நாகம்மாள்
கதையாசிரியர்: ஆர்.சண்முகசுந்தரம்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 85
(1942ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 21-24
அத்தியாயம் – 16

தோப்பிலிருந்து பிரிந்து சென்ற கெட்டியப்பன் விவரமென்ன? அவன் வாக்குறுதி செய்து தந்தபடி காரியத்தில் கண்ணாயிருக்கிறானா? அவனை நம்பியவள் உருப்பட என்னென்ன காரியங்கள் செய்து வருகிறான்? இவற்றைத் தெரிந்து கொள்ளுமுன் சிவியார் பாளையம் மணியக்காரரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
மணியக்கார கருப்பகவுண்டர் நல்ல பராசாரியான ஆள். கருவேலங் கட்டை மாதிரி அவரது காலும் கையும் உறுதியாயிருக்கும். அவரது நிறமும் கருஞ்சாந்து போலத்தான். கிருதா மீசைக்கும், அவரது மேனிக்கும் வித்தியாசமே தெரியாது. இவரது முறுக்கு மீசையில் எலுமிச்சங்கனியை நிறுத்தலாம்! என்ன?
நிறுத்தியே காண்பித்திருக்கிறார்! அவருடைய மார்பு கடப்பைக்கல் போன்றிருந்தது. இன்னும் மற்ற அவயங்களும் கச்சிதமாக அமைந்திருந்தன. அவர் ஏதாவது தேகப்பயிற்சி செய்கிறாரா இல்லையா என்பது நமக்குத் தெரியாது.
இந்தத் தேகக் கட்டு இவர்கள் வம்சத்திற்குப் பரம்பரைச் சொத்து. இவருடைய தகப்பனாரும் இப்படித்தான். நல்ல ஆஜானுபாகு. எப்போதும் வெளியே போகும் போது நெற்றிக்கட்டு, தடியுடன் தான் செல்வார். தம்மைக் கண்டவர்கள், குறுகி, ஒடுங்கி எண்சாண் உடம்பும் ஒரு சாணாகப் போகவேண்டுமென்பது அவரது ஆசை. ஆனால் அவரது ஆசை எவ்வளவு தூரம் பூர்த்தியாயிற்றென்பது நமக்குத் தெரியாது.
அந்தக் காலத்தில் சின்னப்பனின் தந்தை ராமசாமிக் கவுண்டர் தான் ஊரிலே என்ன சச்சரவு நடந்தாலும் பஞ்சாயத்துச் செய்து வைப்பவர். இதைக்காண ஊர் மணியக்காரருக்குப் பிடிக்கவில்லை. ‘என்னடா இது? நம்முடைய மதிப்பென்ன? அந்தஸ்தென்ன? எந்நேரமும் தோட்டி, தலையாரி வாசலில் காத்துக் கொண்டு கிடக்கிறான்கள்; நினைத்த போது பத்துப்பேர் ‘வா’வென்றால் வருவார்கள், ‘போ’ என்றால் போவார்கள். அப்படியிருக்க ஊரிலே இவன் பெரிய நாயக்காரனாகப் போயிட்டானாம்! இவனிடம் போய் பந்தக்காலைக் கட்டிக் கொண்டு நிற்பதாம்! இவன் சொல்கிறதைக் கேட்பதாம்! என்ன இது!’ என்று இப்படி நினைத்தார். இதோடு ராமசாமிக் கவுண்டரை ஒரு கை பார்த்துவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டார். இந்த சங்கை ஊதிவிட்டு நெருப்பாக்க அவரருகே அநேகர் தயாராய் காத்துக் கொண்டிருந்தனர். நல்ல யோசனை சொல்லத்தான் சுலபத்தில் யாரும் முன்னுக்கு வரமாட்டார்கள் என்றால் இப்படி துர்புத்தி சொல்ல ஆட்களா இல்லை. ஏற்கெனவே வீராப்பிலிருந்த மணியக்காரர், ராமசாமிக் கவுண்டர் தன் எல்லை வேலியில் மரம் வெட்டி, சுண்ணாம்பு சுட்டதை, புறம்போக்கில் மரம் வெட்டி சுண்ணாம்பு சுட்டதாக தாசில்தாருக்கு ‘ரிப்போர்ட்’ செய்தார். இதை விசாரித்த மேலதிகாரி உண்மையை அறிந்து, “அப்படித்தான் புறம் போக்காயிருந்தாலும் மரத்தை வெட்டி, அடுக்கி, சுண்ணாம்புக் காளவாயில் போட்டு சுட்டு, சுண்ணாம்பு எடுத்துப் புது வீடு கட்டும் வரையிலும், நீர் என்ன ஐயா செய்து கொண்டிருந்தீர்? இது தானா வேலை பார்க்கிற லட்சணம்?’ என்று மணியக்காரருக்கே ஐந்து ரூபாய் அபராதம் விதித்தார். இந்தப் பூசலுக்குப் பிறகு எவ்வளவோ குட்டிக் கலவரங்கள் அப்போது தோன்றிய கட்சி, பிரதிக் கட்சிதான், இன்னும் ஊரில் இருந்து வருகின்றன. தன் தகப்பனார் காலத்தில் தோல்வி மேல் தோல்வியானாலும், தானாவது வெற்றி கண்டு விட வேண்டும். சின்னப்பனையும் அவன் பங்காளிகளையும் பிரித்து விட்டு மட்டந்தட்ட வேண்டும் என்று கங்கணங்கட்டிக் கொண்டிருந்தார் மணியக்காரர். இதில் அவர் அநேகமாக வெற்றியும் அடைந்து விட்டார். இப்பொழுது சின்னப்பனை என்ன செய்தாலும் கேள்வி இல்லை. அதற்குத் தகுந்தாற் போல நாகம்மாள் சங்கதி வேறு கிடைத்திருக்கிறது. எப்போதும் மணியக்காரருக்கு யோசனை சொல்வதற்கு அநேக மந்திரிகள் உண்டு. அவர்களில் முதன்மையானவன் நாராயணமுதலி. இவன் ஒரு புளுகுணி, குண்டுப் புரட்டன். எங்கு என்ன நடந்தாலும் துளிவிடாது வந்து சொல்லிவிடுவான். ‘இதற்கு இப்படிச் செய்ய வேண்டும். அவர்கள் சங்கதி அப்படி’, அது இது என்றெல்லாம் யோசனை சொல்வான். ஆனால் நாராயணசாமி முதலியார் விஷயம் அப்படியல்ல. பொட்டுக் குறித்தாற் போல் சொல்வான். எங்கே கல்லெறிந்தால், எந்தப் பழம் விழும் என்ற சங்கதியெல்லாம் தெரிந்தவன் – சாதாரணமாகக் கோர்ட்டு விஷயங்களில் அபாரத் திறமை – மற்றும் சாட்சிக்குச் செல்லும் போது சாப்பிடுவதற்கு எந்த ஓட்டலுக்குப் போனால் ரொம்ப திவ்யமாயிருக்கும், குறிப்பிட்ட மனிதர்களை எங்கு அழைத்துச் செல்வது என்பதெல்லாம் மனப்பாடம். அதனால் தான் மணியக்காரர் கூட “அட, என்னப்பா நம்ப நாராயணன் சொன்னால் எள்ளத்தனை மாறுமா? அவன் நமக்காகத்தானே வேலை வெட்டியெல்லாம் விட்டு வருகிறான்” என்று சொல்வார்.
‘வேலை என்ன பறக்கிறது’ என்று நினைத்துக் கொண்டே, “உங்களை விட வேலை என்னங்க பிரமாதம்? நீங்க வரச்சொல்லி விட்டால் என்ன இருந்தாலும் உதறிப் போட வேண்டியதுதான்” என்று சமயம் அறிந்து பேசுவான். “அதுதான் நீ இல்லாமல் நான் ஒண்ணும் செய்கிறதில்லையே” என்று ‘கட கட’ வென்று சிரித்துக் கொண்டே மணியக்காரர் சொல்வார். அதுதான் சமயம் என்று ஐந்து, பத்துக் கடனாகக் கேட்டு வாங்கிக் கொள்வான். அப்புறம் திருப்பிக் கொடுக்கிறதிற்குத்தான், இன்னும் ஐந்தோ, பத்தோ வேண்டியிருக்கிறதே. அதையும் மணியக்காரரிடமே வாங்க வேண்டி இருப்பதால், அவரும் முதலியாரிடம் பணம் திருப்பிக் கேட்பதில்லை.
இன்றைக்கு மணியக்காரர் மந்திராலோசனை சபை கூடியிருக்கிறது. அங்கே நாராயணசாமி முதலியாருக்கருகில் கெட்டியப்பன் கம்பீரமாக வீற்றிருக்கிறான். வழக்கமாகப் பேசும் ஆசாரத்தில் இன்று கூடவில்லை. ஏனென்றால் வாசலில் நின்றாலும், பேச்சுச் சத்தம் கேட்கும், உட்கார்ந்திருப்பதும் வெளியில் தெரியும். ஆகையால், ரகசியமாக இருக்கட்டுமென, உட்புற அறைக்கு சென்று விட்டார்கள். பேச்சு ஆரம்பமாயிற்று. “என்ன கெட்டியப்பா? சங்கதி எப்படியிருக்குது? காரியம் சல்தியா நடக்காது போலிருக்குதே” என்றார் மணியக்காரர்.
“அதென்னங்கண்ணா அப்படிச் சொல்றீங்க? மமிட்டிப் பிடியிலே ஒரு தட்டு தட்டினா காரியம் நடக்கறாப்பலிருந்தா இதுக்குள்ளே கக்க வச்சிருக்கலாம்” என்றான் கெட்டியப்பன்.
“ஆமாம் இதுதான் உங்களுக்குத் தெரியும். நீங்கள் கக்க வைக்கவும், வாந்தி எடுக்கவும் தான் செய்வீர்கள். காரியத்திலே பின் என்ன சாதிப்பீர்கள்?” என்று சிரித்துக் கொண்டே முதலியார் பேச ஆரம்பித்தான்.
“அதுக்கு என்ன பண்ணித் தொலைக்கிறதுங்க? நான் இன்னும் அந்தப் பக்கமே போகலையே?”
“இப்படிப் போகாத ஆளுக்கு இந்த வேலை எதற்கினு கேளுங்க? இவர்களை நம்பித்தானே நாம் இந்தக் காரியத்திலிறங்கியிருக்கிறோம். இல்லாட்டி எங்களுக்கென்ன இதில் அக்கறை?” என்று நாராயணசாமி மணியக்காரரைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே சொன்னார். முதலியார் இதைப் பலதடவை மணியக்காரரிடம் கூறியிருக்கிறார். “எதற்கும் நாம் தான் என்று காட்டிக் கொள்ளக் கூடாது. எவனோ ஒருவனை முன்னுக்குத் தள்ளிவிட்டு நாம் பின்னாலிருந்து வேலை செய்ய வேண்டும். இதை அப்படியிப்படி என்று விடக்கூடாது” என்று அநேகம் தடவை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
“என்ன கெட்டியப்பா, தலையைச் சொறியிறாய்?” என்றார் மணியக்காரர்.
“அண்ணா, அதுதான் சொன்னனுங்களே நான் போகலாம்னுதான் இருந்தேன். அதுக்குள் அவன் மாமியார் வந்திருக்கிறாள். போவட்டும் அப்புறம் விஷயம் தெரியாமலா போயிடும் என்று சும்மாயிருந்துட்டேன்.”
“சரி எப்படியும் நாளைக்குப் போய்த் தெரிந்து கொண்டு வந்து விடுங்கள். அதற்கப்புறம் தான் யோசிக்கோணும். அதைத் தெரியாததிற்கு முன் பேசுவதில் பிரயோசனமில்லை” என்றான் நாராயணசாமி.
“ஆமாம், அப்படித்தானே செய்” என்றார் மணியக்காரர். இவர் நாராயணசாமியின் பேச்சுக்குப் பின் இப்படித்தான் சொல்வது வழக்கம்.
“ஆனால் நாகம்மாள் ஏதாச்சுங்கேட்டா, நீங்க என்ன சொல்றது?” மணியக்காரர் நாவசைப்பதற்குள் நாராயணசாமி, “இங்கே, கையோட கூட்டிவர முடியாதா?” என்று அவசரமாகக் கேட்டார்.
“கூட்டி வாரதா? இப்படி நொடிச்சா வரமாட்டாளா?” என்றான் கெட்டியப்பன்.
“அப்ப சரி” என்றான் நாராயணசாமி.
அத்தியாயம் – 17
திடும்பிரவேசமாக தங்கள் பேச்சுக்கிடையில் ஒருவர் பிரவேசிக்கவே, இருவரும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தனர். மணியக்காரர் முதலிலேயே பார்த்துக் கொண்டதால் ஆச்சரியப் படவில்லை. ஆனால் தானுண்டு கட்டிலுண்டு என்று படுத்திருப்பவர் ஏன் எழுந்து வந்தார் என்பதைப் பற்றியே அவர் ஆச்சரியப்பட்டார். அப்பெரியவர் மணியக்காரரின் பெரியப்பா. தன் காலத்தில் அமர்க்களமான ஆட்டபாட்டத்துடன் வாழ்ந்தவர் தான். இன்று எல்லாம் அடங்கி, ஒடுங்கி உட்கார்ந்து விட்டார். வேளா வேளைக்கு வீட்டிலுள்ள யாரோ ஒருவர் கிண்ணத்தில் சாதத்தைப் போட்டு வைத்து விடுவார்கள். அவர் உட்கார்ந்த இடத்திலே அதை வாயில் போட்டுக் கொண்டு அப்படியே படுத்துக் கொள்வார். கயிறுகள் அறுந்து தொங்கும் கட்டிலும், இரண்டு தலையணையும், ஒரு கிழிந்த துப்பட்டுமே அவருடைய சொத்து. எதிர்பாராத விதமாக அவர் வந்து சேரவும், “ஏது உங்களுக்கும் பேச்சில் ருசி உழுந்துட்டது போலிருக்குது. பக்கத்தில் வந்து இப்படி பாயில் உக்காருங்கள்” என்று நாராயணசாமி சொன்னான்.
“இல்லையப்பா இப்படியே இருக்கட்டும். எங்கிருந்தாலென்ன? எல்லாம் ஒண்ணுதானே! என்னவோ கெட்டியப்பன் சொன்னானே?” என்றார் கிழவர்.
“ஏனுங்க மாமா, நீங்க சொல்றதாக வந்தீங்களே அப்புறம் எங்களைக் கேக்கறீங்களே” என்றான் கெட்டியப்பன்.
“ஆமாம், நான் தான் சொல்ல வந்தேன். என் வார்த்தையைக் கேட்டா கேளுங்க. கேக்காட்டி போங்க. ஆனா, பாக்குக் கடிக்கிற நாழி உக்காந்தா அதுவே போதும்” என்றார்.
“கெட்டியப்பா, பூனையாட்டம் படுத்திருந்தாலும் என்னென்ன நடக்குதுங்கறது தெரியாமே போகலே. நாங் கேட்டுக்கிட்டுத்தான் வர்றேன். உங்க பேச்சு அப்படியே காத்திலே கசம்பிலே விழாமப் போகலே. ஆனா இந்தக் கொட்டு முழக்கெல்லாம் என்ன ஆகுமின்னு யோசித்துப் பாருங்கடா! கெட்டியப்பா, இப்படி முன்னுக்கு வந்து உட்காரு. எனக்குக் கிட்டத்தில் வா. இன்னும் பக்கத்தில் வந்து உட்காரு. சும்மா சிரிக்காதே. பேசாமல் வா இப்படி!”
மணியக்காரருக்கு இது வேடிக்கையாக இருந்தது. மாமனுக்கு என்னவோ பல்லுப் பரபரப்பு, பேச வந்துட்டார் என்று கெட்டியப்பன் நினைத்துக் கொண்டான். நாராயணசாமிக்கு இவருடைய பூர்வாசிரம வாழ்க்கையெல்லாம் தெரியும். இப்போது வேதாந்தம் பேச வந்துட்டார்! எல்லாம் தொலைக்கிறதுக்கு முன் இந்த ஞானோதயம் உண்டாக வில்லையாக்கும் என எண்ணி, குறும்பாகச் சிரித்துக் கொண்டு, “சொன்னாக் கேளுங்க, பெரியவர்கள் சொல்லைத் தட்டலாமா? முன்னுக்குப் போங்கள்” என்று கெட்டியப்பனுக்கு ஒதுங்கி வழி விட்டான்.
பெரியவரும் புன்னகையுடன், “அடே கெட்டியப்பா உன் மண்டையிலே என்னடா இருக்குது? நீ மாம, மச்சானாயிருந்தாலும், என் புள்ளை மாதிரி. அடே புடே என்றால் கோவிச்சுக்குவாயா, என்னப்பா?” என்று மென்று விழுங்கினார்.
“இல்லீங்க மாமா, இல்லீங்க மாமா, நீங்க சொல்லுங்க” என்று கெட்டியப்பன் நகர்ந்து உட்கார்ந்தான்.
பெரியவருக்கு சற்று உற்சாகம் அதிகரித்தது. ஒரு தரம் கனைத்துக் கொண்டு, “கேளடா ராஜா! மலைபோல் மண்டிக் கிடந்த சுள்ளிகளெல்லாம் மாயமாய் மறஞ்சது பாத்தாயா? நாம் எத்தனை நாள் கத்தியிலும், அரிவாளிலும் வெட்டித் தள்ளியும், வெட்ட வெட்டக் கொழுத்தது எப்படி பூண்டற்றுப் போச்சுது பாத்தாயா? கள்ளியை நாசம் பண்ணின வெள்ளைப் பூச்சியையும் பாத்திருப்ப. அது கடுகிலும் சின்னஞ்சிறுசாத்தானே இருந்தது. நம்முடைய கத்தியும், கவையும் முடிக்க முடியாத வேலையை வெகு சுளுவில் அப்பூச்சி முடித்து விட்டது. என்ன கெட்டியப்பா, இன்னைக்கு ஒரு ஆனையைக் கூட தூக்கியடிக்கலாமென்று உனக்குத் தோணுது. மீசையை முறுக்கி விடறாய்; கையைக் காலைத் தட்டறாய்; வாய்ப் பேச்சு வாயிலிருக்க கைவைக்க ஆரம்பிக்கிறாய். ஆனா இந்த நல்ல ரத்தம் நொடியிலே மறைஞ்சுடுமப்பா. ஒரு பூச்சி வேண்டாம், புழு வேண்டாம், சும்மா இருக்க மாயமாய் போய்விடும்.” வயோதிகர் சற்றுப் பேச்சை நிறுத்தினார். அவருடைய உணர்ச்சிகள் மேலுக்கு மேல் பொங்கி வருவது தேகத்து நரம்புகள் புடைப்பதிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அருகிலிருப்பவர்கள் வாய் திறக்கவில்லை. கிழவனார் தொடர்ந்து பேசினார்.
“கெட்டியப்ப, உனக்கு மாத்திரம் இல்லை. எல்லோருக்கும் தான் சொல்றேன் ஏண்டா, கெட்டுப் போகிறோம். உண்டு, உடுத்தியா கெடறோம்? சீர் சிறப்பிலா நாசம் செய்யறோம்? இன்னொருத்தனுக்கு உபகாரம் செய்தா கெட்டுப் போறோம்? இதையெல்லாம் கொஞ்சம் யோசிச்சுப் பாரு.”
“அடே அப்பா, ஊருக்கு மேக்காலே இட்டேறி எப்படி அசிங்கமா ஆபாசமா இருக்குது பாத்தாயா? அதுவும் இந்த மழைக்காலத்தில் எல்லாம் ஒரு துர்நாத்தம். மூக்கை பிச்சிக்கிட்டு போற மாதிரி வீசலே! அதைச் சுத்தம் பண்ண ஒரு பிள்ளை பிறக்கலயே! இன்னம் கேளு. ஊர்ச்சாவடி கட்டிடம் கல்லுகள் பெயர்ந்து ஆட்டம் கொடுத்துட்டதே! அதை எடுத்துக் கட்ட எவனாவது முன்னுக்கு வர்றானா? இல்லவே இல்லை. பின்னே என்ன? எல்லாம் ஒரே கோள், குண்டுணி, கட்சி இவைகள் தான்! இந்த கட்சியிலே தாண்டா நம்மவர்கள் அழிந்து போனது. கச்சேரிக்கும் ஊட்டுக்கும், ஊட்டுக்கும் கச்சேரிக்கும் நடந்தபடியிருந்தா காட்டுச் சங்கதி என்ன ஆகுமென்று பாருங்கடா! இதிலே ‘ஓட்டல்’ சோத்துக்காகப் பொய்சாட்சி சொல்லப் போறவங்க எத்தனை பேர்! நானும் எத்தனையோ பட்டு மாஞ்சிருக்கேன். அடடா என்ன பாவம்! ஓட்டல் சாப்பாட்டை எண்ணி நிசக்கலப்பற்ற பொய்யைக் கூறுவதா? அட உங்களுக்கு ஏழேழு சென்மங்களுக்குத் தான் சொர்க்கம் கிடைக்குமா?”
அவர் மகா வருத்தத்துடனும், ஆத்திரத்துடனும் பேச்சை நிறுத்தினார். “என்னுங்க மாமா இனியொண்ணும் பாக்கியில்லீங்களா?” என்றான் கெட்டியப்பன். மற்றிருவரும் தாங்காது சிரித்து விட்டனர்.
பெரியவர் முன்னிலும் சாந்தமாகவே உட்கார்ந்திருந்தார். வந்த ஆத்திரம் கூட ஏனோ அடங்கிவிட்டது. அவர் என்னவோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள் கெட்டியப்பன், “ஏனுங்க மாமா, இத்தனை விசயத்தை வெச்சுக்கிட்டா இவ்வளவு நாளும் பேசாதிருந்தீங்க” என்றான்.
“அதுதானுங்க உங்களுக்கு நல்லது” என்றான் நாராயணசாமி. உம், முதலியாரு, லேசுப்பட்டவனா! எந்த முண்டச்சியோ, தண்டுவனோடு கெட்டுப் போறதுக்கு, பெரிய குடும்பத்தை தெருப் பண்ணறதுக்கு யோசனை சொல்லுப்பா, சொல்லு. அட போடா பதரே. செவிடங்காதிலே சங்கூதின மாதிரி, உங்கிட்டே நீதி ஓதி என்ன புண்ணியம்? சும்மா படுத்திருந்தாலும் களப்பு காணாது” என்று பெரியவர் முடிக்கு முன்னே, “நீங்கள் விஷயம் தெரியாம பேசறீங்க” என்று நாராயணசாமி சற்று அழுத்தமாகவே சொன்னான்.
அதே சமயம் காலடிச் சத்தம் கேட்கவும் மூவரும் திரும்பிப் பார்த்தனர். வெகு வேகமாக அங்கு வந்த செங்காளி, “காளியம்மாள் ஊருக்குப் போன சமாச்சாரம் தெரியுமா? அவளோடு சின்னப்பனும் போயிருக்கிறான்” என்றான். “அப்படியானால் நல்ல வேட்டைதான். நான் நாகம்மாளைக் கண்டு வாரேன்” என்று கெட்டியப்பன் ஒரு குதியோடு போனான்.
“சரி, நாம் தோட்டப் பக்கம் போவோம்” என்று நாராயணசாமியுடன் மணியக்காரர் எழுந்தார்.
அத்தியாயம் – 18
சிவியார்பாளையத்தில், மற்றெந்தப் பக்கங்களையும் விட, கிழக்குப் பக்கத்தில் தான் அழகு மலர் சொரிந்து நிற்கிறது. பிஞ்சு பூவோடு குலுங்கும் பச்சை மரம் போலும், நுரை அலையோடு கூடிய நிறைந்தி போன்றும் அங்கு தான் குளிர்ச்சி கட்டோடு படர்ந்து கிடக்கிறது. குடை பிடித்தாற் போல குவிந்திருக்கும் கருவேல மரங்களும், மலர் குலுங்கும் ஊஞ்ச மரங்களும், பூச்செறிந்து வேலியைச் சுற்றியிருக்கும் கொடி வரிசைகளும், ஓயாது மணங்கலந்து வீசும் ரஞ்சிதத் தென்றலும் சேர்ந்து அப்பிரதேசத்திற்கு அத்தனை வனப்பை அளித்திருந்தது. அவ்வழி நடக்கையில், பாதத்திற்கு மட்டுமல்ல, மனதிற்கே ஒரு உற்சாகம் பிறக்கும். சுற்றியிருக்கும் அச்சுகச் சூழ்வில் நம் கற்பனை சென்றுவிட்டாலோ உலகத்தையே மறந்து விடுவோம்.
இப்போது அந்த வழியாகத்தான் மணியக்காரரும், நாராயணசாமியும் களத்துக் காட்டிற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டு போனார்களே ஒழிய இக்காட்சியைக் கண்டு களிக்கவில்லை. நின்று நோக்கவில்லை. ஒரு வேளை தினம் பார்ப்பதால் சலிப்பு ஏற்பட்டு விட்டதாக்கும்.
நாராயணசாமி உறுதியான குரலில் “சீக்கிரமாக முடிவு கட்டீட வேணும். நீங்கள் சும்மா அப்படியே அவளிடம் அசைத்து வையுங்கள். அந்தப் பூமி நம்மை விட்டு எங்கே போயிடப் போறது. தவிர நம்ம களத்துக் காட்டோரம் இருக்குது பக்கத்து இனம் இனத்தோடயே சேர்ந்து விடட்டும். நான் எல்லாம் வழி செய்து விடறேன். அவள் எங்கே நம்மை விட்டுப் பறந்திடப் போறாள்?” என்றான். “ஆமாப்பா, அதை எப்படியாவது வாங்கினால்தான் புல்லுக்குப் பஞ்சம் இருக்காது. மாடு கன்றுகளைக்கொரையில் கட்டிவிடலாம். தீவனத்துக்கு அடித்தட்டுகிற போது வண்டியைக் கட்டிக் கொண்டு வெளியூர் களுக்குப் போக வேண்டியதில்லை.”
“அப்படித்தான் செய்ய வேணும். வசப்பட்டா ஒட்டனைக் கூப்பிட்டு வெட்டுக்குக் கூட விட்டுப் பார்க்க வேணும்…” என்றான் நாராயணசாமி.
“கிணத்துச் சமாச்சாரம் எல்லாம் நிலத்தை வாங்குவதற்கு முந்தியேவா? இதுதானப்பா எருமை வாங்கிக் கட்டின கதை” என மணியக்காரர் சொல்லிச் சிரித்தார். “நல்லாச் சொன்னீங்க” என்று கூடச் சேர்ந்து கை தட்டிக் கொண்டே சிரித்தான் நாராயணசாமி.
மணியக்காரர் உற்சாகமாக, “என்ன நாராயணா, எல்லாம் சரிதான். நாகம்மா பக்கம் நாமெல்லாரும் நிண்ணும் கடைசியிலே ஒண்ணும் எடுபடாது போனா என்ன செய்வது? அவமானமாகவல்ல போயிடும்” என்றார்.
“ஒருக்காலும் போகாது. நம்மை மீறி அப்படிப் போயிடுமா?”
“போகாதுண்ணா கையில் பிடிச்சு நிறுத்துற விசயமா? சின்னப்பன் கோர்ட்டு வரையிலும் பாக்கிறதாக உறுதி கொண்டிருந்தால்? செயம் சாயுமா?” என்றார் மணியக்காரர்.
“சின்னப்பனாவது கோர்ட்டுக்குப் போறதாவது. கனவில் கூட எண்ணிப் பார்க்க மாட்டான்! பத்துப் பேர் பாத்து நாம் சொல்றதுதான் சட்டம். இதுக்கு அப்பீலே கிடையாது.”
“அப்படிச் சொல்லலாமா?”
“ஏங்கூடாது. என்னதாஞ் செய்வான்? சொல்லுங்கள். அப்படி வித்திட்டு போறதானாலும் எவன் வாங்க வருவான்? எங்கே விரல் விடுங்கள் பாக்கலாம்” என்று அபாரக் கோபம் வந்தவன் போல் கேட்டான்.
“உம் பார்ப்போம்” என்று கூறிவிட்டு, “அதோ அங்க பரப்பா, யார் நம்ம ராமசாமியா எதிரில் வருவது” என்று கை நீட்டிக் காட்டினார்.
நாராயணசாமி பார்த்துவிட்டு, “என்னவோ தெரியலெ ஆனா ராமசாமியின் சாயல் இருக்குது. இருந்தாலும் கால் எடுத்துப் போடுவதையும், கழுத்து அசைப்பதையும் பாருங்க. என்ன, ராமசாமி இப்படியா நடப்பான்?” என்றான்.
இவர்கள் இப்படிப் பேசப் பேச அந்த மனிதரே வந்து விட்டார். அவரைக் கண்டவுடன் மணியக்காரர் மரியாதைக் கும்பிடுடன் அமோகமாக வரவேற்றார்.
“அடடா, எங்களை எல்லாம் மறந்து விட்டீங்களா? ஏனோ உங்க ஊரையுட்டே அடி எடுத்து வைப்பதில்லையே! இன்றைக்கு மழை கட்டாயம் வரும்” என்றார். “என்னைக் கண்டதும் மழை வருகிறதானா நித்தம் உங்க ஊருக்கு வந்திட்டுப் போவேனே! என்ன முதலியாரே, உங்க மணியக்காரர் சொல்றதைப் பாரப்பா” என்றார் வந்தவர்.
“எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ? நீங்களும் தான் வந்து பாருங்களேன். ஒரு வேளை வெங்கமேட்டாரார் வந்தால் மழையும் தான் வருமோ என்னவோ!” என்று நாராயணசாமி சொல்லவும், ‘கட கட வென அங்கே சிரிப்பொலி கிளம்பியது.
அதற்குப் பின் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தனர். “அப்புறம் ஏனப்பா நீங்கள் இத்தனை பேர் இருந்தும் சின்னப்பன் நிலத்தை வெளியூராருக்கு விக்க விடுவதா? நீங்க யாராச்சு வாங்க ஐவேஜு இல்லையா” என்று வெங்கமேட்டுக்காரர் கேட்டார்.
“என்ன அது? என்ன சொன்னீங்க?” என்று இருவரும் ஏக காலத்தில் கேட்டனர். இவர்களுடைய ஆச்சரியத்தையும், முகத்தில் பரவிய திகைப்பையும் கண்டு வெங்கமேட்டார், “உங்களுக்கு அப்படியானா இந்த பேச்சே எட்டவில்லையா?” என்றார்.
முதலியார் விடாது, “யாரோ சொன்னாங்க. ஆனா அந்த ஆளுக்கு வாங்க முதல் ஏது என்று நெனச்சோம்” என்றான்.
“முதல் ஏதா? என்னுங்க நம்ம சரளைக்காட்டாரு மவன் குட்டியப்பன் கை இப்போ தனியாகவா பேசுதுங்க? இந்த வருஷம் பருத்தியிலே இரண்டு பெரிய காகிதத்துக்கு மேலே அடிச்சுட்டானுங்களே”என்றார்.
“அப்படியா? சரளைக்காட்டார் மவன் வாங்குகிறாங்கனின்னு உங்ககிட்ட ஆரு சொன்னது?”
மணியக்காரரின் குழப்பத்தையும் கலக்கத்தையும் கண்ட முதலியார் கோபப் பார்வையுடன் கண்ணடித்துக் கொண்டே, “இப்படித்தான் கேளான் மாதிரி பேச்சுக் கிளம்பும், பின்பு அடங்கிப் போகும்” என்றான்.
“அப்படியில்லையப்பா; எங்கிட்டயே குட்டியப்பன் சொன்னான். இப்போ அவன் யோசிக்கிறதெல்லாம் பூமியைப் பத்திக்கூட அல்ல. சின்னப்பன் அண்ணன் ஊட்டுக்காரி குறுக்கே பூந்துக்கிட்டு விளாறு விடறாளாம். இதுக்குத்தான் பிடியாப் பேச்சுக் கொடுக்க மாட்டீங்கறான்.”
இதைக் கண்ட இவர்களிருவரும், இன்னம் பூரா விபரங்களையும் கிரகிக்கலாமென, “ஊரில் ஒரு ஏழை எளிய கைம்பெண் இருந்தா, இருப்பதா எங்காவது ஓடிப்போவதா? உங்களுக்கே தெரியுமே, சின்னப்பன் ஆளோடு ஆளாக இருந்தவன் தானே? அவன் அண்ணன் தோன்றி கஷ்டப்பட்டுச் சம்பாதித்தான். அவன் குடுத்து வைக்காமல் போய்விட்டான். என்னவோ இருக்கிற வரையிலும் ஒழுங்காக இருந்தான். செத்தவனைப் பத்தி பேசி என்ன பயன்? இல்லெ, இதை எதுக்குச் சொல்ல வந்தேன்னா, அப்படிப் பிழைச்சவன் பொண்ணும், பெண்டாட்டியும் திண்டாடட்டும்னு விட்டுட்டு எல்லாத்தையும் சின்னப்பன் தானே சுருட்டீட்டு போவட்டும் எங்கிறீங்க! அவ்வளவு தானே?” என்றார் மணியக்காரர்.
வெங்கமேட்டார், “அப்படியும் அந்த அக்ரமம் நமக்கு வேண்டாம். ஏதோ கால் அரை அவளுக்கும் ஒதுக்கிடச் சொல்லலாம்” என்றார்.
“இதென்ன தானம் கொடுக்கிற மாதிரி. அவள் ஏன் அப்படி வாங்கிக் கொள்கிறாள்? தன் புருஷன் சொத்தில் பாதி வந்தால் வரட்டும். இல்லாது போனா வேண்டியதில்லையிண்ணு அவள் சொல்லீட்டிருக்கிறாள்” என்றார் மணியக்காரர்.
“வேண்டாம் என்றால் அதையும் இழந்து விட வேண்டியதுதான். அவன் ஒரேயடியாக இல்லை எங்கிறான்னு வச்சிக்குவோம்! சின்னப்பனிடம் இவள் எப்படி வாங்குவாள்?’
“அதென்ன நீங்க அப்படிச் சொல்றீங்க? எப்படியும் நியாயம் இவளுக்கு இருக்கும் போது வாங்காமலா விடுவாள்? அதற்கெல்லாம் தான் நீங்க இருக்கிறீங்களே” என்றார் மணியக்காரர்.
வெங்கமேட்டார், “நாங்க இருந்து என்னசாமி செய்றது? இவளுக்கு பங்கு பாகை சரியாகக் கொடுக்க வேணுமிண்ணா கேட்பவர்கள் சிரிப்பார்களே” என்றார்.
மணியக்காரர் சற்று வேகமாக, “நீங்கள் ஒரே பேச்சைத் திருப்பித் திருப்பிப் பேசுறீங்க. கதையைச் சொல்லி விடுவித்தால் கேக்க ஒத்துக் கொள்வானா மாட்டானா? சின்னப்பன் குறுக்கே கிடந்த துரும்பை எடுத்தவனல்லவே…” என்றார்.
“ஆமா, ஆமா அதுவும் அப்படித்தான். எப்படியும் சின்னப்பன் போயிட்டால் கச்சை, கிச்சை ஒண்ணும் இருக்காது” என்று வெங்கமேட்டார் கூறி முடிப்பதற்குள் “இப்போது இருந்துதான் என்ன அரக்கீட்டான்?” என்றார் முதலியார்.
வெங்கமேட்டார், “அப்படியா? கட்சியின்னு பேருக்கு ஒருத்தன் இருந்தாக்கூட கட்சிதான். அவன் பங்காளிகளுக்கும் நாலு பேர் அவனை விட்டுவிடுவாங்களா? என்னமோ அவன் மச்சினன் கெட்டிக்காரனா இருந்தா இவன் ஏன் போறான்? அது போவட்டும், இந்தக் கெட்டியப்பன் அங்கே கொஞ்சம் எடவாடுங்கறாங்களே, கடைசியிலே பொம்பளே முண்டை பேரைக் கெடுத்திட்டா இந்த எளவு அசிங்கமல்லவா?’ என்றார்.
“நீங்கள் இப்படி ஆரம்பிச்சுட்டா அப்புறம் யாரை என்ன சொல்ல இருக்கிறது? நாகம்மா சங்கதி உங்களுக்குத் தெரியாதா? இத்தனை வருசமா இல்லாமே இனியா அவ அப்படித் திரியப் போறாள்? சே, சே, என்னத்தைச் சொல்றது போங்க” என்றார் மணியக்காரர்.
“ஆமாமாம். அந்த மசப்புள்ளே அப்படியெல்லாம் போக மாட்டாள். சரி, சரி எல்லாம் பாப்போம். இன்னைக்கு சாவகாசமாகப் பேசமுடியலெ. இன்னொரு நாளைக்கு வர்றேன்” என்றார் வெங்கமேட்டார்.
“எங்களுக்கும் நேரமில்லெ. அடடா, பொழுதே போயிட்டதே! சரி போய்வாங்க” என்று இருவரும் மேலே நடந்தார்கள்.
– தொடரும்…
– நாகம்மாள் (நாவல்), முதற் பதிப்பு: ஜூன் 1942, புதுமலர் நிலையம், கோயம்புத்தூர்.