தடுக்கி விழுந்த காலில் குருதிவழிந்தபோது சாதாரண நடை போடமுடியுமா? 

உடைந்த மனதில் உதிரம் கொட்டும்போது உண்மைகள் பொருளற்றுத் தெரிவதேன்? 

நடந்துபோன ‘காதல்’ நாடகம் அவனின் காமத்தின் இச்சைகள் என்று அவள் உணர்ந்தபோது எழுந்த ஆத்திரத்தை எங்கே தணிப்பாள்? அவள் காளியாய் மாறி அவன் கழுத்தைக் கொய்து மாலையாகப் போடமுடியாது. ‘பிராக்டிகலாகத்தான்’ இருக்க வேண்டும். 

“டேவிட் இல்லாமல் எனது வாழ்க்கையை என்னால் கற்பனை செய்ய முடியாது.” ஜேன் விரும்புகிறாள். 

“அடி பெண்ணே உனது கர்ப்பத்தில் ஒரு காளி வளர்கிறாள் அவளை எடுத்துவிடு. அவள் தகப்பன் செய்தது சரிதானா என்று அவனிடம் கேட்டு ஊழித் தாண்டவம் ஆடட்டும்.” 

சித்திராவுக்குச் சாதாரணமான அவளது பொறுமையான சுபாவத் தைத் தாண்டி டேவிட்டில் கோபம் வந்தது. 

“ஜேன் பெண்கள் மிகவும் மனபலம் வாய்ந்தவர்கள். அதனால்தான் அவர்களை இன்னொரு உயிரைத் தாங்கி உலகத்திற்குக் கொடுக்கக் கடவுள் படைத்திருக்கிறான். கிறிஸ்தவ நண்பர் ஒருதரம் சொன்னார், “கடவுள் ஆணை மட்டும் படைத்துவிடாமல் ஏன் பெண்ணையும் படைத்தார் என்றால் அவதிப்படும் ஒவ்வொரு மனிதத்திற்கும் அருகில் தான் இருந்து தேற்ற முடியாது. கடவுள் தன் கருணையை, அன்பை, ஆதரவை, காதலை, கனிவை நம்பிக்கையைக் கொடுக்கத்தான் பெண்ணைப் படைத்தான்.” ஜேன், டேவிட் இல்லாமல் நீ வாழலாம். னது குழந்தை உனக்குத் துணையாக இருக்கும். நீ உன் குழந்தைக்குத் துணையாக இருப்பாய்”. 

ஜேன் சித்திராவை இறுகத் தழுவிக் கொண்டாள். டேவிட்டில் ஜேன் வைத்திருக்கும் அன்பு சித்திராவுக்குத் தெரியும். அந்த அன்பு இப்போது இல்லை. அவர்களுக்கிடையில் ஆத்திரமும், அவலமான சொற்களும் பரிமாறப்படுகின்றன. 

“டேவிட் இப்படி என்னை நடத்தினால், என்னால் எப்படி அவனின் சுடுசொற்களைத் தாங்குவது என்று தெரியாமலிருக்கிறது, குழந்தை வரப்போகிறது என்று நான் சொன்ன நாளிலிருந்து என்னை விட்டுத் தூரப் போய்விட்டான். தனியாகப்படுத்துக் கொள்கிறான். என்னைத் தொடுவதே கிடையாது. இப்படி ஏனோதானோ என்று இருப் பதை விட அவன் இல்லாமல் இருப்பது நல்லது. அவன் என்னைச் சித்திரவதை செய்கிறான். நான் ஏதோ திட்டம் போட்டு அவனிடம் பிள்ளை வாங்கியதாக யோசிக்கிறானோ தெரியாது. எனது உடலை அநுபவிக்கத் தெரிந்தவனுக்கு என் உள்ளத்தின் வேதனை ஏன் தெரியா மலிருக்கிறது. 

“ஜேன்,ஆண்மகனுக்குப் பெண்களுடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்கலாமென்று சில வேளை புரிவதில்லை. ஆத்திரம் வந்தால் அடிப் பார்கள். அப்படிச் செய்வதன் மூலம், தான் அதிகாரம் படைத்தவன் என்று காட்டிக் கொள்வார்கள். அல்லது ஒரு பெண்ணை அடக்க வேண்டுமென்றால் அவர்களை எப்படியோ தங்களுடன், படுக்கப் பண்ணிவிடுவார்கள். இது எத்தனை கோணங்களிலிருந்து பார்த்தாலும் எப்போதும் எங்கேயும் நடக்கும் விஷயம். கல்யாணமான பெண்கள் என்றால் இப்படி ‘றேப் பண்ணப் படுவதை மாங்கல்ய பாக்கியம் என்று பெருமூச்சுடன் ஏற்றுக் கொள்வார்கள். காதலிகள் என்றால் இது காதலின் ஒரு பரிமாணம் என்று முட்டாள்த்தனமாக முனகிக் கொள்வார்கள். விபச்சாரி என்றால் காசுக்காக எதையும் தாங்க வேண்டும் என்று சமாதானப்பட்டுக் கொள்வாள். ஆனால் உண்மையில் பரிதாபமான பேர்வழி யாரென்றால் ஆண்கள். இப்படியெல்லாம் செய்வதால் அவர்கள் அடையும் திருப்தியை விட மற்றவர்களை திருப்தியடையப் பண்ணுவதால் வரும் பிரச்சினைகளை எதிர் நோக்கி மிகவும் அவதிப் படுகிறார்கள். டேவிட்டும் அப்படித்தான். அவனால் உன்னை அடிக்க முடியாது. அடிக்கமாட்டான். அதற்கு நீ இடம் கொடுக்க மாட்டாய்”. 

“என்ன செய்வேன்?” ஆசிரியையிடம் புத்தி கேட்கும் மாணவி போல் சித்திராவிடம் ஜேன் கேட்டாள். 

“ஒரு மண்ணும் பண்ண வேண்டாம். துணையாய் இருக்க முடியா விட்டால் தொல்லை தராமல் இரு என்று சொல்லிவிடு.”

ஜேன் கண்களை மூடி ஏதோ சிந்தனைசெய்து கொண்டிருந்தாள். இத்தனை காலமும் ஒன்றாய் இருந்தவனை என்ன வென்று அந்நிய னாய்ப் பார்ப்பது? என்ற யோசனை அவளைப் பாதிக்கிறது என்று தெரிந்தது. 

சுமதி மாதிரி இவளும் ஏனோதானோ என்ற துணைவனுடன் மாரடிக்கப் போகிறாளா? 

சித்திராவால் அதற்குமேலாக ஒன்றும் யோசிக்க முடியவில்லை. 

‘ஒரு துணையுடன் வாழவேண்டும் என்ற நியதிக்காக எத்தனை மனிதர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்? அன் பில்லாக் கணவனுடன் அல்லல்படுவதை விடத் தன்கையே தனக்குதவி என்று எதிர்காலத்தை நின்று பிடிப்பது ஒரு சுதந்திர சிந்தனையின் பிரதிபலிப்பில்லையா? ஏன் ஆண்டாண்டு காலமாக இந்தப் பெண்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவும், சமுதாயம் கௌரவிக்க வேண்டும் என்பதற்காகவும் பொய்மையில் வாழ்கிறார்கள். ‘சுயநினைவுடன் வாழ்ந்து முடிந்தால் ஒரு வெற்றியல்லவா?’ 

சித்திரா தனக்குள் யோசித்தபடி தன் சோபாவில் சுருண்டு படுத்துக் கிடக்கும் ஜேனைப்பார்த்தாள். பரிதாபம் வந்தது. இவளும் ஒரு சுமதியா? 


ராமநாதன் சித்திராவைத் தேடி கேம்பிரிட்ஜுக்கு வருவது மிக மிக அருமை. ஒரு மணித்தியலாக் கார் ஓட்டத்தில் அவள் ஒவ்வொரு கிழமை யும் வருவாள். தாய் தகப்பனைப் பார்க்க வருவது தன் கடமை என நினைத்திருந்தாள். 

அவர் இப்போது அமெரிக்கா போகப் போகிறார். அதற்குள் சித்திராவைப் பார்க்க வேண்டும் என்று மனம் சொல்லியது. ஒரே ஒரு மகள் என்பது மட்டுமல்ல, அவர்கள் கிட்டத்தட்ட ஒரு விதமான சினேகிதர்கள். தாய் திலகவதியிடம் சொல்ல முடியாத எத்தனையோ விஷயங்களைத் தகப்பனிடம் சொல்லத் தயங்கமாட்டாள். 

அவரும் ஜோர்ஜ் விஷயத்தில் அவனைத்தன் சினேகிதன் என்று சொல்கிறாளே தவிர அதைத்தவிர ஒன்றையும் விபரமாகச் சொல்ல மாட் டாளாம். காதல் என்ற வார்த்தையைச் சொல்லவே பயப்படுகிறாளா? 

இருபத்தி எட்டு வயதாகிறது. வெளியில் சொல்லா விட்டாலும் சித்திராதிருமணம் செய்து செட்டிலாக வேண்டும் என்ற ஆசை அவருக்கு நிறைய உண்டு. 

இலங்கையிலிருந்து அகதியாக ஓடிவரும்போது இங்கிலாந்தில் தன் மகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தார். அவர் லண்டனில் மேற்படிப்பு படித்தவர். லண்டனை பற்றிப் புரிந்தவர். மனிதனை வாழ வைக்கும் நகரத்தில் லண்டன் முன் நிற்கிறது என்பது அவர் அபிப்பிராயம். அதே நேரம் ஒரு மனிதனின் பலவீனத்தையும் இந்த நகரம் பதம் பார்த்து விடும் என்றும் அவருக்குத் தெரியும். 

மத்தியதர வாழ்க்கைச் சூழ்நிலையில் தன் மகள் நன்றாகப் படித்து நன்றாக வாழவேண்டும் என்று எதிர்பார்த்தது எந்தச் சாதாரண தாய் தகப்பனுக்கும் அப்பாற்பட்ட எதிர்பார்ப்புக்கள் அல்ல. ராமநாதன் ஒரு நல்ல சிந்தனையுடன் கார் ஓட்டிக் கொண்டிருந்தார். 

போனவாரம் சித்திராவையும் ரவியையும் அவர்களின் அன்பான நட்பையும் அவதானித்த பின் ஏன் தன் மருமகனுக்குத் தன் மகளைக் கல்யாணம் செய்து வைக்கக் கூடாது என்று அவர் யோசித்தார். 

அந்த யோசனை அவரின் அடிமனத்தில் எப்போதுமே யிருந்தது. ஆனால் ஒரு டாக்டர் என்றபடியால் ஒரே குடும்பத்து உறவுக்குள் திருமணங்கள் நடப்பதை அவர் விரும்பவில்லை. 

இவருக்கு இப்படி ஆசைகள் இருக்குமென்பதை உணர்ந்தோ இல்லையோ இவரின் நண்பர் ஒருவர், “நீங்கள் ஒரு குடும்பத்திற்குள் திருமணங்கள் செய்ய நினைத்தால் அதன் பலா பலன்களையும் யோசித்துப் பார்க்க வேண்டும். மூளை பலம் குறைந்த அல்லது உடல் பலம் குறைந்த குழந்தைதான் பிறக்கலாம். சித்திராவை ஏன் அந்த நிலைக்குத் தள்ள யோசிக்கிறாய்?” 

ராமநாதன் தன் மகளின் விரும்பத்திற்கு எதிராக எதுவும் செய்ய மாட்டார். ஆனால் அங்கும் இல்லை இங்கும் இல்லை அடியுமில்லை நுனியுமில்லை என்று அவள் நடப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. 

நாராயணன் விவகாரத்தின் பின் தன் எதிர்காலத்தைப் பற்றித்தானே முடிவு கட்டுவதாகச் சொல்லி விட்டாள். மற்றவர்கள் தன் வாழ்வில் தலையிடுவதை விரும்பவில்லை என்று திட்டவட்ட மாகச் சொல்லி விட்டாள். 

அத்துடன் அவளின் மைத்துனி சுமதியின் வாழ்க்கையில் நடை பெறும் போராட்டம், சித்திராவை நிறையப் பாதித்திருக்கிறது என்று தெரிகிறது. குடும்பம் பார்த்துப் பேசிய மாப்பிள்ளை செந்திலை ஒரு மறு பேச்சும் பேசாமல் திருமணம் செய்து கொண்டவள் சுமதி. 

“சுமதி நல்ல பெண்ணாய் இருந்தால் எப்படியும் கணவனை அடக்கி நல்லவனாக வைத்திருக்கலாம்தானே?” 

திலகவதியின் கேள்வியிது. ஒரு மனைவிக்காக ஒரு கணவன் நல்லவனாக இருக்க முயன்றால் உலகத்தில் ஏன் இந்தக் கொடுமைகள் நடக்கின்றன. சிலவேளை திலகவதி அப்பாவித் தனமாக நடந்து கொள்கிறாள். 

நாராயணனின் பிரிவால் சித்திரா துடித்தபோது பெற்ற மனத்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை. திலகவதி கடவுளர்களைச் சபித்தாள். தனது ஒரே ஒரு மகளின் வாழ்க்கை இப்படியானதே என்று அவள் இரவு பகலாகச் சிலவேளைகளில் புலம்புவாள். அப்போது சித்திராவுக்கு இருபத்தி மூன்று வயது. சர்வகலா சாலைப் படிப்பை முடித்ததும் தன் மகளுக்குத் திருமணத்தைச் செய்ய வேண்டும் என்று துடித்த திலக வதிக்குத் தன் மகள் யாரையும் வெள்ளைக்காரன்கள் பார்த்து விடக் கூடாது என்ற தவிப்பு மனசில் ஊசலாடியது. 

“எனக்குப் பிடித்தவன். இந்தியத் தமிழன்.” சித்திரா தன் தாய் தகப்பன் விருப்பப்படி ஒரு ‘தமிழனைத் தெரிவு செய்ததைப் பார்த்து உற்றார் உறவினர், சினேகிதர்கள் சந்தோசப் பட்டார்கள். 

லண்டனில் வாழும் பெண்கள் ‘கண்டபாட்டுக்குத் திரிவதைப் பற்றி வம்பளக்கும் கூட்டம் சித்திராவின் தெரிவு பற்றிச் சந்தோசப் பட்டனர். 

ராமநாதன் பெருமூச்சுவிட்டார். எத்தனை எதிர்பார்ப்புக்கள்? ராமநாதனின் தகப்பனும் தன் மகள் கமலாவுக்கு எத்தனையோ நாடு நகரெல்லாம் சென்று பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார். அவளோ, தான் படிப்பிக்கப் போன இடத்தில் சிதம்பரன் என்ற இலக்கிய ஆசிரி யரிடம் மனதைப் பறிகொடுத்து விட்டாள். ராமநாதனின் தகப்பனும் தான் இடிந்து போனார். 

கார் கேம்பிரிட்ஜை நெருங்கிக் கொண்டிருந்தது. தான் அமெரிக்கா போகும் விடயமாகச் சித்திராவைப் பார்க்க வந்திருக்கிறார் என்றால் நம்புவாளா? 

சித்திரா சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கும் தகப்பனைப் பார்த்தாள். அது ஒரு அழகிய மாலை நேரம். லைப்ரரிக்குப் போக புறப்பட்டுக் கொண்டிருந்தாள். 

ஆனந்தத்துடன் தகப்பனை வரவேற்கிறாள். 

“என்ன எங்கேயோபோகப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறாயோ?” அவளைப் பார்த்ததும் கரை கடந்த சந்தோசம் வந்தது. கவலையற்ற வாழ்க்கை வாழும் சித்திராவைப் பார்க்கப் பெருமையாக இருந்தது. பழைய நிகழ்ச்சிகளை நினைத்துக் கொண்டு தோல்வி மனப்பான்மையில் அவள் வாழமாட்டாள் என்று அவருக்குத் திருப்தி. 

“என்ன திடீரென்று”, மகள் விசாரித்தாள். 

வாரவிடுமுறைக்கு அவள் தாய் தகப்பனிடம் போவதுண்டு. அது வரைக்கும் பொறுக்காமல் அவர் வந்ததற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தெரிந்தது. 

“சரி, நான் இனி லைப்ரரிக்குப் போகமுடியாது.” 

“வேண்டாம் எனக்காக உன் திட்டம் ஒன்றையும் மாற்ற வேண்டாம். ஒரு மணித்தியால ட்ரைவ்தானே சும்மா பார்க்க வந்தேன்” 

“சுமதி எப்படி இருக்கிறாள்.” 

செந்திலில் ரவி மிகவும் கோபமாயிருக்கிறான் என்பதைச் சொன் னார். “சுமதி மிகவும் நொந்து போயிருக்கிறாள். இந்த நேரத்தில் ரவி கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்”. சித்திரா சொன்னாள். 

அப்படி அவள் சொன்னது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. செந்திலின் போக்கால் சுமதி கஷ்டப்படும்போது சித்திரா சுமதிக்காகப் பரிதாப்படுவது நியாயம்தான். ஆனால் சுமதியை வருத்தப்படுத்தும் செந்திலைத் தண்டிக்க ரவி எடுக்கும் திட்டங்களுக்குச் சித்திராவும் தயங்குவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. 

“அப்பா இப்போது சுமதியிருக்கும் நிலையில் சரியாக எதையும் சிந்திக்கமாட்டாள். இந்தச்சூழ்நிலையில் பொலிஸ் கோர்ட் என்று வந்தால் அவளுக்கு நேர்வஸ் பிரேக் டவுண் வருவது ஆச்சரியமல்ல. அவர் மகன் சுகமாகும் வரைக்கும் என்றாலும் ரவி பொறுமையாயிருப்பது நல்லது என்று நினைக்கிறேன், ஏனென்றால் செந்தில் இப்போது சுமதி வீட்டில் இல்லை. அதே பெரிய விஷயம்”. 

ராமநாதன் சுமதி விஷயம் பற்றி மேலதிகம் பேச விரும்பவில்லை. இருவரும் கேம்பிரிட்ஜ் வளாக மத்தியில் நடந்து கொண்டிருந்தார்கள். கோடை விடுமுறையானதால் மாணவர் கூட்டம் குறைந்திருந்தது. 

கல்வியின் உயர்ந்த இடங்களில் ஒன்றாக கருதப்படும் கேம்பிரிட்ஜ் எங்கே திரும்பினாலும் புத்தகக் கடைகள், இளைஞர்களுக்குரிய பலதரப் பட்டபொருட்களை விற்கும் எத்தனையோ விதம் விதமானகடைகளால் நிரம்பி வழிந்தது. 

”லண்டனைவிடஎவ்வளவு அமைதியான இடம் இது.”ராமநாதன் அந்தச் சூழ்நிலையில் மனதைப் பறி கொடுத்துச் சொன்னார். 

“அதுதானே லண்டன் வேண்டாம் என்று இந்தப் பக்கம் வேலை எடுத்துக் கொண்டு வந்தேன்.” சித்திரா தன்னையறியாமல் பெரு மூச்சு விட்டாள். அவள் லண்டன் பிடிக்காமல் ஓடிவந்ததற்கு உண்மையான காரணம் பழைய ஞாபகங்கள் என்று தெரியும். நாராயணனை ஞாபகப் படுத்தும் எந்த இடத்தையும் அவள் பார்க்கத் தயாரில்லை என்பதை அவர் அறிவார். 

“ஒன்றிரண்டு கிழமையில் ஒரு கொன்பரன்ஸ் விஷயமாக அமெரிக்கா செல்கிறேன்.”
 
“அமெரிக்கா பேரைப் பிடிக்கவில்லை என்றீர்கள்?” 

இருவரும் ஒரு பார்க்கில் அமர்ந்தார்கள். கோடைகாலத்தின் எழில், பூத்துக் குலுங்கும் பலவிதமான மலர்களில் வெளிப்பட்டது. 

“என்ன செய்ய, டிப்பார்ட்மெண்ட் போகச் சொன்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை … ஜோர்ஜ் எப்போது வருகிறான்.” 

மகளின் முகத்தை நேரே பார்த்துக் கேட்டார்.

“இன்னும் சில வாரங்களில் வருவான்”. 

“நான் அமெரிக்காவில் நிற்கும்போது ஜோர்ஜைப் போய்ப் பார்த்தால் நன்றாக இருக்கும். அவனும் நியூயார்க்கில் தானே நிற்கிறான்.”

“ஒ உங்களைக் கண்டால் மிகவும் சந்தோசப்படுவான். இரவு கூட நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்” 

ராமநாதன் தன் மகளின் முகபாவத்தை நோட்டம் விட்டார். 

ஜோர்ஜ் என்ற பெயரைச் சொன்னதும் இத்தனை சந்தோசமாக இருக்கிறாளே இவளிடம் நேராகக் கேட்கலாமா? 

“வேலை விஷயமாக நியூயார்க் போன ஜோர்ஜ் ஏன் தாமதிக்கிறான் என்று தெரியவில்லை. விலாசம் தருகிறேன். முடிந்தால் ஒருதரம் போய்ப் பாருங்கள்.”சித்திராவின் குரலில் சட்டென்று தொனித்த சோகத்தை அவர் கவனித்தார். 

நீ ஜோர்ஜை விரும்புகிறாயா என்று அவர் நேரே கேட்கத் தேவை யில்லை. அவசரப்பட்டு கேம்பிரிட்ஜ்ஜுக்கு வந்தது பிழை என்று தெரிந்தது.ரவி பற்றி இவளிடம் பேசமுடியாது. இவள் மனத்தை ஆட்கொண்டிருப்பவன் ரவியல்ல. 

“ரவி எப்படியிருக்கிறார்?” சம்பிரதாயத்திற்காக கேட்கிறாள் என்று பகிரங்கமாகத் தெரிந்தது. 

“சுமதி விடயத்தில் தலையை மாட்டிக் கொண்டு தவிக்கிறான். பாவம், படிக்க வந்த இடத்தில் எத்தனை பிரச்சனை.” 

“அப்பா, ரவி சாதாரண தமிழர்களை விட வித்தியாசமானவர். அவரின் வாழ்க்கையில் நடந்த எத்தனையோ விஷயங்கள் அவரை மிகவும் இறுக்கி விட்டிருக்கிறது. சுடச்சுடப் பொன்போல மிகவும் தூய்மையான மனத்துடன் வாழ்கிறார். பொய்மையைக் கண்டால் அவருக்கு எரிச்சல் வருகிறது என்று நினைக்கிறேன். சுமதியின் வாழ்வில் அவர் எப்படி ஒரு நல்ல முடிவைக் கொண்டு வருவது என்று தெரியாமல் திண்டாடுகிறார் என்று நினைக்கிறேன்.” 

எவ்வளவு ஆழமாக ரவியை எடைபோட்டு வைத்திருக்கிறாள் இவள்? இருவரும் சேர்ந்தால் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக இருக்கும்? 

“என்னப்பா இவ்வளவு தூரம் வேலை மெனக்கிட்டு வந்திருக் கிறீர்கள். என்ன முக்கிய விஷயம்?” இவரின் மனத்தை அறிந்தவள் போற் சொன்னாள். 

“தற்செயலாக நீ வராமல் விட்டாலும் உன்னைப் பார்த்து விட்டுப் போக வந்தேன்.” ராமநாதன் தானறியப் பொய் சொன்னார். 

அத்தியாயம் – 9

தகப்பன் திரும்பிப் போனபின் சித்திரா வரும்போது டேவிட்டின் கார் நின்றது. ஜேன் தனக்கு பின்னேரம் ஒரு மீட்டிங் இருப்பதாகச் சொல்லியிருந்தாள். 

“ஹலோ சித்ரா”, டேவிட் இவள் வருவதைப் பார்த்துவிட்டு பக்கத்து வீட்டு வாசலில் நின்று கூவினான். 

ஜேன் தனக்குக் குழந்தை கிடைப்பதாகச் சொன்ன நாளிலிருந்து டேவிட்டை அதிகம் சந்திக்கவிரும்பாததால், சித்திரா பதிலுக்கு ‘ஹலோ டேவிட்’ சொல்லிவிட்டுத் தன் வீட்டுக்குப் போக முனைந்த போது, டேவிட் சித்திராவை நோக்கி வருவது தெரிந்தது. 

“என்னை ஏன் அவாய்ட் பண்ணுகிறாய்?” டேவிட் பட்டென்று கேட்டான். 

“நான் யாரையும் அவாய்ட் பண்ணவில்லை.” சித்திரா எடுத் தெறிந்து பேசினாள். 

“ஜேன் வீட்டுக்கு வர லேட்டாகும் ஏதாவது பாருக்குப் போ வோமா?”சித்திராவின் உதாசீனத்தைப் பொருட்படுத்தாமற் கேட்டான் அவன். 

“இப்போது தான் லைப்ரரிக்குப் போய் வந்தேன், வேண்டுமானால் என் வீட்டுக்கு வா, நல்ல உறைப்புடன் கோழிக்கறி இருக்கிறது.” 

டேவிட்டுக்கு இந்தியச் சமையல் என்றால் பிடிக்கும். டேவிட்டும் நன்றாகச் சமைப்பான். இந்தியச் சமையலைப் படிக்கிறான். 

“ஜேனுக்கு இப்போதெல்லாம் எதைக் கண்டாலும் கோபம் வருகிறது”. 

வந்ததும் வராததுமாகச் சொன்னான் டேவிட். 

சித்திரா மறுமொழி சொல்லவில்லை. இவன் தனது அரசியல் சமாசாரத்தைத் தவிர்த்து விட்டு ஜேன் பற்றிப் பேசியது ஆச்சரியம். “ரோனி பிளேர், அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு சதாம் ஹுசேனை அடிப்பதென்று நிற்கிறார். இந்த போருக்கு எதிராகத் திரளும் கூட்டத் துடன் வரச்சொன்னால் ஜேன் மாட்டேன் என்கிறாள்” 

சித்திராவுக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தன் வீட்டில் நடக்கும் பிரச்சினையைத் தெரிந்து கொள்ளாமல் உலகப் பிரச்சினைகளைத் தூக்கித் தலையில் போடுகிறானே? 

“என்ன மௌனம்? வருகிற சனிக்கிழமை இந்தப் போருக்கு எதிராகக் கூட்டம் ஒழுங்கு செய்கிறேன். நீயும் வருவான எதிர் பார்க்கிறேன்.” அவன் குரலில் உற்சாகம். 

“ஜேன் உன்னுடன் ஏன் கூட்டத்திற்கு வரமாட்டாள் என்பதற்கு அவள் இந்தப் போரை ஆதரிக்கிறாள் என்று அர்த்தமில்லை டேவிட். அவளின் நிலையை நீ புரிந்து கொள்ளாமல் இருப்பது நம்ப முடியாமல் இருக்கிறது.” 

சித்திரா இவனுக்குச் சாப்பாடு தயார் செய்து கொண்டிருந்தாள். குக்கரில் பப்படம் பொரிந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் கோழிக்கறி சூடானது.மரக்கறிகளை வெட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த டேவிட் சித்திராவின் பேச்சைக் கேட்டான். டேவிட் மெளனமானான். 

“ஜேனின் நிலை எனக்குப் புரியாது என்று நான் எங்கே சொன்னேன்? சித்திரா இந்த உலகத்தில் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் கிடைக்காமல் ஒரு மணித்தியாலத்திற்கு இரு நூற்றைம்பது குழந்தைகள் இறக்கிறார்கள்.நானும் நீயும் பேசிக் கொண்டிருக்கும் இந்த ஐந்து நிமிடத்தில் இருபதுக்கு மேல் இறந்து விட்டிருப்பார்கள். இப்படியான உலகத்தில் இன்னும் ஏன் குழந்தைகள்?” 

“டேவிட் உன் இலட்சியங்கள் அற்புதமானவை. ஆனால் இயற்கையின் நியதி அது என்றால் நீயும் நானும் ஒன்றும் பண்ண முடியாது. இந்த உலகம் பணம் படைப்போர் கையில் இருக்கிறது. அவர்கள் நாளைய சந்ததியினர் பற்றிக் கவலைப் படப் போவதில்லை. இன்னும் இருபது வருடங்களில் இயற்கையின் மகாசக்திகளான மழை யாலும் வரட்சியினாலும் கோடிக்கான மக்கள் அழியத்தான் போகி றார்கள். உலக மயமாக்கப்படுதல் என்ற பெயரில் வளர்ச்சியடையாத நாடுகளை இந்தப் பணம் படைத்த உலகம் ஏப்பம் விடப் போகிறது. அதற்கு நீயும், ஜேனும் பிள்ளை பெற்றுக்கொள்ளாவிட்டால் ஒரு பெரிய மாற்றமும் ஏற்பட்டு விட முடியாது”. 

“சரி சித்திரா,ஆனால் …” டேவிட்டை இடை மறித்தாள் சித்திரா. 

“ஜேன் தன் குழந்தையை வயிற்றில் வைத்து அழித்துக் கொள்ள வேண்டும் என்கிறாயா? ஏன் உலகத்தில் பெரும்பாலான ஆண்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்? உலகமயமாக்கும் திட்டத்தைக் கொண்டு வருபவர்களுக்காகவும், உனது பிடிவாதத்திற்காகவும் ஜேனின் வயிற்றில் வளரும் குழந்தையை அவள் முடிக்க முதல் அவன் குறுக்கிட்டான். 

“சித்திரா நான் ஒன்றும் அபார்ஷன் செய்து கொள்ளச் சொல்லவில்லையே.” 

“ஆமாம் நீ கொடுக்கும் தொல்லையில் அவள் மனம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கருச்சிதைவுத் தானாக நடக்க மாட்டாது என்பது என்ன நிச்சயம்?” 

ஜேனுக்காகச் சித்திரா அழுதுவிடுவாள் போலிருந்தது. டேவிட் இவள் சொன்ன உண்மையைக் கிரகித்துச் சிலையாய் நின்றான். 


ரவி எடின்பரோவுக்குப் போவதாக எந்தத் திட்டமும் வைத்திருக்க வில்லை. மேற்படிப்புக்கு வந்தவன் லண்டனைத் தவிர வேறிடங்கள் போவான் என்று நினைத்திருக்கவில்லை. 

தான் வேலை செய்யப் போகும் ஹாஸ்பிட்டலைப் பார்க்கப் போவதாக மெலனி சொன்னாள். 

“நீங்களும்தான் ஸ்காட்லாந்து பார்க்கவில்லை வரலாமே”. 

அவளின் இந்த வேண்டுகோளை அவன் எதிர்பார்க்கவில்லை. அதே நேரம் லண்டனிலிருந்தால் சுமதியுடன் தேவையில்லாமல் தகராறு பண்ண வேண்டிவரும் என்றும் அவனுக்குத் தெரியும். 

செந்திலைப் பற்றிப் போலீஸில் புகார் கொடுப்பது பற்றி சுமதி பெரிதாக அக்கறை எடுக்கவில்லை என்று தெரிந்ததும் அவனுக்கு எரிச்சல் வந்தது. 

அம்மாவுக்குப் போன் பண்ணினான். வழக்கமாக ஒவ்வொரு கிழமையும் போன் பண்ணுவான். மனச்சாந்தி தேடி அம்மாவுக்குப் போன் பண்ணினான். 

சுமதியின் மகன் தற்செயலாக அடிபட்டு ஹாஸ்பிட்டலில் இருப்பதாகச் சொன்னபோது தன்னை இப்படிப் பொய் சொல்ல வைத்த சுமதியின் மீது கோபம் வந்தது. போதாக் குறைக்கு அம்மா செந்திலைப் பற்றிச்சொல்லும் போது “அவன் சுமதியின் மேல் ரொம்ப அன்பு வைத்திருக்கிறான். குழந்தைகளை நன்றாகப் பார்ப்பான்” என்றாள். 

அம்மாவுக்கு இப்படியான கருத்துக்களை மனதில் கொட்டியது யார்? சுமதியா? அவனுக்கு எரிச்சல் வந்தது. 

“உனது படிப்பு முடியப் போகிறது.” 

அம்மா இப்படிச் சொன்னபோது அவனிடம் என்ன எதிர் பார்க்கிறாள் என்று புரியாமல் இருந்தது. ஊருக்கு உடனடியாக வரச் சொல்கிறாளா? அல்லது கொஞ்ச காலம் லண்டனிற் தங்கி நின்று வேலை பழகு என்று சொல்லப் போகிறாளா? 

அவளைப் பார்க்கச் சொல்லி உதவிக்கு வைத்திருந்த பையன் இயக்கத்தில் சேர்ந்து விட்டான் என்று கேள்விப்பட்டிருந்தான். இப்போது அம்மாவை யார் பார்த்துக் கொள்கிறார்கள்? 

அப்பாவின் சொந்தக்காரப் பெண் – ஒரு விதவை தன்னுடன் வந்திருப்பதாகச் சொன்னாள். 

இவன் கேட்க முதலே அம்மா சொன்னாள். 

“இங்க பெரிய மாற்றங்கள். வயது வராத பிள்ளைய வேலைக்கு வைச்சிருக்க முடியாது”. 

“நல்லதுதானே”, ரவி ஏதோ கேட்கவேண்டும் என்று நினைத்தான் கேட்க முடியவில்லை. அம்மா வீட்டிலிருந்த பையன் எப்படி இயக் கத்தில் சேர்ந்தான் என்று கேட்க நினைத்தான், கேட்க விரும்பவில்லை. அரசியல் கேள்விகளைத் தவிர்ப்பது அம்மாவுக்கும் நல்லது தனக்கும் நல்லது என்று முடிவு கட்டியிருக்கதான். 

சுதந்திர சிந்தனையைத் தடைப்படுத்தும் வாழ்வில் தேவையில்லாத கேள்விகளை கேட்டு அம்மாவைத் துன்பப் படுத்தவில்லை அவன். 

அம்மா,அப்பாவின் அந்திரட்டி பற்றிச் சொன்னாள். “அநியாய மாய் என்ர அவர என்னிடமிருந்து பிரிச்சுப் போட்டான்கள்.” அம்மா குலுங்கியழுதாள். அப்பா இறந்து பதினெட்டு வருடங்கள் ஆகின்றன. அவரின் சிந்தனைகளின் வெளிப்பாடு அவர் மரணத்திற்குக் காரண மாயிற்று. அம்மா அந்த மரணம் பற்றிப் பேசமாட்டாள். அவர் பிரிவு பற்றிப் பேசுவாள். அவரை மரணமடையப் பண்ணிய காரணிகள் பற்றிப் பேசமாட்டாள். 

கொடுத்த தேனீரைக் கையிலெடுத்துக்கொண்டு, தட்டிய கதவைத் திறந்த மனிதன் மூளை சிதறிக் கீழே விழுந்த அதிர்ச்சி அவளை எவ்வளவு நாள் நடைப்பிணமாக வைத்திருந்தது? ரவி இவற்றை எல்லாம் பேச முடியாது. அம்மாவின் வாழ்க்கையில் அவள் இழந்தவை ஏராளம். இனி நடக்கப் போவது என்றாலும் நன்றாக நடக்க வேண்டும் என்று கற்பனை செய்வது தவிர்க்கப்பட முடியாத ஒன்று. தன் கணவன் சிதம்பரம்போல் தன் மகள் கணவன் செந்திலும் நல்லவனாக இருப்பான் என்று அவள் நினைப்பது இயற்கை. 

‘ஸ்கொட்லாந்தின் இயற்கைக் காட்சிகள் மிக ரம்மியமானவை” மெலனி சொன்னாள். லண்டனிலிருந்து ஸ்கொட்லாந்து போகும் வரைக்கும் பெரும்பாலும் தனது வேலை விடயமாகப் பேசிக் கொண்டு வந்தாள். மிஸ்டர் டெய்லருக்காகத் தான் ஓடிப்போகவில்லை என்பதை அவள் சொன்னாலும் அவள் எடுத்த முடிவுக்கு மிஸ்டர்டெய்லரும் ஒரு முக்கிய காரணி என்று அவனுக்குத் தெரியும். 

“ஏன் சில மனிதர்கள் விருப்பமில்லாத உறவுகளுக்குள் தங்களைச் சிறைப் பிடித்திருக்கிறார்கள்?” அவன் பெருமூச்சுடன் கேட்டான். அவர் கள் முன்னே எடின்பரோ கோட்டை கம்பீரமாகத் தெரிந்தது. அதைச் சுற்றிய இடத்திலுள்ள கட்டிடங்கள், பூங்காவனங்கள், புதிதாக முளைக்கும் எத்தனையோ கடைகள் என்பன மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன. இவர்கள் போயிருந்த சமயம் ‘காமடி நிகழ்ச்சிகள் பெரிதாக நடந்து கொண்டிருந்தன. இவனையும் கூட்டிக்கொண்டு ‘காமடிக்’ கிளப்ஒன்றுக்குப் போக வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். 

மெலனிதன் பழைய வாழ்க்கைபற்றி இவனுக்குச் சொன்ன போது இவன் மிக மிகத் துன்பப்பட்டான். மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த பெண்களையும் இந்தப் பாலியல் கொடுமைகள் எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பதை மெலனி மூலம் தெரிந்தபோது நெஞ்சில் நெரிஞ்சி முள் தைத்தது. 

மிஸ்டர் டெய்லரின் பார்வைக்குப் பயந்து வேலை மாறிப் போவதாக இருக்கிறது அவள் செய்கை. ஆனால் அதுதான் காரணம் என்று அவள் ஒத்துக் கொள்ளப் போவதில்லை. 

உனக்கு யாரும் பாய் பிரண்ட் இருக்கவில்லையா என்று இவன் இதுவரைக்கும் கேட்கவுமில்லை. ஆங்கிலேயர் தாங்களாகத் தங்கள் தனிப்பட்ட விஷயங்களைச் சொன்னால் அன்றி மற்றவர்கள் கேட்பதை விரும்ப மாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும். 

எல்லோரிடமும் கருணையுள்ளத்துடன் பழகுகிறாள். முதல் நாள் சந்திப்பிலேயே சித்திராவைத் தன் பிறந்த தினப்பார்ட்டிக்குக் கூப்பிட்டு விட்டாள். 

“என்ன எடின்பரோவந்தும் லண்டன் பற்றிய யோசனையா?” மெலனியின் பொன்கூந்தல் காத்திலாட, முகத்தில் மலர்ச்சி தவழக் கேட்டாள். 

யாரிடமாவது சொல்லியழ வேண்டும் போலிருந்த எத்தனையோ விஷயங்களை மெலனியிடம் சொன்னான். 

“செந்தில் ஏன் இன்னொரு பெண்ணுடன் சுற்றுகிறான். ஒன்றுடன் திருப்திப்படாத மனிதர்கள் இவர்கள்” 

“உலகத்தில் எத்தனையோ டெய்லர்களும் செந்தில்களும் இருக்கிறார்கள்,கல்யாணம் என்ற போர்வைக்குள் விரும்பாத பாரங்களை எல்லாம் சுமக்க வேண்டி வரும்போது சுவையாக ஏதும் கிடைக்குமா என்று தேடுவது மனித சுபாவம். அதில் நாங்கள் எல்லோரும் அடங் குவம். எங்களுக்கு இப்போது இருக்கும் சூழ்நிலையில் லண்டன் பிடிக்கவில்லை வெளியில் வந்து விட்டோம். கல்யாணம் முடித்தவர்கள் அப்படிச்செய்யமுடியுமா! ஏதோஒரு விதத்தில் எஸ்கேப் தேடுகிறார்கள்.” 

“சுமதி இவ்வளவு காலமும் செந்திலைப்பற்றித் தெரியாமல் இருப்பது ஆச்சரியம்.” 

“ரவி, சுமதிக்குத் தெரியாமலில்லை. முழுக்க முழுக்கத் தெரியா விட்டாலும் தன் புருஷன் இன்னொருத்தியைப் பார்ப்பது ஒரு மனைவிக்குத் தெரியாமலில்லை. தெரியாத மாதிரிக் காட்டிக் கொள்வது கௌரவம் அல்லது தங்களைத் தாங்களே திருப்தி செய்து கொள்ளும் ஒரு முறை என்று கணித்துக் கொள்கிறார்கள். நேரடியாகக் கேட்டுச் சண்டை பிடிக்கப் பெரும்பாலான பெண்களுக்குத் துணிவில்லை. வேறு ஏதோ காரணங்களைக் காட்டிச் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பெரும் பாலான தம்பதிகள் போலியாகத்தான் வாழ்கிறார்கள். சமுதாய அந்தஸ்துக்காகத் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.” 

எனது தகப்பன் நல்லவர். 

“உங்களைப் பார்த்தால் தெரிகிறது.” 

“என்ன தெரிகிறது?” 

“ஒரு நல்ல அப்பாவுக்குப் பிறந்த பிள்ளை என்று தெரிகிறது.” “நல்ல மனிதர்கள் என்பவர் யார்? சமுதாயத்தில் நடக்கும் கொடுமை களை எதிர்த்து நின்று அதன் பிரதிபலனாகத் தன் குடும்பத்தை இக்கட் டான நிலையில் விடுபவர்களா?” 

ரவியின் நினைவுகள் நீண்ட காலத்தின் பின் தாவி விட்டது என்பது அவனின் குரலில் தெரிந்தது. மெலனியிடம் ரவி தனது தந்தை இறந்து போன செய்தியைச் சொல்லியிருக்கிறான். என்ன மாதிரியான சூழ் நிலையில் கொலை செய்யப்பட்டார் என்றும் சொல்லியிருக்கிறான். 

“நல்ல மனிதர்களாகத்தான் எல்லோரும் பிறக்கிறோம். குடும்ப சூழ் நிலை, சமுதாய சூழ்நிலை, உறவுகளின் தாக்கம் என்பன ஒரு மனிதனை மாற்றுகிறது. எல்லா உயிர்களும் ஏதோ ஒரு விதத்தில் தங்கள் உள் உணர்வின் நியாயத்தோடு போராடிக் கொண்டு தான் இருக்கின்றன. நியாயத்திற்கு நின்று பிடிப்பது இலகுவான காரியமல்ல. உயிரையே பறிகொடுக்கும் அளவுக்கு உன் தகப்பன் உறுதியாய் நின்றது ஒரு மகத்தான செயல் என்று நினைக்கிறேன்.” 

ரவி மெலனியைப் பார்த்தான். அவர்கள் அப்போது லண்டனை விட்டு எவ்வளவோ தூரத்தில் இருந்தார்கள். 

மட்டக்களப்பில் எப்போதோ நடந்த மரணத்தின் தாக்குதலை எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் இந்தப் பெண்மணியுடன் பேசிக் கொண்டிருப்பது நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது. 

‘இந்த மெலனியிடம் எதையும் மனம் விட்டுப் பேசலாம்’, ரவி தனக் குள் நினைத்துக் கொண்டான். மனித உறவுகள் இப்படி மகத்தானதாக இருக்கும் என்பதை நேரில் உணர்ந்தபோது புல்லரித்தது. 

அவளின் உறவு சந்தோசமானதாக இருந்தது. பிரச்சினை யற்றதாக இருந்தது.தனபால் மாமா சொல்வதுபோல் இவன் பின்னால் அவள் சுற்றிக்கொண்டு திரியவில்லை. இவனுக்குப் பின்னால் சுற்றித் திரிந்து நேரத்தை வீணடிக்கும் முட்டாள் பெண்ணல்ல அவள். சந்தோசங்களும் திருப்திகளும் ஆண்களின் மூலம்தான் பெண்களுக்குக் கிடைக்கும் என்பதில் நம்பிக்கையற்றவள். ஸ்காட்லாந்தின் மலை முகடுகள் மௌனமாய் இவர்களின் சம்பாஷனையை ஏற்றுக் கொண்டன. மெல்லிய குளிர் காற்று குழம்பிக் கிடக்கும் மனதிற்கு இதமாக இருந்தது. அலைபாய்ந்து கிடந்த மனத்திற்கு இந்தச் சூழ்நிலை நிம்மதியைத் தந்தது. 

லண்டன் வெள்ளைக்காரரை விட எடின்பரோவில் காணும் ஸ்கொட் டிஷ் மக்கள் சினேகிதத்துடன் பழகுகிறார்கள். வேலை, வீடு, சுமதி ஆகிய பிச்சினைகளுக்கப்பால் இருப்பது இன்னொரு உலகத்தில் இருப்பது போலிருந்தது.பிரச்சினைகளைத் தன் சாதாரண சூழ்நிலைக்கு அப்பால் பார்ப்பது வித்தியாசமான அனுபவம். ஒன்றிரண்டு நாள் பிரச்சினைகளுக் கப்பாலிருந்து கொண்டு மூன்றாம் மனிதனாய் விஷயங்களைப் பார்க்கும்போது சில விஷயங்கள் தெளிவாக இருப்பது போலிருந்தது. 

“டெய்லருக்குப் பயந்து ஸ்கொட்லாந்துக்கு வந்ததாக நினைக்க வேண்டாம். ப்ரமோஷனுடன் ஒரு வேலை வரும்போது ஏன் முகம் கொடுக்க முடியாது எனது யோசித்தேன்.” தனது நடவடிக்கைகளை இவன் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் குரலிற் தொனித்தது. 

மெலனி இவனிடம் இதை ஏன் சொல்ல வேண்டும் என்று அவனுக் குத் தெரியாது. ஆனால் அவள் மேலும் விளக்கம் கொடுத்தபோது இன்னும் சில மாதங்களில் கவனமாக இருப்பது மிக முக்கியமென்று பட்டது. 

மேற்படிப்பு முடிந்து ஒரு தலையிடி தீருகிறது என்றிருக்கும்போது ஏன் மிஸ்டர் டெய்லருடன் மோதிக்கொள்ள வேண்டும் என்று அவன் யோசித்தான். 


என்னவென்று சில வாரங்கள் ஓடிவிட்டன என்று தெரியவில்லை. ஈராக்கில் சதாம் ஹுசேனை எப்படித் தொலைப்பது என்று அமெரிக்கன் பிரசிடெண்ட் புஷ் பிரசாரம் செய்ய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் ஒத்துப்போவது பிரித்தானிய மக்களை மிகவும் கவலைக் குள்ளாக்கியிருந்தது. 

போருக்கு எதிரான பிரச்சாரக் கூட்டங்களில் டேவிட் மிகவும் பிஸியாக இருந்தான். அவனின் மனிதாபிமானமான இந்தச்செயல்களில் ஜேனும் மிகவும் ஆர்வமுடன் ஈடுபட்டாள். அவர்களின் உறவில் மீண்டும் நெருக்கம் உண்டானது. 

சித்திராவிடம் வந்து ஜேன் வழக்கம்போல் தனது மனக் குறைகளைச் சொன்னபோது, “உலகத்தின் துன்பத்தைக் குறைக்கப் பாடுபடுகிறான். உனது துன்பத்தைப் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறான் என்பது உனக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது இவர் தங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பார்க்காமல் எங்கேயோ அலைகிறார்” என்று சித்திரா சொல்ல, 

“டேவிட் உலகத்தைப் பற்றிக் கவலைப்படுவதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். அவன் பணத்திற்காக எதையும் எழுத மாட்டான். எதையும் செய்ய மாட்டான். ப்றிலான்ஸ் சில் போர்ட்டராக இருப்பதால் ஓரளவு சுதந்திரமாகவும் சுயமையுடனும் எழுதலாம் என்று நினைப் பதால்தான் அவனின் நேர்மை என்னைக் கவர்கிறது”, ஜேன்பெருமூச்சு விட்டாள். 

“இப்போது என்ன செய்யப் போகிறாய்?’ டேவிட் விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்று திண்டாடிக் கொண்டிருக்கும் ஜேனைக் கேட்டாள் சித்திரா. 

“நாங்கள் இருவரும் எங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்று எப்போதோ சொல்லிக் கொண்டது உண்மை. இப்போது எனக்குக் குழந்தை வந்தது இருவருக்கும் பொறுப்பான விடயம்தான். ஆனால் அரைகுறை மனத்துடன் இந்த மாற்றத்திற்கு முகம் கொடுப்பது சரியில்லை என்று நினைத்தேன்” 

“அப்படியானால்,….”

“அவனைச் சுதந்திரமாக வாழ விடாமல் நான் தடுக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.” ஜேனின் குரல் தெளிவாக இருந்தது.”ஆண் களின் தயவில்லாமல் பெண்களால் வாழ முடியும்.” ஜேன் தொடர்ந்து சொன்னாள். 

“அதாவது” 

ஜேன் சித்திராவை நேரே பார்த்தாள். ஜேனின் முகத்தில் இருந்த தெளிவு சித்திராவை வியக்கப் பண்ணியது. 

சில வாரங்களுக்கு முன் என்ன செய்வேன், எப்படி எதிர்காலம் இருக்கப் போகிறது, டேவிட் விரும்பாவிட்டால் நான் இந்தக் கர்ப்பத்தை வளர்த்துக் கொண்டிருப்பது சரியா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த குழப்பமான பெண்ணாகத் தெரியவில்லை. அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதில் மிகத் தெளிவாக இருந்தாள். பிரச்சினை களை எப்படி ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு கோணத்தில் அணுகு கிறார்கள் என்பதை ஜேன் புலப்படுத்தினாள். தனது நீண்ட தலைமயிரை ஒதுக்கிக் கொண்டாள். ஜேன்தன் சினேகிதியை அன்புடன் பார்த்தாள். 

“சித்திரா நீ எவ்வளவு தூரம் எனது முடிவுகளுக்கு உதவி செய்தாய் என்பதை நான்விளங்கப்படுத்த முடியாது. ஒரு பெண்ணுக்கு சாட்டுக்கும் போக்குக்கும் ஒரு ஆண் துணை இருப்பதைவிட ஒரு பெண் தன் மனச்சாட்சியின்படி நடப்பது சரி என்று நீ எனக்குப் புலப்படுத்தினாய். நீ அடிக்கடி சொல்வாயே, அதாவது, நாராயணன் என்னை மறந்ததோ மறுத்ததோ பற்றி நினைத்து நினைத்து அழப் போவதில்லை. நாளைய உலகம் எனக்கு நன்மையாயிருக்க வேண்டும். அந்த உலகத்திடம் என்னை நம்பிக்கையுடன் அர்ப்பணித்திருக்கிறேன் என்றும் நீ சொன்னாய். உனது வார்த்தைகள் என்னை யோசிக்கப் பண்ணியது. ஒரு உயிர் மிகவும் அற்புதமானது. ஆண்களின் எதிர்பார்ப்புகளுக்காக நான் அந்த உயிரை அழிக்கும் கொலைகாரியாகத் தயாரில்லை. டேவிட் இல்லாத வாழ்வு மிகவும் துக்கமாகத்தான் இருக்கும். ஆனால் எனது எதிர்காலம் குழந்தையுடன் மிகவும் சந்தோசமாகவும், திருப்தியாகவும், நேர்மையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன், அதில் டேவிட் இணைந்து கொண்டால் மிக மிகச் சந்தோசப்படுவேன்” ஜேனின் குரல் தழுதழுத்தது. சித்திரா மௌனமானாள். ஜேன் தொடர்ந்தாள். 

“ஒரு உறவு உடையும்போது அந்த உறவின் இனிமைகளை நினைத்துக் கொள். வேண்டாத நினைவுகளை அகற்றிக் கொள். சந்திப்புக்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு நியதியுடன்தான் நடக்கிறது.நான் டேவிட்டுடன் வாழ்ந்த வாழ்க்கை உண்மையானது. சந்தோசமானது. அவன் மிக மிக நல்லவன். இப்போது என்னோடு சேர்த்து இன்னொரு உயிரையும் சேர்த்துப் பார்ப்பது அவனுக்கு முடியாமல் இருக்கிறது போலும். அதற்காக நான் அவனைத் திட்டவில்லை. காதலின் ஞாப கங்கள் மனதில் இருக்கிறது. அவன் இன்றைய நாளிலிருந்து எப்படியும் வாழட்டும்”. 

“அதாவது டேவிட்டை விட்டுப் பிரிவது என்று தீர்மானித்து விட்டாய்.” 

ஜேன் சித்திராவின் கேள்விக்குப் பதில் பேசவில்லை.

– தொடரும்…

– நாளைய மனிதர்கள் (நாவல்), முதல் பதிப்பு: டிசம்பர் 2003, புதுப்புனல், சென்னை

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *