தாலி
கதையாசிரியர்: யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 20, 2026
பார்வையிட்டோர்: 693
(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வாய் ஜபித்துக்கொண்டிருந்தாலும் கால்கள் கோவில் வீதியை வலம் வந்து கொண்டிருந்தாலும் மனம் இறைவனை விட்டு விட்டு எங்கெங்கோ சுழன்றுகொண்டிருந்தது. அன்றைய தினத்தின் பின் இல்லை. இல்லை. அன்றைய இரவின் பின் மனம் இப்படித்தான் ஆகி விட்டது. மனம் இறைவனை மறந்துவிட்டதோ?
இருக்காது. இருக்கவேயிருக்காது. அது எப்படி இயலும்?
இத்தனை காலமும் நாளும் பொழுதும் வாசித்தும் கேட்டும் உணர்ந்தும் பதித்து வைத்திருந்தவற்றை சில மணி நேரத்துள் மூளைச் சலவை செய்து கழுவியோடச் செய்திருக்க முடியுமா?
ஏதோ ஒரு தடுமாற்றம் மனதினுள் கிடந்து ஆயிரமாயிரம் வினாக்களை அள்ளி விதைத்து எதற்கு என்ன பதில் கூறுவதென்று தத்தளித்து…
“அக்கா, அக்கா”
அந்தக் குரல் காதுட் புகுந்து தன்னை உணரச் செய்ய சிரமப்பட்டது.
என்னைக் கூப்பிடுகிறார்களா? என்ற மெலிதான அருட்டுணர்வில் சங்காரிணி திரும்பினாள்.
“கும்பிடேக்கை குழப்பிறன் எண்டு குறை நினைக்காதேங்கோ அக்கா. வீட்டை போனனான். ஒருதரும் இல்லை. கலியாண வீட்டு வேலையளுக் குள்ளை பிறகு வரேலுமோ தெரியேல்லை. மகளின்ரை கலியாண வீடு வாற வியாழக் கிழமை. காட்டை இங்கை தாறனெண்டு குறை நினைக்காமல் கட்டாயம் எல்லாரும் வாங்கோ”
கோபுர வாசலில் நின்றிருந்த சாமி அண்ணை அவளின் அருகே வந்து அழைப்பிதழைத் தந்தார். மூளை வெறிச்சிட்டிருந்ததால் எதுவும் பேச வராத நிலையில் கைகள் மட்டும் அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டன.
அதன் பின் வந்துள்ள முதலாவது திருமண அழைப்பு. ஆடி மாதம் முடிந்து ஆவணி பிறந்துவிட்டது. இனிமேல் இது போல் பல அழைப்புகள் வரப்போகின்றன.
அவள் திருமண நிகழ்விற்குப் போவதா? வேண்டாமா?
“பிள்ளையாரே, என்ன செய்ய?”
மற்றுமொரு கேள்வியும் மேலும் குழப்பமும் மனதினுட் புகுந்துகொள்ள சம்காரிணி கோவில் வழிபாட்டை ஒருவாறு முடித்துக்கொண்டு சகதியாகிக் கிடந்த மனதுடன் வீட்டிற்குப் புறப்பட்டாள். வழிபாட்டின் பின்னரான அலாதியான அநுபவத்துடன் சென்ற நாட்களை இழந்துவிட்ட துயரமும் சேர்ந்து கொண்டு வேதனையை அதிகரித்தது.
வீட்டிற்கு வந்ததும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அழைப்பிதழை எடுத்து திருமணம் எங்கு எப்போது என்ன நேரம் நடைபெறவிருக்கிறதென்பதைப் பார்க்கலாம் என்று எண்ணியவளிடம் முதலில் எனக்குப் பதில் தேடு என்று அந்த வினா முன்னே வந்தது.
திருமண நிகழ்விற்கு சம்காரிணி போவதா?
கேள்வி மேல் கேள்வியாகக் கேட்பதே இப் போது அவளுடைய மூளையின் வழக்கமாகி விட்டதே. வினா வரிசையில் நின்று அடுத்த வினா தலையை நீட்டியது.
திருமணத்திற்கு எல்லோரும் ஏன் போகிறார்கள்?
மணமக்களை மனமார வாழ்த்துவதற்குத்தான் போகிறார்கள்.
சம்காரிணியால் அப்படி வாழ்த்த இயலுமா?
வினாவிற்கு விடையாக அவளது கண் முன்னே…
காரிருளில் ஒளிர்ந்த டார்ச் விளக்கின் ஒளி வட்டத்துள் மஞ்சள் நூலில் அசைந்து அசைந்து ஒளிர்ந்த தாலி!
ரமணனின் உந்துருளி வந்துநிற்கும் சத்தம் அவளை சூழலுக்கு இழுத்துவருகிறது. உள்ளே வந்த ரமணனின் கண்களில் அழைப்பிதழ் படுகிறது.
“யாருக்குக் கலியாணம்?”
“சாமி அண்ணையின்ரை மகளுக்கு”
“கட்டாயம் போக வேண்டிய கலியாணம். எப்பவாம்?”
அழைப்பிதழை சம்காரிணி எடுத்துப் பார்த்தாள்.
“வாற வியாழன்” என வாய் பதில் சொன்னா லும். கண்கள் அழைப்பிதழிலிருந்த சொற்களிலேயே நிலைத்து நின்றன. “சுபமுகூர்த்த வேளையில் திரு மாங்கல்ய தாரணம் செய்ய பெரியோர்கள் நிச்சயித் திருப்பதால் அத்தருணம் குடும்ப சமேதராக வருகை தந்து” என்ற வரிகள் மீண்டும் அவளை சிந்தனைக்குள் ஆழ்த்தி விடுகின்றன.
திருமணம் என்று எடுத்துக்கொண்டால் பல நாட்களாகப் பல சடங்குகளைச் செய்கிறோம். எல்லாச் சடங்குகளுமே தேவையானவையாகவே கருதப்படு கின்றன. ஆனால் அவற்றுள் முதன்மைப்படுத்தப்படுவது திருமாங்கல்ய தாரணம். அதாவது தாலியை அணிவது. தாலி என்பதற்கு மாங்கல்யம் என்று மட்டும் கூறாமல் அதற்கு திரு என்று சிறப்பும் கொடுக்கிறார்கள். தாலிக்கு எம்மவர் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
காரிருளில் ஒளிர்ந்த டார்ச் விளக்கின் ஒளி வட்டத்துள் மஞ்சள் நூலில் அசைந்து அசைந்து ஒளிர்ந்த தாலி! அன்று முதல் கண்களுக்குள்ளேயே கூடு கட்டி அகலாது குடியிருக்கும் அந்தக் காட்சி “இல்லை” எனப் பதிலளிப்பதாகத் தலையசைக்கிறது.
“நானும் கலியாணத்துக்குப் போகவேணுமே?”
அவளது நடுங்கும் குரலில் கெஞ்சல்.
“எங்கடை மூண்டு பிள்ளையளின்ரை கலியாணங்களுக்கும் சாமியண்ணையின்ரை குடும்பமே வந்து நிண்டு உதவி செய்ததை மறக்கலாமே?” கூறிய படி ரமணன் உடை மாற்றச் சென்றுவிட்டான். அவளுடைய தடுமாற்றம் அதிகரிக்கிறது.
அங்கே போனால் தாலியைக் காணும்போது அவளின் கண் முன்னே… காரிருளில் ஒளிர்ந்த டார்ச் விளக்கின் ஒளி வட்டத்துள் மஞ்சள் நூலில் அசைந்து அசைந்து ஒளிர்ந்த தாலி வாழ்த்துவதற்குப் பதிலாக இந்தக் காட்சிதானே கண் முன் வரும்?
அபசகுனமாய் அந்த எண்ணங்களுடன் சம்காரிணி அங்கு போயிருப்பதால் என்ன பயன்? மகிழ்ச்சியுமின்றி மனநிறைவுமின்றி தாலியை அணிவதற் காகவே நடைபெறும் நிகழ்விற்குப் போவது மிகப் பெரும் தவறாகப் பட்டது.
தாலியைச் சுற்றியே இப்போது அவளது நினைவுகளும் ஆய்வுகளும் இருப்பதை அவளால் தடுக்க இயல்வதில்லை. தாலியைப் பொன்னால் செய்வதால் தானே இத்தனை சிக்கல்களும்? என்ற எண்ணம் ஏன் அவ்வாறு செய்தார்கள்? என்ற அடுத்த கேள்வியைத் தொடர வைத்தது.
தாலம் என்பது தான் தாலி என்றாகியதாம். தாலம் என்பது பனை ஓலையைச் சுட்டியது. ஆதியில் இவ்வாறு திருமணம் நடைபெறுவதில்லை. தன் மனைவியைத் தன்னுடையவளல்ல என்றும் தன் குழந்தையைத் தன்னுடையதல்ல என்றும் கூற ஆரம்பித்தபொழுது எவனுக்கு எவள் மனைவி என்று சமூகத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அத்தியாவசிய மாகியது. எழுதுவதற்குப் பயன்படுத்தி பனையோலை யில் இருவரது பெயர்களையும் எழுதி கழுத்தில் தொங்க விட்டனர். இவ்வாறு தோற்றம் பெற்ற தாலி அழியக் கூடியதாக இல்லாது நிலைத்திருக்கக் கூடியதாக இருக்க வேண்டும் எனக்கருதியே பொன்னால் செய்யப்பட்டது. அதற்கு சமூகமும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது.
சம்காரிணியின் சிந்தனை நீண்டுகொண்டே சென்றது. இந்த தாலி பற்றிய ஆராய்வும் சிந்தனையும் முன்னரும் இரு முறைகள் இவ்வாறு நீண்டிருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண்ணான அவளுக்கு தாலி மதிப்பும் முக்கியத்துவ மும் கொண்டதாகவே மனதுள் இடம் பிடித்திருந்தது. அது தன்கழுத்தில்.அணியப்படப்போகும் நாளைப் பற்றிய கற்பனைகளும் எல்லாப் பெண்களையும் போல அவளுக்குமிருந்தது.
திருமணம் நடந்தேறி கழுத்தில் தாலி அணியப் பட்ட பின்னர்தான் பிரச்சினை ஒன்று தலை தூக்கியது. அவள் பணி செய்த காரியாலயம் தூரத்திலிருந்ததால் இருள் கெளவும் நேரத்திலேதான் வீடு வந்து சேர்வாள். சில நாட்களின் பின் அவள் காலையில் வேலைக்குப் புறப் படும் போது கணவன் ரமணனின் கண்கள் சம்காரிணி யின் கழுத்தைக் கவனிப்பதாக ஓர் உணர்வு. நான்கைந்து நாட்களின் பின் இருவரும் இருந்து உரையாடிய வேளை யில் ரமணன் தன் மனதில் பட்டதைக் கூறியும்விட்டான்.
“பஸ்ஸிலை போய் வாறீங்கள். இருண்டபிறகு வந்து சேருறீங்கள். கொடியைப் போடாமல் போனால் என்ன?”
அதற்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாது தவிக்கும் பார்வையை சம்காரிணி பதிலாக்கியபோது அவன் மெல்ல வேறொரு பேச்சுக்கு நகர்ந்துவிட்டான்.
ஆனால் அவளுடைய மனத்தில் அந்தக் கேள்விநிராகரித்தான். அவள் மௌனமாகிப் போகவே ரமணன் ஒட்டிக் கொண்டிருந்து விழிகளை உருட்டி உருட்டி உறங்கவிடாது செய்யவே பதில் தேடி மூளை நெடுநேரம் அலைந்தது.
அது ஆயிரத்துத் தொழாயிரத்து அறுபது களின் இறுதிப்பகுதி. தாலியின் மகத்துவம் உந்நதமாக இருந்த காலம் அன்றைய சூழலில் திருமணம் நடை பெற்று ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே கொடி இல்லாமல் இருப்பதை நினைத்துப் பார்க்கவே சங்கடமாக இருந்தது.
என்ன செய்யலாம்?
ரமணன் சொல்வதும் சரிதான். அவள் பயணம் செய்யும் வேளையில் களவு நடைபெற சாத்தியம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. களவு போனால் மீண்டும் ஒரு கொடி செய்ய எங்கே போவது? அதன் பின்னரும் கொடி இல்லாமல்தான் இருக்க வேண்டும். ஒருஇழப் பின் பின்னர் அப்படி இருப்பதை விட இழப்பைத் தவிர்ப்பது நல்லதல்லவா? ஆனால் அவள் திருமண மானவள் என எல்லோருக்கும் அறிவித்துக் கொண்டி ருக்கும் அது பாதுகாப்பொன்றையும் தருகிறதே. அந்தப் பாதுகாப்பை இழக்கவும் அவள் தயாராக இல்லை.
முடிவொன்றைத் தேடிக் களைத்த வேளை யிலேதான் எப்போதோ வாசித்தவை நினைவிலே தோன்றி உதவிக் கரங்களை நீட்டின.
“தங்கத்தினால் செய்த கொடியில் தாலியைக் கோர்த்து அணியவேண்டுமென்ற விதி எதுவுமில்லை. அக்காலத்தில்மஞ்சள் நூலிலேயே தாலியை அணிந்து வந்தார்கள்.காலப் போக்கில் தம் செல்வச் செழிப்பைத் தெரிவிக்கும் ஓர் அடையாளமாக தங்கத்தினால் கொடியைச் செய்து அணியத் தொடங்கியுள்ளார்கள் என்ற ஆய்வு சரியானதாகவே அதை வாசித்த வேளை யில் சம்காரிணிக்கும் தோன்றியது. திருமண பந்தத்திற்கு அத்தாட்சியான, அவளது வாழ்க்கை முழுவதும் நிலைத்திருக்க வேண்டும் என்ற வாழ்த்துகளுடனும் ஆசிகளுடனும் அணிவிக்கப்பட்ட தாலியை மஞ்சள் நூலில் அணிவது நல்லதொரு தீர்வாக சம்காரிணிக்குத் தென்பட்டது. ரமணனிடம் இது குறித்துக் கூறிய போது அவனும் அதை ஏற்றுக்கொண்டான். அன்று எடுத்த தீர்மானத்தின் பயனாக கொடி வீட்டில் உறங்க நூலில் கோர்த்த தாலி அவளுடைய கழுத்தில் ஆட்சி செலுத்த ஆரம்பித்தது.
உடைமாற்றிவிட்டு வந்த ரமணன் கையில் அழைப்பிதழுடன் சிந்தனையில் ஆழ்ந்துபோய் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்துவிட்டு “என்னம்மா கடுமையான யோசனை?” என்ற கேள்வியால் அவளை நனவுலகிற்கு இழுத்துவந்தான்.
“ஒண்டுமில்லை….முன்னுக்குப் போய் எல்லா உதவியளும் செய்யிறன். கலியாணவீட்டன்டு காலமையும் வீட்டிலை போய் எல்லாம் செய்து போட்டு தாலிகட்டு முடிய மண்டபத்துக்கு வாறன்.”
“அவை என்ன நினைப்பினம்?”
சம்காரிணி தன் சிந்தனைக்குக் காரணம் சொல்வது போல் கூறிய திட்டத்தை ரமணன் நிராகரித்தான், அவள் மௌனமாகிப் போகவே ரமணன் அதற்குமேல் எதுவும் பேசாது வெளியே சென்று விட்டான். அவளுடைய மனக்கலக்கம் அவனுக்குப் புரிந்தது. இருவரும் மனநலசிகிச்சைக்குச் செல்வோமா என்று கேட்டதற்கும் அவள் மறுத்துவிட்டாள். அவளுடன் அதிகம் தர்க்கிக்கவும் அவன் விரும்பாததால் மெல்ல விலகினான். அதற்காகக் காத்திருந்தது போல் பழைய நினைவுகள் ஓடி வந்து அவளை மூழ்கடித்தன.
நாட்கள் நகர நாட்டில் போர்ச்சூழல் தோன்றி எல்லாவற்றிலும் தன் ஆதிக்க வலையை விரித்தது. வாரணன், மாதரசி, மாதுமை ஆகிய பிள்ளைச் செல்வங் களுடன் ரமணனும் சம்காரிணியும் அந்த வலையுள் அகப்பட்டு தட்டுத்தடுமாறி வாழ்க்கையை நடத்தினர். அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு அவற்றின் உச்சவிலை முதலிய எல்லாவற்றிற்கும் ஈடு கொடுக்க அவர்களது சம்பளத்தால் இயலாத வேளை களில் சம்காரிணியின் தங்க நகைகள் அடகு வைக்கப் படும் செலவின் இறுக்கம் தாக்குப் பிடிக்க முடியாது என்றாகும்போது சில நகைகளை விற்றும் சமாளித்தார் கள். யாழ்ப்பாணத்து மக்கள் தங்கத்தில் தம்சேமிப்பை முதலிடுவது இதற்காகத்தான். சம்காரிணி. கொடியை அணியாதுவிட்டாலும் அதை அடகு வைப்பதைக்கூட தவிர்த்து வந்தாள். வளர்ந்த, வாழ்ந்த சூழல் அவளுள் வேரூன்ற வைத்திருந்த பண்பு கொடி கூறை மெட்டி என திருமணநாளின் ஒவ்வொரு பொருளிலும் அதீதமான விவரிக்க இயலாத மதிப்பார்ந்த பற்றை ஏற்படுத்தி விட்டிருந்தது. அதனால் கொடியை மிகுந்த அக்கறை யுடன் சம்காரிணி பாதுகாத்து வந்தாள். அதற்கும் இடையூறொன்று வந்து சேர்ந்தது.
“எவ்வளவு நாளைக்கு எங்கடை பிரச்சினையை யோசிச்சுக்கொண்டு இப்பிடியே இருக்கிறது? எழும்பிப் போய் வீட்டு வேலையளை முடிச்சிட்டு ஒருக்கால் சாமி அண்ணை வீட்டுப்பக்கம் போட்டு வாருங்களன்”
திரும்பி வந்தபோதும் பிரமை பிடித்தவள் போல் அமர்திருந்த சம்காரிணியைத் திசை திருப்பும் நோக்கில் ரமணன் கூறியது அவளது காதில் விழுந்த தாகத் தெரியவில்லை. ரமணன் சற்று உரத்து அதையே மீண்டும் கூறினான்.
“ஏதோ சொன்னனீங்களோ?”
சம்காரிணி கேட்கவும் மூன்றாம் முறையாக அதை மீண்டும் ரமணன் கூறினான்.
விருப்பமின்மையை முகத்தில் அப்பிக்கொண்டு அவள் எழுந்து உள்ளே சென்றாள். மதிய உணவு உண்ட பின்னர் அவள் சாமிஅண்ணை வீட்டிற்குப் புறப்பட்டாள். வெயில் வாட்டி எடுத்தது. போருக்கு முன்பு வீதியின் இருபக்கமும் மரங்கள் இருந்தன. போர் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. போரின் நினைவு அவளை மீண்டும் தாலிக்கொடியின் நினைவுகளுடன் இணைத்துவிட்டது. அந்த நினைவுகளுடன் ஒன்றித்து அப்படியே நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.
போரின் கொடுங்கரம் அவர்களை வீட்டை விட்டுத் துரத்தியது. இடம்பெயர்ந்து எங்கெங்கோ வாழ்ந்த நாட்களில் தேவையான பல பொருட்களைப் பாதுகாக்க அவர்கள் பட்டபாடு! அந்த வேளைகளில் சம்காரிணியின் சிந்தனை தாலிக்கொடியைச் சுற்றிச் சுற்றி வரும்.
இவ்வளவு பாடுபட்டும் அதை இழக்க நேருமோ?
இழந்தால்?
எத்தனை பேர் அவளின் கண்முன்னால் அப்படி களவு கொடுத்துவிட்டு நிற்கிறார்கள். அவளின் மனம் அப்படி இழந்தவர்களைக் கணக்கிட்டுக் கொள் கிறது. அதன் இழப்பு இரண்டுவகைப் பாதிப்பைத் தருகிறது. ஒன்று முக்கியமான பொருளொன்றின் இழப்பு. மற்றது பெரியதொரு சொத்திழப்பு. சுமார் ஒன்பது பவுணுக்கு மேற்பட்ட ஒரு நகையைத் தொலைத்துவிட்டு மீண்டும் ஈடு செய்வது எவ்வளவு சிரமம். அதனாலேதான் சுலபமாக அதைச் சுருட்டிக் கொள்ள கள்வர்களும் அலைகிறார்கள். தாலிக்கொடி என்ற ஒன்று ஒருவரிடமும் இல்லாவிட்டால் பிரச்சினை இருக்காது. அது வேறு வகைகளிலும் உதவுகிறதே.
அவசர தேவைகளுக்குக் கொடியை அடகு வைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். வறுமையின் தேவை அதை விற்கவும் வைத்து விடுகிறது.
கொடியை அடகு வைக்கவும் விற்கவும் மனம் இடம் கொடாதுதான். தேவையின் முக்கியத்துவம் இதற்கு மேலேறிவிட்டால் என்ன செய்வது? தொலைவதை விட இது பரவாயில்லை.
சம்காரிணியின் மனதினுள் ஆழ வேரோடி யிருந்த தாலிக்கொடியின் முக்கியத்துவ உணர்வை போர்க் காலம் ஏற்படுத்திய இச்சிந்தனைகள் மெல்ல மெல்ல கெல்லிஅறுக்க ஆரம்பித்தன. கொடியைப் பாதுகாப்பதில் எதிர்கொண்ட சிரமங்கள் சில சமயங்களில் அதை ஒரு சுமையாகவும் கருத வைத்தன..
1995ஆம் ஆண்டு இடப்பெயர்வு அவர்களை மூச்சடங்கச் செய்தவேளையில் மகன் வாரணனை எப்படியாவது வெளியே அனுப்பவேண்டும் என்ற முடிவிற்கு வந்தார்கள். அதற்குப் பணம் தேவைப் பட்டது. பாடுபட்டுத் தேடியவை எவையும் இல்லா நிலையில் தாலிக்கொடியை அடகு வைக்கலாம் என்று ரமணன் தயக்கத்துடன் கூறினான்.
விற்பதைவிட குறைவான பணமே அடகு வைத்தால் கிடைக்கும். அதன் பின் கடனுக்கு வட்டி கட்ட வேண்டும். ஆனபடியால் அதை விற்றுவிடலாம் என்று சம்காரிணி கூறியபோது ரமணன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலவையிட திகைத்துப்போனான். வாரணனால் அதை ஒப்புக்கொள்ளவே இயலவில்லை.
“வேண்டாம் அம்மா. அடகு வைப்பம். நான் உழைச்சு அதை மீண்டு தருவன்”
அவன் கெஞ்சினான்.
“உனக்கு நிறையப் பொறுப்பிருக்கடா. நாங்கள் உழைச்சுத் தேடினதெல்லாம் இழந்திட்டம். பள்ளிக்கூடமெல்லாம் காயக்காறரைப் போட்டு வைத்தியம் நடக்குது. நீங்கள் படிக்கவேணு மெண்டு கண்ட கனவெல்லாம் கனவாயே போச்சு. இரண்டு பொம்பிளைப் பிள்ளையளும் உன்ரை பொறுப்புத்தான்.”
அன்று கலங்கிய கண்களுடன் சம்காரிணி கூறி யதை வாரணன் நிறைவேற்றினான். இரண்டு சகோதரிகளுக்கும் சீதனம் கொடுத்து திருமணஞ் செய்து வைத்தான்.
உட்புறம் வந்த ரமணன் சம்காரிணியைப் பார்த்துவிட்டு “சாமிஅண்ணை வீட்டுக்குப் போகேல்லையோ?” எனக் கேட்டபோதுதான் தான் பழைய நினைவுகளுட் சிக்குண்டு நீண்ட நேரம் இருந்து விட்டதை அவள் உணர்ந்தாள். இனிப் போய் பயனில்லை.
அவர்களுக்கு உதவவேண்டும் என்று அவள் விரும்பினாள். ஆனால் திருமண வீட்டுப் பக்கம் போகவே விருப்பமில்லாதிருந்தது. போகாமலே நாட்களைக் கடத்தினாள்.
திருமணத்தினன்று போகத்தானே வேண்டும். போகாமல் எப்படி தவிர்க்கலாம்? எந்த வழியும் புலப் படவில்லை. கலியாண நாளும் வந்துவிட்டது. எதுவும் செய்ய இயலாது புறப்படவேண்டிய கட்டாயம்.
கலியாணவீடு என்றதுமே தங்கள் வீட்டில் நடைபெற்ற திருமணங்களும் அவற்றின்போது தன் கொடிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும் நினைவுச் சரங்களாகி சம்காரிணிக்குள் புகுந்து கொண்டன.
முதலாவது திருமணத்திற்கு ஆயத்தங்கள் நடந்தபோதுதான் சம்காரிணிக்கும் கொடியொன்று வாங்கித்தர ஆயத்தமானான் வாரணன்.
“இன்னுமொரு கலியாணம் நடத்த வேண்டிய பொறுப்பிருக்கடா உனக்கு. அதை மறந்துபோனியோ?”
“மறக்கேல்லை அம்மா. ஆனால் கலியாண வீட் டிலை நீங்கள் வெறுங்கழுத்தோடை நிக்கவிட முடியுமோ?”
“நான் வெறுங்கழுத்தோடை நிக்க மாட்டன். சங்கிலி, மஞ்சள் கயிறு..”
“அதில்லை அம்மா”
இடைமறித்து வாரணன் பேசத்தொடங்கவும் ஒரு பெட்டியைத் திறந்து காட்டினாள் சம்காரிணி. அதனுள் தாலிக் கொடியொன்று மின்னியது. அதை வாங்கிப் பார்த்த வாரணன் அது தங்கமுலாம் பூசப்பட்டதென்பதைப் புரிந்து கொண்டான்.
“அம்மா, இது வேண்டாம்”
“இது இப்போதைக்கு உன்னுடையதும் அப்பா வுடையதும் கௌரவத்தைக் காப்பாற்றப் போதும்.’
சம்காரிணியின் பிடிவாதத்தை அன்று மட்டுமல்ல அடுத்த மகளின் திருமணத்தின்போதும் மாற்ற முடிய வில்லை. தங்கையின் கணவனாக வரவிருந்தவன் திருமணச் செலவு முழுவதையும் பெண் வீடுதான் தரவேண்டும் என்று கூறிவிட்டான்.ஆகவே அந்தத் திருமணத்திற்கு தாலியும் கொடியும் வாரணனின் பணத்தில் செய்யப் பட்ட போது அம்மாவிடம் மீண்டும் வந்தான் வாரணன். சம்காரிணி ஒரேயடியாக மறுத்துவிட்டாள்.
அடுத்து வாரணனின் திருமணமும் வந்தது. இம்முறை எப்படியாவது தங்கத்தால் கொடி செய்து அம்மாவிற்குக் கொடுத்துவிடுவது என்று அவன் தீர்மானித்தான். அம்மாவைச் சம்மதிக்க வைக்க வேண்டுமே. வாரணன் சென்றபோது “அப்பன்,
ஒவ்வொன்றையும் நல்லாய் யோசிச்சுத்தான் நான் செய்தனான். அப்பா எங்கடை கலியாணத்தில் கட்டினது எண்டதாலை எனக்கு அதிலை ஒரு மதிப்பு இருந்த தெண்டது உண்மைதான். ஆனால் அதைக் கட்டுறது கௌரவம் எண்டு நினைச்சு அதாலை ஆபத்துகளிலை மாட்டுப்படுகிறது விசர்தனம். எங்களுடைய தேட்டம் எங்களோடை இருக்கிறது பாதுகாப்பு எண்ட நிலை இருந்தவரை அந்தக் காரணத்துக்காக கொடி போட்டுத் திரிஞ்சிருக்கலாம். இப்ப அப்பிடி இல்லை. நாங்கள் எங்களோடை வைச்சிருந்தும் பாதுகாக்க முடியாத காலம்.அதைப் பறிக்கிறத்துக்காக உயிரைக்கூட எடுக்கிற ஈவிரக்க மில்லாத ஒரு கூட்டமே அலையுது. உயிரின்ரை மதிப்பே தெரியாத அது தாலிக்கொடிக்கு உரிய மதிப்புக் கொடுக்குமே.? அதுக்கு அதின்ரை நிறைதான் தெரியும். நீ வாங்கப்போற கொடிக்கு அப்பா கட்டினது எண்ட மகத்துவமிருக்குமே?. பிறகு ஏன் பிரச்சினையை விலைக்கு வாங்கவேணும்? எனக்குப் போலிக் கெளரவம் தேவையில்லை. இப்ப நீங்களெல்லாரும் நல்லாயிருக்கிறீங்கள். நான் இந்த போலிக்கொடியைக் கட்டினாலும் அதைப் பவுண் எண்டுதான் எல்லாரும் நினைப்பினம்.”என ஒரு பிரசங்கத்தையே சம்காரிணி செய்து முடித்தாள்.
வாரணனால் எதுவும் செய்ய முடியவில்லை. மூன்று திருமணங்களின்போதும் சம்காரிணியின் கழுத்திலிருந்த அதற்கு இனி எந்த வேலையுமில்லை என்று எண்ணி அக்கறையற்று அதை வைத்தபோது தான் அது தேவைப்படும் சடங்கு ஒன்று இன்னும் இருப்பது நினைவிற்கு வந்தது. மரணத்தின் பிடிக்குள் சம்காரிணி சிக்குப்பட்டாலும் சரி ரமணன் அகப் பட்டாலும் சரி மரணச்சடங்கின்போது “தாலிக் கொடி எங்கே?” என்று கேட்பார்கள். உயிர் போன உடலுக்குச் செய்யும் கிரியைகளின்போதும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதைப் பக்குவமாக வைத்திருந்தாள் சம்காரிணி. மரணத்தின் முன்பே அவை அவளிட மிருந்து விடைபெறப் போகின்றன என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. இப்போது தாலிகூட இல்லாது..
திருமண மண்டபத்திற்குச் செல்வதற்காக ஏனையோருடன் பேருந்தில் ஏறி அமர்ந்தாலும் அவர்களைப்போல் சிரிப்பும் மகிழ்வுமாக இருக்க அவளால் இயலவில்லை. மனம் மட்டுமல்ல உடலும் பதறியது. அந்த நினைவுகள்… அந்த நினைவுகள்..
முகந்தெரியாத ஒருவன் அவளுடைய இரு கரங்களையும் பின்புறமாகப் பிணைத்துவிட்டு கழுத்தி லிருந்த மஞ்சள் நூலுடன் தாலியைக் கழற்றி அவளது கண்முன் தூக்கிப் பிடித்து அந்தக் காரிருளில் அவளுக்குத் தெரிவதற்காக டார்ச் ஒளியைப்பாய்ச்ச அந்த ஒளி வட்டத்துள் மஞ்சள் நூலில் அசைந்து அசைந்து ஒளிர்ந்த தாலி!
“உன்னிடமிருந்து விடைபெறப்போகிறேன்” என்று அது கூறியதை அவள் புரிந்துகொள்ள வில்லையோ?
அவன் ஒரு தமிழன் என சம்காரிணி உறுதியாக நம்பினாள். அதனால் தாலி மட்டும் எங்காவது இருக்கலாம் என இன்றுவரை ஒரு நப்பாசை மனதின் மூலையொன்றுள் மறைந்திருந்து அவளைத் தேட வைத்துக்கொண்டிருந்தது. மரணச் சடங்கின்போது தேவை என அவள் கருதவில்லை. வந்திருப்போரின் வாய்களுக்கு அவலாக ஒரு காட்சி அங்கு அரங்கேறு வதை விரும்பாததாலேயே அவள் கொடியை வைத்திருந் தாள். அதையும் அவன் எடுத்துச் சென்றிருந்தான்.
தாலி அப்படிஅல்ல. ரமணன் முதன்முதலாக அவளின் கழுத்தில் அணிவித்தது. அதன்மேல் அவளுக் கிருக்கும் பற்று.. இல்லை… ஆசை… இல்லையில்லை… பக்தி… அதை அவளால் விவரிக்க முடியாது. அதை அவளைப் போன்ற பெண்ணால் மட்டுமே உணர முடியும். அந்தத் தாலியை…
சம்காரிணியின் மண்டைக்குள் ஏதோ கொதித்துப் பொங்குவது போல்….
எழுந்து ஓடிவிட அவளது கால்கள் பரபரத்தன. அவள் எழுந்து நின்றாள். அருகிலிருந்த ரமணன் கைகளைப்பிடித்து அவளை அமரச் செய்தான். அவளது கையை இதமாக அழுத்தி ஆசுவாசப்படுத்த முயன்றான். தழும்பி வரும் கண்ணீருடன் ஏறிட்ட அவளது விழிகள் விம்மி அழுதுவிடுவாளோ எனப் பயமுறுத்தின.
மண்டபத்தில இறங்கியதும் மனைவியின் கையைப் பிடித்தபடியே ரமணன் நடந்தான். இருக்கை யில் அமர்ந்ததும் சம்காரிணி எதையும் பார்க்க விரும்ப வில்லை. மண்டபத்தில் இருப்போரிடம் ஆசி பெறுவ தற்காகக் கொண்டுவரபடவிருக்கும் கூறைத்தாம்பாளம். கும்பத்தின் மேல் சாத்தப்பட்டு மணமகனிடம் கொடுப் பதற்கு தயாராகப்போகும் தாலிக்கொடி, இருகைகளை யும் கூப்பி இறைவனை பிரார்த்தித்தவண்ணம் மணமகள் இருக்க மணமகன் மகிழ்வு பொங்க அவளது கழுத்திலே அணியவிருக்கும் மாங்கல்யம் எதையுமே அவள் பார்க்க விரும்பவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டாள். அப்போது கண்களின் முன் ஒளி வட்டத்துள் மஞ்சள் நூலில் அசைந்துஅசைந்து ஒளிர்ந்த தாலி! மூடிய இமை களின் தடையைத் தாண்டி வெளிவரத் துடித்த கண்ணீர்.
“அங்கை பாருங்களன். இவை வித்தியாசமாய் கலியாணம் நடத்துகினம். ஒருக்கால் பாருங்களன்.”
கிசுகிசுத்த குரலில் வந்த ரமணனின் கெஞ்சல் சம்காரிணியின் கண்களைத் திறக்கச் செய்தது.
மணமேடை வித்தியாசமாகத் தோற்றம் அளித்தது.
சிறிது நேரத்தில் மணமகனை தோழன் அழைத்து வந்து மணவறையில் இருக்க வைத்ததும் தோழி மண மகளை கூட்டி வந்து அருகில்இருக்க வைத்தாள். உறவினருள் வயதில்மூத்த பெரியவர் மேடைக்கு வந்தார். இல்லறத்தின் சிறப்பு, கணவனும் மனைவியும் எவ்வாறு வாழவேண்டும் என்ற அறிவுரை என சில நிமிடங்கள் பேசிய அவர் மணமக்களின் விவரம் கூறி இருவரும் இணைந்து இல்லறம் நடத்த இருப்பதாகவும் அதற்குச் சான்றாக மங்கல நாணை மணமகன் மணமகளுக்கு அணிவிப்பார் என்றும் தெரிவித்தார். அவர் வாழ்த்தி எடுத்துக்கொடுத்த மங்கல நாணை மணமகன் கையில் எடுக்கிறான். அது மஞ்சள்நூல். அதில் மஞ்சள் இணைக்கப்பட்டிருந்தது.
– ஜீவநதி 12 ஆவது ஆண்டு மலர் மாசி 2019
