கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2026
பார்வையிட்டோர்: 175 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்திக் கதிரவன் சிந்தி மறைந்த செவ்வொளிக் குழம்பில் மூழ்கித் திளைத்தன, வானத்தை எட்டித் தொட் டுக் கொண்டிருந்த தூரத்து மலைகள். உச்சிப் போதின் வாலிப முறுக்கைச் சற்றே தளர்த்தி வயோதிக வாஞ்சை யுடன் உலகை ஒரு கனிவுப்பார்வை பார்த்துவிட்டுப் பகலவன் மலைச் சரிவில் இறங்கியிருக்கிறான். அந்தியும் இரவும் சந்திக்கும் அந்த நேரத்தில் உலகுக்குக் கிடைக்கும் அழகே அலாதிதான். அமைதியான அழகு! தூங்கும் சம்மனசு போல. 

வழித்தெடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளும் வண் ணம் குங்குமமாய்க் குழம்பிக் கிடந்தது அடிவானம். செவ் வந்தி வானத்துக்கு அழகுச் சவால் விட்டது செவ்வந்தி மலர்த் தோட்டம். இரண்டுமே தோற்றுக் கவிழ்ந்தன. இருள் வானமும் பூமியும் ஒன்றாகி நின்றன. 

உலகுக்கு ஒன்று என்றிருந்த பெரு விளக்கு அணைந்த வுடன் வீட்டுக்கு ஒன்றாய் முளைத்தன சிறு விளக்குகள் திடீர் திடீரெனத் தோன்றும் திடீர்த் தலைவர்கள் போல! 

கறுப்புடன் கறுப்பாய், பூதமாய்ச் கனத்து நிற்கும் சவுக்கு மர வரியிடை இடுப்பளவு நின்ற தேயிலை நிரைகளை நீவிக் கொண்டு நடந்தது ஓர் உருவம், அரிக்கேனும் கையு மாக. உதட்டிலே கருஞ் சுருட்டு; உடலிலே கருங் கம்பளி, இரண்டுமே சூடேற்றத்தான். 

அவனுடைய வலக் கை பற்றியிருந்த குறுந்தடியில் குருதி ஓடிக் காய்ந்து கிடந்தது. அவசரமாக இலையால் துடைத்திருக்கின்றான். அதுதான். அப்படிச் செவ்வரியாய்க் கோடு பாய்ந்து கிடக்கிறது. வீட்டை அடைந்தவன் சோற்றைத் தின்று விட்டுச் சுருட்டிக்கொண்டான் திண்ணைக் கட்டில். 

காற்றில்லாமல் புழுங்கிய அந்த இடம் போலவே அவன் மனமும் புழுங்கியது. இறுக இறுகக் கண்களை மூடி யும் நித்திரை எட்டாத உயரத்திலேயே நின்றது. மூடிய கண்களுக்குள் சூனியமா, பிரளயமா? 

பிரளயந்தான். 

தெளிவாகத் தெரியாத ஏதோ காட்சிகள் திப்பித் திப் பியாய். திடுக்கிட்டவன் பயந்து அவசரமாகக் கண்களைப் பரக்க விழித்தான். உலகம் முழுவதுமே இருள். சாவின் அமைதி. 

கண் பார்த்த திக்கில் ஆகாயத்தின் இருண்ட நீலத்தில் இரண்டொரு நட்சத்திரங்கள், பெரிய விளையாட்டு மைதா னத்தில் நாலைந்து சிறுவர்கள் நிற்பது போல. 

மீண்டும் கண்களை மூடிக் கொண்டான்; மீண்டும் பிரளயம். 

அப்போது அவன் கைகூப்பிக் கும்பிட்டது நித்திரா தேவியை. 


தேயிலைத் தோட்டத்தின் எல்லைக் கோடாய் ஓடும் ஆற்றின் கீழ்க்கரையில் அடர்ந்து நின்றது ஒரு சிறு காடு. ஆற்றுக்கும் அடவிக்கும் இடையே வாலோடியாகக் கிடந்த இடத்தில் தோட்டத்திலுள்ள தொழிலாளர் சிலர் சேனை பயிரிட்டிருந்தனர். ‘கொறட்டுக் கத்தி ஆண்பிள்ளையை விடாது; கொழுந்துக் கூடை பெண் பிள்ளையை விடாது’ என்ற சித்தாந்தம் என்றோ சிறகொடி பட்டு விட்டது. மலைநாட்டு மக்கள் அவை இரண்டையே துடுப்பென்று எண்ணி வாழ்வுத் தோணியைத் தள்ளிய காலம் கழிந்து விட்டது. 

ஆகவே மலையில் ஏறி வேலை செய்த நேரம் போக மீதி நேரத்தில் சேனை வெட்டுவார்கள். சோளம், கேழ்வரகு, கொள்ளு, மரவள்ளி என்று அவ்வப்போது பருவத்துக் கேற்பப் பயிரும் மாறும். வேலை முடிந்த கையோடு சேனைக் கும் போய் வேலை செய்து விட்டு வேர்வைப் பிசுக்கை ஆற் றுடன் கழுவி விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தால் சோற்றை வயிற்றிலே போட்டுவிட்டுச் சோர்ந்த உடலைத் திண்ணைக் கட்டிலே போடவேண்டியது தான். 

ஆறு என்றதும் ஏதோ எண்ணிவிடப் போகிறீர்கள், கங்கையோ, மாவலியோ என்று. கல்லுக்குக் கல் காலை வைத்தே அக் கரையை அடைந்து விடலாம். பாறைகளூடே தான் நீர் ஓடும், பாலாய் நுரைத்துக் கொண்டு. 

வாயுகுமாரன் தீக்கிரையாக்கிய மண்ணின் ஒரு பின்னந் தான் என்பதற்கு வாரிசுபோல, மண் கன்னங்கறேல் என் றிருக்கிறது, பொரு பொருவென்று பிட்டுக்குக் கிளறிய மாவு போல. 

எதுதான் விளையாது அந்த மண்ணில்? பொன்னை விதைத்தால் பொன்னாய்க் காய்க்கும். 

கொல்லை கொள்ளாமல் இப்போது நிற்பது மரவள்ளி, இரண்டடிக்கு ஒரு குழிதான் என்றாலும் இலையும் இலையும் பின்னிக் கிடக்கின்றன. நீ ண்ட செங்காம்பில் விரலாய்ப் பிரிந்து நிற்கும் செம்பச்சை இலையை நிமிண்டினால் பால் சொட்டும். அத்தனை செழிப்பு! 

கொல்லையின் நடுவே குன்றாய் நின்ற மட்டப் பாறை யில் படர்ந்து கிடந்த பெங்களூர் கத்திரிக் கொடி குண்டு குண்டாய்க் காய்த்துத் தொங்கியது. வானளந்து நின்ற செண்பக மரத்தின் வைர உடலுக்குப் பசும் போர்வையிட் டது மிளகுக் கொடி. ஆற்றின் அண்மையில் ஆளுயரம் நின்ற ஒரு பட்ட மரத்தைப் பாடாய்ப் படுத்திக் கொண்டி ருந்தது வெற்றிலைக் கொடி. 

விரிந்து கிடந்த கொல்லையின் விளைச்சல் அத்தனையை யும் பரக்க விரித்த இரு கண்ணுக்குள் பாய்ச்சிக் கொண்டு மனம் துள்ள நடந்து கொண்டிருந்த கொல்லைக்காரன் துணுக்குற்று நின்றான். மரவள்ளித் தூர்களின் அடியில் வரி வரியாய் வெடித்து நின்ற மண்பிளப்பினூடாகப் பருத்துத் திரண்ட கிழங்கினை எண்ணி மகிழ்ந்த மனவோட்டம் தடைப்பட்டு நின்றது; குத்திட்டு நின்ற கால்களைப்போல. 

தாறுமாறாய்ச் சாய்ந்து கிடந்த செடிகளையும், பாதி கடித்தும் துப்பியும் இழுத்தெறிந்து குதறியும் கிடந்த கிழங்குகளையும் கண்டதும் விக்கித்து நின்றான். 

தொண்டைக் குமிழ் ஏறி இறங்கியது. வேதனையுடன் கலந்த ஆத்திரத்தை விழுங்கிக் கொண்டான். சுற்று முற்றும் பார்த்தான். செங்கல்லாய் இறுகிக் 

கிடந்த முகத்தில் ஆவேசக் சிரிப்பு. காச்சு மூச்சென்று காட்டுக்குள் கேட்ட சப்தம் தீப்பொறியாய்த் தட்டியது. 

குரங்குகளின் அட்டகாசந்தான் அத்தனையும். ‘இரு, உனக்குச் செய்கிறேன் வேலை’ என்று கறுவியபடி, சாய்ந்து கிடந்த செடிகளை இழுத்தெடுத்தான். 

மழமழவென்ற வெண்மையாக உயர்ந்து நின்ற செண் பக மரத்தில் ஏதோ சலசலத்தது. மிளகுக் கொடி பிரிந்து கிடந்தது. 

இடக் கையைக் கண்ணுக்குக் குடையாய் நெற்றியில் வைத்து அண்ணாந்து பார்த்தான். சூரியக் கதிர் கண்ணாடி ஊசியாய்க் கண்ணுள் தைத்தது. இடத்தை மாற்றி ஏறிட் டான். மேலே இரண்டு குரங்குகள்; ஆணும் பெண்ணுமா கத்தான் இருக்க வேண்டும். 

ஆத்திரம் தீரக் கல் என்றும் கம்பென்றும் எறிந்தான். கை வலித்தது. கத்தினான். வாய் வலித்தது. குரங்குகள் இறங்கவில்லை. மாறாக மேலே மேலே என்று உச்சிக்குப் போய் உடல் சிறுத்துத் தோன்றின. ‘இரு இரு’ என்று மரத்தைக் காட்டிச் சபித்தபடி நடந்து விட்டான். 

கொடியின் அடியிலிருந்து ஒரு வெற்றிலையைப் பறித்து மண்ணை அலசிக் கொண்டு பையுள் கையை நுழைத்துத் துழாவினான் – பாக்குக்காக. 

உடல் மட்டும் வீட்டுள் துழைந்ததே தவிர, உள்ளம் கொல்லையிலேயே நின்றது. பயிர் நாசமாகிறதே என்ற கவலை. 

அடுத்த நாள் அந்தி சிவக்கு முன்னமே வந்து அமர்ந்து கொண்டான் ஒரு பற்றை மறைவில். காட்டிலிருந்து இறங் கிய குரங்குக் கூட்டம் கொல்லையுள் நுழைந்து, செடிக்கு ஒன்றாய் அமர்ந்து மண்ணைத் தோண்டின. முன்கால் பறித்த மண்ணில் பின்கால் புதைபட்டது. 

குமடுகள் உப்பித் தொங்கின. செடிகள் சாய்ந்தன. கொல்லைக்காரன் முழங்கால் பாய்ச்சி நடந்தான். வலக்கை இறுக்கத்தில் ஒரு கருந்தடி. 

‘கீச் கீச் கர் கர்!’ ஒரு குரங்கு குரலெழுப்பிக் கூச்சலிட் டது. கண் மூடித் திறப்பதற்குள் காற்றாய் ஓடின. மலையுச் சியிலிருந்து ருட்டி விடப்பட்ட கற்கூட்டமாய் முட்டி மோதிக் கொண்டு விரைந்தன. ஓங்கிய தடியை எறிய வாய்க்கவில்லை அவனால் வளர்ந்து நின்ற செடிகள் தடுக்கின. கண்ணெதிரே ஓடும் பயந்த எதிரியை ஒன்றும் செய்ய வசதியற்ற ஏமாற்றத்தின் இறுக்கம் அவன் முகத் தில் வெடித்துத் தொங்கியது. வசதியான இடம் தேடி முன்னேறினான். 

மிகவும் பின்தங்கிவிட்ட ஒரு குரங்குக்கும் அவனுக்கும் ஒரு உள்ள இடைவெளி குறுகிற்று. எறியப்போகும் தடியைத் தடுக்க இடையிடையே செடிகளற்ற பொட்டல். குறி பார்த்துத் தடியை ஓங்கினான். சிரமத்துடன் ஓடிக் கொண்டிருந்த குரங்கு திரும்பி உட்கார்ந்து அவனைப் பார்த்தது. 

தோல் சுரண்டிய கருணைக் கிழங்காய் அதன் அடிவயிறு உரோமம் விட்டுக் கிடந்தது. நெருப்பு வெந்த புல்லுமலை யின் செங்கறுப்பு வண்ணத்தில் உப்பித் தெரிந்த வயி விம்மித் தணிந்தது. நிறை மாதச் சினைக் குரங்கு. அது தான் பாய்ந்தோட முடியவில்லை. இராத் தூக்கம் விழித்த மனிதனைப் போல அது களைத்துத் தோன்றியது. 

சேம்புக் காம்பாய் நீண்ட தன் இரு கைகளையும் ஒன்றாய்க் குவித்துக் கும்பிட்டது அவனை. உயிருக்கு மன்றாடும் மருட்சி அதன் நீண்ட முகத்தில். 

ஓங்கிய கை பிடியை விட்டது. மின்னற் கோடாய்ச் சிதறியடித்தது ரத்தம். பாகற் பழமாய்ப் பிளந்து புரண்டது சிறு மந்தி. 

‘கீ…ச்…’ என்ற மரண இரைச்சல் கல்லில் மோதிக் காற்றில் கலந்தது. 

வயிறு கிழிந்து கிடந்தது குரங்கு. வயிற்றுள் இருந்த குட்டி சிதறியோடி விட்டது, உருத்தெரியாமல் கல்லில் அடித்த மாங்காயாய். 

கம்பெறிந்தவன் கண்ணை மூடிக் கொண்டான். காணச் சகியாத ஓர் அவலக் காட்சி. கண்ணுக்குள்ளும் பிரளயம்; ரத்தக் களரி; திப்பி திப்பியாய்த் தசைத் துணுக்குகளும், இரத்தப் பிசுக்கும்… 

அவனுக்கே தலை சுற்றுவதுபோல இருந்தது. கண்ணை மூடிக் கொண்டால் போதுமா? மனத்தை மூட வேண்டாமா? 

தடியை எடுத்தான். எங்கோ பார்த்துக் கொண்டு இரண்டு ‘செள சௌ’ இலைகளைப் பறித்துத் தடியைத் துடைத்துக் கொண்டு நடந்தான். 

செந்தட்டி. இலை தட்டினாற் போன்று உடலிலே ஒர் எரிவு; மனதுக்குள்ளுந்தான்; மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்றவைத்தது மாதிரி. 

செண்பக மரக் கிளையில் பதுங்கியிருந்த ஆண் குரங்கு மெதுவாகக் கீழே இறங்கியது, நீரொழுகும் கண்களுடன். 


‘எங்கே விடிந்தது; கொலையில் விடிந்தது’ என்று போய் நின்றான் அடுத்த நாள். கொட்டும் பனியில் செடி கொடிகள் குளித்து நின்றன. பாதத்தில் பட்ட பாதை யோரப் பசும் புல்லின் பனிநீர் உச்சி மயிரைக் குத்திட்டு நிறுத்தியது. ஈரப் பாதத்தில் ஒட்டிக் கொண்ட குறுமணல் ஊன்றிய அடியை ஊசியாய்த் தைத்தது. குத்துகிறதே என்று மெதுவாக அடி வைத்தாலும் விரைவாகவே நடந் தான். உடலில் உரசிய சிலுசிலுப்பு உள்ளக் கொதிப்புக்கு இதம் தரவில்லை. 

நேற்றைய நிகழ்ச்சி மனதை நெருப்பாய்க் காய்ச்ச, நீட்டக்கால் பாய்ச்சி அதே இடத்தை எட்டிப் பார்த்தான். அழுது வடிந்து கொண்டிருந்த ஆண் குரங்கு அரவம் கேட் டதும் தரையில் கால் பாவாமல் தாவி மறைந்தது. 

ஆயிரம் குரங்குகள் கூடி இருந்ததற்கான அடையா ளங்கள் தெரிந்தன. இறுதிச் சடங்கு நடந்திருக்கலாம். நேற்றைய நிகழ்ச்சிக்கான ஒரு சிறு வடுக்கூடக் காணவில்லை. 

அந்த இடம் போலவே வெறுமை ஒடிக் கிடந்த அவ னுடைய மனத்தில் ஒரு சிறு மகிழ்ச்சிக் கீறல், இடம் துப் புரவாகி விட்டதனால் ஏற்பட்டது. ‘எப்படிக் காண்பது அந்தக் கண்ணராவியை?’ என்றுதான் வந்தான். 

என்றும் போல் சோர்வுடன் வீடு திரும்பிக் கொண்டி ருந்தான் கொல்லைக்காரன், மறுநாள் கார்த்திகைக் கொடி யாய்ப் பூத்துக் கிடந்தது வானம். வாயில் இருந்த சுருட்டை எடுத்து ஊதிப் பார்த்து எறிந்தான். மலைச் சரிவுக்கேற்பத் தட்டுத் தட்டாய் ஒன்றன் கீழ் ஒன்றாய் விளைந்து கிடந்த வயல்கள் பொன்னாய் மின்னின. வயலைத் தாண்டித் தேயிலைக் குறுக்குப் பாதையில் இறங்கியவனுக்கு, அவனுடைய வீடும் தெரிந்தது. அங்கே ஏதோ கூச்சல். வழக்கம்போல யாரா வது சண்டை போட்டுக் கொள்வார்கள் என்று எண்ணிய வாறு நடந்தான். நேற்று முன்தினம் நடந்த எதுவும் நினைவில் கூட இல்லை. 

மனிதர்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள். ஒவ்வொரு வனும் பிரச்சனைகளையே எண்ணிச் சிக்கவிழ்த்துக் கொண்டி ருந்தால் உலகம் என்றோ சிரிப்பை மறந்திருக்கும். 

அங்கே கூச்சல் இப்போது அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. ஏறி நின்ற குரல் அவன் மனைவியினுடையது. தன் வீட்டுக்கும் குழப்பத்தில் பங்கு உண்டு போலிருக்கிறதே என்ற எண்ணம் வந்ததுமே மெதுநடை விரை நடையாகிப் பின் ஓட்டமாகியது. 

‘ஐயோ என் மகனே, ராசா, நீ எங்கேடா போனே?’ என்ற மனைவியின் கூக்குரல் அவன் கண்முன் எதையெ தையோ இழுத்து வந்து நிறுத்தியது. 

அவள் முட்டிக் கொண்டாள், மோதிக் கொண்டாள். தண்ணீர்க் கோடாய் அவள் கண்வழியே சன்னமாய் இறங்கியது அவளுடைய உயிர். 

அண்டை அயலோர் குழுமினர். பிறகு கலைந்தனர். சம்பிரதாயக் கும்பல். 

வெளியே தொட்டிலில் போட்டு விட்டு ஏதோ வேலை யாக உள்ளே இருந்திருக்கிறாள். திரும்பி வந்து பார்க்கையில் தொட்டில் காலியாகக் கிடந்ததாம். 

எப்படி நடந்தது என்ற சுவடு தெரியாமல்எத்தனை பெரிய பெரிய விஷயங்கள் நடந்து விடுகின்றன! இதுவும் அப்படித்தான். 

ஆற்றைத் தாண்டிக் காட்டினுள் ஓடினான் அவன், பேய் பிடித்தவன் போல. கல்லையோ மு ள் ளையோ அவன் கால்கள் சட்டை செய்யவில்லை. 

‘நினைத்தது நடந்து விட்டது; நினைத்தது நடந்து விட் டது’ என்று கரையோரக் கடலாய் இரைந்தது மனம். அந்த இருட்டில் எதை என்று தேடுவது? 

அடுத்த நாளும் காடெல்லாம் அலைந்தான். புற்றென் றும் புதரென்றும் விழுந்தெழுந்தான். கண் காது என்று கடுத்தனை இடம் இல்லாமல் காட்டு முள் கீறிக் கிழித்துவிட்டிருந்தது. இரத்தம் ஓடிக் காய்ந்து மேடு கட்டியிருந்தது. கொளுத்திய மெழுகு திரியாய். சோர்ந்து துவண்டு குடிகாரப் போதையுடன் அவன் திரும்பும் போது சூரியன் நடுவானத்தில் நின்றான், 

மயக்கம் போட்டுக் கிடந்த அவன் மனைவியை அடுத்த வீட்டுக் கிழவி பார்த்துக் கொண்டிருந்தாள். நேற்று விஷயம் தெரியாத இன்னொரு புதுக் கூட்டம் இடத்தை அடைத்துக் கொண்டு நின்றது. பெரிய மனிதரைக் கண்டதுபோல் கூட்டம் பிளந்து அவனுக்கு வழி விட்டது. 

நடந்துள்ள பெரிய விஷயம் அவன் வீட்டில் அல்லவா? முக்கியத்துவம் அவனுக்குத் தானே? 

‘குழந்தையைக் காணவில்லை என்றதும் ஏன் காட்டுக்கு ஓடினாய்?’ என்பதில் தொட்டு நூலாய் இழுத்து விட்டாள். அத்தனை செய்தியையும் கிழவி. விஷயம் தெரிந்த அத்தனை பேரும் ஒரே முடிவுக்குத்தான் வந்தார்கள். 

குரங்கு குழந்தையைக் கொன்று விட்டது; பழிக்குப்பழி வாங்கிக் கொண்டது! 

எத்தனையோ வழிகளில் தேடியும் தோல்வி கண்ட அவ னும் அவளுங்கூட அதே முடிவுக்குத்தான் வந்தார்கள். 

அவள் பைத்தியமாய் அலைந்தாள். மண்டை உடைந்து விட்டால் கட்டுப் போடலாம். மனம் உடைந்து விட்டால்…! 

சிதறச் சிதற அடித்தான், அடித்துக் கொன்றான் தாயை யும் பிள்ளையையும். அதற்குக் கேள்வி கேட்பாடு இல்லை; கோர்ட்டுக் கேசு இல்லை. இவன் மட்டும் போலீசில் பிராது பண்ணி வைத்தான், பிள்ளையைக் காணவில்லை என்று. 

மனிதனின் உயிருக்கு மாத்திரந்தானா பாதுகாப்பு? அதன் உயிரும் உயிர்தானே? துடி துடித்துத்தானே சாகிறது? அந்த உயிருக்கு அவ்வளவு பிரதான்யம் இல்லையா? மனிதன் கொடுப்பதில்லையா? 


ஒரு வாரம் நகர்ந்துவிட்டது. வயிற்றுப் பிள்ளைக்காரி யின் நடையாய், துயரம் தோய்ந்த நாட்கள் நீளமானவை. இஞ்சிக் கிழங்காய் இருந்தவள் எப்படிச் சுக்காய்ப் பொடிந்து விட்டாள்! அவனும் அடை கோழி போலத்தான் இருந்தான். ‘பொக்’கென்று கனமில்லாமல், ஒளியில்லை என்றாலும் தீபம் எரிகிறது. ஒளி போன்ற மழலையை இழந்துவிட்ட பின்பும் குடும்பம் இருந்தது; எரிந்து முடியப் போகும் எண்ணெயும் திரியும் போல. எண்ணெய் முந்துமோ, திரி முந்துமோ தெரியாது. 

இரும்பைத் துரு அரிப்பதுபோல இருவரையும் துயரம் அரித்தது. 

பொழுது புலரத் தவறினாலும் அவன் காட்டில் அலைவது தவறாது. காட்டிலைகள் மேடாய்க் கிடந்தால் கிண்டிப் பார்ப்பான். சந்து, பொந்து, கல்குடகு என்று சல்லடை யாய்ச் சலித்தான் மனம் சலிக்காமல். 

அதிகாலையில் அவன் கொல்லையில் அடி வைத்ததும் செண்பக மரத்தடியில் அழுது கொண்டிருக்கும் ஆண் குரங்கு பவ்யமாய்ப் பாய்ந்தோடும். காற்றாய் ஓடிக் காட்டில் கலந்து விடும். அதைத் தொடர அவனால் முடிவதே இல்லை. 

குரங்கைத் தொடர்ந்தால் குழந்தையை மறைத்து வைத்திருக்கும் இடம் தெரியுமல்லவா? குழந்தையே இல்லா விட்டாலும் குழந்தையின் உடல்… ஏதாவது ஒரு… 

நினைவே உயிரைக் கசக்கியது. நினைக்காமல் இருக்க முடியவில்லை. 

அலைந்து களைத்து அரை உடம்பாய் வீடு திரும்பினான். அங்கே இருந்த சிட்டுக்கள் சிறகை ஆட்டாமல் பறந்தன. சிறகொடிந்தாலும் பறக்கலாமா என்பதன் பரிசீலனை. 

தேயிலைக் குறுக்கில் கால் வைத்தவனுக்கு வெள்ளியாய் மின்னியது வீதிக் கூரை. 

அவனுடைய வீட்டின் முன்னால் நிழல் பரப்பி நின்ற பூவரச மரத்தடியில் ஏதோ கூட்டமாய்த் தெரிந்தது. ‘அவ! ளுக்கு ஏதும்……’ என்ற நினைவைத் தொடர விட மறுப்ப வனாய் எட்டிப் பாய்ந்தான், 

போலீஸ் நிலையத்தில் ஒரு பிள்ளை கிடைத்திருப்பதாக வும், அவன் வந்து பார்க்க வேண்டும் என்றும் செய்தி கொணர்ந்திருந்தான் ஒரு சேவகன். அவன் போலீஸ்காரரு ‘டன் நடக்கிறான் பதுளைக்கு. திரும்பி வரும் பொழுது……! 

அதெல்லாம் இன்னும் சற்று நேரம் கழித்துத் தெரிய வரும். 

ஐந்து நிமிஷம் கழித்துத் தெரியவேண்டியது அப்போதே தெரிந்து விட்டால், மனிதன் எவ்வளவு பாக்கியம் பெற்ற வனாவான்! 

உச்சிச் சூரியன் அவனைச் சுட்டுப் பொசுக்கவில்லை. கச் எங்கி சிதமாய்க் கிடந்த வானம் அவனுக்குக் கூசவில்லை. ருந்தோ குளிர்ச்சி இறங்கியது. நம்பிக்கைத் திரியில் ஒரு புரி இழைத்து முறுகிக் கொண்டது. 

பகவானே என்று மனம் பதைக்க ஓட்டமாய் நடந் தான். கூட வந்தவருக்குச் ‘சீ’ என்றிருந்தது. அவரவர் துடிப்பு அவரவருக்கு . 

திரும்பி வந்தவன் ஒரு பொம்மைக் கடையே கொண்டு வந்தான். அதில் பெரியதாய் இருந்தது ஒரு குரங்குப் பொம்மை. 

பெற்றவள் ஒரு சுற்றுப் பருத்தும் விட்டாள். ஆள் மாற்றி ஆளாய்ச் சிசுவைக் கசக்கி விட்டனர். 

யாரோ பிள்ளை பிடிப்பவன் எதற்கோ கொண்டு போயி ருக்கிறான். எப்படியோ அகப்பட்டுக் கொண்டான். பாவம் அங்கே இருக்க, பழி அதன் மேல் அல்லவா விழுந்தது? 

உலகம் நிறம் மாறிக் கொண்டிருந்தது. குதிகால் வாரி விட்ட மண் முதுகில் தெறிக்க விரைந்தான் கொல்லைக்கு. செண்பக மரத்தடியில் நின்றவனைக் கண்டு திடுக்கிட்ட அது லாவகமாகப் பாய்ந்தது. 

அவனை அறியாமல் அவன் கைகள் குவிந்தன. தூரத்தில் சென்று மறைந்த அது வெறும் காட்டுக் குரங்காய் அவனுக் குத் தோற்றவில்லை: 

பழி வாங்கும் பயங்கர உணர்ச்சி அதனிடம் இருந்த தாக நினைத்ததற்கு அழுதான். 

அது அதுதான்; அவன் அல்ல. 

– கலைமகள், ஆகஸ்ட் 1964.

– நாமிருக்கும் நாடே… (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1979, வைகறை வெளியீடு, இலங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *