தாய்




(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். விழுந்தடித்து ஓடும் நக்ஷத்திரங்களையும், மசிச்சித்திரங் கள் போன்ற மரங்களையும், நீர்ப்பரப்புகளையும், இரு ளைப் பிளந்து செல்லும் ‘சர்ச்லைட்’ வெளிச்சத்தையும் மாறி மாறிப் பார்க்கும் லயத்திலிருந்த என்னை, ஒரு குழந்தையின் அழுகை சப்தம் ‘பிடித்திழுத்தது. ஜன்ன லுக்கு வெளியே நீட்டியிருந்த கழுத்தை உள்ளுக்கிழுத்தேன்.

முதலில் தென்பட்டது உலர்ந்த சரீரத்தோடு கூடிய ஒரு நாயுடு ஸ்திரி அவள் வழியில் உட்கார்ந்திருந் தாள். அவள் பக்கத்தில் எட்டு ஒன்பது மாதக் குழந்தை ஒன்று இருந்தது. அதுதான் வீறிட்டுக் கொண்டிருந் தது. இவ்வளவு அழுகைக்கும் அசையாத கும்பகர்ணர் களும் பலர் வண்டியிலிருந்தார்கள்.
விழித்துக்கொண்டிருந்த ரயில் பிரயாணி யாரோ ஒருத்தி-ஒரு கிழவி-சொன்னாள். ‘ஆத்தா, பிள்ளையைக் கொஞ்சம் எடுத்துவிடேன்.’
‘எல்லாம் ஆயிடுச்சு. மொக்கு மொக்குன்னு குடிச்சுட்டுக் கத்துது. இம்மே பாலில்லெ ; ரத்தந்தான் வரும்.’
அந்தச் சிறு குழந்தை எதைக் கண்டது? பாலில் லாத மார்பின் வேதனையை எப்படி அறியும் ? நாயுடு ஸ்திரீயின் மடி மீது போய் ஏறிற்று-கரைமீது மோத வரும் அலைபோல. அவள் அதை அலுப்புடன் தள்ளி னாள் – பூமி அலையைப் புறக்கணிப்பதுபோல. குழந்தை ஐந்து நிமிஷம் அலறித் தீர்த்தது. பிறகு தூங்கிவிட்டது. தூங்கியும்கூட விம்மல் விட்டபாடில்லை.
எனக்கு எதிர்த்தாப்போல் உட்கார்ந்திருந்தவர் சொன்னார், ‘பெண் பிள்ளைகளுக்கே காது செவிடு.’
‘ஏனோ ?’ என்றேன்.
‘இல்லாவிட்டால் இவ்வளவு அழுகைக்கும் தற் கொலை செய்துகொண்டுவிட மாட்டார்களா? காது ஜவ்வு செதல் செதலாகி யிருக்குமே.’
ஆண் பிள்ளைகளுக்கு சத்தம் பொறுக்காது. அடுக் குள்ளில் வேலை செய்கிறவர்களும், தெருக் குழாயடியில் தண்ணீர் பிடிப்பவர்களும் சத்தத்துக்குப் பயந்தால் சந்தியில் நிற்கவேண்டியதுதான்’ என்று எதோ பதில் சொன்னேன்.
மேலே ஒருவரும் பேச முடியவில்லை. பின் பக்கத்தி லிருந்து ‘ளொள், ளொள்’ என்று இருமிக்கொண்டே ஒரு குழந்தை அழத் துடங்கிற்று. நாங்கள் அதை முத லில் சட்டைசெய்யவில்லை. அடுத்தாற்போல, கரகரப் பான ஒரு ஆண் பிள்ளைக் குரல்,
ஆராரோ ஆரிரரோ ஆளப் பொறந்தானோ…
அடிச்சாரைச் சொல்லியளு ஆக்கினைகள்
பண்ணிவப்போம்…
என்று குழந்தையை சமாதானப்படுத்த முயன்றதும் எழுந்திருந்து திரும்பிப் பார்த்தேன். நாயுடு ஸ்திரீயும் எழுந்து பார்த்தாள்.
ஒரு ஆண் பிள்ளை ; நாற்பது, நாற்பத்தைந்து வயது ருக்கலாம். அழகிய ‘ப’ குடுமி. காதில் ஏழு கல் புஷ்பராகக் கடுக்கன். ஆட்களை வேலை வாங்கும் அதிகாரம் வாய்ந்த முகம். பட்டு பனியன், இடுப்பில் கைலி. எனவே, தண்ணீர்ச் சீமையிலிருந்து ஊருக்குத் திரும்பி வருபவன் என்பது வெளிச்சம்.
அவன் பக்கத்தில் ஒரு பெரிய பையன் – ஆறு வயதி திருக்கும் ; ஒரு பெண் இரண்டு வயதிருக்கும் ; ஒரு கைக் குழந்தை – பெண். நடுக் குழந்தையின் கழுத்தில், அட்டிகை பதக்கம்போல், ஒரு ரப்பர் ‘நிப்பிள்’ கருப்புக் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது.
இருமிக்கொண்டே அழுத குழந்தை கைக்குழந்தை என்று தெரிந்தது. சாதாரண இருமல் என்று நினைத்த நான் குழந்தையின் கண்களில் ஜலம் சேருவ,ைதயும், முகம் சிவப்படைவதையும், எச்சில் கம்பி கம்பியாய் வருவதையும் பார்த்தவுடன் மகாவேதனை அடைந் தேன். பச்சைக் குழந்தை கக்குவானுக்குத் தாங்குமா என்று நினைத்துக் கொண்டிருந்தபொழுதே, நடுக் குழந்தையும் இருமிக்கொண்டே எழுந்தது. அதற்கும் கக்குவான் !
அவன் முகத்தில் தோன்றிய வேதனை எனக்குத் தாளவில்லை. அந்த கிழவி ‘ஏன் தம்பி ! இந்தப் பிள்ளை களை வச்சுக்கிட்டு நீ எப்பிடி காலத்தை ஓட்றே?’ என்றாள்.
அவன் பதில் பேசவில்லை. தன் காலண்டைக் கிடந்த தூக்குக் கூடையிலிருந்து ஒரு புட்டியை எடுத்து அதி லிருந்து எதையோ ஒரு அவுன்ஸ் கிளாஸில் ஊற்றி இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்தான்.
குழந்தைகள் படுத்துக்கொண்டன. அழவுமில்லை. இருமவும் இல்லை. ‘நிப்பிளை’ சப்பிக்கொண்டே சொக்கி சொக்கி தூங்கத் துவங்கின. அவன் பாட்டுக்கு குழந்தை களைத் தட்டிக்கொண்டே சாவதானமாய் அந்தக் கிழவி யைப் பார்த்து ‘என்ன பாட்டி கேட்டே?’ என்றான்.
‘நீ எப்படி காலத்தை ஓட்றேன்னு.’
‘ஏதோ, சாமி கிருபையிலெ. அவ போனது கூடப் பெரிசாத் தோணல்லெ. குழந்தைகளையும் பார்த்துக் கிட்டு தேயிலைத் தோட்டத்திலும் வேலை செஞ்சூட் டேன். இந்த ரெண்டு மாசமா இருமல்தான் எனக்குப் பெரிசாத் தோணுது. குழந்தைங்க என்னமா அவுதிப் படுது, தெரியுமா? என்னவோ ஆண்டவன் கிருபை ; ஒவ்வொரு இருமலுக்கும் செத்துப் புழைக்குது.’
‘என்னா? மருந்தா குடுத்தே அதுங்களுக்கு?’
‘இல்லே. இந்த இருமலுக்கு மருந்து இல்லியாமே. தானே தான் போகணுமாம்… குடுக்கல்லே. நான் குடுத்தது பிராந்தி.’
‘அட பாவி ! குழந்தைங்க வீணா அல்ல போயிடும்?’
‘வேறே அழாமெ, வாதனைப்படாமெ குழந்தைங்க இருக்கறதுக்கு வழி?’
நாயுடு ஸ்திரீ எழுந்துபோய் ‘பாவம்! தாயில்லாப் பிள்ளைங்களா’! என்று அங்கலாய்த்தாள்.
‘அம்மாவை நினைச்சுக்கிட்டு அழுதால், இருமல் வந்து அழுதால், ஆம்பிள்ளை நான் என்னத்தைச் செய்ய லாம்?… பிராந்தியாலெ துன்பத்தை மறக்கடிக்கலாம்… வேறே வழி ?’
அரை மணி சென்றது. நாங்கள் எல்லோரும் விதி யைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
மறுபடி பழய ளொள், ளொள்’; கைக்குழந்தை மறுபடி இறுமலில் துடித்தது. அதன் வாயிலிருந்த ரப்பர் ‘நிப் பிள்’ கீழே விழுந்தது.
உட்காரக்கூடாமல் எழுந்திருந்தேன். அவனுடைய கை பிராந்திப்புட்டியை நாடிற்று.
‘பிராந்தியைத் தொடாதீங்க. பிள்ளையை இப்பிடி என்கிட்ட குடுங்க’ என்று குறுக்கிட்டாள் நாயுடு ஸ்திரீ. குழந்தையை இரு கையாலும் வாங்கித் தன் உலர்ந்த மார்போடு சார்த்திக்கொண்டாள். குழந்தையின் இருமல் ஓய்ந்தது. அவள் நெஞ்சில் அருள் சுரந்தது. ஆனால் மார்பில் பால் சுரந்ததோ என்னவோ!
– பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 1944, ஹிமாலயப் பிரசுரம். இரண்டாம் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை. இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகையில் வெளியானவை.
![]() |
வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க... |