திரும்பிய அதிர்ஷ்டம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 6,612 
 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காரியாலயத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் மனம் நிரம்பியிருந்தது. அடுத்தநாள் அவனுக்கு ஒருவித அதிர்ஷ்டம் வர இருந்தது. தன் மனைவி காயத்ரியிடம் அந்தச் சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லி, அவளை மகிழ்ச்சி வெள்ளத் தில் ஆழ்ந்தத் துடித்தான்.

அவன் வேலை பார்த்து வந்த ‘ஜாக்ஸன் அண்ட் பீடர்ஸன் கம்பெனி’யின் பிரதம டைரெக்டர் ஜாக்ஸனுக்கு ஒரு பெண் அந்தரங்கக் காரியதரிசி உண்டு. அவள் நாலைந்து மாதங்களுக்கு ‘லீவ்’ எடுத்துக் கொள்வதாக இருந்தாள், தன் பிரசவத்தை உத்தேசித்து. அவள் லீவில் இருக்கும் சமயம் யாரை அந்தரங்கக் காரியதாசியாக நியமிப்பது என்பதற்காக அடுத்தநாள் தேர்வுப் பரீட்சை நடக்க இருந்தது. கருக்கெழுத்து, தட்டெழுத்துப் பரீட்சைகளில் ஸ்டெனே’க்களாக அங்கே வேலை பார்த்து வந்த மூன்று பேர்களை மட்டுமே “தேர்வு’க்கு அழைத்திருந்தார்கள். அம் மூவரில் கிருஷ்ணமூர்த்தியும் ஒருவன்.

அந்த வேலை கிடைத்தால் மாதா மாதம் இருநூற்றைம்பது ரூபாய் அதிகம் கிடைக்கும். எதிர்பார்க்க முடியாத அதிர்ஷ்மல்லவா அது? விஷயம் தெரிந்தால் மனைவி காயத்ரி எல்வளவு சந்தோஷப்படுவாள்?

அவளை மணத்ததிலிருந்து அவனுக்குப் பல வித நன்மைகள் உண்டாயின. அதற்கு முன்பு வீடு இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தவனுக்கு, அவளை மணந்த இரண்டு மாதங்களுக்குள் கம்பெனிக்குச் சமீபத்திலேயே ஒரு நல்ல வீடு கிடைத்தது. வேலைக்காகத் திண்டாடிக் கொண்டிருந்த அவன் தம்பிக்கு வேலை ஆயிற்று. ஆறு வருஷங்களாகக் குணமாகாமல் படுத்த படுக்கையாக இருந்த அவனுடைய அம்மாவின் நோய் படிப்படியாகக் குறைந்து, அவள் எழுந்து நடமாடும் நிலையை அடைத்திருந்தாள். இன்னும்….

இதெல்லாம் அவன் நினைவுக்கு வந்தது. ‘என்ன இருந்தாலும் காயத்ரி அதிர்ஷ்டசாலி, அவளுடைய அதிர்ஷ்டத்தினால் இந்த வேலையும் எனக்குந்தான் கிடைக்கும்’ என்ற திட நம்பிக்கையுடன் வீடு திரும்பினான்.

மலர்ந்த முகத்துடன் அவனிடம் காப்பியைக் கொடுத்துக் கொண்டே, “இன்று பகல் ஒரு வியாபாரம் செய்தேன், என்ன வென்று உங்களால் சொல்ல முடியும?” என்று கேட்டாள் காயத்ரி.

“நாளைக்கு நமக்கு ஒரு அதிர்ஷ்டம் வாப் போகிறது, அது என்னவென்று சொல்லிவீடு, நீ என்ன வியாபாரம் செய்தாய் என்று நானும் சொல்லிவிடுகிறேன்” என்று சிரித்தபடியே கூறினான் கிருஷ்ணமூர்த்தி.

“நான் என்ன ஜோசியமா கற்று வைத்திருக்கிறேன், வரப் போவதை முன்கூட்டியே சொல்ல?” என்று கேட்டாள்.

“நீ என்ன செய்திருப்பாய் என்று சொல்ல எனக்கு மட்டும் ஜோசியம் தெரியுமா, என்ன?” என்று கூறிவிட்டு, “காயத்ரி! நாளையில் இருந்து நாலைந்து மாதங்களுக்கு நான் ஆபீஸ் டைரக்டரின் அந்தரங்கக் காரியதரிசியாக வேலை செய்யப் போகிறேன். சம்பளம் நானூற்றைம்பது ரூபாய்” என்றான் மிகுந்த உற்சாகத்துடன்.

“நிஜமாகவா? உத்தரவு வந்துவிட்டதா?” என்று ஆவலுடன் கேட்டாள் காயத்ரி.

“நாளைக்கு அதற்கான தேர்வுப் பரீட்சை நடக்கப்போகிறது. நாளை சாயந்திரமே முடிவும் தெரிந்து, உத்தரவும் உடனே கைக்குக் கிடைத்துவிடும்” என்றான்.

அவள் சிரித்துக் கொண்டே, “உத்தரவு கிடைப்பதற்குள்ளாகவா இவ்வளவு சந்தோஷம்! நம்முடைய அதிர்ஷ்டம் எப்படி யிருக்குமோ?” என்றாள்.

“உன் அதிர்ஷ்டத்தினால் இந்த வேலை கட்டாயம் கிடைக்கும், காயத்ரி, அதுவும் இல்லாமல் கம்பெனியிலேயே எல்லாரும் அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்றான் மிகப் பெருமையாக.

“என அதிர்ஷ்டத்தைப் பற்றி நீங்கள்தான் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும்! சரி! சமையல் உள்ளுக்கு வருகிறீர்களா? நான் வாங்கியதைக் காட்டுகிறேன்” என்று கூப்பிட்டாள், அவளைப் பின்தொடர்ந்து சமையலறைக்குச் சென்றான் அவன்.

அங்கே ஒரு நீண்ட பலகையின்மேல் வரிசையாக ஏமெட்டுப் புதிய கண்ணாடி ஜாடிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒன்றில் துவரம்பகுப்பு, இன்னொன்றில் சர்க்கரை, மற்றென்றில் காப்பிய பொடி, நாலாவதில் ரவை…என்று சாமான்களின் பெயர்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன, சில ஜாடிகள் காலியாக இருந்தன.

கிருஷ்ணமூர்த்தி பெருமையுடன் காயத்ரி பைப் பார்த்தான். “ஜாடிகள் நன்றாக இருக்கின்றன! அதைவிட அவற்றை நீ வரிசைப்படுத்தி வைத்திருப்பது வெகு ஜோர்!” என்று குதாகலத்துடன் சொன்னான்.

“என்ன விலைக்கு வாங்கி இருப்பேன் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று கேட்டாள் அவள்.

“எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம். எத்தனை அழகாக இருக்கின்றன!” என்று மழுப்பினான் அவன்.

“அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாது. விலையைச் சொல்லுங்கள்” என்றாள் புன்சிரிப்புடன்.

“சொல்லட்டுமா? எல்லாவற்றுக்கும் சேர்த்துப் பத்து ரூபாய். சரிதானா?”

“தப்பு!”

“அதைவிட அதிகமா? குறைவா?”

“அதை நான் ஏன் சொல்கிறேன்!”

“அப்படியானால் என்னால் விலையைக் கூற முடியாது. தயவு செய்து நீயே சொல்லிலிடு” என்று சொன்னான்.

“அப்படி வாருங்கள் வழிக்கு….வீட்டில் இருந்த சில பழைய துணிகளைப் போட்டுத்தான் வாங்கினேன். பணமாக ஒன்றும் கொடுக்கவில்லை” என்றாள்.

அதைக் கேட்ட அவனுக்குத் ‘தீக்’கெனப்பட்டது. திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்ததுபோல், ‘விடுவிடு ‘வென்று முன்னால் உள்ள அறைக்கு ஓடினான், விஷயம் புரியாத காயத்ரியும் அவன் பின்னால் ஓடினாள்.

அங்கே இருந்த ‘கோட் ஸ்டாண்’டை நோக்கினான். அவன் எதிர்பார்த்து வந்த வஸ்து அங்கே இல்லை! அவன் முகம் சிவந்தது. வந்த வேகத்தோடு திரும்பினான். காயத்ரி அவன் பின்னாலேயே கலவரத்தோடு நின்று கொண்டிருந்ததைக் கண்டான்.

“காயத்ரி! ஸ்டாண்டில் இருந்த என் பழைய கோட் எங்கே?” என்று இரைந்தான்.

அவள் கலவரம் மறைந்தது. விஷயத்தைப் புரிந்துகொண்ட அவளுக்குச் சிரிப்பு வந்தது. “அப்பா! என்னமோ ஏதோ என்று பயத்து போய்விட்டேன். அந்தப் பழைய கோட்டைப் பார்க்கவா அப்படி விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

“விளையாடவேண்டாம், காயத்ரி! அதைக் கூடவா ஜாடிக்காரனிடம் போட்டாய்?” என்று கோபத்துடன் கேட்டான்.

“ஆமாம்! அதனாலென்ன? அதன் கழுத்துப் பட்டையெல்லாம் அநேகமாகக் கிழிந்து போய்விட்டதே! கையிலும் ஒரு கிழிசல் இருந்தது” என்றான் நிதானமாக.

“கிழிந்திருந்தால் என்ன? அது எவ்வளவு ‘ஆகி வந்த’ கோட்டு என்று உனக்குத் தெரியுமா? அதைப் போட்டுக் கொண்டு, எத்தனை பரீட்சை எழுதி வெற்றி பெற்றிருக்கிறேன்! நாளைக்குக்கூட அதைப் போட்டுக் கொண்டு தேர்வுப் பரீட்சைக்குப் போக எண்ணியிருந்தேன். எல்லாம் உன்னால் கெட்டுக் குட்டுச் சுவராகிவிட்டது. அவசரப்பட்டு என் அதிர்ஷ்டக் கோட்டைத் தொலைத்துவிட்டாயே. கண்ணாடி ஜாடி வேண்டுமானால் என்னிடம் பணம் கேட்டிருக்கக் கூடாதா?” என்று கூறி விட்டு, முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தான்.

”அந்தக் கோட்டு போய்விட்டால், என்ன ? என் அதிர்ஷ்டம்தான் உங்களுக்கு அந்த வேலையைச் செய்து கொடுக்கும் என்று முன்பு சொன்னீர்களே” என்றாள் காயத்ரி.

“இதோ பார், காயத்ரி. முட்டாள் தனமான காரியத்தையும் செய்துவிட்டு, இடக்காகப் பேசி என் கோபத்தைக் கிளறாதே” என்று உறுமினான் அவன்.

அவளால் சும்மா விருக்க முடியவில்லை. “அப்படி என்ன பெரிய மூட்டாள் தனமான காரியத்தைச் செய்துவிட்டேன்? நீங்கள்கூட ஜாடிகள் அழகாக இருந்ததாகச் சொன்னீர்களே, அப்போது உங்களுக்கு அது முட்டாள் தனமாகப் படவில்லையா?” என்றாள்.

அவ்வளவுதான்! கிருஷ்ணமூர்த்தி பைத்தியம் பிடித்தவனைப்போல் எழுந்து சமையல் அறைக்கு ஓடினான், மறுகணம் இரண்டு மூன்று ஜாடிகள் கீழே விழுந்து உடையும் சத்தம் கேட்டது. காயத்ரி சென்று பார்த்த போது, சமையலறை முழுவதும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன. நல்லவேளை ! காலியாக வைக்கப்பட்டிருந்த ஜாடிகளை மட்டுமே கீழே தள்ளி உடைத்திருந்தான்!

அவளுக்குத் துக்கம் நெஞ்சை அடைத்தது. அழுகையே வந்துவிடும் போலிருந்தது. விம்மும் குரலில், “இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு முன் கோபம் கூடாது. ஜாடிகளை உடைத்துவிட்டதால் உங்கள் கோட்டு கிடைத்தது போலாகுமா?” என்று கேட்டாள்.

அவன் பதில் சொல்லவில்லை. அவளை விழித்துப் பார்த்துவிட்டு மறுபடியும் முன் அறைக்குப் போய்விட்டான். அவன் கோபம் மட்டும் அடங்கினதாகத் தெரியவில்லை. தன் கோட்டுடன் தன் அதிர்ஷ்டமும் போய்விட்டதாகவே அவன் நம்பினான்.

அன்றிரவு அவன் சாப்பிடவும் மறுத்து விட்டான். காயத்ரி இரண்டு மூன்று தரம் கூப்பிட்டுப் பார்த்தாள். அதற்குமேல் வற்புறுத்தவும் அவளுக்குப் பயமாக இருந்தது. கோபத்தில் இசைகேடாக வேறு ஏதாவது செய்துவிட்டால் அவள் என்ன செய்ய முடியும்? ஆகவே, அவளும் சாப்பிடாமல் எல்லாவற்றையும் மூடி வைத்துவிட்டுப் படுத்துக் கொண்டாள்,


மறுநாள் காலை எழுந்தபோது கிருஷ்ணமூர்த்தியின் கோபம் அடங்கி யிருந்தும், கோட்டைப் பற்றிய கவலை மட்டும் நீங்க வில்லை. அது இல்லாமல் ‘தேர்வுப் பரீட்சை’க்குப் போவது எப்படி என்ற கவலைதான். காயத்ரி எவ்வளவோ முயன்றும் அவளிடம் அவன் முகம் கொடுத்துப் பேசவேயில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான் புதுக் குடித்தனம் தொடங்கியிருந்த அவர்களிடையே குதூகலமும், கொம்மாளமும் மண்டிக் கிடப்பதற்குப் பதில், பயங்கர அமைதி வீட்டில் நிலவியது. மௌனமாகவே எல்லாக் காரியங்களும் நடந்தன.

கடைசியில் அவன் கோட்டு எதுவும் போட்டுக் கொள்ளாமலேயே வேலைக்குக் கிளம்பியதைக் கண்ட காயத்ரியால் சும்மாயிருக்க முடியவில்லை.

“உங்கள் கல்யாணக் கோட்டைப் போட்டுக் கொண்டு போகக் கூடாதா? பழைய கோட்டு போய்விட்டதற்காக, வேறு எந்தக் கோட்டையும் போட்டுக் கொள்ளக் கூடாதா?” என்று கேட்டாள்.

“புதுக் கோட்டு போட்டுக் கொண்டு போவதால் போன அதிர்ஷ்டம் திரும்பி விடுமா, என்ன?” என்று கூறியிட்டுக் கிளம்பி விட்டான்.

“ஹூம் ! அவர்கள் வேலை கொடுத்தால் கூட இவர் வேண்டாமென்று சொல்லிவிடுவார் போலிருக்கிறதே, பழைய கோட்டு காரணமாக” என்றெண்ணினாள் அவள்.

அவள் கவலைப்பட்டதற்கிணங்க அன்று தேர்வுப் பரீட்சை நடத்தவேண்டிய டைரெக்டர் ஜாக்ஸன் காரியாலயத்துக்கே வரவில்லை. எனவே, பரீட்சை தள்ளி வைக்கப்பட்டது.

அடுத்த இரண்டு நாட்களும்கூட ஜாக்ஸன் வரவில்லை. அந்தரங்கக் காரியதரீசி பதவி பற்றிய நம்பிக்கை கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து அடிபோடு போய்விட்டது. ‘எல்லாம் அந்தப் பழைய கோட்டு போனதன் விளைவு’ என்று திடமாக நம்பினான்.

அந்த மூன்று நாட்களும் அவர்கள் வீடு களையிழந்து காணப்பட்டது. தம்பதிகளுக்குள் அதிகப் பேச்சு வார்த்தையே இல்லை. காயத்ரி ஓரிருமுறை வேலையைப் பற்றி அவனிடம் கேட்டுப் பார்த்தாள். அவள் பிடி கொடுத்துப் பேசினால்தானே! அந்தப் பதவி அவனுக்குக் கிடைக்கவே யில்லையா அல்லது தேர்வுப் பரீட்சையின் முடிவுதான் அறிவிக்கப்படவில்லையா என்று அவளால் ஊகிக்க முடியவில்லை. தன்னால் தன் கணவனுக்கு வரவிருந்த அதிர்ஷ்டம் வராமற் போய்விட்டதோ என்று கவலை கொண்டாள்.


நாலாவது நாள் கிருஷ்ணமூர்த்தி காரியாலயத்துக்குள் நுழைந்ததும் அக்கௌண்டண்ட் ஆனந்தரங்கம் அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கு குலுக்கு என்று குலுக்கி, “என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்றார்.

கிருஷ்ணமூர்த்திக்கு விஷயம் புரிய வில்லை. “எதற்கு வாழ்த்துக்கள்?” என்று கேட்டான்.

“எதற்கா?…போய் நோட்டீஸ் போர்டைப் பாரும். பார்த்து வீட்டு நேரே ஜாக்ஸனின் அறைக்குப் போய். இன்றிலிருந்து புது வேலையை ஒப்புக் கொள்ளும்” என்றார்.

“அப்படியானால் டைரக்டர் வந்தாயிற்றா? தேர்வுப் பரீட்சை என்ன வாயிற்று?” என்று ஆவலோடு கேட்டான்.

“நீர் ஒரு பைத்தியம். நமது டைரக்டரின் போக்கு உமக்குத் தெரியாதா! ‘முதலில் தேர்வுப் பரீட்சை வைக்க வேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்றானா! இன்று காலை வந்ததுமே என்னைக் கூப்பிட்டு, ‘பரீட்சை வேண்டாம். மூன்று பேரில் சீனியராக இருப்பவரை நியமித்து, ஒரு அறிக்கை தயார் செய்’ என்றான், நான் அறிக்கையைக் கொண்டு போனதும், ‘மூர்த்தி திறமைசாலி யாயிற்றே. சீனியராகவும் இருப்பது நல்லதாயிற்று’ என்று சொல்லிக் கொண்டே, உற்சாகத்துடன் கையெழுத்துப்போட்டான்” என்று முடித்தார்.


அன்று மாலை வீடு திரும்பிய கிருஷ்ண மூர்த்தி உற்சாகமாக, “காயத்ரி! காயத்ரி!” என்று கூப்பிட்டான். சமையலறையிலிருந்து ஓடிவந்த காயத்ரி அவன் முகத்தைப் பார்த்து விஷயத்தை ஒருவாறு புரிந்து கொண்டாள், அவளுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு, “காயத்ரி! நான் நாலு நாட்களாக முட்டாள்தனமாக நடந்து கொண்டு விட்டேன். என்னை மன்னித்து விடு” என்றான்.

“முதலில் கை விடுங்கள், யாராவது பார்க்கப் போகிறார்கள், கதவு திறந்திருக்கிறது” என்று கைகளை விடுவித்துக் கொண்டாள். பிறகு, “நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை கிடைத்து விட்டதல்லவா?” என்றாள் சிரித்தபடி.

“தேர்வுப் பரீட்சை இல்லாமலேயே எனக்குக் கொடுத்துவிட்டார்கள்!” என்றான்.

“உங்கள் பழைய கோட்டு இல்லாமலே வேலை கிடைத்து விட்டது, பார்த்தீர்களா?” என்றாள் குறும்பாக.

“என்ன? என் இதமையில் உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டான்.

“நான் அப்படிச் சொல்வேனா? உங்களுக்குத்தான் உங்கள் திறமையில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அதிர்ஷ்டத்திற்குக் கோட்டையும் என்னையும் நம்பியிருந்தீர்கள்?” என்றாள். அதைக் கேட்டு அவன் சிரித்தான்.

‘நாதான் சொல்ல வந்தது வேறு, திறமை மட்டும் இருந்தால் போதாது. திறமையோடு அதிரஷ்டமும் இருக்கவே தான் உங்களுக்கு இந்த வேலை கிடைத்திருக்கிறது” என்றாள்.

“சரியாகச் சொல்லி விட்டாய், காயத்ரி!…அது சரி! நான் உன் கண்ணாடி ஜாடிகளை உடைத்து விட்டேனல்லவா? பணம் தருகிறேன். புதிதாக இன்னும் சில ஜாடிகள் வாங்கிக் கொண்டு விடு!” என்றான்.

“பணம் கொஞ்சம் சேர்த்துக் கொடுங்கள். கண்ணாடி ஜாடிகளுக்குப் பதில் புது பித்தளை பிப்பாக்களாக லாங்கிக் கொள்ளுகிறேன். உங்களுக்குக் கோபம் வந்தாலும் அவை சுலபமாக உடையாம லிருக்கும்” என்றாள் சிரித்தவாறு. அவனும் அவளுடைய சிரிப்பில் கலந்து கொண்டான்.

– 1957-06-16, கல்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *