திருமுழுக்குப் பிரபாவம்
கதையாசிரியர்: சி.எம்.ராமச்சந்திர செட்டியார்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 11, 2025
பார்வையிட்டோர்: 61
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிற்றூர் உண்மையில் ஒரு சிறிய ஊர்தான். ஆனால் அதன் ஆலயமோ மிகப் பெரியது. அது ஒரு பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்தது. ஆகவே ஆலயப் பணிவிடையாளர்களுக்குச் சொல்லவேண்டுமா? அர்ச்சகர், சாஸ்திரிகள் முதற்கொண்டு திருவலகுவரை சகல கோயிற் சிப்பந்திகளும், ஆலயத்தைச் சார்ந்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அவ்வூரில் ஆலயத்துக் கைங்கர்யம் இல்லாக் குடிகள் இல்லை என்றால் அது ஒரு குறை என்று யாரும் கருதமாட்டார்கள். பாடல் பெற்ற ஸ்தலமாகையால் நகரத்துச் செட்டியார்கள் திருப்பணி செய்ய முன் வந்தார்கள். பண்டைய உருவத்தையே மாற்றிப் பளபளப்பான கல் வேலை செய்தும் புது மாதிரி ஆலயம் ஆக்கிவிட்டனர். வைதீகர்களும், சுத்த சைவரும் அரசியற் சிற்பிகளும் என்ன கூக்குரலிட்டும் செவிடன் காதில் ஊதின சங்குபோலாயிற்று. பழைய கல்வெட்டுகள் எல்லாம் அநாகரிகம் என்று செதுக்கப்பட்டன கருங் கண்ணாடிபோல் சுவர்கள் தீட்டப்பட்டன. அஸ்திவாரம் முதற்கொண்டு மாறிவிட்டன. ஆனால் இப்போதைய திருப்பணி ஆன ஆலயமோ மாம்பலத்துத் திருமாளிகைபோல் வெகு சுத்தமாகிவிட்டது. இத்தனை திருப்பணி செய்த செட்டியாருடைய பெயரையும் உருவத்தையும் அங்கு நிலைநிறுத்த முடியவில்லை. சிற்றூர்க் குடிகள் கேவலமானவர்களா? செட்டியார் பெயர் செதுக்கியக் கல்லை ஒரே இரவில் அழித்துவிட்டார்கள். அவரது உருவங் கொண்ட தூணில் மூக்கும் காதும் சிதைத்துவிட்டனர். பின் என்ன மீதியிருக்கும்? எல்லா அறிகுறிகளும் மாற்றப்பட்டன. இதுதான் செய்ந்நன்றிக்குத் தற்காலச் சமய அகராதியில் ஒரு உதாரணமாகும் என்னலாம்.
சிற்றூர்ச் சிவாலத்யற்குப் பண்டைய அரசர்கள் ஒரு கிராமத்தைத் தேவதானமாக விட்டிருந்தார்கள். இதில் வருடம் 8,000 ரூபாய் கிஸ்த்தி வரும். ஆனால் எந்த வருடத்திலும் 3000க்கு மேல் வசூல் ஆனதில்லை. இந்த வசூலுக்கும் 500 சில்லறைப் பிராதுகள் செய்ய வேண்டி வரும். அதிகமாக யாராவதொரு தருமகர்த்தர் முயன்றால் அவர் மீது சாணி அபிஷேகமும் வீட்டின் மீது கல்லெறிப் பூசையும் சகஜம் ஆகும். பெரும்பான்மையான குடிகள் ஆலயச் சொத்துக்களையே மானியங்களாகக் கொண்டவர்கள். ஆனதினால் சுவாமிக்குக் கப்பம் செலுத்த வேண்டிய கடமை இல்லை என்பார்கள். கடுமையாக எந்தத் தருமகர்த்தர் கேட்டு விட்டாலும் அவருடைய கால் அந்த ஊர் எல்லைக்குள் வராமல் தடுத்து விடுவார்கள். அதுவும் மிஞ்சினால் அடுத்த முறை அவருடைய வேலையே போய்விடும். மற்றொரு ஆள் நியமிக்கப்பட்டு விடுவார். எவர் பணியார்களை வரி கேட்காமல், அவர்களிடம் யாதொரு வேலையும் வாங்காமல் தம் சொந்தப் பணத்திலிருந்து திருவிழா நடத்தி மற்ற வரும்படியிலிருந்து வேண்டியமட்டும் தன் கைப் பொறுப்பை மீட்டிக் கொள்வாரோ அந்தத் தருமகர்த்தாவே இரண்டாமுறை நியமிக்கப்படுவார். அப்படிப்பட்ட ஒரு தருமகர்த்தர் நடராஜப் பிள்ளை என்பவர். அவர் இரண்டு முறை தரும கர்த்தாவாக இருந்து சிற்றூர் அருமை பெருமைகள் முழுவதையும் அனுபவித்தவர். திருவிழாக்களில் மேளம், பொய்க்கால்குதிரை, வாண வேடிக்கை, நடனம் முதலியவைகளைக் கிரமமாக நடத்திவைத்துப் பெரும் புகழைச் சம்பாதித்துக் கொண்டார். சித்திரைத் திருவோணத்தின்போது நடராஜ அபிஷேகத்தைத் தம் சொந்தச்செலவி லேயே நடத்துவதாகச் சொல்லி, அக்கட்டளையத் தவறாது நடத்தி வருகிறார். தேவரடியார் தெரு மிகவும் பிரபலம் அடைந்தது. முன்னே அத்திருப்பணியார்கள் ஐந்து குடிகளாக இருந்தவர்கள்; இப்போதோ 50 குடிகளாகப் பெருகிவிட்டனர். அவர்கள் நடராஜப் பிள்ளையைப் புகழாத புகழ் இல்லை. இரண்டு முறை தருமகர்த்தர் வேலை சரிவரப் புகழ்உற நடாத்திய பிறகு கணக்கெடுத்ததில் ஆலயத்தின் வரவு செலவுத் திட்டத்தில் 25,000 ரூபாய் அதிகம் செலவும், தம் சொந்தப் பொறுப்பில் ஆஸ்திக்குமேல் 25,000 ரூபாய்அடைவும் இருந்தது என்றால், பிள்ளையவர்களுடைய ஆளுகையைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா? அதிகார வர்க்கத்தினர் வேறொரு தர்மகர்த்தரை நியமித்தனர். பிள்ளைக்கோ பொறுக்கமுடியாத துக்கமும் கோபமும் வந்தன. இச் செய்ந்நன்றி கொன்ற மக்களை என்ன செய்யலாம் என்று தம் நண்பரிடம் ஆலோசித்தார். எதுவும் புரிய முடியவில்லை. பலவழி ஆலோசனை செய்தும், முடிவில் ஒன்றும் கைகூடவில்லை.
ஆனால் பிள்ளையவர்கள் தாம் கைக்கொண்ட சித்திரைத் திருவோண அபிஷேகத்தை மாத்திரம் நிறுத்தவில்லை. வருடா வருடம் 100 ரூபாய் அளவில் அதனைச் செய்து வைப்பார். அன்றைய நாள் அபிஷேகத்திற்கு வரும் அந்தணர்கள் அவரது ஆட்சியைக் குறித்துத் திருப்புகழ் பாடி அவரது நெஞ்சைக் கலக்கி விடுவார்கள்.
ஒரு வருடம் சித்திரை மாசத்தில் திருவோண நட்சத்திரம் இருமுறை வந்தது; 4-ந் தேதியிலும் 31-ந் தேதியிலும் வந்தது. சிற்றூர் ஆலயத்தில் இந்த நாள்தான் அபிடேகம் என்று முன்னமே குறிக்கப்படவில்லை. பஞ்சாங்கங்கள் பலவிதமாக இருந்தன. தமக்கு வேண்டிய சாஸ்திரி ஒருவரின் பேச்சைக் கேட்டு நடராஜப் பிள்ளை சித்திரை மீ 3-ந்தேதியிலேயே 50 ரூபாய் சாமான்களைத் தயார் படுத்திக் கோயிலுக்கு அனுப்பி வைத்தார். தற்கால தர்மகர்த்தர் மூன்று மைலுக்கப்பால் குடியிருந்தார். ஆலய மனேஜர் உடனே சொல்லி அனுப்பினார். அவருக்கோ படிப்பு சிறிது மட்டு, கமிட்டிக் காரியதரிசிக்குச் சொல்லி அனுப்பினார். அவர் பஞ்சாங்கங்களைப் புரட்டிப் பார்த்தும் ஒன்றும் புரியவில்லை. சிதம்பரத்திற்குத் தந்தி அடித்தார். அங்கிருந்து பதிலும் வந்தது. 31-ந் தேதிதான் சிதம்பரத்தில் அபிஷேகம் நடப்பதாகத் தெரிந்தது. உடனே தர்மகர்த்தர் ஆலய மானேஜருக்குத் தெரியப்படுத்தினார். அபிஷேகம் நிறுத்தப்பட்டது. நடராஜப் பிள்ளைக்கு வந்தது அடக்க முடியாத கோபம். சிற்றூர் அந்தண சிரேட்டர்கள் அதற்குத் தூபம் போட்டார்கள். ”உங்களுக்கு தருமகர்த்தா வேலை மறுபடியும் கொடுக்காத கமிட்டிக் காரியதரிசிதான் இந்த அக்கிரமச் செயலுக்குக் காரணம். ‘குதிரை ஆளைக் கொன்றதுமல்லாமல் குழியையும் பறித்ததாம்’ என்றபடி அவன் தங்கள்மீது பொறாமை கொண்டு அபிஷேகத்யுைம் நிறுத்திவிட்டான். இதனைத் தெருவுக்கு இழுக்காமல் சும்மா விட்டுவிட்டால், ‘மனுசன்’ என்று ஏன் பெயர் எடுக்க வேண்டும்?” என்று கோபத்தைக் கிளப்பி விட்டார்கள். உடனே வழக்கறிஞர் அபிப்பிராயம் கேட்கப்பட்டது. சட்ட நூல்கள் புரட்டப்பட்டன. சட்டப்படி நோட்டீசு விடப்பட்டது. வழக்கும் தொடரப்பட்டது. வேணுமென்றே அவமானப் படுத்துவதற்காகவும். கஷ்டத்தை உண்டு பண்ணுவதற்காகவும் முன்னாலே சதியாலோசனை செய்து சரியானபடி 4-ந் தேதியன்று அபிஷேக நாள் இருக்க அதைத் தள்ளி வைத்து 31-ந் தேதியன்று குறிப்பிட்டுச் சேகரித்து வைத்த சாமான்கள் அழுகிப்போக கஷ்டப்படுத்தி விட்டதற்காக வழக்கு தொடரப்பட்டது. கணக்குப்படி அபிஷேக சாமான்கள் 250 ரூபாய், அவமானப்படுத்தியதனால் மான நஷ்டம் 2000. ஆக 2,250 ரூபாய்க்கு நஷ்டஈடு கொடுக்கும்படி பிராது செய்து அதற்குக் கட்டணம் முழுதும் கட்டப்பட்டது. பெரிய வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர். வாதி நடராஜப் பிள்ளை : பிரதிவாதிகள் 1. தர்மகர்த்தர், 2. கமிட்டிக் காரியதரிசி இரண்டாவது பிரதிவாதி தூண்டுதலின் பேரில் முதல் பிரதிவாதி தடுத்தபடியால் இருவரும் பிரதிவாதிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டார்கள். ஆலயத்தாரும் இரண்டு பிரதிவாதிகளும், இரண்டு வழக்கறிஞர்களை நியமித்தனர். வழக்கு வெகு நாள் தள்ளி வைக்கப்பட்டது. இரு புறங்களிலும் 50, 50 சாட்சிகளை அழைத்திருந்தார்கள். ஆகையால் நீதிபதிகள் வழக்கை எடுக்கச் சிறிது கூசினார்கள். ஒரு முறை வழக்கு வேறு நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டது. இரு திறத்தாருக்கும் அங்கே போய்வரச் செலவோ அபரிமிதம் ஆயிற்று. ஒவ்வொரு வி சாரணைக்கும் 50 சாட்சிகளைக் கூட்டிக்கொண்டு 30 மைல் தூரத்திலுள்ள நீதிமன்றத்திற்குச் செல்வது என்றால் செலவு குறைவாகுமா? உபய கட்சிக்காரர்களுக்கும் நடந்து நடந்து கால் ஓய்ந்துவிட்து. சலித்துப்போய் விட்டது. வழக்குத் தொடங்கி மூன்று வருடமாயிற்று. நீதிபதி இன்னமும் தள்ளி வைக்க முடியவில்லை. மேல் மன்றத்திற்குச் சமாதானம் கூறவேண்டுமல்லவா? இதற்குள் ஒரு விடா முண்டனான நீதிபதி வந்து சேர்ந்தார். ஒரு குறித்த நாளில் வழக்கு நடத்துவதாகச் சொல்லிவிட்டார். இருதரப்பாரும் தயாராகிவிட்டனர். சாட்சிகளுக்குச் சிற்றுண்டி தாம்பூலம், விருந்து இவைகளுக்கு அளவே இல்லை. நீதி மன்றத்தில் சிற்றூர்த் திருக்கோயில்-திருவிழாவே மாறி வந்து விட்டதுபோல், ஆர்ப்பாட்டம் இருந்தது. வழக்கு விசாரணையும் தொடங்கிற்று. மூன்று மாதம் நடந்தது 50 சாட்சிகள் இரு புறமுமாக விசாரிக்கப்பட்டனர். நாள் ஆக ஆக ஆர்வம் குறைந்தது.
விசாரணையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
(1) ஒரு மாதத்தில் இரண்டு நட்சத்திரங்கள் வந்தால் அவைகளில் எந்த நட்சத்திரத்தில் அபிஷேகம் செய்வது அதைப்பற்றி ஆகமங்கள் என்ன சொல்லுகின்றன? (2) அந்த விதியைத் தெரிந்தே பிரதிவாதிகள் மாற்றினார்களா ? (3) அவ்வாறு மாற்றுவதற்குச் சதியாலோசனை நடந்ததா? (4) அச்சதி வாதியை அவமானப்படுத்துவதற்கா? (5) அதனால் வாதிக்கு நஷ்டம் ஏற்பட்டதா? (6) நஷ்டத்தின் மதிப்பு என்ன? (7) நஷ்டம் யார் கொடுக்க வேண்டியது? (8) இதனைத் தீர்ப்புச் சொல்வதற்கு நீதிபதிக்கு அதிகாரம் உண்டா? (9) வழக்குத் தொடுப்பதற்குச் சட்டப்படி அதிகாரம் வாங்கப்பட்டதா? (10) முடிவான தீர்ப்பு என்ன? இவை முதலான கேள்விகள் குறித்து, சிதம்பரம் முதலிய இடங்களில் கமிஷன் மூலமாகச் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பல ஆகமங்கள் தாக்கல் செய்யப்பட்டன. காமிகாகமமும் வைத்தியநாத தீட்சிதரும் அவைகளில் முக்கியமானவை. இரு கட்சியிலும் இரண்டு ஏட்டுப் பிரதிகளைத் தாக்கல் செய்தனர். அவை வெகுதூரத் தலங்களிலுள்ள சிறந்த குருக்கள் அகங்களிலிருந்து எடுத்துக் கொண்டுவரப்பட்டன.
வாதி பக்கத்திற்குச்
சிவாச்சாரியார் விசாரிக்கப்பட்டா.
வாதி வக்கீல்:சுவாமிகளே ! தாங்கள் எந்த ஸ்தலம்? என்ன தொழில்?
சாட்சி: நான் இருப்பது பஞ்சபூத ஸ்தலமாகிய பிருதிவி க்ஷேத்திரம். நான் அந்த ஸ்தலத்தில் உத்தம குருக்கள்.
வா.வ: என்ன சமயப் பயிற்சி உண்டு ?
சா: 4 வேதம், 6 சாஸ்திரம், 18 புராணம், இதிகாசம், ஆகமம், சமய நூல்கள் எல்லாம் வாசித்திருக்கிறேன்.
வா.வ: ஆலய பூஜாவிதிகள் பார்த்திருக்கிறீரா?
சா: ஆமாம், எனக்குக் கரதலாமலகம் போலத் தெரியும்.
வா. வா: ஒரு மாதத்தில் இரண்டு நட்சத்திரம் வந்தால் நடராஜ அபிஷேகம் எப்போது செய்வது?
சா : முதல் நாளில் தான் செய்ய வேண்டும்.
வா.வ: இதற்கு என்ன ஆதாரம்?
சா: காமிகாகமம்-இதோ இந்நூலில் நடராஜ அபிஷேக விதி என்ற பாகத்தில் சொல்லியிருக்கிறது.
(நூல் எடுத்துக்கொள்ளப்பட்டது- குறி இடப்பட்டது.)
வா.வ: அந்தப் பாகத்தை வாசியும்
உடனே அந்த பாகங்களைச் சிவாசாரியார் வாசித்துத் தமிழில் பொருள் கூறினார். அதன் தாற்பரியம் என்னவெனில், ஒரு மாதத்தில் இரண்டு நட்சத்திரங்கள் வருமாயின் முந்திய நட்சத்திரமே சிரேஷ்டமானது, அதிலேதான் நடராஜ அபிஷேகம் செய்ய வேண்டும். தவறினால் பாவம் உண்டாகும் என்பது.
குறுக்கு விசாரணை:
பிரதிவாதி வக்கீல்: சுவாமிகளே! இந்நூல் யாரிடம் இருந்தது?
சா: என் கிருகத்தில்தான் இருப்பது-இது பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் இருப்பது.
பி.வ: இந்நூலை நன்றாக வாசித்திருக்கிறீரா?
சா : வாசித்திருப்பது மாத்திரம் அல்ல. நன்றாக மனப்பாடமும் வரும்; எனக்குச் சாகித்தியமும் வரும்.
பி.வ: சாகித்தியம் என்றால் என்ன?
சா : சமஸ்கிருதத்தில் நவீன சுலோகங்களை இயற்றக்கூடும். அத்தனை மட்டும் படித்திருக்கிறேன்.
பி.வ: தங்கள் படிப்பின் நுட்பத்தைக் கேட்டு மிகவும் சந்தோஷம். அப்படிப்பட்ட அர்ச்சகர்கள் இன்னும் பலபேர் இருந்தால் நமது ஆலயங்கள் சிறப்பு அடையும்.
நீதிபதி: ஐயா, இந்தப் பிரசங்கம் வேண்டாம். அவசியமான கேள்விகளை மாத்திரம் கேளும்.
பி.வ: மன்னிக்கவேண்டும். நான் சொல்லும் விஷயம் பின்னால் விளங்கும்.
நீதிபதி: சரி மேலே சொல்லுங்கள்.
பி.வ: இவ்வாகமம் யார் எழுதியது?
சா: பரமசிவனே மொழிந்தது.
பி.வ: அதைக் கேட்வில்லை. இதனைக் கைப்பிரதி செய்தவர் யார்?
சா : தெரியாது, இது மிகப் பழைய பிரதி.
பி.வ: எல்லாப்பாகமும் பழமையானதா?
சா: இது என்ன கேள்வி? முழுதும் பழமையானதுதான் யார் ஆகமத்தைத் தொட முடியும்?
(சிறிது மனக்கலக்கங் கொள்ளுகிறார்.)
பி.வ: சுவாமி! நடராஜ அபிஷேக விஷயம் எங்கே சொல்லப் பட்டிருக்கிறது.
சா: இவ்வாகமத்தில்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
பி.வ: அது சொல்லியிருக்கும் பாகத்தின் தலைப்பு என்ன?
சா : நடராஜ அபிஷேக விதி என்பது அதிகாரத்தின் தலைப்பு.
பி.வ: எத்தனை சுலோகங்கள்?
சா: பதின்மூன்று சுலோகங்கள்.
பி.வ: அதிகாரத்தின் இலக்கம் என்ன?
சா : நூலைத் திருப்புகிறார்; ஒன்றும் சொல்லவில்லை.
பி.வ: என்ன சுவாமி?
சா: இலக்கம் இல்லை
பி.வ: இலக்கம் இல்லையா ? ஏன் முன்னதிகாரம் இலக்கம் உண்டா?
(சாட்சி திருப்பிப் பார்க்கிறார்.)
சா: ஆம், 77-ஆம் அதிகாரம்.
பி.வ: பிந்திய அதிகார இலக்கம் என்ன?
சா: 78-ஆம் அதிகாரம்.
பி.வ: 77-ஆம் அதிகாரம் எங்கே முடிகிறது?
சா: 505-ஆம் பக்கத்தின் மேல் வரியில் முடிகிறது.
பி.வ: 78-ஆம் அதிகாரம் எங்கே தொடங்குகிறது?
ச: 506-ஆம் பக்கத்தில் தொடங்குகிறது.
பி.வ: பதின்மூன்று சுலோகங்களும் எங்கே எழுதப்பட்டுள்ளன?
சா: 505-ஆம் பக்கத்தில் இரண்டாம் வரியிலிருந்து அப்பக்கம் முழுதும் எழுதப்பட்டுள்ளன.
பி.வ: நடராஜ அபிஷேக விதி என்ற 13 சுலோகங்களின் எழுத்துக்களும், 77,78 அதிகாரங்களின் எழுத்துக்களும் ஒரேமாதிரி இருக்கின்றனவா?
சா : ஏன் இல்லை?
பி.வ: பார்த்துச் சொல்லும்.
சா: எனக்குச் சிறிது சாலேசரம்.
பி.வ: கண்ணாடி கொடுக்கட்டுமா?
சா: இல்லை, பார்க்கிறேன்.
பி.வ: பார்த்துச் சொல்லும்.
சா: ஒரே மாதிரிதான் எனக்குத் தோன்றுகிறது.
(கண்ணைக் கசக்குகிறார்.)
பி.வ: இதனை நீதிபதியே கவனிக்க வேண்டும். சிறு குழந்தையும் இதனை வேறுபடுத்திச் சொல்லும்.
நீதி: அதனை வாதத்தில் வைத்துக் கொள்வோம். மேலே செல்லுக.
பி.வ: 77-ஆம் அதிகாரத்தின் தலைப்பு என்ன? .
சா: கர்ப்பக் கிருகப் பரிமாணம்.
பி.வ: 78-ஆம் அதிகாரத்தின் தலைப்பு?
சா : விமான நிர்மாணம்.
பி.வ: இவைகளுக்கு இடையில் உள்ளது நடராஜ அபிஷேக விதியா? (சாட்சி மௌனம் சாதிக்கிறார்.)
பி.வ: சரி, இந்நூலுக்கு அட்டவணை உண்டா?
சா : (புரட்டிப் பார்த்து) இருக்கிறது.
பி.வ: 77, 78-ஆய அதிகாரங்களின் பெயர்களை வாசியும்?
சா: 77 கர்ப்பக் கிருக நியமனம். 78 விமான நிர்மாணம்.
பி.வ : இடையில் நடராஜ அபிஷேக விதி என்று இருக்கிறதா?
சா: இல்லை.
பி.வ: அபிஷேக விதிகளைக் கூறும் அதிகாரங்கள் எந்தக் காண்டத்தில் இருக்கின்றன?
சா : நான்காம் காண்டம்.
பி.வ: ஆலய நிர்மாண விதிகள் எங்கே இருக்கின்றன.
சா: இரண்டாம் காண்டம்.
பி.வ: இந்தக் காரணங்களினாலே நடராஜ அபிஷேக விதி என்பது பின்னாலே ஒருவரால் இடைச் செருகலாகச் சொருகி விடப்பட்டதல்லவா?
சா : மௌனம்.
பி.வ: சுவாமி! சாகித்தியத்தில் வல்லவரான நீரே இந்தப் பதின்மூன்று சுலோகங்களையும் இயற்றி 77ஆம் அதிகாரத்தின் பின்னே 78-ஆம் அதிகாரம் அடுத்த பக்கத்தில் தொடங்கியிருக்க, இடையில் இருந்த காலி இடத்தில் செருகிவிட்டீர் என்று கூறுகிறேன். இது உண்மை அல்லவா? சாட்சி வெலவெலத்துப் போனார். நாக்குத் தடுமாறி, “இல்லவே இல்லை” என்றார்
இனிமேல் வழக்கைப் பற்றி அதிகம் கூறவேண்டியதில்லை. இடைச்செருகல் நிரூபிக்கப்பட்டதாய்க் கொள்ளப்பட்டது. வழக்குத் தள்ளிவிடப்பட்டது. பிரதிவாதிகளுக்குச் செலவுத்தொகை உத்தரவாயிற்று. இரு பக்கங்களிலும் ரூ.5000 விழுக்காடு செலவு ஆயிற்று. கோயில் பொக்கிஷம் காலியாயிற்று. நடராஜப் பிள்ளை கடனாளி ஆனார். வீடுவாசல் ஏலமாகிவிட்டது. நடராசனின் பாதமே கதி என்று எண்ணித் தாம் இயற்றிய அபராதங்கள் பிறரால் தூண்டப்பட்டு உண்டாயின என்று பிரார்த்தனையில் சொல்லிக் கொண்டு சிவனடியைச் சிந்தித்துக்கொண்டு நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார்.
– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.