நாகநாட்டரசி குமுதவல்லி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 2,203 
 
 

(1911ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாரம் 10-12 | அதிகாரம் 13-16

பதின் மூன்றாம் அதிகாரம்

சமயச் சடங்கு

குமுதவல்லிக்கு உரிய நாட்டின் நிலைமையை எண்ணிப் பார்க்குங்கால், அவள் இயற்கையறிவுஞ் சிறந்த கல்வியுணர்ச்சி யும் மிகுந்த தெளிவும் உடையவளாயிருந்தாள். அவளது உள் ளஞ் சைவசமய உண்மைகளால் ஆழ நிறைக்கப்பட்டிருந்தது. மேற்கணவாய் மலைப் பக்கங்களிலே அச்சமயத்தின் மிகத் தூயவான உண்மைகள் புல்லிய நம்பிக்கைகள் பலவற்றொடு கலந் திருந்தமையாற், குமுதவல்லியின் உள்ளமும் அந் நம்பிக்கை களிற் பிணிப்புண்டிருந்தது. இப்போது தான் மயக்குற்று நடக் கும் நம்பிக்கையைப்பற்றி அவளது இயற்கை நல்லறிவு ஆழ்ந்து நினைத்துப் பார்க்கும்படி தூண்டப்படுமானால், அஃதோர் அறி யா நம்பிக்கையே யல்லாமற் பிறிதில்லை யென்னும் ஒருமுடி புக்கு அவள் வரக்கூடும். ஆனால்,இதற்குமுன் அவள் அதனை எண்ணிப்பார்க்கும்படி தூண்டப்படவில்லை; இப்போதோ அவள் அதனை மன அமைதியோடிருந்து ஆய்ந்து பார்க்க ஒழிவில்லை. இன்னுந் தெளிந்த அறிவுள்ள நாடுகளில் மனவுரம் மிகுந்தோர் பலர் இத்தகைய வீண் நம்பிக்கைகளுக்கு இணங்கியொழுகு மாறு போலவே, இவளும் இதற்கு ஒருப்பட்டு நடப்பாளாயினள். முந்தின நாளில் மீனாம்பாளைப்பற்றி நேர்ந்த துயரமான நிகழ்ச் சிகள் குமுதவல்லியின் உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்தன. தான் உண்மையிற் குமுதவல்லிக்குச் செய்த அல்லது செய்ய நினைத்த தீங்குகளுக்கு மருந்தாகத் தான் இறக்குந்தறுவாயிற் சொல்ல வேண்டுவன வெல்லாஞ் சொல்லி யொழிந்த அந்நல்வினையில்லா மங்கையினிடத்து அவள் அளவுகடந்து இரக்கப்பட்டாள். ஆக வே, அம்மங்கையின் உயிர் அமைதி பெறும்பொருட்டுத் தான் இப்போது செய்தற்கு மேற்கொண்டதனைச் செய்யும் வகையில், இதனைப் பயில்பவர் முன்னரே அறிந்த அளவுக்குமேற், குமுத வல்லி பொழுது நீட்டித்தலின்றி இணங்கினள்; அதாவது: கொள்ளைக்காரன் மனைவிக்கு உயிர் இருக்கையிலேயே அவ ளுக்குச் சொன்ன மன்னிப்பு மொழியைத் திரும்பவும் அவளது பிணத்தண்டையிலிருந்து சொல்லுவதேயாம். இந்த வீண் நம் பிக்கை ஒரு சிறந்த கருத்துப்பற்றியே எழுந்ததென்பதில் ஐயம் இன்று. சில வலிய உணர்வுகளின் வசப்பட்ட நிலையில் மன் னிப்பு மொழிகள் சொல்லப்படலாம்; தன் பகைவனாயினுந் தனக்குத் தீங்கிழைத்தோனாயினாந் தன் கண்ணெதிரே அழிந்து படுகையில், ஒரு நொடிப்பொழுது இரக்க நெஞ்சத்தால் உந்தப் பட்டும் மன்னிப்பு மொழிகள் சொல்லப்படலாம் ; என்றாலும், பிணத்தின் பக்கத்தேயிருந்து வணக்க ஒடுக்கத்தோடுஞ் சீர்தூக் கிச்சொல்லப்படும் மன்னிப்பு மொழியிலே உண்மையின் மிக்க தும் உறுதியிற் சிறந்ததும் ஆனது ஏதோயிருக்கின்றது. 

குமுதவல்லி தான் செய்து முடிக்க உடன்பட்டதுங், குருக் கள் மாராற் சமயக்கொள்கையிற் சேர்த்து வைக்கப்பட்டதுமான சடங்கின் நோக்கமுந் தோற்றமும் அவையே என்பதில் ஐய மின்று. ஆயினும், நாம் முன்னரே கூறியபடி, இதனைப்பற்றி எண்ணிப்பார்க்கக் குமுதவல்லிக்கு நேரமேயில்லை. தன்னை அகப்படுத்தச் செய்த சூழ்ச்சியா யிருக்கலாமோ என்று மட்டும் முதலில் அவள் நினைந்தாள். ஆனால், திகழ்கலையின் சொற்களை யும் உறுதிமொழிகளையுங் கேட்டு அந்நினைவு தீர்ந்தவுடன் இறந்துபோன வுயிர் அமைதி பெறற்பொருட்டுத் தான் செய்தற் குக் கடமைப்பட்டதனைச் செய்வது தூயதொரு கடனென்றே எண்ணினாள். 

இப்போது கிட்டத்தட்ட ஆள் வழக்கம் அடங்கிய தெருக் களினூடு வழிகாட்டிக்கொண்டே திகழ்கலை போயினாள். அந்த இளவேனிற்காலத் திடையில் வழக்கமாய் இருப்பதைக் காட்டி லும் மிகுந்த புழுக்கம் வாய்ந்ததான ஒரு பகற்பொழுதின் ஈற் றில் அம் மாலைக்காலமானது மங்கி இருண்டு தோன்றியது. அங்ஙனம் அவர்கள் போய்க்கொண் டிருக்கையில் வானத்தி லிருந்து பளீரெனத் தோன்றிய ஒரு மின்னலின் ஒளி, அவர் கள் தம்முகத்தை மறைத்திருந்த முக்காடு மட்டும் இல்லாதிருந்த தாயின், அவர்களின் கண்களைக் குருடுபடுத்தி யிருக்கும். 

அந்த மின்னொளியானது சிறிதுநேரம் அவ்விடத்தை முற் றும் ஒளிவண்ணமாக்கி, அத்தெருவின் இருமருங்கும் உள்ள கட்டிடங்களை நொடிப்பொழுதேனும் நன்கு புலப்படக் காட்டி யது, அதேநேரத்தில் எதிர்ப்பக்கத்தே விரைந்து போய்க்கொண் டிருந்த ஒருவனுடைய முகங் குமுதவல்லியின் பார்வைக்குத் தென்பட்டது.உடனே அவள் திகில்கொண்ட ஓர் ஐயத்தினாற் பற்றப்பட்டுச் சடுதியிலே நின்றாள்; ஏனெனில், அவள் அங்ஙனங் கண்டது நீலலோசனன் முகத்தையேயாம்!- அச்சமூட்டும் நல் லானை யன்றிப் பிறன் அல்லன் என இன்னும் அவள் பிழை பட நம்பின அவ்வழகிய பெளத்த இளைஞனது முகத்தையே யாம்! சடுதியில் மறைந்த அம்மின்னொளிக்குப் பின், அங்குத் தோன்றிய இருள் முன்னிலுங் கருமையாய்த் தோன்றியது. ஆகவே, குமுதவல்லியுஞ் சுந்தராம்பாளும் தன்னைப் பின்றொ டர்ந்து வந்தில ரென்பதனைத் திகழ்கலை உடனே காணக்கூட வில்லை. 

அம்மின்னொளியானது தன் தலைவியைக் குருடு படுத்தி யதோ! அன்றி ஏதேனும் பழுது செய்ததோ! வென்னும் நடுக் கம் வாய்ந்தவளாய் “அன்புள்ள பெருமாட்டி, யாது நேர்ந்தது”? என்று சுந்தராம்பாள் கேட்டனள். 

”ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை, சுந்தராம்பாள்!” என்று கலக்கம் பாதியுந் திகைப்புப்பாதியும் உடையளாய்க் குமுதவல்லி விடைகூறினாள். 

“ஆ! மெய்யாகவே மின்னலானது திகில்தரத் தக்கதாய்த் தான் இருந்தது!” என்று சுந்தராம்பாள் நடுக்கத்தொடு கூறி னாள்; ஏனென்றாற், குமுதவல்லியை அங்ஙனங் கலங்கப் பண்ணின அதேபொருளை அவள் காணும்படி நேரவில்லை. இப் போது குமுதவல்லி தன்பாங்கியுடன் நின்றுவிட்ட இடத்திற் குத் திகழ்கலை திரும்பிவந்து, ‘பெருமாட்டி, நீங்கள் ஏன் என் பின்னே வரவில்லை?” என்று வினவித்,”தங்களை வெருளச் செய்ததற்கு மேல் அம்மின்னலால் வேறு ஏதுந் தீங்கு நேரா மற் கௌதமசாக்கியர் காக்கட்டும்!” என்று கூறினாள். அவ் விளைய பெருமாட்டி இப்போது தன் நிலைக்கு வந்தவளாகி, “அம்மின்னொளியானது ஒவ்வொரு பொருளையுத் தெளிவாய்ப் புல னாக்கியது; ஆனாற், கட்பார்வையின் ஒளியோ மக்கள் நெஞ் சில் அத்தகைய பயனைத் தாமாட்டாது. திகழ்கலை,எனக்குள் ஐயுறவு நிகழ்கின்றது -” என்று கூறுகையில், 

அவ்வறிவோள், “பெருமாட்டி, தாங்கள் இதுவரையில் துணிந்து வந்ததற்கு மேல் இனிவரவேண்டாமென்றும், நீங்கள் திரும்பிப்போகலாமென்றும் யான் சொல்லுவேன்; ஆனால், அப்படிச் செய்வேனாயின், தங்களிடம் இப்போது பேசும் இவ ளைப்பற்றித் தாங்கள் கொண்ட ஐயம் அங்ஙனமே தங்கிவிடும்; அஃது அவ்வா றாகப்படாது! தங்களை வஞ்சித்தொழுக வல்ல வள் அல்லேன் எனப் புத்தசாரணர் அறிய ஆணையிட்டுச் சொல்லு கின்றேன்! இதோ, பெருமாட்டி, இந்தக் குத்துவாளை எடுத்துக் கொள்ளுங்கள்; தங்களைத் தீயோர்க்குக் காட்டிக் கொடுக்கி றேன் என்று நீங்கள் கண்ட அந்த நேரமே, என் நெஞ்சில் இதனை அழுந்தப் பாய்ச்சுங்கள்!’ என்றுரைத்தாள், 

“ஆம், நான் இக்கருவியை வைத்துக்கொள்கின்றேன் என்று சொல்லிக், குமுதவல்லி அதனைத் தன் அரையைச் சூழ்ந்த பட்டிகையிற் செவ்வையாய் வைத்துக் கொண்டாள். ”இப்போது யான் கேட்பதற்கு விடைசொல் திகழ்கலை! நீ இப் போது என்னை அழைத்துக்கொண்டுபோக இருக்கும் இடத் தில், நம்மையும் இறந்துபோன அவ்வம்மையின் பாங்கிமாரை யுந் தவிர வேறெவரேனும் வந்திருப்பரோ? வென்று நான் கேட்கிறேன்.” 

“ஆம், பெருமாட்டி, மற்றொருவரும் அங்கிருப்பர்.” என்று திகழ்கலை விடைகூறினாள்: ‘ஆயினும், புத்தசாரணர் அறிய அவர் தங்களுக்குச் சிறிதுந் தீங்கு இயற்றத் தக்கவர் அல் லர் என்ற ஆணையிட்டுச் சொல்லுகின்றேன்! உங்களை நோக்கி ஒருமாற்றங்கூட அவர் பேசமாட்டார்! தன் விரல்களில் ஒன் றையேனும் அவர் உங்கள் மேல் வைப்பாரல்லர்! இப்போது தங் களுக்கு இசைவுதானா? இன்னும் யான் யாது சொல்லக்கூடும்?”

“நல்லது, வழிகாட்டிச் செல்” என்று குமுதவல்லி கூறினாள். 

தன் இளையதலைவிக்கும் அவ்வறிவோளுக்கும் இடையிற் சுருக்கமாய் விரைந்து நிகழ்ந்த இப்பேச்சைச் சுந்தராம்பாள் மறு படியும் எழுந்த கவலையோடும் ஐயுறவோடும் உற்றுக் கேட்டாள். இந்தத் தோழிப்பெண் தன் நாகநாட்டரசி திரும்பிவிடமாட்டா ளா என்று தனக்குள் விரும்பினாள் : ஆயினும், அவள் முன் செல்லுதற்குத் தீர்மானங் கொண்டிருப்பதைக் கண்டு, தான் ஓரெழுத்தாலாவது தடுத்துப்பேசுதற்குத் துணிந்திலள் குமுத வல்லி திடீரென நின்ற காரணந்தெரியாமல், வெருளத்தக்க மின்ன லொளியைக் கண்டு அச்சுறுத்தப் பட்டவளாய் அவள் மெலிவுற்று நின்றாளெனவே சுந்தராம்பாள் தனக்குள் எண்ணிக்கொண்டாள். 

இப்போது குமுதவல்லி அச்சமும் ஐயுறவும் முற்றிலும் இல்லாமல் வழி நடக்கவில்லை. அவளுக்குத் திகழ்கலையைப்பற் றிச் சிறிதுதான் தெரியும். மிகவுங் கொடுமையான ஒருகுற் றத்தைச் செய்யத்துணிந்த ஒருவர் தமது கருத்தை ஒளிக்கும் பொருட்டு நிரம்பிய அடக்க ஒடுக்கத்துடன் சூளுரை பகரப் பின்வாங்க மாட்டார் என்று அவள் எண்ணாமலிருக்க முடிய வில்லை. என்றாலும், திகழ்கலையின் குரலிலுந் தன்மையிலும் ஏதோ உண்மையிருந்தமையாற், குமுதவல்லி முற்றிலும் ஐயப் பாட்டுக்கே இடங் கொடுத்துவிடத் துணியவில்லை. இறந்து போன மீனாம்பாளின் உயிருக்கு அமைதியைத் தருவதென்று தான் எண்ணிய ஒரு துணிவான செய்கையில் உறுதியாய் நிற் றல் வேண்டுமென்னுங் கடமையினால் அவள் தூண்டப்பட் டான் ; உள்ளபடியே ஏதுஞ் சூழ்ச்சி நினைக்கப்பட் டிராவிட் டால் – ஏதும் வலை விரிக்கப்பட்டிராவிட்டால் – அக்கடமையை நிறைவேற்றாமல் தான் திரும்பிவந்ததைப் பற்றித் தன்னையே தான் கொடுமையாய் இகழ்ந்து கொள்ளவேண்டியிருக்கும். மே லும், அவள் அப்பெண்பிள்ளையின் குத்துவாளைத் தான் வாங்கி வைத்துக்கொண்டாள் ; தண்டனைக் குள்ளாகாமல் அப்பெண் பிள்ளை தனக்கு ஏதுந் தீங்கு செய்ய முயலக் கூடாதென்று அவள் தீர்மானித்தாள். சிறிதுநேரத்திற்கு முன்னே தான் நல் லானையே கண்டதாகத் துணிபு கொண்டவளாய், இறந்து போன தன்மனைவி கிடந்த இடத்திற்கு அவன் வரவேண்டுவது இயற் கையே யென்று குமுதவல்லி எண்ணினாள் ; இவ்வாறு எண்ண மிட்டுக் கொண்டே, “முடிவாக அக்கள்வர் தலைவன் அங்கு வந் திருப்பது எனக்கு ஏதுந்தீங்கு செய்யவேண்டுமென்னும் நோக் கம் இல்லாமலும் இருக்கலாம்!” என்று அவள் தனக்குட்சொல் லிக்கொண்டாள். 

திகழ்கலையொடு சுருக்கமாகவும் விரைவாகவுந் தான் பேசிய பொழுது கொள்ளைத் தலைவனான நல்லான் பெயரை அவள் மொழிந்திலள்; ஏனென்றால், முதலாவது தன் றோழிப்பெண் சுந்தராம்பாளை அச்சுறுத்துதற்கு அவள் விரும்பவில்லை; இரண் டாவது நடுத்தெருவில் அவன் பெயர் சொல்லப்படுமாயின் அதனை ஒட்டுக் கேட்டவர் நீலகிரிநகரத்துள்ளாரை யெல்லாஞ் சடுதியில் எழுப்புவித்து, அவனைப் பிடிப்பவர்க்குப் பரிசில் கிடைக்குமாதலால் அவனைத்தேடிப் பிடிக்கும்படி செய்துவிடுவ ரென்றெண்ணியுந், தான் மீனாம்பாளுக்குக் கூறிய உறுதி மொழிகளை நினைந்தும் அதனைச் சொல்லாது விட்டனள். 

சிறிதுநேரத்தி லெல்லாந் திகழ்கலை ஒரு மதிற் கதவண் டை வந்து நின்று அதிலுள்ள புழைவாயிற்கதவைத் திறந்து, பின்னே குமுதவல்லியுஞ் சுந்தராம்பாளும் வர உள் நுழைந் தாள், உள்வாயிற் படிமேற் காப்பிரிப்பெண் கையில் விளக் கேந்தி நின்றாள்; இந்தப்பெண் தாழ்மையோடுங் குமுதவல்லி யை வணங்கி, ஒருசொற்கூடப் பேசாமல் மேடைப்படிமேல் அழைத்துப் போனாள். தளத்தின்மேற் போய்ச்சேர்ந்தார்கள். குமுதவல்லி தான் வந்திருக்கும் அவ்வீடு பழைய வகையாயும் இடமகன்றதாயும் இருக்கக்கண்டாள்.ஏனென்றால், இந்தத் தளத்திலிருந்து பலகிளைகளாய்ப் பிரியும் நீண்ட வழியுள்ள வாயில்கள் பல இருந்தன. ஆயினுஞ், சுற்றிலுமுள்ள அவற் றைப் பார்க்கவும் ஆராயவும் அவளுக்கு நீண்டநேரம் இல்லை; இதற்குள் அக்காப்பிரிமாது உயர்ந்த ஒருசோடு மடக்குக்கதவு களில் ஒன்றைத் திறந்தாள். அவள் அவ்வாயிலின் உள்ளே புகும் முன்னமே, வெளியே அத் தளத்தின் மேல் விளக்கை வைத்து விட்டாள். கரிய ஒளிமென் பட்டுத்திரை ஒன்று அப்பால் இழுத்து விடப்பட்டது; குமுதவல்லியுந் திகழ்கலையுஞ் சுந்தராம் பாளும் உள் நுழைந்த அறையில் விளக்கு வெளிச்சம் மங்கலாய் மினுக்கு மினுக்கென்று வீசியது. 

அவ்வறை இடம் அகன்றதாய்த்தான் இருந்தது; அங்குள்ள தளவாடங்களைப் பார்த்தால் அவை செவ்வையாகவே அமைக் கப்பட்டிருந்தன. ஆயினும், அரைவாசி இருளாய் இருந்தது; ஏனெனில், நடுவே யிருந்த மேசைமேல் இரண்டு மெழுகு திரி கள் மட்டுமே எரிந்துகொண் டிருந்தன; சுவர்களின்மேற் கறுப் புத்துணி தொங்கவிடப்பட்டிருந்தது. அவ்வறையில் அங்ஙனம் நிறைந்து நின்ற சிறுகிய சவஇருள் அச்சத்தையும் வணக்க வொடுக்கத்தையுந் தோற்றுவிப்பதா யிருந்தது; ஆனால், அஃது அப்போது உதவுகிற நோக்கத்திற்கே இசைந்ததா யிருந்தது. அவ்வறையின் கடைக்கோடியில் ஒருகட்டி லிருந்தது; அது நிலமட்டத்திற்குமேல் இரண்டு படி உயர்த்தப்பட்டிருந்த ஒரு திண்ணைமேல் இடப்பட்டிருந்தது. கரிய ஒளிமென் பட்டாற் சமைத்த ஒருபெரும் படங்கு அக்கட்டிலின்மேற் கட்டப்பட் டிருந்தது; அதேபட்டாற் செய்த தொங்கல்கள் அக்கட்டிலின் தலைமாட்டைச்சூழ நாற்றப்பட்டிருந்தன. அக்கட்டிலின்மேல் மீனாம்பாளின் உடம்பானது ஒரு வெள்ளைத் துப்பட்டியினாற் சுற்றி நீட்டப்பட்டிருந்தது; அவளது முகம் முக்காடிட்டு மறைக் கப்பட்டிருந்தது.ஆனால்,ஓர் அரசியையுந் தமது செழுமையான வளர்ச்சியினாற் பொறாமை அடையச்செய்யும் அவளது கரிய கொழுங் கூந்தலின் நீண்ட பன் மயிர்ச் சுருள்களானவை இம் முக்காட்டின் மடிப்புகளின் கீழ்ச் சிதறிக்கிடந்தன. 

அவ்வறையிற் பரவி யிருந்த அரைவாசி மங்கலிலும், அக் கட்டிற்கால்மாட்டில் நின்ற ஒருவனைக் குமுதவல்லியுஞ் சுந்தராம் பாளும் உடனே தெரிந்து கொண்டார்கள். அவனுடைய இயற் கையிலே மினுமினுப்பான கரிய மயிரின் மேலும், நேர்த்தியாய் வரைந்தாற் போன்ற மீசையின்மேலும், அழகிய முகத்தின்மே லும், அவன் அணிந்திருந்த சட்டையின் பூத்தையல்கள் மேலும், அவனது கத்திக் கைப்பிடியில் அழுத்திய மணிகளின் மேலும் அங்குள்ள அச்சிறிய வெளிச்சம் பட்டு மிளிர்ந்தது. அவன் கை கள் மார்பின் குறுக்கே மடிக்கப்பட்டிருந்தன. அவன் துயரமான பார்வையோடு அக்கட்டிலின்மேற் கிடந்த உருவத்தை உற்று பார்த்துக்கொண் டிருந்தான். அவன் இளைய நீலலோசனனே யன்றி வேறல்லன். 

அவனை அவ்விடத்திற் பார்ப்பதைக் குமுதவல்லி எதிர் பாராமல் இருக்கவில்லை; அவனைச் சிறிது பார்த்த அந்த நொடி யே அவள் சுந்தராம்பாள் பக்கமாய்த் திருப்பிப், “பேசாதே! அச்சமுற்றுக் கூவாதே! திட்பமாய் இரு! இறந்துபோன தன் மனைவியின் படுக்கையண்டை யிருந்துகொண்டே அவன் நமக்கு ஏதொரு தீங்குஞ் செய்யத் துணிவான் அல்லன்!” எனக் குசு குசுவென்று விரைந்து கூறினாள். 

குமுதவல்லி தன் தோழிப்பெண்ணை நல்ல நேரத்தில் முன் னறிவித்தது நன்றாயிற்று; ஏனெனில், அஞ்சத்தக்க நல்லா னென்றே நீலலோசனனைத் தானும் பிழைபட எண்ணியிருந்த சுந்தராம்பாள் அவனைப் பார்த்தவுடனே வீரிடும் நிலைமையள் ஆனாள். அத்தோழிப்பெண் தனக்குள்ள மனவலிமையை யெல் லாந் தனக்குத் துணையாக ஒருங்கே வருவித்துக் கொண்டு தன் அன்புள்ள தலைவியின் கிட்ட மிக நெருங்கிகின்றாள். அவ் வறையின் கதவுக்கு மிகவும் எட்டியிருந்த பக்கமாய் அக்கட்டி லண்டை மீனாம்பாளின் தோழிகளில் ஒருத்தியான மலையநாட் டுப் பணிப்பெண் மண்டிக்காலிட் டிருந்தாள்; ஏனென்றால், மேடை நீண்டிருந்த அந்தக் கடைசியிற் சுவருக்கு மூன்றடி விலகி அக்கட்டில் நின்றது. 

அக்காப்பிரிப்பெண் சிறிது பின்னே வரக் குமுதவல்லி யையுஞ் சுந்தராம்பாளையுந் திகழ்கலை இப்போது அக்கட்டிலண் டை மெல்ல அழைத்துச் சென்றாள். இறந்தவர்க்குக் காட்ட வேண்டும் வணக்கத்தை எண்ணிக் குமுதவல்லியுஞ் சுந்தராம் பாளுந் தமது முக்காட்டைப் பின்புறந் தள்ளினார்கள். தனக்கு முன்னே நீட்டப்பட்டுக் கிடந்த உருவத்தினின்றும் நீலலோச னன் தன் விழிகளை உயரஎடுத்து, அறைக்குள் நுழைந்தவர் எவ ரென்று பார்க்க இப்போதுதான் முதன் முதல் நோக்கினாள். அழகிய குமுதவல்லியை அவன்பார்த்ததுங் கலந்து தோன்றிய வியப்பினாலுங்களிப்பினாலுஞ் சடுதியில் திடுக்கிட்டான்; ஆனால், திகழ்கலையோ முன்னறிவிக்குங் குறிப்போடு உடனே தன்கை யை உயரத்தூக்கி – மெதுவாயிருந்தாலுங் காதுக்கு நன்றாய்க் கேட்கும்படி அத்தனை தெளிவாயுள்ள குரலில்,”ஒரு சொற் கூட! ஓர் எழுத்துக்கூடப் பேசவேண்டாம்! இறந்தவர்க்கு எதி ரில் நீங்கள் இருக்கிறீர்களென்பதை நினையுங்கள்!” என்று பகர்ந்தாள். 

நீலலோசனன் இங்ஙனந் திடீரென்று நினைவுறுத்தப்பட்ட வனாய் மறுபடியுந் தன் கண்களைக் கீழ்நோக்கிக் கொண்டான்: என்றாலுங், குமுதவல்லி தன் கண்கள் இவன் கண்களுக்கு எதிர் நோக்குதலைக் கருத்தாய் விலக்கிக்கொண்டன ளென்றும், திகழ் கலை தீர்மானமாகவும் அழுத்தமாகவுஞ் சுருக்கமாகவும் அச் சொற்களைச் சொல்லியபோது, அவளது முகத்தின்மேல்வெளி றின நிறம் ஒன்று பரவியதென்றுங் கருதிப்பார்க்க அவன் தவற வில்லை. 

குமுதவல்லியுஞ் சுந்தராம்பாளும் அக் கட்டிலண்டை சென்று, தமக்குக் கிட்ட இருந்த பக்கத்தில் நின்றார்கள்; நீல லோசனனோ கால்மாட்டண்டையிலேயே இன்னும் நின்று கொண் டிருந்தான் ; மலையநாட்டுப் பணிப்பெண் எதிர்ப்பக்கத் தில் முழந்தாளிட்டிருந்தாள். 

திகழ்கலை வணக்க ஒடுக்கம் மிக்க மெல்லிய குரலில், “இறந் துபோன இப்பெண்ணின் முகத்தைப் பாருங்கள்!” என்று சொல்லிக்கொண்டே மீனாம்பாள் முகத்தின் மேலிருந்தமுக்காட்டை மெல்லெனத் தூக்கினாள். ”பாருங்கள் இஃது எவ்வளவு அமைதியாயிருக்கின்றது! பெருமாட்டி, தன்முழு அமைதியை உறுதிப்படுத்தும் பொருட்டுத் தாங்கள் இப்போது இங்கே வந் திருப்பதற்குக் காரணமான அவ்வுயிர் நலமெய்தி யிருப்பதனை அறிவிக்கும் நற்குறியாக இவ்வமைதிக் குறிப்பை யாம் நினைப் பாமாக! 

இங்ஙனம் விளம்பிய பின்னர்த் தான் முதலிற் றூக்கியபடி யே மெதுவாக அம்முக்காட்டினைத் திகழ்கலை கீழே இறக்கிவிட் டாள்; மீனாம்பாளின் முகமானது மறுபடியும் இவர்களது பார் வையினின்றும் மறைபட்டது. ஒரு சிறிதுநேரம் எல்லாரும் வணக்க வொடுக்கத்தொடு வாய்பேசா திருந்தனர்; அதன்பிறகு குமுதவல்லியின் குரலானது வெள்ளிமணியின் ஒலி போன்று மெல்லிதாய்த், தெளிவாயிருந்தாலும் நடுக்கமுள்ளதாய்ப் பேசத் துவங்கியது. 

“மீனாம்பாள்! நீங்கள் எவ்வகையான தீங்கு எனக்குத் செய் திருந்தாலும், அன்றிச் செய்யக் கருதியிருந்தாலும் – அத்தீங் கின் அளவும் அதன் தன்மையும் முன்னும் இன்னும் யான் அறி யாதிருந்தாலும், அவற்றையெல்லாம் யான் மன்னித்து விட்ட தன் உறுதிமொழியை நீங்கள் உயிரோடிருந்தபோதே யான் எடுத்துக்கூறினேன். ஆனால், இப்போதும், – இவ்விடத்தும், உயிர் அற்ற உங்கள் உடம்பு கிடக்கும் இக்கட்டிலண்டையிலும், இன்னும் புனிதமாகவும் வணக்கவொடுக்கத்தோடும் அம்மன்னிப்பு உறுதிமொழியைத் திருப்பிச் சொல்லுகின்றேன். மீனாம்பாள்! அழகுபடுத்துவதற் கென்றே பிறந்தாலென்ன நீங் கள் தோன்றிய இந்நிலவுலகத்தினின்றும், வீழ்ந்துபோன வான் மீன்போலச், சிறிதுகாலம் நீங்கள் மறைந்து சென்றாலும், இறை வன் திருவருளால் உங்கள் உயிர் இன்னும் உயர்ந்த இனியதோர் உலகத்திற்கு மேலெடுக்கப்பட்டு, அங்கே என்றும் விளங்கும் முதல்வனது அருளிருக்கையினின்றும் போதரும் அவ்வரு ளொளியின் நல்ல தூய விளக்கத்தின் கண்ணே நீங்கள் திகழ்ந் திருக்கும்படி அவ்வையன் அருள் வழங்குவானாக!” என்று அவ்விளைய நங்கை மொழிந்தாள். 

இதனைச் சொல்லியதுங் குமுதவல்லி நின்றுபோனாள்; அவள் இன்னுஞ்சிறிது பேசி யிருப்பாள்; ஆனால் இப்போது தன்னை மேற்கொண்டு எழுந்த உருக்கத்தினாற் பேசக்கூடாதவ ளானாள். இப்போது அழுதவள் அவள்மட்டும் அல்லள்; ஏனெ னில், அரைவாசி அடக்கப்பட்ட தேம்பல்ஒலிகள் அவள் செவி யிற் கேட்டன. சுந்தராம்பாளும், மலையநாட்டுப் பணிப்பெண் ணும், அந்தக் காப்பிரிப்பெண்ணும் அழுதனர்; அவ்விடத்திற் றோன்றிய வணக்க ஒடுக்கமும் இரக்கமும் வாய்ந்த இந்நிகழ்ச்சி யினால் நீலலோசனன் உள்ளங் கலங்கினான் ; திகழ்கலையின் கண்களும் நீரற்று இருக்கவில்லை. கடைசியாக, இன்னும் இந் நிலையிலிருக்கின்ற குமுதவல்லி பக்கமாய்த் திகழ்கலை திரும்பிப், “போதும் பெருமாட்டி! புத்தசமயத்திற் பற்றுடையவ ளான யானுங்கூட இந்தச் சடங்கானது தன் பயனைத் தராமற் போகாதென்று இப்போது நம்பத் தலைப்படுகின்றேன். மேலு லகத்துள்ள ஒருதெய்வத்தின் வேண்டுகோள் மொழியை இந் நிலவுலகத்தில் வெளிவிட்டுச் சொல்லும் ஒருயிரின் குரலொலி ஒன்று உண்டாயின் அஃது உங்களுடையதேயாகும்!” என்று மெல்லச்சொன்னாள். 

இவ்வாறு சொல்லிக் கொண்டே திகழ்கலை குமுதவல்லி யின் கையைப்பிடித்து அவளை அப்பாற் கொண்டுபோகலானாள். அந்நேரத்தில் நீலலோசனன் முன்னேறி வந்து நாகநாட்டாசி யை நோக்கிப் பேசுங் குறிப்புடைய னாதலைக் கண்டு திகழ்கலை துடுக்காகக் கைக்குறிசெய்து அவன் இருந்த இடத்திலேயே வாய்பேசா திருக்கும்படி குறிப்பித்தாள். அவன் அவள் சொல் லுக்குக் கீழ்ப்படியாதிருக்கத் துணிய வில்லை: ஏனென்றால், அத்துணை வணக்க வொடுக்கத்தையும் அச்சத்தையும் விளைவிக் கும் இயல்பு வாய்ந்த அந்நிகழ்ச்சியின் இடையே, அதனையெல் லாம் நடத்தும் உரிமை யுடையவளாய்க் காணப்பட்ட முன் அறி முகம் இல்லாத அப்பெண் காரணமில்லாமலே அச்சமூட்டும் ஒரு தலைமையினைச் செலுத்துவா ளானாள். 

கொள்ளைக்கார நல்லானென்றே தான் கருதிவிட்ட நீல லோசனன் மேற் குமுதவல்லி ஒரு முறையேனுந் தன் பார்வையைச் செலுத்தவேயில்லை. அப்பெருமாட்டி இங்ஙனந் தன் னிடத்து முற்றுங் கணிசக் குறைச்சலாய் நடந்ததைப் பற்றி நீலலோசனன் மிகுந்த வருத்தமும் அதைப்போலவே மிகுந்த வியப்புங் கொள்ளப் பெற்றான். இத்தகைய நடக்கையின் கார ணம் இன்னதென்று புலப்படாமையொடு, மலைநாட்டு வணி கரின் வீட்டின்கண் தோழமை கொண்டிருந்த தன்னை அவள் சடுதியிற் பிரிந்து போன மருமத்தையும் இது மிகுதிப்படுத்தி யது. குமுதவல்லியையுஞ் சுந்தராம்பாளையுந் திகழ்கலை அவ் வறைக் கதவண்டை அழைத்துப்போனாள்; அவர்கள் ஒருமுறை யேனும் பின்னே திரும்பிப்பார்க்கவில்லை: மென்பட்டுத் திரை அப்பால் இழுத்துவிடப் பட்டது. கதவு திறக்கப்பட்டது, அவர் கள் தளத்தின்மேல் வந்து நின்றார்கள். 

“இப்போது பெருமாட்டி, நீங்கள் தங்கியிருக்கும் விடுதி யின் தோட்டவாயிலுக்கு மறுபடியும் உங்களை அழைத்துச்செல் வேன். அவ்விடத்திற்கு நீங்கள் சென்றபின் அல்லாமல், சிறிது நேரமேனுந் திகழ்கலையின்மேல் நீங்கள் நம்பிக்கையற்றதைப் பற்றி நுங்களுக்கு உண்டான வருத்தத்தை நீங்கள் அவளுக்குத் தெரிவிக்கவேண்டாம்.” என்று திகழ்கலை மொழிந்தனள். 

என்றாலுங் குமுதவல்லி தனது வருத்தத்தை உடனே அவளுக்கு எடுத்துரைத்திருப்பாள்; ஆனால், அவ்வறிவினளோ அந்தக் காப்பிரிப்பெண் தளத்தின்மேல் வைத்துவிட்டுப்போன விளக்கைக் கையிலெடுத்துக்கொண்டு, அவளை மெத்தைப்படி யின்கீழ் மிகவுஞ் சுருக்கென வழிநடத்திக்கொண்டு சென்றாள். திகழ்கலை, குமுதவல்லி, சுந்தராம்பாள் என்னும் மூவர் முகங் களின்மேலுந் திரும்பவும் முக்காடு இழுத்து விடப்பட்டன. தலைவாயிலின் உட்புறத்தே விளக்கு வைத்துவிடப்பட்டது; பின்னுஞ் சிறிதுநேரத்தில் அவர்கள் தெருவிற் சென்றபோது அவர்களுக்குப்பிறகே வாயிற்கதவு மூடிக்கொண்டது.வாய் பேசாமலும் பாதுகாப்போடும் அவர்கள் வழி தொடர்ந்து சென் றார்கள். மனோகரரது விடுதியின் தோட்டவாயிலண்டை வந்த துங் குமுதவல்லி திகழ்கலையை நோக்கி, “யான் சிறிதுநேரம் வரையில் உன்னைப்பற்றி நினைக்க வேண்டியதாயிருந்த தீய ஐயுறவின் பொருட்டு என் அகத்துண்டான மிக்க துயரத்தைத் தெரிவிப்பதற்கு இதுதான் இயைந்தநேரமாயிற்று. உனதுகுத்து வாளைத் திரும்பவும் நீயே எடுத்துக்கொள்.” என்று புகன்றாள். 

திகழ்கலை தனது குத்துவாளைக் குமுதவல்லியின் கையி லிருந்து வாங்குகையிற், “பெருமாட்டி, இனியொருகால் திரும்பவும் நாம் எதிர்ப்படுகுவமாயின், இவ்வறிவோளிடத்துத் தாங்கள் நம்பிக்கை உடையவர்களாயிருப்பீர்கள். இப்போது விடை கொடுங்கள்!” என்று கூறினாள். 

‘ஒருமொழி, திகழ்கலை – ஒருமொழி!” என்று குமுதவல்லி விரைந்துகூவிப் பின்னுஞ், “சில செய்திகளைப்பற்றி நீ நிரம் பவுந் தெரிந்தவளாகக் காணப்படுகின்றாய்: உனக்கு அவற்றை நன்றாய் அறிவிக்கக் கூடியவர்களுடன் நீ இருக்கின்றனை. எனக்குச்சொல், நான் உன்னைக் கெஞ்சுகின்றேன் – இறந்து போன மீனாம்பாள் முன்னொருகால் எனக்குச்செய்ய நினைத்த தீது யாது?” என்று வினவினாள். 

“பெருமாட்டி, எனக்குத் தெரியாது,” என்று திகழ்கலை விரைந்து விடைகூறிக், கடிதிற் றிரும்பிச் சென்று ஒரு நொடி யிற் கட்புலனுக்கு எட்டாமற், சூழ்ந்திருந்த இருளில் மறைந்து போனாள். 

“அன்பிற்கினிய பெருமாட்டி, நாம் செவ்வனே வந்து சேர்ந்ததற்காக நம்பெருமானை வழுத்துவாமாக!” என்று சுந்த ராம்பாள் களிப்புமிக்ககுரலிற் கூறினாள். 

“ஆம் – நம் இறைவனை வாழ்த்துவாமாக!” என்று நாக நாட்டரசி இசைந்து கூறினாள். 

பின்னர் அவர்கள் மறைவுவாயிலின் வழியே உள் நுழைந்து, தோட்டத்தைக் கடந்து, தத்தம் அறைகட்குச் சென்றார்கள் 

கள். அங்கே ஞானாம்பாள் அவர்களை வரவேற்கும்பொருட்டு மிகுந்த களிப்பாற் குதித்தோடி வந்தாள்; ஏனெனில், அவர்களது வரு கையானது, நம்பிக்கையுள்ள அப்பெண் கொண்டிருந்த அள வற்ற கவலையையுந் திகிலையும் ஐயுறவையுந் தீர்த்தது. 

மறுநாட்காலையில் உணவருந்திய வுடனே குமுதவல்லி தோட்டத்திலே உலவுவதற்காகக் கீழ் இறங்கினாள் – இந்த வேளையில் அவள் பாங்கிமார் அவள் பின்னே வரவில்லை; ஏனென்றாற் சிறிதுநேரம் அவர்கள் தம் இருக்கையிற் செய்யவேண்டிய அலு வல்மேல் நின்றார்கள். ஆகவே, தனியிருந்த குமுதவல்லியின் உள்ளத்திற் பின்வருமாறு எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் எழுந்தன. இன்றைக்குத்தான் மனோகரர் திரும்பி வரவேண் டியநாள். நாகநாட்டின்கணுள்ள தனது மாளிகையினின்றுந் தான் வரவழைக்கப்பட்ட முதன்மையான காரணம் இன்ன தென்று தனக்குத் தெரிவிக்கப்படுத்தற்கு அவள் எதிர்பார்த் திருந்த நாள் இன்றுதான். இன்னும், முன்னாள் மாலையில் நேர்ந்த நிகழ்ச்சிகளையும் அவள் நினைந்தாள். அத்தனை இனிமையோடும் உருக்கத்தோடுந் தான் எவளுடைய உயிரின்பொருட்டுக் கடவு ளைத் தொழுதனளோ அவளை நினைந்து ஒருபெருமூச் செறிந்தாள். 

இரண்டரை நாழிகை நேரத்திற்குமேற் குமுதவல்லி அத் தோட்டத்திலே உலவிக்கொண்டிருந்தாள்; அப்போது தற்செய லாய் அவள் இதற்கு முன் தான் புகுந்திராத ஓர் ஒடுங்கிய வழியி னூடே செல்வாளானாள். அதன் இருமருங்கும் பழந்தருமரங் கள் அடர்ந்து, அம்மரங்கள்மேற்படர்கொடிகள் சன்னல் பின்ன லாய் வளர்ந்துகிடந்தமையாற், குமுதவல்லி இப்போது இறங்கி யிருக்குங்கட்டிடத்திற்கு எதிர் வரிசையாய் அமைந்த கட்டிடத் தை நோக்கிச் செல்லுங் கொடிப்பந்தர்ப் பாதையாய் அஃது அமைந்திருந்தது. குமுதவல்லி இவ்வெண்ணங்களின் வயப் பட்டவளாய்க் கீழ் நோக்கிய கட்பார்வையுடன் இவ்வழியே சென்றாள். சடுதியிலே ஒரு சாளரத் தட்டிக்கதவு திறக்கப்பட்ட ஓசையும், அதே நேரத்தில் மகிழ்ச்சியும் வியப்புங் கலந்த ஒரு குரலொலியும் அவள் செவிக்கு எட்டின. உடனே அவள் மேல் நிமிர்ந்து நோக்கினாள்; அங்கே முதலடுக்கிலுள்ள ஒரு பலகணி யண்டையில் இளைய நீலலோசனன் நின்றனன். 

கொள்ளைக்கார நல்லானென்றே தான் பிழைபடக்கருதிய அவ்வாடவனை மனோகாரது மாளிகையின் கண்ணே – தனக் கும் புகலிடமாய் அமைந்த அவ்வீட்டின்கண்ணே, அங்ஙனம் பார்த்தலுங் குமுதவல்லி தன்னகத்தே நடுக்கத்தால் எழுந்த கூக் குரலொலியை வருத்தத்தொடுதான் அடக்கக்கூடியதாயிருந்தது. பெருந்திகிலும் வியப்புமே அவள் வாயைத் திறவாதபடி திடீ ரெனப்பூட்டிவிட்டன! உடனே விரைந்து முக்காட்டை இழுத் திட்டுக்கொண்டு திரும்பி அவ்விடத்தைவிட்டுக் கடுகிச் சென் றாள். தன் காதிற்குச் சில சொற்கள் வந்துகிட்டின – அவளது போச்சத்திற்குக் காரணமாயிருந்த ஆடவரின் வாயிலிருந்து மும் முரமாய்க் கத்திச்சொல்லப்பட்ட சொற்களே அவையாம். ஆயி னும், அச்சொற்களின் பொருள் அல்லது கருத்து அவளுக்குப் பிடிபடவில்லை; அவளது மூளை அத்துணை குழம்பிப்போயிற்று, அவளுணர்வுகள் அத்துணை கலங்கிப்போயின. அவ்வீட்டுக்கார முதியோளை அழைத்துத் தன்னைத்தவிர அதே வீட்டின்கண் இன்னும் வேறு எவர் தங்கியிருக்கின்றாரென்பதனைக்கேட்டறி யும் மனவுறுதியோடு அவள் விரைந்து தன் அறைக்குத் திரும்பி னாள்; ஆனால், தன் உணர்வு தன் நிலைக்கு வந்தவுடனே குமுத வல்லி தான் மீனாம்பாளுக்குச் சொல்லிய உறுதிமொழியைப் பாதுகாக்கவும், விலக்கமுடியா நிகழ்ச்சிகளால் வெளிவிட நேர்ந் தாலல்லாமல் தான் கொள்ளைக்கார நல்லானென்றே பிழைபட எண்ணிய அவ்வாண்மகனைக் காட்டிக்கொடாதிருக்கவுந் தீர்மானித்தாள். 

அவள் மெத்தைப் படிக்கட்டின்மேல் ஏறிச் சென்ற அள விலே குளியலறை வாயிலிற் சுந்தராம்பாளை எதிர்ப்படச், சுந்த ராம்பாள் சொல்லுவாள்: ”பெருமாட்டி, தங்களைக் காணும் பொருட்டு இவ்வீட்டுக்கார முதியோள் காத்துக்கொண்டிருக்கின்றாள்; அவள் தலைவரும் பெரிய வணிகருமான மனோகரர் இப்போதுதான் திரும்பிவந்திருக்கிறார்-” 

“ஆ, அவர் திரும்பிவந்துவிட்டனரா?” என்று கூறுகை யிற் குமுதவல்லி சொல்லுதற்கரிய ஆறுதல் எய்தப் பெற்றவ ளாய்த் தான்கொண்ட களிப்புத் தன் கண்களிலே ஒளிரச் “சிவ னேபோற்றி!’ என்று தன்னுள் மெல்லெனச் சொல்லிக்கொண் டாள்; ஏனெனில், தனக்குமிகத்தெரிந்தவரும் மாட்சிமை நிறைந் தவருமான மனோகரர் தனக்கு நண்பருந் தன்னைப்பாதுகாப்ப வருமாய் இருப்பரென அவள் இப்போது உறுதியாய் நம்பினாள். 

தனக்கு அச்சத்தையுங் கலக்கத்தையும் விளைவித்த அக் கடைசியான நிகழ்ச்சியைப்பற்றி அவள் தன் பாங்கிமார்க்கு ஓர் எழுத்துக்கூடச் சொல்லவில்லை; ஏனென்றால், அவள் இயற்கை யிலே பெருந்தன்மையான உள்ளமுடையவளா யிருத்தலின், தன்னிடத்தே நிறைந்த பற்றுதலும் நன்றியும் வைத்திருக்கும் அவ் விளம்பெண்கள் அஞ்சுதற்குரிய செய்திகளைத் தன்னால் இயன்ற மட்டும் அவள் எப்போதும் விலக்கிவிடவே நினைந்தாள். செல்வத்திற் சிறந்த அவ்வணிகர் முன்னிலையில் தகுந்தபடி செல்லல்வேண்டி விரைவில் அவளுடைகள் சிறிது மாற்றி உடுக் கப்பட்டன. அவள் மந்திர மோதிரத்தை விரலில் அணிந்து கொண்டவளாய்த், தன்னை அவ்வணிகரின் முன்னிலையில் அழைத்துக்கொண்டு போதற்கென்று அவ்வீட்டுக்கார முதி யோள் வந்து காத்துக்கொண்டிருக்கும் இருக்கையறைக்குச் சென்றாள். 

இடம் அகன்ற அக்கட்டிடத்தின் நடுவில் அல்லது முதன் மையான இடத்தில் அமைந்த அறைக்குச் செல்லாநின்ற பாதை யினூடே குமுதவல்லி அம்முதியோளைப் பின்றொடர்ந் தேகி னாள் : அவ்வறைக்கதவை அம்முதியோள் பரக்கத் திறந்துவிட் டாள்; குமுதவல்லியும் உள் நுழைந்தாள். அழகிய பொருள் களால் ஒப்பனை செய்யப்பட்டிருந்த அவ்வறையின் கடைக் கோடியிற் சார்மணைக்கட்டிலின்மேல் அமர்ந்திருந்த மாட்சிமிக்க முதியோன் ஒருவனை முதன் முதற் கண்டாள்; கொள்ளைக்கார நல்லானென்றே தான் பிழைபடக் கருதிய அவ்வாடவன் முன் னிலையிலும் அங்ஙனமே தான் வந்திருப்பதைக் குமுதவல்லி அதன்பின் அடுத்துக் கண்டாள். 

பதினான்காம் அதிகாரம்

மனோகரர்

மலையநாட்டிற் பெரிய வணிகரான மனோகரர் முன்னிலை யிலே தம்முளிங்ஙனம் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டபோது, நீலலோசனனுக்குங் குமுதவல்லிக்கும் உண்டான உள்ள நிகழ்ச்சி கள் வேறுவே றியல்பினவாய் இருந்தன. தான் முதன் முதற் கண்ட நேரந்தொட்டுத் தன் நெஞ்சைவிட்டுத் தவறாமல் அமர்ந்த அவ்வழகிய இளமங்கையின் வடிவைக் காண்டலும் அப்பெளத்த இளைஞன் மிகவுங்கிளர்ச்சியான களிப்புக் கொள்ளப்பெற்றான். தன்னிடத்து அவள் மிகவும் புதுமையாக நடந்துகொண்ட தனைப்பற்றி இவன் அடைந்த வியப்புங் கலக்கமும்,ஒரு நொடிப் பொழுது இவன் இப்போதடைந்த பெருமகிழ்ச்சியினால் விழுங் கப்பட்டிருந்தன. இனி, மற்றவகையிற் குமுதவல்லியோ தனக் கெதிரே கொள்ளைக்கார நல்லானையே தான் பார்ப்பதாகக் கொண்ட மனத்துணிவின் வயப்பட்டவளாய் இருந்தனள். அவன் பெயரை வெளிவிட்டுச் சொல்லாமலிருந்ததும், அல்லது தன் உள்ளத்திற் பட்டதை வெளியே திறப்பாக விடாமல் இயன்றமட்டும் விலக்க முயன்றதும் அவள் மீனாம்பாளுக்குக் கொடுத்த உறுதிமொழியின்பால் வைத்த நன்கு மதிப்பினாலே யாம். இங்ஙனமாக நீலலோசனன் ஒரு பக்கத்தில் அவளை வியப் புங் களிப்புங் காதலுங் கலந்த பார்வையொடு நோக்கிக்கொண் டிருக்க, அவளோ மற்றைப் பக்கத்திற் கீழ் நோக்கிய பார்வை யினளாயும், நாணமுடையளாயினும் விழுமிய ஒழுக்கம் பொருந் தினவளாயும் மனோகரர் தனக்குச் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். 

நாம் முன் சொல்லியபடியே இம்மலையநாட்டு வணிகரான வர் பெரிதும் நன்கு மதிக்கப்படுந் தோற்றமுடையராயிருந்தனர். அவரது அகவை அறுபத்தெட்டு அல்லது எழுபதுக்குக் குறை யாததாய் இருந்தது; தன்னுடைய மார்பின்மேற் றோங்கும் நீண்ட வெள்ளிய தாடிமயிர் உடையவராய் இருந்தார். வட்டவடிவான கண்ணாடியினால் மாட்டுக்கொம்புச் சட்டத்திற் கோத் துச் செய்யப்பட்ட மூக்குக்கண்ணாடியானது அவரது வளைந்த மூக்கின் நடுவே தொங்கிற்று; வெண்மையான மெல்லிய துணி யைப் பாகையாகத் தலையிற் கட்டியிருந்தார்; முழங்கால் அளவுக் தொங்கும் நீண்ட சட்டையும் பூண்டிருந்தார். உறுப்புகளின் உதவிகொண்டு மக்களின் மனப்பாங்கை மிகவும் மேற்பார்வை யாய்ப் பார்த்துணர்வார்க்கும், இவரது முகத்தின்கண் அமைந்த ஏதே தோ ஒரு குறிப்பானது அலுவலிற் பழகிய நுண்ணறிவோடு இவரது ஈரநெஞ்சத்தின் இயல்பையும் புலப்படக் காட்டியது முதலிற் சொன்ன இவரது குணத்திற் குரியதான தன்னய விருப்பமானது, பிறர் நலங்கருதும் இவரது பெருந்தன்மைக்கு முன் எந்த நேரத்திலுங் கீழ்அடங்கிப் போவதேயாதலை இவர் தம் பார்வைகளிலிருந்து தெரிந்துகொள்வது எளிதாயிருந்தது. 

அந்த அறையிற் றளவாடங்கள் நேர்த்தியாக ஒழுங்குபடுத் தப் பட்டிருந்தன. தட்டிக்கதவுகளுள்ள அதன் சாளரங்களில் துணிமறைப்புகள் தொங்கவிட்டு ஒப்பனை செய்திருந்தது; வண் ணம் பூசிய அதன் மச்சுகளைச் சலவைக்கல்லாற் செய்த தூண் கள் தாங்கிநின்றன ; சுவர்களிலே ஓவியங்கள் தொங்கவிடப்பட் டிருந்தன ; சார்மணைக்கட்டில்கள் ஒளிமென்பட்டினால் தைத்து ஓரங்களிற் பொற்சரிகையினாலும் இடையிற் பொன்னுருக்களா லும் புனையப்பட்டிருந்தன. சிறிய மேசையின் மேலும், நிலத் தின்மேலும், பலதிறப்பட்ட உணப்பொருள்கள் நிறைத்து பளு வான வெள்ளிக்கலங்கள் இருந்தன. பெரும்பனிக்கட்டிகள் இட்டுக் குளிரச்செய்த இனிப்பான பழங்களை ஒருவகைச் சாந்தி னால் வனையப்பட்ட ஒரு பெருங்கலத்திலே நிரப்பி அதனை ஒரு தவிசின் மேல் வைத்திருந்தார்கள் ; அம்மாளிகையைச் சூழ இருந்த வெளியிடம், நறுமணங் கமழ்ந்ததொடு, செயற்கைக் குழாய் ஊற்றுகளி லிருந்து குமிழிக்கும் பளிங்கொத்த தண் ணீரினாற் சூடுங் குளிர்ச்சியும் ஓர் அளவான இனியநிலையுடைய தாகவுஞ் செய்யப்பட்டிருந்தது. 

நீலலோசனன் நாம் முதன் முதற் காட்டியபடியே உடை யணிந்திருந்தனன் : ஆனாற், குமுதவல்லியோ தான் குதிரை மேல் இவர்ந்து வந்தக்கால் அணிந்திருந்த செழுமையான ஆடை யைவிட இன்னும் மிகுதியான அழகு வாய்ந்ததை உடுத்திருந் தனள். நேர்த்தியான பொற்பூ மிடைந்த கச்சினை அவள் முழங் கை வரையில் அணிந்திருந்தமையாற், பால்போலும் வெண்மை நிறமுடையதாய் அழகாக அமைந்த அவளது முன்கையானது முழங்கைவரையிலும் அல்லது அதற்குச் சிறிது மேலும் நன்கு கட்புலனாயிற்று. அவளது ஆடையின் ஓரமெல்லாம் பட்டுப்பின் னல் உடையதாய்ப் பலதிறப்பட்ட நிறங்கள் வாய்ந்ததாய்க் கச் சொடுகூட முழுதும் பூத்தொழில் உள்ளதாய் வயங்கிற்று. பொற்பட்டுக் கொட்டையுடைய நொய்ய ஆடை அவளது தலைக் கணியாய் விளங்கிற்று. அவள் சொல்லுதற்சரிய அழகுடன் தோன்றினாள்; அவள் அங்கே எதிர்ப்பட்ட இளைய நீலலோ சனனும் ஆண்டன்மைக்கேற்றபடி அங்ஙனமே வனப்புடன் திகழ்ந்தனன். 

நீலலோசனன் முதலில் அவ்வறைக்குட் புகுந்தமையால், மாட்சிமை வாய்ந்த அவ்வணிகர் அவ் விளம் பெளத்தனுடைய விழைவு தரும் முகத்தையும் அழகிய வடிவத்தையும் போது மான அளவு ஏற்கெனவே பார்த்துக்கொண்டார். ஆதலால், அம் முதியோனது பார்வைமுழுதும் இப்போது குமுதவல்லிமேற் பதிந்திருந்தன ; ஒருவகை அன்பான உன்னிப்போடும் வியப் போடும் இறும்பூதோடும் அவர் அவளை முற்றும் நோக்கினார். இவ் வாருக அவரது பார்வை அவள்மேல் நின்றமையால், நீலலோ சனன் அவ்வழகிய பெண்மணியை முன் அறிந்த அறிமுகத் தோடுங், களிப்பும் மகிழ்ச்சியுங் கலந்த தோற்றத்தோடும் அங் ஙனமே அவளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததனை அவர் காணாராயினர். 

அவள் முதலில் அவ்வறைக்குள் வந்தபோது அவளை வர வேற்றற்பொருட்டுச் சுருக்கமாகச் சொல்லிய சில சொற்களுக் குப்பின் சிறிதுநேரம்வரையில் மனோகார் ஏதொரு சொல்லுங் குமுதவல்லியை நோக்கிக் கூறாமல் இருந்தார். அவர் அவளது முகத்தை நோக்கிக்கொண்டிருந்தது, அவளுடைய அழகு அத் தனை கவர்ச்சிமிக்கதாய் இருந்ததனால் மட்டுமன்று; அஃது அவளது இயல்பினைத் தெரிந்துகொள்ளுதற் பொருட்டுமே யாம். ஏனென்றால்,தன் மேற்பரப்பின்மேன் மிளிரும் எதனையுங் கண்டுணர வல்லார்க்கு உள்ளத்தின் கண்ணாடிபோன்று என் றும் விளங்குவதாகிய முகத்தினையே ஒரு கருவியாக்கொண்டு உயிரின் ஆழத்தையும் உள்ளத்தின் ஆழத்தையுந் துருவிக் காண் பதில் தம்மை மிகவுந் திறமையுடையராகச் செய்தற்கேற்ற அள வில் அம்மலையவணிகர் நீண்டகாலம் உயிர் வாழ்ந்து வந்தனர். உலகினியற்கையை வேண்டியவளவுக்குக் கண்டுகொண்டவரா யிருந்தனர். 

குமுதவல்லி முதலிற் புகுந்தபோது, மனோகரர் எதிரே நீலலோசனன் வணக்கமான நிலையில் நின்றுகொண்டிருக்கக் கண்டாள்: அவர்தம் முதுமைக்கும் அவர்தந் தோற்றத்திற்கும் அம்மாளிகையில் விருந்து புறந்தருந் தலைவராயிருக்கும் அவர் தம் நிலைமைக்குந் தக அதே வணக்கமான நிலையுடன் அவளும் அங்ஙனமே இப்போது நின்று கொண்டிருந்தாள். இவ்விருவரது நடக்கையும் அவருக்கு உவப்பினைத் தந்தது: கடைசியாக அவர் வாயைத் திறந்து, “என் இளைய நேசர்களே – நாம் இப்போது தான் முதன்முறையாக ஒன்றுகூடினோமாயினும் யான் உங்க ளிருவரையும் அங்ஙனமே கருதுகின்றேன் – நரை முதியோர்க் குரிய மதிப்பினை நீங்கள் அறியாமலிருக்கவில்லை. என் முன் னிலையில் நீங்கள் நின்றுகொண்டிருக்கின்றீர்களே; மக்களுக் சூரிய நிலைமைகளின்படி நம்முடைய நிலைமைகளைப்பார்த்தால் அம்முறையில் யான் உங்களிருவரையும்விட மிகத்தாழ்ந்த நிலை யில் உள்ளேன். மாட்சிமை வாய்ந்த அரசி தங்களிருக்கையில் அருள்கூர்ந்து அமருங்கள்.” என்று குமுதவல்லிக் குரைத்துப், பின்னும் நீலலோசனன் பக்கமாய்த்திரும்பி “அரச, தாங்களும் இருக்கையில் அமரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.” என்று அவர் கூறினார். 

ஓர் அரசிக்குக் கீழ்ப்படாத நிலையினைக் குறிக்கும் மொழி களாற் குமுதவல்லி முன்னிலைப்படுத்துக் கூறப்படுதலைக் கேட் டதும் அவ் விளம் பௌத்தன் இறும்பூதுற்றுத் திடுக்கிட்டான்; இனி, மற்றவகையிற் குமுதவல்லியோ தானும் அங்ஙனமே திடுக்கிடாமல் இருக்கக்கூடவில்லை – ஏனென்றால், அரசியன் முறையில் எத்தகையோர்க்குரிய கோலத்தில் அக்கள்வர் தலை வன் தன்னை மறைத்து அம்மலைய வணிகரின் முன்னே வந்து சேர்ந்தானென்று அவள் வியப்புற்றாள். 

“என் இளைய நண்பர்காள்,’ என்று மனோகரர் கூறுகை யில், நீலலோசனன் தமது இடதுகைப்புறத்துங், குமுதவல்லி தமது வலதுகைப்புறத்தும் உள்ள இருக்கைகளில் அமர்தலைக் கண்டு அன்போடும் முறுவலித்து, “உங்கள் ஒவ்வொருவர்க் கும் ஏற்ற நிலைமைக்குத்தக யான் உங்களை முன்னிலைப்படுத்திப் பேசியபோது உங்கள் முகங்களின்மேல் வியப்புக்குறி தோன் றியதை யான் கண்டு கொண்டேன். ஆனாலும், இதற்குமுன் என்றும் நீங்கள் ஒருவரையொருவர் கண்டு பழகியதில்லாமை யால், இப்போது உங்களை ஒருவரோடு ஒருவரைப் பழக்கப் படுத்திவைக்கின்றேன். அதனோடுகூடக், கட்டாயமாய் இல்லா விட்டாலுங் காரியமுறைக்காகவாவது ஒரு வினையைச் செய்து முடிக்கக்கடவேன். எனக்கு நம்பகமுள்ள ஏவலாளான சந்திரன் வாயிலாக யான் விடுத்த திருமுகமும் இலச்சினையும் பெற்றுக் கொண்ட நாகநாட்டரசி குமுதவல்லி உண்மையிற் றாங்களே யன்றி வேறு பிறர் அல்லர் என்பதனை யான் உறுதிப்படுத்திக் கொள்ளும்பொருட்டு அவ்வடையாளத்தை எனக்குக் காட்டும் படி, பெருமாட்டி, முதலிற் றங்களைக் கேட்டுக்கொள்ளுகின் றேன்.” என்றார். 

முன்னே பலகாலும் நம்மாற் குறிப்பிடப்பட்ட அம் மந் திர மோதிரத்தைக் குமுதவல்லி தன் விரலினின்றுங் கழற்றி யெடுத்து, அதனை மாட்சிமிக்க மனோகரரிடங் கொடுத்தாள். 

“இதோ என்னுடையது!” என்று நீலலோசனன் கூறிக் கொண்டே கத்தி மாட்டுந் தனது அரைப்பட்டிகையை அவிழ்த் தான் ; தன்னை மெய்ப்பிக்குந் தனது அடையாளத்தை எடுத் துக்காட்டும் பரபரப்பில் மணிகள் அழுத்தின தனது கத்தியை யுங் கீழே மெதுவான கம்பளிமேல் விழும்படி விட்டுவிட்டான்; பிறகு தனது குப்பாயத்தின் மார்பண்டையுள்ள ஒரு பையி லிருந்து அதனை யெடுத்தான்; பாட்டையிலே தான் வந்தபோது தனது பணப்பையி லுள்ளவை தற்செயலாய்க் கீழ்விழுந்ததி லிருந்து, அவன் அதனிடத்துப் பெரிதுங் கருத்துள்ளவனா யிருந்தான். 

இவ்வாறு அவன் மனோகரரிடங் கொடுத்ததும் ஒருமோ திரமேதான் – குமுதவல்லி இப்போது கொடுத்ததனையே முழு தும் ஒத்திருந்தது இம்மோதிரம் – ஒரு சுன்னஞ் செதுக்கப் பட்ட ஒரேயொரு செம்மணி குயிற்றிப் புதுமையான வேலைப் பாடு வாய்ந்ததாயிருந்தது இம்மோதிரம். இதனையும் மனோகார் எடுத்துத் தொழிலாளிக் குரிய உன்னிப்போடும் அதனைச் சிறிது நேரம் ஆராய்ந்து பார்த்தார்.தனது மோதிரத்திற்கு முற் றும் இணையான அக்கணையாழியைக் காண்டலுங் குமுதவல் லிக் குண்டான குழப்பத்தையும் வியப்பையும் இதனைப் பயில் பவரே எண்ணிப் பார்த்துக்கொள்ளலாம்! இதன் கருத்து யா தாய் இருக்கக் கூடும்? அவ் விளம் பௌத்தனைப்பற்றித் தான் ஏகோ முழுதும் பிழைபாடான எண்ணங்கொண்டு வருந்து கின்றனளா? தான் கொண்ட ஐயங்களால் அவனுக்குப் பிழை செய்தனளா? சூழ நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சான்றாய் நின்று புது மையாய்க்கூடி அவ் விளைவினைத் தோற்றுவித்தனவா? ஏது நினைப்பதென்று அவளுக்குப் புலனாகவில்லை.- உண்மையிலே அவள் நினைவுகளெல்லாங் கடிதிற் கலக்கமடைவன்வாயின். 

“நல்லது, உங்களிருவரையும் இங்கே வருவித்தற்பொருட் டுத் தனித்தனியே விடுத்த முடங்கலுடன் விடுத்த மோதிரங் களே இவை; இந்தப்பெருமாட்டி” என்று மனோகரர் குமுத வல்லியைச் சுட்டினவராய் அவ் விளம் பௌத்தனை நோக்கி, CC நாகநாட்டாசி யாவர் என்று கூறிப், பின்னர் அவ்விளை ஞனைச் சுட்டினவராய்க் குமுதவல்லியை நோக்கி, “இந்தப் பெருமான் மேற்கரைநாட்டு மன்னற்கு எடுப்புப் புதல்வனான நீலலோசனன் ஆவர்.” என மொழிந்தார். 

“அன்பும் ஈரமும் வாய்ந்த மனோகரரே, யான் அரசனான நீலலோசனனை இதுதான் முதன்முறையாக எதிர்ப்பட்டேன் அல்லேன்; யான் அவருக்குச் செய்த சில பிழைகளுக்காக என் நெஞ்சார்ந்த மன்னிப்புமொழிகளை, என் மிகவும் உண்மையான பிழைபொறுக்கு முரைகளைக் கூறுதற்கு ஒரு நொடிப்பொழு துந் தாழேன்.” என்று உருக்கத்தால் நடுங்கிய குரலோடுங் குமுதவல்லி கூறினாள். 

மனோகார் அவ்விளைஞர் இருவரையும் வியப்புடன் நோக்கி, “நீங்கள் இருவிரும் இதற்குமுன் எதிர்ப்பட்டீர்களா? இவ் வறையில் ஒருவரையொருவர் நீங்கள் காணும் நேரம் வரையிற் பெயாளவாய்க்கூட நீங்கள் ஒருவரையொருவர் தெரிந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணினேன். என்று கூவிச்சொன்னார்.

”என்றாலும், நாங்கள் முன்னமே எதிர்ப்பட்டிருக்கின் றோம். என்று கூறுகையில் நாகநாட்டரசி நாணத்தால் தன் முகஞ் சிவப்பேறப்பெற்றவளாய் “ஆம், மாட்சிமைதங்கிய நீல லோசன மன்னற்கு யான் தீது செய்தவளானேன்; அதுவும் மிகப்பொல்லாத ஐயரவினாலேதான். என்னுடைய கதையை விரைவிற் சொல்லிவிடுகின்றேன். அருமையிற்சிறந்த மனோ கரரே,யான் இடையிற் றக்கிய சாவடியின் கண் என்னுடைய மோதிரத்தை — இப்போது தங்களிடம் யான் கொடுத்த இவ் விலைஉயர்ந்த மந்திரமோதிரத்தைக் களவு கொடுத்துவிட்டேன்: அடுத்தநாளில் இவ் விளம்பெருமானைத் தலைப்பட்டு இவரொடு தோழமை கொண்டேன். வழிக்கரையிலுள்ள ஐயக்காரர் சிலர்க் குக் காசு ஈந்து உதவுகையில், இவர் தற்செயலாய்த் தமது பணப் யிலிருந்தவற்றைக் கீழே வீழ்த்திவிட்டார்; வீழ்ந்தவற்றில் ஒரு மோதிரம் இருந்தது; அஃது என்னுடையதுதான் என்று நம்பிவிட்டேன். ஆனால், அந்த மறை பொருளின் வரலாறு இப்போது வேறுவகையாய்ப் புலப்படலாயிற்று : அந்த நேரத்திலோ யான் ஒரே எண்ணந்தான் கொள்ளக்கூடியதாய் இருந் தது – ஆகவே, கூடியமட்டுங் காலந் தாழாமல் மாட்சிமை தங் கிய இவ்வரசிளைஞரையான் பிரிந்து செல்லவேண்டுவது இயல் பாயிற்று. பிறகு ஒருவர்க்கு நேர்ந்த கழிவிரக்கத்தால் என்னு டைய மோதிரத்தைத் திரும்பப் பெறலானேன் – என்றாலும், அந்நிகழ்ச்சியிலுங்கூட யான் மாட்சிமை தங்கிய நீலலோசன மன்னரைப்பற்றிப் பொல்லாங்காகவே பின்னும் நினைக்கலா னேன்.” என்று தொடர்ந்துரைத்தாள். 

”ஒ! புத்தன் வாழ்க!’ என்று அவ் விளம்பௌத்தன் ஒல மிட்டவனாய், “என் அறிவைக் கலக்கி என்னை மிகத் துன் புறுத்தி வந்த அந்த மறைபொருளானது கடைசியில் நன்கு புலனாயிற்று! இனி மன்னிப்புக் கேட்டலைப் பற்றியோவென் றால், அழகிய அரசீ, தங்கள் ஆம்பற்செவ்வாயினின்று பிறக் கும் ஒரு சொல்லே, மாட்சிமை மிக்க தாங்கள் என்னைப் பிழை பட நினைந்ததனால் உண்டான எனது மனத்துயரத்தை என துளத்திலிருந்து சுவடறத்துடைத்தற்குப் போதுமானதாகும்!” என்று கூறினான். 

குமுதவல்லி தனது முகத்தை அழகாகச் சாய்த்து இச் சொற்களை ஏற்றுக்கொண்டாள்; அப்போது நாணத்தால் உண் டான சிவப்பு அவள் சன்னங்களில் மறுபடியும் பரவிற்று; இவ் விளம்பெளத்தனுங் கொள்ளைக்கார நல்லானும் ஒருவரே என்று இவள் பிறகு ஒரு சிறிதும் நினையாவிட்டாலும், நீல லோசனனைப் பற்றிய மற்றொருசெய்தி இவளைத் திகைப்பித் த்து; அஃது. அவன் முன்னாள் மாலைக்காலத்திற், குமுதவல்லி தனது மன்னிப்பை மீனாம்பாளுக்கு உறுதிப்படுத்திக் கூறின கட்டிலண்டையிற் காணப்பட்டதேயாம். அவ்விடத்தில் தாம் எதிர்ப்பட்டதைச் சுட்டி இப்போது அவன் சிறிது ஏதுங் குறிப் பிடாதது பற்றியும் அவள் திகைப்புற்றாள்: ஏதோ ஒரு கார ணம் பற்றி அதனை மனோகரர் முன்னிலையில் அவன் தெரிவி யாமல் மறைத்துவைக்கும்படி கற்பிக்கப்பட்டிருத்தல் வேண்டு மென்று நினைந்தவளாய் அவள் அதனைத் தனக்குள் இணக்கிக் கொண்டாள். 

“அங்ஙனம் நீங்கள் எதிர்ப்பட்டீர்களா?” என்று அம்முதி யோன் அவ்விருவர் இடையிலும் இருந்தபடியே, அவ்வழகிய இளைஞனையும் எழில் மிக்க அந்நங்கையையும் இடைவிடாத ஆவலுடன் நோக்கிப் பின்னும், ‘நீங்கள் அவ்வாறு எதிர்ப்பட்ட தைப்பற்றி யான் வருத்தப்படவில்லை. அரசீ தாங்கள் கூறிய அப்பொருந்தா நிகழ்ச்சி நேராவிடின், இவ் விளம்பெருமானைப் பற்றித்தவறாமல் தாங்கள் நல்லெண்ணங்கொள்ளுதலைத் தடை செய்யத்தக்கது எதுவும் நேர்ந்திராது: நீலலோசன, தாங்களும், அரசி குமுதவல்லியொடு கொண்ட வழிநடை நட்புச் சடுதியிற் குலைந்து போனபோது நிரம்பவும் வருத்தப்பட்டீர்க ளென்ப தனைத் தங்கள் பார்வையினாலேயே நன்குதெளியப்பெற்றேன்.” என்று உரைத்தார். 

நீலலோசனனது முகம் வெட்கத்தால் அன்ன்றது; என் றாலும் அதில் மகிழ்ச்சியுங் கலந்து தோன்றியது: ஆனாற்,குமுத வல்லியினிடத்துத் தோன்றிய நாணமோ இன்னும் பெரிதாயிற்று. அங்ஙனமே அவள் முகத்திற் கனன்ற நாணச் சிவப்பி னிடையே அருவருப்பிற்கு அடையாளமான ஒரு பார்வையுங் கலந்து தோன்றியது. அவள் நினைப்பாளானாள் – அங்ஙனம் நினைப்பது இயல்புதான் – அம்முதியோன் பேசியதில், கொச் சைத்தனம் என்று கொள்ளத்தக்க, ஒரு பொருந்தாச் சிறு தன் மை இருந்தது. பெருந்தன்மை மிக்க பார்வையும் அத்தனை முதுமையும் உடைய அவர், தனது கன்னிமை நாணத்திற்கு மதிப்புக் குறைச்சலான சொற்களை எண்ணாமற் சொல்லிய குற்றத்திற்கு ஆளானதைக் குறித்து அவள் வியப்பும் வருத்தமுங் கொள்ளலானாள். 

ஆனால், அப்பெரியார் புன்சிரிப்புற்றுப் பிழைபடாத அன் போடு, அவள் கொண்ட அருவருப்பைத் தடையின்றி நீக்கத் தக்க வகையாய்க் கூறுவார்: ‘அரசீ, தங்கள் கன்னிமை நாணத் திற்கு நான் பிழை செய்யமாட்டுவேன் என்று ஒருபோதும் நினையாதீர்கள். நாகநாட்டரசி தமது பேரழகிற்குப் பெற்ற புகழினுந் தமது நல்லொழுக்கத்திற்குப் பெற்ற புகழிற் சிறிதுங் குறைந்தவர் அல்லரென்பதும் – ஓர் அரசிக்குரிய மேன்மையால் தாங்கப்படுதலினுங் கன்னிமைப் பெருமையால் தாங்கப்படு தலிற் சிறிதுங் குறைந்தவர் அல்லரென்பதும் நான் அறிவேன். சுருங்கியபொழுதில் வழி நடந்து செல்லுதற்குத் தோழமை யாய்க்கொண்ட அயலவனான ஓர் இளைஞனிடத்தில் தாங்கள் மையல் கொள்ளத்தக்கவர்களென்று, இனிய அரசீ, அத்தனை பரும்படியான ஒரு நினைவையான் கொள்ளத்துணிவேனென நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை: என் சொற்களுக்கு வேறு பொரு ளுண்டு, இப்போது உண்மையைச் சொல்லி விடுகின்றேன் – உங்களிருவர் கைகளும் நேசவுரிமையிற் பிணைக்கப்படு வனவாக! ஏனெனில், உங்கள் நரம்புக் குழாய்களில் ஒரே குடும் பத்திற்குரிய செந்நீர் புரண்டோடுகின்றது – நீங்கள் இருவீரும் மைத்துனக்கிழமை உடையீர்கள்!” 

நீலலோசனன் குமுதவல்லி என்னும் அவ்விருவர் வாய் களினின்றும் உடனே வியப்பொலிகள் தொன்றின; சிறிது நேரம் மிகப்பெரிய திகைப்பின் வயப்பட்டவர்களாய் இருந்த மையால், அவர்கள் தமது இருக்கையினின்றும் எழுந்து நின் றனராயினுந், தாங்கைதழுவ வேண்டுமென்று கற்பிக்கப்பட்ட படி செய்ய நினைவற்றவராய் இருந்தனர். 

“என் இளையநேசர்களே, நீங்கள் இருவீரும் நாகநாட்டை ஒருகால் அரசாண்ட கோச்செங்கண்மன்னற்குப் பேரம் பிள்ளைகள் ஆவீர்கள் என்பது உண்மையேயாம்.” என்று மனோகரர் வணக்க வொடுக்கத் தோடுங்கூறினார். 

பெளத்த சமயத்தவனான தான்,நாகநாட்டில் அரசுபுரிந்த சைவசமய அரசன் கால்வழியில் வந்தவனாதல் எவ்வாறு கூடு மென்றெண்ணி நீலலோசனன் பெரிதுந் திகைப்புற்றனனாயி னும், வியப்புங் களிப்பும் ஒருங்கே கிளரப்பெற்றவனாய், “மைத் துனி, என் கையை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்!” என்று உரத்துச்சொன்னான். 

குமுதவல்லியுந் தான் கேட்டவைகளைப்பற்றித் திகைப் புற்றனளாயினும், போற்றத்தக்க தம் நண்பனான அம்முதி யோன் வாயினின்று பிறக்கும் ஒவ்வொன்றும் உன்மையாகத் தான் இருக்கவேண்டுமென்று உணர்ந்தவளாய்த் தனது வெண் மையான அழகிய கையை நீலலோசனன் கையில் வைத்தாள். 

உடனே, மனோகரர் தமது இருக்கையினின்றும் எழுந்து, அவ்விளைஞர் இருவரின் சென்னிமேற் றம் கைகளை நீட்டிக், “கடவுள் உங்களிருவர்க்கும் அருள் வழங்குவாராக! மற்றொரு வர் பொருட்டாக யான் உங்களுக்கு விரைவிற் கொடுப்பதாய் இருக்கும் புதுமையான பொருட்டிரளுக்கு, நீங்கள் தகுதி யுடையவர்களாம்படி நாம் வழிபடும் முதற்பெருங் கடவுள் அருள்புரிவாராக! ஒ, நீலலோசன, சைவ சமயத்தின் அருளொளினது நுமதுள்ளத்தில் ஊடுருவிச் சென்று விளங்குவ தாக!” கான்று வாழ்த்துரை கூறினார். 

இச்சொற்களைச் சொல்லிய வகையிலும் ஓசையிலும் வெளித்தோற்றமும் வணக்க வொடுக்கமும் வாய்ந்தது ஏதோ இருந்தமையால், அப்பௌத்த இளைஞனும் அச்சைவநங்கை யும் அவர் காலடிகளில் வீழ்ந்து வணங்கினார்கள்; அவருடைய கைகளை எடுத்து முத்தம் வைத்தார்கள். ஆனால், அவ்விருவரும் ஒன்றுமே பேசவில்லை: அவர்கள் தம்மிடத்தண்டான மிகுந்த மனவருக்கத்தாற் பேசக்கூடாதவராய் இருந்தனர். ஆகவே, சம யம் மாறு தலைப்பற்றி அம்முதியோன் சொல்லிய சொற்கள் எவ்வகையான எண்ணத்தை நீலலோசனனிடத்தில் எழுப்பின வென்பதை அங்ஙனங் கோரிய அம்முதியோனே அஃது எங்ஙன மிருக்கலாமென்று திட்டமாய்த் துணிந்தறியக் கூடவில்லை. “என் அன்பிற்கினிய இளையநேசர்களே, எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்! உங்கள் இருக்கைகளில் இருங்கள்-யான் சொல்லப்போகிற விளக்கங்களை உற்றுக்கேளுங்கள்.” என்று மனோகார் கூறினார். 

அங்ஙனமே குமுதவல்லியும் நீலலோசனனும் எழுந்து, வணங்கத்தக்க அவ்வணிகரின் வலது பக்கத்திலும் இட து பக் கத்திலும் முறையே உட்கார்ந்தனர், இவ்விருவரும் அவர்முகத் தை மிகுந்த ஐயுறவோடும் உற்றப்பார்த்தனர்; ஏனென்றால், முதன்மையான செய்திகளைத் தாம் இப்போது அறியப்போகுந் தறுவாயில் இருப்பதாக அவர்கள் உணர்ந்தார்கள். 

மனோகரர் அவ்வரசி பக்கமாய்த் திரும்பி, “மாட்சிமை நிறைந்து தங்களை நோக்கி மட்டும் யான் கூறுவதாயிருந்தால், தங்கள் பாட்டனாரான கோச்செங்கண் மன்னரைப் பற்றித் தாங்கள் முன்னமே அறிந்துவைத்திருக்கும் பல சிறுவரலாறு களை யான் கூறாது விட்டுச் செல்லலாம். ஆனாற், பெருமான் நீலலோசன், தாங்கள் அவ்வரலாறுகளைச் சிறிதும் உணர்தற்கு இடமில்லாதிருத்தலினால், யான் அவற்றின் நுணுக்கங்களை எடுத்துச் சொல்லவேண்டுவது அகத்தியமாய் இருக்கின்றது. கோச்செங்கண் மன்னர் நாகநாட்டைத் தனியரசு புரிந்தவரென்று தாங்கள் அறிதல்வேண்டும்; அவர் தமது நுண்ணறிவு முறையாலுந், தாம் பிறழாது நடாத்திய செங்கோன்மையாலுந், தாமாகவே ஆக்காங்கு நாட்டிய அறச்சாலைகளாலுந், தங் குடிமக் களாற் பெரிதும் அன்பு பாராட்டிப் போற்றப்பட்டு வந்தார். நாகப்பூரிலுள்ள தமது அரண்மனையில் அவர் வழக்கமாய்த் தங்கி யிருந்தனர் – அழகிற்சிறந்த குமுதவல்லி, தாங்கள் அவ்வரண் மனையிலிருந்துதான் சிறிது காலத்திற்குமுன் பயணம் புறப் பட்டு நீலகிரி ந+ரத்திற்கு வந்து சேர்ந்தீர்கள். நீங்கள் இருவீரும் பிறப்பதற்குமுன் – அதாவது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம் –வணங்கத்தக்க முனிவர் ஒருவர் ஒருநாள் அவ்வரண்மனை வாயிலில் வந்து நின்று, தாம் கோச்செங்கண் மன்னனொடு பேச விரும்புவதாகத் தெரிவித்தனர். தன்னைக் காண வருபவர்களெல்லார்க்கும் எப்போதும் எளியராயிருக்கும் அம்மன்னர் தூயரான அத்துறவியை எவ்வளவு விருப்பத் தொடு வா ே வரபா ரன்பதை நாம் சொல்லல்வேண்டா; மே லும், உங்கள் பாட்டனார் சைவசமய உண்மையில் மிகவும் மனம் அழுந்திநின்றார்; தமது ஆணை பரவிய இடங்களிலெல்லாம் அவர் அதனைத் தம்மாற் கூடிய மட்டும் வளர்த்துவந்தார்.அம் முனிவர் அவர் முன்னிலையிற் சென்று, தாமிருவருந் தனித் திருக்கும்படி கேட்டுக்கொண்டார். அம் மன்னரும் அதற் கிரைந்து தம் பரிவாரங்களை அப்புறப்படுத்திவிட்டார்; அதன் பின் அத்தூயமுனிவர் அவ்வரசர் செவியிற் படும்படி மிகவும் புதுமையான செய்திகளைக் கூறத்துவங்கினார். பின்வருகிறபடி அவ்வரசரை நோக்கிச் சில பல கூறுவாரானார்: “என் அரசே, புதுமை மிக்க ஒரு மறைவான செய்திக் கு வைப்பிடமாய் உ ள் வர் இந்நேரத்தில் இவ்வலகில் இரண்டு பெயரே இருக்கின் றனர். சில கிழமைகளுக்கு முன் அதனை யறிந்தவர் மூன்று பெயர் இருந்தனர்; ஆனால், ஒருவர் இறந்து போயினர் – இப்போது அம்மறைவினைத் தம் நெஞ்சத்தே பூட்டிவைத்திருப்பவர் இரு வரேயிருக்கின்றனர். தொன்றுதொட்டு வரும் ஒரு வழக்கத் தின் தூய கட்டுப்பாட்டின்படி, இப்போது அம்மறைபொருள் மூன்றாம் ஒருவர்க்கு அறிவிக்கப்படவேண்டுவதாய் இருக்கின்றது; ஏனெனில், அம்மறைபொருள் முற்றுமே தெரியாமல் அழிந்துபோதற்கு இடம் இல்லாதபடி இயன்றமட்டும் அதனைப் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டாகவே அதனைத் தெரிந்தவர் கள் எப்போதுமே மூன்றுபெயர் இருக்க வேண்டுமென்பது அகத்தியமாகக் கருதப்பட்டது. யான் இப்போது குறிப்பிட்டுச் சொன்ன தொன்றுதொட்டவழக்கும், அம்மறைபொருளின் இயற்கையும்,போற்றத்தக்க அம்மறைவினைப் புதிய ஒருவர்க்கு அறிவிக்கவேண்டுவது அகத்தியமாம் பொழுது அதற்கு மிகவுந் தக்கவர் ஒருவரையே தெரிந்தெடுத்தல் வேண்டுமெனக் கற்பிக் கின்றன. அங்ஙனந் தக்கவரா யுள்ளவர் இவ்வளவு அகவை யுடையவரா யிருக்கவேண்டு மென்னும் வரையறை யில்லை: ஆனாற், சமயக் கொள்கையைப் பற்றியோவென்றால் அப்படி யில்லை – ஏனென்றாற், சைவ சமயத்தைத் தழுவினோரல்லாமற் பிறர் இப்பெரிய புதைபொருளை அறியும் மகிழ்ச்சி பெறலாகாது. மாட்சிமை தங்கிய தங்கட்கு இப்போதுதான் யான் தெரிவித்த வண்ணம், இம்மறைவினை அறிந்தவரில் ஒருவர் இதனினுஞ் சிறந்த மறுமை யலகத்திற்குச் சில நாளுக்கு முன் ஏகிவிட்டமையால், அவரிருந்த இடத்திற்கு நிரம்பவுந்தகுதி யான மற்றொருவரைத் தெரிந்தெடுக்குங் கடமை என்னைப் பொறுப்பதாயிற்று. அறிவாலும் அரசுமுறையாலும் மன்னர் எல்லாரினுஞ் சிறந்தவரும், அன்பொழுக்கத்தாற் சைவ சமயத் தார் எல்லாரினும் மேம்பட்டவருமான கோச்செங்கட் சோழ ரைத் தவிர வேறு சிறந்தவரை யான் எங்ஙனந் தெரிந்தெடுக்க வல்லேன்? என்று இவ்வாறு மேற்கணவாய் மலைநடுவிலிருந்து வந்த அத்தூயமுனிவர் உங்கள் பாட்டனார்க்குச் சொல்லினார்.” எனப்புகன்றனர். 

போற்றத்தக்க மனோசரர் துவங்கிய கதையை மிகவும் மனங்கவிந்து கேட்டுக்கொண்டு வந்த அரசி குமுதவல்லியும் அரசிளைஞன் நீலலோசனனும் பின்னும் அதன் றொடர்ச்சியாய் அவர் சொல்லப் போவதனைக் கேட்க எவ்வளவு ஆவல் கொண் டார் என்பதை அவர்களின் பார்வைகளே புலப்படுத்தின. 

வணங்கத் தக்க அவ்வணிகர் பின்னும் அதனைத் தொடர்ந் துரைப்பாரானார்: ”மிகவும் போற்றத்தக்கதென்றுஞ் சிறந்த தென்றுஞ் சொல்லப்பட்ட மறைபொருளை வைத்திருப்பவர் களில் ஒருவராகத் தம்மைத் தெரிந்தெடுத்ததனால் தமக்கு நயம் புரிந்த அத்தூய முனிவருக்கு நுங்கள் பாட்டனாரான அக்கோச் செங்கண் மன்னர் தமது நன்றியறிதலைத் தெரிவித்தார்; பின் வருமாறு அம்முனிவர் அம்மாட்சிமை நிறைந்த மன்னர்க்கு உரைப்பாரானார்: ‘எம்பெருமானே, இது காலகாலமாக உண் மையோடுங் கொடுக்கப்பட்டு வருகிற ஒரு புதைபொருளாகும்; மிகவுந் தாழ்ந்த நிலைமையி லுள்ள துறவிகளிடத்தும், மிகவும் உயர்ந்த நிலைமையிலுள்ள அரசர்களிடத்தும் இம்மறைபொருள் வைக்கப்பட்டு வந்திருக்கின்றது. இதனைத் தெரிந்துகொள்வ தானது, உலகத்தில் நிரம்பவும் வியக்கப்படுகின்ற பயன்களைத் தாம் நுகரத்தக்கவர்கள் என்று எண்ணுவோர்க்கு ஒரு திறவு கோலாயிருக்கும். தனதறிவுக்குள் அகப்படும்படி இங்ஙனங் கொண்டுவரப்பட்ட வியப்பான பொருள்களை மிகுகளிப்போ டும் பேரின்ப வியப்போடும் உற்றுக் கேட்டுக்கொண்டு வந்த கோச்செங்கண் மன்னர்க்கு அம்முனிவர் அம்மறைபொருளை அதன்பின் விளக்கி வெளியிட்டார். அந்த மறைபொருள் யாதா யிருந்தது – அல்லது யாதாயிருக்கின்றது – என்பதை, என் அன் புள்ள இளைய நண்பர்களே, இப்போது யான் சொல்லுங் கார ணங்களால், உங்களுக்கு இவ்வமயத்திற் சொல்லக்கூடாதவனா யிருக்கின்றேன். ஆனாலும், அழகிற்சிறந்த குமுதவல்லி தங்க ளுக்கு மட்டும் அது சுருக்கில் தெரிவிக்கப்படலாம்; நீலலோசன ரே, தங்களுக்கு யான் அதே வகையான நம்பிக்கையை எப் போது காட்டப்பெறுவேனோவென்றால் அது தங்களைத்தான் பொறுத்திருக்கின்றது.” 

மறுபடியும் மனோகரர் சிறிதுநேரம் பேசாதிருந்தார்; அப் பெரிய மறைபொருளைத் தானும் அங்ஙனமே தெரிந்துகொள் ளத் தகுதியுடையவனாய்க் கருதப்படுவதெல்லாந், தான் பௌத்த சமயக் கொள்கையை அறவே விட்டொழிப்பதனையே பொறுத் திருக்கவேண்டுமென்பது, தான் இது வரையிற் கேட்டுவந்த வற்றால் இனிது விளங்குகின்றதென நீலலோசனன் தனக்குள் நினைப்பானானான். இதைப்பற்றி அவன் மன நிலை எவ்வாறிருந்த தென்பது பின்வருவனவற்றாற் புலனாகும். 

மனோகரர் பின்னுந் தொடர்ந்துரைப்பாரானார்: “யான் இப்போது குறிப்பிட்ட மறைபொருளைச் சிறிதும் வழுவாமல் முற்றுந் தெரிந்துகொள்ளும் பொருட்டுக் கோச்செங்கண் மன் னர் அத்துறவியோடுங்கூடப் பயணம் புறப்படவேண்டுவது இன்றியமையாததாயிற்று. அப்பயணஞ் சென்று திரும்புதற் குச் சிலநாட்கள்மேற் செல்லாது; ஆகவே, தாம் நாகநாட்டின் தலைநகரை விட்டு வெளியே சென்றிருப்பது தம்மைச் சூழ்ந் திருக்கும் நன்றியறிவுள்ள ஏவற்காரர் சிலர்க்கன்றிப் பிறர்க் குத் தெரியாதிருக்கும் வண்ணம் அவ்வரசர் பெருந்தகை அதனை மறைவாகவே முடிக்கக்கூடியவரானார். என்றாலும், அவர் அத் தூய துறவியைத்தவிரப் பிறரெவரையும் உடன் கூட்டிச்செல்ல வில்லை; அம்முனிவர் எடுத்துச்சொன்ன உறுதிமொழியின் திறத்தில் அவர் ஏமாற்றம் அடையவில்லை. அவ் வியத்தகு மறைபொருட்களஞ்சியமாயும், அதனையறிந்த அறிவால் தாம் அடையக் கிடந்த நிலையான பயன்களிற் சிலவற்றைப் பெற்ற வராயும் அவர் நாகப்பூருக்குத் திரும்பிவந்தார். இரண்டு ஆண்டு கள் கழிந்தபிறகு அப்புனிதமுனிவர் நம்பிக்கை வாய்ந்த ஒரு தூதுவனைக் கோச்செங்கண் மன்னர்பால் விடுத்துத் தாம் இறக்குந் தறுவாயில் இருப்பதனைத் தெரிவித்தார். அவ்வரசர் பெருந்தகையும் அந்நல்லார் தமதுயிரை இறைவன்றிருவடிக் குச் செலுத்துந்தறுவாயில் இருந்த இடத்திற்கு ஒரு நொடிப் பொழுதுந் தாழாமற் சென்றார்; அவ்வரசரும் பிரிந்துபோகும் அம்முனிவரின் வாழ்த்துரைகளைப் பெற்றுக்கொண்டு பின்னர் அவரை அடக்கஞ் செய்யவேண்டுஞ் சடங்குகளை முடித்தார். அதன் பிறகு, அம்மறைபொருளை வைத்திருக்கத்தக்க மற் றொருவரைத் தேடிப்பிடிக்க வேண்டுவது அம்மன்னர் பெருந் தகையின் மேல்தாயிற்று; தாம் செவ்வையாய் அறிந்த சைவ சமய அன்பர்களை யெல்லாந் தமதுள்ளத்தில் அளவிட்டுப்பார்த்த பின்னர், அவர் முடிவாக என்னையே தெரிந்தெடுக்கலானார். 

ஆம், என்னிளைய நேசர்களே, தங்கள் சிறந்த பாட்டனாரின் நெருங்கிய நட்பைப் பெற்று இன்புறுஞ் செல்வத்தினையும் பெருமையினையும் எய்தினேன். எனதுண்மைச் சிவநேயத் திற்கு அடையாளமாக யான் அப்போது காட்டிய ஒப்பனைகளை இப்போ தெடுத்துச்சொல்வது எனக்குத் தகாது; ஆகையால், இறந்துபோன அம்முனிவருடைய நிலைமையை யான் அடை யலானேன் என்று சொல்வ து போதும். இங்ஙனமாக அவ்வுயர்ந்த மறைபொருளைத் தெரிதற்கு அருள்பெற்ற மூவரில் யானும் ஒருவனானேன்.” 

பின்னுஞ் சிறிது நேரம் பேசாமலிருந்த பிறகு மனோகரர் மறுபடியும் பின்வருமாறு பேசப்புகுந்தார். 

“கோச்செங்கண் மன்னர்க்கு இரண்டு புதல்வர்கள் இருந் தார்கள் ; அவர்களிருவரும் மணஞ் செய்யப்பட்டவர்களே. அவர்க்கு விருப்பமிருந்தால் தம்புதல்வர்களில் ஒருவர்க்காயினுந் தம்மருமக்களில் ஒருவர்க்காயினும் அம்மறைபொருளை அவர் தெரிவித்திருக்கலாம்; ஏனெனில், யான் முன்னமே தெரி வித்தபடி ஆண்டைப்பற்றிய வரையறை யில்லை – ஆண்பெண் என்னும் பால் வரையறையும் இல்லை யென்பதனை நீங்கள் முன்னமே தெரிந்திருக்கிறீர்கள். அவர்தம் புதல்வர்கள் கடமை யில் வழுவாமற் கீழ்ப்படித லுள்ளவர்களாய் இருந்தாலும், அப் புதல்வர்களின் இளையமனைவிமார் நற்குணமுடையராயும் மனத் துக்கினியராயும் இருந்தாலும் அவர்களெல்லாரும் உலகப்பற்று மிக்கவராயுந், தமது உயர்ந்த நிலையின் ஆரவாரத்திலும் வெளிப் பகட்டிலும் அரசியலிலும் நினைவு அழுந்தினவராயும் இருந்த மையால், அவர் தமது மனமார அவர்களுள் எவரையுந் தெரிந் தெடுத்து அப்பேரின்பநுகர்ச்சிக்கு உரியராம்படி செய்ய இய லாதவரானார். அதுவல்லாமலும், அத்தகையதொருமறைபொரு ளைத் தன் மனையாளுக்குத் தெரியாமற் கணவன் தானே வைத் திருப்பது ஒவ்வாததொன்றாம்; இனிக், கணவனை விலக்கி அவன் மனைவிக்கு ஒரு மறைபொருளைப் புலப்படுத்துவதும் நன்முறைக்கும் நல்லறிவுக்கும் பின்னும் இசையாததொன்றாம். ஆகவே, எல்லாவற்றையும் எண்ணிப்பார்க்கையிற் கோச்செங்கண் மன்னர் என்னையே தெரிந்தெடுக்கலானார். ஆனால், இப் போது யான் இக்கதையின் மற்றொருபகுதியைப்பற்றிப் பேசப் போகின்றேன். கோச்செங்கண் மன்னர்க்கு மணஞ்செய்யப் பட்ட மனைவியின் புதல்வர் இருவர் இருந்தனரென்று யான் முன்னமே சொல்லியிருக்கின்றேன். நீலலோசன, அம்மன் னரின் இளையபுதல்வர்க்கும் அவர் தம் அழகிய மனைவியார்க்குந் தாங்கள் இருபத்தோராண்டுகளுக்கு முன் பிள்ளையாய்ப் பிறந்தீர்கள்!” 

“என் பெற்றோர்கள்?” என்று நீலலோசனன் வியந்து வினவித், திரும்பவும் வருத்தம் மிக்க ஐயுறவினால் மனங்கலங்கி, நடுங்கிய மெல்லியகுரலோடு, “அவர்கள் இன்னும் உயிரோடிருக் கிறார்களா? ஓ! இல்லை! இல்லை! இந்த நம்பிக்கை வைக்க யான் துணியலாகாது — அப்படியிருந்தால் இத்தனைகாலம் யான் அவர் களால் ஏற்றுக்கொள்ளப்படாமற் கைவிடப்பட்டிருந்திரேன்!’ என்று சொல்லினான். 

“என் அரிய இளைய நேசரே, தாங்கள் மிகவுந் திறமாய்க் கருதுகிறபடியே தான்.” என்று மனோகரர் உருக்கத்தொடு கூறினர்; குமுதவல்லியின் இரக்கமான பார்வையுந் தன் மைத் துனனின் பெற்றோர்கள் உயிரோடில்லை யென்று அவளும் அவனுக்குத் தெரிவிப்பனபோற் குறிகாட்டின. 

“அச்சோ, என் அரிய தாய்தந்தையரே!” என்று நீல லோசனன் முணுமுணுத்துரைக்கையிற், கண்ணீர் அவன்கன் னங்களில் வடிந்தது. ‘வணங்கத்தக்க மனோகாரே, அவர்கள் எங்ஙனம் இறந்தார்களென்பதை எனக்குச் சொல்லுங்கள், சொல்லுங்கள்.” 

“தங்கள் இரங்கத்தக்க அன்னையார் தாங்கள் பிறந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஒருகாய்ச்சலாற் கொண்டுபோகப்பட்டார்.” என்று அம்மலையவணிகர் மறுமொழி தந்தார். “தங்கள் தந்தை யாரின் முடிவைப்பற்றி யான் இப்போது பேசப்போகின்றேன். என் இளையநண்பரே, உங்கள் ஆற்றாமையை அடக்கிக்கொண்டு, இந்தமுடிவு துயரமான தொன்றென்பதைக்கேட்க முன்னதாய் இருங்கள். மன்னரின் மூத்த மகளுக்குத் திருமணமாகிச் சில ஆண்டுகள்வரையிற் பிள்ளை பிறந்திலது.” 

“இரங்கத்தக்க என் தந்தையார்!” என்று குமுதவல்லி முணுமுணுத்தாள். 

“இப்போது எனது கதையில் துயரமான பகுதியை எடுத் துச்சொல்லப் போகின்றேன்,” என்றுரைத்து மனோகரர் பின் னுங் கூறுவார்: “நீலலோசனரே, நீங்கள் முற்றுந் தெரிந்து கொள்ளும்பொருட்டு, முதலில் யான் சொல்லியபடி, இக் குடும்ப நிகழ்ச்சிகளையும் வரலாற்றுக் குறிப்புகளையும் நெடுகச் சொல்லவேண்டுவது எனக்கு அகத்தியமாய் இருக்கின்றது. நீங்கள் பிறந்து சில திங்கள்தாம் சென்றன – உங்களைச் சூழ நடந்தவற்றை உணராத சிறுமகவாய் இருந்தீர்கள் – அப்போது அரிடமன்னன் நாகநாட்டின்மேற் படையெடுத்து வந்தான். ஆண்டில் முதிர்ந்த கோச்செங்கண் மன்னருந் தம்முடைய படை களையெல்லாம் ஒருங்கு திரட்டினார்; அவரே தம் படைகளுக் குத் தலைவராய்நின்று, தம்மருமகனும் இளைய புதல்வருந் தம் மொடுகூட வரப் பகை யரசனுடன் போர்புரியச் சென்றார். ஐயோ! அஞ்சாத பேராண்மை யிருந்தாலும், அது பெருந் தொகையான படைமறவர்க்கு முன் யாது செய்யும்! கோச்செங் கண்ணர் படையானது தோல்வியடைந்து நாகநாட்டின் தலை நகரான நாகப்பூரினுள் அலங்கோலமாய்ப் பின்னிடைந்து ஓடிற்று. அந்நகரத்திலிருந்த குடிமக்களோ தம்மரசனிடத்தில் மிகுந்த அன்புடையராய் இருந்தமையால், முற்றுகை செய்யும் பகைவரை எதிர்த்து நிற்றற்கு வேண்டும் ஏற்பாடுகளை மிக்க ஊக்கத்தோடுஞ் செய்தார்கள். அரிடமன்னன் படைத்தலை வனோ கோட்டைமதிற்புறத்தே வந்து சேர்ந்து அந்நகரத்தாரை அழைத்துக் கோட்டையைத் தமக்கு ஒப்படைத்து விடும்படி சொன்னான். நகரத்தாரோ அதனைக் கடுமையாக மறுத்துக்கூறி னார்கள். முற்றுகை செய்தவர்களை மூன்று திங்கள்வரையில் அந் நகரத்தார் எதிர்த்து நின்றார்கள்; ஆனால், அது முற்றிலுஞ் சூழப் பட்டுச், சுற்றியுள்ள நாடுகளுடன் போக்கு வரவுக்கு இடமில்லாத படி வழியடைக்கப் பட்டமையால், அது பஞ்சத்தின் கொடுமைகளாற் பற்றப்படுமென்னும் அச்சம் உண்டாயிற்று. பகை வர்படையின் தலைவன் ஓர் அறிவிப்பு விட்டு, அவ்வறிவிப்பிற் கண்ட மூன்றுநாட்களுள் நாகப்பூர்க்கோட்டையை ஒப்படை யாவிட்டால், இங்ஙனம் பிடிவாதமாய் எதிர்த்து நின்றதற்குக் காரணம் அரசனும் அவன் புதல்வர் இருவருமே என்று கருதப் படுவார்களெனவும், அதனால் அதனைப் பிடித்தபிறகு அம்மூவ ரையுங் கோட்டைக் கொத்தளங்களின் மேல் இரக்கமின்றிக் கழு வேற்றுவேன் எனவுந் தெரிவித்தான். சண்டையைப்பற்றிப் பேசித் தெளியும்பொருட்டு ஓர் அவை கூட்டப்பட்டது; தமது தலைநகர் எதிரியின் கைப்படுவது திண்ணமென் றுணர்ந்த அம்முதிய அரசர் தாம் கோட்டையைப் பகையரசனுக்கு ஒப் படைத்துவிடுங் கருத்துடையராதலை அவ்வவையில் தெரிவித் தார். ஆனால், அவர் மருமகனும் புதல்வரும் அரசியற்றலைவர் களும் எதிர்த்தே நிற்கும்படி அவரை வேண்டிக் கொண்டார்கள்; ஏனென்றாற், சாளுவமன்னன்படை நாகநாட்டரசர்க்கு உதவி யாய் வருவதாக ஓர் உறுதிமொழி இருந்தது. குடிமக்களோ அரண்மனையைச் சூழ்ந்துகொண்டு, தங்கள் முதிய அரசர்க்கு அங்ஙனஞ் சொல்லப்பட்ட கருத்துரையைக் கிளர்ச்சி மிக்க சொற்களால் தாங்கிப் பேசினார்கள். அவருங் குடிமக்கள் கருத் துக்கு இணங்கவேண்டுவதாயிற்று; ஏனென்றாற், பகைப்படைத் த் தலைவன் மிரட்டுதலுக்குத் தான் உடன்பட்டால் தன்னுயிர்க்குந் தன்மக்களுயிர்க்குமே தாம் கவலைப்படுவதாக நினைக்கக்கூடும் என்று அவர் அஞ்சினார். ஆகவே, நாகப்பூர் பின்னும் நீண்ட நாள் பாதுகாக்கப்படுவதாயிற்று; கோட்டைக்குள்ளிருந்தபடை சடுதியிற்பாய்ந்து தாக்கினமையால், அரிடமன்னன் படையில் ஒருபகுதி முற்றிலும் முறியடிக்கப்பட்டது; அப்படைத்தலை வனோ அதனாற் பெருஞ் சீற்றம் அடைந்தான்; ஆதலாற், பீரங்கி வெடிவைத்து அடித்துக்கொண்டே போய்த் தன்படைஞரெல் லாருந் தாக்கல் வேண்டுமென்று கட்டளையிட்டான். கோட் டையைக் காத்த படைமக்கள் உயிருக்குத் துணிந்து சண்டை செய்தார்கள்; என்றாலும், அளவுக்கு மிஞ்சின தொகையாயுள்ள பகைவர்படைகளின் முன்னே எத்தகைய ஆண்மையும் போதுமானது அன்று. சுருங்கச்சொல்லுங்கால், நாகப்பூர் பிடிபட்டு விட்டது; அரசகுடும்பத்தாரைச் சிறைப்படுத்தும்பொருட்டு பகைவர் அரண்மனையிற் சென்று மொய்த்துக்கொண்டார்கள். அரசகுடும்பத்தார் தப்பிப்போதற்கான திட்டங்கள் சூழ்ந்து செய்யப்பட்டன! ஆயினும், உங்கள் தந்தையாரும், நீலலோசன ரே, நீங்களுமே – அப்போது அவர்கையில் நீங்கள் ஒருசிறுமக வாய் இருந்தீர்கள் – நாகப்பூர்க் கோட்டையைத் தாண்டித் தப் பிப்போகலானீர்கள். முதிய அரசரும், அவர்தம் மூத்தமகளும், அம்மகளின் கணவரும் பலமுகமாய்த்தப்பியோடுகையிற் கண்டு பிடிக்கப்பட்டுச் சிறை செய்யப்பட்டார்கள்.நல்வினையற்ற குடி மக்களோ தெருக்கள் நெடுக நின்று கொண்டு, வெற்றிச்செருக் கோடுங் குதிரைமேற்சென்ற பகைவர் படைத்தலைவனைத் தாழ் மையோடும் வணங்கி, அவ்வரச குடும்பத்தாரை விட்டு விடும்படி இரந்து கேட்டார்கள். முதலில் அப்படைத்தலைவன் மனம் இரங்கவில்லை: ஆனாற், கடைசியாகச் சிறிதளவு மனம் இரங் கினான். கோச்செங்கண்மன்னர் உடனே நாகப்பூரைவிட்டுப் போய்விடுதல் வேண்டுமென்றும், அவர் இந்த உலகவாழ்வை முற்றுந்துறந்து செல்வதாகப் புனிதமும் வணக்கவொடுக்கமும் மிகுந்த சூள் உரைக்க வேண்டுமென்றும், மறுபடியும் அவர் நாக நாட்டுமக்களிடை வருதலும், நாகநாட்டு அலுவல்களில் தலையிடு தலும் ஆகாவென்றும், – சுருங்கச்சொல்லுமிடத்து, இனி அவர் உயிர்துறந்தவர்போ லாகவேண்டுமே யல்லாமல், நேராகவே னும் பிறர்வாயிலாகவேனும் வேறெவ்வழியாலும் எப்போதும் அவர் தம் குடும்பத்தவரொடு மறுபடியுஞ் சிறிதுந் தொடர்பு வைத்தல் கூடாதென்றுங் கூறி, அப்பொருத்தனைக்கு இசைவ தாயிருந்தால் அவரை உயிரொடு விட்டுவிடுவதாகப் புகன்றான். ஆண்மைமிக்க அம்முதிய அரசர் மானக்கேடான அப்பொருத் தனைகளை எரிச்சலுடன் இகழ்ந்து, அதனால் தாம் கழுவேறவுந் துணிந்திருப்பார்; ஆனால், தம் மூத்தமகள் மருமகன் உயிருங் கூட அதனால் இடைஞ்சலுக்கு உள்ளாவதை எண்ணினார். ஆக வே, அப்பொருத்தனைக்கு இசைந்து வெளிப் புறப்பட்டார். அந்தப் பகைப்படைத்தலைவன் அவர்தம் இளையமகனை – நீலலோசனரே உங்கள் தந்தையைப், பிடித்துத்தருபவர்களுக்குப் பரிசளிப்பதாகத்தெரிவித்தான்; ஆனால், நாட்கழிந்ததேயல்லா மல், உங்கள் தந்தையாரைப்பற்றி ஏதுஞ் செய்தி வரவில்லை. நாகப்பூரைப் பிடித்துக்கொண்டு, நாகநாட்டார்க்குள்ள பற்று தலைத் தொலைத்துவிடலாமென்று அப்பகைவர் எண்ணினார் கள்; ஆனால், அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. எங்கேபார்த் தாலுங் கலகந் தலைக்காட்டுவதாயிற்று. கடைசியாக அந்த நாட்டி லுள்ளவர்களைத் தணிவுசெய்யும் பொருட்டு அப்பகைவர் தம் அரசாட்சியில் ஓர் ஒழுங்கு செய்வாராயினர். நாகநாட்டில் உள்ள மேலோரை யெல்லாம் அழைத்து ஓர்அவை கூட்டப்பட்டது; இனிமேல் அந்தநாடு தனக்குரிய ஓர் அரசனாலேயே ஆளப்படு தல் வேண்டுமென்றும், முதன்மையான இரண்டு மூன்று நகரங் கள் மட்டும் அவர்கள் உறுதிமொழிப்படி அரிடமன்னற்குரிய வர்கள் செய்யும் வாணிகத்தைக் காக்கும்பொருட்டு அம்மன்ன வன் படைமறவராற் காவல்செய்யப்படுதல் வேண்டுமென்றும் அதில் தீர்மானஞ்செய்தார்கள். இதற்கேற்ப ஓர் உடம்படிக்கை யுஞ் செய்யப்பட்டது; கோச்செங்கண் மன்னரின் மருமகனார் எழில் மிக்க குமுதவல்லி தங்கள் தந்தையார் – தம்மனைவியா ரோடும் இதுவரையில் நாகப்பூரிலேயே ஒருவாறு மேன்மை யாகவே சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்தவர் அரசாட்சிக்கு உரியவராக்கப்பட்டார். அந்நிகழ்ச்சிக்கு இரண்டாண்டுகள் பிற் பட்டு – அதாவது பதினேழு ஆண்டுகளுக்குமுன்னே, குமுத வல்லி, நீங்கள் பிறந்தீர்கள்; இன்னும், நீலலோசனர் தெரிந்து கொள்ளும் பொருட்டுத், தங்கள் பெற்றோர் இருவரும் ஏறக் குறைய ஒரேவகையான நோயால் இரண்டு ஆண்டுகளின் முன் இறந்துபோயினரென்றும், அப்போது நாகநாட்டுக்குடிமக்களும் அரிடமன்னன் அரசியற்றலைவருந் தங்களையே அந்நாகநாட்டுக் குத் தனி அரசியாக ஏற்று அமைக்கலானார்களென்றுங் கூட்டிச் சொல்லுகின்றேன்.” 

“இனி, என் தந்தையாரின் முடிவு எப்படியாயிற்று?” என்று நீலலோசனன் தன்னைத் தோற்றுவித்த தந்தையின் முடிவை யறிய, நிறைந்த பிள்ளைமைப் பரபரப்புடன் வினாயினான். 

”அவர் நாகப்பூரினின்றும் மறைந்து சென்ற நீண்டகா லத்திற்குப்பின், அவரும் அவர்தம் மகவும் மேற்கணவாய் மலை களினிடையே செத்துக்கிடக்கக் காணப்பட்டார்களென்று எப் படியோ ஒருபேச்சு ஊரெங்கும் பரவலாயிற்று ; ஆகவே, அவர் கள் அப்படித்தான் அழிந்துபோனார்களென்ற நம்பிக்கை எங் கும் உண்டாயிற்று; ஆனால், உண்மை அங்ஙனமன்று என்ப தை, இப்போது நீங்கள் விரைவிற் றெரிந்துகொள்வீர்கள். ஆயி னும், முதன்முதல் யான் முதியோரான கோச்செங்கண் மன்ன ரைப்பற்றிப் பேசல்வேண்டும். அப்பகைப்படைத் தலைவனிடந் தாம் செய்துகொண்ட பொருத்தனையின் முறைப்படி அவர் நாகப் பூரைவிட்டுப் புறப்பட்டதும், மேற்கணவாய்மலைத்தொடரின் கண் உள்ள காடுகளில் உள்ளுருவிச்சென்றார்; அப்புனிதமாத வன் தமக்குத் தெரிவித்திருந்த அம்மறைபொருளை இப்போ தவர் தமக்குப் பயன்படுத்திக்கொள்வாரானார்; அம்மறைபொரு ளைத் தாம் தெரியலானது பற்றி அவர் திருவருளுக்கு வாழ்த் துரைமொழிந்தார்.ஏனென்றால், இப்பெரிய மண்ணுலகின் குழப்பங்கள் நேராததும், போரிடும் இரைச்சல் நுழையாததுஞ், சூறாவளியானது வானுலகத்தில் தோன்றாததுபோலத் தன்னய விருப்பங்கள் முட்டாததும் ஆன ஓர் இடத்திற் பாதுகாப்புடன் இனிதாக ஒதுங்கியிருத்தற்கு ஏற்ற வழியை அவருக்கு அது தந்தது.’ என்று மனோகரர் மறுமொழி புகன்றார். 

இங்கே மனோகரர் சிறிதுநேரம் சும்மா இருந்தார்: குமுத வல்லி தன் உள்ளத்திற் பலவேறு வகைப்பட்டுத் தோன்றிய புதுமையான உணர்வுகளோடு எண்ணமிட்டுக் கொண்டிருந் தாள்: நீலலோசனனது முகமோ தன் தந்தையின் முடிவைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று பதைத்து ஆவலுற்ற குறிப் பைப் புலப்படக்காட்டியது. 

பதினைந்தாம் அதிகாரம்

செய்திவிளக்கத்தின் முடிவு

ஆம், நாகநாட்டரசியின் எண்ணங்களும் உணர்வுகளும் புது மையாகவே இருந்தன: ஏனெனில், மனோகரர் கடைசியாகச் சொல்லிய சொற்களானவை, தான் முன்னே கேள்வியுற்ற சிலவற்றொடு சேர்க்கையுடையவாதலை அவளது உள்ளத்தில் தடுக்கக் கூடாதபடி எழுப்பிவிட்டன. தம் சொற்களைச் செவி மடுப்பவர்களுக்குப் பொழுதுபோக்காக இருத்தற்பொருட்டும், அவர்களுள்ளத்தைக் கவருதற் பொருட்டுங் கதை சொல்லுவார் வழக்கமாய்ப் பிணைத்துச் சொல்லுங் கதைகளைப்போல், நுணுக் கமாய்ச் சூழ்ச்சிசெய்த புதியகட்டுக்கதைகளைப்போல் அல்லா மல், திகழ்கலை தனக்கும் மீனாம்பாளுக்கும் எடுத்துரைத்த கதை திட்டமாய் நடந்ததனை அடிப்படையாக்கொண்டு உண்மையாய் இருக்கலாமோ? என்று எண்ணினாள். திரும்பவும் மனோகார் பேசப்புகுந்தமையாற், குமுதவல்லி இங்ஙனம் நெடுநேரம் எண்ண மிட்டுக்கொ கொண்டிருக்கக் கூட வில்லை. 

“ஆம், அம்மாமறைப்பொருளை அவர் தெரியப்பெற்றதற் காகத் திருவருளை வாழ்த்துதல்வேண்டும்; அம்மாட்சிமை மிக்க முதிய அரசர் மேற்கணவாய்மலைகளின் இடையே அமைதியுங் காவலும் வாய்ந்த ஒருபுகலிடம் அடையப்பெற்றார். அங்கே அவரை நான் அவ்வப்போது போய்ப் பார்த்து வந்தேன். இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து அவர் தமது நாகநாட்டரசாட்சி தம் மவர்க்கே திருப்பிக் கொடுக்கப்பட்ட தென்பதனைத் தெரிந்த பின், மனம் ஆறுதல் எய்தித், தாம் உலகைத் துறந்துவந்ததில் முற்றுங் கருத்தொருப்பட்டு, நாகநாட்டலுவல்களில் இனித் தாம் தலையிடுவதில்லை யென்று அப்பகைப்படைத் தலைவனுக் குத் தாங்கூறிய உறுதிமொழியை முன்னிலும் மிகுதியாக மதிப்பதற்குத் தீர்மானித்தார். என்னைப்போல் நம்பிக்கையுள்ள ஒருநண்பன் வழியாகச் செய்திவிடுத்தாலுங்கூட ஒருகால் அரிட மன்னன் ஆட்களுக்கு அயிர்ப்பு உண்டாகுமானால் அரசுரிமை திரும்பப்பெற்ற தம்மவர்க்கு இடைஞ்சல் விளையுமாதலால், தம் மருமகன் – குமுதவல்லி தங்கள் தந்தையார் – தமது முடிவைப் பற்றி முழுதுந் தெரியாதிருக்கவேண்டு மென்று அவர் விரும் பினார். தம் மருமகன் நாகநாட்டரசுக்கு உயர்த்தப்பட்டது பற்றி அம் முதியமன்னன் மகிழ்ச்சி அடைந்தனராயினுந், தம் ஒரே மகனையும் அவர் கையேந்திச்சென்ற சிறுமகவையும் பற்றி அள விறந்த கவலை யடையலானார். யான் அம்மேற்கணவாய் மலை நாடுகள் எங்கணும் இயன்றமட்டும் உசாவிப்பார்த்தேன், சிறி தும் பயன் படவில்லை. பின்னர்ச் சிறிதுகாலங்கழித்துக், காணா மற்போன இளவரசரும் அவர்தம் மகவும் மலைகளினிடையே மாண்டுபோனார்க ளென்னுஞ் செய்தி வந்து எட்டுவதாயிற்று; அப்போது அதனை நம்பிப், போற்றத்தக்க என் நண்பரான அம்முதிய கோச்செங்கண்மன்னர்க்கு அதனை அறிவித்தேன். ஆண்டுகள் பல சென்றன – அம்முதிய அரசர் தாம் கண்டறிந்த அமைதியான அம்மறைவிடத்தை விட்டுவரச் சிறிதும் விருப் பம் இன்மையினால் அதன்கண்ணே தாம் இருந்துவரலானார். இற்றைக்குப் பதினெண் டிங்களுக்குமுன் கோச்செங்கண் மன் னர் கடுமையான ஒரு நோயாற் பற்றப்பட்டார்; அதனால் அவ ருக்கு மருந்துகொடுத்து உதவவேண்டுவது அகத்திய மென்று கண்டேன். அப்பொழுது நீலகிரிநகரத்திற் பல வியப்பான மருந்துகள் கொடுத்துவந்த ஒருதுருக்கப்பெண்பிள்ளை இருந் தனள்: அவளை அம்முதியமன்னர் இருக்குந் தனியிடத்திற்கு என்னோடு அழைத்துச்செல்லத் தீர்மானித்தேன். ஆண்பாலா ருள் ஒருவரைவிடப் பெண்பாலார் ஒருவரை இவ்வுதவிக்கு அமர்த்திக்கொள்வது எளிதெனக் கண்டேன்; ஏனென்றால், யான் கட்டாயமாகப் பின்பற்றவேண்டிய சில முன்னறிக்கை களுக்கு இணங்கும்படி ஒரு பெண்பாலைத் தூண்டுவது மிக எளிது. யான்சொல்லுகிற இந்தப்பெண்பாலோடு யான் வழி நடந்து சென்றபோது, தான் திரிந்து கண்ட பலநகரங்களைக் குறித்தும் அவள் அடுத்தடுத்துப் பேசிக்கொண்டுவந்தாள்; அவ் விடங்களைப்பற்றிப் பலவேறு சிறு கதைகளுஞ் சொல்லிக் கொண்டுவந்தாள். இங்ஙனம் பேசிக்கொண்டுவருகையில் அப் போது மேற்கரையை ஆண்ட சாக்கியதர்மன் என்னும் அரசனைக் குறிப்பிட்டுப் பேசலானாள்; அவ்வரசரின் அன்பும் உருக்கமும் மிக்க தகைமைக்கு ஓர் ஒப்பனையாக, அவர் தமது பாதுகாப்பிற் குழவிப்பருவத்தே விடப்பட்ட ஓரிளைஞனைத் தமக்கு மகனாக உரிமைப்படுத்திக் கொண்டதனை எடுத்து மொழிந்தாள். அவ்வறிவோள் மேலுஞ் சொல்லிய சில செய்தி களால் யான் ஓர் ஐயுறவுகொள்ளுதற்கு இடம் பெற்றேன்; ஆனாலும், அதனைக் கோச்செங்கண் மன்னர்க்குக் கூறிற்றி லேன்; ஏனெனில், ஒருகால் அதனை நம்பி அவர் பின்னே ஏமாற்றம் அடைந்தால் என்செய்வதென்று அஞ்சினேன். அப் பெண்மகள் நோய் தீர்த்துச் செய்த உதவிக்கு நன்றி செலுத் தல் வேண்டும். அரசர் நோயினின்றுந் தேறி எழுந்தார். அதன் பின் எனக்குச் சிறிது ஒழிவுநேரங் கிடைத்தவுடன், அம்மேற் கரைமன்னர்க்கு ஒருதிருமுகம் எழுதி அதனை ஒருவேவுகாரன் கையிற் கொடுத்துப் போக்கித் தாம் உரிமைப்படுத்திக்கொண்ட மகனைப்பற்றி அவர் அறிந்தவையெல்லாம் எனக்குத் தெரி விக்கும்படி மன்றாடிக் கேட்டேன் – அதனோடு, எம்மிருவர்க் குள்ளும் நடக்கும் இச்செய்தி பிறர் அறியாவாறு தம்முள்ளே மறைத்து வைக்கவேண்டுமென்றுங் கெஞ்சிக் கேட்டுக்கொண் டேன். யான் வேண்டிக்கேட்ட அவ்வரலாறுகளை எனக்குத் தெரியப்படுத்துவதில் அவ்வரசர் சிறி துங் காலந் தாழ்க்கவில்லை; யான் முன்னமே கொண்டிருந்த ஐயுறவை அவை முற்றும் உறுதிப்படுத்தின. ஒருநாள் சாக்கியதர்மர் வேட்டம் ஆடவெளிச் சென்றார் – இது நாகப்பூர்க்கோட்டை பிடிப்பட்ட சில கிழமை களுக்குப் பின் நிகழ்ந்தது – அப்போது அவர், வறுமையால் வாடிப்போனாலும் அழகிய தோற்றம் வாய்ந்த ஓர் இளைஞன் தன்கையில் ஓர் இளங்குழவியை வைத்துக்கொண்டு ஓர் யாற்றங் கரையில் அமர்ந்திருக்கக் கண்டார். நீங்கள்தாம் அக்குழந்தை, நீலலோசனரே! அவ்வறிய ஆடவனே உங்கள் தந்தை!” என்று மனோகார் தொடர்பாகச் சொல்லிவந்தார். 

“இவையெல்லாம் எனக்குப் புதியனவேயாகும்!” என்று நீலலோசனன் வியந்துரைக்கையில், அவன் கன்னங்களிற் கண்ணீர் பெருகிவடிந்தது.”ஐயோ!என் எளியதந்தையே!’ 

மிகுந்த மனவருக்கத்தோடும் இரக்கத்தோடுங் கூடிய குர லுடனும் பார்வையுடனும் மனோகரர் பின்னுந் தொடர்ந்துரைப் பாரானார். ‘அந்த மேற்கரைமன்னர் தங்கள் தந்தையாரின் துன்பமுடிவைத் தங்கட்கு இதுகாறுந் தெரியாமல் மறைத்து வைத்தது நிரம்பவும் அன்பான எண்ணத்தினாலேதான். ஆயி னும், இப்போது நீங்கள் ஒவ்வொன்றுந் தெரிந்துகொள்ள வேண்டுவது இன்றியமையாததாயிற்று. நீங்கள் நீலகிரி நகருக்கு வந்ததும், இவ்வரலாறுகளை யெல்லாம் என்வாயினின்றுந் தெரி யப்பெறுவீர்களென்பது சாக்கியதர்மருக்குத் தெரியும். ஆகவே, அக்கதையை முற்றுஞ் சொல்லிவிடுகின்றேன். யான் கூறிய படியே, சாக்கியதருமர் அந்த அழகிய தோற்றம்வாய்ந்த இளை ஞன் தன் இளங்குழவியின் முகத்தைத் துயரத்தோடும் பார்த் துக்கொண்டு ஓர்யாற்றங்கரைமேல் அமர்ந்திருக்கக்கண்டார்: நிறைந்த இரக்கத்தோடும் வினவினார். அப்போது, ஐயோ!- நீலலோசனரே, ஒரு துயரமான அறிக்கையைக் கேட்டற்கு முனைப்பாய் இருங்கள் — அவ்விரங்கத்தக்க உயிர் அறிவிழந் திருத்தலை அவ்வரசர் கண்டுகொண்டார்.” 

இப்போது நீலலோசனன் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியோடிற்று; குமுதவல்லியும் அங்ஙனமே அழுதாள். வணங்கத்தக்க மனோகரரும் பெரிதும் மனம் உருகினார். திரும்ப வும் அவர் கதையைத் துவங்குவதற்கு முன் சிலநேரஞ் சென்றன.

முடிவாக அவர் தொடர்ந்துரைப்பார், இரங்கத்தக்க அவ்விளைஞனையுங் குழந்தையையும் மேற்கரையிலுள்ள தமது அரண்மனைக்குக் கொண்டுபோகும்படி அவ்வரசர் கட்டளையிட்டார்; புதியராய்வந்து அவ்விருவரையும் அங்கே எல்லா அன் போடும் நடத்தினார்கள். என்றாலும், நீலலோசனரே, தங்கள் தந்தையின் வாயிலிருந்து அவர் ஏதும் வெளிப்படுத்தக்கூட வில்லை: அவ்விளைஞர் தமதறிவை இழந்து வரவர உயிர் துறக் கும் நிலையை அடையலானார். பின்னுஞ் சிலநாட்கழித்துத் தாங் கள் பெற்றோர் அற்ற பிள்ளையாயினீர்கள்! உங்களிருவரையும் இன்னாரென்று அறிவிக்கத்தக்க அடையாளம் ஏதும் உங்கள் தந்தையின் உடுப்புகளிற் காணப்படவில்லை ; நாகப்பூரில் நடந்தவை எல்லாம் நிலைவர மின்றிச் சிறுபேச்சாய் மேற்கரைநகரில் தெரிந்தமையாற் சாக்கியதர்மாது அரண்மனையில் இறந்தவர் நாகநாட்டின் இளவரசர்தாமோ என்னும் ஐயுறவுக்கும் இடம் உண்டாகாதிருந்தது. அங்ஙனமிருந்தாலும், அப்போது நீங் களும் உங்கள் தந்தையும் அணிந்திருந்த ஆடைகளை அவர் காப் பாற்றிவைத்திருந்தார்; அவ்வாடைகளோ இறந்துபோனவர் தாழ்ந்தநிலையில் உள்ளவரே என்று குறிப்பிட்டன. அவ்வரசர் தங்களை வளர்த்துவந்தார் – எவ்வளவு நன்றாகவும் எவ்வளவு மென்மையாகவும் என்பதனைத் தாங்களே மிகவும் நன்றாய் அறிவீர்கள்!” 

“அவர் எனக்கு ஒருதந்தைபோ லிருந்து வருகிறார்!” என்று நீலலோசனன் நன்றியறிவோடும் வியந்துரைத்தான்; “என்பெற்றோர்கள் எனது குழவிப்பருவத்திலேயே இறந்து போயினார்களென்று அவர் எப்போதும் யானறியச் சொல்லி வந்தார்; அதைப்பற்றி நான் கேட்டபோதெல்லாம் அவர் ஏன் அதனை நழுவவிட்டு வந்தார் என்பதை இப்போதுநான் மிகவுஞ் செவ்வையாக அறியப்பெறுகின்றேன். ஆம் மிக்க அன்பினா லும் ஆழ்ந்து ஆராய்ந்த எண்ணங்களாலுமே அவர் அங்ஙனஞ் செய்யலானார்!” 

”அவ்வரலாறுகளை யெல்லாம், பொதித்துவைத்த அவ் வாடைகளோடும் அம்மேற்கரையரசர் எனக்கு விடுத்துவைத் தார் இவைகளெல்லாவற்றையும் யான் கோச்செங்கண் மன் னர்க்குத் தெரியப்படுத்தினேன். போற்றத்தக்க என்முதிய நண்பர் அவ்வாடைகளைப் பார்த்ததும் உடனே அவற்றைத் தெரிந்துகொண்டார்: பல ஆண்டுகளுக்கு முன்னே அரிடமன் னன் படைமறவர் எதிர்த்துச் சண்டைசெய்தபோது நாகப்பூரி லிருந்து அவ்விளவரசன் தங்களைக் கையிலெடுத்துக்கொண்டு தப்பி ஓடுங்காற் பூண்டிருந்த இழிந்த ஆடைகளே அவை. இங் ஙனமாக, நீலலோசனரே தங்கள் பிறப்பைப்பற்றி இனி ஏதும் ஐயம் இல்லையாய் ஒழிந்தது; நீங்கள் பௌத்தராகவும் பௌத்த சமயத்திற்கு உரியராகவும் வளர்க்கப்பட்டுவந்தீர்கள். என்றா லும், உண்மையில் தாங்கள் நாகநாட்டின் இளஅரசரேதாம்; தாங்கள் பிறந்த காலத்தில் தங்கள் நெற்றியின்மேல் திருநீறு அணியப்பட்டிருந்ததும் உண்மையேதான். போற்றத்தக்க உங் கள் பாட்டனார் தங்களைத் தம் கைகளாற் றழுவிக்கொள்ள ஆவ லித்தார்; ஆனாலுந், தாம் உயிரோடிருக்கும்போது தங்கள் பிறப் பைப்பற்றிய மறைபொருள் தங்களுக்கு வெளிப்படுத்தப்படுமா யின், நேராமல் தடுப்பதற்குத் தாம் எண்ணிய நிகழ்ச்சிகள் விளையவுங் கூடுமென அவர் அஞ்சினார். அரிடமன்னனைச்சேர்ந் தவர்களோ நீண்டநாட்கு முன்னே அவர் இறந்து போனாரென் றே நம்பினார்கள்; அவர் உயிரோடிருக்கிறார் என்பது அவர்களுக் குத் தெரிந்தால், அவருடைய செல்வாக்கு நாகப்பூர் அரண்மனை யில் இன்னும் ஏதேனுந் தொல்லையை உண்டுபண்ணக் கூடு மென்று அவர்கள் எண்ணலாம்; அதனால், தன்பேர்த்தியின் அழகிய குமுதவல்லி தங்களின் – ஆளுகைக்கு இடைஞ்சல் உண்டாகலாம். அதுவல்லாமலும், நாகநாட்டிற்குரிய இளவரசர் ஒருவர் இளைஞராய் உயிரோடிருக்கிறார் என்பதுவெளிப்படுமா யின், கோச்செங்கண் மன்னர் அந்நாட்டின் அலுவல்களில் தலை யிடுவதாக அரிடமன்னனைச் சேர்ந்தவராற் கருதப்படும்; கோச் செங்கண் அரசரோ தாம் உலகை முற்றுந் துறந்துவிடுவதாக வும், நாகநாட்டின் அலுவல்களைப்பற்றித் தாம் இனிமேல் நினைப்பதில்லை யெனவுந், தம் குடும்பத்தவர் எவர்க்கும் எது வும் அறிவிப்பதில்லையெனவும் உண்மையாகச் சொல்லுறுதி கொடுத்திருக்கிறார். இவ்வாறு எல்லாவற்றையுஞ் சூழ்ந்து பார்க் குங்கால், ஒவ்வொருகாரணத்தையுஞ் செவ்வையாய் அளந்து காணுங்காற், கோச்செங்கண் மன்னர் இறந்தபிறகுதான், நீல லோசனரே தங்கள் பிறப்பைப்பற்றிய மறைபொருளைத் தங் கட்கு வெளிப்படுத்தல் வேண்டுமென்பது தீர்மானிக்கப்பட் டது. அரசர் பெருந்தகை எனக்குச் சில கட்டளை தந்தார்; அவர் கள் சொற்படியே அவற்றை வழுவாமல் நடத்துவதாக யான் சொல்லுறுதி தந்தேன். ஒருத்திங்களுக்கு முன், போற்றத்தக்க என நண்பர் விளிந்துபோனார்.இத்தனை ஆண்டுகளாக அவர் உறைந்துவந்து அந்த அமைதியான துச்சிலிலேயே யான் என் கைகளால் அவரை அடக்கஞ் செய்தேன். இக்கதையைச் சொல்லி வரும்போது பலகாலும் யான் குறிப்பிட்ட அம் மா மறைப் பொருளுக்கு யான் ஒருவனுமே இந்நேரத்தில் உயிரோடிருக் கும் வைப்பிடமாய் இருக்கின்றேன்: ஏனென்றாற், கோச்செங் கண்மன்னர் கடுநோயாற் பற்றப்பட்டிருந்தபோது அவர்க்கு நோய் தீர்த்தற்பொருட்டுத் திறமைமிக்க அவ்வறிவோளை அவ் இன்ப உறையுளுக்கு யான் அழைத்துச் செல்லவேண்டுவது கட்டாயமாயிருந்தும், அந்த இடம் உள்ள நிலப்பகுதியை அவள் முற்றும் அறியாதவளாயிருக்கின்றாள்; அவ்விடத்திற்குச் செல் லும் வழியும் அவள் அறியாள்; அதனால் அம்மறைபொருளை அறியாதவளாகவே அவளைக் கருதலாம். சிலதிங்களுக்கு முன் னே இம்மறைபொருள் மூவர்க்கு உரிமையாய் இருந்தது.இந் நீலகிரிநகரத்திருந்த ஒரு தூயகுரு,அதனைத்தெரிந்தவர்,காலம் வந்து இறந்துபோனார்; அவரையடுத்து இறந்துபோனவர் தங் கள்பாட்டனார் கோச்செங்கண் மன்னரேதாம்; இங்ஙனமாக அம்மறைபொருள் இப்போது என் ஒருவனிடத்தேதான் இருக் கின்றது. இம்மறைபொருளை வைத்திருந்தவரான அம்மூவரில் இருவர் இறந்துபட்டபின்னும் அவரிடத்திற்கு வேறிருவர் இன்னுந் தெரிந்தெடுக்கப்படாமை என்னென்று, என் அன் புள்ள இளையநேசர்களே, நீங்கள் எண்ணிப்பார்க்கக் கூடுமே? குமுதவல்லி, இம்மறைபொருளைத் தெரிவிக்கப்பட வேண்டிய வர்களில் தாங்கள் ஒருவராய் இருக்கவேண்டுமென்பது தங்கள் பாட்டனாரின் விருப்பம். ஏனென்றால், இவ்வுலகத்திற்றோன் றும் மாறுதல்களினிடையே தங்களுக்கு ஏதேனும் ஒரு பொல் லாங்கு நேருமாயின், வணங்கத்தக்க உங்கள்பாட்டனார் அத்தனை நீண்டகாலமாய்த் தங்கிவந்த அதே இன்பஉறையுளில் தாங்கள் போய் ஒதுங்கியிருக்கலா மன்றோ? நீலலோசன, தங்களைப் பற்றியோ வென்றாற், சைவசமயத்தைத் தழுவுதலாகிய அவ் வழி ஒன்றுமே தாங்கள் அப்பெரும்பேற்றைப் பெறுதற்குத் தக்கவராகச் செய்யுமாதலால், தாங்கள் அம்மறைபொருளைத் தெரியும் பொருட்டு அதற்கு ஏற்றபடியாக நடந்து கொள்வீர்க ளென்று அவர் நம்பிக்கை வைத்திருந்தார். தங்களுக்கு அணுக் கமாயும் நலந் தருவனவாயு முள்ள செய்திகளாயிருப்பதோடு, எழுத்தில் எழுதித் தெரிவிக்கக்கூடா அத்துணைச் சிறந்த மறை பொருளாயும் இருந்தமையாற்றான், இவைகளையெல்லாந் தாங் கள் என்வாயினின்றே கேட்டுத் தெரியும்படி தாங்கள் இருவரு மே இந்நீலகிரிநகருக்கு வருகவென வேண்டி என்னுடைய ஆள் சந்திரனிடத்தில் திருமுகங்கள் கொடுத்தனுப்பினேன்.” என்று மனோகரர் தொடர்ந்துரைத்தார். 

“மாட்சிமை மிக்க மனோகரரே, அம்மோதிரங்களையுங் கூட அனுப்பியதேன்?” என்று குமுதவல்லி வினவினாள். 

”ஒன்றை யொன்றொத்த மோதிரங்களைத் தங்களிருவர்க் குந் தனித்தனியே யான் அனுப்பியதன் நோக்கம் இரண்டுண்டு. முதலாவது, என் ஏவலாள் சந்திரன் இவ்வழிப்பயணத்தினின்று திரும்பி வீட்டுக்குவரும்போது, தற்செயலாய் அவனுக்கு ஏதே னும் இடர்நேர்ந்தால் இம்மோதிரங்களைக் கொண்டுவந்து காண் பிப்பவர்களே என்னுடைய கடிதங்களைப் பெற்றவர்களா யிருக்க வேண்டுமென்னும் உண்மை எனதுள்ளத்திற்கு இசைவாகக் காணப்படும்; அதனாற், கரவடமான மக்கள் செய்யுஞ் சூழ்ச்சி களில் அகப்பட்டு ஏமாறுதற்கும் இடம் உண்டாகாது. அம்மோ திரங்களை உங்களுக்கு யான் அனுப்பியதற்குள்ள எனது இரண் டாவது காரணத்தை யான் சிறிது விரித்துச் சொல்லவேண்டுவ தாயிருக்கின்றது. யான் முன்னமே கூறியபடி, கோச்செங்கண் மன்னர் இறந்தபின், அவ்வுயர்ந்த மறைபொருளை வைத்திருப் பவன் யான் ஒருவனே யாயினேன்: ஆனாலும், அதனை முழு தும் நான் ஒருவனே வைத்திருப்பது எனக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை; ஏனெனில், எனக்கோ வாழ்நாள் முதிர்ந்து விட்டது; என்னையும் எந்தநேரத்திலேனுங் காலன் வந்து கைப் பற்றிக்கொண்டு போகக்கூடும். ஆனதனாற்றான், சிறிதுங் காலந் தாழாமல், அம்மறைபொருளைப்பற்றிய எல்லாக்குறிப்புகளையும் முற்றும் விரித்து எட்டில் வரைந்துவைத்தேன். மற்றொரு முறியில், யான் உயிரோடிருந்து என்வாயாற் சொல்லவேண்டு மென்று என்ஐயன் கொண்ட திருவுளப்பாங்கின்படியே அத னைப்பற்றிய நீண்டவரலாற்றினைப் பொறித்துவைத்தேன். இம் முறிகளைச் செவ்வையாய் உறையிலிட்டு முத்திரைவைத்து, யான் இறந்தபிறகு என் குறிப்புகளைக் கொண்டுநடத்துவோரி டத்து, ஒரு குறிப்பான தன்மைவாய்ந்து ஒன்றையொன்றொத்த இரண்டுமோதிரங்களைக் கொண்டுவந்துகாட்டும் இருவர்மட்டு மே இக்கட்டைத் திறந்து பார்க்கவேண்டுமென்று அதன்மேற் கற்பித்தெழுதித் தனியேயுள்ள என் ஏடுகளினிடையே அதனை வைத்துவிட்டேன். நீங்கள் வருவதற்குமுன்னமே என்னை இங்கிருந்தும் அழைத்துக்கொள்வது இறைவனுக்குத் திருவுள மானால், நான் சொல்லிக்கொண்டு வந்த உண்மைகளையே யன் றிச் சாலப்பெரிய அம்மறைபொருளையும் உங்களுக்குத் தெரிய வைக்கும்படி செய்யவேண்டிய ஒவ்வோர் ஏற்பாட்டினையும் அங் ஙனம் முன்னதாகவே மிகவுங்கருத்தாய்ச் செய்துவைத்தேன். என்றாலும், நீலலோசனரே, அப்போதும் அம்மறைபொருள் உங்களுக்குத் தெரிவிக்கப்படமாட்டாது; நான் முன்னமே குறிப்பித்திருக்கிற வகைப்படி நீங்கள் அத் தூய மறைபொரு ளைப் பெறுதற்கேற்ற தகுதியைத் தங்களிடம் வருவித்துக் கொண்டாலன்றி, அத்தனித்த முறிச்சீட்டுக் குமுதவல்லி கண் களுக்கு மட்டுமே தெரியும்படி வரைசெய்துவைக்கப்பட்டது.” என்று மனோகரர் விடைபகர்ந்தார். 

பின்னர்ச் சிறிதுநேரம் மனோகார் பேசாதிருந்தார். நீல லோசனனோ சிலநேரம் ஆழ நினைந்து பார்த்துப் பணிவான குரலிற் பேசுவானானான்: “போற்றத்தக்க என்நண்பரே, தமது குழவிப்பருவந்தொட்டே பயிற்றப்பட்டு வந்தமையால் தமக்கு நன்றாய்த் தெரிந்ததான ஒருசமயத்தைக் கைவிட்டுத் தெரியாத மற்றொன்றைக் கைப்பற்றுவது எவர்க்கும் எளிதான செய்கை அன்று. ஆனதனால், எனக்குத் தெரியாததான இச்சமயக் கொள்கைகளை எனக்கு எடுத்து அறிவுறுத்துக. யான் குழந் தையா யிருந்தபோது எனது நெற்றியின்மேல் இடப்பட்ட அடையாளத்திற்கு உரியதான அக்கொள்கை என் மனச்சான் றுக்குப் பொருத்தமாகக் காணப்படுமானால், என் பாட்டனார் விருப்பப்படியுந், தகவு மிக்க மனோகரரே தங்கள் விருப்பப்படி யும் யான் அதனைத் தழுவிக்கொள்வேனென்று உறுதியாய் நம்புங்கள்.”

“அரசி, நாங்கள் இருவேமுஞ் சிறிதுநேரம் ஒருங்கு தனித் திருக்கும்படி விடை தாருங்கள். தங்கள் மைத்துனர் சொல்வது செவ்விதாய் இருக்கின்றது; அவர் முற்றிலுந் திரும்பிவிடுவா ரென்பதில் யான் சிறிதும் ஐயமுறவில்லை. மாட்சிமைதங்கிய தாங்கள் இங்கே திரும்பிவரும்படி சிறிதுநேரத்திற் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.” என்று அம் மலையவணிகர் கூறினார். 

குமுதவல்லி அங்ஙனமே அவ்வறையை விட்டுச்சென்று, தானிருக்கும் அறைவரிசைக்குள் தனித்திருக்கலானாள். தான் கேட்டவைகளைப்பற்றி யெல்லாம் ஏதுந் தடையின்றித் தனியே யிருந்து நினைத்துப்பார்ப்பதற்கு அவள் விரும்பினாள்; ஆகவே, கீழுள்ள தோட்டத்திற்கு இறங்கிப்போய் அங்கே அயர்வு தீர்ந் திருக்கும்படி அவள் தன் தோழிமார்க்குக் கற்பித்தாள். அங்ஙன மே அவர்கள் அவளைவிட்டுப் போனபிறகு அவள் சாய்மணைக் கட்டில் ஒன்றன்மேல் அமர்ந்து எண்ணமிடுவாளானாள். முடி வாகப்பார்க்குங்கால், அவ்வறிவோள் சொல்லிய கதை உண் மைக்குத் தெளிவாய்த் திட்டமாய் ஒத்திருந்தது; ஏனென்றால், இப்போதுதான் மனோகரர் வாயினின்று பிறந்த வரலாற்றின் ஒருபகுதியோடு அது மிகவும் வியக்கத்தக்கவாறாய்ப் பொருந்தி யிருந்தது. ஆம், திகழ்கலை என்பவள் கோச்செங்கண்மன்னர் முகத்தைப் பார்த்தவளேயாவள்! நாகநாட்டரசியலினின்று நீங் கிய அம்மன்னர் அத்தனை ஆண்டுகளாகத் தாம் புகலிடமாய்க் கொண்டிருந்த அவ் வின்ப நிலத்தினுள்ளே அவள் சென்ற துண்டு! தான் திகழ்கலையைத் தற்செயலாய் எதிர்ப்பட்டதும், இன்னும் மனோகராவாயினின்று முழுதுந் தனக்குத் தெரி விக்கப்படவேண்டுவதாய் உள்ள புதிய மறையின் உட்பொரு ளைத் தான் அங்ஙனமே முன்னறியலானதும் புதுமையல்ல வோவென்று குமுதவல்லி தனக்குள் நினைப்பாளானாள். பின்பு குமுதவல்லியின் நினைவுகள் வேறொருமுகமாய்த் திரும்பவே, அவ்விளைஞனான் நீலலோசனன், கள்வர்தலைவனான நல்லா னின் வேறான ஒருவனாவன் என்பதை நினைத்துச் சொல்லுக் கடங்காக் களிப்படைந்தாள்; அவனைப்பற்றி அத்தனை பொல் லாங்கான முடிபுக்குத் தான் சடுதியில் வரலானதை நினைந்து அவள் துயரமுற்றாள். ஆனாலும், நேற்று மாலையில் மீனாம்பாள் படுக்கையின் அண்டையில் அவனைத் தான் காணலானது என்னையென்று அவள் மறுபடியும் வியப்புற்றாள். 

இவ்வாறு குமுதவல்லி எண்ணமிட்டுக்கொண்டிருக்கை யில் அவ்வறைக்கதவை எந்து எவரோதட்டலானார்: அவ்வரசி அவ்வாளை உள்ளே வரும்படி கட்டளையிட்டாள்; இளையனான சந்திரன் அவளெதிரே சென்று நின்றான். 

பதினாறாம் அதிகாரம் 

குழதவல்லியும் நீலலோசனனும் 

கதவைத்தட்டி முன் அறிவித்து வந்தமையாற் குமுதவல்லி யிருக்கும் அறைக்குச் சந்திரன் இங்ஙனங் காணவந்ததில் மதிப் புக்குறைச்சலேனுந் தகாத்தேனும் ஏதும்இல்லை: ஏனெனிற், பௌத்தர்கள்பால் உள்ளதுபோற் பெண்மக்கள் தனித்திருக்க வேண்டுமென்னுங் கடுமையான வழக்கம் மேற்கணவாய் மலை நாடுகளில் உள்ள சைவசமயத்தவர்கள்பால் இல்லை. என்றாலுஞ், சந்திரன் அங்கேவந்தது வழக்கத்திற்கு மாறானதுபோற் குமுத வல்லியினுள்ளத்திற் படுவதாயிற்று.என்னையெனின், மாட்சி மை தங்கிய மனோகார் தனக்குச் செய்தி அனுப்பியிருந்தால் அவ்வீட்டு முதியோள் வாயிலாகவாவது அல்லது வேறோர் ஏவற் காரிவாயிலாகவாவது அனுப்பியிருக்க வேண்டுமென்பது அவ ளுக்குடனே தோன்றலாயிற்று. மனோகரரோடு தான் பேசிக் கொண்டிருந்தபோது தான் சந்திரனைப்பற்றிக் கொண்ட ஐயுற வை உறுதிப்படுத்தத் தக்கது ஏது ம் நேரவில்லை அவனது நம் பிக்கைத்தன்மையைப்பற்றி மனோகார் அவனைப் புகழ்ந்தே பேசியிருக்கின்றார். வேண்டியழைத்த மனோகாரின் திருமுகங் களையும், மோதிரங்களையும் ஒவ்வொருவரிடமும் அவன் சேர்ப் பித்தகாரணத்தால், தன்னைநோக்கியும் பெருமான் நீலலோ சனனை நோக்கியும் அவர் அவனிடம் நம்பி ஒப்புவித்தசெய்திகளை அவன் நேர்மையுடன் கொண்டுவந்து செலுத்தினானென் பதும் நன்குவிளங்கிற்று. 

இவ்வெண்ணங்கள் குமுதவல்லியின் உள்ளத்தில் விரை விற் றோன்றி மறைந்ததும், அரசியாயிருக்குந் தனது உயர்ந்த நிலைமைக்கும், ஏவலனாயிருக்கும் அவனது தாழ்ந்த நிலைமைக் கும் ஏற்றபடியாகச் சந்திரனிடம் இனிய நோக்கத்தொடு பேச வேண்டுமென அவள் முன்னையிலும் பார்க்கத் தீர்மானஞ்செய் தாள். ஆனதனால், அந்த ஒழுங்கின் அளவுக்கு, அவள் அவன் மிகவுந்தாழ்மையோடும் பணிவோடுந் தொலைவிலிருந்தே செய்த வழிபாட்டை ஏற்றுக்கொண்டாள்; தான் பேசுதற்கு அவளு டைய கட்டளையை எதிர்பார்த்தவனாய்ப் பணிவோடும் அவன் சிறிது தொலைவில் நிற்கையிற், ‘சந்திரா,நீ சொல்லவேண்டிய தைச்சொல். நீ இங்கே வந்த காரணம் யாது?” என்று அவள் வினவினாள். 

”அருள்நிறைந்த அரசி” என்று அவ்வேவலன் விடை பகர்வானாய் மறுபடியுந் தாழப்பணிந்து, “முதலாவது, பெரு மாட்டியாரிடம் அடியேனது வணக்கத்தைத் தெரிவிப்பதற்கு ஏற்ற ஒருநேரத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன்; இரண் டாவது, அடியேன் கேட்க விரும்புஞ் சில கேள்விகளுக்குப் பெருமாட்டியார் அருள்கூர்ந்து விடையளிப்பீர்களாயின் மன மகிழ்ந்தவன் ஆவேன்.” என்றான். 

அவன் என்னகேள்வி கேட்கக்கூடுமென்று வியப்புற்ற வளாய், “நல்லதுசொல் சந்திரா” என்று கூறினாள் குமுத வல்லி. 

“நாகப்பூரிலிருந்தபோது பெருமாட்டியார் அவர்களிடம் அடியேன் செய்தி கொண்டுவந்து சேர்ப்பித்த வகையைப்பற்றி என் உயர்குணத்தலைவரிடத்தில் அரசியார் உயர்த்தி நயப்பாய்ப் பேசியிருப்பீர்களென்று அடியேன் எண்ணிக்கொள்ளலாமா? யான் எடுத்துவந்த திருமுகத்திற் குறித்த நாளையும், யான் நாகப் பூரிலுள்ள தங்கள் அரண்மனையில் வந்து சேர்ந்தநாளையும் ஒப் பிட்டுப்பார்த்தால் வழியில் இடையே யான் தங்கியிருக்கக்கூடு மா என்பதைத் தாங்கள் தீர்மானம் பண்ணிக்கொண்டிருக்கலாம். தாங்கள் மலையநாட்டிற்குள் வரும்போது எவர்க்குந் தெரி யாதபடி வரும்படிக்கும், எவரும் உறுத்துப் பாராத ஒரு பாதை யைத் தொடர்ந்து வரும்படிக்கும் யான் தங்களை வேண்டிக் கொண்டதெல்லாம் என்தலைவர் கற்பித்தவண்ணம் யான் செய் தனவேயாகும் என்பதை அரசியார் மாட்சிமைமிக்க என்தலை வரின்வாயினின்றே வேண்டிய அளவுக்குக் கேட்டுத் தெளிந் திருப்பீர்கள்.” என்று அவ்வேவற்காரன் கூறினான். 

”உன் தலைவரொடு சிறிதுநேரத்திற்குமுன் யான் பேசிக் கொண்டிருந்தபோது இவைகளைக்குறித்து நாங்கள் உண்மை யாகவே ஏதும் பேசவில்லை, சந்திரா ; ஆனாலும், மாட்சி மிக்க மனோகரர் எனக்குத் தெரிவித்தவைகளிலிருந்து, யான் நீலகிரி நகரத்திற்கு வரும் பயணம் மிகவும் மறைவாக இருக்கவேண்டு மென்பதே முதலிலிருந்து அவரது விருப்பமாகுமென்பதை யான் ஐயமறத் தெரிந்து கொண்டேன். அதுவேயுமன்றி, யான் அரசியல்நிலைக்கு உரியவள் என்பது புலப்படாமற் செவ்வை யாய் மறைக்கப்பட வேண்டுமென்பதும் அவரெழுதிய திரு முகத்தில் அறிவறுத்தப்பட்டிருந்ததை யான் நினைவுகூர்கின் றேன்.” என்று நாகநாட்டரசி மறுமொழி புகன்றாள். 

“அப்படியானால், எல்லாவகையிலும், என்னிடம் நம்பி ஒப்புவிக்கப்பட்ட சிறந்தசெய்தியைத் தங்களிடங் கொண்டுவந்து யான் சேர்ப்பித்தவகையில் அரசியாரவர்கள் மனநிறைவடைந் திருக்கிறீர்கள்?’ என்று சந்திரன் மொழிந்தான். 

”உனக்கு இகழ்ச்சி உண்டாகும்படி பேசுதற்கு ஏதொரு காரணமும் இல்லை என்பதைச் சந்திரா, உன்சொற்களிலிருந்ே நீ முன்னமே தெரிந்திருக்கலாமே. எனினும், என்னிட மிருந்து இவ்வுறுதிமொழிகளைக் கேட்கும்பொருட்டு நீ ஏன் இவ்வளவு கவலையுள்ளவனாய்த் தோன்றுகின்றாய்?” என்று அவ்வரசி வினாயினாள். ஓர் இமைகொட்டும் நேரங் குமுதவல்லி அவ்வேவலன் முகத்தை ஆராய்ந்து நோக்கினாள்: ஏனென்றால், அவனைப்பற்றி அவள்கொண்ட ஐயம் மறுபடியும் அவளதுள்ளத் தில் வலிவுபெற்றுத் தோன்றியது. 

“அதன் விளக்கத்தை உடனே சொல்லிவிடுகின்றேன்.’ என்று முழுதுங் காவற்ற வெள்ளையுள்ளம் உடையவன்போல் அவ்விளைஞன் விடைகூறுவானானான்: முதலாவது, ஒவ்வொரு வரும் அரசியாரின் நல்லெண்ணத்தைப்பெறுதற்கு விரும்புவர்; இரண்டாவது, யான்பிறந்தது முதல் என்னைவளர்த்து, யான் தாய்தந்தையரை இழந்திருந்த காலத்திலும் என்னைப் பாது காத்துவரும் அருள்நிறைந்த என் தலைவர் மனோகரருக்கு என்னா லியன்ற எல்லாவகையிலும் இசைவாக நடந்துகொள்ளவேண்டு மென்பதே எனது பெருநோக்கம்; மூன்றாவது, பெருமாட்டி, தாங்கள் இவ்விடத்தே வந்து சேர்ந்தநேரத்தில் தாங்கள் சொல் லிய சில சொற்களிலிருந்து, வரும் வழியில் தாங்கள் இடர் உற்றீர்களோவென்று அச்சமும் அடைந்தேன்.” 

“ஆ! இப்போது நினைவு கூர்கின்றேன்! யான் என் குதி ரையிலிருந்து கீழ் இறங்குகையிற், சில சிறு நிகழ்ச்சிகளைப்பற்றி யான் தற்செயலாய்ப் பேசினது உண்மைதான்; ஆனால், அவை கடந்துபோய் விட்டமையால், இனி அவற்றைக் குறித்துப் பேசுவதிற் பயன் சிறிதுமில்லை.” என்று குமுதவல்லி மொழிந்தாள். 

திரும்பவும் அவ் ஏவற்காரன் சொல்லுவான், ‘ஆம் பெரு மாட்டி, தங்கள் திருவாயினின்று அப்போது தோன்றிய சொற் கள் அதுமுதல் என் நினைவைவிட்டு அகலாதிருந்தன; ஏனென் றால், யான் முன்னமே சொல்லியபடி அவை சில இடர்களைக் குறிப்பிட்டன வென்று அஞ்சினேன்; நாகப்பூரிலுள்ள தங்கள் அரண்மனையில் தங்கள் வரவுபார்த்து யான் காத்திருக்கப் பெற்ற போது, அரசியார்க்கு யான் தெரிவித்துக்கொண்ட குறிப்புகள் ஒவ்வொன்றிலுங் கருத்தின்மையினாலாவது மறதியினாலாவது எதனையேனுஞ் சொல்லாமல் விட்டிருந்தேனாயின் அஃது என் மனத்தை நிரம்பவும் புண்படுத்துவதாகும்.” 

இங்ஙனஞ் சந்திரன் பேசியபோதெல்லாங், குமுதவல்லி சாய்மணைக்கட்டிலில் அழகிதாய் அரைவாசி சாய்ந்திருந்தபடி யே கீழ்நோக்கிய பார்வையோடு இருப்பதுபோற் காணப்பட் டாள் ; ஆனாலுங், குற்றம் ஏதும் அறியாமையால் உண்மையான நெஞ்சத்தோடும் அவன் பேசினானோ, அல்லது குமுத வல்லி வழியில் அடைந்த இடர்களுக்கு இவன் உடந்தையா யிருந்ததைப்பற்றி அவள் ஐயுற்றிருந்தால் அவ் ஐயத்தின் அள வை ஆழ்ந்தறியும் பொருட்டுக் கரவாயுஞ் சூதாயும் நடந்துகொண் டானோ என்பதை அவ்விளைய ஏவற்காரன் முகத்தினின்று கூடுமானாற் கண்டறியும் வண்ணம் உண்மையில் அவள் கருத் தாய் நோக்கிக்கொண்டிருந்தாள். என்றாலும், அவனது பார்வை யில் அவள் கொண்ட ஐயத்தை உறுதிப்படுத்தத்தக்கது ஏது மில்லை- எவரோ ஒருவரைப்பற்றி விழிப்பாயிருக்கும்படி இவ ளுக்குக் கற்பித்து மீனாம்பாள் மிகமெல்லச் சொல்லிய பெயர் மெய்யாக இவனுடைய பெயரே யாகுமென்னும் நம்பிக்கை யைத் திண்ணமாக்குவதற்கு இவனது முகத்தில் ஏதொன்றுங் காணப்படவில்லை.மற்று,அவனுடைய சொல்லிலுங் குறிப் பிலும் உண்மையை உருக்கத்தொடு பேசுந்தன்மையே காணப் பட்டது. இன்னும், ஏவற்காரனாயிருப்பவன் ஒருவன் தன் கடமையைச் செவ்வனே செய்து முடித்ததைப்பற்றியும், நம் பிக்கைக்குரிய ஒரு செய்தியைக் கொண்டுபோகும்படி அமர்த் தப்பட்டக்கால் தன்னை அங்ஙனம் அமர்த்திய அன்புள்ள தன் தலைவரும், அச்செய்தியைத் தான் நம்பிக்கையொடு கொண்டு போய்ச்சேர்க்க அதனை ஏற்கும் அரசியாரும் முழுதும் மனம் உவக்கும்படி தான் நடந்துகொண்டதைப்பற்றியும் அவன் தான் உறுதியாகத் தெரிந்துகொள்ள விழைவது இயல்பே யன்றோ? 

“வழியில் எத்தகைய இடர்கள் எனக்கு நேர்ந்தனவாயி னும், முடிவாக அவை என்னுடைய அலுவல்களைப் பழுதாக் கத்தக்க தொன்றையும் உண்டாக்கவில்லை. ஆதலால், அவற்றால் மனத்திற்கு இசையாத அனைத்தையும் நான் மறந்து விடுதற்கு மிகவும் விருப்பம் உள்ளவளாய் இருக்கின்றேன்.சந்திரா,உன் னைச்சட்டி யான் சொல்லக்கூடிய குற்றம் ஒன்றும் இல்லை. மேலும், உன்தலைவர் உனது நடக்கையைப்பற்றி மகிழ்ந்திருப் பதை நீ அறிந்தால், அஃது உனக்கு இன்பந் தருவதாயிருத்த லின், சிறிது நேரத்திற்குமுன்னே உன்பெயரைச் சொல்லுகை யில் தமக்கு நம்பிக்கையுள்ள ஏவற்காரன் என்று உன்னைக் குறிப்பிட்டு உன் தலைவர் கூறியதை யான் உனக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன்.” என்று குமுதவல்லி விளம்யினாள். 

“அருள்மிக்க அரசி, தாங்கள் கூறிய இவ்வுறுதி மொழிக் காக எனது வணக்கத்தைச் செலுத்துகின்றேன். என நாளில் யான் நிறைவேற்றக் கருதியிருப்பது ஒரே நோக் ஆவாழ் கந்தான் – அஃதென்னென்றால், யான் தாழ்ந்த ஓர் ஆளாய் இருப்பினும், எனது கடமையைச் செவ்வனே செய்து, என் போல் மக்களாய்ப் பிறந்தவர்களின் நல்லெண்ணத்தை யான் பெற்றுக்கொள்ளுதலேயாம். பெருமாட்டி, மாட்சிமை தங்கிய மனோகரருக்காக எனது உயிரையுங்கொடுக்கக் காத்திருக்கின் றேன். இனித், தங்கள்பொருட்டும் எப்போதாயினும் யான் ஏதேனுஞ் செய்யும்படி எவப்பட்டால், அருள்மிகுந்த அரசி, தங்கள் அலுவல்களிலும்யான்உண்மையோடும் உள்ளக்கிளர்ச்சி யோடும் அழுந்தி முயல்வேனென்பதை எடுத்துரைப்பதற்கு இதனையே ஏற்ற நேரமாகக்கொண்டு தடுக்கமுடியாத மன வெழுச்சியோடுங் கூறும் எனது மனத்துணிவிற்காக அடி யேனை மன்னித்தல்வேண்டும்!” என்று சந்திரன் கிளர்ச்சியோருங் கூறினான். 

அவ்விளைய ஏவலனுடைய சொல்லிலும் பார்வையிலுஞ் செய்கையிலும் வெளித்தோன்றிய உண்மையினால், மக்களியற் கையைப்பற்றி எப்போதும் மிகு நல்லெண்ணமே கொள்ளும் அருளியல்புவாய்ந்த குமுதவல்லி தான் கொண்ட ஐயமெல்லாம் அகன்று போயினவென நினைந்தாள்; உடனே அவள் தனது விரலிலுள்ள விலையுயர்ந்த மோதிரம் ஒன்றைக் கழற்றிச்,”சந் திரா, நாகப்பூரிலிருந்தஎன்னிடம் நீசெய்திகொண்டுவந்தகாலை யில் நீ அதனை நம்பிக்கைக்குப் பழுதுவராமற் செலுத்திய தன்மையை யான் உவந்து கொண்டதற்கோர் அடையாளமாக தனை நீ ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.” என்று சொல்லிக் கொண்டே அதனை நீட்டினாள். 

சந்திரன் உடனே தாழப்பணிந்து, ‘அருள் நிறைந்த அரசி, தாங்கள் ஈதற்கு நீட்டின இப்பரிசிலையான் ஏற்றுக்கொள்ளாததுபற்றி அடியேனை மன்னித்தல்வேண்டும். நாகப்பூரில் அரசி யார் அடியேனுக்குச் சிறந்த ஒரு பரிசில் அளித்தீர்கள்; தாங்கள் அடியேனை உவந்து ஈந்த அவ்வடையாளத்திற்காக யான் உள் ளங்குளிர்ந்தேன். இப்போது பின்னும் ஒரு பரிசிலை யான் ஏற்றுக்கொள்வேனாபின், உண்மையில் ஒரு நன்கொடைபெறும் நோக்கத்தை மறைத்து வணக்கஞ் செலுத்தும்பொருட்டுத் தங் கள் முன்னே வந்தேன்போல் அரசியார் கருதவுங்கூடும். தங் கள் எண்ணத்தில் யான் நன்கு மதிக்கப்பட்டிருக்கின்றேனா என்பதையுந், தாங்களும் மாட்சிநிறைந்த என் தலைவரும் ஆண் மைமிக்க பெருமான் நீலலோசனரும் யான் நாகப்பூருக்கும் மேற்கரைக்குஞ் செய்தி கொண்டு வந்து சேர்ப்பித்தவகையில் மனம் உவந்தனரா என்பதையும் உறுதியாகத்தெரிவதொன்றே எனது நோக்கமாகும்.” என்று மறுமொழி பகர்ந்தான். 

இவ்வாறு சொல்லியதுஞ், சந்திரன்நாகநாட்டரசியினிடத் தில் மிகுந்த வணக்கம் உடையான்போற் பணிந்து, விரைவில் அவ்வறையை விட்டு வந்தான். 

அவன் தனக்குப்பின்னே கதவு சாத்திக்கொண்டுபோன துங், குமுதவல்லி அம்மோதிரத்தைத் திரும்பவுந் தன் விரலில் இட்டுக்கொண்டவளாய்த் தன்னுள் எண்ணுவாள்: “உண்மை யில் யான் இவ்விளைஞனுக்குப் பிழைசெய்தவளானேன். இவன் இழிந்த இரண்டகமான செய்கையைச்செய்யமாட்டாதவனாய், மிக உயர்ந்தசிறந்த எண்ணங்கள் உடையவனாய்த்தோன்றுகின் றான். இவனுடைய எண்ணத்திற்கு மாறாகுமென்று நினைத்து இப்பரிசிலை இவன் வாங்கிக்கொள்ளும்படி இப்போது இவனை நானும் நெருக்கவில்லை. வேறுநேரம் பார்த்து இவனுக்குத்தக்க நன்கொடை அளிக்கவேண்டும். இறந்துபோகுந் தறுவாயில் மீனாம்பாள் வாயில் நிலைதடுமாறிப் பிறந்த பெயர் வேறொருவ மற்று அப்பெயர் யாதா யிருக்கலாம்? எவரைப்பற்றி நான் விழிப்பாய் இருக்கவேண்டும்? ஆ!அத்துணைச்சிறுகாரணத்தைக்கொண்டு யான் சந்திர னைப்பற்றித் தீதாய் நினைந்தது முற்றும் பிசகு! நீலலோசன னைப்பற்றி நினைந்ததில் எவ்வளவு புதுமையாக நான் ஏமாற்றம் அடைந்தேன்! ஆண்மையிற்சிறந்த என் மைத்துனனைப்பற்றி நான் பிழைபட நினைந்தது எவ்வளவு கொடுமையானது ! இனி வெளித்தோற்றத்தைக்கண்டாவது,நிரம்பாமனஐயுறவுகொண் டாவது எஞ்ஞான்றும் இத்தகைய முடிபுக்குத் திடுகூறாய்வரற் பாலேன் அல்லேன்.” இப்போது சுந்தராம்பாளும் ஞானாம்பா ளும் இவளிருந்த அறைக்குத் திரும்பினந்தார்கள்; குமுதவல்லி யும் அவர்களை நோக்கி, “வாருங்கள் தோழிகாள், என்பக்கத்தில் இருங்கள்; யான் நுங்கட்குத் தெரிவிக்கவேண்டிய சில அறி விப்புகள் இருக்கின்றன.” என்றாள். 

அழகும் நம்பிக்கையும் வாய்ந்த அப் பெண்களிருவரும் இளம் பெருமாட்டியின் அண்டையில் உடனே அடிமணை களின்மேல் உட்கார்ந்தார்கள். அவ்வரசியரர் தமக்கு எதனைத் தெரிவிக்கத் தாழ்ந்தருள்வரோ என்று அவர்கள் ஆவலோடும் எதிர்நோக்கியிருந்தார்கள். 

“முதன்முதல், மங்கைமீர், என்னுடைய தவறுதலால் உங்கள் உள்ளத்தில் உண்டான ஓர் எண்ணத்தை அங்கு நின் றும் அகற்றுவதற்கு ஒரு நொடிப்பொழுதுகூட யான் தாழ்க்க லாகாது. பெருமான் நீலலோசனரைக்குறித்துத் துவக்கத்தில் மிகவும் பரராட்டிப்பேசிய நீங்கள், அவரைப்பற்றியான் கொடு மையாகவுந் துயரப்படும்படியாகவும் பிழைபட எண்ணி நடந் தேன் என்பதை இப்போது தெரிந்து நிரம்பவுங்களிப்படைவீர் கள் அவர் கொள்ளைக்கூட்டத் தலைவனான நல்லான் அல்லர்; அவர் இப்போது இளவரசுப்பட்டத்தில் இருப்பவராயும், இன் னும் உயர்ந்த ஒரு நிலையைப் பெறுதற்கு ஏற்ற மெய்யான உரி மையுடையவராயும் உள்ள மிக ‘மாட்சிமைப்பட்ட ஓர் இளம் பெருமானேயாவர்!” என்று குமுதவல்லி கூறினாள். 

இச்சொற்களைக்கேட்ட அளவில் சுந்தராம்பாள் ஞானாம் பாள் வாயினின்று களிப்புரைகள் வியப்புடன் எழுந்தன. முத லிற்சொன்ன பெண்ணின் மெல்லிய சரிய மடமான் விழிகளி லும், அங்ஙனமே அழகிய மற்றைப் பெண்ணின் பழுப்புநிறக் கண்களிலும் அம்மகிழ்ச்சிக்குறிப்பு ஒளியுடன் கிளர்ந்தது ; சிறிதுகாலத்திற்குமுன் எண்ணியதற்கு வேறாகத் தான் இப்போது நீலலோசனனைப்பற்றி எண்ணக் கூடியவளானதை நினைந்து குமுதவல்லி தன் பட்டுப்போன்ற கன்னங்களில் ஒரு பொலிவு கொள்ளப்பெற்றாள்; இந்தப்பொலிவு மனக்குறையினால் தோன்றியதன்று. 

“இன்னும் நான் சொல்லவேண்டுவதுமிகுதியாயிருக்கின் றது. மாதரீர்; எனினும், இப்பொழுதிற்கு யான் வெளியிட் டுரைக்கப்போவது ஒரு மறைபொருளாகும்; ஏனென்றால், மாட் சிமைமிக்க மனோகரர் இதனையடுத்து என்ன ஏற்பாடுகள் செய்ய எண்ணியிருக்கிறாரென்பது எனக்கு இன்னுந்தெரியாது சுருங் கச்சொல்லுங்கால், உங்களுக்குப் பெரிய வியப்பினைத்தரும் ஒரு செய்தியைச் சொல்லப்போகின்றேன்.” என்று தொடர்ந் துரைத்த குமுதவல்லி சிறிது நின்று, பிறகு அழுத்தமாகவும் அடங்கியமகிழ்ச்சியோடும், நீலலோசனர் எனக்கு மிகநெருங் கிய உறவினர் – அவர் என் உரிமை மைத்துனர்!” என்று கூறினாள். 

அவ் விளந் தோழிப்பெண்கட்கு இச்செய்தி ஒருவியப்பி னைத் தருவதாயிருந்தது. அத்தகைய உறவினரைத்தான்பெற்ற தற்காகத் தன்னைப் பெருமைபாராட்டிக் கொள்ளத்தக்க நிலையி லுள்ள தம் தலைவியின்மேல் அவ்விருவரும் ஒருங்கே வாழ்த் துரை சொரிந்தனர். 

“ஆம், மகளிர்காள், இது மெய்ம்மைதான். சிறிதுநேரத் திற்கு முன்னே தான் இஃதெல்லாம் அம் மலைய் வணிகரின் வாயினின்று கேட்டுணர்ந்தேன். அவர் அன்பான நெஞ்சமும் அருட்குணமும் வாய்ந்த சிறந்த முதியவர். இதற்குமுன் இத னைப்பற்றி யான் ஒன்றும் அறியேனாயினுந், தாம் என துகுடும்ப நன்மைகளைக் கோரிய வலிய நண்பர் என்பதை மெய்ப்படுத்தி யிருக்கின்றார்.என்மைத்துனர் நீலலோசனரைப் பற்றியோ வென்றால், எமக்குள் அவ்வுறவு எங்ஙனம் உண்டாயிற்று என் பதைத், தோழிகாள், நீங்கள் எண்ணிப்பார்க்கத் தவறமாட்டீர் கள்; ஏனெனில், இரங்கத்தக்க என் மரமனார் – என்தாயோடு உடன்பிறந்ததம்பியரர் – தம்கையிற்குழந்தையுடன் நாகப்பூரை விட்டு அகன்றுபோன கதையை நீங்கள் அடுத்தடுத்துக் கேட்டிகிக்கின்றீர்கள். அந்த மகவு பெரிய பிள்ளையாய் வளர்ந்தது- மேற்கரைநாட்டின் அரசரான சாக்கியதர்மர் தமக்குமருமகனாக எடுத்துக்கொண்ட அவ்விளைஞரே இன்றைக்கு என் மைத் துனனா யிருக்கக்கண்டேன்.” என்று அவள் தொடர்ந்துரைத்தாள். 

அங்ஙனங் கேட்ட வியப்பான செய்திகள் எல்லாவற்றை யும்பற்றித் தாம் அடைந்த மகிழ்ச்சியினையும் இறும்பூதினையுந் தெரிவிக்கச் சுந்தராம்பாளும் ஞானாம்பாளும் போதுமான சொற் கள் காணாராயினர். இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கும்போது அவ்வீட்டு முதியோள் உள்ளேவந்தமையால் அது தடைப்பட் டது;வந்தவள், “பெருமாட்டியாரவர்கள் மறுபடியும் என்மாட் சிமைப்பட்ட தலைவரிடம் வந்தருளுதற்குத் திருவுளம் பற்றல் வேண்டும். முன்னே தாங்கள் கண்டு பேசிய அந்த அறையிலே யே அவர் தங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.” என்று சொன்னாள். 

மனோகரர் வரவேற்கும் அறைக்குக் குமுதவல்லி மறுபடி யுஞ் சென்றுகொண்டிருக்கையில், அவளது உயர்ந்த நிலைமை யானது அவ்வீட்டிலுள்ள ஏவற்காரர் எவர்க்கும்பெரும்பாலுந் தெரியமாட்டாதென்பதனைச் சொல்லிவிடுகின்றோம். அதனை நிரம்பவும் மறைபொருளாய் வைத்திருக்கவேண்டுமெனச் சந் திரன் கற்பிக்கப்பட்டான்; தன் தலைவரின் கட்டளைகளுள் ஒன்றான இதனை அவன் மீறி நடப்பதற்கும் ஏதுவில்லை. நாக நாட்டரசி நீலகிரிநகரத்தில் வந்து தமது வீட்டில் தங்கியிருக்கின்றாள் என்பது எந்த வகையாலும் வெளியே தெரியாதபடி மறைவிடமாய் வைக்கப்படவேண்டுமென அம்மலையவணிகர் எண்ணங்கொண்டிருந்தார்; ஏனெனில் அவர் அவளை அங்கு வரவழைக்கும்படி தூண்டின முதன்மையான அலுவல்கள் மிகவும் மறைவாகவே வைக்கற்பாலனவாயிருந்தன; மேலும், அவளை அவர் மேற்கணவாய் மலைக்காட்டுகளின் இடையே அழைத்துச்சென்று, அவள் ஏற்கெனவே ஒருவாறு உய்த் துணர்ந்திருக்கின்ற மிகப்பெரிய மறைபொருளை அவளுக்கு முற்றிலும் அறிவித்தற்கு அவர் கருதியிருந்தமையால், நாக நாட்டரசி அவரது மாளிகையிற் றங்கியிருக்கின்றாள் என்பது வெளிப்புலப்படுமாயின், அஃது எதன்பொருட்டு என்று அறியப்புகுவதே வெளியார்க்கு இயற்கையாதலால், அவர்களுடைய இயக்கங்கள் உற்று ஆராயப்படாமல் மறைக்க வேண்டுவது இன்றியமையாததாகவேயிருந்தது. ஆனாலும், அப்போதைக்கு வேறொருபெயரை வைத்துக் குமுதவல்லியின் பெயர் வெளி யே தெரியவொட்டாதபடி மறைக்குமளவுக்கு ஏன் அம்முன் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பது ஒரு புதுமையாகத் தோன்றலாம் ; என்றாலும், அம்மேற்கணவாய் மலைநாடுகளில் உள்ள பெண்பாலாரில் உயர்ந்த நிலையில் இருப்பவர்க்குக் குமுத வல்லி என்னும் பெயரிட்டு வழங்கல் சைவர்பௌத்தர் என்னும் இருதிறத்தினரிலும் வழக்கமல்லாததன்று. ஆதலால், அவ்வளவு உன்னிப்பான ஏற்பாடுவேண்டப்படுவதில்லை. எனவே, குமுத வல்லிப்பெயரியபெருமாட்டியே நாகநாட்டரசியாவள்போலும் என்று ஐயமுறுவார் எவருமில்லை. 

குமுதவல்லி மறுபடியும் மனோகரர் இருந்த அறைக்கு வந்து சேர்ந்தாள் அவ்வணிகர் மட்டும் அங்கே தனித்திருக்கவும் நீலலோசனன் அவருடன் இல்லாதிருக்கவுங் கண்டாள். முன் முறையில் அவர் அவளிடத்தில் நடந்துகொண்ட வண்ணமே நன்கு மதிப்பும் நட்புங்கலந்த ஒருதன்மையோடு அவ்வரசியை அவர் வரவேற்றார். அவர்தம் முதுமையும் அவடன் பாட்டனாரோடு அவர் தாம் கொண்ட நெருக்க உறவும் அவளைப் பெற்றோர்க்குரிய அன்புடன் பாராட்டத் தூண்டினாலும் அவர் அவளது அரசியல் நிலையை மறந்துபோகவில்லை. 

“எனக்கு இனியநட்பான இளைய அரசி, தங்களுக்குயான் நல்லசெய்தி தெரிவிக்கப்போகின்றேன். தங்கள் மைத்துனர் யான் எடுத்து விளக்கிய அவ்வுண்மைகளை உண்மையென் றுணர்ந்து ஏற்றுக்கொண்டார்; அவர் சைவசமயத்தைத்தழுவிக் கொள்வார்!” என்றுரைத்தார். 

இதனைக்கேட்டதுங் குமுதவல்லியின் நெஞ்சம் இன்பத் தால் ஊடுருவப்பெற்றது. அவள் அவனிடத்துக்கொண்டிருக்கின்ற அன்புமிக்க நேசத்திற்குத் தன்னை அவன் தகுதியுடைய னாக்கிக் கொள்ளுகின்றானென உணர்ந்தாள். 

“ஆம்,நாளை மாலையில் இவ்விடத்தே வணக்கவொடுக்கம் மிக்க ஒரு சடங்கு நடைபெறும். அப்போது தங்கள் மைத்துன னார் தூயகுருவினால் திருநீராட்டப்பட்டுத் தாம் பிறந்த சைவ சமயத்தைத் தழுவிக்கொள்வார். அவர் தம் பெற்றோர்களால் அவர்க்கு இடப்பட்டதுந், தாங்கள் தெரிந்தவாறே தங்கள் குடும் பத்தில் எத்தனையோ எத்தனையோ தலைமுறையாகப் பேணப் பட்டுவந்ததும், தங்கள் பாட்டனாரும் அவர்க்குப் பாட்டனாரும் பூண்டிருந்ததும் ஆன கோச்செங்கண்ணன் என்னும் பெய ரையும் அப்பொழுது அவர்சூடிக்கொள்வார்!” என்று மனோகரர் தொடர்ந்துரைத்தார். 

“மாட்சிமை மிக்க மனோகரரே, என் மைத்துனர் சைவ சமயத்தில் திரும்பவும் வந்துசேர்வதை யான் காணும் அந்நேரம் எனக்கு ஒரு நன்னேரமாய் இருக்கும். நாகநாட்டரசாட்சியை அவருக்குநான் மனமகிழ்ச்சியோடு ஒப்புவித்துவிடுகின்றேன்.” என்று கூறுகையிற் குமுதவல்லி நெட்டுயிர்ப்பெறிந்து, “ஆனா லும், அரிடமன்னன் ஆளுகைக்கு உள்ளடங்கி அரியணைமேல் முடிகவித்து வீற்றிருக்கும் ஓர் ஆவிவடிவைப்போல் யானிருக்கு மாறு அந்நாட்டினரசியல் ஒரு நிழலின் தோற்றத்தை அடைந் திருக்கின்றதே!” என்று கூறினாள். 

“பெருமாட்டி, ஒரு குறிப்பிட்ட ஏற்பாட்டின் முடிவுப் படி அல்லாமல் – உங்களுக்குள் முன்னமேயுள்ள உறவின் பொருத்தமானது இன்னும்நெருக்கமான மற்றைக்கட்டுகளால் உறுதிப்படுத்தப்பட்டால் அல்லாமல் இங்ஙனம் நடத்தலாகாது. அழகியகுமுதவல்லி, இங்ஙனம் உள்ளதை உள்ளபடியாகயான் திறந்துபேசுதல்பற்றி, இம்முதியோனைத்தாங்கள் மன்னித்தல் வேண்டும். என்றாலும், நீண்டகாலமாய்க்காணாது போன தம் பேரன் உயிரோடிருத்தலைப் போற்றத்தக்க தங்கள் மாமனார் தெரிந்துகொண்டபிறகு, யான் கடைசியாக அவரைச்சென்று கண்டசிலவேளைகளிலெல்லாம் அவர்எனக்கு அடிக்கடி சொல் லிய விருப்பத்தினையே யான் தங்கட்குத்தெரியச்சொல்லலாயினேன். எழில்மிக்க குமுதவல்லி, தங்கள் மைத்துனனார் சைவ சமயத்தைத் தழுவிக்கொண்டு அவ்வாற்றால் அம்மாமறைப் பொருளைத்தெரிந்துகொள்ளுதற்குமட்டுமன்று, தங்களை வேள் வித்தீமுன் மணந்துகொள்ளும் இன்பத்தைப் பெறுதற்குக் தம்மைத் தகுதியுடையராக்கிக்கொள்ளல் வேண்டுமென்பது மெய்யாகவே இறந்துபோங்காலத்தும் அம்முதிய கோச்செங் கண்மன்னர்க்கு விருப்பமாயிருந்தது. எனினும், உங்கள் உள் ளன்பு வேறோரு முகமாய் முன்னமே செலுத்தப்பட்டிருக்கு மானால் – அல்லது இல்லறக்கடலைக் கடக்குந் திருமணக்கப்ப லில் ஏறுவது தங்கட்கு வெறுப்பாக இருக்குமானால் தங்கள் அரசியலை அங்ஙனம் ஒப்புவிக்கவேண்டுவதில்லை.உரிமைப்படி அஃது உங்களுக்கே உரியது – மூத்த கிளைவழியில் வந்த உங் களுக்கே அஃது உரியதாகும் – நீங்களே அதனை வைத்திருக் கற்பாலீர்கள்!” என்று மனோகரர் மறுமொழி புகன்றார். 

மாட்சிமிக்க மனோகரர் நீள இவற்றைச் சொல்லுகையில் காணங்கலந்த மனக்குழப்பத்தினாற் குமுதவல்லி வாய்பேசக் கூடாமல் அடைபட்டிருந்தாள் — இவள் முகத்தின்கண் உள்ள நிறமோ புடைபெயர்ச்சி நன்கு புலனாகாதபடி வருவதும் போ வதுமாய் இருந்தது; வாய்பேசாமல் இவள் இச்சொற்களை உற் றுக்கேட்கையில் இவளது மார்பமோ மெல்லெனச் சிறிதே ஏறியிறங்கிக்கொண்டிருந்தது. முன்னமே இவள் நீலலோசன னிடத்துக்கொண்ட ஓர் உணர்ச்சியை, இம்முதியோன் கூறிய சொற்கள் இவளது ஆழ்ந்த நினைவின்கண் எழுப்பிவிட்டன. சிறு குழந்தையைப்போற் கள்ளம் அறியாதவளாயிருந்தும் இவள் இப்போதுதான் காதல்என்பதன் முதல் எழுத்துக்களைப் பயிலத்தொடங்கினாள். அவளது நெஞ்சத்தினுள் அமைதியாய் மெல்லத்தோன்றிய ஒரு பதைப்பானது, மனோகரர் கூறிய சொற்கள் இன்பத்தைப்பிறப்பிக்கும் ஒரு நரம்பின் அசைவினை விளைவித்ததென்று அவளுக்கு அறிவிப்பதாயிற்று. 

“என் அன்பிற்குகந்த, மாட்சியின்மிக்க மனோகரரே,” என்று அவள் கடைசியாகத் கன் மெல்லிய இனியகுரலிற் கீழ்க்கவிந்த விழிகளோடுங் கூறுவள் என் உள்ளன்பானது இதற்குமுன் எங்குஞ் செலுத்தப்பட்டிலது – என்னையெனின், இதற்குமுன்யான் என்றும் நினையாத ஒருசெய்தியைப்பற்றித் தாங்கள் குறிப்பிட்டீர்களே: புதிதாகக் கண்டுகொள்ளப்பட்ட என் மைத்துனரோடு யான் சிறிதும் பழகியிராவிடினும், அவர் தம் அஞ்சா ஆண்மையினையும் வள்ளற்றன்மையினையும் உயர்ந்த அறிவினையும் நிலை நிறுத்தும் அடையாளங்களை யான் முன்ன மே அறிந்திருக்கின்றேன்.” 

“ஆம், குமுதவல்லி, நீங்கள் முதன்முதல் ஒருவரையொரு வர் எதிர்ப்பட்டபோது நிகழ்ந்தவற்றையும், ஒரு வேங்கைப் புவியினிடம் அகப்பட்டு மீண்டதையும் நீலலோசனர் தமது இளமைக்கு ஏற்ற நாணத்தோடும், எனக்குவிரித்துக்கூறினார்’ என்று மனோகரர் அதற்கியைந்துரைத்தார். 

“அக்கொடிய விலங்கினாற் புண்படுத்தப்பட்ட மலைநாட் டார் இருவர்க்கு அவர் தாம் அன்பொடு செய்த உதவிகளையும் தமது பணப்பையிலிருந்து மிகுதியாய் எடுத்துக்கொடுத்த பரி சிலையுங் குறித்து அங்ஙனமே தங்கட்குத் தெரிவித்தனரா?’ என்று வினவிப், பின்னும், “ஆ! அவரது ஆண்மைக்குத்தக்க வாறே அவரது உள்ளன்பும் அதனை யடுத்துத் தோன்றி யது : அவரது அறிவின் றன்மையைப்பற்றியோ வென்றால், அஃது எவ்வளவு நன்றாய்ப் பண்படுத்தப்பட்டிருக்கின்றதென் பதனை அறியாமல் ஒருநாழிகை நேரங்கூட அவருடன் இருக்க முடியாது ” என்று பேசினாள் குமுதவல்லி. 

அங்ஙனம் பேசியவுடன் குமுதவல்லி நாணத்தால் முகம் மிகச் சிவக்கத் தன் தலையை வெட்கத்தோடுங் கீழே குனிந்து கொண்டாள்; ஏனென்றால், தன்மைத்துனன் செய்கையையும் இயற்கையையும் பற்றித் தான் உண்மையொடு கரவடமின்றி வியந்துரைத்த சொற்கள், தனது கன்னிமை நாணத்திற்குத் தகாத அத்துணைக்கிளர்ச்சிவாய்ந்த புகழுரைகளைத்தான் பகரும் படி செய்துவிட்டனவோ என்னும் நினைவு அவளுள்ளத்திற் சடுதியிற் றோன்றலாயிற்று. ஆனால், மனநிறைவுக்கு அடை யாளமான ஒரு புன்சிரிப்புத்தோன்றப்பெற்றவராய் மனோகரர் அமைதியாகக் கூறுவார்: “என் அன்பிற்குரிய இளையநேசரே. இப்போது தங்கள் மைத்துனரே தமதுவழக்கைத் தங்களிடம் எடுத்துப்பேசும்படி யான் விட்டுவிடுவதில் தீங்கொன்றும் இல்லையென்று நினைக்கின்றேன்.” 

“இல்லை – இதற்குள் அல்ல! இதற்குள் அல்ல!” என்று, அத்தகைய செய்தியில் மிகவும் விரைவதுபோற் காணப்படும். ஒரு நிகழ்ச்சியிற் பின் வாங்குவாளாய்க் குமுதவல்லி முணு முணுத்து, ‘அவர்தம் உயர்ந்ததன்மைகளுக்கு அறிகுறியானவற் றை யான் அறிந்துகொண்டேனாயினும், அவர் என்னைப்பற்றி ஒன்றுமே தெரியாதவராய் இருக்கின்றார் !” என்று கூறினாள். 

மனோகரர், தாம் தம் புதல்வியொடு பேசுவதுபோல் அவ் வளவு அன்பான அக்கரையைப் புலப்படுத்தும் வகையுடன் இன்னும் அமைதியான குரலிலேயே “இளவரசி, தங்கள் இளைய உறவினர் தங்களிடத்துள்ள பல நல்லியல்புகளையும் பாராட்டக்கூடிய அளவு தங்களைப் போதுமானபடி முன் மே கண்டறிந்திருக்கின்றார்: அவர் தங்களைக் காதலிக்கின்றார்!” என்று மொழிந்தார். 

தனக்குப் பாட்டனாய் இருக்கத்தக்க முதியோன் ஒருவன் வாயினின்று வந்தமையானுங், கூட இராத மற்றொருவனுக்குச் சார்பாகப் பேசப்பட்டமையானும் இவ்வறிவிப்பில்மனவருத்தத் தைத்தரத்தக்கதேனும், குமுதவல்லியின் தூய உள்ளத்தை அல் லது அவளது மெல்லிய உணர்வை அதிரச்செய்வதேனும் ஏதும் இல்லை.மேலும், மேற்கணவாய் மலைக்காட்டுகளின் இடையே யுள்ள தமது இன்ப உறையுளின்கண் வணங்கத்தக்க தன்பாட் டனாரான கோச்செங்கண்மன்னர் இறந்துபோந்தறுவாயில்நிலை தடுமாறும் அவரது வாயிற்பிறந்த அவர்தங் கடைசியான விருப் பத்தையே, இப்போது நீலகிரிநகரின்கண் அவ்வறையிலே அம் மலைய வணிகனாகிய தக்கோன் மறுபடியுந் தெரிவிக்கலானான் என்று அவளுக்கு அது காணப்பட்டது. ஆகவே, தனக்கே உரிய தன் உறவினனால் தான் காதலிக்கப்பட்டாளென்னும் அவ்வறிவிப்புக் குமுதவல்லியின் அமைந்தநெஞ்சத்தில் மெல்லறிமையுடன் சென்று ஆழ்ந்தது; நாணமானது தன்கன்னங்களிற் செந்நிறம் ஊட்ட அவள் மனோகரரை நோக்கி முணுமுணுப்பொடுகூறுவாள்: “எல்லாவற்றிலுந் தங்கள் சொற்படியே நடக் கக் கடவேன் – ஏனெனில், என் பாட்டனார் தங்கள் வாயிலாகப் பேசுவதுபோல் எனக்குத் தோன்றுகின்றது! ” 

“தங்கள் உறவினர் திரும்பவுஞ் சைவசமயத்திற்குவந்தபின் அல்லாமல், அவர் ஒரு சைவக்கன்னிப்பெண்ணின் செவிகளில் தங் காதலைச் சொல்லற்பாலார் அல்லர். குமுதவல்லி, இப்போது அம்மாமறைப்பொருளைப்பற்றி ஒரு சொற் சொல்லிவிடுகின் றேன். நாளை மாலையில் தங்கள் மைத்துனர் நீலலோசனன் என் னும் பௌத்தப் பெயரை மாற்றிச் சைவப்பெயராகிய இளங் கோச்செங்கண்ணன் என்பதனைப் புனைந்துகொள்வர். யான் முன்னமே அவ்வளவுமிகுதியாகச்சொல்லியிருப்பதும், அதனை யறிந்துகொள்ளுதற்கு நீங்கள் இருவீரும் ஏற்றுக்கொள்ளப்படு தல் வேண்டுமென நுங்கள் பாட்டனாரால் உருக்கத்தோடு எதிர் பார்க்கப்பட்டதுமான அம் மாமறைப்பொருள் அதன் பிறகு அவர்க்குத் தெரிவிக்கப்படலாம். ஆதலால், இருவீர்க்கும் ஒருங் கே அவ்வுண்மை முழுதும் எடுத்து விரித்து உரைக்கப்படும்; அதனை யடுத்துச் சிறிதுங் காலந்தாழாது தாங்களும் தங்கள் மைத்துனரும் அம்மேற் கணவாய் மலைகளுக்கு என்னொடு கூடப் பயணம் புறப்படுவீர்கள். தாங்கள் இன்றைக்குக் கண்டு கொண்ட தங்கள் உறவினரொடு கலந்துபேசும்படி தங்களை இப்போது சிறிதுநேரம் விட்டுவிட்டுப் போகின்றேன்.” என்று அம்முதியோன் விளம்பினான். 

இவளுக்குத் தெரிந்திருக்கக்கூடுமென்று அம்முதியோனால் இதுவரையில் நினைக்கப்படாவிடினும், மேற்கணவாய் மலைகளின் இடையேயுள்ள இந்நிலவுலகத்து இன்பஉறையுளைப் பற்றி இவள்தான் மிகுதியாக முன்னமே தெரிந்திருக்கும் வகைகளை விரித்துக்கூறி மனோகரரிடந் திகழ்கலையைக் குறித்துக் குமுதவல்லி பேச இருந்தாள். ஆனால், அவரோதமது இருக்கை யினின்றுஞ் சடுதியில் எழுந்து, பெற்றோர்க்குரிய உருக்கத்தோ டும் அவள்கையை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, அவ் வறையினின்றும் வேறோர் உள் அறைக்குச் செல்லும் வாயில் வழியே விரைந்து சென்றார். எனினும், அவர் அவ்வாயிற்கதவை மூடவில்லை.நிலலோசனன் உடனே அவ்வாயிலிற் றோன்றி னான். அவன் குமுதவல்லியின் எதிரேசென்று, “மைத்துனி. உங்களைப்போன்ற அத்துணை அழகிய ஓர் உறவினர் இருப்ப தை யான் தெரியப்பெற்ற இந்நாள் ஒரு நன்னாளேயாகும்!” என மொழிந்தான். 

குமுதவல்லி நாணத்தால்முகஞ்சிவந்தாள்; ஏனென்றால், தன் மைத்துனன் தன்னை முன்னமே காதலித்திருக்கின்றான் என்னும் அறிவிப்பைப் போற்றத்தக்க மனோகரர் வாயினின் றுங் கேட்டதனால் உண்டான நினைவு இன்னும் அவள் உள்ளத்திற் கலையாமல் இருந்தது. ஆனாலுங், கன்னிமைக்குரிய இறுமாப்பு அவளுக்கு உடனே உதவியாய் வந்து நின்றது; அவளுந் தக்கவாறு சிறிது மறுமொழி தந்தாள். 

“நாம் பேசவேண்டுவது மிகுதியாய் உள்ளது – குமுகவல்லி, நீங்களும், நானும்” என்று நீலலோசனன் சொல்லிக் கொண்டே அவளுந்தானுமாய் ஒரு சார்மணைக்கட்டிலின்மேல் அமர்ந்தார்கள்; “யான் காண்பதற்கு மிக விரும்பும் அந்த நாக நாட்டைப்பற்றி, யான் பிறந்த அவ்வூரைப்பற்றிச் சொல்ல வேண்டுவன வெல்லாம் நீங்கள் எனக்குச் சொல்லல்வேண்டும். ஏனெனிற், புத்தநாடுகளின் வட்டத்திற்குள், அவ்வெல்லைக்கு அப்பரற்பட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் சிறிதுந் தெரிவதில்லை.ஓ! குமுதவல்லி, நேற்று மாலையிற் புதுமை யான அவ்விடத்தில் நீங்கள் வந்திருந்ததன் கருத்து யாதென முதலில் யான் கேட்கின்றேன். அங்கே உங்களை யான் பார்த்தபோதுயான் அடைந்த வியப்பினைக்கருதிப்பாருங்கள்!” 

அங்ஙனமே தங்களைப் பார்த்தபோதுயானடைந்த வியப் பினையுங் கருதிப்பாருங்கள்!” என்று குமுதவல்லி விடை பகர்ந்து, நாம் ஒருவரோடொருவர் எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லிக்கொள்ள வேண்டும்- நானே முதலில் துவங்குகின்றேன். தற்செயலாய் யான் அந்த நங்கையை வழியிற் காணலானேன்.” 

“கொள்ளைத்தலைவன் மனைவி மீனாம்பாள்,” என்று நீலலோசனன் இடையே கூறுவான்; அவளே தான் என்று நேற்று நான் சொல்லக் கேட்டேன்; குமுதவல்லி, உங்கள் பார்வையினால் நீங்களும் அதனை அறியாதிருக்கவில்லை எனத் தெரிகின்றேன்.” 

“ஆம், கொள்ளைத்தலைவன் மனைவி மீனாம்பாளேதான்.” என்று அவ்வரசி விடை கூறுவாள்; “ஒரு பாம்பு தன் நச்சுப் பற்களை அவள் சதையில் ஊன்றிக் கடித்தபோது யானுங்கூட இருந்தேன்; அவள் என் கைகளிலேதான் உயிர் துறந்தாள். ஓர் அறிவோள்,மணப்பொருள்களும் மருந்துகளும் விற்றுத் திரிவோள் – ஒருத்தியும் அப்போது கூட இருந்தாள்.” 

“இறந்தோள் கிடந்த வீட்டிற்கு நேற்றுமாலையில் என்னை அழைத்துச் சென்றவளும் அவளேதான்.” என்று நீலலோசனன் கிளந்தான். 

“தாங்கள் கண்டபடியே, என்னை அவ்விடத்திற்கு அழைத் துச் சென்றவளும் அவளேதான். இம்மாளிகைக்குள் வந்து என்னைக்கண்டு தன் பின்னே வரும்படி மன்றாடிக்கேட்டாள். யானும் இசைந்தேன். மற்றைய தங்கட்குத்தெரியும்.” என்று நாகநாட்டாசி கூறினாள். 

“என்னுடைய செய்தியும் இதனைப் போன்றதேயாம் ஆனால், ஒன்று: நேற்றுப் பிற்பகல் யான் இந்நகரத்தைப் பார் வையிட்டுக்கொண்டிருக்கையில் அவள் முதன்முதல் என்னைத் தெருவின்கண் எதிர்ப்பட்டாள்; ஏதோ ஒரு சாக்குச்சொல்லி என்னைத் தன் பின்னே வரும்படி வேண்டினாள். என்னை ஒரு குறிப்பான வழியே அழைத்துச்சென்று ஒரு வீட்டைச்சுட்டிக் காட்டி மாலை ஐந்து நாழிகைக்கு மேல் ஏழரை நாழிகைக்குள் யான் அங்கே வரும்படி கடவுளரிய ஆணையிட்டுக் கூறினாள். இஃது ஏதொ ஒரு சூழ்ச்சியாயிருக்கிறதென அஞ்சி இதனை மறுத்திருப்பேன்; ஆனால், அவள் கூறிய சில உறுதிமொழிகள் என்னை இணங்கச்செய்தன.” என்று நீலலோசனன் கூறினான். 

‘அவ்விடத்திற்குச் செல்லும்பொருட்டுத் தாங்கள் அத் தெருவழியே செல்கையிற் றங்களைக் கண்டேன். அஞ்சத்தக்க வாறாய்ப் பளீரென வீசிய அம்மின்னல் ஒளி தங்கள் நினைவி விருக்கின்றதா? அஃது உங்கள் முகத்தை எனக்கு விளங்கக் காட்டியது. ஆனால், அவ்வறிவோள் உங்களுக்குச் சொல்லிய அவ் உறுதிமொழிகள்?” என்று குமுதவல்லி வினவினாள். 

“அவைகளை நீங்கள் அறியும்படி செய்தற்குக், குமுத வல்லி, யான் நீலகிரிக்கு வரும் வழியினிடையே உங்களிடம் வந்து சேரும்முள் எனக்கு நேர்ந்த இடரான நிகழ்ச்சிகளை நீலலோசனன் மறு விரித்துச் சொல்லல் வேண்டும்.” என்று நீலலோசனன் மறுமொழி புகன்றான். 

அதன்பின் அவன் தான் கொள்ளைக்காரரொடு சண்டை செய்ததனையுந், தெளிநீர்வேலியின்கண் தான் மீனாம்பாளைக் கண்டதனையுங், கோபுரத்தினுள் அவள் இரண்டகமாய்ச்செய்த நடவடிக்கைகளையும் எடுத்து விரித்துரைத்தான்; ஆனாலும், மீனாம்பாளின் கிளரொளி வனப்பானது ஒரு சிறிது நேரமேனுந் தனக்குக் கவர்ச்சியை விளைவித்ததென்று ஒருப்பட்டுக் கூறாமற் கருத்தாய் விட்டுவிட்டான். 

“யான் உங்கள் பக்கத்தில் வழிப்பயணம் வரும்போது, குமுதவல்வி,” என்று நீலலோசனன் தொடர்ந்துரைப்பரனாய்க் கொள்ளைத்தலைவனான நல்லானது பெயா பேச்சின் இடையே வந்தது. தங்கட்கு அச்சத்தை ஊட்டுமென்றஞ்சி அதனைப்பற்றிய குறிப்புகளைப் பேசாது விட்டேன்: யானும்,ஆண்மைமிக்க என் ஆட்களிருவரும் உங்கட்கு வழித்துணையாய்ச் செல்லல் வேண்டுமென்றும், ஏதேனும் இடர் நேருமாயின் யாங்கள் சாகும்வரையில் உங்களைப் பாதுகாத்தல் வேண்டுமென்ந்தீர்மானஞ் செய்தேன்: ஆனாலும், உங்கட்குப்பெருந்திகிலைமிகுதி யாய்த் தர வல்ல ஒரு சொல்லைக்கூறுவது பயனற்றதெனவும் நினைந்துணர்ந்தேன். அதுகிடக்க, யான் இடையே விட்டு விட்ட நிகழ்ச்சியை முடித்துச் சொல்லிவிடுகின்றேன். நேற்றுப் பிற்பகல் திகழ்கலை என்னும் அவ் அறிவோள் என்னைத்தெருவின்கட் கண்டுபிடித்து, மாலைப்பொழுதிற் றனிமையாயும்  மறைவாயும் என்னை வரும்படி வேண்டின வீட்டண்டை முதன் முதல் அழைத்துச்சென்ற போது எனக்குச் சில உறுதிமொழிகள் புகன்றாளென உங்கட்குச் சொல்லியிருக்கின்றேன். அவ் வுறுதிமொழிகள் பின்வருமாறு சொல்லப்பட்டன: ‘தெளிநீர் வேலியில் நீங்கள் எவளைக் கண்டீர்களோ, கோபுரத்தின்கண் எவள் செய்த சூதுகளை நீங்கள் தப்பி வந்தீர்களோ அவள் இப் போது உயிரோடில்லை. ஒருபாம்பின் நஞ்சு அவள் நரம்புகளில் எங்கும் ஓடி அவளை உயிர்துறக்கச்செய்தது. யான் தங்களுக்கு இப்போது சுட்டிக்காட்டும் அதோ இருக்கிற வீட்டினுள்ளே உயிரற்ற அவ்வுடம்பு கிடக்கின்றது. தான் உயிரோடிருந்த போது அவள் தங்களுக்குத் தீங்கிழைக்கப்பார்த்தமையால், அவ ளது பிணத்தண்டையில் இருந்து அவள்க்குற்றங்களைத்தாங்கள் மன்னித்துக்கூறினாலல்லாமல் அவளது ஆவிஅமை இது மலையநாட்டார் தமக்குள் உள்ள ஓர் அறிவற்ற நம்பிக்கை யாகத்தான் என் உள்ளத்திற் காணப்படுகின்றது; என்றாலும், அஃது உண்மையான கோட்பாடாயுமிருக்கலாம். யாரதன் மெய்மையைச் சொல்லக்கூடும் ? தாங்கள் எந்த வகையாலும் அருள் மிகுந்தவர்களாயிருத்தலால், மீனாம்பாள் மறுமையிற் பெறும் நன்மைக்கு அதுபயன்படுவதாயினும் இல்லையாயினும் வருத்தமற்ற இச்சிறிய உதவிச்செய்கை புரிதலைத் தாங்கள் மறுக்கமாட்டீர்களைன நம்புகின்றேன். பெருமான் நீலலோசன, யான் தங்கட்கு ஏதுந் தீங்கு செய்யேனென்று ஆணை யிட்டுச் சொல்லுகின்றேன் ! ஏனென்றால் தாங்கள் இன்னார் என்பது எனக்குத்தெரியு! தாங்கள், மேற்கரைநாட்டுமன்ன ரால் மருமகனாக உரிமை செய்துகொள்ளப்பட்டவர்கள் அல்ல ரோ!’ என்று அங்ஙனந்திகழ்கலை என்னை நோக்கிக் கூறினாள்; அதனால் நானுஞ் சென்றேன். குமுதவல்லி” என்று அவன் பின்னுஞ்சொல்லுவான், “போற்றத்தக்க நம் நண்பர் மனோகரர் தாஞ் சொல்லிக்கொண்டுவந்த வரலாற்றிற் குறிப்பிட்ட அறிவோள் இந்தத் திகழ்கலையே யாவள் என்பதில் ஐயமில்லை: அனாலும், அவளை யான் அறிவேன் என்னும் அறிவிப்பை அப் போது இடையிற்கூறித் தடை செய்ய விருப்பமின்றியிருந்தேன்; என்னையென்றால், அவர் அதனைப்பற்றி என்னைக் கேட்டிருப்பார்,யானும் நேற்றுமாலையில் நிகழ்ந்தவற்றையெல்லாம் விரித்துரைக்க வேண்டியவனா யிருந்திருப்பேன்; யானோ அவைகளைப் புனிதமாகவும், அப்போதங்கே வந்திராதமற்றவர் களெல்லாரையும்பற்றிய அவைமறைவாகவைக்கப்படவேண்டி யனவாகவும் எண்ணினேன்.” 

“தங்களுக்கு நேர்ந்த இடர்களைத்தாங்கள் சொல்லிக்கொண் வந்தவரலாற்றிலிருந்து, தாங்கள முறையிட்டுச்சொல்லவேண் டியனவும், நல்வினையற்ற மீனப்பாளை மன்னித்தற்குவாயிலா வனவும் ஆனபிழைகள் தங்கட்குச் செய்யப்பட்டனவென்பது நன்கு புலனாகின்றது. ஆனால், எனக்கு எதிரிடையாய் அவள் யாது தீங்குசெய்துகொண்டிருந்தாள் அல்லது செய்யச் சூழ்ந்து கொண்டிருந்தாள் என்பதுதான் என்னால் உன்னிப்பார்க்கக் கூடவில்லை.” என்று நாகநாட்டரசி குமுதவல்லி கூறினாள். 

இந்தநேரத்தில் மனோகரர் அவ்வறைக்குத் திரும்பிவந்தார். வந்தது, அவர்களுடைய கூட்டத்தைச் சிறப்பித்துக்கொண் டாடுதற்கும், அவர்களைப் பெருமைப்படுத்துதற்கும் அவர் திட் டம்பண்ணிவைத்த ஓர்உண்டாட்டுக்கு அவர்கள் வந்தருளும்படி தம் இளையநண்பரான அவ் இருவரையும் வேண்டிக்கொள்ள தற்பொருட்டேயாம்; ஆகவே, இனிப்பேசவேண்டிய ஒருசெய் திக்கு அவர்கள் பேசத்திரும்புந்தறுவாயில், விரும்பத்தக்க அம் மைத்துனர் இருவரின் பேச்சுத் திடீரென நின்றுபோயிற்று. 

அம்மலையவணிகர் மனைவியை இழந்தவர்: சிறிது காலத் திற்குமுன்றான் அவர்தம் மனைவியார் இறந்து போனார். ஆனா லும், அவர்கள் மணஞ்செய்து நீண்டகாலம் இன்புற்று ஒருங்கு வாழ்ந்ததன் பயனாக அவரது குடும்பந் திருவருளுதவியால் மிகப் பல்கியிருந்தது. அவர்தம் புதல்வரும் புதல்வியரு மெல்லாம் வளர்ந்து பெரியராயிருந்தார்கள்: அவர்கட்குத் தக்கவாறு மணஞ் செய்யப்பட்டிருந்தது. மிகுதியான செல்வமுங்கொடுக் கப்பட்டிருந்தது.உண்மையிலே மனோகரர் தங்குடும்பம் நீண்ட காலமாகச் செல்வ வளத்தாற் புகழ்பெற்றிருந்தது; தமக்குள் திருமுகப் பேரக்குவரவால் தம் வரணிக முயற்சிகளை மிகுந்த ஊதியம் பெறுதற்கேற்றபடி நடத்திக்கொள்ளும் வகையாக இம்முதியோன்றன் புதல்வர்கள் கிழக்கே முதன்மையானபல நகரங்களிலுந் தம் இருப்பிடங்களை நிலைப்படுத்தியிருந்தார்கள். 

மனோகரருங், குமுதவல்லியும்; நீலலோசனனும் அவ்வுண்டாட்டுக்கு வந்து அமர்ந்தரர்கள்; அங்கே வேறெவரும் வரவில்லை; ஏனெனின், முன்னமே சொல்லப்பட்ட ஏதுக்களால் தம் உயர்ந்த விருந்தினரைத் தம்மால் இயன்றளைவு மன்றவிடமாகவே வைத்திருப்பதற்குத் தக்கோனான அவ்வணிகர் ஆவலுற்றிருந்தார். 

நாகநாட்டரசி குமுதவல்லி இரண்டாம்பாகம் முற்றும். 

– குமுதவல்லி, நாகநாட்டரசி (முதல், இரண்டாம் பாகம்), முதற் பதிப்பு: 1911.
பல்லாவரம் பொதுநிலைக்கழக ஆசிரியர், மறைத்திருவாளர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகளால் இயற்றப்பட்டுப் பல்லாவரம் பொதுநிலைக்கழக நிலையத்திலுள்ள திருமுருகன் அச்சுக்கூடத்தில் (T.M.PRESS) அச்சிடப்பட்டது, ஜனவரி 1942.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *