தேவர்கள்





(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கேற்றைப் பூட்டிச் சென்ற அவன் பூட்டா- மலே திரும்பி வந்தான். ஒழுங்கையில் மாடுகள் மாடுகள் தான்.கொம்பை மறைத்துக் கொண்டு வந்தன. அவன் வந்ததை மாடுகள் கண்டுவிட்டன. கேற் திறந்திருந்தால் மாடுகள் உள்ளே வந்துவிடும். ஏதோ கேற்றின் ஊடாகத் தான் அவை வரும் என்பதல்ல. வேலி- களில் இடைவெளிகள் இருந்தாற் கூடப் போதும்.
கனத்த இருள் அந்தப் பிரதேசத்தை முக்காடு போட்டிருந்தது. இருளமுதல் பூட்டியிருக்க வேண்டும். ஏனோ தவறிவிட்டது. அவன் பதறியபடி திரும்பி வந்தான்.
வெளிவிறாந்தையில் நிவாரண வெட்டால் ஒடுங்கிப் போன வன்னிப் பொதுசனம் போல விளக்கு வெளிச்சம் துடித்துக் கொண்டிருந்தது. பிரகாசமாக விளக்கு எரிவதுமாடுகளுக்குப் பிடிக்குமோ என்னவோ
விறாந்தைச் சுவரில் குடங்கிக் கொண்டிருந்த அவன் அம்மா “என்ன” என்றாள் ஓசையில்லாமல். அதை விட அவள் விட்ட பெருமூச்சு பெரிதாகக் கேட்டது.
“மாடுகள்” என்று அவன் பக்குவமாகச் சொன்னான். உடம்பு பதறியது.
மாடுகளை அவன் சந்திக்காத நாள் எது. வாசலில், ஒழுங்கையில், தெருவில் என்று சிவபெருமானுக்கு அடுத்து அவைகள் தான்.
அவனது ஊருக்கும் மாடுகளுக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் அவை தாமாகவே வந்து ஊரில் பட்டியடைத்துக் கொண்டு இருந்தன.
பச்சை இலைகுழைகள் தான் அதன் சாப்பாடு. பயப்பட வேண்டாம் என்று ஆளுக்கு ஆள் தைரியம் சொன்னார்கள். வீ.சி. எலக்சனின் போது சொன்னார்கள். எல்லோரும் அதனை நம்பினார்கள்.
சில வேளைகளில் சில மாடுகளின் கடைவாயில் சிவப்பாய் ஏதோ வடிந்திருக்கும். அது அவற்றின் கடைவாய் இரத்தமாக இருக்க வேண்டுமென அவனும் அவனைப் போன்ற பலரும் நினைத்தார்கள்.
பிறகுதான் தெரிந்தது இந்த மாடுகள் வித்தியாசமான மாடுகள் என்று. இலைகுழை சமிபாடடையாத நேரத்தில் மாத்திரம் கொஞ்சம் பச்சை இறைச்சி சாப்பிடும். இறைச்சிக்காக அவை யாரையும் வெளிப்படையாகக் கொல்வதில்லை என்பது அவனைப் போலவே பலருக்கு ஆறுதல் என்றாலும் அவை எப்படியோ இறைச்சியைத் தேடிக் கொள்கின்றன. எலும்புகளை மாத்திரம் யாரும் அறியாமல் மேய்ச்சலுக்கும் போகும் தங்கள் மேய்ச்சல் தரைகளில் புதைத்து விடுகின்றன.
அவன் வந்து தாய்க்கு அருகில் குந்தினான். குளிர் அடித்தாலும் வியர்த்தது. அவன் அப்பா எதிர்ப்பக்கம் இருந்த வாங்கில் மல்லாந்து கிடந்தார். தோட்ட வேலை செய்த களைப்பு அவருக்கு.
அவன் வாசல் கேற்றையே பார்த்துக் கொண்டு இருந்தான். மாடுகள் உள்ளே வந்தால் என்ன செய்யலாம். “காலையில் உன் வீட்டில் எத்தனை இடியப்பம் அவித்தது “நீ எத்தனை சாப்பிட்டாய்? நாளைக்கு காலை நீ யாரை சந்திப்பாய்?” “இரவு கண்ட கனவில் வந்த கடவுள் யாரோ?” போன்ற அசலான ஆக்கிரமிப்பாளரின் கேள்விகளுக்கு எத்தனை தடவைகள் தான் பதில் சொல்வது?
அவன் கேற்றையே பார்த்துக் கொண்டிருந்தான். அது ஒரு அகன்ற கேற்.டச்சுக் காலத்துச் சமாச்சாரம். அவன் விட்டுச் சென்ற பல்வேறு சங்கதிகள் போல இதுவும் ஒன்றோ? என்னவோ?
வீட்டுக்கேற் போலவே அவனது வீடும் பழைய நெடில் உள்ளதுதான். பழந்துணி வாசனை போல் ஒரு கெட்ட நாற்றம் வரும்.
அவன் அப்பா அதுகளைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளமாட்- டார். வீட்டில் அவருக்கு ஒரு பக்தி. நிறம் மாறிய சுவரில் உதிர்ந்து விழுந்தால் கூட கவலைப்படுவார்.
வீடும் வளவும் பரம்பரையானது. அப்பாவின் அப்புவின் அப்புவழி வந்ததாம் என்று சொல்லி அப்பா பெருமைப்படுவார். அவனிற்கோ இந்தப்பழம் பெருமையில் எள்ளளவும் இஷ்டம் இல்லை. மாடுகள் தான் பிரச்சினை மாடுகளுக்குப் பழம் வீடாவது புது வீடாவது. அப்பாவின் அப்பு பதினான்கு பரப்புக் காணியில் அம்மன் கோயில் கட்டியபோது அதன் பரிபாலனத்திற்கு கட்டிய வீடாம் இது. வீட்டின் சாமியறையில் அப்புவின் அப்பு அணிந்த குமிழ் மிதியடி பூசைப் பொருளாக இருந்தது. பட்டாய்க் குறி இழுத்துக் கொண்டு அப்பு அந்த மிதியடியைப் போட்டுக் கொண்டு நடந்தால் ஒருவகைப் பிரம்ம ஒளி அவரைச் சுற்றி ஒளிரும் என்று சொன்னதை இன்று காலையில் அவன் அப்பா அவனுக்கு சொல்லியிருந்தார். மாடு- களுக்கும் சொன்னாரோ தெரியாது.
இந்த மாதிரியான பக்திப் பரவசம் பொங்கும் பல்வேறு கதைகளை அவன் அப்பா சொல்வதுண்டு. சொல்லிச் சொல்லி பொழுதுதான் போனதே தவிர வேறு எதுவும் நடக்கவில்லை.
அப்புவின் அப்பு பதினாறு பரப்புக் காணியில் கட்டிய கோயிலில் நள்ளிரவில் கோயில்மணி ஒலிப்பது வழக்கமாம்.
ஒரு நாள் நள்ளிரவு கோயில்மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு அப்புவின் அப்பு கோயிலடிக்குப் போனாராம். கோயில் ஓவெனத் திறந்திருந்தது. வாசல் கோபுரத்தில் இருந்து மூலஸ்தானம் வரை தீபங்கள். அவற்றின் பிரகாசமான ஒளிர்வு காணக்கண் கோடி வேண்டும். அதி அற்புதமான பக்தி அனுபவம் தரும் ஒரு உணர்வு மிக்க சூழலாம்.
நிரையாக பலர் நின்று இரு கரமும் குவித்து வணங்கியபடி எல்லோரும் பொன் நிறம் சுடச்சுட ஒளிரும் பொன் பாகவதர்கள் போல் தோளில் புரளும் சடை. அதன் பளபளப்பு கண்களைக் கூசவைத்தது.
காதில் கடுக்கனும் பிராமணர்கள் போல பூணூல் அணிந்து பஞ்சகச்சமாக உடுத்திய உடை அவர்களை வித்தியாசமாய்க் காட்டியது. ஆனாலும் அவர்களின் கால்கள் தரையில் இல்லை.
அவர்கள் தேவர்களாம். நள்ளிரவில் இவ்வாறு வந்து வணங்கு – வார்களாம். இதில் என்ன புதினம்? இப்படித் தேவர்கள் வந்து வணங்குவது சாதாரணமான ஒருவருடைய கண்களுக்குத் தெரி- யாது. இறைவனை மெய்யன்புடன் வணங்குபவர்களுக்குத்தான் தெரியும். அவரும் தான் கண்டதை யாருக்கும் சொல்லக்கூடாதாம்.
அப்படிச் சொல்லாமல் இந்தக் கதை எப்படி வெளியே வந்தது என்று அவன் அவனுடைய அப்பாவிடம் கேட்டதாக இல்லை. அப்புவின் அப்பு தேவர்களைக் கண்டதாகச் சொன்னதால் தான் அப்புவிடம் இருந்து கோயில் பறிபோனதோ? கோயில் நிர்வாகம் இப்போது யாரிடமோ?
ஒழுங்கையில் பரவியிருந்த இருள் கலைவது போல ஒரு அசைவு. அவன் கேற்றையே பார்த்தான். மூச்சு நின்றுவிடுவது போல பயம் வீரிட்டுக் கிளம்பியது.
லாடன் பூட்டிய மாடுகள் கேற்றைத் தாண்டி வளவுக்கு உள்ளே. வந்தன. மூச்சை நிறுத்திவடுவது போல விளக்கு பாசாங்கு செய்தது. அவன் அப்பாவின் குறட்டை மாடுகளுக்கு கேட்டிருக்க வேண்டும். அவை சற்று உசார் அடைந்தன.
அவன் அம்மாவுக்கு மலேரியா வந்தது போல நடுக்கம் எடுத்தது. அவனுடன் நெருங்கி அமர்ந்து கொண்டு ஆற்றாமையுடன் அவ- னைப் பார்த்தாள்.
வளவினுள் பச்சை இலைதழைகள் இல்லை. மாடுகள் எதைச் சாப்பிடும் என்று அவன் யோசித்தான்.
அவை வளவைச் சுற்றி வந்தன. பிறகு விறாந்தைக்கு முன்னால் நின்றன. அவன் எழுந்து போனான். வெறும் உடம்பில் வியர்வை தழும்பியது.
“வீட்டில் எத்தனை பேர்?”
“என்ன செய்யிறாய்?”
“எல்லோரையும் வெளியால வரச்சொல்லு?”
குறட்டையை தூக்கியெறிந்த அவனது அப்பா, வளைந்து குறுகிய அம்மா வெளியே வந்தனர்.
“நேற்று இரவு கோயிலுக்குப் போனாயா?”
“ஓம்”
மாடுகள் சிரித்தன.
“தேவனைக் கண்டாயா?”
எந்தத் தேவன் என்று கேட்டால் பிரச்சினை. தேவனைத் தெரியாமல் அந்தப் பகுதியில் யார் இருப்பார்கள்? அவனும் இந்த மண்ணில் இருந்து வந்தவன் தானே.
அவனைப் போன்றோர்கள் இந்த மாடுகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஏன் மதிக்கப் போகின்றார்கள். நேற்று வந்த மாடுகள் குடல் வற்றித் திரும்பிப் போய்விடும். ஆனால் தேவன் எப்போதும் இந்த மண்ணில் மிதிப்பவன். மண்ணுக்காக வாழ்பவன். ஆக்கிரமிப்பாளரை எதிர்ப்பவன்.
கண்ணீர் விட்டு வளர்க்கும் கதிர் முற்றாதவயல் வெளிகளின் ஓரத்தில் இப்போதும் தேவன் போன்ற ஆட்கள் காவல் காத்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அவனைப் போன்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு ஆட்கள்.
“அடேய் தேவனைக் கோயிலில் கண்டாயா?” மாடுகள் கொம்புகளை மறைத்த தலைகளை ஆட்டியபடி கேட்டன. லாடன் பூண்ட அவற்றின் கால்கள் துள்ளின.
சட்டென்று அப்பாவின் அப்புவின் அப்பு நள்ளிரவில் கோயிலில் கண்ட காட்சி நினைவுக்கு வந்தது. தேவர்களை கண்டால் சொல்லக்கூடாது. தேவர்களை மட்டுமா? தேவனையும் தான்.
– ஈழநாடு வாரமலர், ஒக்டோபர் 2-8, 1998.
– மணல்வெளி அரங்கு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மாசி 2002, தேசிய காலை இலக்கிய பேரவை, கொழும்பு.