நாமிருக்கும் நாடே…
கதையாசிரியர்: தெளிவத்தை ஜோசப்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2026
பார்வையிட்டோர்: 121
(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காய் கறிச் சந்தை பிதுங்கி நின்றது. போர் போராய் காய் கறிகளும் புற்றீசல் போல் ஆட்களும் குவிந்து கிடந்தன. ‘ஏன்டாப்பா பழுத்த கோசா இலை எல்லாம் வெச்சு நிறுக்குறே.’
நாலைந்து பழுத்த கோசா இலைகளை பிய்த்து வீசினாள் ஒரு அம்மா,
‘அம்மா, அம்மா, பிக்காதங்க! நானும் நெறுத்துத்தான் வாங்கியாந்தேன். பழுத்த எலைனா வாணாம்னுட்டு போயிருங்க.
பதறினான் கோசா வியாபாரி.
அப்போது அங்கே வத்து நின்ற கிழவன் அந்த அம் -மாள் பிய்த்து எறிந்த நாலைந்து மட்டைகளைக் கையில் எடுத்துக் கொண்டான். இன்னும் இரண்டு, மூன்று மட்டை யாவது கழரும் என்றுதான் அவன் எண்ணினான். அதில் தானே இருக்கிறது அவனுடைய ஜீவியம்……
‘ஹ்ம்ம், இனிமேல் தேங்காயையும் நெறுப்பீங்கடாப்பா’. என்று முனகியபடி நகர்ந்தாள் அந்த அம்மா.
சுற்று வட்டத் தேயிலைத் தோட்டத்தில் உள்ளவர்கள் தேயிலை மலையே சதம் என்பதை விட்டவர்கள் தங்களுடைய ஓய்வு நேரங்களில் உண்டாக்கிய காய்கறிகளை அந்தச் சந்தையில் கொணர்ந்து விற்பது வழக்கம்.
காய் கறிக்காரனின் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரனும் சந்தைக்கு வந்து அவனிடம்தான் காய் கறி வாங்குவான். அதை அங்கேயே வாங்கிவிட்டால் ‘சந்தைக்குப் போய் காய் கறி வாங்கியாந்தேன்’ என்ற பெருமை கிடைக்குமா?
உச்சி மண்டையில் ‘சுள்’ளென்று சுட்டது வெய்யில். அந்தக் கிழவனைத் தவிர சந்தையில் முன்கால் வளைந்த ஒரு மாடு மட்டுமே இருந்தது.
இறைந்து கிடக்கும் பலவகைக் கீரை வகைகள், அழுகிப் போன காய்கறிகள் ஆகியவற்றைப் பொறுக்குவதில் நொண்டி மாட்டுக்கும் அவனுக்கும் போட்டி.
‘திம்’மென்று ஒரு சாக்கு சேர்த்து விட்டான் கிழவன், இனி அதைத் தூக்கிக் கொண்டு மூன்று மைல் நடக்க வேண்டும். மூன்றுகல் தொலைவில் ஒரு ‘ துரை ‘ ‘பன்றி’ வளர்க்கின்றார். அவரிடம்தான் கிழவனுக்கு வார உத்தியோ கம். சந்தை கூடும் தினங்களில் இப்படி மீந்தவைகளை கட் டிக் கொண்டு போக வேண்டும். எத்தனை ‘சாக்கு’ கொண்டு போகின்றானோ அதற்குத் தான் கூலி.
தோளுக்கு ஏறிய சாக்கு தள்ளாமையினால் தரைக்கே வந்தது.கிழவன் ‘உஸ்’சென்று உட்கார்ந்தான்.
புடைத்து நின்ற விலா எலும்புகளிலும், மார்புக் குழியில் மண்டிக் கிடந்த வெண்மயிரிலும் கோர்த்து நின்ற வியர்வையை பின் கையால் துடைத்துக் கொண்டான் கிழவன்.
அவனுக்கு வயது எழுபதுக்குக் குறையாது. மேல்மூச்சுத் திணற மூட்டையைத் தலைக்கேற்றி விட்டான். இனி எழுந் திருக்க வேண்டும். கயிறு போல் தொங்கும் கால்கள் வெட வெடக்க, பெரு முடிச்சாய் முழங்கால் எலும்பு சுருண்டு நிற்க, ‘தம்’ கூட்டி எழுந்து விட்டான் கிழவன். சிறிது நேரம் அப்படியே நிற்கிறான். பிறகு அடிமேல் அடி வைத்து நடக்கிறான்.
இந்தத் தள்ளாத வயதில் அவன் ஏன் இப்படி அல்லல் பட வேண்டும். சாகும் காலத்தில் உட்கார்ந்து சாப்பிட ஒரு வழி தேடிக் கொள்வது தானே வாலிபத்தின் முதற் கடமை. அந்தப் பருவவத்தில் அவன் என்ன செய்தானாம்……?
உட்கார்ந்து மட்டுமல்ல, காலை நீட்டிக் கொண்டு படுத்த வண்ணம் சாப்பிடுமளவிற்கும் அவன் சம்பாதித் தான் – சேர்த்தான். அதெல்லாம் இப்போது எங்கே? எல்லாம் கண்மூடித்தனம் தான்!
அவனுடைய கதை விசித்திரமானது.
‘தெள்ளிப்பனை’ எஸ்டேட், மானேஜரின் அபிமானம் பெற்ற குதிரைக் காரன் தான் இந்தக் கிழவன். அந்த கோட்டுகளை நாளில், துரை தனக்குக் கொடுத்த பழைய மாட்டிக் கொண்டு குதிரையில் ஏறினான் என்றால் ஆட்கள் சலாம் போடுவார்கள் துரை வருகிறார் என்று.
தோட்டத்தில் அவனுக்குக் கிடைப்பது எழுபது ரூபாய். துரையின் சந்தோஷம் அது இது என்று எண்பது தொண் ணூறுக்குக் குறையாது சம்பளம். சாப்பாடெல்லாம் பங்க ளாவில் மீந்தது தான். ஆகவே செலவு கம்மி. கையில் கொஞ்சம் பசையுள்ளவர்களில் அவனும் ஒருவன்.
‘தம்பி வீரா, நாட்டுல, ஆத்துக்கு மேலை ஒரு ரெண் டேக்கர் நெலம் கிடைக்குதாம். அப்புஹாமி சொன்னான். எங்கிட்ட கையில மடியில இல்லாத கொறை. இல்லாட்டி இப்பவே வாங்கிப் போட்டுறுவேன். கருப்பட்டி மாதிரி மண்ணு.
கொட்டப் பாக்குத் தட்டக்கொட பொட்டுக் கல்லு கிடையாது. நாலு மரவள்ளிக்கம்பை ஊணி. நடுவில ஒரு குடுசையும் போட்டுக்கிட்டா நம்ம சோறு நாய் திங்கும், என்ன சொல்றே?’
வீரமுத்து நல்ல நிலையில் இருந்த நேரத்தில் அவனிடம் அளந்தான் நாட்டு ராமன்.
‘அதெல்லாம் எதுக்கண்ணே’ என்று மழுப்பினான் வீரன்.
‘அப்படிச் சொல்லாதே தம்பி, தள்ளாத காலத்திலே ஆவுமில்ல. சாமி மறந்தாலும் பூமி மறக்காதும்பாங்க…
‘அது சரி பூமி மறக்காதுதான். அதுக்காவ இந்த சிங்களவன் சீமையில காசைப் போடச் சொல்லுறியா? நம்ம ஊரு கிடக்குல்ல அங்கே கடல் மாதிரி”
நாட்டு ராமனை அமுக்கி அனுப்பிய கையோடு சித்தப் பன் மகனுக்கும் ஒரு கடிகம் எழுதிப் போட்டுவிட்டான். ஏதாவது நல்ல நிலம் தட்டுப்பட்டால் விட்டுறாதேன்னு அவனும் ‘சரி’ என்று எழுதியதோடு இப்பெல்லாம் நிலம் கிடைப்பது கயிட்டம் அப்படி ஒண்ணு வருதுண்ணு தெரிஞ்சா உடனே அட்வானுசு கட்டணும். அப்படி கட்டி வைச்சாத்தான் கிடைக்கும். ஆகவே, காசு கொஞ்சம் காசு அனுப்பி வை’ என்றும் எழுதியிருந்தான்.
பணம் அனுப்புவது எப்படி?
நூற்றுக்கு முப்பதென்றான் ஒரு முதலாளி. இருபத் தைந்து என்றான் இன்னொருவன். இருபத்தைந்து என்றவனை கையைக் காலைப் பிடித்து ஐந்தைக் குறைத்து முதல் முதல் ஐநூறு ரூபாய் அனுப்பினான். அதற்கு முதலாளிக்கு நூறு ரூபாய். மிருகத்தோடு மிருகமாய் போராடிக் சேர்த்த நூறு ரூபாய் விள்ளாமல் விரியாமல் முதலாளியின் பெட்டியை அடைகிறது. அப்படி நூறு நூறாய் எத்தனையோ நூறு முதலாளியின் பெட்டியில் போட்டாயிற்று.
கஷ்டப்பட்டுச் சேர்க்கச் சேர்க்க காசும் கடலைத் தாண்டிக் கொண்டே இருந்தது.
தோட்டங்களில் குதிரைப் பாவனை குறைந்தது. குதி ரையை விற்றாயிற்று. வீரமுத்துவிற்கு மலை வேலை கிடைத்தது.
இவ்வளவு நாளும் நாசூக்காகத் திரிந்தவனுக்கு இப் போது உடல் வளையுமா? கஷ்டப்பட்டு பத்து நாள் பெயர் போடுவான். இருபது இருபத்திரண்டு ரூபாய் சம்பளமிருக் கும். சாப்பாட்டிற்கு, அதற்கு இதற்கு, என்று என்ன செய்ய முடியும் அதில்.
ஒரு நாள் அவனுக்கு இரண்டு ‘இங்கிலீஸ்’ கடுதாசிகள் வந்தன. அவன் அசந்தே போனான். ‘ஐயோ ஆண்டவனே, என்ன தொந்தரவோ என்று பயந்து கிளார்க்கய்யாவிடம் தூக்கிக் கொண்டோடினான்.
‘வீரா, நீ ஒன்னும் பயப்படாதே! இது ஒரு ‘றிசிஸ் டர்’ கடுதாசி வந்திருக்குன்னு சொல்றதுண்டு. இந்த மற் றது, உனக்கு ‘பிரஜா உரிமை’ கிடைக்குதாம், சத்தியம் பண்ண டவுனுக்குப் போவியாம்,’ என்று விளக்கினார். ‘என்னமோ ஏதோன்னு பயந்து போனேன் சாமி,’ என்று அமைதியானான்.
எப்போதோ ஆபீசுக்குப் போய் அவர்கள் உளறிய கேள்விகளுக்குத் தோணும் பதிலொன்று ஏதோ உளறி விட்டு வந்தது அப்போது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது.
காகிதத்தில் குறிப்பிட்டிருந்த அன்று டவுனுக்குப் போய் அவர்கள் காட்டிய இடத்தில் கை எழுத்திட்டுவிட்டு ரெஜிஸ்டர் கடுதாசியையும் எடுத்து வந்தான். அந்தக் கடிதம் ஊரிலிருந்து வந்திருந்தது. நிலம் வாங்கிய அத் தாட்சி அது இதென்று நாலைந்து அச்சடித்த தாள்கள் அதில் இருந்தன.
நாட்கள் பறந்தன. மாதங்கள் மறைந்தன. வருடங்கள் விரைந்தன.
ஒரு நாள் துரை வீரமுத்துவை ஆபீஸுக்கு அழைத் திருந்தார்.
‘சலாங்க சாமி’
‘சலாம் வீரமுத்து! ஒன்னை ஏன் வரச் சொன்னேன் தெரியுமா?……’
‘சொல்லுங்க……’
‘உனக்கு இப்ப என்ன வயது……”
‘அறுபதுங்க……’
‘அறுபத்து ஐஞ்சு! இனிமேல் ஒனக்கு வேலை செய்ய ஏலாது…’
‘தொரை அப்படிச் சொல்லப்படாதுங்க. இன்னும் நாளைஞ்சி வருஷம் என்னாலே நல்லா வேலை செய்ய முடியுங்க …’
‘ஆமா வாயில சொல்லிட்டாப் போதாது. ஒன்னு டைய வேலைக் கணக்கு எங்கிட்ட இருக்கு! ஒரு மாதத்துல இருபது நாள் ஒன்னால வேலை செய்ய முடியுதா…! வேற பேச்சு வேண்டியதில்லையே…. முதல்தேதியிலிருந்து உனக்கு பென்சன்…’
துரையிடம் ஒன்றும் எதிர்த்து பேச முடியாத அவனும் அழுத வண்ணம் நடந்து விட்டான்.
கடல் போன்ற சீமையில நெலம் வாங்கியிருக்கான். மாளிகை கட்டியிருக்கான். அதை அனுபவிக்க அங்கே போக வேண்டுமே! இன்றைய அரசியற் படல் பின்னலில் கடலைத் தாண்ட அவனால் முடிமா?
கடல் வற்றிய பிறகு ஒரு வேளை கால் நடையாய் போனால் உண்டு. அது சாத்தியமா……? இல்லை எனில் ! இதோ மூச்சு விடவே சத்தியில்லாத நேரத்தில் மூட்டை தூக்குகிறானே, அந்த இலை பொறுக்கி ஜீவனம் தான்.
– மலைமுரசு ஆண்டு மலர், 1963.
– நாமிருக்கும் நாடே… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1979, வைகறை வெளியீடு, இலங்கை.
தொடர்புள்ள சிறுகதைகள்
சாணை பிடிக்கலையோ சாணை
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
September 27, 2026
தனக்கு வந்தால்
ஸ்ரீ.தாமோதரன்
September 27, 2026
ஒளிரும் பிறை
மா.வீ.தியாகராசன்
September 24, 2026