தலை சாய்க்க

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2024
பார்வையிட்டோர்: 3,553 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர, எனக்கு ராத்திரி ஒன்பதுக்கு மேலாகிவிட்டது. சாயங்காலத்திலிருந்தே வானம் இருட்டிக் கொண்டு இதோ பெய்யப் போகிறேன் என்பதுபோல என்னை பயம் காட்டிக்கொண்டிருந்தது. என் கூடவே மழையும் என் வீட்டுக்கு வந்தும் விட்டது. 

எனக்குப் பயம்தான். 

மழை பெய்தால் வீடு ஒழுகும். கூரையிலிருந்து சுவர் வழியாகத் தரையில் வழியும். நாலா புறமும் தண்ணீர் தேங்கும். படுக்கையை எங்கு விரிப்பது? நான் தூங்க வேண்டும் என் மனைவி தூங்க வேண்டும். எங்கள் குழந்தை தூங்க வேண்டும். வேண்டுமானால், நான் மட்டும் படுக்கையைச் சுருட்டி அதன் மேல் உட்கார்ந்து கொண்டு, விடிய விடிய சிகரெட் துணையோடு விழித்துக் கொண்டி ருக்கலாம். என்னைக் கட்டிக்கொண்ட தோஷத்திற்காக என் மனைவியும் வேண்டுமானால், என்னோடு கண் விழிக்கலாம் ஆனால் குழந்தை…? மழை வலுக்காமல், சும்மா லேசாகத் தூறிக் கொண்டிருந்தால் பரவாயில்லை! சமாளித்துக் கொள்ளலாம். 

யோசித்தவாறே, அறைக்குள் நுழைகிறேன். சுசீலாவைக் காணோம். ஒரு சொந்தக்காரர் கல்யாணத்துக்குப் போயிருப்பதாக அம்மா சொன்னாள். சரி! வரட்டும் என்று காத்திருக்கிறேன். ஏதோ ஒரு பத்திரிகையை எடுத்து வைத்துக்கொண்டு வாசிக்க ஆரம்பிக் கிறேன். 

கொஞ்ச நேரம் கழிந்திருக்கும். மல்லிகை வாசனை என் புலனைத் தொடும்போதுதான் நிமிர்கிறேன். சுசீலா தோளில் குழந்தையோடு உள்ளே நுழைகிறாள். அவளுக்குப் பின் நிழல் தட்டுகிறது. சுசீலா அமர்ந்த குரலில் என்னிடம் சொன்னாள்: ‘அம்மா வந்திருக்காங்க… ராத்திரி இங்கதான் தங்கப் போறாங்க…’ 

எனக்குத் திக்கென்றது. மீண்டும் அவள் என் முகத்தைப் பார்த்தவாறே ஒரு விதமான குற்றம் செய்த மனோபாவக் குரலில் சொன்னாள்: ‘சாப்பாடெல்லாம் அங்கேயே ஆச்சு… ராத்திரி தங்கி விடிஞ்சதும் போறேன்னுட்டாங்க…’ 

எங்கள் வீடு இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒரு பக்கம் ஓடு வேய்ந்த அறை. இடையில் நடை, மறுகையில் கூரை போட்ட நீண்ட ஹால் மாதிரியான பகுதி. ஓடு வேய்ந்தது எங்கள் பகுதி. இந்த அறைதான். நான், சுசீலா, குழந்தை எல்லோரும் புழங்க, இருக்க, தூங்க, சம்சாரம் பண்ண. கூரை வேய்ந்த பகுதி என் அப்பா, அம்மா, இரண்டு தம்பிகள், ஓர் எடுபிடித் துணைக்காக ஒதுங்கிய அனாதை, ஒரு நாய், ஆகியோர் இல்லறம் பேண. என் அறையுஞ் சரி… இந்தக் கூரை ஹாலும் சரி… இன்னோர் அந்நியருக்கு இடம் தரும் விசாலம் கிஞ்சித்தும் இல்லை. அதிலும் ஒரு ஸ்திரீ அசந்து தூங்க இவை லாயக்கானவையே இல்லை. 

நான் அவளைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்த்தாள். மாமி என் அம்மாவோடு பேசும் சத்தம் எனக்குக் கேட்டது. தூங்கும் குழந்தையைப் பாயை விரித்துப் படுக்கப் போட்டோம். 

‘மழை தூறுதா…’ நான் கேட்டேன். 

‘ஆமா.. லேசா தூறிக்கிட்டுத்தான் இருக்கு… மழை இல்லேன்னா நீங்க நடையிலே பெஞ்சைப் போட்டு அதிலே படுத்துக்கலாம்… அம்மா இங்க அறையில என் கூடப்படுத்துக்கிடட்டும்…’ என்றாள் அவள். 

‘மழை இல்லேன்னா பிரச்சினையே இல்ல… நான் எங்கவேணாலும் படுத்துக்கலாம்… உங்கம்மா இங்கேயே படுத்துக் கட்டும்… எப்பிடியாவது சமாளிச்சுக்கலாம்…’ என்று கூறிவிட்டு எழுந்தேன். 

சாப்பிடும்போதே, மாமி, அறைக்குள் போய்விட்டாள். மாப்பிள்ளை முன் நிற்காத பழங்கால வாழ்க்கை முறை கொண்ட வர் அவர். வந்த விருந்தாளிக்குத் தொந்தரவு இல்லாமல் இரவைக் கழிக்கத் துணை செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. 

யோசித்தபடி சாப்பிட்டு எழுந்தேன். மனைவியைக் கூப்பிட்டு, அவள் அம்மாவுக்கு அறையிலேயே படுக்கையைப் போடச் சொன்னேன். எனக்கு, பாய் தலையணையை எடுத்துப் பெஞ்சில் போட்டு வைக்கும்படிக் கூறிவிட்டு தெருவில் இறங்கி நடந்தேன். 

ஒரு ரெண்டு மணி நேரத்தை நான் எங்காவது கழிக்க வேண்டும். அதற்குள் எல்லாரும், எப்படியாவது எங்காவது படுத்துத் தூங்கிவிடுவார்கள். என்னைப் பற்றின பிரச்சினை இல்லை. எப்படியாவது இரவைக் கழித்துவிடலாம். 

சந்து திரும்பி பஸ் ஸ்டாண்டின் பெரிய மணியைக் கவனித்தேன். மணி 10-10. சினிமாவுக்குப் போகலாம் என்று தோன்றியது. முடிவெடுப்பதற்குள் தூரல் வலுத்து, மழைத் துளி கனமாக, படபடவென்று பெருமழையே பிடித்துக் கொண்டது. ஒதுங்க இடம் இல்லை. ஒரு பக்கம் கொடுக்காப் புலி மரங்கள். ஒரு பக்கம் பொட்டானிக்கல் கார்டனின் குட்டை மதில்சுவர். நனைந்து கொண்டே நடந்தேன். சைக்கிள் ரிக்ஷாக்கள் லொட லொடத்த மணிச்சத்தத்துடன் என்னைக் கடந்து வேகமாகச் சென்றன. சினிமாத் தியேட்டர்களுக்கு இன்னும் இரண்டு பர்லாங்காவது நடக்க வேண்டும். மழை என் தலையைச் சுத்தமாக நனைத்து விட்டது. தலையிலிருந்து கழுத்து வழியாக வழிந்த நீர் சட்டையின் பின்புறத்தை நனைப்பது சில்லென்று உணர்வாக எனக்குப் புரிகிறது. பனியன் இல்லாத வெறும் டெர்லின் சட்டை. அது உடம்போடு நன்றாக ஒட்டிக்கொண்டது. 

ஒதியஞ்சாலை ரவுண்டானாவில், மக்கள் ஆங்காங்கே ஒதுங்கி நின்றிருந்தார்கள். நானும் கொஞ்சம் ஒதுங்கிப் போகலாமா என்று யோசிக்கிறேன். வேண்டாம்! டைம் ஆகிவிடும். இப்போதே சினிமா தொடங்கி இருக்கும். தொண்ணூறு பைசா கொடுத்துப் பாதிப் படம் பார்ப்பது அக்ரமம். தவிர சினிமாவுக்கே போகாமல் எங்காவது ஒதுங்கியிருந்து விட்டு வீட்டுக்கே திரும்பலாம் என்று ஒரு யோசனை யும் எனக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால், ரெண்டு, மூணு மணி நேரம் ஓர் இடத்தில் எப்படி நின்று கொண்டிருப்பது? எனவே சினிமாவுக்குப் போவதே உத்தமம் என்று பட்டது. ஒரு சினிமாத் தியேட்டர் தெரிகிறது. ஒரு பழைய தமிழ்ப் படபேனர் என் கண்களை மறைத்த மழை மூட்டத்தின் வழியாகத் தெரிகிறது. அந்தப் படமும், அதன் நடிகர்களும் எனக்குப் பிடிக்காதவர்கள். எனவே மேலும் நடந்தேன். இரைத்தது. மழை வேறுவிடாது என் முகத்திலும் தலையிலும் பெய்தவாறு இருக்கிறது. அதோடு மழையில் ஊறிய மண் மணம் இலேசாகவும், சில இடங்களில் அழுத்தமாகவும் என் நாசிக்கு வந்தது. காடா விளக்கு வெளிச்சத்தில் பட்டாணி வண்டிக்காரன் வறுத்த பட்டாணிகளை மட்டும் பிளாஸ்டிக் போர்வையால் மறைத்து விட்டு, தான் மட்டும் நனைந்தவாறு நின்றிருந்தான், இரண்டு பன்றிகள் தன் குட்டிகளோடு என்னைக் கடந்து ஓடின. 

நான் நடந்து கொண்டிருந்தேன். தூரத்தில் ஒரு தியேட்டர் தெரிகிறது. நிம்மதியாக இருந்தது. தெரு வாசல் இன்னும் மூடப்பட வில்லை. கவுண்டரில் கூட்டமே இல்லை. சுலபமாக டிக்கெட் வாங்கிக்கொண்டேன். கவுண்டரை அடுத்தச் சுவர் சார்ப்பில் ஒருத்தி நின்றிருந்தாள். மழை அவள் முகத்தில் வழிந்து, அவள் கையில் ஏந்திக்கொண்டிருந்த பச்சைக் குழந்தையின் மேலும் வழிந்தது. பேனர் வெளிச்சத்தில் குழந்தையை நன்றாகவே பார்க்க முடிந்தது. அது தூங்குகிறதா அழுகிறதா என்பதை நிச்சயிக்க முடியவில்லை. டிக்கெட் போக மீதி சில்லறையை அவளிடம் கொடுத்தேன். அவள் வாங்கிக்கொண்டு டீக்கடைப் பக்கம் நடப்பதைப் பார்த்தேன். 

படம் ஆரம்பித்திருந்தது. மெக்ஸிகோவின் கொள்ளைக் காரர்கள் கண்டமானிக்கிச் சுட்டுக் கொண்டிருந்தார்கள். குதிரை யின்மீது ஏறிக்கொண்டு பறக்கிறார்கள். கூடவே பிறந்தாற்போல் விரலோடு விரலாய் துப்பாக்கி அவர்கள் கையில் தொங்குகிறது. 

என் திருப்தியெல்லாம் இன்னும் கொஞ்ச நாழி திருப்தியாக உட்கார்ந்திருக்கலாம் என்பதாக இருந்தது. அதற்குள் மழையும் ஓய்ந்துவிடும். இந்நேரம் எல்லோரும் படுத்து விட்டிருப்பார்கள். அப்பாவும் வந்திருப்பார். சாப்பிட்டு விட்டுப் படுத்திருப்பார். இல்லையென்றால், சுருட்டைப் பிடித்துக்கொண்டு காரிக் காரித் துப்பிக்கொண்டு உட்கார்ந்திருப்பார். யார் முகத்தில் அவர் துப்புகிறார் என்பது நாளதுவரை நான் அறியாத மர்மமாகவே இருக்கிறது. ஆனால் யாரையாவது மனசுக்குள் வைத்துக் கொண்டு தான் அவர் துப்புகிறார் என்பது நிச்சயம். ஒரு வேளை அது நானாகவும் இருக்கலாம். என் முகமாகவும் இருக்கலாம். 

தியேட்டருக்குள் எல்லா ஃபேன்களும் சுற்றின. ஈரச் சட்டையும், தலையிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் நீரும், எனக்குக் குளிரைத் தந்தன. நெற்றி வழியாக வழிந்து கண்ணை மறைக்கும் நீரை அடிக்கடிச் சுண்டி எறிந்து கொண்டிருந்தேன். கைகளைத் தேய்த்துச் சூடு உண்டாக்கிக் கொள்கிறேன். பாக்கெட்டில் கைவிட்டு சிகரெட்டை எடுத்தேன். சிகரெட் நனைந்து, பேப்பர் கழண்டுபோய், வெறும் புகையிலை பிசுபிசுப்போடு என் கையில் சிக்கியது. விதிதான்! என்ன செய்வது? 

படத்தில் எவளோ ஒருத்தியைப் பலர் பலாத்காரம் செய்வது தெரிகிறது. திடீர் என்று குதிரை வீரன் பாய்ந்து வந்து கனல் பறக்கச் சுட்டுத் தள்ளுகிறான். அவளை அலாக்காகத் தூக்கிக் குதிரைமீது வைத்துக் கொண்டு போய் விடுகிறான். 

ஒரு வழியாகப் படம் முடிந்து வெளி வருகிறேன். மணி 12.40. மழைவிட்டிருந்தது. ஒரு டீ குடித்தேன். சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். வீட்டை நோக்கி நடந்தேன். 

தெருவே நிசப்தமாக இருக்கிறது. தார் ரோடு, குளிப்பாட்டப் பட்ட குழந்தை மாதிரி பளிச்சென்று விளங்குகிறது. ஈரம் கலந்த காற்று என்னைத் தழுவும் போதெல்லாம் என் உடல் சிலிர்க்கிறது. இந்தத் தனிமையும், நிசப்தமும் நடையும் எனக்கு எதையெல்லாமோ விளக்குவதாகத் தோணுகிறது. வாழ்க்கையே ரொம்ப ரம்யமானதாக நான் உணர்கிறேன். 

தெருவெங்கும் டியூப் விளக்குகள் பளீரென்று மிக அதிக சக்தியோடு பிரகாசிக்கிறது. அந்த ஒளியில், மின்சாரக்கம்பிகளில் தங்கிய மழைத்துளிகள் முத்துச்சரம் மாதிரி மினுங்குகிறது. எங்கோ பெயர் தெரியாத பறவை ஒன்று, ஒரே தடவை கூவிவிட்டு அமைதியாகிவிடுகிறது. என் காலடிச் சத்தத்தைத் தவிர ஓசைகளே அடங்கிப் போனது மாதிரி எனக்குத் தெரிகிறது. 

என் அப்பாதான் கதவைத் திறந்தார். சுருட்டுப் புகை வீட்டையே வளைத்துக் கொண்டு நின்றது. நடையில் பெஞ்சின் மேல் பாயும் தலையணையும் போடப்பட்டிருக்கிறது. படுத்துக் கொள்கிறேன். அடுத்தப் பகுதியில் அப்பா காறித் துப்பும் சத்தம் கேட்கிறது. என் தலை ஈரம் இன்னும் காயவில்லை. சட்டையும் நசநசவென்று இருக்கிறது. டவல் அறையில் இருக்கிறது. வேட்டியும் ஈரம். 

ஆனாலும், அன்று முழுதும் வேலை செய்த அசதி கண்ணைச் சொருகிறது. எத்தனை நிமிஷம் நான் தூங்கியிருப்பேன் என்ற உணர்வு எனக்கில்லை. யாரோ இழுப்பது போல் உணர்கிறேன். திடுக்கிட்டு விழிக்கிறேன். ஜன்னலில் கட்டியிருந்த மாடுதான் என் பாயின் ஒரு பகுதியை சுவாரஸ்யமாக மென்று கொண்டிருக்கிறது. எனக்கு வெறுப்பு. ‘சே’ என்று மாட்டை விரட்டுகிறேன். மாடு கழுத்தை மட்டும் இழுத்துக்கொண்டு என்னையே பார்க்கிறது. 

பெஞ்சை கொஞ்சம் இழுத்துப் போட்டுக்கொண்டு படுத்தேன். பக்கத்தில் சாக்கடை. வீட்டுச் சாக்கடைதான். குளியல் அறையிலிருந்து ஓடி வருவது அது. குளியல் அறை குளிப்பதற்கு மட்டு மின்றி சமயா சமயங்களில் சிறு உபாதைகள் தீர்க்கும் அறையாகவும் எங்களுக்குப் பயன்படுவது வழக்கம்தான். உக்ரமான நாற்றம் என் மூக்கை வந்து அறைந்தது. சுவாசிப்பதற்கு முடியாத நாற்றம் அது. 

எழுந்து உட்கார்ந்து கொண்டேன். பெஞ்சை இந்தப் புறம் இழுத்துப் போடலாமா என்று பார்க்கிறேன். மாடு ஆவலோடு என்னையே பார்த்தது. எனக்கு அந்த இருட்டிலும், அதன் கண்கள் பிரகாசிப்பது தெரிகிறது. 

உட்கார்ந்து கொண்டே இருந்தேன். பன்னீர் தெளிப்பது போல லேசான தூறல் என் மேல் விழுந்து கொண்டே இருக்கிறது. மேலே வானம் ஒரே கறுப்பாக ஒரு நட்சத்திரம் கூட இல்லாது விதவைத் தன்மையோடு கிடந்தது. சுசீலா போர்வையை எடுத்துப் போட வில்லை. மறந்திருக்க மாட்டாள். விருந்தாளிக்குப் போட்டிருப்பாள். வேஷ்டியை எடுத்துப் போர்த்திக் கொண்டேன். சமயா சமயங்களில் தலை சாயும். நிமிர்ந்து கொள்வேன். 

தெருவில் யாரோ பேசிக்கொண்டு போவது கேட்கிறது. சுவர்க்கோழி விட்டு விட்டுக் கத்திக் கொண்டிருப்பது மட்டும்தான் ஓசை. நாய், சில நிமிடங்களுக்கொரு முறை படபடவென்று நெட்டி முறித்துக் கொள்ளும். அது உடம்பைச் சிலிர்த்துக் கொள்ளும் போதெல்லாம், ஒரு கெட்ட நாற்றம் அதன் உடம்பிலிருந்து வரும். 

சீக்கிரம் விடிந்துவிடும். எல்லோரும் கல்யாணத்துக்குப் போய் விடுவார்கள். கொஞ்ச நேரம், அறையில் படுத்து நிம்மதியாகத் தூங்கலாம். இந்த நினைப்பே எனக்கு நிம்மதியையும் உற்சாகத்தையும் தருகிறது. 

குழந்தை சிணுங்குகிறது. சுசீலா தட்டித் தூங்கப் பண்ணுகிறாள் என்பதெல்லாம் ஒலி ரூபமாக எனக்குக் கேட்கிறது. குழந்தை போஷிக்காமல் இளைத்தும் களையின்றியும் இருக்கிறான். காசு வரும்போது நல்ல டானிக் வாங்கிக் கொடுக்க வேண்டும். சினிமாத் தியேட்டரில் நான் பார்த்த குழந்தை என் நினைவுக்கு வருகிறது. மழை அந்தக் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறது. பச்சை சிசுவின் சிவப்பு மாறாத குழந்தை அது. தூங்குகிறதா? அழுகிறதா? செத்துப் போய்க் கிடந்ததா? 

தெருக்களில் பேச்சு சத்தம் கேட்கிறது. பாத்திரங்களின் சத்தம். எங்கோ ஒரு வீட்டில் மழைக்காலத்திலும் நீர் தெளிக்கும் சத்தம்.

விடியப் போகிறது. சந்தோஷமாக இருக்கிறது. விடியட்டும். எல்லாரும் எழுந்து, அவரவர் காலைக் கடனை முடித்து கல்யாணத்துக்குப் புறப்படட்டும். கொஞ்சம் நடக்கலாம் என்று தோன்றியது. ஓசைப்படாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வருகிறேன். 

நான் திரும்பி வரும்போது எல்லோரும் கல்யாணத்துக்குப் போயிருப்பார்கள். நான் நிம்மதியாகத் தூங்கலாம். இரவெல்லாம் விழிப்பும், தலை ஈரமும் சேர்ந்து நெற்றி ‘விண்விண் என்று தெறித்துவிடும் போல் இருந்தது. உடம்பு அனலாய்க் கொதித்தது. அதனால் என்ன? தூங்கத் தானே போகிறோம்…? 

– 1977

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *