நட்பின் தொடுதல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2026
பார்வையிட்டோர்: 3,658 
 
 
உறவோ, நட்போ, காதலோ அவர்களுக்கெதிராக நம் மனம் எனும் பலூனில் பகையெனும் காற்றை சிறிதளவு ஊதி விட்டோமானால், நம்மை மீண்டும், மீண்டும் ஊத வைத்து பலூனைப்பெரியதாக்கி அவர்களுக்கெதிராக வெடிக்க வைத்து உறவு, நட்பை அன்றோடு நம்மிடமிருந்து நிரந்தரமாக அறுத்து விடுகிறது.
“பல வருச நட்பு. சின்ன கருத்து வேறுபாட்டுக்காக பகையா நெனைச்சுக்கிறதா? சரி, தப்புன்னு வாழ்க்கைல இருக்கத்தான் செய்யும். ரெண்டையும் கூட்டிக்கழிச்சுப்பார்த்தா சரி சாஸ்தியா இருந்தா நட்போட நடந்துக்கறதுதான் புத்திசாலிக்கு அழகு. சில சமயம் சரியும் தப்பாத்தெரியும். தப்பும் சரின்னு புரியும்…” அம்மா சொன்ன வார்த்தைகள் அனுபவம் மிக்கவை என்றாலும் மகி நிகனுடன் அவனது பைக்கில் ஏறி சென்றதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
“என்ன…? நடக்கக்கூடாத தப்பு நடந்தத நீ ரெண்டு கண்ணுலயும் பார்த்துட்ட மாதர கோவிச்சுக்கறே…. நாலு வருசம் நம்ம பழக்கத்துல நீ என்னை புரிஞ்சிட்டது இவ்வளவு தானா விஷ்ணு? ” கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்க்க என்னோடு கோபமாக பேசினாள் மகி.
“வார்த்தையால சொல்ல முடியல. சொல்லவும் தெரியல. எனக்கு புடிக்கலங்கிறது மட்டும் தான் புடிவாதமா புரியுது. நமக்கு புடிச்சவங்களோட, புடிச்ச மாதர வாழறது தானே வாழ்க்கை. அப்ப புடிக்காதது எதுவா இருந்தாலும் அது நடந்தா மனசு வலிக்கத்தான் செய்யும். ஏன்னே தெரியல. அவனோட ஒன்னா, ஒரே பைக்கல குதூலகமா லவ்வர்ஸ் மாதரி சிரிச்சுட்டு போனா ஆரு தான் ஒத்துக்குவா? இதுவே நா வேறொரு பொண்ணோட இப்படி போறத நீ பார்த்திருந்தாலும் என்ன மாதிரி தான் நடந்திருப்பே….” மூச்சு விடாமல் மனதிலிருப்பதை அவளிடம் கொட்டினேன்.
அன்று பேருந்து வரவில்லை. வராத போது எப்போதுமே நான் தான் மகியை எனது பைக்கில் கல்லூரியிலிருந்து காந்திபுரம் வரை அழைத்துச்செல்வேன். இன்று நான் வெளியூர் சென்றிருந்ததால் பல நாட்களாக இந்த சந்தர்பத்துக்காக காத்திருந்தவன் போல் அவனாக வந்து அழைத்துச்சென்றிருக்கிறான் நிகன் என எனது மனம் பிடிவாதமாக நம்புகிறது.
எப்படியும் வந்து விட வேண்டும் என முயன்று வரும்போது மகியை போனில் நான் அழைத்த போது சித்ராவிலிருந்து காந்திபுரமே வந்துவிட்டதாக கூறினாள். அப்போதே அந்த வழியாக எதிராக அவன் தோள் மீது கை வைத்த படி அவள் செல்வதை பார்த்ததால் தான் அதிர்ச்சியானேன். அப்போதிருந்து நிகன் மீதிருந்த பகையை விட மகி மீது முதலாவதாக பகை என் மனதில் துளிர் விட்டு விட்டது.
“எந்தக்காலத்துல நீ இருக்கே…? பைக்ல போற போது ஆதரவா இருக்க கை வச்சுத்தானே ஆகனம். உன் கூட வரும் போதும் அப்படித்தானே….?” மகி சற்று கோபமாகவே பேசினாள்.
“ஒரே ஸ்கூல்ல படிக்கிறோம், ஒரே காலேஜ்ல படிக்கறோம், ஒரே பஸ்ல போறோம், ஒரே அலுவலகத்துல வேலை பார்க்கிறோம். ஒரே பைக்ல போனா மட்டும் கற்பு போயிருமா…?” பேசி மூச்சிரைத்தாள்.
என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தோம். இரண்டு ஜிகர்தண்டா ஆர்டர் செய்தாள். குடித்தோம். அவள் செல்லும் பேருந்து வந்ததும் ஏறிச்சென்றாள். எப்போதும் போல கை ஆட்டினாள். நானும் சாந்தமானேன்.
நான் எனது பைக்கில் ஏறி அமர்ந்த போது பேருந்துக்காக ஓடி வந்த என்னுடன் படிக்கும் ரம்யா பேருந்து சென்று விட்டதால் சோகமாக நின்றவள் என்னை நட்பாகப்பார்த்தாள்.
நான் “வா” என சொல்லி முடிப்பதற்குள் எனது பின்னால் ஏறி அமர்ந்து தோளில் கை வைத்தாள். கையை எடுக்கச்சொல்ல முடியவில்லை. வண்டியை கிளப்பினேன்.
பின்னாலிருந்து பேசிக்கொண்டே வந்தாள். ஹெல்மெட் போட்டிருந்ததால் ஒன்றும் புரியவில்லை. அவளது வீடு இருக்கும் பகுதிக்கு வந்தவுடன் பைக்கை நிறுத்தினேன். இறங்கியவள் “தேங்க்ஸ்” என கூறிவிட்டு அங்கே தயாராக நின்று கொண்டிருந்த அவளது காதலன் பைக்கில் ஏறி அவனது தோள் மீது கை வைத்தபடி சென்றாள்.
நான் அவர்கள் பார்க்காதவாறு பின் தொடந்து சென்றேன். அவர்கள் ஒரு பேக்கரியில் நிறுத்தி தேனீர் குடித்தார்கள். தூரத்திலிருந்து கவனித்தேன். எனது பின்னால் தோளில் கை போட்டபடி அமர்ந்து வந்ததைப்பார்த்தும் ரம்யாவின் வுட்பி அவளுடன் கோபமாகப் பேசியதாகத் தெரியவில்லை. இருவரும் சிரித்தபடி சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
மனதில் ஒரு காதல் இருந்தாலும் ஆயிரம் நட்புகள் உருவானாலும் நட்பு காதலாவதில்லை. நட்பில் காமமில்லை. அதனால் தொடுதல் எவ்வகையிலும் பாதிப்பதில்லை என்பதை அப்போதுதான் முதலாகப்புரிந்து கொண்டேன்.
இப்போதெல்லாம் நான் வேறு பெண்களுடன் பேசுவதையும், மகி வேறு ஆண்களுடன் பேசுவதையும் இரண்டு பேருமே தவறாக நினைப்பதில்லை.
வேறு பாலரை சந்திக்கும் வேளைகளில், வாழ்த்துக்களை பறிமாறும் போது அவள் கை கொடுப்பதை இது வரை ஏற்காத என் மனம் தற்போது ஏற்கிறது.
நானும் அனைவரிடமும் கை கொடுத்தே வாழ்த்துக்களை பறிமாறிக்கொள்கிறேன். நாங்கள் சந்திக்கும் தருணங்களில் மகிழ்ச்சியான மனநிலையிலேயே குறைகளை கண்டுபிடித்து பகை வளர்க்காமல் அன்பை வளர்க்கும்படியாகவே பேசிக்கொள்கிறோம்.
கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *