திருமணம்





(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சற்றுப் பெரிய ஒரு வீடுதான் அது. அதன் முன் மண்டப மும் வீட்டுக்குத் தக்க வகையிலே பெரிதாக அமைந்திருந்தது.
அம்மண்டபத்தின் தரைக்கு, மெல்லிய மஞ்சள் வர்ண காபட் விரிக்கப்பட்டிருந்தது. அதன் தெற்குப் பகுதியில், ‘குசன்’ பண்ணப்பட்ட இருக்கைகள் பானா வடிவில் போடப்பட்டிருந்தன. மத்தியில், நாலடி நீளமான ஸ்ரூலொன்றும் இருந்தது. அதில், செயற்கை ரோஜா மலர்கள் சிரிக்கும் பூச்சாடி ஒன்றும் வைக்கப் பட்டிருந்தது.

மண்டபத்தின் வடபுற மூலையில் மேற்குப்புறச் சுவரோடு ஒட்டியவாறு இரும்பு அலுமாரி ஒன்றும் காணப்பட்டது. அதன் பக்கமாக, வடபுறச் சுவரோடு அணைந்தவாறு போடப்பட்டிருந்த சில்லுகள் பொருத்திய ஸ்டாண்டில் வர்ண தொலைக்காட்சிப்பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
அலுமாரியின் இடது புறமாய், கிழக்கை நோக்கியபடி இடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அவ்வீட்டின் சொந்தக்காரர் சரீப் ஹாஜியார் அமர்ந்திருந்தார். அவரின் எதிரே கைக்கதிரை ஒன்றில் அவரைப் பார்க்க வந்திருந்த சுலைஹா என்ற ஒரு பெண்மணியும் உட்கார்ந்திருந்தாள்.
அம்மண்டபத்தை முழுமையாய் ஒரு முறை நோட்டமிட் டுக் கொண்ட அப்பெண்மணி, முக்காட்டைச் சரிசெய்து கொண்டு உஷாராகிறாள்.
ஒட்ட நறுக்கிய நரை விரவிய கேசத்தை வலது கரத்தி னால் வருடி விட்டுக் கொண்ட ஹாஜியார், அப்பெண்ணிடம் உரையைத் தொடுக்கிறார்.
“இப்பயும் உங்கிட மகள் மஹ்மூத் பாளிஹாவிலதானே படிப்பிக்கிறா?
“ஓம்…காக்கா…”
“வேறு என்ன விஷேசங்கள்…”
“ஒண்டுமில்ல… உங்கட மகன என்ட மகளுக்கு கேட்டுப் பாப்பமிண்டுதான் நான் வந்த…” மெல்லியதாய் புன்னகை ஒன்றை இதழ்களிலே நெளியவிட்டுக் கொள்கிறாள்.
“அப்படியா… அப்படி என்ட மகன உங்கட மகளுக்கு மாப்பிள்ளையா எடுக்கிறண்டா அவனுக்கு சீதன ஆதனமா என்ன கொடுப்பீங்க…” ஆணித்தரமான ஒரு பதிலை அளிக்க வேண்டு மென்பதற்காக, அப்பெண்ணின் நிலைப்பாட்டை அவளின் வாய் மொழி மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இப்படியொரு வினாவை முன்வைக்கிறார் ஹாஜியார்.
”காக்கா…பெரிசாக் கொடுக்கிறத்துக்கு எங்களுக்கிட்ட ஒண்டுமில்ல… வீடுவளவு ஒண்டு மட்டுந்தான் இருக்கு… அதக் கொடுப்பம்…” வெள்ளை மனம் கொண்ட அப்பெண் உண்மையை அப்படியே வெளியே பிட்டு வைக்கிறாள்.
“அப்படியா…நீங்க என்னப்பத்தி செரியா அறியல்லப் போலத் தெரியிது… சொல்றன் கேளுங்க… இந்த ஊரிலரிக்கிற நல்ல பணக்காரர்கள்ள நானும் ஒருவன்… நான் பதினைஞ்சு, பதினாறு ஏக்கர் காணி வச்சிருக்கன்… எனக்கு அட்டப்பளத்தில் ஒரு பெரிய மில்லும் இருக்கி… இன்னும் தோட்டம் தொரவு அது இது எண்டு கொள்ளையா வசதிகளோடயும் இருக்கன்… அது மாத்திரமில்ல… நான் ஒரு ஹாஜியார்… மரைக்கா… நான் இந்த ஊரில ஒரு பெரிய மனிசனாகவும் மதிக்கப்பர்ரன்… என்ட மகன்தான் என்ட சொத்து வத்துகளுக்கெல்லாம் ஏக வாரிசு… இவற்றையெல்லாம் தெரிஞ்ச எத்தனையோ பெரிய பணக்காரர்கள் என்ட மகனுக்கு பொண் கொடுக்க மிச்சம் விருப்பமா இருக்காங்க… நான்தான் எவருக்கும் எடம் கொடுக்காம இன்னும் கொஞ்சக்காலம் போகட்டுமே என்டு பேசாமலிருக்கன்… இந்த நிலையில ஒரு ஊடுவளவ மட்டுமே வச்சிக்கிட்டு என்ட மகன உங்கிட பிள்ளைக்கு மாப்பிள்ளையா எடுக்கிறத்துக்கு என்னோட சம்மந்தம் கலக்க வந்திருக்கிங்க… இத நெனச்சுப் பார்த்தா எனக்கு சிரிப்புத்தான் வருகிது… உங்களுக்கு என்ன சொல்றதென்டே எனக்கு விளங் கல்ல…” குட்டிப் பிரசங்கமொன்றே செய்துவிட்டு ஓய்கிறார் ஹாஜியார்.
அவரது உரையைச் செவி மடுத்த அப்பெண்ணுக்கு கூரை மின்விசிறி உமிழ்ந்த காற்றையும் மீறிக் கொண்டு வியர்வை கிளம் புகிறது. என்றாலும், அப்பெண் தைரியம் இழக்கவில்லை.
”உங்கட சொத்துகளுக்கு என்ட புள்ளய பங்காளியாக்கிர வேண்டுமென்பதற்காக, நான் உங்கிட மகன மாப்பிள்ள கேட்டு வரல்ல… உங்கட மகன் என்ட பிள்ளய கலியாணம் முடிக்க மிச்சம் விரும்புறாரு… அது மாத்திரமில்ல… அவரு, ‘நீங்க எங்கிட வாப்பாக்கிட்டப் போய் என்ட விசயங்களச் சொல்லி ஒருக்காக் கேளுங்க… அவரும் சம்மதிப்பாரு…போங்க போங்க…’ என்டு என்ன ஒரேயே கணகாட்டுப் படுத்துறாரு… கெஞ்சிறாரு… அதனாலான்… நான் உங்களுக்கிட்ட வந்த…”
“அவன் கெடக்கான் பயித்தியக்காரன்… போட்டிட்டு வேலயப் பாருங்க…”
மேலும் தாமதிக்க அப்பெண் விரும்பவில்லை. உடனேயே அங்கிருந்து வெளியேறுகிறாள். அவளின் மனமோ, அவமானம் தாங்காது ‘ஏன் வந்தோம்? ஏன் வந்தோம்?’ என்று புலம்புகிறது.
பத்து நாட்கள் விரைந்தன. இரண்டாயிரத்து நான்கு மார்கழி இருபத்தாறாம் திகதி மலர்ந்தது. அந்த நாள், ‘சுனாமி’ப் பேரலைகள் பொங்கி இத்தனை பேரழிவுகளை ஏற்படுத்துமென்று யார் நினைத் திருப்பார்.
சுலைஹாவும் மகளும் வாழ்ந்த அந்தக் கிராமமும் அந்தப் பேரலைகளின் பிடிக்குள் சிக்கி பேரழிவுக்குள்ளானது.
அதில், சரீப் ஹாஜியாருக்கோ எந்தப் பாதிப்புகளும் ஏற்பட வில்லை. ஆனால், அந்தப் பெண்ணைப் பொறுத்தவரையில் அவளும் அந்தப் பேரழிவுப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவள்தான்.
சுனாமியின் பிடியிலிருந்து அவளும் மகளும் தெய்வா தீனமாக உயிர் தப்பியிருந்தாலும், அவர்களது வீடும், சேர்த்து வைத்திருந்த உடைமைகளும் முற்றாகவே அழிந்து போயின.
சுனாமி ஏற்பட்ட அன்றே, சுலைஹாவும் தனது புதல்வியோடு தமது கிராமத்தை விட்டு அகதிகளாய் வெளியேறி மூன்று மைல் களுக்கு அப்பால் உள்ள சம்மாந்துறையை அடைந்தனர். அங்கு அவர்கள், தமது உறவினர் வீட்டில் நான்கு தினங்கள் தங்கி யிருந்தனர். பின்னர், அவர்கள் தமது கிராமத்துக்கு மீண்டு, அங்கு சுலைஹாவின் தங்கையான ஜுமானாவின் வீட்டில் போய் உறைந்தனர்.
நாற்பது நாட்கள் நகர்ந்தன. அதன் பிறகு, ஒரு தினம். சரீப் ஹாஜியார், சுலைஹாவும் மகளும் ஜுமானாவின் இல்லத்தில் தங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்றார்.
சுலைஹாவோ, தம்மை நாடிவந்த அவரை அன்போடு வரவேற்று, அவ்வீட்டின் முன் மண்டபத்துள் அழைத்து வந்து கைக்கதிரை ஒன்றிலே உட்காரவும் வைத்தாள்.
சரீப் ஹாஜியாரின் எதிரே, சற்றுத் தள்ளி வாங்கு ஒன்றிலே முக்காட்டோடு அமர்ந்து கொண்ட அவளோ, அவரோடு பேச்சை எவ்வாறு ஆரம்பிப்பது என்று சிந்தித்தாள். ஆனால், சரீப் ஹாஜியாரோ அவளையும் முந்திக் கொண்டு தனது உரையைத் தொடங்கினார்.
“இஞ்சப்பாருங்க… போன வருஷக் கடைசியில ஏற்பட்ட சுனாமி எனக்கு நல்ல பாடங்கள படிச்சித் தந்திருக்கு… அந்தச் சுனா மியினால் கொள்ளையாச் சனங்கள் மௌத்தாயிட்டாங்க… கொஞ்ச நேத்தைக்கு முந்தித்தான் அத்தனை பேரும் இருந்தாங்க… அந்தச சுனாமி, குஞ்சு குறுமணியான் என்டும் பார்க்கல்ல… பொம்புளை களெண்டும் பார்க்கல்ல… வயசு போன மனிசர்களெண்டும் பார்க் கல்ல… எல்லாரையும் அழிச்சுப் போட்டுத்தான் மூச்சு விட்டிச்சி… மௌத்தான ஆக்கள்ள ஏழைகள்தான் கூட… என்டாலும் பணக்காரர் களையும் அது பதம் பார்க்காமல் விடல்ல… நம்மிட ஊரில் கொள் ளயா உயிரிழப்புகள் ஏற்பட்டது போல உடைமை இழப்புகளும் கொள்ளதான்… சுனாமியினால் ஏற்பட்ட அந்த உயிரிழப்புக்களும், உடைமை இழப்புகளும் என்ன நல்லா உலுக்கிவிட்டிட்டு…. அது, நான்தான் பெரிய பணக்காரன்… நான்தான் பெரிய ஆள்… இஞ்ச என்ன அடிக்க வேற ஆளில்ல… என்ட எனது கர்வங்களையெல்லாம் கழுவி என்ன ஒரு புது மனிசனா மாத்திவிட்டிருக்கு… நீங்க என்னோட சம்மந்தம் கலக்க என்டு வந்திருக்கக்க என்னிடத்தில் குடிகொண் டிருந்த அந்தக் கர்வங்களால உங்கள அவமானப்படுத்தும் வகையில நான் நடந்துக்கிட்டன்… என்ன மன்னிச்சுக்கங்க…’
வெகு அவதானத்தோடு வார்த்தைகளை வெளியிட்டார் சரீப் ஹாஜியார்.
“சேச்சே… அத விடுங்க… நானும் அத அவ்வளவு பெரிசா எடுத்துக்கல்ல… ஆனா…நீங்க, காவங்களையெல்லாம் விட்டுத் திருந்தி ஒரு புது மனிதனாய் மாறிவிட்டதாகக் கூறும் செய்திதான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது…”
“இஞ்சப்பாருங்க… இனி நான் நம்மிட சமூகத்தில் பலரும் நினைத்துக் கதைக்கக்கூடியதாக பல நல்ல காரியங்களைச் செய்து அன்பாக அனைவரோடயும் சேந்து நடக்கப்போறன்… நான் முக்கியமா இஞ்ச வந்த உங்களோட சம்மந்தம் கலக்கிறத்துக்குத்தான், நல்ல ஒரு நாளாப் பாத்து என்ட மகனுக்கும் உங்கிட மகளுக்கும் கலியாணத்த முடிச்சி வைப்பம்.”
“என்ன மன்னிக்கணும் காக்க… நாங்க என்ட மகளுக்கு கலியாணம் திட்டங்கட்டிப்போட்டம்… நம்மிட ஊரில இரண்டாம் குறிஞ்சியில் இருக்கிற யாசீன் முதலாளிர மகன் அமீன் மாஸ்டர்தான் மாப்பிள… யாசீன் முதலாளியும் உங்களப் போல ஒரு பெரிய பணக்காரர்தான்… உங்களுக்கும் அவரத் தெரிஞ்சிருக்கக் கூடும்… அவரும் இருபது இருபத்தைந்து ஏக்கர் காணி வச்சிருக்கார்… ஊரில் அவர் போட்டிருக்கிற சீலக்கடயாலயும் அவருக்கு நல்ல வருமானம் வருகிது. இன்னும் கனக்க சொத்து வத்துகள் சேத்து வச்சிருக்கார்… இத்தனைக்கும் அவருக்கு இரண்டே இரண்டு பிள்ளைகள்தான்… ஒண்டு அமீன் மாஸ்டர், மத்தது மாஸ்டர்ர தங்கச்சி அமீனா. யாசீன் முதலாளிர இந்த சொத்து வத்துகளெல்லாம் அவர்ர இந்த ரெண்டு பிள்ளைகளுக்கும்தான்… என்ட மகள்ள கலியாணத்த திட்டங்கட்டக்குள்ள அத, அவர், தன்ட வாயாலயே சொன்னார்… அது மாத்திரமில்ல… அவர், தன்ட சொத்து வத்துகள் எல்லாத்தையும் தன்ட மகனுக்கும் மகளுக்கும் கெதியில எழுதிக் குடுக்கப் போறதாகவும் சொன்னார்.”
“ம்… ஆ… அப்படியா?” தலையை மெல்ல அசைத்துக் கொள்கிறார் ஹாஜியார்.
“காக்கா… என்ட மகள்ர கலியாண விசயமா இன்னும் சில விசயங்கள் இஞ்ச திறந்து சொல்ல வேண்டும் போலரிக்கு…ஆனா… நீங்க வித்தியாசமா ஏதும் நினைப்பிங்களோ என்னவோ என்றும் யோசனையாயிருக்கி…”
“சேச்சே… அப்படி ஒண்டுமில்ல… சொல்லுங்க…”
“ஹாஜியார் காக்கா… மாப்பிள வீட்டார் எங்களுக்கிட்டரிந்து வீடு வளவு அது இது என்டு எதுவுமே வாங்காமத்தான் இந்தக் கலியாணத்தச் செய்யப் போறாங்க… அது மாத்திரமில்ல கலியாணத் தண்டைக்கு எங்கிட கலியாணச் செலவைக்கூட எங்களச் செய்ய விடாமத் தடுத்து அவங்களே அதயும் செய்யப் போறாங்க… யாசீன் முதலாளி, அவர்ர பொஞ்சாதி, மகன் அமீன் மாஸ்டர், மகள் அமீனா ஆகிய எல்லோருமே என்ற மகள்ள கலியாண விசயத்தில மிச்சம் விருப்பத்தோட செயற்பாராங்க… அவங்கட குடும்பமும் நல்ல ஒரு குடும்பம். அமீன் மாஸ்டரும் ஒழுக்கமுள்ள வடிவான ஒரு புள்ள… எல்லாத்துக்கும் மேலாக அவங்க என்ன மதிச்சி என்னத் தேடியும் வந்தாங்க… இதைவிட ஒரு கலியாணம் எப்படி வாற…” வார்த்தைகளை மழைபோல பொழிந்து தள்ளினாள் சுலைஹா.
“இஞ்சப் பாருங்க… யாசீன் முதலாளியையும் அவங்கட குடும்பத்தையும் எனக்கு அவ்வளவு பெரிசாத் தெரியாவிட்டாலும் ஓரளவு தெரியும்… அப்பிடித் தெரிஞ்ச வகையில அவங்க நல்ல ஆக்கள்தான்… அமீன் மாஸ்டரும் ஒரு நல்ல பிள்ள… பிரச்சின இல்ல…”
”ம்… ஆ…” முக்காட்டை சரிசெய்து கொண்ட அப்பெண் மெல்லியதாய் புன்னகைத்துக் கொள்கிறாள்.
சரீப் ஹாஜியாரோ, ‘சேர்ட்’டின் மேல் பொத்தான் ஒன்றைக் களற்றி விட்டுக் கொண்டு நெஞ்சின் பக்கமாய்,கீழ் நோக்கியவாறு, ‘ப்…பூ… ப்…பூ…’ என்று ஊதிவிட்டுக் கொள்கிறார்; நிமிர்ந்து சுலைஹா வைப் பார்த்தவாறு, “காலையிலேயே வேர்க்கிது… விசிறி இருந்தாத் தாங்க…” என்கிறார்.
அதனைச் செவி மடுத்த சுலைஹாவோ, “ஓம்… விசிறி இருக்கி… தாறன்…” என்றவாறு வாங்கை விட்டு எழுந்து, அங்கு தென்புறச் சுவரோடு அணைந்தவாறு இடப்பட்டிருந்த அலுமாரியின் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு விசிறியை எடுத்து வந்து சரீப் ஹாஜியாரிடம் கையளித்து விட்டு மீண்டும் தனது இருக்கையிலே வந்து அமர்ந்து கொள்கிறாள்.
சரீப் ஹாஜியாரோ, தன்னிடம் கையளிக்கப்பட்ட அந்த கருகிய சிவப்பு வர்ண பனையோலை விசிறியினால் வீசி வீசி வியர்வையை விரட்டத் தொடங்கினார்.
அங்கு சுமுக நிலை தோன்றியதும் சுலைஹா மீண்டும் தனது உரையைத் தொடர்கிறாள்.
”காக்கா… உங்கட மகன் என்ட மகளக் கலியாணம் முடிக்கிறத்துக்கு மிச்சம் விருப்பத்தோடரிந்தார். எங்களுக்கும் அவர் மேல அனுதாபந்தான்… ஆனா… நீங்கான் அத விரும்பாமரிந்திட்டிங்க… அதே நேரம், உங்கட பிள்ளையும் தைரியமான ஒருவராகவுமில்ல… அப்பிடிகள் இருந்திருந்தா… சில வேளை அவர் உங்களோட கதைத்துப் பேசி உங்கள்ள ஒரு மாற்றத்த உண்டாக்கியிருக்கலாம்… ஆனா… அவர் அதயும் செய்யவுமில்ல… அதால நாங்க, அவர்ர கலி யாண விசயத்தில தலயிடாம ஒதுங்கிட்டம்… நாங்க இந்தக் கலியாணத்தையும் இப்ப ரெண்டு மூணு நாளைக்கு முதல்லதான் திட்டங்கட்டின… அதுக்கு முன்னயாலும் வந்திருந்தா… உங்கட மகன்ட கலியாண விசயத்தப்பத்தி கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்… ஆனா… இப்ப எல்லாம் முடிஞ்சி போச்சி… இனி ஒண்டும் செய்ய ஏலா…”
“என்ட மகனுக்கும் என்னிலதான் கோபமிருக்கும்… என்ன செய்யிற… எல்லாம் எழுத்துப்படிதான் நடக்கும்… ” சரீப் ஹாஜியார் நெடுமூச்சொன்றை விட்டுக் கொள்கிறார்.
”ஓம்… ஓம்… எழுத்துத்தான் முக்கியம்…”
”சரி… சரி… அதவிடுங்க… உங்கட புள்ளட கலியாணத்த எப்ப வச்சிருக்கிங்க… அத எப்படிச் செய்யிறதா யோசிச்சிருக்கிங்க…”
“நாளைக்கு இரவைக்கு ஏழு மணியளவில கலியாணத்த வச்சிருக்கம்… பள்ளிலரிந்து துண்டெல்லாம் எடுத்தாச்சி… கலியா ணத்தில குடும்பத்தில் ஆக முக்கியமான ஆக்கள் மட்டும்தான் கலந்துக்குவாங்க… மாப்பிள்ள தாலி கட்டினத்துக்குப் பிறகு கலி யாணத்துக்கு வாற எல்லாருக்கும் சிற்றுண்டி கொடுக்க ஒழுங்குகள் செய்யிறம்… அவ்வளவுதான்… அதுக்குப் பிறகு மாப்பிள்ள வீட்டார் அவங்கட வீட்டுக்கு பொண்ணையும் கூட்டிக் கொண்டு போயிரு வாங்க… கூடப்போறவங்களுக்கு அவக அங்க இரவுச் சாப்பாடு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யிறாங்க…”
“நல்ல ஒரு கலியாணம்தான்… இதப் பாக்கிறவௌ எனக்கும் பொறாமையாரிக்கி… நானும் ஒரு கலியாணத்த செய்து காட்ட வேணும்… உங்களவிடவும் வறிய ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு புள்ளய எடுத்து என்ட மகன்ட சம்மதத்தோட அவருக்கு கலியாணம் முடிச்சுக் கொடுக்க வேணும்… இன்ஷா அல்லாஹ்… நான் வாறன்…’ சரீப் ஹாஜியார் கையிலிருந்த விசிறியை பக்கத்திலிருந்த ஸ்ரூலில் வைத்து விட்டு சோட்டின் மேல் பொத்தானை பூட்டிக் கொண்டு புறப்படத் தயாராகிறார்.
“தேயில போட்டிருக்கும்மா…” அறைக்குள்ளிருந்து சுலைஹாவின் புதல்வி.
“காக்கா…புள்ள தேயில போட்டிருக்காம்… குடிச்சிட்டுப் போங்க…”
“இஞ்சப் பாருங்க… இப்பவே எனக்கு செரியா வேருக்குது… இன்னும் தேயிலயும் குடிச்சா… நல்லாத்தானிருக்கும்… எனக்கு வாணா… பிறகுகள் பாப்பம்… நான் வாறன்…”
சுலைஹாவிடம் விடை பெற்ற சரீப் ஹாஜியார் அம்மண்ட பத்திலிருந்து வெளியேறி, அவ்வீட்டின் முன்புறமாய் போடப் பட்டிருந்த ‘கேற்’றின் வழியாய் வெளியே அடி பதிக்கிறார். அவரைப் பின் தொடர்ந்து வந்த சுலைஹாவோ, ‘கேற்’றுக்கு வெளியே அதனோடு ஒட்டியவாறு நிற்கிறாள்.
அவ்வேளை, அவ்வீட்டின் முன்புறமாய் ‘கேற்’றுக்கு வெளியே நிறுத்தப் பட்டிருந்த சரீப் ஹாஜியாரின் காரின் பக்கமாக, யாசீன் முதலாளியின் ஈய வண்ண ‘நிஸான் ஸனி’ காரும் வந்து நிற்கிறது. தாமதிக்காது அக்காரின் பின் கதவைத் திறந்து கொண்டு யாசீன் முதலாளியும், அவரது மனைவியும், புத்திரியும் வெளியிலே இறங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து சாரதிக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருந்த அமீன் மாஸ்டரும் காரின் முன் கதவைத் திறந்து கொண்டு வெளியே அடி பதிக்கிறார்.
‘கேற்’றோடு ஒட்டியவாறு நின்றிருந்த அந்தப் பெண்ணோ, அவர்களைப் பார்த்ததும் அவர்களின் பக்கமாய் விரைந்து “வாங்க… உள்ளுக்கு…” என்று அனைவரையும் அன்போடு வரவேற்று வீட்டினுள் வருமாறும் வேண்டுகிறாள்.
யாசீன் முதலாளியோ,”இன்னா நிக்கிற சரீப் ஹாஜியார் எனக்குத் தெரிஞ்சவர், நான் கொஞ்சம் அவரோடு கதைச்சிட்டு வாறன்… நீங்க உள்ளுக்குப் போங்க…” என்று, அவர்கள் அனை வரையும் வழியனுப்பி வைத்துவிட்டு சரீப் ஹாஜியாரை நெருங்குகிறார்.
“ஹாஜியார் என்ன இஞ்சாலப் பக்கம்… ஏதும் விஷேசங்களா?”
“சேச்சே… அப்படி ஒண்டுமில்ல…சுலைஹாட மகளுக்கு என்ட மகனப் பேசி ஒழுங்குகள் செய்வமெண்டுதான் நான் இஞ்சாலப் பக்கம் வந்த…ஆனா… அவவ உங்கிட மகனுக்கு திட்டம் கட்டியச்சாம் என்டு சுலைஹாவே சென்னா…”
“ஓம்… ஓம்…அவவ என்ட மகனுக்கு திட்டம் கட்டியச்சி… கலியாணத்தையும் நாளைக்கே வச்சிருக்கம்… அத மிச்சம் எளிய முறயிலதான் செய்யிறத்துக்கும் யோசிச்சிருக்கம்… இப்ப சம்மந்தியும் என்னப் பாத்துக்கிருப்பா… நான் வாறன் ஹாஜியார்…”
“சரி… போய் வாங்க…” இருவரும் பிரிகின்றனர்.
– தினகரன் வாரமஞ்சரி, 2006 ஏப்ரல் 16.
– சாணையோடு வந்தது… (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2007, முகாமைத்துவ தொழில்நுட்பக் கல்லூரி, இலங்கை.
![]() |
உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க... |