தேர்தல் – கூத்து
கதையாசிரியர்: சி.எம்.ராமச்சந்திர செட்டியார்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: November 11, 2025
பார்வையிட்டோர்: 66
(1945ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(ஒரு நாடகம்)
களம் 1
தெரு – இரு ஆட்கள்
சுப்பையா: முத்தையா. இங்கே என்ன கூட்டம்?
முத்தையா: என்ன சுப்பையா, உமக்குத் தெரியாதா-தேவஸ்தானக் கமிட்டித் தேர்தல். பல நாள்களாக நமது ஊரில் தமுக்கு அடிக்கிறார்களே.
சு: நான் சில நாள்களாக ஊரில் இல்லை. போட்டி பலமா? யார் யாருக்கு?
மு: போட்டிக்கு என்னக் குறைவு. இருவரும் கைதேர்ந்த ஆட்கள். அருணாசல முதலியாரும் வேதாசலம் பிள்ளையும் போட்டி போடுகிறார்கள்.
சு: · யாருக்கு ஆதரவு அதிகம்?
மு: சொல்லுவானேன்? அருணாசல முதலியாருக்குத்தான். அவருடைய தம்பிமார் பையை அவிழ்த்து விட்டார்கள். பணம் ஆற்று நீர் போல ஓடுகிறது. வேதாசல பிள்ளை சிறிது பிடித்தமானவர். ஆகவே செல்வாக்குக் குறைந்துவிட்டது. வெறும் குணம் இருந்து என்ன பலன்? தேர்தலில் தாராளமான மனசு அல்லவோ இருக்க வேண்டும்?
சு: அருணாசல முதலியார் வாயாடுபவர் என்ற பிரசித்தம் உண்டே! அப்படியிருந்தும் பொதுமக்கள் வாக்குக் கொடுப்பார்களா?
மு: அதற்கு என்ன சந்தேகம் ? பணப் பையை அவிழ்த்து விட்டால் யார்தான் இணங்கமாட்டார்கள்? இக்காலத்தில் நேர்மையை யார்தான் மதிக்கிறார்கள்.
சு: ஆகவே அவருடைய குணத்தைப் பொதுமக்கள் அறிவார்களா?
மு: சந்தேகமென்ன? வெள்ளைப் பிள்ளையார் கோவிலுக்காக ஊராரிடம் வாங்கின 10,000 ரூபாயும் எங்கே? கட்டடம் பார்த்தால் ரூ.3,000 மதிக்கக்கூடுமா? சாலைக்குமரர் கோவி லிலே கட்டளை நடத்துவதில் ரூ.5000 செலவு எழுதி doc யிருக்கிறார். உண்மையில் ஆயிரம் செலவாகிறதா? தங்க மாரியம்மன் ஆலயத்தில் நெருப்பு மிதிக்க ரூ.2,000 செலவாகுமென்று நம்புகிறீரோ? எல்லாப் பணமும் எங்கே போயிற்று? பொதுமக்கள் அறியாரோ? இருந்தாலும் துட்டுக் கொடுத்தால் வாக்குக் கிடைக்கிறது. வெற்றி உள்ளங்கை யிலேதான் !
சு: ஆலயத் தருமகர்த்தாவானால் எளிதில் கறக்கலாம். கமிட்டி மெம்பர் ஆனால் என்ன பயன்?
மு: அதுதான் சுலபம். பிறர் அறியாமலே பணம் தட்டலாம. ஒவ்வொரு தருமகர்த்தர் நியமனத்திற்கும் பலபேர் போட்டி யிடுவார்கள். ஒவ்வொருவரும் பல நாள்களாக வீட்டிலே தொங்கிக்கொண்டிருப்பார்கள். இதிலே எவ்வளவு கௌரவம் ! ஒவ்வொருவருக்கும் ஆசைக் காட்டிப் பல காரியங்களை எளிதில் செய்து கொள்ளலாம். கடைசியில் ஒருவரிடம் அதிகப் பணம் பெற்று வேலையும் செய்து கொடுக்கலாம். வேலை ஆன பிறகும், பலவித நன்மை ஏற்படும். ஆள் வசதி எத்தனை அனுகூலம் பார் !
சு: கோயில் பணம் கையாடுவது எத்தனை சுலபம்? ஆனால், வேறொருவர் மூலமாக எதிர் பார்ப்பது கடினம் அல்லவா?
மு: கோயிலில் கையாடிக் கணக்குப் பரிசோதகரிடம் சிக்கிக் கொண்டால் பின்னர் கைக்கும் குட்டைதான் (விலங்கு). ஆனால், வேறொருவர் மூலமாகச் சகாயம் பெற்றால் யாருக்கும் பயப்பட வேண்டாம்.
சு: அருணாசல முதலியாருக்கு அதிகப் பணம் இல்லையே ! எவ்வாறு இத்தனை பணம் அவிழ்க்கிறார்? சொல்
மு: இது ஒரு வியாபாரந்தான். இப்போது தேர்தலில் ரூ.5,000 செலவு செய்தால் பின்னால் ரூ.10,000 ஆக லாபம் பெறலாம்!
சு: அவருடைய தம்பிமார் இதற்கு உதவியாக இருக்கிறார்களா? அது ஆச்சரியமல்லவா?
மு: ஏன்? அவர்களும் உடந்தை என்றுதான் கேள்வி.
சு: எப்படி?
மு: அடுத்த திருச்சிவப் பேரூரில் தருமகர்த்தர் ஸ்தானம் காலி, அதனை அவர் தம்பிக்கு ஏற்பாடு செய்வார்கள் அதற்கு 500 000 ஏக்கர் நிலம் உண்டு. அவைகளை இரண்டாந் தம்பி குத்தகைக்குப் பெறுவார். இது வெற்றியானால், ரூ.5,000 க்கு :ரூ.50,000 கிடைக்காதா? இதுதான் இரகசியம்.
சு: இப்போது அறிந்தேன். ஆனால் நாம் எடுத்த காரியம் முழுதும் வெற்றி ஆகிறது. முடிவு காண்போம்.
களம் 2
கோயில்-இருவர்
அர்ச்சகர்: பரிசாரகரே, சங்கதி தி கேட்டீர்களா? அருணாசல் முதலியார் கமிட்டி மெம்பர் ஆனதும் தம் தம்பிக்குத் தர்மகர்த்தர் வேலை செய்து கொடுத்து விட்டார்.
பரிசாரகர்: அப்படியா? அவர் குணம் எப்படி?
அர்: சொல்லவேண்டுமா? ஒவ்வொன்றிலும் தரகுதான். இனிமேல் நம் ஜபம் சாயாது.
பரி: என்ன, அப்படிச் சொல்லுகிறீர்?
அர்: படித்தரம் இனிமேல் கால் பங்குககுக் குறைந்து விடும். இத்தனை நாள் இருந்து வந்ததுபோல் இனி நம் குடும்பங்கள் க்ஷேமமாக இருக்க முடியாது.
பரி: அப்படியா ? என்ன செய்து விடுவார்?
அர்: அவரோ ஒரு சுக்கஞ் செட்டி. கடை வியாபாரம் நன்றாகத் தெரிந்தவர். கடை விலை அறிந்து சாமான்களை வாங்கி நமக்கு அளந்து கொடுப்பார். நாம் எப்படி மிச்சப்படுத்த முடியும்?
பரி: ஐயோ, நான் இனி என்ன செய்வேன்? என் மனைவிக்கு இரண்டத்தனை சாப்பாடு வேண்டும், போதாக் குறைக்கு 6 பெண்களுக்கு என்ன செய்வேன் ? மூன்று பிள்ளை ருதுவாகிவிட்டது. கலியாணம் செய்து வைக்கவேண்டும. வீட்டிலே நிர்ப்பந்தம் அதிகம். இதுவரை நன்றாய்ச் சாப்பிட்டு விட்டேன். மீதி சேர்த்து வைக்க இல்லை.
அர்: சேர்த்து வைப்பதா? தினமும் சாப்பாட்டுக்கும் கஷ்டமாகிவிடும்.
பரி: இனி குறைத்துவிட்டால் நாம் வேலை செய்ய மாட்டோம் என்போம். அப்போது என்ன செய்வார்? காந்திதான் வேலை நிறுத்தம் கற்றுக் கொடுத்துள்ளாரே.
அர்: காந்தி – தந்திரம் முதலியாரிடம் செல்லாது. நாம் இல்லையென்றால் 10 பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு முறை வேலை போனால் பிறகு கிடைக்காது.
பரி: என்ன, வம்பாக இருக்கிறதே? வேறு பரிகாரமில்லையோ? அர்: இல்லவே இல்லை. இந்த ஆசாமி நம்மை வருத்தி மிச்சப்படுத்துவார். ஆனால் அதனைக் கோவிலுக்குக் கொடுக்கமாட்டார். தாமே கறந்து கொள்வார்.
பரி: அதனைக் கண்டு பிடித்தால் அவரைப் பெரிய பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப முடியாதா?:
அர்: ஆமாம், அதுதான் சரியான வழி. அதற்காக நன்றாய் உஷாராக இருக்க வேண்டும். நமது கணக்கனைக்கைக் குள்ளே போட்டுக் கொள்ள வேண்டும். திருட்டைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். ஒரு தடவை கண்டுபிடித்து விட்டால் பின்னர் நாம் வென்றுவிடுவோம்.
பரி: சரி, அதுதான் நல்ல உபாயம் ! கணக்குப் பிள்ளையை எப்படியாவது சரிப்படுத்திக் கொள்வோம். இத்தனை நாள் ஒரு உருண்டைச் சாதம்தான் தந்தோம். இனிமேல் இரண்டத்தனைத் தருவோம்.
அர்: நீர் சொல்லுவதுதான் சரி. அவனை எப்படியாவது சரிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பரி: கணக்கிலும் ஒன்றிரண்டு பிசகுகள் செய்யச் சொல்லிக் கையெழுத்து வாங்கிக்கொள்ளச் செய்ய வேண்டும்.
அர்: அவன் அதற்கு ஈடுபடுவானோ?
பரி: அதற்கென்ன, அம்மனுடைய நகை இரண்டை யெடுத்துத் தற்கால நகையாகச் செய்து கணக்கனுக்குப் பரிசு தந்தால் வேண்டிய காரியம் நிறைவேறி விடுகிறது.
அர்: சரி, அதுவே சரி,வெகு ஜாக்கிரதையோடு முன்னேற வேண்டும்.
களம் 3
கோயில் பூங்காவனம்-இருவர்
மெய்க்காவல் : என்ன, அம்மா ! நந்தவனத்தில் என்ன செய்கிறாய்?
திருவலகு: தருமகர்த்தர் பெண்சாதிக்குப் பூ எடுக்கிறேன்.
மெய்: என்ன அநியாயம்! சுவாமிக்கு எடுக்கிற பூ மனிதருக்கா?
திரு: என்ன செய்வது? வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்வது? வேலை போய்விட்டால் என் கதி என்ன? அந்த அம்மா வெகு கோபக்காரி.
மெய்: அம்மாவும் அப்படியா? தருமகர்த்தாதான் கொடியவர் என்றிருந்தேன். அவளும் அப்படியா?
திரு: ஏன் அப்படிச் சொல்லுகிறீர்?
மெய்: நான் இன்னமும் சிக்கிக்கொள்ளாமல் தப்பி வருகிறேனம்மா? ஐயர்களும் கணக்கனும் அவர் வலையில் சிக்கிக்கொண்டு திண்டாடுகிறார்கள்.
திரு: என்ன, அப்படிப்பட்ட காரியம் நடந்தது?
மெய்: அர்ச்சகரும் பரிசாரகனும் சேர்ந்து அம்மன் நகைகளைத் திருடிப் புதியநகை ஆக்கிக் கணக்கனுக்குக் கொடுத்தார் களாம். கணக்கன் புது நகையைத் தன் பெண்சாதிக்குப் போட்டானாம். அதைத் தருமகர்த்தா கண்டுபிடித்து விட்டாராம்.
திரு: கண்டு பிடிக்கும்படியாக அந்தக் காரியத்தை அத்தனை வெளிப்படையாகவா செய்தார்கள்?
மெய்: செய்தது என்னவோ, இரகசியந்தான், ஆனால் தருமகர்த்தா கண்டுபிடித்து விட்டார். அவர் கெட்டிக்காரர்.
திரு: எவ்வாறு கண்டுபிடித்தார்?
மெய்: ஒருநாள் கணக்கன் பெண்சாதி தருமகர்த்தா பெண்சாதியைப் பேட்டி காணச் சென்றாள். கையில் சில அதிரசம் வடைகளை எடுத்துச் சென்றாள். அவைகளைக் கொடுக்கும் போது கையிலணிந்த புதுமாதிரி வளையல்களைத் தருமகர்த்தா மனைவி பார்த்துவிட்டாள். ‘இதென்ன வெகு அழகாக இருக்கிறதே’ யார் செய்தது?. அந்தத் தட்டானை அனுப்பு. என்று கேட்டாள். கணக்கனுக்கு சமாசாரம் தெரிவிக் கப்பட்டது. தட்டான் வந்துவிட்டான். தருமகர்த்தா தட்டானை உளவு விசாரித்தார். கணக்கனுக்கு இந்த விலை பொருந்திய நகை கொடுப்பதற்குப் பணம் ஏது என்ற சந்தேகம் தருமகர்த்தாவுக்கு ஏற்பட்டது. அதிலும் தன் மனைவிக்கு இவ்வித நகையைக் காட்டிவிட்டாளே என்ற கோபம் அதிகம். அவளோ பிடித்த பிடி விடமாட்டாள். தன் கைப்பணம் போகுமே என்ற ஏக்கம் ! ஆகவே நகையினுடைய மர்மம் விசாரித்தார். கணக்கனுக்கோ சம்பளம் 8 ரூபாய். நகையோ 200 ரூபாய் பெறும். எவ்விதம் அது வந்தது என விசாரித்தார். தட்டானுக்கு அதேமாதிரி வேலை கொடுப்பதாகவும் ஆசை காட்டினார். மேலும் கோயில் நகைகளைப் பழுதுபார்க்கும் வேலையும் கொடுப்பதாகச் சொன்னார். உடனே தட்டான் உண்மையைக் கூறிவிட்டான். அர்ச்சகனும் பரிசாரகனும் வந்து அம்மன் நகைகளைக் கொடுத்து வளையல் செய்த செய்தியைக் கூறிவிட்டான். இதனை முழுதும் அறிந்து கொண்டார் தருமகர்த்தர்.
திரு: ஆமாம், நகைகளைக் கணக்கனுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்று தருமகர்த்தா எண்ணவில்லையோ?
மெய்: எண்ணாமலா இருப்பார்? உடனே கணக்கனைப் பிடித்துவந்து போலீசுக்கு ஒப்புவிப்பதாகப் பயமுறுத்தினான். கணக்கன் ஒரு பெரும் பயங்காளி. தன் உயிர் தப்பினால் போதுமென்று இருப்பவன். தருமகர்த்தா மீது பொய்க் கணக்கு எழுதிச் சிக்க வைக்க வேண்டுமென்று சொல்லி ‘நகை தந்தார்கள்’ என்று உண்மையைச் சொல்லி விட்டான்.
திரு : பிறகு என்ன செய்தார்?
மெய்: நடந்த விஷயங்களை எழுதிக் கொடுக்கும்படி வற்புறுத்திக் கணக்கனிடம் ஒரு யாதாஸ்து வாங்கி வைத்துக்கொண்டார்.
திரு: அவனை வேலையிலிருந்து நீக்கவில்லையா?
மெய்: ஏன் நீக்க வேண்டும்? யாதாஸ்து இருக்கும் வரையில் அவனிடம் சகல வேலைகளையும் வாங்கிக்கொள்ளலாம் அல்லவா? தருமகர்த்தா இவர்கள் எல்லாரையும் ஒருங்கே விழுங்கிவிட மாட்டாரோ?
திரு: ஐயர்களை விட்டுவிட்டாரா?
மெய்: விடுவாரா? உடனே ஐயர்களை இழுத்துவந்து அந்த யாதாஸ்தைக் காட்டித் தட்டானையும் சொல்லச் செய்து போலீசு – பயத்தைக் காட்ட அவர்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள். அவர்களிடமும் ஒரு யாதாஸ்து வாங்கிக்கொண்டு களவு போன நகைக்கு வேறு நகை செய்து கொடுக்கச் சொல்லிப் பண்டாரத்தில் வைத்துக் கொண்டார்.
திரு: அவர்களையும் நீக்கவில்லையா?
மெய்: ஏன் நீக்குவார்? அவர்கள் குடுமி கையில் இருக்கும்போது அவர்களால் ஆகக்கூடிய காரியம் பல செய்துகொள்ளலாம் அல்லவா?
திரு: ஐயர்களுக்குத் திருப்பி நகை செய்ய பணம் ஏது?
மெய்: இம்மாதிரி முந்தி எத்தனை தடவை சுவாமி நகைகளைத் திருடி வைத்திருந்தார்களோ ! களவாடிய பணம் கையில் இல்லாமலா போகும்?
களம் 4
இரண்டு குடியானவர்கள் – தஞ்சை நிலம்
முதல் குடி: கோயில் நிலமெல்லாம் குத்தகையாகி விட்டதாமே !
இரண்டாம் குடி: ஆமாம், அப்படித்தான் பேசுகிறார்கள். இராமசாமிப் பிள்ளைக்கு இப்போது இல்லையாம் தருமகர்த்தாவின் தம்பிக்கு ஆய்விட்டதாம்.
மு: அப்படியானால் வந்தது ஆபத்து. இராமசாமிப்பிள்ளை வெகு நல்லவர். குடியானவர்களிடம் வெகு நாணயமாக நடந்துகொள்வார் நெருக்கடி வந்தால் தவணையும் கொடுப்பார். புது ஆளை மிகவும் கொடியவர் என்கிறார்கள். வாஸ்தவமோ?
இ: ஆமாம், அப்படித்தான் கேள்வி. இதற்குள்ளேயே கேட்கிறார். குடியானவர்களிடம் முன்பணம் இல்லாவிட்டால் வேறு ஆளை வைத்து விடுவாராம்.
மு: ஆள் வருவானா? நாம் காலை ஒடித்துவிடமாட்டோமா? பிறந்தது முதல் இருந்த நிலத்தை விட்டு விடுவோமா?
இ: என்ன செய்ய முடியும் இப்போது? கிராக்கி அதிகம். போலீசு கீலீசு கூட்டிக்கொண்டு வந்தால் என்ன செய்கிறது? கச்சேரி ஏறக் காசு இருக்கிறதா?
மு: பார்ப்போம் ஒருகை. நிலத்தை விட்டுப் போக மாட்டேன் என்று பிடிவாதம் செய்தால் என்ன செய்வான்? வழிக்கு வருகிறான். அவன் விதை, குடியானவர்களுக்கு முன்பணம் முதலியவை கொடுப்பது போய், நாமா முன்பணம் கொடுப்பது? என்ன விபரீதம் முடியவே முடியாது !
இ: அது சரி; மற்றொன்று கேள்வி பட்டாயா? குத்தகை ஒப்பந்தம் திருட்டுத்தனமாக நடந்ததாமே?
மு: எனக்குத் தெரியாது. என்ன திருட்டுத்தனம்?
இ: சட்டப்படி ஏலம் விட வேண்டுமாம். கணக்குப் பிள்ளையைச் சரிப்படுத்திக் கொண்டு ஏலம் விட்டதாய்க் கணக்கு எழுதி இரகசியமாக ஈன விலைக்குக் குத்தகைக் கொடுக்கப்பட்டதாம்.
மு: அப்படியானால் அது செல்லுமோ? முந்திய குத்தகைக்காரன் சும்மா விடுவானோ?
இ: விடத்தான் மாட்டான். ஆனால் ஆள் சகாயம் வேண்டுமே! புது ஆளுக்குத் தருமகர்த்தா, கமிட்டி மெம்பர் இவர்கள் பலம் உண்டு.
மு: ஆனால், அவர்கள் எல்லாரும் அண்ணன் தம்பிகளாமே! அப்படியானால் அது செல்லாதாம்.
இ: மேலும் மிகக் குறைந்த தொகைக்குக் கொடுக்கப்பட்டதாம். ஆகவே அது செல்லாதாம்.
மு: இந்தக் குறைகள் எல்லாம் இருக்கும்போது குத்தகை எப்படிச் செல்லும்? நாம் எல்லாரும் கூடி, இராமசாமிப்பிள்ளைக்கு உதவி செய்ய வேண்டும்; நன்றி மறக்கலாகாது.
இ: சரி, அப்படியே செய்வோம்.
களம் 5
சுப்பையரும் முத்தையரும்
சு: நாகப்ப முதலியார் குத்தகைச் சீட்டைப் பற்றி விசாரணை நடந்ததாமே, தெரியுமா?
மு: தெரியும், அது இரத்து செய்யப்பட்டது. நாம் முன்னமே சில நாள்களுக்கு முன் பேசினோமே, அப்படியே ஆயிற்று.
சு: எப்படி ரத்து ஆயிற்று?
மு: இரு பக்கமும் பெரும் வக்கீல்களை வைத்துக்கொண்டு வாதாடினார்கள். பல ஆதாராங்களும் காண்பிக்கப்பட்டன. வாதங்களும் பலமாகப் பேசப்பட்டன. சட்டமும் எடுத்துக் காட்டப்பட்டது. முடிவில் குத்தகை ரத்து ஆயிற்று.
சு: ஒரு தடவை ஊர்ச்சிதமானது ரத்து ஆகுமா?
மு: மோசடி என்று ருசுவானால் ரத்து ஆகாதா?
சு: எப்படி மோசடி என்று சொல்ல முடியும்?
மு: கமிட்டி மெம்பர், தருமகர்த்தா, குத்தகைதாரர் கூட பிறந்தவர்கள்.
சு: ஆனால் என்ன?
மு: குத்தகை பகிரங்க ஏலத்தில் விட வேண்டும்.
சு: அப்படி ரிகார்டு இருந்ததாமே?
மு: ஆமாம்; ஆனால் ஊரில் எவருக்கும் தெரியாது. தமுக்குக் வியகாரன் கையெழுத்து பொய்க் கையெழுத்து. அவன் தமுக்கு அடிக்கவில்லை என்று சாட்சி. கோயில் முதலிய இடங்களில் விளம்பரம் ஒட்டப்படவில்லை ; ஒட்டினது என்பது பொய். கணக்குப்பிள்ளை செலவெழுதினது சுத்தப் பொய். முந்திய குத்தகைதாரனுக்கு அறிக்கையே இல்லை. ஏலம் ஊரில் யாருக்கும் தெரியாது. இவைகளெல்லாம் ருசுவாகிவிட்டது.
சு: இவை போதுமா? குத்தகைத் தொகை குறைவில்லையே !
மு: ஏன் குறைவில்லை ? 1,500 ஏக்கர் நிலம் 5,000 ரூபாய்க்குப் போயிருக்கிறது! ஊரில் யாரும் ரூ.50 ஆயிரத்துக்கு எடுக்கக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சு: இனி யென்ன?
மு: குடியானவர் கூடி ஒரே கூட்டமாக வந்து குத்தகையை ரத்து செய்ய வேண்டுமென்று கூக்குரல் இட்டார்களாம்.
சு: மேலும் என்ன?
மு: கணக்குப் பிள்ளையும், அர்ச்சகனும், பரிசாரகனும் தர்மகர்த்தாவுக்கு எழுதிக்கொடுத்த யாதாஸ்துகள் எப்படியோ விசாரணைக் காலத்தில் வெளிவந்தன. அவை வந்தவுடன் நீதிபதியின் மனசு மாறிவிட்டது. யாதாஸ்துகளில் கண்ட பயமுறுத்தலினால்தான் கணக்குப்பிள்ளை மோசடியாகக் குத்தகை விட்டான் என்று தெளிவாயிற்று. தருமகர்த்தா சொற்படி எல்லாம் இரகசியமாக நிறைவேறிற்று என்று தெரிந்தது. ஆகவே நீதிபதி குத்தகையை ரத்துச் செய்து மறு குத்தகை விட உத்தரவிட்டார்.
மு: இனி, குத்தகைதாரன் என்ன செய்வான்?
சு: செலவான பணம் தொலைந்தது. விசாரணைச் செலவும் கொடுக்க நேரிட்டது. முந்தித் தேர்தலில் நடந்த செலவும் தலைக்கு வந்துவிட்டது. இந்த மூன்று புள்ளிகளும் பாதாளத்துக்கு இறங்கிவிட்டார்கள். இனி இவர்களுக்கு யாரும் ஒரு தம்பிடியும் கொடுக்க மாட்டார்கள்.
மு: தன் வினை தன்னைச் சுடும் அல்லவா?
சு: கோயில் – பணம் களவாட எண்ணினார்கள். தாமே கெட்டார்கள். “ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்” என்பது ருசுவாயிற்று.
– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.