நாகத்தின் பிராயச்சித்தம்




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

[‘மாணிக்கத்தை நீங்கள் கொன்றிருக்கக் கூடாது. அவன் அன்பு செய்யப் பிறந்தவன்; கிராமவாசிகளின் ஆண்மைக்கும் பால்போன்ற உள்ளத்துக்கும் உதாரண மகன். இதை நான் நாகத்திடம் சொன்னேன்; ஆம் என்று அது ஒப்புக்கொண்டது; பிராயசித்தமும் செய்து விட்டது. எனவே, இந்தக் கதை.”-என் நாகரத்தினக் கதையைப் பற்றிய இந்தக் குறிப்புடன், பின் வரும் கதையை நண்பர் ஈச்வரன் என்னிடம் கொடுத்தார். அவருக்கு நான் சொல்லும் பதில் இதுவே: “நான் எப்போதுமே சந்தேகப் பிரகிருதி. இது உங்களுக்குத் தெரியும். நாம் என்னிடம் பேசவில்லை; அது இயற்கை. நீங்கள் உணர்ச்சிக் கலைஞர். நாகம் உங்களை நம்பி விட்டது; பேசியிருக்கிறது. உண்மையைத்தான் பேசி யிருக்கும். இதற்கு உங்கள் கதையே சாட்சி”-தி.ஜ ர.]
மாணிக்கம் ஆழ்ந்து தூங்குவதுபோல் கிடந். தான். இளமை கொழிக்கும் அவன் கண்களினின்றும் உலகம் நிரந்தரமாய் மறைந்துவிட்டது. அவன் நல்ல வாலிபத்தில் சர்ப்பம் தீண்டிச் சாவான் என்று முந்தியே ஜாதகம் சொல்லியது உண்மையாகி விட்டது. மல்லிகைப் புதரிலே வசித்த மனைப் பாம்பு ஒரு தீங்கும் செய்யாது என்று வீட்டிலுள்ளோர் நம்பினார்கள். ஆனால், அதுவே அவனுக்கு யமனாய் முளைத்தது. வீட்டோடு வீடாக, குடும்பத்தோடு குடும்பமாக வாழ்ந்து வந்தது அந்தச் சர்ப்பம். என்றாலும், விதியின் விபரீதம் அப்படி இருந்தது. கடவுளின் பயங்கர லீலை. கள்ளங் கபடற்ற சாது மக்களையெல்லாம் மனம் அதிரச் செய்கிறது; நம்பிக்கையிழந்து தூற்றவும் செய்கிறது. என்றாலும், இறுதியில், அவர் பரம கருணாநிதி என்று அவர்கள் உணர்ந்துகொள்ளுவார்கள். விதி! வீதி என்பது ஒரு தெய்விக மருந்து; மக்களின் வேதனையைக் குறைத்து ஆறுதல் அளிக்கும் மருந்து. பண்படாத மனம் அடைந்த சோகம் அடங்கிய பின், அந்த ஞாபகத்தை வற்றாத ஊற்றான வேதாந்த சிந்தனையிலே பாது காத்து வைக்கிறான் மனிதன். இப்படிப் பாதுகாத்து வைத்த பொற்பாவைதான் விதி என்ப து.
மாணிக்கம் ஆழ்ந்து தூங்குபவனைப் போல் கிடந் தான். அவன் மார்பிலே ஊசி குத்தியது போல் ஒரு சிறு கறுப்புக் குறி இருந்தது. அவ்வளவுதான். அவன் உடல் நீலம் பாரிக்கவில்லை; அங்கங்கள் திருகிக் கொள்ளவில்லை. அவன் கிடந்த தோற்றம் அவன் இன்னும் ஒரு பத்து வயதுக்கு முந்திய இளமையை அடைந்தது போல் பொலிந்தது. எதனாலும் ஊறு படாத வைரம்போல் பிரகாசித்தது அவன் தேகம்.
சாமிச்சேந்தனின் வீட்டுக்கு இருபது மைல் தூரத்தில் வசித்தார்கள் மாணிக்கத்தின் பெற்றோர். அவர்களை அழைத்து வர, கிராமத்து வாலிபர் சிலர் ஓட்டமாய் ஓடினார்கள். பொழுதுவிடிந்து அவர்களும் வந்து சேர்ந்த பின்புதானே சவச் சடங்குகளை நடத்த வேண்டும்? அதற்காகக் காத்திருந்தார்கள், சாமிச் சேந்தனின் வீட்டில் உள்ளவர்கள்.
கோயிலிலே பண்டாரம் ஒரு மணி நேரமாய் ஓயாமல் சேமக்கலம் அடித்துக்கொண் டிருந்தான். அதன் சோக ரீங்காரத்தோடு கலந்து ஒலித்தது தம்பட்டச் சத்தம். இடையிடையே அலறின இரட்டைக் கொம்புகள். இந்தச் சத்தமெல்லாம் இரவின் இருளைக் குடிப்பதுபோல விட்டு விட்டு முழங்கின. அத்தனையும் ஒரே சோகமயமா யிருந்தது. ஆனாலும், நடுநடுவே இந்தச் சத்தம் நின்ற அமைதி யான இடைவெளி நேரங்கள்தான் மகா சோகமாய், பயங்கரமாக இருந்தன.
வாலிபனின் சவத்தை ஒரு வெள்ளைத் துணி மூடி யிருந்தது. அவனுடைய தலைமாட்டில் ஒரு பித்தளை விளக்கு எரிந்துகொண் டிருந்தது. அதன் ஒளியில், அறை முழுவதும் மங்கலாகப் பிரகாசித்துக்கொண் டிருந்தது. இறவாணத்தின் வழியாய்ச் சற்று நரத்துக்கு ஒரு தரம் அறைக்குள் புகுந்து தயங்கிய காற்று, சுவர்களிலே பல நிழற் சித்திரங்களை விரித்தது; பின்பு, அலைந்து நடுங்கும் தீப ஒளியின் ஆட்டத்துக்கேற்றபடி, அதே காற்று இந்தச் சித்திரங்கள், அந்த அமைதியான சரீரத்தைச் சுற்றிலும் திரட்டிச் சுருட்டி வெளியேயும் தள்ளிவிட்டது.
கதவு திறந்திருந்தது. சடலத்தைக் காத்துக் கொண்டு அந்தக் கதவருகே உட்கார்ந்திருந்தாள் ஒரு கூனற்கிழவி. சற்று நேரத்துக்கு ஒரு தடவை அவள் எழுந்து அந்த விளக்குக்கு எண்ணெய் ஊற்றி, திரியைத் தூண்டிவிட்டுக்கொண் டிருந்தாள். கிரா மத்திலேயே பெரிய கிழவி அவள் தான். சாமிச்சேந்தன் சின்னஞ் சிறு குழந்தையாக இருந்தது முதல் அவனை அவளுக்குத் தெரியும். அவள் அவனுக்குத் தாய் வழியில் எட்டின உறவினள். சேந்தனை அவன் தாய் பிரசவித்தபோது, அவள் உதவி யிருக்கிறாள். சேந்தனின் தாய் மாண்டபோது ஒப்பாரி வைத்திருக் கிறாள். சேந்தனின் கல்யாணத்தைப் பார்த்திருக்கிறாள்.
சேந்தனின் மகள் பிறந்தபோது, அந்தப் பிரசவத்தி லும் உதவியிருக்கிறாள். சேந்தனின் சம்சாரம் மாண்ட போதும் ஒப்பாரி வைத்திருக்கிறாள். உடைந்து கரகரத்த தன் பழங் குரலைப் பாய்ச்சி உரக்க நீட்டி முழக்கி இன்றும் கிழவி ஒப்பாரி வைத்துவிட்டாள். ஆனால் அவளுடைய கண்களில்மட்டும் ஒரு பொட்டுக் கண்ணீர்கூட வரவில்லை. ஒப்பாரிப் பாட்டுகளுக்குக் கிழவி ஒரு பொக்கிஷம் என்பது ஊரறிந்த -நாடறிந்த விஷயம்.
சேந்தனுக்கு உள்ளத்தினுள்ளே அந்தக் கிழவி யிடம் மகா வெறுப்பு.
அவள் ஒரு பெரிய வாயரட்டை. வம்புக்காரி என்று அவனுக்குத் தெரியும். என்றாலும், தன் மனைவி இறந்த பிள்பு வீட்டிலே தன் பெண்ணைக் கவனித்துக் கொள்ள யாராவது வயதான மனுஷி வேண்டாமா? அதனால் அவள் வம்பைப் பொறுத்துக்கொண்டான்.
கிழவிக்கு ஒரு குடிசை இருந்தது: ஒரே ஒரு மகனும் இருந்தான். அவன் எங்கேயோ சுற்றித் திரிந்துகொண் டிருந்தான். அந்த நாடோடி என்றாவது அத்தி பூத்தாற்போல் கிழவியின் குடிசைக்கு வருவான். வந்து, “சனியனே! இன்னும் சாகவில்லையா?” என்று இவளைக் கேட்பான்; போய்விடுவான்.
கிழவியின் குடிசைக் கூரைக்கு மேலே புகை கிளம்பிய நாளைக் கண்டவரில்லை. அவள் அங்கே அடுப்பு மூட்டி யறியாள். குடிசையில் அவள் சோறு சமைக்கத் தேவையே இல்லை. எப்போது பார்த் தாலும் அவளுக்குச் சேந்தன் வீட்டிலேதான் வாசம். ஆனால், உளுந்தாயி வளர்ந்துவிட்டாள். அதற்குப் பிறகு. கிழவியின் சேவை அங்கே தேவையில்லாமற் போயிற்று.கிழவியின் தூற்றல் வலுத்தது. அவள் உறுமி ஊளையிட்டுக்கொண்டு வெளியேறி விட்டாள். “இந்தக் குடும்பத்துக்கு என் ரத்தத்தைக் கொடுத்து உழைத்தேன். அதற்கு இதுதான் கூலியா? இந்தச் சின்னக்குட்டி உளுந்தாயிதான் என்ன பவிசு கொண்டாடுகிறது! அப்பனோ ஒரு மடையன். பெண் ணுக்குச் செல்லங் கொடுப்பதற்கும் ஓர் அளவில்லையா?’ என்றெல்லாம் கிழவி தூற்றினாள். சாமிச்சேந்தனின் காதிலே இதெல்லாம் விழுந்தது. அவன் லட்சியம் செய்யவில்லை. என்னதான் நன்மை செய்தாலும் சரி; மனிதர்கள் சுலபத்தில் நன்றி காட்டுவதில்லை. இது சேந்தனுக்கு மிக நன்றாய்த் தெரியும்.
கிழவி என்ன என்னவோ குருட்டு யோசனைகள் செய்தபடி, மாணிக்கத்தின் சடலத்தைக் காத்துக் கொண்டிருந்தாள். சுவரிலே அலைந்து ஆடிக்கொண் டிருக்கும் நிழல்களோடு அவள் நிழலும் கூடி ஆடிக் கொண்டிருந்தது. மாலையில் நிகழ்ந்த துர்ப்பாக்கிய சம்பவங்களைப்பற்றிக் கிழவி பிரமாதமாய்க் கவலைப் படவில்லை. தன் மகனைப்பற்றியே அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள். என்னதான் ‘அழுகற் பூசணிக்கா’ யாக இருந்தாலும், தான் பெற்ற பிள்ளையைக் கைவிட முடியுமா? கூனிக் கோணிய அவளது கிழ இருதயம் மகனிடம் வாஞ்சை நிறைந்திருந்தது. புளிச்சை பொங்கிய அவள் கண்களில் ஒரு கதம்ப சித்திரம் எழுந்தது – உளுந்தாயியும் தன் மகனும் மணையிலே ஜோடியாய் அமர்ந்திருக்கும் திருமணச் சித்திரம். இந்தத் திருமண யோசனையை ஒரு முறை துணிந்து சாமிச்சேந்தனிடமே அவள் சொல்லிவிட்டாள். அவன் சொன்ன பதில் கிழவியை ஒரேயடியாய் வாயடைத்து விட்டது. “தொட்டிலிலேயே அவளுக்கு வரன் நிச்சயம் ஆகிவிட்டது. கண்மணி உளுந்தியை மாலை யிடப் பிறந்திருப்பவன் மாணிக்கமாக்கும்” என்று அவன் சொல்லி விட்டான். பல்லுப்போன அந்தக் கிழவி கோபங் கொண்டாள்; பித்திபோல் சிரித்தாள்; உ-ளு-ந்-த-ா-யி, உ -ஞ-ந்-தி, உ – ளு’ என்று அழகு காட்டுவதுபோல் வெட்டி வெட்டித் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்.
மாசற்ற மாணிக்கம் தன் மாமனைப் பார்க்க வந்தான் ஒரு நாள். ஆனந்தமான வரவேற்பும் சுவை யான விருந்தும் காத்திருந்தன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, முன்னோர் போன வழியே அவன் போய் விட்டான். சர்ப்பம் அவன் ஜோலிக்கு வராதபோது, சர்ப்பத்தை அவன் போய்ச் சீண்டியிருக்கக்கூடாது. தன் சாகச ஆசையை அவன் அடக்கிக் கொண்டிருக்க வேண்டும். மாணிக்கம்! ஜோதி வீசும் பழுதற்ற மாணிக்கம் அல்லவா அவன்?
திரியிலே சுடர் தட்டியது. விளக்கு அணைந்தது. கிழவியின் சிந்தனை குலைந்தது. அறையிலே இருள் சூழ்ந்தது. கண்ணுக்குத் தெரியாத விதியின் கரங்கள் தனக்கு மாமியின் பீடத்தை இருளிலே தயாரித்துக் கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அந்தக் கரங்களிலே யிருந்து அவள் மகன் சொக்கனின் பாக்கியநாதன் நம்பிக்கையோடு எட்டிப் பார்ப்பது போலவும் அவளுக்குத் தோன்றியது. அறையின் மூ லையிலே அரசிலைபோல் அமைந்த ஒரு மாக்கல் விளக்கு மங்கலாய் ஒளி செய்துகொண் டிருந்தது. கிழவி தட்டித் தடவி அதனிடம் சென்று அதை எடுத் துக்கொண்டு வந்து பித்தளை விளக்கை மீண்டும் ஏற்றி, அதில் எண்ணெயும் வார்த்தாள். மறுபடியும் கதவருகே போய் முன்போல் உட்கார்ந்தாள். சிறிதும் பற்றற்றவளாக வெறுப்போடு சவத்தை உற்றுப் பார்த்தாள்.
பொழுது விடிந்ததும் இந்தச் சவத்தைக் கழுவிக் குளிப்பாட்டுவார்கள். மாணிக்கத்தின் தாய் இருந் தால், அவள் ஆறாய்க் கண்ணீர் பெருக்குவாள்; விரல் பதிந்து தழும்பேற மாரடித்துக் கொள்ளுவாள்; மண் ணிலே விழுந்து புரளுவாள்; தொண்டை வறண்டு கம்மக் கதறியழுவாள். ‘இத்தனையெல்லாம் செய்தாலும், என்னைப்போல் வக்கணையாய் ஒப்பாரி வைக்க அவளால் முடியுமா?’ என்று எண்ணினாள் கிழவி. சவத்தை ஒரு முறை குனிந்து பார்த்தாள். அதன் முகத்தை உள்ளங்கையால் தடவிப் பார்த்தாள். அடுத்த கணத்திலே திடுக்கிட்டு நடுங்கிக் கையைப் பின்னே இழுத்துக்கொண்டாள். சவத்தின் கன்னங் கள் கதகதப்பாயிருந்தன. மூக்குங் கூடத்தான் அப்படி இருந்தது. கண்ணிமைகள் விதிர்த்தன. இதென்ன வெறும் பிரமையா? அல்லது திறந்த கதவின் வழியே புகுந்து விளக்குச் சுடரையும் சுவர் நிழல்களையும் அலைத்த காற்றின் வேலைதானோ? பொல் லாத சர்ப்பம் தீண்டிச் சுமார் ஆறு மணி நேரம் கழிந்து விட்டது. இன்னமும் மாணிக்கத்தின் உடம் பிலே கதகதப்பு மாறவில்லை; அது மிருதுவாகவே இருக்கிறது. அவன் ரத்தத்திலே ஏதாவது அபூர்வ க்தி இருந்திருக்குமோ? விஷத்தின் வேகத்தை அது முறித்திருக்குமோ? அவன் ஆழ்ந்த மயக்கத்திலேதான் விழுந்து கிடக்கிறானோ? அது தெளிந்து மீண்டும் விழித்தெழுந்து விடுவானோ? என்ன அதிசயம்! என்ன அதிசயம்! கிழவி மறுபடியும் சவத்தின் முகத்தைக் கூர்மையாய்ப் பார்த்தாள். தன் பிரமையைப்பற்றித் தானே புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டாள். அவன் சந்தேகமின்றிச் செத்துப் போனான். செத்தும் சில பேரின் உடம்பு சீக்கிரத்திலே விறைக்காது. மாணிக்கமோ உரம்படைத்த காளை அல்லவா?
இரவிலே இரண்டாம் ஜாமம் முடிந்தது. வான விதானத்தில் தாரகைகள் வேறு கோலம் போட்டன. வீட்டுக்கு வெளியே பெரிய திண்ணையில் சேந்தன் தூங்கிக்கொண் டிருந்தான். மரண தண்டனை அடைந்தவனுக்கு உலகமே பாழடைந்து இருளாய்த் தோன்றும். சித்தமும் அறிவும் சூன்யமாய்ப் போகும்; ஏதுமே புரியாது. இப்படி மரணதண்டனை அடைந்த வனைப்போல்தான் சேந்தனும் அடியோடு சோர்ந்து கிடந்தான். இடி விழுந்தது போல் அவனுக்கு இந்தத் துயரம் நேர்ந்தது. தன் தங்கையையும் அவள் புருஷனையும் எந்த முகம் கொண்டு இவன் சந்திப் பான்? உற்றாரும் உறவினரும் சூழக் கல்யாணத்துக்கு வரவேண்டிய அவர்கள் இப்போது அவன் இழவுக்கு வருகிறார்கள். மகளை எத்தனையோ சமாதானப்படுத் தினாலும், தன்னைத்தானே சமாதானப் படுத்திகொள் ளச் சேந்தனால் துளியும் முடியவில்லையே! நேர்ந்திருக் கும் துன்பம் மகா கொடுமையானது.
துக்க ஏக்கத்தில், உளுந்தாயி தன்னையே நொந்து கொண்டாள். மல்லிகைப் புதரிடம் போன மாணிக்கத்துக்கு அவள் துணைதான் சென்றாளா நாகமாணிக்கம் வேண்டுமென்று கேட்டு, யமனிட மன்றோ அவனை அவள் அனுப்பிவிட்டாள்! அவள் கேலிக்காகக் கேட்டதை உண்மை என்று நம்பி, அவன் கிளம்பி விட்டான். அவள்தான் மகாபாவி; அவளையன்றோ அந்தச் சர்ப்பம் தீண்டியிருக்க வேண் டும்? உளுந்தாயி இப்படியெல்லாம் கதறினாள்; தன்னைத் தானே திட்டிக் கொண்டாள்; பித்துப் பிடித்ததுபோல் ஆனாள். கன்னிப் பெண்ணுக்கு இருக்கவேண்டிய நாணத்தை யெல்லாம் காற்றிலே தூற்றிவிட்டாள். அவனைக் கட்டியணைந்தாள்; முத்த மிட்டாள்; கண்ணீர் சொரிந்தாள். அவனை மணம் புரிய நிச்சயம் செய்திருந்த பெண் அவள். இது ஊருக்கெல்லாம் தெரியும். அது போதும்; வேறு என்ன வேண்டும்! தன் ஆசை பாழானால் என்ன? வருங்காலம் துக்க மயமானால்தான் என்ன? மாணிக் கத்தின் உடல் அருகே அவள் உட்கார்ந்தாள்: மெல்லப் பேசினாள். அவனை அன்போடு அழைத்தாள்; ஆழ்ந்து தூங்கும் குழந்தையை எழுப்புவது போல் கெஞ்சி எழுப்பினாள். ஆனால், அவன் போய்விட்டான்; ஒரு நாளும் அவளிடம் திரும்பி வராத இடத்துக்கு அவன் போய்விட்டான்!
இந்த வேதனையால் அவள் ஒடிந்து விழுந்தாள். என்றாலும், மாணிக்கத்தை விட்டு அப்பால் நகர மறுத்து விட்டாள். அவன் மார்பிலே தன் தலையைப் புதைத்துக் கொண்டாள். திராணியற்றுச் சோர்ந்த அவள் கண் இமைகள் மூடிக் கொண்டன. அவளைச் சேந்தன் அப்படியே தன் கைகளால் ஏந்தித் தூக்கிக் கொண்டு போய் மெல்லச் சின்னத் திண்ணைக் கட்டிலிலே கிடத்தினான். இதில்தானே எப்போதும் இரவில் அவள் தூங்குவது வழக்கம்?
தூக்கத்தில் அவள் புரண்டு படுத்தபடி என்னவோ முனகினாள்.
இதோ சில மணிநேரத்துக்கு முன்புதானே நடந்தது? அது கேவலம் எப்படி ஞாபகத்தில் போய் முடங்கும்?
பிரத்தியட்சமாய் அந்தக் காட்சி இன்னமும் நிகழ்ந்துகொண் டிருப்பது போலவே அவளுக்குத் தோன்றியது.
”உளுந்து உளுந்தி” என்று கொஞ்சும் குரல் ஒன்று அவள் காதிலே கிசுகிசுத்தது. வேதனையால் ஓலமிடும் கீத இனிமை அந்தக் குரலிலே தோய்ந் திருந்தது.
அந்தி மயங்கியது. அவள் சமையல்கட்டிலே இருக்கிறாள்.
“உளுந்தி, மல்லிகை அரும்பு உன்னைக் கூப்பிடுது; வா.”
அடுப்பிலே கொதித்துக்கொண் டிருந்த கஞ்சியை அகப்பையால் துழாவிக்கொண்டு அவள் நின்றாள். அவன் குரல் காதில் விழாததுபோல் பாசாங்கு செய்து பேசாதிருந்தாள். திரும்பத் திரும்ப அந்த அன்புக் குரலைக் கேட்பதிலே அவளுக்கு ஆசை. அவள் இதழ்க்கடையிலே புன்னகை அரும்பியது.
“அத்தனையையும் நானே பறிக்கணும் என்றிருக்கியா?”
அவள் சட்டென்று அவன் முகத்துக்கு நேரே திரும்பி, “ஆமாம்: பச்சை அரும்பு அத்தனையையும் நீ பறிக்கணும் என்றிருக்கேன்” என்று சொல்லிக் குறும்புச் சிரிப்புச் சிரித்தாள்.
“அரும்பு என்று கட்டினால் பூ மலருது. மலருது எந்த அரும்பாய் இருந்தால் என்ன?”
”அது நெசந்தான் .ஆனா அதெ நீ மலர விட்டால் தானே மலரும்? நீதான் பச்சைக் குளந்தை மென்னி யைத் திருகறாப்பிலே பச்சை மாறாத அரும்பையே பறிச்சிடுறையே!”
“இதோ இந்த மாதிரியா?” என்று சொல்லிய அவன், கள்ளத்தனமாய் அவள் கன்னத்தைக் கிள்ளினான்.
“இந்தா, இந்தச் சரசமெல்லாம் நம்ம கிட்ட வெச்சுக்காதே!” என்று அவள் சீறிவிட்டு, புதரைச் சுற்றி ஓடத் தொடங்கினாள்.
அவன் அவளைத் துரத்தித் தன் கைகளிலே பிடித் துக் கொண்டான்.
அவள் இருதயம் விம்மியது. உள்ளத்தே வெடித் தெழுந்த ஜோதியொன்று முகமெல்லாம் சூழ்ந்த ஒரு புன்சிரிப்பாய்ப் படர்ந்தது.
திகிலடைந்ததுபோல் திடீரென்று, “இதோ பார்!” என்று அவன் கூறினான்.
“என்ன?” என்று அவள் கவலையோடு கேட்டாள்.
“அரும்பெல்லாம் போச்சே!”
“எங்கே போச்சு?”
“உன் வாயிலே!”
இருவரும் சிரித்தார்கள்.
“மீதிக் கதையைச் சொல்லு; சுருக்க. அப்பா வரத்துக்குள்ளே சொல்லு. பிறகு அந்தப் பொண்ணு என்ன ஆச்சு? சர்ப்பம் என்ன ஆச்சு? அது அவளுக்கு நாகரத்தினத்தைப் போட்டுதா?” என்று அவள் மூச்சு விடாமல் கேட்டாள்.
“பொண்ணு… நாகரத்தினம்… சர்ப்பம்…” என்று அவன் இழுத்தான்.
அவன் குரல் மாறுபட்டதைக் கண்டு, உளுந்தி திடுக்கிட்டாள்.
“மாணிக்கம்! மாணிக்கம்!” என்று அவள் கத் தினாள். உடம்பெல்லாம் வியர்வையிலே முழுகிய வளாய் விழித்தெழுந்தாள். எங்கேயோ தூரத்தில் எழுந்த எதிரொலிபோல வார்த்தைகள் அவள் வாய்க் குள்ளே மடிந்தன. அவள் உள்ளத்தினுள்ளே ஏதோ ஒரு சக்தி பொங்கி எழுந்தது. அந்த வேகம் தாங் காமல் சுற்று முற்றும் பார்த்தாள். அமானுஷ்யமான என்னவோ ஒரு மாயப்பாசம் தன்னை வந்து மயக்கிப் பிடித்திழுப்பதுபோல் தோன்றியது. அவள் பயத் தால் வெளிறிப்போய் நடுங்கினாள். வேறொன்றும் அல்ல; அந்த மல்லிகைப் புதர்தான். ஆனால், அவள் நாள்தோறும் அன்பு கனியப் பார்ப்பாளே, அப்படி யில்லை இப்போது அது.
பிறைச்சந்திரன் வானத்திலே ஒளி வீசிக்கொண் டிருந்தது. புதர் ஒரே அக்கினி ஜ்வாலைபோல் பிரகா சித்தது. வானத்திலிருந்து வரும் நிலவொளி அல்ல இது. இந்த அற்புத ஜ்வாலையின் கர்த்தா, புதர் அருகேயிருந்த வேறு ஒரு ஜீவனே. அது அந்தச் சர்ப்பமேதான்.
ஒருபுறம் பயம் சூழ,மறுபுறம் கவர்ச்சி உந்த உளுந்தி பார்த்தாள். அந்திம நேர வேதனையிலே சர்ப்பத்தை மாணிக்கம் கொல்லத் தவறிவிட்டானோ என்னவோ என்று திடீரென்று அவளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. தட்சணமே அவள் பயம் குறைந்தது. ஆனால், விஷம் தன் ரத்தத்தைச் சுட்டெரித்தபோது சர்ப்பத்தைத் தன் கைத் தடியால் ஒரே போடாய்ப் போட்டு தீர்த்துவிட்டதாக அவன் நிச்சயமாய்ச் சொன்னானே. என்றாலும் அந்த இருளி லும் குழப்பத்திலும் அதை யாரும் சோதித்துப் பார்க்கவல்லை. அல்லது அது உண்மையிலே செத்துப் போயிருக்க, ஒருவேளை அதன் ஆஇந்த உலகத்தை விட்டுப் போகாமல் இப்படிச் சுற்றிக்கொண் டிருக் கிறதோ? பாம்புகளுக்கும் ஆவி இருக்கலாம்; இல்லை யென்று யார் கண்டார்?
ஆவியோ, உண்மைச் சர்ட்பந்தானோ? எப்படி யானாலும், அவளை அது மனோவசியம் செய்து விட்டது. அதன் ஜோதி அவள் கண்ணைப் பறித்தது. சுருண்டு படுத்துக்கொண் டிருந்த சர்ப்பம் கள்ளி யெழுந்து தலையெடுத்து மெல்ல மெல்ல நீண்டு நிமிர்ந்து, சரமாரியாய்ப் பலவர்ண மத்தாப்புப்போல் ஒளி வீசிக்கொண்டே, வால் நுனியைப் பூமியிலே பதித்து நின்று படம் விரித்தாடியது. பிளவுபட்ட அதன் நாக்கு வெளியே நீண்டது. உ-ஸ்-ஸ்-ஸ் என்று சீறிய பெருமூச்சு அதன் வாயினின்று வீசியது. அப்போது திடீரென்று ஓர் அதிசயம் நிகழ்ந்தது. மல்லிகைப் புதர் தன் இருதயத்திலே ஒளித்து வைத் திருந்த ஒரு சூறாவளியை வெளி விட்டதுபோல், ஒரு குலுங்கு குலுங்கியது. அதன் அரும்புகளும் மலர்களும் சந்தடியற்ற மலர்மாரி போல் சர்ப்பத்தின் படத்திலே சொரிந்தன. சர்ப்பம் தன் மணி மகுடத்திலிருந்து ஒரு மாணிக்கத்தை அந்த வீட்டை நோக்கி மகாவேக மாய் வீசி உமிழ்ந்தது. உளுந்தாயியின் கண்ணுக்கு முன்னே மீண்டும் சர்ப்பம் அந்தப் புதரிலே போய் முடங்கியது. அவள் இதையெல்லாம் கண்டாள். ஓடிப்போய்த் தகப்பனைத் தூக்கத்திலிருந்து எழுப்ப எண்ணினாள். ஆனால் அவள் அசையவில்லை; கத்தவும் இல்லை. கட்டிலிலேயே கிடந்தாள். செத்துப் பிறந்த குழந்தைபோல், அவளுடைய எண்ணம் அவள் மனத் திலேயே மடிந்தது. கிலிகொண்ட மனத்திலே மின்னல்போல் பாய்ந்த எண்ணந்தானே அது? பனிக் கட்டி தீண்டியதுபோல் உடம்பு விதிர்த்தது; கிலி அடங்கியது.
பின்பு, அவள் மிகவும் அதிசயமான மற்றும் சில நிகழ்ச்சிகளைக் கண்டாள். இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு, மதுரகீதம் ஒன்று அவள் காதிலே விழுந்தது. இப்படிப்பட்ட கீதத்தை எத்தனையோ முறை அவள் கேட்டிருக்கிறாள். அருவியில் பாயும் நீர், பருக்கை மணிகளின்மீது சலசலத்துச் சுழல் எழுப்பிக் குமிழியிட்டு மடிவது போன்ற மதுரகீதம். அதை அவள் உற்று உற்றுக் கேட்டாள். அவள் கண்கள் அந்தப் புதரிலே ஒருமுனைப்பட்டுப் பதிந்தன. மகுடியிலே மந்திர கீதம் எழுப்பிய பிடாரன்தான் அங்கே நிற்கிறானோ என்று அவள் கவனித்தாள். பிடாரனின் உருவத்தை அங்கே காணவில்லை. ஆனால், அவளைப் போலவே சர்ப்பமும் அந்தக் கீதத்தைக் கேட்டிருக்கிறது. ஏனென்றால், அது துள்ளி எழுந்து. நாகப் பிரதிஷ்டைச் சிற்பம்போல் நிமிர்ந்து நின்றது. அடுத்த கணத்தில் அது உயிர்பெற்று நர்த்தன மாடியது; முன்னும் பினனும் ஆடிச் சுழன்றது. தழுதழுத்து கார்வையான கமகம் பேசியபோது, சர்ப்பத்தின் உடலெல்லாம் புல்லரித்தது. ஸ்வரங்கள் மாறி, மணி உதிர்வதுபோல் அடுக்கடுக்காய் உதிர்ந்து, ஆரோகணித்து உச்சஸ்தாயியை எட்டியபோது, சர்ப்பம் உப்பிச் சுழன்று கரணங்கள் போட்டது; சீறிச் சீறி, வாயினின்றும் எண்ணற்ற சொர்ணப் பொறிகளை உதிர்த்தது. பின்பு திடீரென்று மின்னலைப் போல் பாய்ந்து, புதரை வலம் வந்தது; படமெடுத்துத் தரையில ஒரு முறை, இரு முறை, மும்முறையும் கொத்தி ஆணையிட்டது. உடனே, புதரில் ஓர் அக்கினி ஜ்வாலை கிளம்பியது. உளுந்தி ஆச்சரியமும் பயமும் நிறைந்தவளாய் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்த்துக் கொண்டேயிருக்கும்போது, சில நிமிஷ நேரத்தில் புதர் பஸ்மமாய் எரிந்து தரை மட்டமாகி விட்டது. கீதமும் நின்றது.
காலை நேரத்தில் உளுந்தி ஆழ்ந்து தூங்கினாள்.
யாரோ அவள் தோளத் தொட்டுக் குலுக்கிக் கொஞ்சும் குரலில் அழைத்தார்கள். அவள் திடுக்கிட்டு எழுந்தாள். அவளை எழுப்பியவன் அவள் தகப்பன் தான்.
”உளுந்தி, என் கண்ணே, மாணிக்கம் உன்னை அழைக்கிறான்.”
“யாரு?” என்று பேராச்சரியத்துடன் கேட்டாள் உளுந்தி, அவள் தலை சுழன்றது; மூச்சுத் திணறியது.
“நெஞ்சைத் திடப்படுத்திக்கொள். மகளே!’ என்று சொல்லிய சேந்தன், அவளைத் தன் புஜத்திலே தூக்கி அணைத்துக்கொண்டான். கலவரம் அடைந்த வளாய், தகப்பனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் உளுந்தி.
“மாணிக்கந்தான்; உன் மாணிக்கமேதான். அவன் நமக்குச் சாமி கொடுத்த வரம். பாம்பு அவனைத் தீண்டவில்லை; லேசாய்க் கீறியிருக்கிறது. அவன் ரத்தத்திலே விஷம் ஏறவில்லை. அதிர்ச்சியால் அவன் பெரு மயக்கம் போட்டு விழுந்திருக்கிறான். கொஞ்சம் பலவீனமாகி இருக்கிறான்; அவ்வளவுதான்.”
உளுந்திக்குத் தன் காதுளையே நம்ப முடியவில்லை. உதய சூரியனின் செங்கதிர்களும் காலையிளம் புதுமை யும் குருவிகளின் கீதமும் தன் ஆத்மாவிலிருந்தே வெளியில் பரந்து பரிணமித்ததுபோல், அவள் குதூகலம் கொண்டாள். மாணிக்கம் கிடந்த அறைக்குள்ளே பாய்ந்தோடினாள்.
***
மாணிக்கமும் உளுந்தாயியும் மணம் புரிந்து கணவனும் மனைவியும் ஆனார்கள்.
இதைவிட அழகான, ஆனந்தமான திருமணத்தையோ, தம்பதிகளையோ கிராமத்திலே அதற்கு முன் யாரும் கண்டதில்லை.
மணவரையில் தானும் தன் கணவனும் தனியே இருக்கும்போது, உளுந்தாயி அன்றிரவு தான் கண்ட அற்புதங்களை அவனிடம் சொன்னாள். அப்போது மாணிக்கம் அதை நம்பவில்லை. தான் கொன்ற சர்ப்பத்தின் அடையாளத்தைப் புதர் அருகே சென்று தேடினான். அந்த அடையாளம் ஒன்றும் அங்கே கிடைக்கவில்லை. ஆனால், ஒரு நாகரத்தினமே கிடந்தது. அதைக் கண்டபின்பே உளுந்தி சொன்ன அற்புதங் களை அவன் நம்பினான். சர்ப்பம் மறைந்துவிட்டது. எங்கே போயிற்றோ, யார் அறிவார்?
அந்த நாகரத்தினம் சேந்தன் குடும்பத்தின் ரகசிய உடைமையாகும். மாண்ட மாணிக்கத்தின் உடம்பி லிருந்து விஷத்தை நாகம் தானாகவே திருப்பி எடுத்துக் கொண்டு, அவனைப் பிழைப்பு மூட்டிவிட்டது என்றே உளுந்தி நிச்சயமாய் நம்புகிறாள்.
சர்ப்பக்குறி போட்ட சின்னஞ்சிறு பருக்கை மணி ஒன்று மல்லிகைப் புதரிலுள்ள பொந்தின் வாயருகே இன்றும் கிடக்கிறது.
ஒவ்வொரு நாள் காலையிலும் பக்தி சிரத்தையாய் உள்ளங் குழைந்து ஒரு குவளை பாலை உளுந்தாயி அந்தப் பருக்கை மணிமீது ஊற்றி வருகிறாள்.
வருஷம் முழுவதும் இந்த மல்லிகைப் புதர் பூத்துச் சொரிகிறது. உளுந்தாயியின் மல்லிகைச் செடி பூத்துச் சொரியும் பூவைப் போல வேறெந் மல்லிகைப் பூவும் இவ்வளவு அழகும் இவ்வளவு மணமும் வாய்ந்திருக்கவில்லை என்று கிராமத்தா. சொல்கிறார்கள். இந்த மல்லிகைப் பூவின் அழகு மணமும் எவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு விடுகின்றன.
இப்படி எல்லோரும் புகழ் பாடும்போது, ஒே ஓர் அபஸ்வரக் குரல் மட்டும் கேட்கிறது. அந்தத் தூறு சொல்லும் கூனற் கிழவியின் குரல் தான். அவள் வாசனையே தன் வீட்டில் படக்கூட தென்று சாமிச்சேந்தன் அவளை விலக்கிவிட்டான்.
– நொண்டிக் கிளி, முதற் பதிப்பு: ஸெப்டம்பர் 1949, கலைமகள் காரியாலயம், சென்னை.
![]() |
தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி…மேலும் படிக்க... |