நான் பேச வந்தேன்




வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்

வங்கியில் எழுத்தராகப் பணிபுரிந்து வரும் இளைஞன் நான். என் பெயர் மாணிக்கம். நண்பர்கள் எனக்கு இட்ட பெயரோ பேசா மடந்தை.
ஆண் மகன்தான் எனினும் அவர்கள் என்னை மடந்தையாக்கினர் பேசாமல் இருப்பதால், நான் உண்டு என் வேலை உண்டு நான் தங்கும் சிற்றப்பாவின் வீடு உண்டு என்று இருந்தவன் , எவரிடமும் அதிகம் பேசாத கூச்சக்காரன் நான் காதல் வலையில் விழுந்தேன் . அடியேனை விழ வைத்தாள் தன் அழகாலும் பேச்சாலும் அவள் பெயர் அழகுநிலா . பட்டிமன்ற சொற்பொழிவாளர்.
தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் என் நண்பன் இளங்கோவின் அழைப்பின்பேரில் பட்டிமன்றப் படப்பிடிப்புக்கு எல்லாம் சென்று வந்தேன்.
பட்டி மன்றப் பேச்சாளர் உடனே காதல் மலரும் என அடியேன் கனவிலும்
நினைத்திடவில்லை . அழகுநிலா , பெரிய புள்ளியின் புதல்வி . பெண் கேட்டாக வேண்டுமே மங்கலப் பொழுதுக்காக சென்னையில் நிற்க நிழல் கொடுத்த சிற்றப்பா சித்தியையே ஊரிலிருந்து வரவழைத்து அவர்களுடன் அழகுநிலா வீட்டுக்குச் சென்றேன்.
வீடு நிறைய உறவினர்கள் பணியாளர்கள் . ஆனால் எங்களைக் கவனிப்பார் யாருமில்லை. முகமன் கூறியும் முகம் கொடுக்காத பெரிய புள்ளியுடன் சிற்றப்பா சம்பிரதாயப் பேச்சைத் தொடங்க , அவர் செவி மடுத்தாரா என்பது எங்களுக்குப் புலப்படவில்லை.
ஆனால் , சில மாதங்களில் எனக்கும் அழகுநிலாவுக்கும் சுப வேளையில் திருமணம் இனிதே எளிய திருமணமாக நடந்து ஏறியது.
ஆனால் … இருவரும் மகிழ்ந்து குலாவி இருப்பதற்கான தருணம்தான் வாய்க்கவில்லை . திருமணம் நடைபெற்ற நாளில் அழகுநிலாவின் பாட்டானாருக்கு உடல் சுகவீனம் . அதன் பின்னர் , ஒரு நாளும் கிட்டவில்லையா என்று நீங்கள் கேட்கலாம்.
என்னைக் கரம் பிடித்த நேரம் . வாய்ப்புகள் குவியத் தொடங்கின அழகுநிலாவுக்கு. ஆம். என்னைக் கரம் பிடித்ததால் அவளைக் கையால் பிடிக்க முடியவில்லை . சுற்றுப் பயணத்திலேயே இருந்தாள். சென்னை வந்தாலும் சொற்பொழிவு , பிரமுகர்களுடன் சந்திப்பு , வேலை .. என்று இருந்து விட்டு வீட்டுக்கு வந்தால் அயர்ந்து உறங்கி விடுவாள். என்ன செய்வது ? காதல் கவிதைகளை மேடைகளில் பேசிப் பாடிக் காட்டும் அழகுநிலாவுக்கு கட்டிய கணவனைக் காதலிக்க நேரமில்லை . தாம்பத்ய மகிழ்ச்சிக்கு ,இல்லற இன்பத்துக்கு வேளை வாய்க்கவில்லை .
மனைவியின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு மனைவி இல்லாத மாமனார் வீட்டிலேயே இருந்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நான் மரியாதை தேயத் தொடங்கியதும் பூட்டி வைத்த சிற்றப்பா வீட்டில் மீண்டும் அடைக்கலம் ஆனேன்.
தொடர் விடுமுறை தருணம். அழகுநிலா கணவனாகிய என்னை நாடி வந்தாள்.வீட்டில் யாருமில்லை அனைவரும் ஊருக்குச் சென்றுள்ளனர் எனக் கூறி அங்கேயே இருக்கலாம் விடுமுறைக் காலம் முழுவதும் நான் உங்களோடு தான் என்றாள் .
மனைவி பேச்சைத் தட்ட முடியாமல் உடன் சென்றேன். அவள் , ஆசையுடன் எனக்காக சமைத்துத் தந்த சிற்றுண்டியைச் சாப்பிட்டுக் கொண்டே மனைவியுடன் பேசி மகிழலாம் என்று என் மனம் துள்ளிய தருணத்தில் அழைப்பு மணி ஒலித்தது.
வருமான வரித் துறையினர் சோதனைக்கு வந்தனர். அதில் அரை நாள் ஓடி விட உண்ணாமல் வீணாய்ப் போனது சிற்றுண்டி . பின்னர் , ஆணையிட்டு வரவழைத்த உணவைச் சாப்பிட்டு இருவரும் பசியாறிய போது மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க – காவல் துறையினர் மோப்ப நாயுடன் வருகை தந்தனர். மாளிகையின் பின்பக்கத்தில் பணியாளர்களுக்கான குளியலறைகளில் ஒரு குளியலறையில் தங்கம் என்ற பெயர் கொண்ட இளம் பணிப் பெண் இறந்து கிடக்கிறாள் .
தகவல் தெரிந்து , தங்கத்தின் உறவினர்கள் , மாளிகை முன் கூடி , கோபத்தில் மாளிகை மீது கற்களை எறிய என் இல்லாளை நான் அரவணைத்துக் காத்தேன்.
என் மாமனாருக்குத் தொடர்ந்து இறக்கங்கள் .. கடுமையான சோதனைகள் , வர்த்தகத்தில் கூட்டாளர்களாக இருந்த நண்பர்களால் ஏமாற்றம், மேலும் கொலைப் பழி, வழக்கு , கைது …
அவரோடு இத்தனை காலம் அல்லும் பகலும் உடன் இருந்தவர்கள் , திடுமென மறைந்து விட,
மாப்பிள்ளையாகிய நான் அவரோடு தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருந்தேன். தேர்ந்த வழக்குரைஞரை அமர்த்தி அவர் வெளியே வர ஆவண செய்தேன்.
காலை வாரி விட்ட வர்த்தகத்திற்கு என்று வாங்கிய கடன்கள் எல்லாம் மாளிகையையும் பிற சொத்துடைமைகளையும் விழுங்கி விட , கிராமத்தில் உள்ள தமது தந்தையார் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் மாமனார், என்னுடைய வீட்டில் எங்கள் இருவருடன் வந்து தங்குகிறார்.
மாப்பிள்ளையிடம் முகம் கொடுத்துப் பேசாமல் இருந்தவர் ,முகம் கவிழ்த்துப் பேசத் தொடங்குகிறார்.
தந்தையாரைப் பற்றியே சந்திக்கும் நபர்கள் அனைவரும் பேச்சைத் தொடங்குவதால் அழகுநிலா பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்து வருகிறாள்.
இன்று .. மாலை நேரம் .. வங்கியில் என் பணியை முடித்து கூட்டை அடைந்த நான் , எனக்கு நானே தேநீர் தயாரித்துப் பருகிக் கொண்டிருந்த நேரத்தில் என் அருகே வந்த என் காதல் மனையாள்
‘என்னை மன்னித்து விடுங்கள் ‘ என்று கால்களைப் பற்றிக் கொண்டாள்.
நான் அவளைத் தூக்கி நிறுத்தி ஆரத் தழுவிக் கொண்டேன். என் மாமனார் இந்தக் காட்சியைக் கண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
– கூண்டை விட்டு வெளியே வந்த பறவை, வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |